search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dravida Model"

    • அமைச்சரின் கருத்தில் உடன்பாடு இல்லை என்றால் திமுகவில் யாரும் இதுவரை அதனை மறுக்காதது ஏன்?
    • பாஜகவை திமுக கடுமையாக எதிர்க்கும் முறை இதுதானா?

    நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பவதாது,

    "திராவிட மாடல் ஆட்சியின் முன்னோடி ராமன்" என்று தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி திருவாய் மலர்ந்திருப்பது வியப்பை அளிக்கிறது.

    இத்தனை காலமும் திராவிட ஆட்சி என்பது பெரியார் ஐயா ஈ.வே.ராமசாமி அவர்களின் வழிவந்தவர்கள் நடத்தும் ஆட்சி என அனைவரும் நம்பிக்கொண்டிருக்க, இல்லை 'நாங்கள் பகுத்தறிவு பகலவன் ராமசாமி வழிவந்தவர்கள் அல்ல; பகவான் ராமர் சாமியின் வழிவந்தவர்கள்' என்று திமுக அரசின் மிக முக்கிய அமைச்சகப்பொறுப்பை வகிக்கும் அமைச்சரே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். திமுகவின் சட்ட அமைச்சரே கூறியிருப்பதால் அறியாமல், தெரியாமல் தவறுதலாக கூறிவிட்டார் என்று யாரும் மறுப்பதற்கில்லை. இதுவரை திமுக தலைமையும் எவ்வித மறுப்பும் தெரிவிக்கவில்லை என்பதிலிருந்து அக்கருத்தை திமுக முழுமையாக ஏற்றுகொள்கிறது என்பதும் உறுதியாகிறது.

    இராமரை கடவுளாக வணங்கும் மக்கள், இராமரின் ஆட்சி என்பது வறுமை - ஏழ்மை, பசி - பஞ்சமற்ற, கொலை - கொள்ளை வளச்சுரண்டல், வன்புணர்வு அற்ற தூய நல்லாட்சியை, சொர்க்கத்தில் வாழ்வதைப்போன்ற பொற்கால ஆட்சியைத் தந்தார் என்கின்றனர். அப்படி ஒரு ஆட்சிதான் தற்போது தமிழ்நாட்டில் நடைபெறுகிறதா? பட்டப்பகலில் படுகொலை, மலிவு விலையில் அரசே விற்கும் மது, கொத்துக்கொத்தாக கள்ளச்சாராய மரணங்கள், கட்டுக்கடங்காத கஞ்சா விற்பனை, குடிநீர் தொட்டியில் மலம், பொங்கல் புளியில் பல்லி, சத்துணவில் அழுகிய முட்டை, பள்ளிக்கூடம் முதல் பல்கலைக்கழகம் வரை சாதிய மோதல்கள் இதெல்லாம்தான் ராமரின் ஆட்சியா? அல்லது சம்பூகனைக் கொன்றது போல் திமுக ஆட்சியிலும் ஈவு இரக்கமற்ற படுகொலைகள் நடைபெறுதால் இது ராமரின் ஆட்சியா?

    "இராமர் எங்களின் முன்னோடி" என்ற பாஜகவின் வர்ணாசிரம குரலை அப்படியே திமுகவும் ஒலிக்கத்தொடங்கியுள்ளதன் மூலம் பாஜகவின் உண்மையான பி டீம் என்பதை ஏற்கிறதா திமுக? திமுக ஆட்சி ராமரின் ஆட்சி என்பதை பாஜக முதலில் ஏற்கிறதா? இத்தனை ஆண்டுகாலம் திமுக கூறிவந்த சமூகநீதி என்பது சனாதனம்தானா? அமைச்சரின் கருத்தில் உடன்பாடு இல்லை என்றால் திமுகவில் யாரும் இதுவரை அதனை மறுக்காதது ஏன்? அமைச்சர் பேசியது திராவிட மாடல் கொள்கைக்கு முற்றிலும் விரோதமானது என்றால் அவர் மீது ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை? பாஜகவை திமுக கடுமையாக எதிர்க்கும் முறை இதுதானா?

    திமுக அரசின் சட்ட அமைச்சர் கூறிய கருத்தைக் கண்டித்து திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் ஐயா கலியன் பூங்குன்றன் கடுமையான அறிக்கை வெளியிடும் நிலையில் திமுக மூத்த தலைவர்கள் அனைவரும் வாய்மூடி மௌனித்திருப்பது ஏன்? பகுத்தறிவு, முற்போக்கு, சமத்துவம், சமூகநீதி என்று நீட்டி முழக்கும் திமுகவின் ஊடக ஊதுகுழல்கள், வாடகை வாய்கள் அமைச்சர் ரகுபதியின் "ராமர் எங்கள் முன்னோடி" என்ற கருத்திற்கு எவ்வித எதிர்வினையும் ஆற்றாது ஆழ்ந்த அமைதி காப்பது ஏன்? காதுகள் கேட்கும் திறனை இழந்துவிட்டதா? அல்லது நாக்கு அசைய முடியாமல் செயலிழந்து விட்டதா? இதற்குப் பெயர்தான் திமுகவின் திராவிட மாடலா? என்ற கேள்விகளுக்கு எவரிடத்தில் பதிலுண்டு?

    ஆகவே, தமிழ்நாடு சட்ட அமைச்சரின் "திராவிட ராமர் ஆட்சி" பற்றிய கூற்றினால் ஏற்பட்டுள்ள குழப்பத்தைப்போக்க தமிழ்நாட்டில் தற்போது நடைபெறும் திமுக ஆட்சி என்பது திராவிட மாடலா? அல்லது இராமரின் மாடலா? என்பதை மாண்புமிகு முதலமைச்சர் ஐயா ஸ்டாலின் அவர்கள் உடனடியாக நாட்டுமக்களுக்கு விளக்கி தெளிவுபடுத்த வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

    • சென்னை பல்கலைக்கழகத்தின் தன்னாட்சிக் கல்லூரிகளிலும் இளநிலைப் பட்டப்படிப்புக்கான தேர்வு முடிவுகள் குறித்த காலத்தில் வெளியிடப்பட்டுவிட்டன.
    • சீரழிவுகள் அனைத்துக்கும் திமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்.

    பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது,

    சென்னை பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் தன்னாட்சிக் கல்லூரிகள், பிற பல்கலைக்கழகங்களின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை முடிவடைந்து வகுப்புகள் தொடங்கி விட்ட நிலையில், சென்னை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட தன்னாட்சி பெறாத கல்லூரிகளின் இளநிலைப் பட்டப்படிப்புகளுக்கான இறுதிப் பருவத் தேர்வு முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை. மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்புகளை பறிக்கும் சென்னை பல்கலைக்கழகத்தின் இந்த அலட்சியம் கண்டிக்கத்தக்கது.

    இளநிலைப் பட்டப்படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள் ஜூன் மாத மத்தியில் வெளியிடப்பட வேண்டும். அப்போது தான் ஜூன் மாத இறுதி அல்லது ஜூலை மாதத் தொடக்கத்தில் முதுநிலைப் பட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கையை முடித்து வகுப்புகளைத் தொடங்க முடியும். தமிழ்நாட்டில் அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும், சென்னை பல்கலைக்கழகத்தின் தன்னாட்சிக் கல்லூரிகளிலும் இளநிலைப் பட்டப்படிப்புக்கான தேர்வு முடிவுகள் குறித்த காலத்தில் வெளியிடப்பட்டு விட்டன. அதனடிப்படையில் முதுநிலை மாணவர் சேர்க்கையும் நிறைவடைந்து விட்டது.

    சென்னை பல்கலைக்கழகத்தின் தன்னாட்சி பெறாத 108 கல்லூரிகளின் தேர்வு முடிவுகள் இன்னும் வெளியிடப்படாத நிலையில், அக்கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்பு தேர்வு எழுதிய மாணவர்களால், பிற கல்லூரிகளில் சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவர்கள் தாங்கள் படித்த கல்லூரிகளில் மட்டுமே இனி சேர முடியும். அந்தக் கல்லூரிகளில் உள்ள இடங்களுக்கும் பிற கல்லூரி மாணவர்கள் போட்டியிடுவார்கள் என்பதால் அவர்களுக்கு கடும் போட்டி ஏற்படும். இதனால் பல மாணவர்கள் உயர்கல்வி கற்கும் வாய்ப்பை இழப்பார்கள். இதுவா திராவிட மாடல்?

    தமிழ்நாட்டின் முதன்மையான மற்றும் பழமையான பல்கலைக்கழகம் சென்னைப் பல்கலைக்கழகம் தான். பிற பல்கலைக்கழகங்களுக்கு முன்னோடியாக இருக்க வேண்டிய சென்னை பல்கலைக்கழகமே தேர்வு முடிவுகளை சரியான நேரத்தில் வெளியிடாததை மன்னிக்க முடியாது. பல்கலைக்கழகத்தில் நிலவும் கடுமையான நிதி நெருக்கடி, பல மாதங்களாக துணைவேந்தர் பதவி காலியாக இருப்பது ஆகியவை தான் இந்த நிலைக்கு காரணம் ஆகும். இந்த சீரழிவுகள் அனைத்துக்கும் திமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்.

    சென்னை பல்கலைக்கழகத்தின் தன்னாட்சி பெறாத கல்லூரிகளின் தேர்வு முடிவுகளை சென்னை பல்கலைக்கழகம் உடனடியாக வெளியிட வேண்டும். சென்னை பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் தன்னாட்சிக் கல்லூரிகளில் முதுநிலை பட்டப்படிப்புகளில் கூடுதல் இடங்களை ஏற்படுத்தி அவற்றில் சென்னைப் பல்கலைக் கழக மாணவர்கள் இணைந்து படிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். சென்னைப் பல்கலைகழகத்துக்கு புதிய துணைவேந்தரை நியமித்தல், நிதி நெருக்கடியைத் தீர்த்தல் ஆகியவற்றுக்கும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

    • வெறும் வார்த்தையாக அல்ல, ஆதாரங்களோடு தான் அவைக்குத் தெரிவிக்க விரும்புகின்றேன்.
    • ஏராளமான வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தந்துள்ளோம்.

    சென்னை:

    முதல்-அமைசசர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் இன்று 110-வது விதியின் கீழ் அறிக்கை ஒன்றை படித்தார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

    இளைஞர் நலனை, இளைஞர் எதிர்காலத்தை, இளைஞர்களின் மேன்மையை எப்போதும் மனதில் வைத்து திட்டங்களைத் தீட்டி வருவது திராவிட மாடல் ஆட்சியின் தனித்தன்மை. இளைய சக்தியை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்திக்கொள்ளும் வகையில், வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் மிக மிகக் கவனமாக செயல்பட்டு வருகிறோம். அதனை அடிப்படையாகக் கொண்ட அறிவிப்பைத்தான் இப்போது வெளியிட விரும்புகிறேன்.

    வளமான அரசாக, அமைதியான அரசாக தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது. தொழில் வளம் நிறைந்த தமிழ்நாட்டை உருவாக்கிடவும், அதன்மூலம் நமது இளைஞர்கள் வேலை வாய்ப்புகளைப் பெற்றிடவும் பல்வேறு திட்டங்களைத் தீட்டி வருகிறோம். நமது மாணவச் செல்வங்களுக்குத் தரமான பள்ளிக் கல்வியையும் உயர்கல்வியையும் அளிக்கின்றோம்.

