என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dharmendra Pradhan"

    • சிபிஎஸ்இ பிரிவு ஏ தேர்வில் இந்திக்கு 300க்கு 30 மதிப்பெண்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
    • இது இந்தியாவின் அலுவல் மொழி விதிகளுக்கு முரணானது.

    சிபிஎஸ்இ பிரிவு ஏ தேர்வில் இந்திக்கு 300க்கு 30 மதிப்பெண்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. பி பிரிவு தேர்வில் ஹிந்திக்கு 300க்கு 15 மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளது. இது இந்தியாவின் அலுவல் மொழி விதிகளுக்கு எதிரானது. இந்தி பேசாத மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு எதிரான அநீதி மீண்டும் தொடங்கியுள்ளது என்று சு. வெங்கடேசன் எம்பி தெரிவித்துள்ளார்.

    இந்த விவகாரம் தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திரா பிரதானுக்கு மதுரை எம்பி சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார்.

    அக்கடிதத்தில், "சிபிஎஸ்இ 08.03.2024 அன்று வெளியிட்டுள்ள அறிவிக்கையின்படி பிரிவு ஏ,பி,சி பணியிடங்கள் 118 க்கான நியமனத் தேர்வுகள் நடைபெற உள்ளன.

    அதில் இந்தி மொழி தேர்வும் இடம் பெற்றுள்ளது. அதனால் இந்தி பேசாத மாநிலங்களை சார்ந்த தேர்வர்கள் குறைந்தபட்சம் 10% முதற்கட்ட தேர்விலேயே இழந்து இரண்டாம் கட்ட தேர்வுக்கு அடியெடுத்து வைக்கும் வாய்ப்பை பறி கொடுப்பார்கள்.

    பிரிவு ஏ உதவி செயலாளர் (நிர்வாகம்) பதவிகளுக்கான முதற்கட்ட தேர்வில் மொத்த மதிப்பெண்கள் 300 இல் இந்தி மொழி தேர்வுக்கு 30 மதிப்பெண்கள்.

    பிரிவு பி இளநிலைப் பொறியாளர் பதவிக்கு மொத்த மதிப்பெண்கள் 300 இல் இந்தி மொழி தேர்வுக்கு 15 மதிப்பெண்கள். பிரிவு பி இளநிலை மொழிபெயர்ப்பாளர் பதவிக்கு மொத்த மதிப்பெண்கள் 300 இல் இந்தி மற்றும் ஆங்கில மொழி தேர்வுக்கு 200 மதிப்பெண்கள்.

    பிரிவு சி கணக்காளர் பதவிக்கு மொத்த மதிப்பெண்கள் 300 இல் இந்தி & ஆங்கில மொழித் தேர்வுக்கு 40 மதிப்பெண்கள். பிரிவு சி இளநிலை கணக்காளர் பதவிக்கு மொத்த மதிப்பெண்கள் 240 இல் இந்தி மற்றும் ஆங்கில மொழி மற்றும் இலக்கியம் தொடர்பான தேர்வுக்கு 40 மதிப்பெண்கள்.

    இது இந்தியாவின் மொழி பன்மைத்துவத்தை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட அலுவல் மொழி விதிகளுக்கு முரணானது.

    இந்தி பேசாத மாநில தேர்வர்களுக்கு அநீதி இழைக்கிற மற்றும் சம தள ஆடுகளத்தை மறுக்கிற தேர்வு முறைமையை மாற்ற வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

    • நேற்று காலை பிரதமர் நரேந்திர மோடியை கவர்னர் சந்தித்து பேசினார்.
    • சட்டசபையில் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், மத்திய கல்வி அமைச்சருடன் கவர்னர் சந்தித்து உள்ளார்.

    தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி 5 நாள் பயணமாக நேற்று முன்தினம் டெல்லி புறப்பட்டு சென்றார். இது அவரது தனிப்பட்ட முறையிலான பயணம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், நேற்று காலை பிரதமர் நரேந்திர மோடியை அவர் சந்தித்து பேசினார்.

    அப்போது, 3-வது முறையாக பிரதமராக பதவி ஏற்ற நரேந்திர மோடிக்கு கவர்னர் ஆர்.என்.ரவி சால்வை அணிவித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் நிலவும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை குறித்து கவர்னர் அவரிடம் விரிவாக ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

     

    நேற்று பிரதமரை கவர்னர் சந்தித்த நிலையில், இன்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை கவர்னர் ஆர்.என். ரவி சந்தித்து பேசி உள்ளார்.

