search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Deepavali festival"

    • பண்டிகை காலங்களில் ஆம்னி பஸ் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்படுகிறது.
    • கட்டண உயர்வால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

    சென்னை:

    தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் வசிக்கும் பிற மாவட்டத்தினர் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்கின்றனர். ரெயில், அரசு பஸ்களில் டிக்கெட் காலியாகிவிடுவதால், ஆம்னி பஸ்களை நாடிச்செல்கிறார்கள். ஆனால் பண்டிகை காலங்களில் ஆம்னி பஸ் கட்டணம் பலமடங்கு உயர்த்தப்படுகிறது.

    இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாக நேரிடுகிறது. ஆம்னி பஸ்கள் அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரித்தாலும் கூட, அதையும் பொருட்படுத்தால் பல மடங்கு டிக்கெட் கட்டணம் உயர்த்தப்படுவதாக பயணிகள் குற்றம் சாட்டுகிறார்கள்.

    இந்த நிலையில், தீபாவளி பண்டிகையையொட்டி தொடர் விடுமுறை வருவதால், ஆம்னி பஸ்களின் கட்டணம் கிடுகிடு என்று உயர்ந்துவிட்டது. குறிப்பாக, மதுரை, நெல்லை, நாகர்கோவில் செல்லும் பஸ்களின் கட்டணம் என்பது குறைந்தபட்சமாக ரூ.2 ஆயிரத்தில் இருந்து அதிகபட்சமாக ரூ.4 ஆயிரத்து 500 வரை உயர்ந்துள்ளது. இந்த திடீர் கட்டண உயர்வால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

    • போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
    • அறிந்தும், அறியாதது போல ராமதாஸ் சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது தேவையற்றது.

    சென்னை:

    போக்குவரத்துக் கழக பணியாளர்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டு 20 நாட்களாகியும் இன்னும் போனஸ் வழங்கப்படவில்லை. உடனடியாக அவர்களுக்கு போனஸ் வழங்கிட வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். டாக்டர் ராமதாசின் இந்த அறிக்கைக்கு, போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மிகுந்த நிதி நெருக்கடியில் இருக்கின்ற நிலையிலும், அதில் பணிபுரியும் 1,13,741 சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு 20 சதவீத போனஸ் தொகையாக ரூ.182.32 கோடி வழங்குவதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இதற்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டு கடந்த 25-ந்தேதி உரிய நிதி ஒதுக்கீடு செய்து ரூ.182.32 கோடியானது போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

    இதனை அறிந்தும், அறியாதது போல ராமதாஸ் சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது தேவையற்றது. நடுநிலையாளர்களும், பிற மாநிலத்தை சார்ந்தவர்களும், வெளிநாட்டவர்களும் போக்குவரத்துத் துறையின் செயல்பாடுகளை வெகுவாக பாராட்டி வருகிறார்கள். அதை பொறுத்துக்கொள்ள மனமில்லாமலும், வேறு அரசியல் செய்ய வழி இல்லாமலும் உண்மைக்கு புறம்பாக அறிக்கை வெளியிட்டுள்ளது கண்டனத்துக்குரியது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தாம்பரத்தில் இருந்து மானாமதுரைக்கும் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
    • ரெயில் மறுமார்க்கத்தில் நாளை மறுநாள் காலை 8.45க்கு புறப்பட்டு இரவு 9.55க்கு தாம்பரம் வந்தடைகிறது.

    தீபாவளி பண்டிகையையொட்டி, சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கும், பிற பகுதிகளுக்கும் சிறப்பு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தீபாவளிக்கு சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்கள் வசதிக்காக தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு நாளை சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

    இந்த சிறப்பு ரெயிலானது, நாளை மதியம் 3.45 மணிக்கு புறப்பட்டு விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி மதுரை, நெல்லை வழியாக காலை 4.40க்கு நாகர்கோவில் சென்றடைகிறது. அதே ரெயில் மறுமார்க்கத்தில் நாளை மறுநாள் காலை 8.45க்கு புறப்பட்டு இரவு 9.55க்கு தாம்பரம் வந்தடைகிறது.

