search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dussehra festival"

    • இந்த ஆண்டு தசரா திருவிழா கடந்த 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • திருவிழாவையொட்டி கோவிலில் கடந்த 9 நாட்களும் காலை முதல் இரவு வரை சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது.

    உடன்குடி:

    இந்தியாவில் தசரா பெருந்திருவிழா மைசூருக்கு அடுத்தபடியாக தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில்தான் பிரசித்தியாக கொண்டாடப்படுகிறது.

    இந்த ஆண்டு தசரா திருவிழா கடந்த 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதைத்தொடர்ந்து விரதம் இருந்து வந்த லட்சக்கணக்கான பக்தர்கள் மற்றும் பல்வேறு தசரா குழுவினர் கோவிலுக்கு வந்து காப்பு கட்டி சென்றனர்.

    வேண்டுதல்கள் நிறைவேற கடும் விரதம் இருந்து காளி, அம்மன் போன்ற சுவாமி வேடங்கள், குரங்கு, சிங்கம், பெண் போன்ற 100-க்கு மேற்பட்ட வேடங்கள் அணிந்து காணிக்கை வசூல் செய்து வந்தனர்.

    மேலும் ஊர் பெயரில் தசரா குழு அமைத்து அதில் நையாண்டி மேளம், தாரை தப்பட்டை, செண்டை மேளம், கரகம், காவடி, டிஸ்கோ போன்ற கலை நிகழ்ச்சிகளுடன் பல்வேறு ஊர்களுக்கு சென்று கலை நிகழ்ச்சிகளை நடத்தி காணிக்கை வசூல் செய்து வந்தனர்.

    தசரா குழுவினரின் கலை நிகழ்ச்சி மிகவும் அசத்தலாக இருந்தது. 10-ம் திருநாளான விழாவின் சிகர நிகழ்ச்சியான இன்று இரவு சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. இதையொட்டி அதிகாலையில் இருந்தே பக்தர்கள் முத்தாரம்மன் கோவிலுக்கு வந்து வசூல் செய்த காணிக்கையை செலுத்த தொடங்கினார்கள். இன்று பிற்பகல் வரை சுமார் 10 லட்சம் பக்தர்கள் திரண்டனர்.

    இதனால் எங்கு பார்த்தாலும் பக்தர்களாக காட்சியளித்தனர். இரவில் நடைபெறும் சூரசம்ஹார நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பக்தர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என தெரிகிறது.

    இதற்காக 4 இடங்களில் தற்காலிக பஸ் நிலையம், பக்தர்கள் வரும் தனியார் வாகனங்ளை நிறுத்த 30 தற்காலிக வாகன நிறுத்தும் இடங்கள் தயார் செய்யப்பட்டிருந்தது.

    மருத்துவத்துறை, சுகாதாரத்துறை, மின்சாரத்துறை, தீயணைப்பு துறை என மாவட்டத்தில் உள்ள பல்வேறு துறையினர் குலசையில் முகாமிட்டுள்ளனர்.

     

     9-ம் திருநாளான நேற்று இரவு அம்மன் அன்ன வாகனத்தில் கலைமகள் திருக்கோலத்தில் பவனி வந்த காட்சி

     9-ம் திருநாளான நேற்று இரவு அம்மன் அன்ன வாகனத்தில் கலைமகள் திருக்கோலத்தில் பவனி வந்த காட்சி

    திருவிழாவையொட்டி கோவிலில் கடந்த 9 நாட்களும் காலை முதல் இரவு வரை சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. மதியம் 12 மணிக்கு சிறப்பு அன்னதானம் நடந்தது. முத்தாரம்மன் ஒவ்வொரு நாளும் ஒவ்வோறு திருக்கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். மேலும் தினமும் கோவில் கலையரங்கத்தில் மதியம் 3 மணி முதல் இரவு 10 மணி வரை பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

    இன்றும் காலை 6 மணி, 7.30 மணி, 9 மணி, 10.30 மணிக்கு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து இரவு 11 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையும், நள்ளிரவு 12 மணிக்கு அன்னை முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேசுவர் கோவில் முன்பாக எழுந்தருளி லட்சகணக்கான பக்தர்கள் முன்னிலையில் மகிஷாசூரனை சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது.

    நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 1 மணிக்கு கடற்கரை மேடையில் அம்மனுக்கு அபிஷேகம், அதிகாலை 2 மணிக்கு சிதம்பரேசுவரர் கோவிலில் அம்மனுக்கு சாந்தாபிஷேக ஆராதனையும் தொடர்ந்து தேரில் எழுந்தருளி கோவில் கலையரங்கம் வந்தடைவார். அங்கு காலை 5 மணிக்கு அபிஷேக ஆராதனை நடைபெறுகிறது.

