என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Diabetes"

    • பாக்டீரியாக்களால் அடைப்பு ஏற்படும் போது வேர்க்குரு உண்டாகிறது.
    • காற்றோட்டமான குளிர்ந்த படுக்கை அறையில் தூங்க வேண்டும்.

    வேர்க்குரு அல்லது வெப்ப சொரி என்பது மருத்துவ ரீதியாக மிலியாரியா என்று அழைக்கப்படுகிறது. இது பெரும்பாலும் குழந்தைகளுக்கு அதிகம் ஏற்படுகிறது. முகம், கழுத்து, மார்பு, இடுப்பு, அக்குள் மற்றும் தொடைகளில் வேர்க்குரு பொதுவாகக் காணப்படுகிறது.


    கோடை காலத்தில் அதிக வெப்பம் மற்றும் ஈரப்பதம் காரணமாக வியர்வை சுரப்பிகளில் இறந்த தோல் செல்கள் மற்றும் ஸ்டெபைலோகாக்கஸ் எபிடெர்மிடிஸ் போன்ற பாக்டீரியாக்களால் அடைப்பு ஏற்படும் போது வேர்க்குரு உண்டாகிறது.

    இது மிலியாரியா கிரிஸ்டலினா (படிக வேர்க்குரு), மிலியாரியா ருப்ரா (சிவப்பு வேர்க்குரு), மிலியாரியா ப்ரோஃபுண்டா (உட்புற வேர்க்குரு) என்று மூன்று வகைப்படும். வேர்க்குரு ஏற்பட கீழ்க்கண்டவை முக்கிய காரணிகளாகும்.

    வியர்வை சுரப்பிகள் முதிர்ச்சி அடையாத நிலை (பிறந்த குழந்தைகள்), அதிக வெப்பமான அல்லது ஈரப்பதமான சூழல், காய்ச்சல், தீவிர உடற்பயிற்சி, மரபணு காரணங்கள், மருந்துகளின் பக்க விளைவுகள் (டையூரிடிக்ஸ்), உடல் பருமன், நீரிழிவு நோய், புகைப்பழக்கம் மற்றும் மதுப்பழக்கம்.

    சர்க்கரை நோயாளிகள் பெரும்பாலோருக்கு காணப்படும் நரம்பு பாதிப்பு (நியூரோபதி) மற்றும் ரத்த நாளங்களின் அடைப்புகளால் (பெரிபெரல் வாஸ்குலர் நோய்) தோல் வறட்சி உண்டாகி வேர்க்குரு ஏற்பட வழி வகுக்கிறது.


    இதனை தடுக்க கீழ்கண்ட வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்:

    காற்றோட்டமான குளிர்ந்த படுக்கை அறையில் தூங்க வேண்டும். ஜீன்ஸ், லெக்கின்ஸ் போன்ற இறுக்கமான ஆடைகளை தவிர்த்து மெல்லிய பருத்தியாலான தளர்வான ஆடைகளை அணியவும். பாலியஸ்டர் துணிகளை அணிய கூடாது. சருமத்திற்கு எரிச்சலூட்டும் வாசனை சோப்பு மற்றும் இதர அழகு சாதன பொருட்களை தவிர்க்கவும்.

    வெயில் காலங்களில் ஏற்படும் நீர் இழப்பைத் தடுக்க குறைந்த பட்சம் தினமும் 3 அல்லது 4 லிட்டர் தண்ணீர் குடியுங்கள். வெயிலில் குறிப்பாக மதியம் 12 மணி முதல் 4 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். அப்படி கண்டிப்பாக செல்லவேண்டிய அவசியம் ஏற்பட்டால், குடை அல்லது தொப்பியை பயன்படுத்த வேண்டும்.


    உடலை நீரேற்றமாக வைத்திருங்கள். நீர்சத்து அதிகம் உள்ள தர்பூசணி, எலுமிச்சை, சாத்துக்குடி, ஆரஞ்சு, வெள்ளரிக்காய் ஆகியவற்றை அதிகம் உட்கொள்ளுங்கள். தினமும் குறைந்த பட்சம் இரண்டு முறையாவது குளிக்க வேண்டும். புகைப்பழக்கம் மற்றும் மதுப்பழக்கத்தை விட்டொழிக்க வேண்டும்.

    பெரும்பாலும் வேர்க்குரு குளிர்ந்த சூழலுக்கு மாறும் போது தானாகவே சரியாகிவிடும். அரிப்பு குறையவில்லையெனில் மருத்துவரை கலந்தா லோசித்து காலமைன் லோஷன் அல்லது ஸ்டீராய்ட் கிரீம்களை பயன்படுத்தலாம்.

    • பித்தப்பை கற்களில் கிட்டத்தட்ட 80 சதவிகிதம் கொழுப்பு கற்கள் ஆகும்.
    • தினசரி உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைக்க வேண்டும்.

    பித்தப்பை என்பது கல்லீரலுக்கு கீழே பித்த நீர் சேமிக்கப்படும் ஒரு சிறிய பை போன்ற அமைப்பாகும். பித்த நீரில் உள்ள கொலஸ்ட்ரால், பிலுருபின் மற்றும் பித்த உப்புகள் கெட்டியாகும் போது பித்தப்பையில் கற்கள் உருவாகின்றன.