    அத்துடன் அவர்களது வேலைவாய்ப்புகளைப் பெருக்கிடும் வகையில் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன. கல்வியின் மூலமாக ஒரு அறிவுசார் பொருளாதாரத்தை நாம் உருவாக்கி வருகிறோம்.

    இவற்றை மனதில் கொண்டு உருவாக்கப் பட்டவைதான் புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன், நான் முதல்வன் போன்ற திட்டங்கள். அடுத்த தேர்தலை அல்ல, அடுத்த தலைமுறையைப் பற்றி சிந்திக்கும் அரசுதான் நமது திராவிட மாடல் அரசு.

    கழக அரசு பொறுப்பேற்றதில் இருந்து, கடந்த 3 ஆண்டுகளில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம், ஆசிரியர் தேர்வு வாரியம் ஆகிய தேர்வு முகமைகள் வாயிலாக 32 ஆயிரத்து 774 நபர்களுக்குப் பல்வேறு அரசுத்துறைகளில் நேரடிப் பணி நியமனங்கள் வழங்கப்பட்டன.

    அதேபோல், உள்ளாட்சி அமைப்புகள், அரசுத் துறை நிறுவனங்கள் போன்ற பல்வேறு அரசு அமைப்புகளில் 32 ஆயிரத்து 709 இளைஞர்கள் பணிநியமனம் பெற்றனர். மொத்தம் 65 ஆயிரத்து 483 இளைஞர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளில் அரசுப் பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது என்ற செய்தியை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

    அரசுத் துறைகளில் மட்டுமல்லாது, பெருந்தொழில் மற்றும் குறு, சிறு நிறுவனங்களின் மூலமாகவும் ஏராளமான வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தந்துள்ளோம்.

    நமது அரசு மேற்கொண்ட பல்வேறு முன்னெடுப்பு களின் காரணமாகவும், மிகச்சிறப்பான முறையிலே நடத்தி முடிக்கப்பட்ட உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் கிடைக்கப் பெற்ற பெரும் முதலீடுகள் காரணமாகவும் லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் கடந்த 3 ஆண்டுகளில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வெறும் வார்த்தையாக அல்ல, ஆதாரங்களோடு தான் இதனை இந்த அவைக்குத் தெரிவிக்க விரும்புகின்றேன்.

    தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் அமைப்பு சார்ந்த தனியார் துறைகளில் உருவாக்கப்பட்ட வேலை வாய்ப்புகள் குறித்த புள்ளி விவரங்கள் ஒன்றிய அரசின் தொழிலாளர் வைப்பு நிதி நிறுவனத்தின் மூலம் பெறப்பட்டது.

    இது ஒன்றிய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின்கீழ் செயல்படும் ஓர் அமைப்பாகும். இந்த நிறுவனத்தின் தரவுகளின்படி, கடந்த 3 ஆண்டுகளில் மொத்தம் 77 லட்சத்து 78 ஆயிரத்து 999 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. அவர்களுக்குத் தொழிலாளர் வைப்பு நிதி கணக்குகளும் தொடங்கப்பட்டுள்ளன.

    இதுமட்டுமின்றி, என்னுடைய கனவுத் திட்டம் என்று நான் எப்போதும் பெருமையோடு குறிப்பிடக் கூடிய "நான் முதல்வன் திட்டம்" மூலமாகச் சிறப்பு பயிற்சிகள் தரப்பட்டு வருகிறது. இதன் மூலம் படித்த இளைஞர்களின் திறன்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றது. இத்திட்டத்தின் மூலமாக இதுவரை, 3 லட்சத்து 6 ஆயிரத்து

    459 நபர்களுக்குத் தனியார் துறைகளில் வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல, தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலத்துறையின் மூலமாக நடத்தப்பட்ட சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்கள் மூலமாக கடந்த 3 ஆண்டுகளில் 2 லட்சத்து ஆயிரத்து 596 இளைஞர்களுக்கு தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரப்பட்டது.

    இந்த இரண்டையும் சேர்த்து, தமிழ்நாடு அரசின் முயற்சியினால், கடந்த 3 ஆண்டுகளில் மட்டும், மொத்தம் 5 லட்சத்து 8 ஆயிரத்து 55 தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்பதை பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

    'நம் இளைஞர்கள்தான் நம் பலம். அவர்கள்தான் நமது எதிர்கால வளத்திற்கு அடிப்படையானவர்கள்!' இதனை உணர்ந்த காரணத்தி னால், தமிழ்நாடு அரசு இந்த முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

    அரசுப் பணியினை எதிர் நோக்கி இருக்கும் ஆயிரக் கணக்கான தமிழ்நாட்டு இளைஞர்களுக்குத் தற்போது ஒரு மகிழ்ச்சியான செய்தியினை பேரவையில் தெரிவித்துக் கொள்கின்றேன்.

    வரும் ஜனவரி 2026-க்குள், அதாவது இன்னும் 18 மாதங்களுக்குள் பல்வேறு அரசுப் பணியிடங்களுக்காக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக 17 ஆயிரத்து 595 பணியிடங்களும், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக 19 ஆயிரத்து 260 ஆசிரியப் பணியிடங்களும், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக 3 ஆயிரத்து 41 பணியிடங்களும், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக 6 ஆயிரத்து 688 பணியிடங்களும் நிரப்பப்படும்.

    அதாவது வரும் 2026-ம் ஆண்டு ஜனவரி மாதத்துக்குள் மொத்தம் 46 ஆயிரத்து 584 பணியிடங்கள் நிரப்பப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். இதுதவிர, சமூக நலத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை உள்ளிட்ட முக்கிய துறைகளில் காலியாக இருக்கக்கூடிய 30 ஆயிரத்து 219 பணியிடங்களும் நிரப்பப்படும்.