    காலை 6 மணிக்கு அன்னை முத்தாரம்மன் பூஞ்சப்பரத்தில் வீதி உலாவும், பகல் 12 மணிக்கு அன்னதானமும், மாலை 4 மணிக்கு அம்மன் கோவில் வந்து சேர்கிறார். பின்னர் கொடி இறக்கப்பட்டு மாலை 4.30 மணிக்கு காப்பு களையுதல் நடக்கிறது. நள்ளிரவு 12 மணிக்கு சேர்க்கை அபிஷேகம் நடக்கிறது. நாளை மறுநாள் (14-ந் தேதி) காலை 6 மணி, 8 மணி, 10 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், மதியம் 12 மணிக்கு கோவில் அறங்காவலர் குழு தலைவர் கண்ணன் ஏற்பாட்டில் சிறப்பு பாலாபிஷேகம், புஷ்ப அலங்காரம் நடக்கிறது.

    தசரா திருவிழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் தாண்டவன் காடு கண்ணன், செயல் அலுவலர் ராம சுப்பிரமணியன் அறங்காவலர்கள் ரவிந்திரன் குமரன், மகராஜன், கணேசன், வெங்கடேஷ்வரி மற்றும் மாவட்ட அறநிலையத்துறை, மாவட்ட நிர்வாகம் செய்துள்ளனர்.

    திருவிழாவையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் உத்தரவின் பேரில் திருச்செந்தூர் டி.எஸ்.பி.வசந்தராஜன் தலைமையில் சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண், பெண் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் தசரா உடை அணிந்த போலீசார் ரகசிய கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். 

    • குலசேகரபாண்டிய மன்னனின் பெயரால் குலசேகரப்பட்டினம் என அழைக்கப்பட்டது.
    • முத்து+ஆறும்+அம்மன் என்பதால் முத்தாரம்மன் என ஆயிற்று.

    நவராத்திரி விழாவில் தசரா கொண்டாட்டங்கள் என்றதும் நம்மில் அனைவரும் பட்டென்று நினைப்பது இந்தியாவில் நான்கு இடங்களில் நடைபெறும் தசரா விழா கொண்டாட்டங்களை தான்.

    கர்நாடக மாநிலத்தில் மைசூரில் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு நடைபெறும் பிரமாண்ட பூஜைகள், யானை அணிவகுப்புகள்...

    குஜராத் மாநிலத்தில் தாண்டியா நடனத்துடன் தசரா கொண்டாட்டங்கள்...

    மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் துர்க்கா தேவி பூஜை.


    தமிழகத்தில் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் பக்தர்கள் வேடம் புனைந்து கடற்கரையில் முத்தாரம்மனோடு மகிஷாசுர வதத்திற்காக செல்லும் ஊர்வலம்.

    இந்த நான்கு தசாரா கொண்டாட்டங்கள் இந்தியாவில் புகழ் பெற்ற நவராத்திரி விழாக்கால கொண்டாட்டங்கள் என அழைக்கபடுகிறது.

    இந்த நான்கில் நம்மூர் தாய் குலசை முத்தாரம்மன் தசரா கொண்டாட்டத்தை பற்றி நான் திரட்டிய தகவல்கள் உங்கள் பார்வைக்கு...

    சங்க காலத்தில் குலசேகரப்பட்டினம் தென் மறைநாடு, வீர வளநாடு என்ற பெயர்களால் அழைக்கப்பட்டது.

    கொற்கை என அழைக்கப்பட்ட பாண்டியர்களின் துறைமுக நகரமே இன்றைய குலசேகரபட்டினம் ஆகும்.

    குலசேகரபட்டினம் ஊர் கடல் பகுதி. இயற்கையாகவே மிகப் பெரிய கப்பல்கள் வந்து செல்லும் அளவிற்கு ஆழமான கடற்பரப்பை கொண்டது.

    பாண்டிய மன்னன் சடைய வர்ம சுந்தரபாண்டியனின் மகன் மாற வர்ம குலசேகர பாண்டியன் கொற்கை பகுதியை கி.பி.1268 ம் ஆண்டு முதல் கி.பி 1311 வரை சுமார் 43 ஆண்டுகள் ஆட்சி செய்தார்.

    1274 -ம் ஆண்டு கேரள மன்னனை வெல்ல குலசேகரப்பாண்டியன் படையெடுக்க செல்லும் முன் தன் குல தெய்வமான முத்தாரம்மனை வேண்டி கொண்டான்.

    மன்னன் கனவில் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் தோன்றி போரில் வெற்றி கிட்டும் என அருளாசி வழங்கினாள்.

    சேரனோடு நடந்த போரில் வெற்றி பெற்று கொல்லம் பகுதியை கைப்பற்றிய குலசேகரப்பாண்டியன் "கொல்லம் கொண்ட பாண்டியன்" என்ற அடைமொழியை பெற்றான்.

    கி.பி. 1279 ஆம் ஆண்டு நடந்த மற்றொரு போரில் சோழ மன்னன் மூன்றாம் ராஜேந்திர சோழன் மற்றும் போசளர் இன தலைவனையும் ஒரே போரில் தோற்கடித்தான் மன்னன் குலசேகர பாண்டியன்.

    பின் 1284 ல் இலங்கை மீது படையெடுத்து வெற்றி பெற்று நிறைய செல்வங்களோடு வந்தான் மன்னன் குலசேகரன்.

    வெற்றி மேல் வெற்றியை முத்தாரம்மனின் அருளால் பெற்ற குலசேகர பாண்டிய மன்னன் முத்தாரம்மனின் உத்தரவுப்படி கொற்கை துறைமுகத்தை சீர்படுத்தி, அம்மனின் ஆலயத்தையும் புனரமைத்து ஊரையும் விரிவு படுத்தினான்.

