என் மலர்
நீங்கள் தேடியது "drug-trafficking"
- போதைப் பொருட்கள், வெளிநாட்டு மது பாட்டில்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது.
- 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அமெரிக்காவின் புளோரிடா மற்றும் கலிபோர்னியா நகரங்களில் தயாரிக்கப்படும் ஓஜி குஷ் என்ற விலை உயர்ந்த போதை பொருட்களை கடத்தி வந்து ஐதராபாத்தில் விற்பனை செய்வதாக நம் பள்ளி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தெலுங்கானாவின் சிறப்பு படை போலீசார் மற்றும் கலால் துறை போலீசார் நேற்று விமான நிலையம் அருகே கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை மடக்கிப்பிடித்து பறிமுதல் செய்தனர்.
காரில் கஞ்சா போதை மாத்திரைகள், வெளிநாட்டு போதைப் பொருட்கள், வெளிநாட்டு மது பாட்டில்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதன் மதிப்பு ரூ. 100 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து காரில் இருந்த 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சர்வதேச சந்தையில் பறிமுதல் செய்யப்பட்ட ஹெராயின் மதிப்பு 70 கோடி ரூபாய் என போலீசார் தெரிவித்தனர்.
- கடந்த மூன்று மாதங்களில் பாதுகாப்புப் படையினர் கைது செய்யப்பட்ட மூன்றாவது போதைப்பொருள் கடத்தல் வழக்கு இதுவாகும்.
ஜம்மு காஷ்மீரில் எல்லை தாண்டிய போதைப்பொருள் கடத்தல் கும்பலை நடத்தி வந்த மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) வீரர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக நடத்திய தேடுதல் வேட்டையில், ஸ்ரீநகரில் உள்ள ராஜ்பாக்கில் 11 கிலோவுக்கும் அதிகமான ஹெராயின் மற்றும் ரூ.11 லட்சத்துக்கும் மேல் பணத்தை போலீசார் கைப்பற்றியதை அடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
சர்வதேச சந்தையில் பறிமுதல் செய்யப்பட்ட ஹெராயின் மதிப்பு 70 கோடி ரூபாய் என போலீசார் தெரிவித்தனர்.
மேலும் நடத்திய விசாரணையில், சிஆர்பிஎஃப் வீரர் சஜாத் பதானா பாகிஸ்தானில் இருந்து போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவனாக செயல்பட்டது தெரியவந்தது.
குற்றம்சாட்டப்பட்ட மூவரும் குப்வாரா மாவட்டத்தின் கர்னாவில் உள்ள எல்லைப் பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது.
இதுகுறித்து ஸ்ரீநகரின் மூத்த காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் பல்வால் கூறுகையில், "நாங்கள் சிஆர்பிஎஃப் வீரர் உள்பட 3 பேரை கைது செய்தோம். ஆரம்பத்தில், அவர் தனது அடையாளத்தை வெளியிடவில்லை. ஆனால் விசாரணையில் அவர் ஜம்மு பிராந்தியத்தில் பணியமர்த்தப்பட்ட ஒரு சிஆர்பிஃஎப் வீரர் என்பதை நாங்கள் கண்டறிந்தோம். கடந்த மூன்று மாதங்களில் பாதுகாப்புப் படையினர் கைது செய்யப்பட்ட மூன்றாவது போதைப்பொருள் கடத்தல் வழக்கு இதுவாகும்" என்றார்.
- போதைப்பொருள் விஷயத்தில் தி.மு.க. எந்தளவு கடத்தல்காரர்களை பாதுகாத்து இருக்கின்றார்கள் என்பது தெரிகின்றது.
- தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ளவர்கள் நாளை பிரதமர் பங்கேற்கும் மாநாட்டிற்கு வருகிறார்கள்
கோவை:
கோவை விமான நிலையத்தில் மத்திய மந்திரி எல்.முருகன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நாளை தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ள "என் மண் என் மக்கள்" யாத்திரை நிறைவு விழா பல்லடத்தில், பிரமாண்டமாக நடைபெற இருக்கின்றது.
இதில் பிரதமர் மோடி கலந்து கொள்கின்றார். இது தமிழக அரசியலில் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
"என் மண் என் மக்கள் யாத்திரை" தி.மு.க. அரசின் ஊழல்களையும், இயலாமையையும் மக்களிடம் எடுத்துச் செல்லும் யாத்திரையாகவும், பிரதமரின் 10 ஆண்டுகளாக சாதனைகளையும் எடுத்துச்செல்லும் யாத்திரையாக அமைந்தது. 234 தொகுதியிலும் யாத்திரை முடிந்துள்ளது.
தமிழகத்தில் கிராமம் தோறும் கஞ்சா ஊடுருவி இருக்கின்றது. இதற்கு உதாரணமாக தி.மு.க. நிர்வாகியே ரூ.3000 கோடி அளவிற்கு கடத்தலில் ஈடுபட்டுள்ளது வெளியுலகிற்கு தெரிய வந்துள்ளது.