    இவற்றை மொத்தமாக சேர்த்துப் பார்க்கையில், 75,000-க்கும் மேற்பட்ட அரசுப் பணியிடங்கள் வரும் 2026-ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் நிரப்பப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து அமைகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரூ.100 கோடி மதிப்பில் வங்கி கடன் இணைப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • பெண்களுக்கு கல்வி பொருளாதார சுதந்திரம் அவசியம். உயர்கல்வி பயில புதுமைப்பெண் திட்டம் செயல்படுத்தி வருகிறது.

    ஈரோடு:

    ஈரோட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழ்நாடு முழுவதும் இன்று மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.2,504 கோடி மதிப்பில் வங்கி கடன் இணைப்பு விழா நடத்த முதலமைச்சர் உத்தரவிட்டிருந்தார். அதன்படி இன்று ஈரோடு மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரூ.100 கோடி மதிப்பில் வங்கி கடன் இணைப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நான் ஒவ்வொரு முறையும் ஈரோடு வரும்போது எல்லாம் எனது தாய் வீட்டிற்கு வருவது போன்ற உணர்வு ஏற்படுகிறது. என்னை உங்களின் மகனாக, சகோதரனாக, பேரனாக இப்பகுதி மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

    இது மட்டும் இன்றி பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் பிறந்த மண் இது. ஈரோடு மண் திராவிட இயக்கத்தின் தொட்டில் ஆகும். பெண்களின் முன்னேற்றம் தான் திராவிட மாடல் அரசின் நோக்கமாகும். ஏனென்றால் ஒரு குடும்பத்தில் ஒரு பெண் படித்தால் அந்த குடும்பத்தின் பொருளாதாரம் உயரும். மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயாரிக்கும் பொருட்களை தான் நான் பெரும்பாலும் பயன்படுத்துகிறேன். நான் மட்டும் இன்றி எனது தந்தையும் அவர்கள் தயாரிக்கும் பொருட்களை தான் பயன்படுத்துகிறோம். ஏனென்றால் அவர்களின் தயாரிப்பு அவ்வளவு தரமாக இருக்கும். திராவிட அரசின் பிராண்ட் அம்பாசிஸ்டராக மகளிர் சுய குழுக்கள் உள்ளனர்.

    2016-ம் ஆண்டு முதல் ஒன்றிய அரசுக்கு ரூ.6 லட்சம் கோடி வரியாக செலுத்துகிறோம். ஆனால் 2.5 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே தமிழ்நாட்டிற்கு திருப்பி வழங்குகிறது. 1 ரூபாய் கொடுத்தால் 29 பைசா மட்டுமே ஒன்றிய அரசு திருப்பி தருகிறது. இத்தகைய பொருளாதார சூழலில் தான் தமிழ்நாட்டில் சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.

    திராவிட மாடல் அரசின் திட்டங்களை செயல்படுத்துவதில் மகளிர் குழு பங்களிப்பு மிகப்பெரும் உதவியாக உள்ளது. காலை உணவு திட்டம், சுகாதாரம், கல்வி ஆகிய திட்டங்களில் மகளிர் குழு பங்களிப்பு பேருதவியாக உள்ளது. பெண்களின் முன்னேற்றம் தான் திராவிட மாடல் அரசின் முன்னேற்றம், நோக்கம் என்ற அடிப்படையில் இந்த அரசு செயல்பட்டு வருகிறது.


    பெண்களுக்கு கல்வி பொருளாதார சுதந்திரம் அவசியம். உயர்கல்வி பயில புதுமைப்பெண் திட்டம் செயல்படுத்தி வருகிறது. 1 கோடியே 16 லட்சம் மகளிருக்கு உரிமைத்தொகை வழங்கப்படுகிறது. கட்டணமில்லா பேருந்து பயணம் மூலம் ரூ.12 ஆயிரம் ஒவ்வொரு பெண்களுக்கும் மாதம் மிச்சமாகிறது. தமிழ்நாடு முழுவதும் இந்த அரசு பொறுப்பேற்ற பின் மகளிர் குழுவை சேர்ந்த 12 லட்சத்து 25 ஆயிரத்து 803 பேருக்கு ரூ.69 ஆயிரத்து 584 கோடி வங்கி கடன் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

    இதில் 2023-24-ம் ஆண்டில் மட்டும் ரூ.30 ஆயிரம் கோடி வங்கி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இதுவரை ரூ.25 ஆயிரம் கோடி வழங்கப்பட்டது. விரைவில் இலக்கை முடிப்போம். நான் தற்போது நிகழ்ச்சியை முடித்து கொண்டு நேரடியாக கோவையில் இருந்து மும்பை செல்கிறேன். விளையாட்டுத்துறை மேம்பாட்டு சார்பில் சிறப்பாக செயல்பட்டதற்காக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு துறைக்கு இன்று விருது வழங்க உள்ளனர். அதற்காக செல்கிறேன். உங்கள் அனைவர் ஆசீர்வாதத்துடன் செல்கிறேன் நன்றி.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • பல்வேறு திட்டங்களைத் தமிழ்நாடு அரசின் நிதியினைக் கொண்டு தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது.
    • ஒன்றிய நிதியமைச்சரின் பேச்சுக்கு விரிவான பதில் தந்திருக்கிறார் தங்கம் தென்னரசு.

    பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1000 ரொக்கமும் வழங்கி இந்த இடர்மிகு சூழலிலும் இல்லந்தோறும் இன்பம் பொங்கிடத் துணை நிற்கிறது நமது திராவிட மாடல் அரசு என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1000 ரொக்கமும் வழங்கி இந்த இடர்மிகு சூழலிலும் இல்லந்தோறும் இன்பம் பொங்கிடத் துணை நிற்கிறது நமது திராவிட மாடல் அரசு.