    அன்று முதல் இந்த ஊரின் பெயர் குலசேகரபாண்டிய மன்னனின் பெயரால் குலசேகரப்பட்டினம் என அழைக்கப்பட்டது.


    குலசேகர பட்டினத்தில் வீற்றிருந்து அருள் பாலிக்கும் முத்தாரம்மனின் பெயர் காரணத்தை சொல்லுடேய் சில் வண்டு என நீங்கள் சொல்வது எனக்கு கேட்கிறது.

    முன்னொரு காலத்தில் சக்தி முனி என்ற முனிவர் பூலோகத்தில் இருந்து அஷ்டமா சித்திகள் பெற வேண்டி யாகம் வளர்த்தார்.

    யாகத்தீயின் வெம்மை விண்ணுலகம் வரை பரவுகிறது. சிவனாரின் உத்தரவின் படி சக்தி முனிவன் வளர்த்த யாகத்தை நிறைவு செய்ய சென்ற பார்வதி தேவியின் நெற்றியில் வேள்வி தீ வெக்கையால் முத்து போன்ற வியர்வை துளிகள் அரும்புகின்றன.

    நெற்றியில் அரும்பிய வியர்வை துளிகளை யாக குண்டத்தில் வீசி எறிகிறாள் அன்னை பார்வதி தேவி.

    சிவனின் வியர்வையில் தோன்றிய சிவ அம்சமான வியர்வை புத்திரனை போல் பார்வதிதேவி வேள்வி குண்டத்தில் வீசி எறிந்த வியர்வை துளிகளில் இருந்து சக்தியின் அம்சமாக அஷ்டமா சக்திகள் பிறக்கின்றனர்.

    முத்தாரம்மன்,வடபத்திரகாளியம்மன்,முப்பிடாரியம்மன், பொன்னியம்மன், உலகளந்தாள், அரியநாச்சி, செண்பகவல்லி, சந்தனமாரி என்ற பெயர் கொண்ட அஷ்ட காளிகளில் (பேச்சு வழக்கில், அட்டகாளி) மூத்தவள் முத்தாரம்மன் என்பதால் மூத்தமாரி (முத்துமாரி) என அன்னையை அழைப்பதாகவும் பக்தர்கள் கூறுவர்.

    எத்தனை பெயர்கள் இருப்பினும் அத்தனை பெயர்களுக்கும் அன்னையானவள் அர்த்தம் கற்பிப்பவளாகவே இருக்கிறாள் என்பது அம்பிகையின் பெரும் சிறப்பு தானே.

    தூத்துக்குடியை ஒட்டியுள்ள கடலில் தாராளமாக கிடைத்த முத்துக்களை எடுத்து அதை ஆரங்கள் (மாலை) ஆக்கி பாண்டிய மன்னர்கள் தங்கள் அன்னைக்கு அணிவித்து அழகு பார்த்ததால் அம்பிகையானவள் முத்தாரம்மன் (முத்துக்களை ஆரமாக அணிபவள்) என்று பெயர் பெற்றதாக சொல்வார்கள்.

    முத்துகள் எனும் அம்மை நோய் அன்னையை வழிபட்டால் ஆறி விடும். உடலில் ஏற்படும் அம்மை முத்துக்கள் குணமாக அன்னையை வேண்டி வழிபட்டால் உடனே ஆற்றுபவள் என்பதால் முத்துகளை ஆற்றும் அம்மன்.

    முத்து+ஆறும்+அம்மன் என்பதால் முத்தாரம்மன் என அம்மன் பெயர் பெற்றதாக அம்பாளின் பெயருக்கான காரணத்தை கூறுவர்.

    வேள்வியில் தனது அம்சமாக பிறந்த அஷ்ட காளிகளை தன்னுடன் அழைத்து கொண்டு கயிலைக்கு வந்தாள் அன்னையான பார்வதி தேவி.

    மகாதேவரான சிவனாரை வணங்கி தொழுது நின்ற அஷ்ட மாகாளிகள் அனைவரும் சிவனிடம் தங்களை பிறவி செய்த காரணத்தை வினவினர்.

    மகேந்திரகிரி பர்வதத்தை ஆண்டு வரும் கொடிய மகிஷாசுரனை வதம் செய்யவே பார்வதியின் அம்சமாய் உங்களை பிறவி செய்தேன் என சிவன் பதிலுரைத்தார்.

    சிவனாரிடம் வேண்டிய வரங்களை பெற்று அஷ்டமாகாளிகள் எட்டு பேரும் மகிஷனோடு போர் புரிய வருகின்றனர்.

    அஷ்ட மாகாளிகள் மற்றும் மகிஷாசுரன் இடையே துவந்த யுத்தம் நடக்கிறது.

    சிவனாரிடம் பெற்ற வரத்தின் மகிமையால் மகிஷன் அஷ்ட காளிகளை எதிர்த்து மூர்க்கமாய் போரிடுகிறான்.