    அதேபோல, தாம்பரத்தில் இருந்து மானாமதுரைக்கும் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. மாலை 5 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில், விழுப்புரம், கடலூர், சிதம்பரம், திருவாரூர், காரைக்குடி, சிவகங்கை வழியாக காலை 3.45க்கு மானாமதுரை சென்றடைகிறது. அதே ரெயில் மறுமார்க்கத்தில் நாளை மறுநாள் காலை 11.45க்கு புறப்பட்டு இரவு 11.10க்கு தாம்பரம் வந்தடைகிறது.

    • சென்னையில் வசிக்கும் வெளியூரை சேர்ந்தோர், தங்களது சொந்த வாகனங்கள் மூலமாகவும், புறப்பட்டுள்ளனர்.
    • தாம்பரம் ரெயில் நிலையத்திலும் மக்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகரித்து காணப்படுகிறது.

    சென்னை:

    நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை திருநாள் வரும் 31ஆம் தேதி வெகுவிமர்சையாக கொண்டாடப்படவுள்ளது. இந்த நிலையில், சென்னை உள்ளிட்ட வெளியூர்களில் தங்கியிருந்து பணிபுரிந்துவரும் மக்கள், தீபாவளியை சொந்த ஊர்களில் குடும்பத்துடன் கொண்டாடுவதற்காக புறப்பட்டு வருகின்றனர். அதிகப்படியான மக்கள், தீபாவளிக்கு முந்தைய நாள் (புதன்கிழமை) விடுமுறை எடுத்துக்கொண்டு இன்றில் இருந்தே சொந்த ஊர் புறப்பட தயாராகிவிட்டனர்.

    நாளை இதை விட இன்னும் அதிக கூட்டம் இருக்கும் என்பதால், மக்கள் இன்று மாலையில் இருந்தே சொந்த ஊர் புறப்பட்டு வருவதால், சென்னை, கோவை, திருப்பூர், ஈரோடு போன்ற தமிழகத்தின் முக்கிய நகரங்களில் உள்ள பஸ் மற்றும் ரெயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

    குறிப்பாக, சென்னையில் வசிக்கும் வெளியூரை சேர்ந்தோர், தங்களது சொந்த வாகனங்கள் மூலமாகவும், புறப்பட்டுள்ளனர். இதன் காரணமாக தாம்பரம், பெருங்களத்தூரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. அதேபோல சென்னை எழும்பூர் மற்றும் தாம்பரம் ரெயில் நிலையத்திலும் மக்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகரித்து காணப்படுகிறது.

    சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும், நெல்லை எக்ஸ்பிரஸ், பொதிகை எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்களின் முன்பதிவில்லாத பெட்டிகளில் மக்கள் முண்டியடித்துக்கொண்டு ஏறினர். அவர்களை அங்கு பணியில் இருந்த ரெயில்வே போலீசார் தடுத்து நிறுத்தி வரிசையில் நின்றவாறு ரெயில்களுக்குள் செல்ல அனுமதித்து வருகின்றனர். பஸ், ரெயில் நிலையங்களில் இன்றே மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படும் நிலையில், நாளை இதை விட அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • ரெயில் நிலையங்களில் வழக்கத்தை விட கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.
    • ரிசர்வ் செய்யப்படாத பெட்டிகளில் நின்று கொண்டு பயணிகள் பயணம் மேற்கொண்டனர்.

    திருப்பூர்:

    பின்னலாடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி சார்ந்த பல்லாயிரக்கணக்கான நிறுவனங்கள் திருப்பூரில் செயல்பட்டு வருகின்றது. இதற்காக திருப்பூர் மாவட்டம் மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் , குஜராத் , பீகார் , ஒடிசா, மேற்கு வங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வந்து தங்கி பணிபுரிந்து வருகின்றனர்.

    இவர்கள் பெரும்பாலும் பொங்கல் மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று உறவினர்களுடன் பண்டிகையை கொண்டாடுவது வழக்கம். நாளை மறுதினம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதற்காக திருப்பூரில் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு கடந்த வாரம் முதல் போனஸ் தொகை பட்டுவாடா செய்யப்பட்டது. தொடர்ந்து நிறுவனங்களும் விடுமுறை அளிக்கப்பட்டு வரக்கூடிய நிலையில் திருப்பூரில் இருந்து வட மாநிலங்களுக்கு செல்லும் தொழி லாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    இதன் காரணமாக ரெயில் நிலையங்களில் வழக்கத்தை விட கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. எர்ணாகுளத்தில் இருந்து டாடாநகர் செல்லும் ரெயிலில் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணித்தனர்.