    சட்டசபையில் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், மத்திய கல்வி அமைச்சருடன் கவர்னர் சந்தித்து உள்ளார்.

    இதுதொடர்பாக கவர்னர் ஆர்.என். ரவி தனது எக்ஸ் பதிவில்,

    நான் மாண்புமிகு மத்திய கல்வி அமைச்சர் ஸ்ரீ தர்மேந்திர பிரதான் ஜி அவர்களை சந்தித்து, தமிழகத்தில் உயர்கல்வியை உயர் நிலைக்கு கொண்டு செல்வதற்கான வழிகள் மற்றும் வழிமுறைகள் பற்றி விவாதித்தேன். திறன் மற்றும் கல்வி மூலம் நமது மாநில இளைஞர்களின் நல்வாழ்வில் ஆழ்ந்த அக்கறை கொண்ட அவருக்கு மிகவும் நன்றி என்று தெரிவித்துள்ளார்.

    • 5 கோடி மாணவர்கள் கடந்த 5 ஆண்டுகளாக வெற்றிகரமாக நீட் தேர்வை எழுதி உள்ளனர்.
    • 4700 தேர்வு மையங்களில் பாட்னாவின் ஒரு தேர்வு மையத்தில் மட்டுமே வினாத்தாள் கசிந்துள்ளது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. பாராளுமன்றத்தில் நீட் தேர்வு முறைகேடு குறித்து காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், திமுக எம்.பி. கலாநிதி வீராசாமி கேள்வி எழுப்பினர்.

    * நீட் முறைகேட்டால் 24 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    * நீட் முறைகேட்டுக்கு மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பொறுப்பேற்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்கம் அளித்து பேசினார். அவர் கூறுகையில்,

    * நீட் தேர்வில் 7 ஆண்டுகளாக வினாத்தாள் கசிந்ததாக எந்த ஆதாரமும் இல்லை.

    * 5 கோடி மாணவர்கள் கடந்த 5 ஆண்டுகளாக வெற்றிகரமாக நீட் தேர்வை எழுதி உள்ளனர்.

    * 7 ஆண்டுகளில் 70 முறை நீட் வினாத்தாள் கசிந்ததற்காக எந்த ஆதாரமும் இல்லை.

    * 4700 தேர்வு மையங்களில் பாட்னாவின் ஒரு தேர்வு மையத்தில் மட்டுமே வினாத்தாள் கசிந்துள்ளது.

    * நீட் முறைகேடு தொடர்பாக தொடர்ந்து முறையான விசாரணை நடந்து வருகிறது என்று அவர் கூறினார்.

    • நீட் தேர்வு மட்டுமன்றி நாட்டில் நடக்கும் முக்கியமான தேர்வுகள் நடத்தப்படும் முறையில் தீவிரமான பிரச்சனை உள்ளது தெரிகிறது.
    • 'பணம் இருந்தால் இந்தியாவின் தேர்வு அமைப்பை விலைக்கு வாங்கிவிடலாம்'

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ள நிலையில் நீட் தேர்வு முறைகேடு குறித்த காரசாமான விவாதம் நடந்து வருகிறது.

    அந்த வகையில் பாராளுமன்ற எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசுகையில், மொத்த நாட்டுக்கும் நீட் தேர்வு மட்டுமன்றி நாட்டில்  நடக்கும் முக்கியமான தேர்வுகள் நடத்தப்படும் முறையில் தீவிரமான பிரச்சனை உள்ளது தெரிகிறது.

    அமைச்சர் [மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்] இந்த பிரச்சனைகளுக்கு தன்னைத் தவிர மற்ற அனைவர் மீதும் குற்றம்சாட்டிவருகிறார். அவருக்கு இந்த விவகாரத்தில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்ற அடிப்படையான புரிதல் இல்லை.

    நாட்டில் உள்ள மில்லியன் கணக்கான மாணவர்கள் இந்த விவகாரத்தில் என்னதான் நடக்கிறது என்று கவலையுடன் உள்ளனர், இந்தியாவின் தேர்வு முறை என்பதே மோசடியானது என்று அவர்கள் நம்பத் தொடங்கியுள்ளனர்.

    நீங்கள் பணக்காரராகவும் உங்களிடம் அதிக பணமும் இருந்தால் இந்தியாவின் தேர்வு அமைப்பை விலைக்கு வாங்கிவிடலாம் என்று மக்கள் தற்போது கருதுகின்றனர். அதையே எதிர்தரப்பில் உள்ள நாங்களும்  கருதுகிறோம் என்று பேசியுள்ளார். முன்னதாக இந்த வருட நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு, அதிக மதிப்பெண் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது உறுதியானது குறிப்பிடத்தக்கது.