    ஆட்சி அமைந்தது முதல், மகளிருக்கான விடியல் பயணத் திட்டத்தின் மூலம் மாதம் 1000 ரூபாய் அளவுக்கு செலவில் மிச்சம், காலை உணவுத் திட்டம் மூலம் பணிச்சுமைக் குறைப்பு, புதுமைப் பெண் திட்டத்தின் மூலமாக மாதம் 1000 ரூபாய், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் மாதம் 1000 ரூபாய்..

    - எனப் பல்வேறு திட்டங்களைத் தமிழ்நாடு அரசின் நிதியினைக் கொண்டு தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது திராவிடமாடல் அரசு.

    இந்திய மாநிலங்களின் நலன் காக்க வேண்டிய பொறுப்பில் உள்ள ஒன்றிய அரசு தமிழ்நாட்டு மக்களுக்காகச் செய்தது என்ன?

    ஒன்றிய நிதியமைச்சரின் பேச்சுக்கு விரிவான பதில் தந்திருக்கிறார் தமிழ்நாட்டின் நிதியமைச்சர்

    தங்கம் தென்னரசு.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

    • மகளிர் சுய உதவி குழுவினருக்கு மட்டும் ரூ.30 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளது.
    • அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு மாவட்டச் செயலாளர் அமைச்சர் தா.மோ.அன்பரசன் வெள்ளி செங்கோல் வழங்கி கவுரவித்தார்.

    திருப்போரூர் ஒன்றியம் மானம்பதி ஊராட்சியில் குயில் குப்பம் பகுதியில் வசித்து வந்த இருளர் பழங்குடியினர் 63 பேருக்கு ரூ.7.50 கோடி மதிப்பில் மெட்ராஸ் சென்ட்ரல் ரோட்டரி சங்கம் மற்றும் அபிராமி ராமநாதன் டிரஸ்ட் சார்பில் புதிய வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது.

    இதற்கான திறப்பு விழா அபிராமி திரையரங்க உரிமையாளரும் மெட்ராஸ் சென்ட்ரல் ரோட்டரி சங்க தலைவருமான அபிராமி ராமநாதன் தலைமையில் நேற்று நடந்தது.

    நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு புதிய வீடுகளை திறந்து வைத்து ஒவ்வொரு வீட்டுக்கும் பிரிட்ஜ், டி.வி., பீரோ, குக்கர், மிக்சி, கிரைண்டர், அடுப்பு, பாத்திரங்கள் உள்ளிட்ட குடும்பத்துக்கு தேவையான அனைத்து பொருட்களையும் வழங்கினார்.

    அமைச்சர் தா.மோ.அன்பரசன் முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசும் போது கூறியதாவது:-

    தமிழக அரசு ஏழை-எளிய மக்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மகளிர் சுய உதவி குழுவினருக்கு மட்டும் ரூ.30 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளது.

    மக்களை தேடி திட்டங்களை அளிப்பது திராவிட மாடல் அரசு மட்டுமே. உங்கள் குடும்பத் தலைவராகவே தமிழக முதல்வர் செயல்படுகிறார்.

    அவருக்கும் இந்த அரசுக்கும் தோளோடு தோள் நின்று ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    நான் உங்களிடம் வைக்கும் கோரிக்கை என்னவென்றால், உங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புங்கள். கல்வியை யாராலும் பறிக்க முடியாது. எந்த நிலை வந்தாலும் கல்வியை விட்டு விடாதீர்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சி முடிந்ததும் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் திருப்போரூர் வடக்கு, தெற்கு ஒன்றியங்களில் கொடியேற்று விழா நிகழ்ச்சிகள் பிரமாண்டமாக நடைபெற்றது.

    மாவட்டச் செயலாளர் தா.மோ.அன்பரசன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த கொடியேற்று விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு கிராமம் கிராமமாக சென்று கொடியேற்றினார்.

    திருப்போரூர் பேரூர் அரசு மருத்துவமனை எதிரில் இருந்து கொடியேற்றி இள்ளலூர், வெண்பேடு, காயார், பனங்காட்டுப்பாக்கம், கொளத்தூர், வெள்சிசை கோளம்பாக்கம், தையூர் என 13 இடங்களில் பிரசார வேனில் கிராமம் கிராமமாக சென்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியேற்றினார். கல்வெட்டையும் திறந்து வைத்தார்.

    அவருக்கு வழி நெடுக மக்கள் திரண்டு நின்று பிரமாண்ட வரவேற்பு அளித்தனர். பல ஊர்களில் மலர் தூவி வரவேற்பு கொடுத்தனர்.

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு மாவட்டச் செயலாளர் அமைச்சர் தா.மோ.அன்பரசன் வெள்ளி செங்கோல் வழங்கி கவுரவித்தார்.

    நிகழ்ச்சியில் பல்லாவரம் இ.கருணாநிதி எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ., ஒன்றியச் செயலாளர் எஸ்.ஆர்.எல்.இதயவர்மன், படப்பை மனோகரன் இளைஞரணி அமைப்பாளர் கோல்டு பிரகாஷ் மற்றும் கழக நிர்வாகிகள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் திரளாக கலந்து கொண்டனர்.

    • 3-வது முறையாக 'வேண்டும் மீண்டும் மோடி' என்ற குரல் நாடு முழுவதும் கேட்க தொடங்கிவிட்டது.
    • பதவி ஏற்றது முதல் கணக்கிட்டு ஒவ்வொரு பெண்ணுக்கும் ரூ.27 ஆயிரம் வழங்க வேண்டும்.

    சென்னை:

    தமிழகத்தில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்ப டும் என்று பா.ஜ னதா தலைவர் அண்ணா மலை அறிவித்து இருந்தார்.

    காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைகட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசை கண்டிக்கத் தவறிய தி.மு.க. அரசைக் கண்டிப்பது, தமிழகத்தில் அனைத்துப் பெண்களுக்கும் ரூ.1000 வழங்கு வதாக வாக்குறுதி தந்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்.

    டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும், கண்ணீரில் வாழும் ஏழைக் குடும்பங்களை காக்க வேண்டும். அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டிப்பது.

    மூன்று முறை மின் கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு, வாகன பதிவுக் கட்டணங்கள் உயர்வு, பத்திரப்பதிவு கட்டணங்கள் உயர்வு என மக்கள் மீது அனைத்து விதமான கட்டண உயர்வை விதித்து இருப்பதை கண்டிப்பது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    மாநிலம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வார்டுகள் பஞ்சாயத்துகள் வரை ஆயிரக்கணக்கான இடங்களில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மாநில, மாவட்ட நிர்வாகிகள் தங்கள் பகுதியில் கலந்து கொண்டனர்.

    சென்னை மாநகராட்சி பகுதியில் உள்ள 200 வார்டுகளிலும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    சோழிங்கநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட 198-வது வார்டில் மாமன்ற உறுப்பினர் லியோ சுந்தரம் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார்.

    3-வது முறையாக வேண்டும் மீண்டும் மோடி என்ற குரல் நாடு முழுவதும் கேட்க தொடங்கிவிட்டது.

    தமிழ்நாட்டில் எங்கே இருக்கிறது பா.ஜனதா என்று கேட்பார்கள். இன்று வார்டு அளவிலும் பஞ்சாயத்து அளவிலும் ஆர்ப்பாட்டம் நடத்தும் அளவுக்கு வளர்ந்து இருக்கிறோம்.

    வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசாக, சட்டம் ஒழுங்கை காப்பாற்ற முடியாத அரசாக தி.மு.க. அரசு உள்ளது. நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றார்கள். ஆனால் 67 சதவீதம் பேருக்கு தள்ளுபடி செய்யப்படவில்லை.

    இப்போது பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்குவதிலும், எவ்வளவு பேரை குறைக்கலாம் என்று திட்டமிட்டு கொண்டிருக்கிறார்கள். தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் கூறியது போல் அனைத்து பெண்களுக்கும் வழங்க வேண்டும். பதவி ஏற்றது முதல் கணக்கிட்டு பதவி ஏற்றது முதல் கணக்கிட்டு ஒவ்வொரு பெண்ணுக்கும் ரூ.27 ஆயிரம் வழங்க வேண்டும். போலி திராவிட மாடல் ஆட்சியை கண்டித்து தொடர்ந்து போராட்டம் நடத்துவோம் என்றார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பிரதமர் மோடி தமிழகத்தில் போட்டியிடுவார் என்பது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை. தி.மு.க. ஆட்சிக்கு வந்து 27 மாதங்களிலும் எதுவும் செய்ய வில்லை. டாஸ்மாக் வருவாயை நம்பிதான் அரசு இருக்கிறது.

    தமிழகம் முழுவதும் என்.ஐ.ஏ. சோதனை நடத்தி கொண்டிருக்கிறது. தற்போது தமிழ்நாடு தேச விரோதிகளின் புகலிடமாக மாறி உள்ளது. மணிப்பூர் பிரச்சினையை மத்திய அரசும், அந்த மாநில அரசும் இணைந்து தீர்த்து வைக்கும் என்றார்.

    இதே போல் சென்னையில் கோட்டூர்புரத்தில் மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன், மேற்கு மாம்பலத்தில் எச்.ராஜா, கோடம்பாக்கம் டிரஸ்ட் புரத்தில் மாநில துணைத் தலைவர் கருநாக ராஜன், தியாகராய நகரில் வி.பி.துரைசாமி, வண்ணார பேட்டையில் பால்கனகராஜ், அண்ணா நகரில் மாவட்ட தலைவர் தனசேகர், வில்லிவாக்கத்தில் மாவட்ட பொதுச் செயலாளர் லதா சண்முகம், சைதாப்பேட்டையில் மாவட்ட தலைவர் காளிதாஸ் அண்ணாசாலை அஜீஸ் நகரில் ஊடகப் பிரிவு தலைவர் ரங்க நாயகலு, மாவட்ட தலைவர் விஜய் ஆனந்த், கே.கே.நகர் சிவன் பூங்கா அருகில் மாவட்ட செயலாளர் லலிதா மோகன், சாலி கிராமத்தில் வக்கீல் பிரிவு மாநிலச் செயலாளர் செந்தில் குமார், விருகை கிழக்கு மண்டல தலைவர் ஹரிஸ், வட்ட தலைவர் ராஜா, மாவட்ட செயலாளர்கள் பிரேம்நாத், ஊடகப் பிரிவு மாநில செயலாளர் செந்தில்குமார், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • ஜி.எஸ்.டி. கவுன்சிலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வலியுறுத்தி உள்ளார்.
    • வணிகர் நல வாரியத்தின் உறுப்பினர்கள் சோ்க்கை கடந்த 2 ஆண்டுகளில் 2 மடங்கு உயர்ந்து உள்ளது.

    ஈரோடு:

    வணிகர் தினமான நேற்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 40-வது மாநாடு 'வணிகர் உரிமை முழக்க மாநாடு' என்ற பெயரில் ஈரோடு டெக்ஸ்வேலி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. மாநாட்டுக்கு பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமை தாங்கினார்.

    மாநாட்டில் வணிகர்களுக்கான 'வி.வி.டி.', 'மைசாட்டோ' ஆகிய செயலிகள் மற்றும் பேரமைப்பு வலைதளம் தொடங்கி வைக்கப்பட்டன. இந்த மாநாட்டில் அமைச்சர்கள் சு.முத்துசாமி, மா.சுப்பிரமணியன், வி.செந்தில்பாலாஜி, பி.மூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள்.

    அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசும்போது கூறியதாவது:-

    ஜி.எஸ்.டி. விதிக்கப்படுவதில் பல்வேறு மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று வணிகர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இதுதொடர்பாக ஜி.எஸ்.டி. கவுன்சிலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வலியுறுத்தி உள்ளார். வணிகர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்று கேட்டுக்கொண்டதன் பெயரில் காவல் உதவி செயலி கொண்டு வரப்பட்டது. எனவே வணிகர்களுக்கு உறுதுணையாக இந்த அரசு செயல்பட்டு வருகிறது.

    இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

    அமைச்சர் சு.முத்துசாமி பேசும்போது, வணிகர்கள் விடுக்கும் கோரிக்கைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக நிறைவேற்றி வருகிறார். 2007-ம் ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு வரைமுறை செய்வதற்கு மனுக்கள் பெறப்பட்டது. ஆனால் கட்டிடம் வரைமுறை தொடர்பாக முடிவு எடுக்கக்கூடாது என்று கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. மனுக்களை பெறுவதற்கான அவகாசம் முடிவடைந்து விட்டது. வேண்டுமென்றால் மனுக்களை பெறுவதற்கான அவகாசத்தை நீட்டிப்பு செய்யலாம். முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று காலஅவகாசத்தை நீட்டிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    அமைச்சர் செந்தில்பாலாஜி பேசும்போது கூறியதாவது:-

    வணிகர் நல வாரியத்தின் உறுப்பினர்கள் சோ்க்கை கடந்த 2 ஆண்டுகளில் 2 மடங்கு உயர்ந்து உள்ளது. அதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சியே காரணம்.

    இந்த மாநாட்டில் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா பேசும்போது, மின் கட்டணம் உயர்வு தொடா்பாக போராட்டம் நடத்தப்படுமா? என்று உறுப்பினர்கள் கேள்வி கேட்டதாக தெரிவித்தார். அந்த கேள்வி கேட்டவர்களை பார்த்து கேட்கிறேன், பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கும், சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.410-ல் இருந்து ரூ.1,200 உயர்த்தப்பட்டதற்கும் ஏன் போராட்டம் நடத்தவில்லை. பேரமைப்பு தலைவரை தூண்டிவிடும் வகையில் செயல்படுகின்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை விக்கிரமராஜா நேரில் சந்தித்து கோரிக்கையை தெரிவிக்கும்போது, அதை அவர் உடனடியாக நிறைவேற்றி கொடுத்து வருகிறார்.

    இவ்வாறு அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்.

    அமைச்சர் பி.மூா்த்தி பேசியதாவது:-

    திராவிட மாடல் ஆட்சி வணிகர்களுக்கு முழுஆதரவு அளித்து வருகிறது. நேர்மையாக தொழில் நடத்தி வரும் உங்களை போன்ற வணிகர்களுக்கு எப்போதும் தி.மு.க. அரசு உறுதுணையாக இருக்கும். கடந்த 2 ஆண்டுகளில் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளது.

    வணிகர் நல வாரியத்தின் நிர்வாகிகளை விரைவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிக்க உள்ளார்.

    இவ்வாறு அமைச்சர் பி.மூர்த்தி பேசினார்.

    • பாசறை கூட்டத்திற்கு தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் தலைமை தாங்கினார்.
    • அப்துல்லா எம்.பி., தமிழன் பிரசன்னா ஆகியோர் இளைஞரணி நிர்வாகிகளுக்கு பயிற்சியளித்தனர்.

    கடையநல்லூர்:

    கடையநல்லூரில் தி.மு.க. இளைஞரணி சார்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் நடந்தது. தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் தலைமை தாங்கினார். தனுஷ்குமார் எம்.பி. முன்னிலை வகித்தார்.

    மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆறுமுகச்சாமி வரவேற்றார். கூட்டத்தில் திராவிட இயக்க வரலாறு குறித்து அப்துல்லா எம்.பி., மாநில சுயாட்சி குறித்து மாநில செய்தி தொடர்பு இணை செயலாளர் தமிழன் பிரசன்னா ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்ற 540 இளைஞரணி நிர்வாகி களுக்கு பயிற்சியளித்தனர். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் முத்துவேல் நன்றி கூறினார்.

    முன்னதாக கடையநல்லூருக்கு வருகை தந்த அப்துல்லா எம்.பி.க்கு நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் மாவடிக்கால் சுந்தர மகாலிங்கம், முன்னாள் மாவட்ட செயலாளர் செல்லத்துரை, தென்காசி யூனியன் சேர்மன் ஷேக் அப்துல்லா, கடையநல்லூர் நகர்மன்ற தலைவர் மூப்பன் ஹபிபுர் ரஹ்மான், துணைத்தலைவர் ராசையா, ஒன்றிய செயலாளர்கள் சுரேஷ், ரவிசங்கர், திவான் ஒலி, அழகுசுந்தரம், நகர செயலாளர்கள் அப்பாஸ், வக்கீல் வெங்கடேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கூட்டத்திற்கு தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.
    • இளைஞரணி செயலாளர் ஆறுமுகசாமி வரவேற்று பேசினார்.