    போதிய இடவசதி இல்லாத காரணத்தால் பயணிகள் ரெயில் படிக்கட்டில் நின்றவாறும் , ரிசர்வ் செய்யப்படாத பெட்டிகளில் நின்றும் பயணம் மேற்கொண்டனர். திருப்பூர் ரெயில் நிலையத்தில் 2 நிமிடம் மட்டுமே ரெயில் நின்று செல்வதால் ஒரே நேரத்தில் பயணிகள் ஏறுவதில் சிரமம் ஏற்பட்டது. சிறப்பு ரெயில்கள் இன்றும் நாளையும் இயக்கப்பட உள்ள நிலையில் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதன் காரணமாகவும், கோவையிலேயே அதிக பயணிகள் ஏறி விடுவதால் திருப்பூர் வரும்போது பெட்டிகள் நிரம்பி விடுவதால் திருப்பூரில் இருக்கின்ற வடமாநில தொழிலாளர்கள் நின்று கொண்டு பயணிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே வட மாநிலங்களுக்கு செல்லும் ரெயிலில் ரிசர்வ் செய்யப்படாத பெட்டிகளை அதிகளவில் இணைக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்துகின்றனர். 

    • நம் சிவகாசியின் ஒட்டுமொத்த பொருளாதாரம்.
    • தீபாவளிப் பண்டிகை, அனைவரின் வாழ்விலும் ஒளி ஏற்றும் தீபாவளியாக அமையட்டும்.

    சென்னை:

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்து இருப்பதாவது:-

    "பட்டாசு வெடிப்பது நம்ம கலாச்சாரம். நம் மக்களின் வாழ்வாதாரம். நம் சிவகாசியின் ஒட்டுமொத்த பொருளாதாரம்.

    நம் மகிழ்ச்சிக்காகப் பட்டாசு தயாரிக்கும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்துக்காக, நாம் அனைவரும், நம்மால் முடிந்த அளவுக்குப் பட்டாசு வாங்கி வெடிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

    மத்தாப்புக்களின் வெளிச்சம் போல, இந்த தீபாவளிப் பண்டிகை, அனைவரின் வாழ்விலும் ஒளி ஏற்றும் தீபாவளியாக அமையட்டும். அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்!"

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


    • பெங்களூருவில் இருந்து வரும் 30-ந்தேதி, நவம்பர் 3-ந்தேதி காலை புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் அதிவிரைவு சிறப்பு ரெயில் மதியம் எழும்பூர் வந்தடையும்.
    • சென்னை எழும்பூரில் இருந்து வரும் 30-ந்தேதி, நவம்பர் 3-ந்தேதி மாலை புறப்பட்டு பெங்களூரு செல்லும் அதிவிரைவு சிறப்பு ரெயில் இரவு பெங்களூரு சென்றடையும்.

    சென்னை:

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பெங்களூருவில் இருந்து வரும் 30-ந்தேதி மற்றும் நவம்பர் 3-ந்தேதி காலை 8.05 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் அதிவிரைவு சிறப்பு ரெயில் (வண்டி எண்.06209), அதேநாள் மதியம் 2.30 மணிக்கு எழும்பூர் வந்தடையும்.

    மறுமார்க்கமாக, சென்னை எழும்பூரில் இருந்து வரும் 30-ந்தேதி மற்றும் நவம்பர் 3-ந்தேதி மாலை 3.55 மணிக்கு புறப்பட்டு பெங்களூரு செல்லும் அதிவிரைவு சிறப்பு ரெயில் (06210), அதேநாள் இரவு 10.50 மணிக்கு பெங்களூரு சென்றடையும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் வெளிமாநில வியாபாரிகள் திருப்பூர் நோக்கி வந்து ஆர்டர் கொடுப்பது அதிகரித்துள்ளது.
    • மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, டெல்லி போன்ற பகுதிகளுக்கு உள்நாட்டு ஆடைகள் அதிகம் தயாரித்து வழங்கப்படுகிறது.