    எட்டு பேரும் தனி தனியாக நிற்பதை விட ஒரு சேர நின்றால் தங்களின் அஷ்ட மா சித்திகளுக்கு வலிமை அதிகம் என்பதை அஷ்ட காளிகள் உணர்கின்றனர்.

    அஷ்டகாளிகள் எட்டு பேரும் ஒரு தேவியாய் இணைந்து சாமுண்டீஸ்வரியாக மாறி மகிஷாசுரனை வதம் செய்தனர்.

    உயிர் பிரியும் தருவாயில் அரக்கன் மகிஷாசுரன் தன் தவறை உணர்கிறான்.

    அன்னை சாமுண்டீஸ்வரி தாயே! என்னை மன்னித்து விடுங்கள். வாழும் வரை அசுர குலத்தில் ராஜாவாக இருந்தேன்.


    என்னை மன்னித்து மறு பிறப்பு தந்து வனத்தில் வாழும் உயிரினங்களின் ராஜாவான சிங்கமாக என்னை பிறவி செய்து தாயே! உன்னை சுமக்கும் பாக்கியத்தை தந்தருள வேண்டும் என அன்னையிடம் வேண்டினான் மகிஷன்.

    ஆங்கார ரூபிணியாக இருந்த அன்னை சாமுண்டீஸ்வரி, சாந்த சொரூபிணியாக மாறி மகிஷாசுரனை மன்னித்து சிங்கமாக பிறவி செய்து மகிஷனை தனது வாகனமாக்கி "சிம வாகிணி" என பெயர் பெற்றாள்.

    எல்லாம் சரிடேய்!! சில் வண்டு...

    குலசேகரபட்டிணம் முத்தாரம்மன் கோயில் தசாரா கொண்டாட்டங்களின் முத்தாய்ப்பு நிகழ்ச்சியான கடற்கரையில் நடைபெறும் மகிஷாசுர சம்ஹார நிகழ்வில் பக்தர்கள் பல்வேறு வேஷம் போட்டு அம்மனோடு செல்வதற்கான காரணம் என்னன்னு கேக்குறீங்க .. சரி தானே.

    மகிஷாசுரனோடு அன்னை முத்தாரம்மன் யுத்தம் நிகழ்த்திய போது அன்னைக்கு துணையாக நிறைய பரிவார தெய்வங்களும் பூதப்படைகளும் கலந்து கொண்டன.

    அன்னைக்கு துணையாக நாங்களும் இருக்கிறோம் என அன்று பரிவார தெய்வங்கள், பூதப்படையினர் கலந்து கொண்டதை நினைவுபடுத்தும் வகையில் பக்தர்கள் விரதமிருந்து வேடம் அணிந்து மகிஷாசுர சம்ஹாரத்தின் போது அன்னையின் படையினராக கலந்து கொள்கின்றனர்.

    பக்குவமான ஆன்மீக மன நிலைக்கு மனிதனை செல்ல விடாமல் தடுப்பது அவனின் அகந்தையும், ஆணவமும்.

    விரதமும், பணிவும் மனிதனையும், மனித மனத்தையும் பக்குவபடுத்தும்.

    இவ்வாறு வேடம் அணியும் பக்தர்கள் ஜாதி, மதம், அந்தஸ்து பாராமல் அனைவரின் வீடுகளுக்கு சென்று தனது ஆணவம், அகந்தையை விட்டு பணிவோடு முத்தாரம்மைக்கு காணிக்கை தாங்க.. என கேட்பார்கள்.

    அவ்வாறு சேகரிக்கும் காணிக்கையை அன்னையிடம் சமர்பித்து தாயே ! எனது அகந்தையை விட்டு விட்டேன். உன்னோடு என்னையும் சேர்த்துக் கொள் அம்மா! என வேண்டிக்கொள்வதன் அர்த்தமாக வேடம் அணிந்த பக்தர்கள் அன்னையோடு அசுர சம்ஹாரத்திற்கு செல்லும் நிகழ்வு கருதப்படுகிறது.

    அகந்தையை விட்டு விரதம் இருந்து வேடம் அணிந்து வரும் தனது பக்தர்களின் வேண்டுதல்களை அடுத்த தசாரா விழா கொண்டாட்டங்களுக்கு முன்பே அன்னை நிறைவேற்றி விடுவதாக ஐதீகம்.

    வேடம் அணிந்த பக்தர்களின் வேண்டுதலை மட்டுமல்ல வேடம் அணியாமல் உண்மையான பக்தியோடு தன்னை நோக்கி கை கூப்பி அம்மா.. முத்தாரம்மா.. தாயே என்னை காப்பாற்று! என வேண்டுவோர்களின் வேதனைகளையும் தீர்த்து வைக்கிறாள் திரிபுரம் எனும் முப்புரத்தில் குடியிருந்த முப்புரநாயகியாகிய முத்தாரம்மன்.

    இந்த நவராத்திரி விழா காலங்களில் மட்டும் அல்லாது அன்னையின் அருள் என்றென்றும் நம்மை காக்கட்டும்... ஓம் சக்தி...

    தொடர்புக்கு-isuresh669@gmail.com

    • தீமையை அழித்து நன்மை வெற்றி பெறும் நிகழ்வாக தசரா கருதப்படுகிறது.
    • விஜயதசமி என்ற பெயரிலும், தசரா என்ற பெயரிலும் இந்தியா முழுவதும் கொண்டாடப்படும்.