இந்த போதைப்பொருள் விஷயத்தில் தி.மு.க. எந்தளவு கடத்தல்காரர்களை பாதுகாத்து இருக்கின்றார்கள் என்பது தெரிகின்றது.
தி.மு.க. தலைவர் ஸ்டாலின் இதுகுறித்து விளக்கத்தை சொல்ல வேண்டும் என தமிழக மக்கள் விரும்புகின்றார்கள்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ளவர்கள் நாளை பிரதமர் பங்கேற்கும் மாநாட்டிற்கு வருகிறார்கள். மேலும் யார் யார் வருவார்கள் என்பதை நாளை வரை பொறுத்திருந்து பாருங்கள்.
இன்று மாலை 5 மணிக்கு முக்கிய தகவல் வெளியாகும் என பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கூறி இருப்பது குறித்த கேள்விக்கு, யார் வருகின்றார்கள் என்பதை கொஞ்சம் காத்திருந்து பாருங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ள ஆணி வேரை கண்டுபிடிக்க முடியாமல் தமிழக காவல்துறை திணறி வருகிறது.
- செல்வாக்கு மிக்க நபராக வலம் வந்துள்ளது தமிழக மக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழகம் முழுவதும் மூலை முடுக்கெங்கும் கஞ்சா, பவுடர், மாத்திரை மற்றும் ஸ்டாம்ப் வடிவிலும், கேட்டமின், கொக்கேய்ன் என்று பல வகைகளிலும் போதைப்பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்கிறது.
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ள ஆணி வேரை கண்டுபிடிக்க முடியாமல் தமிழக காவல்துறை திணறி வருகிறது.
இதற்கு காரணம், இதுபோன்ற போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் திமுக-வின் முக்கிய நிர்வாகிகள் சிலரின் தலையீடு உள்ளதால் தமிழக காவல்துறை சுதந்திரமாக செயல்படாத நிலையை ஊகிக்க முடிகிறது.
இந்நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளாக 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்களை வெளிநாடுகளுக்கு கடத்தியதாக டெல்லியில் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலில் 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும் மூன்று பேர் தேடப்பட்டு வருவதாகவும், இக்கடத்தலில் தி.மு.க.வின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணியின் துணை அமைப்பாளரும், திரைப்படத் தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக் மூளையாக செயல்பட்டதும் தெரிய வந்துள்ளது. ஜாபர் சாதிக், அவரது சகோதரர்கள் மைதீன் மற்றும் சலீம் ஆகியோருடன் இணைந்து இந்தக் கடத்தலில் ஈடுபட்டது விசாரணையில் அம்பலமாகி உள்ளது. இந்த கடத்தல் சம்பந்தமாக அவர்களைத் தேடி வருவதாகவும் டெல்லி காவல்துறை தெரிவித்து உள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடைபெற்று இருப்பதால் அமலாக்கத்துறையினரும் விசாரணையைத் தொடங்கி உள்ளனர்.
மேலும், தலைமறைவாகி உள்ள மூன்று பேரையும் மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் தேடி வரும் நிலையில், தி.மு.க.வைச் சேர்ந்த பலரும் சிக்குவார்கள் என்று கூறப்படுகிறது.
தி.மு.க. ஆட்சியில் தமிழகம் போதை மாநிலமாக தள்ளாடி வரும் நிலையில், தி.மு.க.வால் பொறுப்பு கொடுத்து அழகு பார்க்கப்பட்ட முக்கிய நிர்வாகி, டெல்லியில் போதை சாம்ராஜ்யம் நடத்தியுள்ளார். அதன்மூலம் கிடைத்த கோடிக்கணக்கான ரூபாயில் யாருக்கெல்லாம் பங்கு கொடுத்தார் என்று விரிவான விசாரணை நடத்த வேண்டும். இவர் செல்வாக்கு மிக்க நபராக வலம் வந்துள்ளது தமிழக மக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
தமிழக காவல்துறை, இனியாவது எந்தவிதமான அரசியல் அழுத்தத்திற்கும் உள்ளாகாமல், சுதந்திரமாக செயல்பட்டு, உடனடியாக இந்ந நபரின் பின்னணி மற்றும் முழு விவரங்களையும், மேலும் இதுபோல் யாரேனும் போதைப்பொருள் கடத்தலில் சம்பந்தப்பட்டுள்ளனரா என்பதையும் மத்திய போதைப்பொருள் தடுப்புக் காவல்துறையினருடன் இணைந்தோ அல்லது தனித்தோ புலன் விசாரணை செய்து, அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- ஜாபர் சாதிக் சென்னை புரசைவாக்கத்தில் விடுதி நடத்தி வருகிறார்.
- 3 தென் மாநிலங்களில் தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் பதுங்கி இருக்கிறாரா என்று தேடி வருகிறார்கள்.