    பொதுவாக கொழுப்பு நிறைந்த உணவுகளை உட்கொள்ளும் போது பித்த நீர் பித்த நாளம் வழியாக குடலுக்குள் சென்று செரிமானத்திற்கு உதவி புரிகிறது. இந்தியாவில் பித்தப்பை கற்கள் நோயினால் 4 முதல் 9 சதவிகிதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஆண்களை விட பெண்களுக்கு இது அதிகம் ஏற்படுவதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. பித்தப்பை கற்களில் கிட்டத்தட்ட 80 சதவிகிதம் கொழுப்பு கற்கள் ஆகும்.


    சர்க்கரை நோயாளிகளுக்கு பித்தப்பை கற்கள் ஏற்பட கீழ்க்கண்டவை முக்கிய காரணிகளாகும்:

    உடல் பருமன், கட்டுப்பாடற்ற ரத்த சர்க்கரை அளவு, ரத்தத்தில் அதிக அளவு டிரைகிளிசரைட் மற்றும் கொலஸ்ட்ரால், கூடுதலாக உள்ள குடல் மற்றும் கல்லீரல் நோய்கள், தன்னியக்க நரம்பியல் குறைபாடு, குடல் அசைவின்மை, உட்கொள்ளும் சில மருந்துகளின் பக்க விளைவுகள் மற்றும் மரபணு காரணங்கள்.

    பித்தப்பை கற்கள் பெரும்பாலும் தற்செயலாகக் கண்டறியப்படுகிறது. இவை அறிகுறிகளை ஏற்படுத்தினால் மட்டுமே அதற்கான சிகிச்சை அவசியம்.

    வலியற்ற, பக்கவிளைவுகள் இல்லாத பித்தப்பை கற்களுக்கு சிகிச்சையளிக்க வேண்டிய தேவையில்லை. பித்தப்பை கற்களை கரைக்க மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மாத்திரைகளை பயன்படுத்தலாம். இம்முயற்சி பலன் அளிக்காவிடில் பித்தப்பையை அகற்றஅறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.


    பித்தப்பை கற்களை தடுக்க கீழ்க்கண்ட வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்:

    தினசரி உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைக்க வேண்டும், பழங்கள், காய்கறிகள், மெலிந்த புரதங்கள், நார்ச்சத்து நிறைந்த உணவுகள் மற்றும் முழு தானியங்கள் அடங்கிய ஆரோக்கியமான உணவு முறை பழக்கங்களை கடைப்பிடிக்க வேண்டும்.

    கொழுப்பு மற்றும் எண்ணெய்யில் வறுத்த உணவுகளை தவிர்க்க வேண்டும். அடிக்கடி விரதம் இருத்தல் கூடாது. ஏனெனில் விரதம் இருப்பது பித்தப்பை இயக்கத்தைக் குறைப்பதால், பித்த நீரில் கொழுப்பு அதிகமாக செரிவூட்டப்பட்டு கற்கள் உருவாக வழிவகுக்கிறது. புகை பழக்கம் மற்றும் மது பழக்கத்தை விட்டொழிக்க வேண்டும். பதப்படுத்தபட்ட உணவு வகைகளை தவிர்க்க வேண்டும்.

    • டைப்-2 சர்க்கரை நோயை உருவாக்கும் என்று தெரியவந்துள்ளது.
    • மூளையின் செயல்பாடு பாதிக்கப்பட்டு அறிவாற்றல் வளர்ச்சி குறைகிறது.

    அமெரிக்காவில் நடத்திய ஒரு ஆய்வில் குழந்தைகளுக்கு இளம் வயதில் அதிக அளவில் இனிப்பு கலந்த உணவுகளை உண்ண தருவது அவர்கள் வாழ்நாள் முழுவதும் பல்வேறு நோய் பாதிப்புகளுக்கு வழிவகுக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.


    குறிப்பாக, குழந்தைகளுக்கும் சிறுவர் சிறுமியர்களுக்கும் இனிப்புகளை தொடர்ந்து தரும்போது அதிக உடல் பருமன், இளம் வயதிலேயே ரத்த அழுத்தம் மற்றும் டைப்-2 சர்க்கரை நோயை உருவாக்கும் என்று தெரியவந்துள்ளது.

    அமெரிக்க குழந்தைகள் சராசரியாக 17 தேக்கரண்டி சர்க்கரையை தினமும் உட்கொள்வதாக அந்த நாட்டின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இது எதிர்காலத்தில் மிக மோசமான உடல் பாதிப்புகளை கொண்ட சமுதாயத்தை உருவாக்கும் என்று உணவு துறை நிபுணர்கள் எச்சரித்து உள்ளனர்.