    இந்தியாவின் பிரசித்தி பெற்ற பண்டிகைகளில் ஒன்றாக தசரா திருவிழா பார்க்கப்படுகிறது. தீமையை அழித்து நன்மை வெற்றி பெறும் நிகழ்வாக இந்த தசரா விழா கருதப்படுகிறது.

    விஜயதசமி என்ற பெயரிலும், தசரா என்ற பெயரிலும் இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் இந்த விழா, முக்கியமான பண்டிகைகளில் ஒன்று.

    இந்தியாவின் தெற்கு, கிழக்கு, வடகிழக்கு என்ற பல மாநிலங்களிலும் மகிஷா சூரனை, துர்க்கை தேவி அழித்த தினமாகவும், தர்மத்தை (நீதியை) மீட்டெடுத்த தினமாகவும், தீமையை நன்மை வெற்றிகொண்ட தினமாகவும் 'தசரா' கொண்டாடப்பட்டாலும், இந்த விழா அந்தந்த இடங்களுக்கு ஏற்ற வகையில் வரலாற்று மற்றும் கலாசார நிகழ்வுகளை பதிவு செய்வதாக இருக்கிறது.

    இங்கே இந்தியா முழுமைக்குமாக உள்ள மாநிலங்களில் தசரா கொண்டாட்டங்களைப் பற்றி பார்க்கலாம்.


    தென்னிந்தியா

    கர்நாடகா மாநிலம் மைசூர் நகரில், 'நாடா ஹப்பா' எனப்படும் மாநில விழாவாக 'தசரா' கொண்டாடப்படுகிறது. இந்த விழாவின்போது மைசூர் அரண்மனை ஒளியூட்டப்படும்.

    அலங்கரிக்கப்பட்ட யானையின் மீது தங்க மண்டபத்தில் சாமுண்டேஸ்வரி தேவியின் சிலை இடம்பெற்று, அது ஊர்வலமாக கொண்டு வரப்படும்.

    அப்போது அந்த ஊர்வலத்தின் முன்பாக, கலாசார நிகழ்ச்சிகள், இசை, நடனம் மற்றும் கண்காட்சியும் இடம் பெறும். அது அந்த நகரின் வாழ்வியலை உயிர்ப்பித்துக் காட்டுவதாக அமையும்.


    தமிழ்நாட்டின் தென்கோடியில் உள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கிறது, குலசேகரன்பட்டினம் என்ற ஊர். இங்குள்ள ஞானமூர்த்தீஸ்வரர் சமேத முத்தாரம்மன் கோவிலில் நடைபெறும் தசரா பெருவிழா மிகவும் பிரசித்திப் பெற்ற தாகும். இது ஒரு கிராமிய விழா போன்று நடைபெறுவதுதான், இதன் சிறப்பாக கருதப்படுகிறது.

    10 நாள் கொண்டாட்டமான இந்த விழாவில், கோவிலுக்கு வரும் பக்தர்கள் பலரும் அம்மனுக்கு விரதம் இருந்து மாலை அணிந்து கொள்வார்கள். ஒவ்வொருவரும் தங்களின் நேர்ச்சைக்கு தகுந்தபடி, ஒவ்வொரு வேடம் அணிந்து கோவிலுக்கு வந்து அம்மனை வழிபாடு செய்வார்கள். அதில் தெய்வங்கள், மனிதர்கள், விலங்குகள், அரக்கர்கள் உள்ளிட்ட வேடங்களும் அடங்கியிருக்கும்.

    தென்னிந்தியாவின் சில பகுதிகளில், அறிவு, இசை மற்றும் கலைகளின் தெய்வமான சரஸ்வதி தேவிக்கு, விஜயதசமி அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இதன் முக்கிய நிகழ்வு 'வித்யாரம்பம்'. இந்த நாளில் பிள்ளைகளின் கற்றல் மற்றும் எழுத்துகளை தொடங்குவதை பலரும் செய்கிறார்கள். இதனால் கல்வியில் அவர்கள் சிறந்து விளங்குவார்கள் என்பது நம்பிக்கையாக இருக்கிறது.

    வித்யாரம்பம் சடங்கிற்காக கோவில்கள் மற்றும் கலாசார மையங்களில் மக்கள் கூடுவார்கள். அங்கு பெற்றோர், தங்களின் குழந்தைகளுக்கு பச்சை அரிசி பரப்பிய தட்டில், தங்கள் மொழியின் முதல் எழுத்தை எழுதவைத்து படிப்பை தொடங்கச் செய்வார்கள்.


    வட இந்தியா

    உத்தரபிரதேசம், டெல்லி, இமாச்சலப் பிரதேசம் போன்ற மாநிலங்களில், தசரா பெருவிழாவானது 'ராமலீலா' என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. 10 நாட்கள் நடைபெறும் இந்த கொண்டாட்ட விழாவானது, ராமாயண காவியத்தை நாடகமாக மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் நடைபெறுகின்றன.