சென்னை:
நாடு முழுவதும் போதைப்பொருள் கடத்தலை தடுக்க மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளும் அனைத்து மாநில போலீசாரும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் மெத்த பெட்டமைன் என்கிற போதைப்பொருளை தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப்பொருளான சூடோ பெட்ரின் என்கிற போதைப்பொருள் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் மலேசியா போன்ற வெளிநாடுகளுக்கு இந்தியாவில் இருந்து கடத்தப்படுவதாக அந்த நாட்டு போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் இந்திய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து டெல்லியில் உள்ள மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளும், டெல்லி போலீசாரும் விசாரணை நடத்தி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துக்கு உலர் தேங்காய் பொடியில் மறைத்து, தடை செய்யப்பட்ட போதைப்பொருளான சூடோ பெட்ரினை அனுப்பி வைத்ததை கண்டுபிடித்தனர்.
இதையடுத்து மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளும், டெல்லி போலீசாரும் போதைப்பொருள் கடத்தல் கும்பலை பிடிக்க அதிரடியாக களத்தில் இறங்கினார்கள். அவர்கள் மேற்கு டெல்லியில் உள்ள பசாய் தாராபூர் பகுதியில் உள்ள குடோன்களில் சோதனை நடத்தினர். கடந்த 15-ந்தேதி நடந்த இந்த சோதனையில் 50 கிலோ சூடோ பெட்ரின் போதைப்பொருள் சிக்கியது.
இந்த கடத்தலில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்தனர். அவர்கள் 3 பேரும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் ஆவர். இவர்கள் கடந்த 3 ஆண்டுகளில் 3500 கிலோ அளவில் சூடோ பெட்ரின் போதைப் பொருளை கடத்தி வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்திருப்பதும் தெரிய வந்தது. இதன் சர்வதேச மதிப்பு ரூ.2 ஆயிரம் கோடி ஆகும்.
இந்த போதைப்பொருள் கடத்தலுக்கு தமிழகத்தை சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் (வயது 36) என்பவர் முக்கிய மூளையாக செயல்பட்டிருப்பதாகவும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். இவர் ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்தவர். சென்னை புரசைவாக்கத்தில் விடுதி நடத்தி வருகிறார். பிரபல அசைவ ஓட்டல் ஒன்றின் புரசைவாக்கம் கிளையையும் நடத்தி வருகிறார். அதன்பிறகு சினிமா தயாரிப்பாளராக மாறிய இவர் மங்கை என்ற திரைப்படத்தையும் தயாரித்து வருகிறார். மேலும் சில திரைப்படங்களையும் தயாரித்து வருகிறார்.
தயாரிப்பாளர் ஜாபர் சாதிக்குக்கு தமிழ் திரையுலகில் நெருங்கிய நண்பர்கள் பலர் உள்ளனர். அரசியல் களத்திலும் அவர் பிரபலமாக நபராக இருந்து வந்துள்ளார். பல முக்கிய பிரமுகர்களுடன் அவருக்கு நெருங்கிய தொடர்பு உள்ளது. இதன் அடிப்படையிலேயே அவர் பல படங்களை தயாரித்து வந்துள்ளார். கைதான 3 பேரிடம் டெல்லி போலீசார் நடத்திய விசாரணையில், இந்த கடத்தலுக்கு தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் தான் முக்கிய மூளையாக செயல்பட்டதாக தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து டெல்லியில் உள்ள மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் இந்த வழக்கில் தயாரிப்பாளர் ஜாபர் சாதிக்கை முக்கிய குற்றவாளியாக சேர்த்துள்ளனர்.
மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசுக்கு இந்தியா முழுவதும் கிளைகள் உள்ளன. தமிழகத்தை தலைமையிடமாக கொண்டும் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு ஒன்று இயங்கி வருகிறது. தமிழகத்தில் உள்ள இந்த பிரிவானது தமிழகம், கர்நாடகா, கேரளா ஆகிய 3 மாநிலங்களில் இருந்து சர்வதேச அளவில் கடத்தப்படும் போதைப்பொருளை தடுத்து வருகிறார்கள்.
டெல்லியை சேர்ந்த அதிகாரிகள் கொடுத்த தகவலின் பேரில் தமிழகத்தை சேர்ந்த மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார், தமிழகம், கர்நாடகா, கேரளா ஆகிய 3 தென் மாநிலங்களில் தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் பதுங்கி இருக்கிறாரா என்று தேடி வருகிறார்கள்.
மேலும் அவர் சென்னையில் உள்ள நண்பர்கள் வீட்டில் பதுங்கி இருக்கலாமா என்றும் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். அவரை கைது செய்ய அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அவரது செல்போன் எண் மூலமாக அவர் யார் யாருடன் தொடர்பு கொண்டு பேசியுள்ளார் என்றும் துப்பு துலக்குகிறார்கள். மேலும் அவர் நீண்ட நேரமாக யாருடன் பேசியுள்ளார் என்பது பற்றிய தகவல்களையும் திரட்டி வருகிறார்கள். சர்வதேச அழைப்பில் யாரிடமாவது பேசியுள்ளாரா என்பது பற்றியும் ஆய்வு செய்து வருகிறார்கள்.