    • காங்கிரஸ் கட்சி அரசை நம்பவில்லை. தற்போது உச்சநீதிமன்றத்தையும் அது நம்பவில்லை.
    • நீட் மீதான உச்சநீதிமன்றத்தின் முடிவு மாணவர்கள் மீதான தோல்வி கிடையாது.

    நீட் பேப்பர் லீக்ஸ் தொடர்பாக மத்திய அரசு மீதும், தேசிய தேர்வு முகமை மீதும் காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது. நீட் தேர்வு நடத்தி வரும் அமைப்பு மோசடியில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டியது.

    நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நீட் பேப்பர் லீக்ஸ் தொடர்பாக அமளியில் ஈடுபட்டது. இந்த நிலையில்தான் உச்சநீதிமன்றம் நீட் தேர்வை மீண்டும் நடத்த தேவையில்லை. தேர்வுக்கான புனிதம் மீறலுக்கான எந்தவொரு காரணமும் இல்லை. என உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.

    தொடர்ந்து குற்றம்சாட்டி வரும் நிலையில் மத்திய கல்வித்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடியுள்ளார்.

    "பேப்பர் லீக்ஸ், ஊழலின் தந்தை காங்கிரஸ். காங்கிரஸ் கட்சி அரசை நம்பவில்லை. தற்போது உச்சநீதிமன்றத்தையும் அது நம்பவில்லை. நீட் மீதான உச்சநீதிமன்றத்தின் முடிவு மாணவர்கள் மீதான தோல்வி கிடையாது. காங்கிரசின் முறையற்ற அணுகுமுறை, அற்ப அரசியலின் முடிவு" என தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

    முன்னதாக, சிஸ்டமேட்டிக் மீறல் அல்லது தேர்வுக்கான புனிதம் மீறலுக்கான எந்தவொரு காரணமும் இல்லை. இரண்டு இடங்களில் கேள்வித்தால் லீக் ஆகி பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 23.33 லட்சம் மாணவர்களை மீண்டும் தேர்வு எழுத உத்தரவிட்டால் அவர்களுடைய சொந்த ஊரில் இருந்து தேர்வு நடத்தப்படும் மையத்திற்கு பல கிலோ மீட்டர் கடந்து வர வேண்டியிருக்கும். இது மிகப்பெரிய விளைவை ஏற்படுத்தும் என உச்சநீதிமன்றம் நீட் தேர்வை மீண்டும் நடத்த உத்தரவிட வேண்டும் என தேர்வு எழுதியவர்கள் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையின்போது உத்தரவு பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.

    • எதிர்க்கட்சிகள் அவர்களுடைய மாநிலங்களை அதளபாதாளத்திற்கு தள்ளுவதில் மும்முரம் காட்டி வருகின்றன.
    • இதற்காக இளைஞர்கள் வேலையற்றவர்கள், ஏமாற்றமடைந்தவர்கள் மற்றும் பின்தங்கியவர்கள் என்ற விலை கொடுக்கிறார்கள்.

    மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான், "வெற்று வாக்குறுதிகளை அளித்து வாக்குகளை பெற்று எதிர்க்கட்சிகள் அவர்களுடைய மாநிலங்களை அதளபாதாளத்திற்கு தள்ளுவதில் மும்முரம் காட்டி வருகின்றன. இதற்காக இளைஞர்கள் வேலையற்றவர்கள், ஏமாற்றமடைந்தவர்கள் மற்றும் பின்தங்கியவர்கள் என்ற விலை கொடுக்கிறார்கள். இது மன்னிக்க முடியாத துரோகம்.

    இளைஞர்களின் எதிர்காலம் சூறையாடப்படுகிறது, குறிப்பாக இளம் பெண்கள், அவர்களது சொந்த அரசாங்கங்களால் அதிர்ச்சியூட்டும் வகையில் கைவிடப்பட்டுள்ளனர். இந்த மாநிலங்கள் தங்களின் தவறான நிர்வாகம் மற்றும் ஊழல் ஆகியவற்றால் சீர்குலைந்து வருகின்றன.