    அதிகப்படியான சர்க்கரை உணவில் தொடரும்போது சிறுமிகள் முந்தைய பருவம் அடைதல் மற்றும் டைப்-2 நீரிழிவு அபாயத்தை அதிகரிக்கிறது. சிறுவயதில் அதிக அளவில் இனிப்புகளை உட்கொள்வதால் கல்லீரல் செயல்பாடு கடுமையாக பாதிக்கப்படுவதுடன், மூளையின் செயல்பாட்டையும் பாதித்து அறிவாற்றல் வளர்ச்சி குறைகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன.

    பொதுவாக, இனிப்பு என்பது சீனி, சர்க்கரை மட்டுமின்றி பதப்படுத்தப்பட்ட தானியங்கள் முதல் பழச்சாறுகள் வரை அனைத்திலும் கலந்திருப்பதால் பதப்படுத்தப்பட்ட தின்பண்டங்களை குறைத்துக்கொள்வது உடல் நலனுக்கு நல்லது என்று அமெரிக்கா மட்டுமின்றி உலகின் பல்வேறு ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

    • வெயிலினால் ஏற்படும் நீர் இழப்பை சமன்படுத்த உதவுகிறது.
    • சொரியாசிஸ் நோய் விரைவில் குணமடைய உதவுகிறது.

    நன்னாரி சர்பத் பெரும்பாலும் தென்னிந்தியாவில் வெயில் காலங்களில் தாகத்தை தணிக்க அனைவராலும் விரும்பி குடிக்கப்படும் ஒரு பானம். ஒரு கிளாஸ் நன்னாரி சர்பத்தில் 72 கலோரிகள், 15 கிராம் கார்போஹைட்ரேட் மற்றும் 15 கிராம் சர்க்கரை உள்ளது.


    இதில் சபோனின், பிளவனாய்ட்ஸ், அல்கலாய்ட்ஸ், பினோலிக் காம்பௌண்ட்ஸ் போன்ற ஆன்டி ஆக்ஸிடண்ட்கள் உள்ளன. அது மட்டுமல்ல, இது ஆக்சிஜனேற்ற அழுத்தத்தை குறைத்து பிரீ ரேடிக்கல்களை வெளியேற்றுகிறது. இவற்றில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் மூட்டு வலி மற்றும் முடக்கு வாதம் போன்ற பிரச்சினைகளை குறைக்கிறது.

    மேலும் இதிலுள்ள சபோனின் என்ற ஆன்டிஆக்ஸிடண்ட் தோலில் உள்ள அகநச்சுடன் கலந்து சொரியாசிஸ் நோய் விரைவில் குணமடைய உதவுகிறது. இதற்கு நுண்ணுயிர் எதிர்ப்பு செயல்பாடுகள் உள்ளதால் நன்னாரி பல ஆண்டுகளாக தொழு நோய் மற்றும் சிபிலிஸ் நோய் சிகிச்சைக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    மேலும் இதிலிருக்கும் ஆன்டி ஆக்ஸிடண்ட் பிளேவனாய்ட்ஸ் கல்லீரல் பாதிப்புகளை தடுக்க துணை புரிகிறது. நன்னாரி சர்பத் ரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மையும், உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய பண்பையும் கொண்டுள்ளது. அது மட்டுமல்ல, நன்னாரி சருமத்திற்கு பொலிவை தருவதாக பல்வேறு ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

    மேலும் இது வெயிலினால் ஏற்படும் நீர் இழப்பை சமன்படுத்த உதவுகிறது. நன்னாரி சர்பத்தை குடிப்பதால் பெரிய அளவில் பக்க விளைவுகள் ஏற்படுவதில்லை. எனினும் இதனை அதிக அளவு குடிக்கும் போது இதில் உள்ள சபோனின் சில சமயங்களில் வயிற்றில் எரிச்சல் அல்லது புண் போன்றவற்றை உண்டாக்க கூடும்.

    கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் டாக்டரிடம் கலந்தாலோசித்த பின்னரே நன்னாரி சர்பத்தை பருக வேண்டும். நன்னாரி சர்பத்தில் நிறைய மருத்துவ குணங்கள் இருந்தாலும், இதில் உள்ள சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட் சர்க்கரை நோயளிகளுக்கு ரத்த சர்க்கரை அளவை அதிகமாக்க கூடும்.

    அதனால் சர்க்கரை நோயாளிகள் நன்னாரி சர்பத் குடிக்கும் போது சர்க்கரை சேர்க்காமலோ அல்லது சர்க்கரைக்கு பதிலாக செயற்கை இனிப்பூட்டிகளை கலந்தோ பருகலாம். நன்னாரியை சர்பத் வடிவில் குடிப்பதை விட வெறும் வேர்களை சுத்தம் செய்து, மண்பானை தண்ணீரில் போட்டு தினசரி தேவைகளுக்கு குடிப்பதற்கு பயன்படுத்தினால் அதிக நன்மைகள் கிடைக்கும்.

    • கொலஸ்ட்ராலைக் குறைத்து மாரடைப்பு வராமல் தடுக்கும்.
    • வெண்டைக்காய் சாப்பிட்டால் ஞாபக சக்தி அதிகரிக்கும்.