    திருப்பூர்:

    பின்னலாடை நகரான திருப்பூரில் உள்நாட்டு ஆடை தயாரிப்பு தொடங்கி வெளிநாடுகளுக்கு ஆயத்த ஆடைகளை ஏற்றுமதி செய்யும் அளவுக்கு உயர்ந்த இடத்தை எட்டிப்பிடித்துள்ளது. அன்னிய செலாவணியை அதிகம் ஈட்டிக்கொடுத்து டாலர் சிட்டி என்ற பெருமையுடன் திகழ்கிறது. வெளிநாட்டு ஆடை ஏற்றுமதியால் உலகம் அறிய செய்தாலும் உள்நாட்டு ஆடை வர்த்தகமும் உயர்ந்த இடத்தை பிடித்துள்ளது. ஆண்டுக்கு ரூ.30 ஆயிரம் கோடிக்கு உள்நாட்டு ஆடை வர்த்தகம் நடக்கிறது.

    பண்டிகை காலங்களில் உள்நாட்டு ஆடை உற்பத்தி அதிகம் நடைபெறுவது வழக்கம். குறிப்பாக தீபாவளி, ரம்ஜான், கிறிஸ்துமஸ் பண்டிகை காலங்களுக்கு வெளிமாநிலங்களில் இருந்து திருப்பூர் நோக்கி வியாபாரிகள் வந்து ஆர்டர் கொடுத்து ஆடைகளை பெற்று செல்கிறார்கள்.

    தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் வெளிமாநில வியாபாரிகள் திருப்பூர் நோக்கி வந்து ஆர்டர் கொடுப்பது அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு பிறகு உள்நாட்டு வர்த்தகம் அந்தளவுக்கு இல்லாமல் இருந்த நிலையில் தற்போது ஆர்டர் வருகையை பார்க்கும்போது, கொரோனாவுக்கு முந்தைய காலகட்டத்தில் திருப்பூர் எப்படி பரபரப்பாக இருந்ததோ அந்த நிலையை எட்டி இருக்கிறது என்று உள்நாட்டு உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, டெல்லி போன்ற பகுதிகளுக்கு உள்நாட்டு ஆடைகள் அதிகம் தயாரித்து வழங்கப்படுகிறது. குறிப்பாக உள்ளாடைகள், பேஷன் ஆடைகள், குழந்தைகளுக்கான ஆடைகள் அதிகம் உற்பத்தி செய்து அனுப்பி வைக்கப்படுகிறது. உள்ளாடை தயாரிப்பில் திருப்பூருக்கு தனி இடம் உண்டு. பருத்தி ஆடைகளை பெரும்பாலும் தயாரித்து வந்த திருப்பூர் உள்நாட்டு உற்பத்தியாளர்கள், மெல்ல மெல்ல செயற்கை நூலிழை ஆடை தயாரிப்பில் ஈடுபட்டு தீவிரம் காட்டி வருகிறார்கள். பாலியஸ்டர் துணிகளில் பல ரகங்கள் உள்ளன.

    தற்போது துணிகளாகவே சந்தையில் விற்பனை செய்யப்படுவதால் துணிகளை வாங்கி ஆடைகளாக தயாரிப்பதற்கு சில நாட்களே ஆகும் நிலை உள்ளது. அந்தளவுக்கு நவீன எந்திரங்கள், கட்டமைப்பு வசதிகள் திருப்பூரில் இருப்பதாக உற்பத்தியாளர்கள் தெரிவிக்கிறார்கள். பருத்தி துணிகளை தயாரிக்க முன்பெல்லாம், வர்த்தகர்கள் கூறியபடி நூல் எடுத்து அதை நிட்டிங் செய்து, தகுந்த நிறத்துக்கு சாயமேற்றி துணியாக கிடைப்பதற்கு 10 முதல் 15 நாட்கள் ஆகிவிடும். அதன்பிறகு பிரிண்டிங், எம்ப்ராய்டரி, தையல் என ஆடை தயாரிப்பு நடக்கும்.

    ஆனால் தற்போது பாலியெஸ்டர் மற்றும் பருத்தி துணிகளாகவே சந்தையில் எளிதில் கிடைப்பதால் பிரிண்டிங், எம்ப்ராய்டரிங், தையல் என 2 நாட்களுக்குள் ஆர்டர்களை முடிக்கும் அளவுக்கு தொழில்நுட்ப வசதி இருப்பதாக உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்க (டீமா) தலைவர் முத்துரத்தினம் கூறியதாவது:-