போதைப்பொருள் கடத்தலில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் சிலருக்கும் இதில் தொடர்பு இருக்கலாம் என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. அதன் அடிப்படையில் விசாரணை நடந்து வருகிறது. இந்த விசாரணை தீவிரம் அடையும் பட்சத்தில் ஜாபர் சாதிக் உள்பட அவரது கூட்டாளிகள் மேலும் பலர் டெல்லி போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்படுவார்கள் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக்கை டெல்லியில் உள்ள மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஆஜராகுமாறு மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர். இந்த சம்மன் அவரது வீட்டில் ஒட்டப்பட்டுள்ளது.
- ஈரானில் இருந்து இந்த போதைப்பொருள் கடத்தல் கப்பல் கடந்த வாரம் புறப்பட்டதாக தெரிகிறது.
- போதைப்பொருட்கள் போட்டு வைக்கப்பட்டிருந்த பைகளில் பாகிஸ்தான் நிறுவனம் என்றுதான் பெயர் அச்சிடப்பட்டிருந்தது.
சென்னை:
இந்திய கடல் பகுதியில் சட்ட விரோதமாக போதைப்பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க மத்திய அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடல் வழியே கப்பல் மற்றும் படகுகளில் கடத்தப்படும் போதைப்பொருட்களை தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மடக்கி பிடித்து வருகிறார்கள்.
அந்த வகையில் ஈரான் நாட்டில் இருந்து இந்திய கடல் பகுதிக்குள் புகுந்துள்ள கப்பல் ஒன்றில் ஏராளமான போதைப்பொருட்கள் கடத்தி வரப்பட்டு பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. டெல்லியில் பிடிபட்ட போதைப்பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் இந்த தகவலை கசிய விட்டனர். இந்த போதைப்பொருள் கடத்தல் கப்பல் குஜராத் கடல் பகுதியில் வைத்து போதைப்பொருள் பண்டல்களை கைமாற்றி விட திட்டமிட்டிருப்பதையும் அதிகாரிகள் ரகசியமாக கண்டுபிடித்தனர்.
இதை தொடர்ந்து என்.சி.பி. என்று அழைக்கப்படும் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர், இந்திய கடற்படையில் உள்ள உணவு மற்றும் சுங்கப் பிரிவு, குஜராத் போலீசார் ஆகியோர் கூட்டாக இணைந்து போதைப்பொருள் வேட்டையில் அதிரடியாக இறங்கினார்கள். ஆபரேஷன் சாகர் மந்தன் என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த அதிரடி வேட்டையின்போது ரோந்து விமானம் மற்றும் போர்க்கப்பல் ஆகியவை கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டன. இந்த நிலையில் குஜராத் கடல் பகுதியில் போதைப்பொருட்களை கடத்தி வந்த கப்பலை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சுற்றி வளைத்தனர். நேற்று முன்தினம் நடத்தப்பட்ட இந்த சோதனையில் கப்பலில் மூட்டை மூட்டையாக பதுக்கி கடத்தி எடுத்து வரப்பட்ட போதைப்பொருட்கள் ஒரே இடத்தில் குவித்து வைக்கப்பட்டிருந்தன. அதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் போதைப்பொருட்களை மொத்தமாக பறிமுதல் செய்தனர். 3,300 கிலோ எடை கொண்ட இந்த போதைப்பொருட்களின் சர்வதேச மதிப்பு பல ஆயிரம் கோடிகளாகும்.
போதைப்பொருட்கள் கப்பலில் இருந்தன. 3,100 கிலோ எடை கொண்ட சரஸ் ஹஷீஸ் என்கிற போதைப்பொருள், 158.3 கிலோ மதிப்பிலான மெத்த பெட்டமைன், 26.6 கிலோ ஹெராயின் ஆகியவை பிடிபட்டன. இந்த போதைப்பொருட்களை கடத்தி வந்த வெளிநாட்டினர் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடமிருந்து செயற்கைகோள் செல்போன் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டது. இது தவிர 4 செல்போன்களையும் அவர்கள் பயன்படுத்தி வந்துள்ளனர். இவைகளையும் போலீசார் கைப்பற்றினார்கள். பிடிபட்ட 5 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக பல்வேறு பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஈரானில் இருந்து இந்த போதைப்பொருள் கடத்தல் கப்பல் கடந்த வாரம் புறப்பட்டதாக தெரிகிறது. அப்போதே போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அதனை மோப்பம் பிடித்து விட்டனர். இதை தொடர்ந்தே கப்பலின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து சுற்றி வளைத்து பிடித்தனர்.
பிடிபட்ட 5 பேரும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் ஆவர். இவர்கள் நடுக்கடலில் வைத்தே மீன் பிடி படகுகளில் போதைப்பொருட்களை கைமாற்றி விடுவதில் கைதேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.