    வெண்டைக்காய் வழவழப்புத்தன்மை கொண்ட ஒரு காய்கறியாகும். அது வழவழப்பான தன்மை கொண்டதால் பலருக்கும் பிடிக்காத ஒரு காயாக இருக்கிறது. அதிலுள்ள பெக்டின் மற்றும் கோந்துத்தன்மையே இந்த வழவழப்புக்குக் காரணம். பெக்டின் மற்றும் கோந்துப்பொருள் கரையும் நார்ச்சத்து நிறைந்தது என்பதால், ரத்தத்தில் கொழுப்பு மற்றும் பித்த நீர் அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ளும். கொலஸ்ட்ராலைக் குறைத்து மாரடைப்பு வராமல் தடுக்கும்.

    வெண்டைக்காயில் கார்போஹைட்ரேட், கொழுப்பு, புரதம், வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் இ, வைட்டமின் கே, கால்சியம், இரும்புசத்துகள் உள்ளன.

    வெண்டைக்காய் சாப்பிட்டால் அறிவு வளர்ச்சி உண்டாகும், மேலும் ஞாபக சக்தி அதிகரிக்கும். இரத்த சோகை, மூச்சிரைப்பு, கொலஸ்ட்ரால், மலச்சிக்கல், புற்றுநோய், நீரிழவு வயிற்றுப்புண், பார்வைக் குறைபாடு என அனைத்து நோய்களையும் தீர்க்கும் சிறந்த மருந்தாக வெண்டைக்காய் உள்ளது.

    1. வெண்டைக்காயில் உள்ள அடங்கியுள்ள நீர்ச்சத்து, திரவ இழப்பை தடுத்து உடலை குளிர்ச்சியாக வைக்கிறது. இதிலுள்ள கரையும் நார்ச்சத்து கொல்ஸ்ட்ராலின் அளவைக் கட்டுப்படுவதால் இதய நோய்கள் ஏற்படுவதற்கான ஆபத்துக்கள் மிகவும் குறைவு.

    2. கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் அவசியமானது போலிக் அமிலம், இது வெண்டைக்காயில் அதிகமாக உள்ளது.

    3. வெண்டைக்காயின் வழவழப்புத் தன்மையில் அதிக மருத்துவப் பலன்கள் மறைந்துள்ளது. இந்த வழவழப்பில் உள்ள நார்ச்சத்து அல்சர் பாதித்தவர்களுக்கு நல்ல மருந்தாக விளங்குகிறது. மேலும் மலச்சிக்கல், வயிற்றுப் போக்கு உள்ளிட்ட வயிற்று உபாதைகள் அனைத்தையும் குணப்படுத்த கூடியது.

    4. பிஞ்சு வெண்டைக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு தடுக்கப்படுகிறது. பாக்டீரியாக்களை கட்டுப்படுத்தும் தன்மை, பிஞ்சு வெண்டைக்கு உண்டு.

    5. நீரிழிவு நோயாளிகள் அவ்வப்போது வெண்டைக்காய் சாப்பிட்டு வந்தால் அவர்களின் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவு கணிசமாக குறையும்.

    6. வெண்டைக்காய் உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கல்லீரல் நன்கு செயல்பட தொடங்கும்.

    7. வெண்டைக்காய் சாப்பிட்டு வந்தால், அடிக்கடி ஏற்படும் பசி உணர்வை கட்டுபடுத்தும். வெண்டைகாய் சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான அத்தியாவசிய சத்துக்கள் கிடைக்கும், மேலும் உடலின் எடையும் சீக்கிரமாக குறையும்.

    8. வெண்டைக்காயில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், வெண்டைக்காய் ஊறவைத்த நீரைக் குடிப்பதன் மூலம் குடலியக்கம் சீராக நடைபெற்று, மலச்சிக்கல் ஏற்படுவது தடுக்கப்படும்.

    9. சுவாச பிரச்சனைகள் இருப்பவர்கள் வெண்டைக்காய் ஊறவைத்த நீரைப் குடித்தால், ஆஸ்துமா போன்ற சுவாச கோளாறுகளால் ஏற்படும் அபாயம் குறைவதாக பல ஆய்வுகள் கூறுகிறது.

    • தற்போது பல்வேறு காரணங்களால் நீரிழிவு நோய் அதிகரித்து வருகிறது.
    • நீரிழிவு நோயினால் ஆண்டுக்கு 2.1 மில்லியன் பேர் இறப்பை சந்திக்கின்றனர்.

    உலகில் உள்ள மனிதர்கள் அனைவருக்கும் ஆரோக்கியமான வாழ்வியல் சூழல் என்பது நோயற்ற உடலையே குறிக்கிறது.

    பல்வேறு விதமான தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்து வரும் இவ்வுலகில் எண்ணற்ற மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. தற்போது மாறி வரும் உணவுப்பழக்கம் வெவ்வேறு வகைகான நோய் காரணிகளை உருவாக்கி விடுகின்றன. இவ்வாறு உருவாகும் நோய்களில் நீரிழிவு நோயும் ஒன்றாகும்.