    தீபாவளி பண்டிகைக்கான ஆர்டர்கள் வருகை அதிகரித்துள்ளது. உள்நாட்டு ஆடை தயாரிப்புக்கு தகுந்த சூழல் நிலவி வருகிறது. பருத்தி ஆடை தயாரிப்பில் இருந்து செயற்கை நூலிழை ஆடை தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறோம். பாலியெஸ்டர் துணிகளாகவே விரும்பிய வண்ணங்களில் சந்தையில் கிடைக்கிறது. ஆர்டர் கொடுத்த 2 நாட்களில் ஆடைகளை தயாரித்து அனுப்பும் அளவுக்கு நவீன தொழில்நுட்ப எந்திரங்கள் திருப்பூரில் உள்ளன. அதுபோல் அனைத்து கட்டமைப்பு வசதிகளும் இங்கு இருக்கிறது. தொழிலாளர்கள் பற்றாக்குறை உள்ளது. தேவையான தொழிலாளர்கள் இருந்தால் இன்னும் ஆர்டர்களை தைரியமாக எடுத்து அனுப்பி வைக்க முடியும்.

    சில நிறுவனங்களில் விடுதி அமைத்து தொழிலாளர்களை தங்க வைத்து வேலைக்கு அமர்த்தியுள்ளனர். அவர்களுக்கு தொழிலாளர்கள் பற்றாக்குறை என்ற பிரச்சினை இல்லை. தீபாவளி ஆர்டர்களை ஆயுத பூஜையையொட்டி முடித்து அனுப்பி வைப்போம். தற்போது உள்நாட்டு ஆடை தயாரிப்பு பரபரப்பாக உள்ளது.

    கொரோனாவுக்கு முன்பு திருப்பூர், உள்நாட்டு ஆடை உற்பத்தி எப்படி இருந்ததோ அதுபோன்ற சூழல் இந்த ஆண்டு தென்படுகிறது. தீபாவளி பண்டிகை தொழிலாளர்களுக்கு மட்டுமில்லாமல் அனைவருக்கும் உற்சாகமாக அமையும் என்று நம்புகிறோம். தமிழக அரசு பின்னலாடை உற்பத்தியாளர்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுத்தால் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க தயாராக உள்ளோம். அரசு எங்களுக்கு உதவ வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    திருப்பூரில் தீபாவளி பண்டிகை ஆர்டர் அதிகரித்து உள்நாட்டு ஆடை தயாரிப்பு வேகமெடுத்துள்ளதால் ஆடை உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    திருப்பூர் பின்னலாடை தொழிலில் 21 மாநிலங்களை சேர்ந்த, 3 லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் பீகார், ஒடிசா, மேற்குவங்கம், உத்தரப்பிரதேச மாநில தொழிலாளர்கள் அதிகம்.

    பின்னலாடை நிறுவனங்களுக்கு, தீபாவளி கால ஆர்டர் என்பது மிகவும் முக்கியம். வடமாநிலங்களில் இருந்து ஆர்டர் பெறப்பட்டு, உற்பத்தி துவங்கியுள்ளது. 3 வாரங்களுக்குள், உள்ளாடைகள், பின்னலாடைகளை உற்பத்தி செய்து அனுப்பி வைக்க திருப்பூர் பரபரப்பாக மாறியுள்ளது.

    இந்நிலையில் பீகார், ஒடிசா மாநிலங்களில் இருந்து தகவல் வந்ததாக கூறி, அம்மாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் புறப்பட்டு சென்று கொண்டிருக்கின்றனர். நீண்ட இடைவெளிக்கு பின், பண்டிகைக்கால ஆர்டர்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் தொழிலாளர் சொந்த ஊர் செல்வதால் உற்பத்தியாளர்கள் செய்வதறியாது திகைக்கின்றனர்.

    இதுகுறித்து தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்க (சைமா) தலைவர் ஈஸ்வரன் கூறியதாவது:-

    சொந்த மாநிலம் செல்லும் தொழிலாளரிடம் விசாரித்தபோது, ரேஷன் கார்டு பதிவுக்காக செல்வதாக கூறுகின்றனர். பீகார் மற்றும் ஒடிசாவில் விசாரித்தபோது, நிலம் சீரமைப்பு பணி நடக்கிறது என்றும், உரிமையாளர்கள் வரும் 30ந்தேதிக்குள் கையெழுத்திட வேண்டுமென, அரசு காலக்கெடு நிர்ணயித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. உண்மை நிலையை ஆராய்ந்து வருகிறோம். உற்பத்தி பரபரப்பாக நடக்கும் நேரத்தில், தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்வது எங்களுக்கு புதிய சவாலாக மாறியுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தீபாவளி பண்டிகை அக்டோபர் 31-ந் தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது.
    • தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய அனைத்து பஸ்களும் நிரம்பி விட்டன.