இப்படி ஈரான் கப்பலில் பிடிபட்ட 3,300 கிலோ போதைப்பொருட்களையும் தமிழகத்துக்கு முக்கிய புள்ளி ஒருவருக்கு அனுப்பி வைக்க அவர்கள் திட்டமிட்டிருந்த அதிர்ச்சி தகவல் தெரிய வந்தது. சென்னையில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட மீன்பிடிபடகு மூலமாக இந்த போதைப்பொருட்கள் தமிழகத்துக்கு கடத்தி வருவதற்கு கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் பெரிய அளவில் திட்டம் போட்டு செயல்பட்டுள்ளனர். அதற்குள் போதைப்பொருள்கள் அத்தனையும் மொத்தமாக பிடிபட்டு விட்டது.
இருப்பினும் இந்த போதைப்பொருட்கள் தமிழகத்துக்கு யாருக்கு அனுப்பி வைக்க திட்டமிடப்பட்டிருந்தது? இந்த போதைப்பொருட்களின் பின்னணியில் இருப்பவர்கள் யார் யார்? என்பதை கண்டுபிடிக்கும் பணியில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
இது தொடர்பாக மேல் விசாரணை நடத்துவதற்காக டெல்லியில் இருந்து அதிகாரிகள் விரைவில் சென்னைக்கு வர உள்ளனர். அவர்கள் சென்னைக்கு வந்து விசாரணை நடத்திய பிறகு 3,300 கிலோ எடை கொண்ட இந்த ரூ.2 ஆயிரம் கோடி போதைப்பொருட்களும் தமிழகத்துக்கு யாருக்காக கடத்தி வரப்பட்டது என்பது அம்பலமாகும் என தெரிகிறது.
போதைப்பொருட்கள் போட்டு வைக்கப்பட்டிருந்த பைகளில் பாகிஸ்தான் நிறுவனம் என்றுதான் பெயர் அச்சிடப்பட்டிருந்தது. இதன் மூலமாக போதைப்பொருட்கள் பாகிஸ்தானில் இருந்து கடத்தப்பட்டிருக்கலாமா? என்கிற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் ஈராக்கை சேர்ந்தவர்களாக இருக்கக்கூடும் என்றும் கருதப்படுகிறது.
இதன் பின்னணி பற்றியும் விசாரித்து வரும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தமிழக கடத்தல் கும்பலை பிடிக்கவும் வலை விரித்துள்ளனர்.
- சினிமா மற்றும் அரசியலில் செல்வாக்கோடு வலம் வந்து கொண்டிருந்த நேரத்தில்தான் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் சிக்கி ஜாபர் சாதிக் தலைமறைவாகி உள்ளார்.
- ஜாபர் சாதிக் சினிமா மற்றும் அரசியலில் தனக்கு நெருக்கமான நபர்களிடம் டெல்லியில் ஏற்றுமதி தொழில் செய்து வருவதாக கூறி வந்துள்ளார்.
சென்னை:
டெல்லியில் கைலாஷ் பார்க் பகுதியில் உணவுப்பொருள் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த போதைப் பொருட்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிடிபட்டது. தேங்காய் பவுடர் மற்றும் சத்துமாவு பாக்கெட்டுகளில் மறைத்து வைத்து சூடோ பெட்ரின் என்கிற போதைப்பொருள் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளுக்கு கடத்தப்பட்டிருப்பது அம்பலமானது.
இதுதொடர்பாக கடந்த 15-ந் தேதி சென்னையை சேர்ந்த முகேஷ், முஜிபுர், விழுப்புரத்தை சேர்ந்த அசோக்குமார் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சென்னையை சேர்ந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளரான ஜாபர் சாதிக்குக்கு போதைப் பொருள் கடத்தலில் பெரிய அளவில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதை தொடர்ந்து தி.மு.க. அயலக அணியில் பொறுப்பில் இருந்த ஜாபர் சாதிக் அதிரடியாக நீக்கப்பட்டார். சினிமாவிலும் தடம் பதிக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் ஜாபர் சாதிக் பல படங்களையும் தயாரித்து வந்தார்.
இப்படி சினிமா மற்றும் அரசியலில் செல்வாக்கோடு வலம் வந்து கொண்டிருந்த நேரத்தில்தான் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் சிக்கி ஜாபர் சாதிக் தலைமறைவாகி உள்ளார்.
இதையடுத்து சென்னை மயிலாப்பூர் சாந்தோம் பகுதியில் உள்ள ஜாபர் சாதிக்கின் வீட்டில் கடந்த திங்கட்கிழமை டெல்லியில் இருந்து வந்திருந்த போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் சம்மனை ஒட்டிவிட்டுச் சென்றனர். அதில் கடந்த 26-ந் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால் ஜாபர் சாதிக் தனது செல்போன்களை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டார். அவர் எங்கிருக்கிறார்? என்பதே தெரியவில்லை. தலைமறைவாக உள்ள ஜாபர்சாதிக்கை கைது செய்ய தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
இதற்கிடையே சாந்தோமில் உள்ள ஜாபர் சாதிக்கின் வீட்டு பூட்டை உடைத்து அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி ஆவணங்களை கைப்பற்றினார்கள். பின்னர் வீட்டுக்கு சீல் வைத்துவிட்டு சென்றனர். ஜாபர் சாதிக்கின் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் போதைப் பொருள் கடத்தலின் பின்னணியில் யார்-யார் உள்ளனர்? என்பது பற்றிய பட்டியலை அதிகாரிகள் தயாரித்து வருகிறார்கள்.