    ராவணன், மேகநாதன், கும்பகர்ணன் ஆகியோரின் உருவ பொம்மைகளை எரிப்பதுடன் இந்த விழா நிறைவு பெறுகிறது. 10 தலையுடன் செய்யப்பட்ட பிரமாண்டமான ராவணனின் உருவ பொம்மையின் மீது, பலவிதமான வண்ண பட்டாசுகள் சுற்றி அலங்கரிக்கப்பட்டிருக்கும். அம்பின் நுனியில் தீ பற்ற வைத்து, பொம்மையின் மீது எய்துவார்கள்.

    இதில் ராவணனின் உருவ பொம்மை வெடித்துச் சிதறி, வானில் வர்ணஜாலத்தைக் காட்டும். தீமையில் இருந்து கிடைக்கும் விடுதலை பெருநாளாக வடஇந்தியாவில் தசரா கொண்டாடப்படுகிறது.


    கிழக்கு இந்தியா

    மேற்கு வங்காளம், அசாம் மற்றும் ஒடிசாவில், 10 நாட்கள் நடைபெறும் துர்க்கா பூஜையின் நிறைவு நாளாக 'தசரா' பார்க்கப்படுகிறது. துர்க்கா தேவியின் பிரமாண்டமான சிலைகள், அலங்கரிக்கப்பட்ட பந்தல்களில் வைத்து 10 நாட்களும் வணங்கப்படும்.

    10-வது நாளில் இந்த சிலைகள் அங்குள்ள ஆறுகள் அல்லது பிற நீர்நிலைகளில் கரைக்கப்படுகின்றன. இந்த விழாவில் பாடுதல், நடனம் ஆகியவையும் அடங்கும்.


    மேற்கு இந்தியா

    மகாராஷ்டிராவில் நடைபெறும் தசரா விழாவானது, செழிப்புக்கான தெய்வத்தின் ஆசீர்வாதமாக பார்க்கப்படுகிறது. மக்கள் நல்லெண்ணத்தின் அடையாளமாக, தங்கத்தை அடையாளப்படுத்தும் 'ஆப்டா' இலைகளை தங்களுக்குள் பரிமாறிக்கொள்வார்கள்.

    குஜராத்தில் நடைபெறும் தசரா பெருவிழா, உற்சாகத்தின் உச்சகட்டமாக அமையும். இந்த விழாவில் கர்பா, தாண்டியா போன்ற நடனங்கள் வண்ணமயமான உடைகளுடன், துடிப்பான ஆடலும் அமைந்திருக்கும்.


    வடகிழக்கு இந்தியா

    திரிபுரா போன்ற மாநிலங்களில், துர்க்கா பூஜையின் முடிவைக் குறிக்கும் வகையில் ஊர்வலங்கள் மற்றும் கலாசார நிகழ்வுகளுடன் தசரா கொண்டாடப்படுகிறது. துர்க்கை சிலைகள் கரைக்கும் நிகழ்ச்சி மிகுந்த பக்தியுடனும், உற்சாகத்துடனும் நடத்தப்படுகிறது.

    • கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக பக்தர்கள் வந்த லாரி, ஆட்டோ மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உடன்குடி:

    பிரசித்தி பெற்ற குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வாகனங்கள் மூலம் குலசேகரன்பட்டினம் வந்து மாலை அணிந்தனர்.

    தூத்துக்குடி அருகே உள்ள முடிவைத்தானேந்தல், செக்காரக்குடி பகுதியை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட தசரா பக்தர்கள் குலசேகரன்பட்டினத்தில் சுவாமி தரிசனம் முடித்துவிட்டு மாலை அணிந்து கொண்டனர். பின்னர் அங்கிருந்து நேற்று காலை சரக்கு ஆட்டோவில் சொந்த ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர்.

    உடன்குடி அனல்மின் நிலைய பகுதியில் வரும்போது முன்னால் சென்ற வாகனங்களை டிரைவர் முந்தி செல்ல முயன்றுள்ளார். அப்போது எதிரே ஆலங்குளத்தில் இருந்து குலசேகரன்பட்டினம் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக பக்தர்கள் வந்த லாரி, ஆட்டோ மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.

    இதில் ஆட்டோ டிரைவரான செக்காரக்குடியை சேர்ந்த சுடலைவீரன், பெருமாள் மகன் பெரும்படையான், ஆதிமூலப்பெருமாள் மகன் வடிவேல், சுப்பிரமணி, மாயாண்டி, மற்றொரு சுப்பிரமணி, சுடலைமணி, கிருஷ்ண பெருமாள், மற்றொரு சுடலைமணி, அய்யம்பெருமாள், அருணாச்சலம் ஆகிய 11 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

    அவர்கள் திருச்செந்தூர் ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்சுகள் மூலம் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், பெரும்படையான், கிருஷ்ண பெருமாள், வடிவேல் ஆகியோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு பெரும்படையான் (20), கிருஷ்ண பெருமாள் (25) ஆகியோர் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.

    தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் டாக்டர்களின் கண்காணிப்பில் இருந்து வந்த ஆதிமூலப்பெருமாள் மகன் வடிவேல் (வயது17) சிகிச்சை பலனளிக்காமல் இன்று அதிகாலையில் பரிதாபமாக இறந்தார்.