    நாம் உண்ணும் உணவில் உள்ள சர்க்கரை (குளுக்கோஸ்) எரிக்கப்பட்டு உடலுக்கு சக்தியாக மாற்றப்படுகிறது. இதற்கு உடலில் உள்ள கணையம் என்கிற சுரப்பியில் இருந்து சுரக்கப்படும் இன்சுலின் ஹார்மோன் முக்கியமானது. இது சுரக்காமல் இருந்தாலோ, போதுமான அளவில் சுரக்காமல் போனாலோ அல்லது சுரந்தும் எதிர்ப்பு தன்மை காரணமாக பயன்படாமல் போனாலோ நீரிழிவு நோய் வந்து விடுகிறது. ஆகவே தற்போது பல்வேறு காரணங்களால் சர்க்கரை நோய் என்கிற நீரிழிவு நோய் அதிகரித்து வருகிறது. இதில் இந்தியா தற்போது 2-வது இடத்தில் உள்ளது. இந்த சூழலில் உலக நீரிழிவு கூட்டமைப்பு மற்றும் உலக சுகாதார நிறுவனம் ஆகியவை இணைந்து 1991-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14-ந் தேதியை உலக நீரிழிவு தடுப்பு தினமாக அறிமுகப்படுத்தின. இதையடுத்து 2006 ஆம் ஆண்டு இந்நாளை ஐ.நா சபை அதிகாரபூர்வமாக அறிவித்தது.

    நீரிழிவு நோயானது முதல்வகை, 2-வது வகை, 3-வது வகை என பிரிக்கப்படுகிறது. இதில் முதல் வகை நோயான நீரிழிவானது குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினருக்கே அதிகம் ஏற்படுகின்றது. இரண்டாவது வகையில், கணையத்தில் இருந்து சுரக்கப்படும் இன்சுலின் போதிய அளவு சுரக்காததாலோ அல்லது சுரக்கும் இன்சுலினுக்கு எதிர்வினை ஏற்படுவதாலோ ஏற்படுகிறது.

    மேலும் இந்த வகை நீரிழிவு நோயே 90 சதவீதம் மக்களுக்கு உண்டாவதாக தகவல்கள் கூறுகின்றன. மூன்றாவது வகை என்பது பெண்களின் கர்ப்பகாலத்தில் ஏற்படுவதாகும். இந்த வகை நீரிழிவானது 2 முதல் 4 சதவீத பெண்களுக்கு கர்ப்பக் காலத்தின் போது உருவாகிறது. குழந்தை பிறந்தவுடன் இது மறைந்தாலும், சிறிது காலத்திற்குபின் குழந்தைக்கும், தாய்க்கும் நீரிழிவு உண்டாகும் வாய்ப்பை அதிகரிக்கக் கூடும் என்றும் ஆய்வு கூறுகிறது. இவ்வாறு உருவாகும் நீரிழிவு நோயின் தாக்கம் உள்ள போது உடலில் ஏற்படும் சிறு,சிறு நோய்கள்கூட பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்துவதோடு உயிரிழப்பையும் உண்டாக்கி விடுகின்றன.

    2014-ம் ஆண்டு உலக அளவில் 422 மில்லியன் மக்களுக்கும், 2015-ம் ஆண்டு இந்தியாவில் 69.1 மில்லியன் மக்களும் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்நோய் முதியவர்கள் மத்தியில் 70 சதவீத இறப்பை நிகழ்த்துவது குறிப்பிடத்தக்கது. தற்போது 199 மில்லியன் பெண்களுக்கு நீரிழிவு நோய் உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. நீரிழிவு நோயினால் ஆண்டுக்கு 2.1 மில்லியன் பேர் இறப்பை சந்திக்கின்றனர். இத்தகு அபாயகரமான பாதிப்பை நிகழ்த்தி கொண்டிருக்கும் நீரிழிவு நோயை பற்றி இந்நாளில் நாம் அறிந்து கொள்வதோடு, அது பற்றிய விழிப்புணர்வை அனைவரிடத்திலும் ஏற்படுத்திட உறுதியோடு செயல்படுவோம்.

    • நம் முன்னோர்கள் நொறுங்கத் தின்றால் நூறு வயது என்றனர்.
    • தற்போது நீரிழிவு நோய் பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் பெரிய அளவிற்கு உள்ளது.

    நாம் உண்ணுகின்ற உணவை நன்கு ரசித்து ருசித்து உண்ணாலே நம் உடல் ஆரோக்கியம் எப்போதும் சிறப்பாக இருக்கும். எனவே தான் நம் முன்னோர்கள் நொறுங்கத் தின்றால் நூறு வயது என்றனர்.

    இதில் மிகப்பெரிய ரகசியமே இருக்கிறது. நாம் உண்ணுகின்ற உணவு நாம் ரசித்து உண்ண வேண்டும் என்றால் நமக்கு அது பிடித்த உணவாக இருக்க வேண்டும். பிடித்த உணவாக இருக்கும்போது நம் வாயில் போதுமான அளவு உமிழ்நீர் சுரக்கும் மேலும் நாம் நமக்கு பிடித்த உணவை சுவைத்து உண்ணும் போது போதுமான அளவுக்கு நன்கு உணவை வாயில் அரைத்து உண்போம்.