ஜாபர் சாதிக் சினிமா மற்றும் அரசியலில் தனக்கு நெருக்கமான நபர்களிடம் டெல்லியில் ஏற்றுமதி தொழில் செய்து வருவதாக கூறி வந்துள்ளார். இதை நம்பியே அவருடன் பலர் நெருக்கம் காட்டி உள்ளனர். ஏற்றுமதி தொழிலில் நல்ல வருமானம் வருவதாகவும் அதை வைத்தே சினிமா படம் எடுப்பதாகவும் ஜாபர் சாதிக் தெரிவித்துள்ளார்.
ஆனால் அவர் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டே கோடிகளில் புரண்டிருப்பது தற்போதுதான் தெரிய வந்துள்ளது. இதனால் அவரோடு நெருங்கி பழகி வந்த அரசியல்வாதிகள் மற்றும் சினிமா பிரபலங்கள் ஆகியோர் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளனர்.
டெல்லி போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள், தமிழக பிரிவை சேர்ந்த அதிகாரிகளுடன் கைகோர்த்துக் கொண்டு ஜாபர் சாதிக்கின் முழு பின்னணியையும் அலசி ஆராய்ந்து வருகிறார்கள்.
இதில் யார்-யாருக்கு தொடர்பு உள்ளது என்பது பற்றிய விவாதங்கள் தெரிய வந்ததும் ஜாபர் சாதிக்குடன் தொடர்பில் இருந்த அனைவருக்கும் சம்மன் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் ஜாபர் சாதிக்குடன் தொடர்பில் இருந்தவர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
- போதைப்பொருள் கடத்தல் கும்பல் மேற்கு டெல்லியில் உள்ள கைலாஷ் நகரில் செயல்பட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டது.
- ஜாபர் சாதிக் தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டார்.
சென்னை:
போதைப்பொருள் தயாரிக்க பயன்படுத்தப்படும் முக்கிய வேதிப்பொருள் வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டு வருவதாக வெளியான தகவலை தொடர்ந்து, கடந்த சில மாதங்களாகவே டெல்லி போலீஸ் சிறப்பு பிரிவு மற்றும் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இதில் போதைப்பொருள் கடத்தல் கும்பல் மேற்கு டெல்லியில் உள்ள கைலாஷ் நகரில் செயல்பட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அந்த குடோனில் அதிரடியாக புகுந்து, அங்கிருந்த தமிழகத்தை சேர்ந்த 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 50 கிலோ அளவில் போதையூட்டும் வேதிப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த கடத்தல் கும்பலுக்கு மூளையாக செயல்பட்டது தி.மு.க. சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளரும், சினிமா தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக் என விசாரணையில் தெரியவந்தது.
இந்தநிலையில் ஜாபர் சாதிக் தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டார். தலைமறைவாக உள்ள அவரை போலீசார் தேடி வருகின்றனர். அவர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருக்கும் சம்மனை, சென்னை மயிலாப்பூரில் உள்ள ஜாபர் சாதிக் வீட்டிலும், புரசைவாக்கத்தில் உள்ள அவரது அலுவலகத்திலும் போலீசார் ஒட்டியுள்ளனர். அவரது வீட்டுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், அவர் வெளிநாடு தப்பிச் செல்வதை தடுக்கும் வகையில் ஜாபர் சாதிக்குக்கு எதிராக அனைத்து விமான நிலையங்களுக்கும் போலீசார் லுக்அவுட் நோட்டீஸ் வழங்கி உள்ளனர். இதன்மூலம், இனி எந்த விமான நிலையத்துக்கு ஜாபர் சாதிக் சென்றாலும் உடனடியாக அவர் அங்குள்ள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் வசம் ஒப்படைக்கப்படுவார்.
- தலைமறைவாக உள்ள ஜாபர் சாதிக்கிற்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.
- அவரது வீட்டில் நடந்த சோதனையில் நிலம், வங்கிக் கணக்குகள் தொடர்பான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சென்னை:
டெல்லியில் கைலாஷ் பார்க் பகுதியில் உணவுப்பொருள் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த போதைப் பொருட்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிடிபட்டது. தேங்காய் பவுடர் மற்றும் சத்துமாவு பாக்கெட்டுகளில் மறைத்து வைத்து சூடோ பெட்ரின் என்கிற போதைப்பொருள் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளுக்கு கடத்தப்பட்டிருப்பது அம்பலமானது.