    இந்த விபத்து தொடர்பாக லாரியை ஓட்டி வந்த டிரைவரான ஆலங்குளம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த மாரியப்பன்(வயது 38) என்பவரை பிடித்து குலசேகரன்பட்டினம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நவராத்திரி விழாவே இங்கு தசரா விழாவாக கொண்டாடப்படுகிறது.
    • முக்கிய நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம் வருகிற 12-ந்தேதி

    உடன்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே அமைந்துள்ள அழகிய கடற்கரை நகரம் குலசேகரன்பட்டினம்.

    இங்கு வீற்றிற்கும் ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன். அம்மையும், அப்பனும் ஒரு சேர வீற்றிருக்கும் காட்சி மற்ற கோவில்களில் காண இயலாத காட்சியாகும். நவராத்திரி விழாவே இங்கு தசரா விழாவாக கொண்டாடப்படுகிறது.


    இச்சிறப்பு மிக்க தசரா திருவிழாவையொட்டி நேற்று காளி பூஜையும், அன்ன தானமும் நடந்ததது. நேற்றுஇரவு 9 மணிக்கு அம்மனுக்குகாப்பு கட்டினர். இன்று அதிகாலை 5 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட யானையில் கொடி பட்டம் ஊர்வலம் கோவிலில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கோவிலுக்கு வந்தது. காலை 9.30 மணிக்கு வேத மந்திரங்கள் முழங்க கோவில் முன்பு உள்ள கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது.

    தொடர்ந்து கொடி மரத்திற்கு பல்வேறு வகையான அபிஷேகம் நடந்தது. இதில் பல்லாயிரகணக்கான பக்தர்கள் கடலில் நீராடி புனித நீரை சுமந்து கோவிலுக்கு வந்தனர். ஓம் காளி ஜெய் காளி என்று கோஷமிட்டனர்.

    கோவில் கலையரங்கத்தில் சிவலூர் தசரா குழு சார்பிலும், கடற்கரையில் சந்தையடியூர் தசரா குழு சார்பிலும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    இன்று முதல் தினசரிமாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை கோயில் கலையரங்கத்தில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. கொடியேற்றம் நடந்தவுடன் கோவில் பூசாரி விரதம் இருந்து வந்த பக்தர்களுக்கு காப்பு கட்டினார். இன்று இரவு 10 மணிக்கு அன்னை முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் துர்க்கை கோலத்தில் வீதி உலா நடக்கிறது.

    நாளை (4-ந் முதல் வருகிற 11-ந்தேதி வரை தினசரி காலை முதல் இரவு வரைசிறப்பு அபிஷேக ஆரா தனையும் மதியம் 12 மணிக்கு சிறப்பு அன்னதானமும் நடக்கிறது.

    2-ம் திருநாளில் அன்னை கற்பக விருட்சம் வாகனத்தில் விசுவகர்மேசுவரர் கோலம், 3-ம் நாள் திருவிழாவில் ரிஷபம் வாகனத்தில் பார்வதி திருக்கோலம், 4-ம் திருநாளில் அன்னை மயில் வாகனத்தில் பாலசுப்பிரமணியர் திருக்கோலம், 5-ம் திருநாளில் காமதேனு வாகனத்தில் நவநீதகிருஷ்ணர் திருக்கோலம், 6-ம் திருநாளில் சிம்ம வாகனத்தில் மகிஷாசுர மர்த்தினி திருக்கோலம், 7-ம் திருநாளில் அன்னை பூஞ்சப்பரத்தில் ஆனந்த நடராஜர் திருக்கோலம், 8-ம் திருநாளில் கமல வாகனத்தில் கச லெட்சுமி திருக்கோலம், 9-ம் திருநாளில் அன்னை அன்ன வாகனத்தில் கலைமகள் திருக்கோலம் என ஒவ்வொரு நாளும் இரவு 10 மணிக்கு அன்னை வீதி உலாவரும்.

    வருகிற 8-ந்தேதி 6-ம் திருவிழாவில் இருந்து தமிழகம் முழுவதும் சுமார் 30 ஆயிரத்திற்கு மேற்பட்ட தசரா குழுவினர் காப்பு கட்டி வேடம் அணிந்து மேளம், டிரம் செட், தாரை தப்பட்டையுடன் கரகாட்டம், டிஸ்கோ நடன கலைஞர்கள் கலைநிகழ்ச்சி நடத்துவார்கள்.

    அப்போது தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் எங்கு பார்த்தாலும் தசரா குழு வினர்கள் காட்சியளிப்பார்கள்.

    மிக முக்கிய நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம் வருகிற 12-ந்தேதி 10-ம் திருநாள் இரவு 11 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையும், இரவு 12 மணிக்கு அன்னை முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி கடற்கரையில லட்சகணக்கான பக்தர்கள் முன்னிலையில் மகிஷா சூரசம்ஹாரம் நடக்கிறது.