    சென்னை:

    அரசு விரைவு பஸ்களுக்கு 60 நாட்களுக்கு முன்னதாக முன்பதிவு செய்யும் நடைமுறை உள்ளது. அரசு பஸ்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நீண்ட தூரம் செல்லக்கூடிய எஸ்.இ.டி.சி. பஸ்களில் படுக்கை வசதியுடன் குளிர்சாதன வசதி போன்றவை இருப்பதால் அதிகளவில் பயணிக்க தொடங்கி உள்ளனர்.

    இந்த நிலையில் தீபாவளி பண்டிகை அக்டோபர் 31-ந் தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது.

    தீபாவளிக்கு சொந்த ஊர் செல்லக் கூடியவர்கள் கடந்த 1, 2-ந் தேதிகளில் முன்பதிவு செய்தனர். அக்டோபர் 28, 29 ஆகிய தேதிகளில் பயணம் செய்வதற்காக முன்பதிவு தொடங்கியது. தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய அனைத்து பஸ்களும் நிரம்பி விட்டன.

    அதே போல பண்டிகை முடிந்து நவம்பர் 3-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அங்கிருந்து புறப்பட்டு சென்னைக்கு வருவதற்கும் பெரும்பாலான இடங்கள் நிரம்பி விட்டன. 1500 பஸ்களுக்கு முதல் கட்டமாக முன்பதிவு நடந்து வருகிறது. இது தவிர வழக்கம் போல சிறப்பு பஸ்களும் அறிவிக்கப்படும்.

    • ரெயில் மூலம் திண்டுக்கல் வந்து தேனி மாவட்டத்திற்கு பஸ்சில் செல்லும் பயணிகள் அதிகளவில் குவிந்ததால் பஸ்நிலையத்தில் நெரிசல் ஏற்பட்டது.
    • பஸ்நிலையம் வந்த பயணிகள் கிராமங்களுக்கு செல்வதற்காக நீண்டநேரம் காத்திருந்து டவுன் பஸ்களில் சென்றனர்.

    திண்டுக்கல்:

    தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ளது. இதனால் சென்னை, கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து தென்மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் ஊர் திரும்பி வருகின்றனர். பயணிகள் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    மேலும் ரெயில் நிலையங்களிலும் கூட்டம் அலைமோதி வருகிறது. திண்டுக்கல் வழியாக தென்மாவட்டங்களுக்கு சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பெருநகரங்களுக்கு தென் மாவட்டங்களுக்கு ரெயில்கள் செல்கின்றன. இதில் பெரும்பாலான ரெயில்களில் முன்பதிவு டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துவிட்டன. இதனால் முன்பதிவில்லாத பெட்டிகளில் பொதுமக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    படிக்கட்டு மற்றும் கழிவறை அருகே அமர்ந்து பயணிக்கும் நிலை ஏற்பட்டது. மேலும் டிக்கெட்டு வாங்குவதற்காக ஏராளமானோர் நீண்டவரிசையில் காத்திருந்தனர்.

    சென்னையில் இருந்து வெள்ளிக்கிழமை முதல் அதிகளவு பயணிகள் வெளியேறியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் ரெயில் மூலம் திண்டுக்கல் வந்து தேனி மாவட்டத்திற்கு பஸ்சில் செல்லும் பயணிகள் அதிகளவில் குவிந்ததால் பஸ்நிலையத்தில் நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து கழகம் சார்பில் 200 சிறப்பு பஸ்கள் முக்கிய நகரங்களுக்கு இயக்கப்பட்டு வருகின்றன.

    நேற்று கூட்டம் அதிகரித்த நிலையில் இன்று காலைமுதலே பயணிகள் பஸ்சுக்காக காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. வெளியூரில் இருந்து இரவு நேரத்தில் திண்டுக்கல் பஸ்நிலையம் வந்த பயணிகள் கிராமங்களுக்கு செல்வதற்காக நீண்டநேரம் காத்திருந்து டவுன் பஸ்களில் சென்றனர். இதனால் தீபாவளி பண்டிகை களைகட்ட தொடங்கியுள்ளது.

    ×