இதுதொடர்பாக கடந்த 15-ம் தேதி சென்னையை சேர்ந்த முகேஷ், முஜிபுர், விழுப்புரத்தை சேர்ந்த அசோக்குமார் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சென்னையை சேர்ந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளரான ஜாபர் சாதிக்குக்கு போதைப் பொருள் கடத்தலில் பெரிய அளவில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இதை தொடர்ந்து தி.மு.க. அயலக அணியில் பொறுப்பில் இருந்த ஜாபர் சாதிக் அதிரடியாக நீக்கப்பட்டார். தற்போது ஜாபர் சாதிக் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
டெல்லி போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவேண்டும் என குறிப்பிட்டிருந்த சம்மனை சென்னை மயிலாப்பூர், சாந்தோம் பகுதி அருணாச்சலம் தெருவில் உள்ள ஜாபர் சாதிக் வீட்டில் டெல்லி போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் ஒட்டினர். மேலும் தலைமறைவாக உள்ள ஜாபர் சாதிக்கிற்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னையில் உள்ள ஜாபர் சாதிக் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் நிலம், வங்கிக் கணக்குகள் தொடர்பான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து, ஜாபர் சாதிக் தொடர்புடைய 8 வங்கிக்கணக்குகளை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் முடக்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- தமிழ்நாட்டில் கடைசி துளி போதைப்பொருள் ஒழியும் வரை எங்களுடைய போராட்டம் தொடரும்.
- ஒரு சிறிய தவறு கூட பெரிய தண்டனைகளை பெற்றுத் தந்துவிடும்.
சென்னை:
தமிழகத்தில் போதைப் பொருட்கள் கடத்தலை தடுக்க தவறிய தி.மு.க. அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் மாவட்ட தலை நகரங்களில் நாளை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அ.தி.மு.க. சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, போதைப்பொருள் குறித்து விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,
தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் போதைப்பொருள் புழக்கம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்தத் தவறிய விடியா திமுக அரசைக் கண்டித்தும் நாளை அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்.
நாளைய போராட்டத்தோடு நிச்சயமாக இது நின்றுவிடப்போவதில்லை. தமிழ்நாட்டில் கடைசி துளி போதைப்பொருள் ஒழியும் வரை எங்களுடைய போராட்டம் தொடரும்.
பெற்றோர்களே... இந்த விடியா ஆட்சியில் தமிழ்நாடு போதைப்பொருள் கிடங்காக மாறி வருகிறது. நம் பிள்ளைகளை நாம் தான் பார்த்துக்கொள்ளவேண்டும். கவனமாக இருங்கள்.
மாணவச் செல்வங்களே, இளைய சமுதாயமே- உங்கள் எதிர்காலம் மிக முக்கியம். ஒரு சிறிய தவறு கூட பெரிய தண்டனைகளை பெற்றுத் தந்துவிடும் என்று கூறி விழிப்புணர்வு வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார்.
- தி.மு.க.வைச் சேர்ந்த ஜாபர் போதை மாபியாவை உலகமே தேடப்படும் குற்றவாளியாக உள்ளார்.
- குஜராத் மாநிலம் துறைமுகத்தில் போதை பொருள் கைப்பற்றப்பட்டது.
மதுரை:
சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் இன்று கூறியதாவது:-
தி.மு.க. அரசு பதவி ஏற்ற நாளிலிருந்து தமிழகம் முற்றிலுமாக சீர்கேடு அடைந்து தமிழகம் போதைப் பொருட்களின் கேந்திரமாக மாறி வருங்கால தலைமுறையின் வாழ்க்கை சீரழிந்து வருகிறது. போதை பொருள் கடத்தலால், இந்திய அளவில் தமிழ்நாட்டுக்கு தலை குனிவு ஏற்பட்டுள்ளது. இதனை விளக்கும் வகையில் எடப்பாடியார் ஒரு வீடியோ பதிவை கொடுத்துள்ளார்.
அதில் கடைசி சொட்டு போதை ஒழிப்பு வரை போராட்டம் தொடரும் என்று அறிவித்திருக்கிறார். போதைப் பொருள் கடத்தல் மாபியா கும்பல் முழுமையாக கைது செய்யப்படும் வரை தமிழகத்தில் அ.தி.மு.க. போராட்டம் தொடரும் என எடப்பாடியார் மன உறுதியோடு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தி.மு.க.வைச் சேர்ந்த ஜாபர் போதை மாபியாவை உலகமே தேடப்படும் குற்றவாளியாக உள்ளார். இளைஞர்கள் மற்றும் மாணவர்களை சீரழிக்கும் இந்த போதைப் பொருள் குறித்து கடந்த இரண்டரை ஆண்டுகளாக மக்களிடத்திலே விழிப்புணர்வு ஏற்படுத்துகின்ற வகையிலும், தி.மு.க.வை எச்சரிக்கின்ற வகையிலும் எடப்பாடியார் பல்வேறு ஆதாரங்களோடு குற்றச்சாட்டை எடுத்து வைத்து இன்றைக்கு இந்த தாய் தமிழ்நாட்டை இளைய சமுதாயத்தின் எதிர்காலத்திற்காக தொடர்ந்து உரிமைக்குரல் எழுப்பி வருகின்றார்.