    இவ்வாறு உண்ணும் போது கிட்டத்தட்ட உணவு வாயிலேயே பாதி அளவுக்கு ஜீரணமாக கூடிய நிலையில் இருக்கும். மேலும் ஏனோ தானோ என்று உணவை மென்று முழங்குவதை விட ரசித்து ருசித்து உண்ணும் போதும் நம் மனமும் ஆரோக்கியமாக இருக்கும் உடலுக்கு போதுமான தெம்பை மனம் அளிக்கும். நம்முடைய தினப்படி செயல்களுக்கும் உடல் இயக்கத்திற்கும் போதுமான நியூரோ ட்ரான்ஸ்மிட்டர்களும் சுரக்கும் என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    மனம் உடலோடு நேரடியாக தொடர்புடையது. உள்ளத்தின் ஆரோக்கியம் உடலின் பூரண ஆரோக்கியத்தை அழைத்து வரும் என்றால் மிகை இல்லை. ஒருவர் என்ன மாதிரியான உணவுகள் தன் உடலுக்கு ஒத்துப் போகிறது என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும். கால நேரத்துடன் அளவான பிடித்த உணவை சரியான நேரத்தில் உண்ணும் பழக்கம் நீரிழிவு நோய் வருவதை தடுக்கும். நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கும் நோய் கட்டுப்பாட்டில் இருக்கும் எனலாம். நம் தினப்படி வாழ்க்கை முறை மன அழுத்தத்தை ஏற்படுத்தாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

    தற்போது நீரிழிவு நோய் பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் பெரிய அளவிற்கு உள்ளது. நாம் நிறைய வாட்ஸப் காணொளிகள் மற்றும் பதிவுகளில் பார்க்கின்றோம். இவைகளில் வரக்கூடிய தகவல்களை அப்படியே எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை. காரணம் நோய் பற்றிய சரியான புரிதல் இல்லாதவர்கள் கூட அரைகுறையாக ஏதேனும் பதிவுகளை வெளியிட்டு இருக்கலாம். எனவே தகுந்த மருத்துவர்கள் ஆலோசனை அவசியம்.

    • சர்க்கரை நோயானது வாழ்நாள் நோயாகும்.
    • பழங்கள் சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு எதிரானது அல்ல.

    சர்க்கரை நோய் துறை தலைவர் சுப்பையா ஏகப்பன் பேசியதாவது:-

    சர்க்கரை நோயானது வாழ்நாள் நோயாகும். உணவு, உடற்பயிற்சி, யோகா, மூச்சு பயிற்சி மற்றும் தியானம் போன்ற வாழ்வியல் மாற்றங்கள் மூலம் சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க முடியும். அன்றாட உணவு பழக்க வழக்கத்தில் சிறுதானிய உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

    வாரத்தில் 4 தினங்கள் காலை உணவில் சிறு தானிய உணவுகளை பயன்படுத்த வேண்டும். அதுபோல் தட்டைப் பயறு, பாசிப்பயறு, மொச்சை பயறு, பச்சை பட்டாணி உள்ளிட்ட உணவுகளுக்கும் போதிய அளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இது தவிர மாவுசத்து, குறைந்த மாவு சத்து மிகுந்த காய்கறிகள், கீரைகளை அதிகம் பயன்படுத்த வேண்டும். பழங்கள் சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு எதிரானது அல்ல.

    குறிப்பாக இனிப்புடன் புளிப்பு, துவர்ப்பு சுவையுடைய பழங்களை சாப்பிடுவது உடலுக்கு நல்லது. அதிக இனிப்புடைய பழங்களை தவிர்க்கலாம். அது மட்டும் இன்றி நொறுக்கு தீனி சாப்பிடும் வேளையில் பழங்களை நன்கு கடித்து சாப்பிட வேண்டும். ஜூஸ் போட்டு சாப்பிடக்கூடாது.

    துவர்ப்பு, கசப்பு சுவையுடைய உணவுகளை உட்கொள்ளும் போது அது சர்க்கரை நோய்க்கு எதிராக செயல்படுகிறது. இதன் மூலம் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தலாம். ஆனால் அதனையும் குறிப்பிட்ட அளவு மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். நெல்லிக்காய், பிஞ்சு மாங்காய், நாவல் பழம், பலாக்காய், வாழைப்பூ உள்ளிட்ட உணவுகளில் துவர்ப்பு சுவை அதிகம் உள்ளது. பாகற்காய், வெந்தயம் போன்றவற்றில் கசப்பு சுவை உள்ளது இவற்றை தேவைக்கேற்ப பயன்படுத்திக் கொள்ளலாம். குறிப்பாக சாப்பிடும் உணவில் காய்கறி 50 சதவீதமும், சிறு தானியம் 30 சதவீதமும், புரதம் -கொழுப்பு 20 சதவீதமும் இருந்தால் சர்கரை நோயை கட்டுப்பாடாக வைத்துக் கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • உலக நீரிழிவு நோய் தினத்தை முன்னிட்டு எம்.வி.ஆர். மருத்துவ மையம், புதுவை காஸ்மோபாலிட்டன் லயன் சங்கம் மற்றும் புதுவை அய்யப்ப சேவா சங்கம் ஆகியவை இணைந்து நடத்திய நீரிழிவு நோய் குறித்தான விழிப்புணர்வு மற்றும் பரிசோதனை முகாம் புதுவை கோவிந்தசாலையில் அமைந்துள்ள அய்யப்பன் கோவில் வளாகத்தில் நடைபெற்றது.
    • இம்முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு நீரிழிவு நோய் குறித்த கையேடு, உணவு குறிப்புகள் வழங்கப்பட்டது.