    சிவகிரி:

    தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி சார்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் சிவகிரியில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் சீனிவாசன், வாசுதேவநல்லூர் யூனியன் சேர்மனும், வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றிய செயலாளருமான பொன் முத்தையா பாண்டியன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் சரவணக்குமார், சிவகிரி பேரூர் செயலாளர் செண்பக விநாயகம், சிவகிரி பேரூராட்சி மன்றத் தலைவர் கோமதி சங்கரி சுந்தரவடிவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்காசி மாவட்ட இளைஞரணி செயலாளர் ஆறுமுகசாமி வரவேற்று பேசினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட துணைச்செயலாளர் மனோகரன், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் மருதப்பன், வாசுதேவநல்லூர் தெற்கு ஒன்றிய செயலாளர் பூசைபாண்டியன், மாவட்ட பொருளாளர் சரவணன், பேரூர் செயலாளர்கள் ராயகிரி குருசாமி, வாசுதேவநல்லூர் ரூபிபாலசுப்பிரமணியன், புளியங்குடி நகராட்சி தலைவர் விஜயா சவுந்தரபாண்டியன், சங்கரன்கோவில் ஒன்றியம் லாலாசங்கரபாண்டியன், புளியங்குடி அந்தோணிசாமி, ராயகிரி விவேகானந்தன், சிவகிரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் மருதுபாண்டியன், ஆயில்ராஜா பாண்டியன், தொழில்நுட்ப அணியின் துணை அமைப்பாளர் கிப்ஸ்சன், பேட்டரிக் பாபு, நல்லசிவன், கந்தவேல், மாரித்துரை, ராமச்சந்திரன், இளையராஜா, புல்லட் கணேசன், மகளிர் அணி கிருஷ்ணலீலா மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், இளைஞரணி நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், கிளை செயலாளர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சரவணகுமார் நன்றி கூறினார்.

    • சுரண்டை நகர தி.மு.க. இளைஞரணி சார்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் நடைபெற்றது
    • எழுத்தாளர் மதிமாறன் கலந்து கொண்டு திராவிடம் நேற்று, இன்று, நாளை என்ற தலைப்பில் பேசினார்.

    சுரண்டை:

    சுரண்டை நகர தி.மு.க. இளைஞரணி சார்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் நடைபெற்றது. சுரண்டை நகர தி.மு.க. செயலாளர் ஜெயபாலன் தலைமை தாங்கினார். நகர நிர்வாகிகள் ஆறுமுகச்சாமி, சுப்பிரமணியன், பூல் பாண்டியன், ஜெயராஜ், சங்கரநயினார், வெள்ளத்துரை பாண்டியன், ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எழுத்தாளர் மதிமாறன் கலந்து கொண்டு திராவிடம் நேற்று, இன்று, நாளை என்ற தலைப்பில் பேசினர்.

    நிகழ்ச்சியில் இளைஞர் அணி கோமதிநாயகம், வைகை ஜேம்ஸ், பிரம்மா, முத்து சுப்பிரமணியன், கணேசன், வேலுச்சாமி, பெடரல் கார்த்திக், சுடலைமுத்து, எழில், செல்வகுமார், ராஜன், பவுன், மாரியப்பன், முத்து சுப்பிரமணியன், முருகன் மற்றும் ஏராளமான தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி சார்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறை கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
    • தென்காசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திராவிட மாடல் பயிற்சி கலந்தாய்வு கூட்டத்திற்கு தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் வழக்கறிஞர் பொ. சிவபத்மநாதன் தலைமை தாங்கினார்.

    தென்காசி:

    தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி சார்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறை கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

    தென்காசி அருகே உள்ள குத்துக்கல்வலசை தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற தென்காசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திராவிட மாடல் பயிற்சி கலந்தாய்வு கூட்டத்திற்கு தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் வழக்கறிஞர் பொ. சிவபத்மநாதன் தலைமை தாங்கினார்.

    தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம்.குமார் முன்னிலை வகித்தார். தென்காசி மாவட்ட தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் இலத்தூர் ஆறுமுகச்சாமி வரவேற்றுப் பேசினார் . இந்த நிகழ்ச்சியில் மாநில சுயாட்சி குறித்து தி.மு.க.மாநில தகவல் தொழில் நுட்ப அணி இணைச் செயலாளர் கோவை லெனின், திராவிட இயக்க வரலாறு குறித்து அயலக தி.மு.க.தொடர்பு இணைச் செயலாளர் எம்.எம்.அப்துல்லா. எம்.பி ஆகியோர் கருத்துரை ஆற்றினார்கள்.

    இக்கூட்டத்தில் தென்காசி நகர தி.மு.க. செயலாளர் ஆர்.சாதிர், மாநில மாணவர் அணி துணைச் செயலாளர் எம்.ஏ.எம்.ஷெரீப், ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஆர்.எம்.அழகு சுந்தரம், க.சீனித்துரை, எம்.பி.எம்.அன்பழகன், சுரண்டை நகர திமுக செயலாளர் வே.ஜெயபாலன், பேரூர் தி.மு.க. செயலாளர்கள் மேலகரம் இ.சுடலை, குற்றாலம் குட்டி, இலஞ்சி மு.முத்தையா, சுந்தரபாண்டிபுரம் பண்டாரம், மாலை அமைப்பாளர்கள் ஜேசுராஜன், குற்றாலம் இரா.பேச்சி முத்து, உதயநிதி நற்பணி மன்ற துணைச் செயலாளர் சிவ அருணன், வீராணம் சேக் முகமது, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் சீவநல்லூர் சாமித்துரை, குற்றாலம் சுரேஷ், கண்ணன், செல்வம், தென்காசி நகர தி.மு.க. நிர்வாகிகள் சி.மணிமாறன், அ.சேக்பரீத், பால்ராஜ், த.ராமராஜ், நா.பாலசுப்பிரமணியன், ரஹ்மத்துல்லா, தொண்டரணி பரமசிவன், உ‌.இசக்கித்துரை, வடகரை ராமர், பழக்கடை கோபால் ராம், சே.தங்கப்பாண்டியன், ராம்துரை, வெங்கடேஷ், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த பயிற்சி பாசறை கலந்தாய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்ட இளைஞர்கள் அனைவரும் வெள்ளை நிற சீருடை அணிந்து கலந்து கொண்டனர்.

    முடிவில் தென்காசி மாவட்ட தி.மு.க. இளைஞரணி துணை அமைப்பாளர் சே. தங்கப் பாண்டியன் நன்றி கூறினார்.

    ×