போதைப் பொருட்களால் அதிகம் பாதிக்கப்படுவது குழந்தைகளும், பள்ளி, கல்லூரி மாணவிகளும், ஐ.டி. துறையினருமாகிய இளைய தலைமுறைதான். தி.மு.க. ஆட்சி பொறுப்பு ஏற்ற உடனே 2021 செப்டம்பர் 15 அன்று குஜராத் மாநிலம் துறைமுகத்தில் போதை பொருள் கைப்பற்றப்பட்டது. அதன் மதிப்பு ரூ.21,000 கோடியாகும், இந்த வழக்கிலே சென்னையை சேர்ந்த கணவன், மனைவி முக்கிய குற்றவாளிகளாக கைது செய்யப்பட் டுள்ளனர்.
2021 ஆண்டு மார்ச் 18-ந்தேதி லட்சத்தீவு படகில் 300 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. இதற்கு திருச்சி சிறப்பு முகாமில் உள்ளவர்களுக்கு தொடர்பு இருப்பதாக கண்டது. 2022-ம் ஆண்டு ராமநாதபுரத்தில் ரூ.300 கோடி மதிப்புள்ள போதை பொருள் கடத்தப்பட்டது. கடந்த ஜனவரி 25-ந்தேதி சென்னையில் நைஜீரியா நாட்டை சேர்ந்த ஒருவர் ஒரு கிலோ போதை பொருள் வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டார்.
கடந்த பிப்ரவரி 26-ந் தேதி ரூ.2000 கோடி மதிப்பில் போதை மருந்து கடத்தப்பட்டதாக சிலர் கைது செய்யப்பட்டனர். இதற்கு தி.மு.க.வைச் சேர்ந்த ஜாபர் மாபியா தலைவனாக உள்ளார். அதேபோல் 29-ந்தேதி மதுரை ரெயில் நிலையத்தில் ரூ.200 கோடி மதிப்பிலான போதை பொருள் பிடிபட்டு இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனை கட்டுப்படுத்த தான் எடப்பாடியார் உரிமைக்குரல் எழுப்பியுள்ளார். நாம் அவருக்கு உறுதுணையாக இருந்து தமிழ்நாட்டை மீட்டெடுப்பதற்காக நாம் அணி திரளவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- இந்த ஆண்டு இதுவரையில் போதைப்பொருள் வழக்குகளில் தொடர்புடைய 25 குற்றவாளிகள் பல்வேறு கோர்ட்டுகளால் தண்டிக்கப்பட்டு உள்ளனர்.
- மாணவர்கள் இடையே போதைப்பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்த 73 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நடத்தப்பட்டுள்ளன.
சென்னை:
சென்னை நந்தனத்தில் நேற்று நடைபெற்ற பா.ஜனதா பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசும்போது, தமிழ்நாட்டில் ஆளுங்கட்சி ஆதரவுடன் போதைப்பொருள் தங்கு தடையின்றி புழக்கத்தில் உள்ளது என்று பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார்.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் தொடர்பாக தமிழ்நாடு அரசின் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு மற்றும் போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு கூடுதல் டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வால் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
போதை இல்லா தமிழகம் என்ற இலக்கை அடைவதற்கு தமிழ்நாடு போலீஸ்துறை, மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு மற்றும் போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் மற்றும் போலீசார் மாநிலம் முழுவதும் போதைப்பொருளை ஒழிக்க உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி ஆகிய 2 மாதங்களில் போதைப்பொருள், மனமயக்க பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்ட 470 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக மொத்தம் 1,914 கிலோ கஞ்சா, 2 கிலோ மெத்தம்பெட்டமைன், 700 டேபண்ட்டால் 100 எம்.ஜி. மாத்திரைகள், 321 நைட்ரேசன் மாத்திரைகள், 2 ஆயிரத்து 20 டைடால் மாத்திரைகள் என ரூ.2.4 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள், 21 மோட்டார் சைக்கிள்கள், ஒரு ஆட்டோ, 6 கார்கள் போன்ற வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு இதுவரையில் போதைப்பொருள் வழக்குகளில் தொடர்புடைய 25 குற்றவாளிகள் பல்வேறு கோர்ட்டுகளால் தண்டிக்கப்பட்டு உள்ளனர். மேலும் போதைப்பொருள் வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றம் சாட்டப்பட்டவர்களின் 6 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
சட்ட அமலாக்கம் தவிர, மாணவர்கள் இடையே போதைப்பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்த 73 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நடத்தப்பட்டுள்ளன.
போதைப்பொருட்கள் மற்றும் மனமயக்க பொருட்களின் விற்பனை மற்றும் கடத்தல் தொடர்பான தகவல்களை கட்டணமில்லா உதவி எண்-10581, 94984 10581 என்ற 'வாட்ஸ் அப்' எண் அல்லது spnibcid@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.