    புதுச்சேரி:

    உலக நீரிழிவு நோய் தினத்தை முன்னிட்டு எம்.வி.ஆர். மருத்துவ மையம், புதுவை காஸ்மோபாலிட்டன் லயன் சங்கம் மற்றும் புதுவை அய்யப்ப சேவா சங்கம் ஆகியவை இணைந்து நடத்திய நீரிழிவு நோய் குறித்தான விழிப்புணர்வு மற்றும் பரிசோதனை முகாம் புதுவை கோவிந்தசாலையில் அமைந்துள்ள அய்யப்பன் கோவில் வளாகத்தில் நடைபெற்றது.

    முகாமில் கலந்து கொண்ட வர்களுக்கு தலைமை நீரிழிவு நோய் மருத்துவ நிபுணர் டாக்டர் எம்.ஆர்.வித்யா நீரிழிவு நோய் வராமல் காப்பதற்கான வழிமுறைகள் மற்றும் வந்தபின் அதை கட்டுக்குள் வைத்து நீண்ட நாட்கள் வாழும் வழிமுறைகள் குறித்து உரையாற்றினார்.

    முகாமில் கலந்து க்கொண்டவர்களுக்கு இலவசமாக ரத்தத்தில் சர்க்கரை அளவு, ரத்த அழுத்தப் பரிசோதனைகள் செய்து பயனாளிகளுக்கு எம்.ஆர்.வித்யா, இணை மருத்துவ இயக்குனர் தேவநாதன் வாசு, மருத்துவ அதிகாரி பாலாஜி, ஆகியோர் இலவச மருத்துவ ஆலோசனை வழங்கினர்.

    இம்முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு நீரிழிவு நோய் குறித்த கையேடு, உணவு குறிப்புகள் வழங்கப்பட்டது.

    • உப்பு சேர்க்கப்பட்டிருக்கும் பிஸ்தாவை சாப்பிடக்கூடாது.
    • நட்ஸ் வகைகளுள் பிஸ்தா சிறந்தது.

    நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உட்கொள்வதற்கு ஏற்ற நட்ஸ் வகைகளுள் பிஸ்தா சிறந்தது. அவற்றுள் ஆரோக்கியமான கொழுப்பும், புரதமும், நார்ச்சத்தும் நிறைந்துள்ளன. இவை ரத்தத்தில் சர்க்கரை அளவு உயராமல் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

    முக்கியமாக பிஸ்தாவில் கார்போஹைட்ரேட்டுகள் குறைவாக இருப்பதால் ரத்த சர்க்கரை அளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது. பசி உணர்வை கட்டுப்படுத்தி நீண்ட நேரம் சோர்வின்றி உணர வைக்கும். அதனால் பிஸ்தா, நீரிழிவு நோய்க்கு ஏற்ற நட்ஸ் வகையாக கருதப்படுகிறது.

    அதே வேளையில் அதனை சரியான அளவில் உட்கொண்டால்தான் ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும். அதன் கிளை செமிக் குறியீடு 15-க்குள் இருக்க வேண்டும். 50 கிராம் வரை தினமும் பிஸ்தா உட்கொள்ளலாம். நீரிழிவு நோயாளிகள் உப்பு சேர்க்கப்பட்டிருக்கும் பிஸ்தாவை சாப்பிடக்கூடாது. நீரிழிவு நோயாளிகள் மட்டுமல்ல, மற்றவர்களும் பிஸ்தா சாப்பிடுவது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவும்.

    • தென்காசி அரசு தலைமை மருத்துவ மனையில் நீரழிவு நோய் பற்றிய கருத்தரங்கு நடைபெற்றது.
    • நிகழ்ச்சிகளை மருத்துவர் கோபிகா, தொகுத்து வழங்கினார்.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனையில் உலக நீரிழிவு நோய் தினத்தை முன்னிட்டு,நீரழிவு நோய் பற்றிய கருத்தரங்கு நடைபெற்றது.

    இதில் அரசு மருத்துவ மனை மருத்துவர்கள், ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள், இந்திய மருத்துவ சங்கம் மருத்துவர்கள், குறிப்பாக தென்காசி மாவட்ட மூத்த பொது நல மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்கள் என சுமார் 107 மருத்துவர்கள் கலந்து கொண்டனர். தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் ஜெஸ்லின் வரவேற்று பேசினார்.

    நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக இணை இயக்குனர் நலப்பணிகள் மருத்துவர் பிரேமலதா, துணை இயக்குனர் சுகாதாரம் முரளி சங்கர், துணை இயக்குனர் (குடும்ப நலம்) ராமநாதன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். கருத்தரங்கில் மருத்துவர்கள் அகத்தியன், மல்லிகா, மாரிமுத்து, கார்த்திகேயன், ராஜலட்சுமி, சாரதாதேவி நீரிழிவு நோய் பற்றிய சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்தினர். மேலும் அரசு டாக்டர்கள் சங்க மாவட்ட செயலாளர் மருத்துவர் முஹம்மது இப்ராஹிம் கலந்துகொண்டார்.

    கருத்தரங்க நிகழ்ச்சிகளை மருத்துவர் கோபிகா, தொகுத்து வழங்கினார். உறைவிட மருத்துவர் ராஜேஷ் நிகழ்ச்சி ஏற்பாடுகள் செய்த மருத்துவமனை நிர்வாகத்திற்கும் முன்னின்று நடத்திய மருத்துவர்கள் விஜயகுமர், மல்லிகா, கார்த்திக் உள்ளிட்டோர் மற்றும் பேச்சாளர்கள், கலந்து கொண்ட மருத்து வர்கள், பணியாளர்களுக்கு நன்றி கூறினார்.

    • நீரிழிவு நோய் என்பதைவிட இதை குறைபாடு என்று அழைக்கின்றனர்.
    • இந்த நோய் எப்படி வருகிறது என்பதை அறிந்து கொள்வோம்.

    நீரிழிவு நோய் தற்போது நாளுக்கு நாள் வயது வித்தியாசம் இல்லாமல் அதிகப்படியான மக்களை பாதித்து வருகிறது. நம்முடைய அவசர வாழ்க்கை முறை இதற்கு முக்கிய காரணம் எனலாம். இந்த நீரிழிவு நோய் என்பது ரத்தத்தில் தேவைக்கு அதிகமாக சர்க்கரை இருப்பதை குறிக்கிறது. எனவேதான் இதை சர்க்கரை வியாதி என்றும் பாமர மக்கள் அழைக்கின்றனர்.

    நீரிழிவு என்பது கூட இந்த நோய் உள்ளவர்களுக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படும் என்பதன் அடிப்படையில் வந்த பெயர்தான். இந்த நோய் எப்படி வருகிறது என்பதை அறிந்து கொள்வோம்.

    நாம் உண்ணுகின்ற உணவு உடலுக்கு சக்தியாக மாறுவதற்கு இன்சுலின் மிக முக்கியம் இந்த இன்சுலின் திரவத்தை நம் உடல் உறுப்பாகிய கணையம் சுரக்கின்றது.

    குறிப்பாக கணையத்தில் உள்ள பீட்டா செல்கள் இந்த இன்சுலினை சுரப்பதில் முக்கிய பங்கு வைக்கிறது. ஒருவர் உடலில் அவருக்கு உண்ணும் உணவு மற்றும் தினப்படி உடல் இயக்கத்திற்கு ஏற்ப இன்சுலின் சுரப்பு சரியாக இருந்தால் எந்த பிரச்சனையும் இல்லை. மாறாக இன்சுலின் போதுமான அளவுக்கு சுரக்கவில்லை என்றாலோ அல்லது இன்சுலின் போதுமான தரத்தில் இல்லாவிட்டாலும் அவர்களுக்கு ரத்தத்தின் சர்க்கரை அளவு கூடுகிறது.

    இதை சரியாக கண்டுபிடித்து சிகிச்சை ஆரம்ப கட்டத்திலேயே துவங்க வேண்டும். இல்லையென்றால் பல வகையான உடல் பிரச்சினைகளுக்கு இது காரணம் ஆகிவிடும். ஆரம்பக் கட்ட நீரிழிவு நோய் உள்ளவர்கள் தேவையான மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனைப்படி எடுக்கும்போது எப்போதும் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். சற்று தீவிர நீரிழிவு நோய்க்கு ஆளானவருக்கு இன்சுலின் ஊசிகள் தேவைப்படலாம் இதன் அளவு அவரவர்களின் நோய் தீவிரத்தை பொறுத்து மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஒருவகையில் நீரிழிவு நோய் என்பதைவிட இதை குறைபாடு என்று அழைக்கின்றனர். காரணம் ஒருவருக்கு நீரிழிவு நோய் வந்து விட்டால் அவர் தன் உடல் நிலையை சரியான மருத்துவரின் ஆலோசனைப்படி சிகிச்சை மேற்கொண்டு தொடர்ந்து கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும். நீரிழிவு நோய் உள்ளவர்கள் அவ்வப்போது நோயின் தீவிரம் ஏற்ற இறக்கம் பற்றிய பரிசோதனைகளை மேற்கொண்டு சிகிச்சை தொடரும்போது அவர்களுக்கு வேறு எந்த வகையான மோசமான நோய்களும் வராமல் முன்கூட்டியே தடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. வீட்டில் அம்மா அப்பா குடும்ப நபர்கள் யாரேனும் நீரிழிவு இருந்தால் நமக்கும் கட்டாயம் வரும் என்று மனதளவில் நாமாகவே அந்த நோயை எதிர்பார்ப்பதை தவிருங்கள்.

    ×