    இளைஞர்களுக்கு அதிகாரம் அளிப்பதிலும் வேலைவாய்ப்பை உருவாக்குவதிலும் பாஜக தொடர்ந்து செயல்பட்டு வரும் நிலையில், எதிர்க்கட்சிகள் தவறான நிர்வாகம் மற்றும் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளில் சிக்கித் தவிக்கின்றன. இந்த மாநிலங்களின் மக்கள் முடிவுகளை வழங்கும் தலைமையை நோக்கிப் பார்க்க வேண்டிய நேரம் இது" எனத் தெரிவித்துள்ளார்.

    • தேசிய தேர்வு முகமையில் புதிதாக 10 பதவிகள் உருவாக்கப்பட இருக்கிறது.
    • நுழைவுத் தேர்வில் எந்த விதமான முறைகேடும் நடக்காததை உறுதி செய்யும் வகையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்படும்.

    மறுசீரமைப்புக்கான உயர்மட்ட குழுவின் பரிந்துரையின் ஒரு பகுதியாக அடுத்த வருடத்தில் இருந்து NTA (தேசிய தேர்வு முகமை) ஆள்சேர்ப்பு தேர்வு போன்றவற்றை நடத்தாது. உயர் கல்வி நுழைவு தேர்வுகளில் கவனம் செலுத்தும் என மத்திய கல்வித்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

    மேலும், என்.டி.ஏ.-வில் புதிதாக 10 பதவிகள் சேர்க்கப்பட்டு மறுகட்டமைப்பு செய்யப்பட இருக்கிறது. நுழைவுத் தேர்வில் எந்தவிதமான முறைகேடும் நடக்காததை உறுதி செய்யும் வகையில் செயல்பட பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட இருக்கிறது.

    பொதுவான பல்கலைக்கழக நுழைவுத்தேர்வு (Common University Entrance Test: CUET- UG) வருடத்திற்கு ஒருமுறை நடத்தப்படும். பாரம்பரிய பென்-பேப்பர் அடிப்படையிலான நீட் நுழைவுத் தேர்வை கம்ப்யூட்டர் அடிப்படையிலான தேர்வாக மாற்றலாமா? என சுகாதாரத்துறை அமைச்சகத்துடன் விவாதிப்போம். அரசாங்கம் விரைவில் கணினி தகவமைப்புத் தேர்வு (computer adaptive test) மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த நுழைவுத் தேர்வுகளுக்கு (technology-driven entrance exams) மாறுவதைப் பரிசீலித்து வருகிறது" என்றார்.

    கடந்த வருடம் நடைபெற்ற நீட் தேர்வின்போது வினாத்தாள் கசிந்ததாக நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. உச்சநீதிமன்றம் நீட் தேர்வை ரத்து செய்ய மறுத்து விட்டபோதிலும், குறிப்பிட்ட சில மையங்களில் தேர்வு எழுதியவர்கள் விரும்பினால் மீண்டும் தேர்வு எழுதலாம் என உத்தரவிட்டது.

    • அனைத்து மாநிலங்களும் புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்ட பின், தமிழ்நாடு மட்டும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் எனக் கூறுவது ஏன்?
    • தமிழ்நாடு மட்டும் புதிய கல்விக் கொள்கையை ஏற்க மறுக்கிறது. அவர்கள் அதை வைத்து அரசியல் செய்கிறார்கள்.

    தமிழக கல்வித்துறைக்கு மத்திய அரசு தரக்கூடிய நிதியை வழங்காமல் இழுத்தடிக்கிறது என தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மத்திய அரசை குற்றம்சாட்டியிருந்தார்.

    இது தொடர்பாக காசி தமிழ்ச்சங்கம் நிகழ்ச்சியில் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கலந்து கொண்டார். அப்போது இது தொடர்பாக அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

    இதற்கு புதிய கல்விக் கொள்கையை ஏற்கும்வரை தமிழக கல்வித் துறைக்கு நிதி தர இயலாது என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக தர்மேந்திர பிரதான் கூறியதாவது:-

    இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்ட பின், தமிழ்நாடு மட்டும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் எனக் கூறுவது ஏன்?. புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால்தான் விதிகளின்படி நிதி ஒதுக்க முடியும். இல்லையென்றால் நிதி ஒதுக்க இயலாது.

    தமிழ்நாடு மட்டும் புதிய கல்விக் கொள்கையை ஏற்க மறுக்கிறது. அவர்கள் அதை வைத்து அரசியல் செய்கிறார்கள். மற்ற மாநிலங்களில் தாய்மொழி, ஆங்கிலம் மற்றும் 3-வது மொழியை கற்கிறார்கள். ஏற்றுக் கொள்கிறார்கள். ஆனால் தமிழ்நாடு மற்றும் 3-வது மொழியை ஏற்கமாட்டோம் என்றால் அது விதிகளின்படி தவறு. நிதி ஒதுக்க முடியாது.

    இவ்வாறு தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

    • ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் என 32 ஆயிரம் பேருக்கு மாதத்திற்கு 76 கோடி சம்பளம் வழங்க வேண்டியுள்ளது.
    • இருமொழி கொள்கையால் எந்த வகையில் குறைந்து போய்விட்டோம்.

    புதிய கல்விக் கொள்கையை ஏற்கும் வரை தமிழக பள்ளி கல்வித்துறைக்கு நிதி தர இயலாது என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிராதான் தெரிவித்திருந்தார். இதற்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பதில் அளித்துள்ளார்.

    இது தொடர்பாக அன்பில் மகேஷ் கூறியதாவது:-

    தமிழ் நாட்டு மக்களை மத்திய அரசு தொடர்ந்து வஞ்சித்து கொண்டிருக்கிறது என்பதை நாங்கள் படித்து படித்து, ஆட்சி மாற்றம் செய்யப்பட்டதற்கு பின்பும் சரி, முன்பும் சரி தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

    நாங்கள் இப்படி சொல்லும்போது பாஜக-வினர் நாங்கள் பொய் சொல்கிறார்கள், வெட்கமில்லையா என்று ஆளுங்கட்சியில் உள்ளவர்கள் எங்களை பார்த்து வாய் கூசாமல் சொல்கிறார்கள்.

    ஆனால் மந்திய அமைச்சர் திட்டவட்டமாக என்ன சொல்லியிருக்கிறார் என்பதை நீங்கள் பார்த்திருக்கலாம். நீங்கள் கல்வியில் அரசியல் செய்யாதீர்கள் என நாங்கள் அடிக்கடி சொல்கிறோம். 40 லட்சம் மாணவச் செல்வங்களின் முழு எதிர்காலம் அதில் இடங்கியிருக்கிறது.

    ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் என பணியாற்றும் ஏறத்தாழ 32 ஆயிரம் பேருக்கு சம்பளம் வழங்க வேண்டியிருக்கிறது. ஒரு மாதத்திற்கு 76 கோடி ரூபாய் மதிப்பிலும், வருடத்திற்கு 921 கோடி ரூபாய் என்ற வகையில் சம்பளம் மட்டுமே வழங்க வேண்டியிருக்கிறது.

    25 சதவீதம் தனியார் பள்ளி ஒதுக்கீட்டிற்கான கட்டணம் 400 கோடி ரூபாயை தாண்டும். இதையெல்லாம் சேர்த்துதான் மாநில அரசு, மத்திய அரசு 60:40 என்ற அடிப்படையில் செய்து கொண்டிருக்கிறது.

    நாங்கள் இதை சொல்லும்போது மும்மொழி கொள்கையை ஏற்றுக் கொண்டால என்ன? என்ற பிடிவாதத்துடன் இருக்கிறார்கள். அது தேவையில்லை என்ற காரணத்தினால்தான் அண்ணா காலத்தில் இருந்து இருமொழி கொள்கையை பின்பற்றி கொண்டிருக்கிறோம். இருமொழிக்கொள்கையை வைத்து தமிழக மாணவ, மாணவிகள் உலகம் முழுவதும் சாதித்து வருகின்றனர்.

    மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொள்ள மாட்டீர்களா? என்பது இன்னொரு மொழிப்போரை தூண்டுவது போன்றுதான் அமைந்திருக்கிறது. அரசியல் செய்யாமல், சாக்குபோக்கு சொல்லாமல் 2152 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற வேண்டுகோளை இப்போதும் வைக்கின்றேன். இருமொழி கொள்கையால் எந்த வகையில் குறைந்து போய்விட்டோம். மாணவர்களை ப்ரூவன் பிராடெக்ட்-ஆக உருவாக்கி வருகிறோம். மும்மொழி கொள்கை ஏற்றுக் கொள்ளுங்கள் என்ற அழுத்தத்தை எப்படி தரலாம்.

    இவ்வாறு அன்பில் மகேஷ் தெரிவித்தார்.

    • மத்திய அமைச்சரின் கருத்து தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
    • முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

    புதிய கல்விக் கொள்கையை ஏற்கும் வரை தமிழக பள்ளி கல்வித்துறைக்கு நிதி தர இயலாது என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிராதான் தெரிவித்திருந்தார். மத்திய அமைச்சரின் கருத்து தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    இந்த விவகாரத்தில் அரசியல் செய்யாமல், நிதி ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சருக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வலியுறுத்தி இருந்தார். இந்த நிலையில், தமிழ் நாட்டிற்கு நிதி அளிக்கும் விவகாரத்தில் மத்திய அரசு பிளாக் மெயில் செய்வதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "They have to come to the terms of the Indian Constitution என்கிறார் ஒன்றியக் கல்வி அமைச்சர். மும்மொழிக் கொள்கையை 'rule of law' என்கிறார்.

    இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எந்தப் பிரிவு மும்மொழிக் கொள்கையைக் கட்டாயமாக்குகிறது? எனக் கல்வி அமைச்சரால் கூற முடியுமா?

    மாநிலங்களால் ஆனதே இந்திய ஒன்றியம்! ஒத்திசைவுப் பட்டியலில் உள்ளதுதான் கல்வி! அதற்கு ஒன்றிய அரசு ஏகபோக எஜமானர்கள் அல்ல!

    "மும்மொழிக் கொள்கையை ஏற்கும் வரை தமிழ்நாட்டுக்கு நிதி கிடையாது" என்று blackmail செய்யும் தடித்தனத்தைத் தமிழர்கள் பொறுத்துக் கொள்ளமாட்டார்கள்!

    எங்கள் உரிமையைத்தான் கேட்கிறோம்! உங்கள் தனிச்சொத்தைக் கேட்பதுபோல் திமிராகப் பேசினால், தமிழர்களின் தனிக்குணத்தையும் டெல்லி பார்க்க வேண்டியிருக்கும்..." என்று குறிப்பிட்டுள்ளார். 

    • தேசியக் கல்விக் கொள்கையை, மாநிலங்கள் மீது திணிக்கக்கூடாது
    • ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு நிதி வழங்க வேண்டியது மத்திய அரசின் கடமை

    புதிய கல்விக் கொள்கையை ஏற்கும்வரை தமிழக கல்வித் துறைக்கு நிதி தர இயலாது என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தது தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த அறிக்கையில், "அரசு பள்ளிகளில் மும்மொழிகள் கற்பிக்கப்படுவதைக் கட்டாயமாக்கும் தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டு செயல்படுத்தினால் மட்டும் தான் தமிழ்நாட்டுக்கு நிதி வழங்கப்படும் என்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் கூறியிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. பொதுப்பட்டியலில் உள்ள கல்வியில் மாநில அரசுகள் தனிக்கொள்கையை கடைபிடிக்க வகை செய்யப்பட்டுள்ள நிலையில், அதற்கு மாறாக தேசியக் கல்விக் கொள்கையைத் திணிப்பதை மத்திய அரசு தவிர்த்திருக்க வேண்டும்.

    புதிய கல்விக் கொள்கையின் ஓர் அங்கமான பி.எம்ஸ்ரீ பள்ளிகளை தமிழக அரசு திறக்க வேண்டும்; அவற்றில் மும்மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற நிபந்தனையை ஏற்க தமிழக அரசு மறுத்து விட்டதால், ஒருங்கிணைந்தக் கல்வித் திட்டத்தின்படி தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ரூ.2,401 கோடி நிதியை வழங்காமல் பல மாதங்களாக மத்திய அரசு தாமதப்படுத்தி வருகிறது. இந்த நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று தமிழக அரசு பல மாதங்களாக வலியுறுத்தி வருகிறது. புதிய கல்விக் கொள்கையை ஏற்க மறுப்பதை காரணம் காட்டி மத்திய அரசு நிதியை வழங்க மறுப்பதை ஏற்க முடியாது என்று பல தருணங்களில் பாட்டாளி மக்கள் கட்சி உறுதிபட தெரிவித்திருக்கிறது.

    ஆனால், மத்திய அரசு அதன் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளாமல் மும்மொழிக் கொள்கையை திணிப்பதில் உறுதியாக இருக்கிறது என்பதைத் தான் மத்திய கல்வி மந்திரியின் கருத்துகள் காட்டுகின்றன. மும்மொழித் திணிப்பு என்ற போர் தமிழகத்தின் மீது 80 ஆண்டுகளுக்கு மேலாக தொடுக்கப்பட்டு வருகிறது. ஆனால், அந்தப் போரில் ஒவ்வொரு முறையும் தமிழ்நாட்டு மக்கள் தான் வென்று வருகின்றனர். 1963-ஆம் ஆண்டில் இந்தித் திணிப்பு குறித்த சர்ச்சை எழுந்த போது, இந்தி பேசாத மாநிலங்கள் விரும்பும் வரை ஆங்கிலமே அலுவல் மொழியாக நீடிக்கும்; இந்தி திணிக்கப்படாது என்று வாக்குறுதி அளித்திருந்தார். அதை மீறும் வகையில் மத்திய அரசு செயல்படுவது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது.

    பொதுப்பட்டியலில் கல்வி இருக்கும் நிலையில், தேசிய அளவிலான கல்விக் கொள்கையை வகுப்பதற்கு மத்திய அரசுக்கு எவ்வளவு அதிகாரம் உள்ளதோ, அதே அதிகாரம் மாநில அரசுக்கும் உள்ளது. அதன்படி கடந்த காலங்களில் பல மாநிலங்கள் தங்களுக்கென்று தனிக் கொள்கையை வகுத்து நடைமுறைப்படுத்தி உள்ளன. இப்போதும் கூட தமிழ்நாடு அரசு மாநிலக் கல்விக் கொள்கையை வகுத்து இன்னும் செயலாக்கம் செய்யாமல் வைத்திருக்கிறது. இது மாநில அரசின் உரிமை. இதை மத்திய அரசு மதிக்க வேண்டும்.

    ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு நிதி வழங்க வேண்டியது மத்திய அரசின் கடமை. அந்த நிதி தமிழ்நாட்டுக் குழந்தைகளுக்கு கல்வி வழங்குவதற்கு தானே தவிர, புதிய கல்விக் கொள்கையை செயல்படுத்துவதற்காகவோ, முன்மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்காகவோ வழங்கப்படும் வெகுமதி அல்ல. அதனால், தேசியக் கல்விக் கொள்கையையும், தமிழ்நாட்டிற்கான நிதியையும் இணைத்து மத்திய அரசு குழம்பிக் கொள்ளக் கூடாது. மத்திய அரசு நிதி ஒதுக்காததால், அரசு பள்ளிகளில் பயிலும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு தொடர்பான பல திட்டங்கள் செயல்படுத்தப்படாமல் கிடக்கின்றன. எனவே, நியாயத்தையும், மாநில அரசின் உரிமைகளையும் மதித்து ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு உடனே வழங்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அரசு பள்ளிகளை மேம்படுத்த பிஎம். ஸ்ரீ என்ற திட்டத்தை மோடி அரசு கொண்டு வந்துள்ளது.
    • முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் திமுகவினர் மொழி அரசியல் செய்து வருகின்றனர்.

    புதிய கல்விக் கொள்கையை ஏற்கும்வரை தமிழக கல்வித் துறைக்கு நிதி தர இயலாது என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தது தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மத்திய அமைச்சரின் இந்த பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட பல அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு, மூன்றாவது மொழி கற்கும் வாய்ப்பை மறுப்பது சமூக அநீதி என்று பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த அறிக்கையில், "தமிழகத்தில் ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் மும்மொழி கொள்கையை, அரசு பள்ளி மாணவர்களுக்கும் விரிவுப்படுத்த வேண்டும் அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டும், மூன்றாவது மொழி கற்கும் வாய்ப்பை மறுப்பது சமூக அநீதி

    பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு என்பது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மக்களுக்காக திட்டங்களை வகுக்கவும், கொள்கைகளை உருவாக்கவும் மோடி அரசுக்கு மக்கள் அதிகாரம் வழங்கியிருக்கிறார்கள். அதன்படியே மோடி அரசு பல்வேறு திட்டங்களையும், கொள்கைகளையும் வகுத்து வருகிறது அதில் ஒன்றுநான் புதிய தேசிய கல்விக் கொள்கை

    புதிய தேசிய கல்விக் கொள்கையின்படி, அரசு பள்ளிகளை மேம்படுத்த பிஎம். ஸ்ரீ என்ற திட்டத்தை மோடி அரசு கொண்டு வந்துள்ளது. தமிழ்நாடு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் வளர்ச்சிக்காக 'ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின்கீழ் (எஸ்.எஸ்.ஏ) மத்திய அரசு நிதி வழங்கி வருகிறது மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்த மாட்டோம். ஆனால், திட்டத்திற்கான நிதி மட்டும் என்று திமுக அரசு கேட்கிறது. திட்டத்தை செயல்படுத்தினால் தான் சட்டப்படி நிதி வழங்க முடியும் என்று மத்திய கல்வி அமைச்சர் கூறி இருக்கிறார். இதை வழக்கம்போல திரித்து, மொழி அரசியலையும், பிரிவினைவாத அரசியலையும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் திமுகவினர் செய்து வருகின்றனர்.

    புதிய தேசிய கல்விக் கொள்கையை ஏற்க சொல்வது, இந்தி திணிப்பு. என்றும் மும்மொழி கொள்கை திணிப்பு என்றும் திமுகவினர் கூறி வருகின்றனர். இது அப்பட்டமான பொய். புதிய தேசிய கல்விக் கொள்கையில், இந்தி மொழி எங்கும் திணிக்கப்படவில்லை. தாய்மொழி, ஆங்கிலம், அதற்கு அடுத்து மாணவர்கள் விரும்பும் மொழி என்றுதான் புதிய கல்விக் கொள்கையில் கூறப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நெலுங்கு கன்னடம் மலையாளத்தை தாய்மொழியாக கொண்டவர்கள் கோடிக்கணக்கில் வசிக்கிறார்கள். மும்மொழி கொள்கையை ஏற்றுக் கொண்டால் அவர்கள், தங்கள் தாய்மொழியை கற்க முடியும். அந்த வாய்ப்பை திமுக அரசு ஏன் மறுக்கிறது? அப்படி மறுப்பது, அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையை மீறும் செயல் அல்லவா?

    மும்மொழிக் கொள்கையை ஏற்க மாட்டோம் என்று திரும்பத் திரும்ப திமுக அரசு கூறுகிறது அதன் மூலம் தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கை இல்லாமல் இருப்பது போன்ற ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்த திமுகவினர் முயற்சிக்கின்றனர்.

    தமிழகத்தில் பல பத்தாண்டுகளாகவே மும்மொழி கொள்கைதான் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் அரசு பள்ளிகள் தவிர, தனியார் பள்ளிகள் அனைத்திலும் மும்மொழி கொள்கை இருக்கிறது. சி.பி.எஸ்.இ பள்ளிகள் அனைத்தும் மும்மொழி கொள்கையை பின்பற்றும் பள்ளிகள் தான். முதலமைச்சர் ஸ்டாலின் குடும்பத்தினர் உட்பட திமுகவினர் நடத்தும் பள்ளிகள் அனைத்தும் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் தான். திமுகவினர் நடத்தும் பள்ளிகளின் மூன்றாவது மொழியாக இந்தி தான் இருக்கிறது. சில பள்ளிகளில் நான்காவது மொழியாக சமஸ்கிருதம், பிரெஞ்சு ஜெர்மன் போன்ற மொழிகளையும் வைந்திருக்கிறார்கள். தமிழகத்தில் சில அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் உருது மொழி கற்பிக்கப்பட்டு வருகிறது.

    ஆனால், பட்டியலின் பழங்குடியின் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரும், பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினரும் படிக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டும் மும்மொழி கொள்கை கூடாது என்கிறது திமுக அரசு. இது. ஒரு கண்ணில் வெண்ணையும் இன்னொரு கண்ணில் சுண்ணாம்பும் வைக்கும் செயல் அல்லவா! அரசு ஒரு கொள்கையை உருவாக்கினால், அது அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும். தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஒரு கொள்கை, அரசு பள்ளி மாணவர்களுக்கு கொள்கை என இருந்தால் எப்படி சமத்துவம் உருவாகும்! சமூக நீதி கிடைக்கும்?

    குறைந்தபட்சம் திமுகவினர். தங்கள் குடும்பத்தினர் நடத்தும் பள்ளிகளிலாவது இரு மொழி கொள்கையை பின்பற்ற வேண்டும். அதன் பிறகு மற்றவர்களுக்கு பாடம் எடுக்க வேண்டும். பணம் இருப்பவர்கள் மூன்றாவது மொழியை கற்க வசதிகளை ஏற்படுத்தி விட்டு ஏழ மாணவர்களுக்கு மட்டும் அந்த வாய்ப்பை, மத்திய அரசு உருவாக்கிக் கொடுத்தாலும், அதை தடுப்பது சமுக அநீதி இதை மறைப்பதற்காக மத்திய அரசு மீது பழி போட்டு மொழி அரசியலையும், பிரிவினைவாத அரசியலையும் முன்னெடுக்க நினைத்தால். அது இனி வெற்றி பெறாது. இதனை உணர்ந்து தமிழகத்தில் ஏற்கனவே நடைமுறையில் இருக்கும். மும்மொழிக் கொள்கையை, அரசு பள்ளி மாணவர்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

    ×