    தொடர்ந்து வருகிற 13-ந்தேதி அதிகாலை 1 மணிக்கு கடற்கரை மேடையில் அம்மனுக்கு அபிஷேகம், அதிகாலை 2 மணிக்கு சிதம்பரேசுவரர் கோவிலில் அம்மனுக்கு சாந்தாபிஷே ஆராதனையும் தொடர்ந்து தேரில் எழுந்தருளி கோவில் கலையரங்கம் வந்தடைந்ததும்.

    காலை 5 மணிக்கு அபிஷேக ஆராதனையும், காலை 6 மணிக்கு அன்னை முத்தாரம்மன் பூஞ்சப்பரத்தில் தெரு பவனியும், பகல் 12 மணிக்கு அன்னதானமும், மாலை 4 மணிக்கு அம்மன் கோவில் வந்து சேர்ந்தவுடன் கொடி இறக்கப்பட்டு மாலை 4.30 மணிக்கு காப்பு களைதல் நடக்கிறது. நள்ளிரவு 12 மணிக்கு சேர்க்கை அபிஷேகம் நடக்கிறது. 

    • நேற்று காலை அம்மனுக்கு காப்பு கட்டுதல் நடந்தது.
    • பக்தர்கள் வேடங்களை அணிந்து அம்மனுக்கு காணிக்கை வசூலிப்பார்கள்.

    மைசூருக்கு அடுத்தப்படியாக தசரா திருவிழா, குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் வெகுவிமரிசையாக கொண்டாடப்படும்.

    இந்தாண்டுக்கான தசரா திருவிழா, இன்று (வியாழக்கிழமை) காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி நேற்று காலை 11 மணிக்கு காளி பூஜை, மதியம் 12 மணிக்கு அன்னதானம், மாலை 5 மணிக்கு சகஸ்ரநாம அர்ச்சனை, புஷ்பாஞ்சலி, இரவு 9 மணிக்கு அம்மனுக்கு காப்பு கட்டுதல் நடந்தது. இதில் பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

    இன்று அதிகாலை 5 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட யானையில் கொடிப்பட்டம் ஊர்வலம், முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து காலை 9.30 மணிக்கு வேத மந்திரங்கள் முழங்க கோயில் கொடிமரத்தில் கொடியேற்றம் நடக்கிறது.

    விழா நாள்களில் தினமும் காலை முதல் இரவு வரை அம்மன் மற்றும் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். தினமும் இரவு 10 மணிக்கு அம்மன் பல்வேறு வாகனங்களில் பல்வேறு திருக்கோலங்களில் எழுந்தருளி திருவீதியுலா வந்து அருள்பாலிப்பார்.

    கொடியேற்றத்தைத் தொடர்ந்து காப்பு அணியும் பக்தர்கள், தசரா குழுவினர் பல்வேறு வேடங்களை அணிந்து வீதிகள் தோறும் கலைநிகழ்ச்சிகள் நடத்தி அம்மனுக்கு காணிக்கை வசூலிப்பார்கள்.

    சிகர நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம் வரும் 12ம் தேதி நள்ளிரவு நடக்கிறது. இதையொட்டி அன்று இரவு 11 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையைத் தொடர்ந்து கடற்கரை சிதம்பரேஸ்வரர் கோயில் முன்பாக சிம்ம வாகனத்தில் எழுந்தருளும் அம்மன், பல்வேறு வேடங்களில் வலம் வரும் மகிசாசூரனை வதம் செய்வார். கடற்கரை மேடை, சிதம்பரேஸ்வரர் திருக்கோயில் அபிஷேக மேடை, கோயில் கலையரங்கில் எழுந்தருளும் அம்மனுக்கு பல்வேறு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.

    அக்.13ம் தேதி காலையில் பூஞ்சப்பரத்தில் எழுந்தருளும் அம்மன் திருவீதியுலா புறப்பட்டு மாலையில் கோயிலை வந்தடைந்தவுடன் காப்பு களைதல் வைபவம் நடைபெறும்.

    • கோவில் முன்பும், கடற்கரையிலும் கூட்டம் அலை மோதியது.
    • 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தருவார்கள்.

    உடன்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே உள்ள குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா வருகிற 3-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    13 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் உலகம் முழுவதும் இருந்து சுமார் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தருவார்கள்.

    இத்திருவிழாவில் பக்தர்கள் வேடம் அணியும் முன் கோவிலுக்கு வந்து கடலில் நீராடி பூசாரி கையினால் மாலை அணிந்து விரதம் தொடங்குவார்கள்.

    இன்று விடுமுறை நாள் என்பதால் அதிகாலையிலே பக்தர்கள் பல்வேறு வாகனங்களில் வந்து குவிந்தனர். கோவில் முன்பும், கடற்கரையிலும் கூட்டம் அலை மோதியது.

    விரதம் தொடங்கும் பக்தர்கள் கோவிலில் கொடியேறியதும் கோவிலில் வழங்கும் மஞ்சள் கயிற்றினால் ஆன காப்புவை வாங்கி வலது கையில் கட்டி தங்களுக்கு பிடித்தமான வேடம் அணிந்து ஊர் ஊராக சென்று அம்மன் பெயரில் காணிக்கை பிரித்து 10-ம் திருநாள் அன்று கோவிலில் சேர்ப்பார்கள்.

    மேலும் ஊர் பெயரில் தசரா குழு அமைத்து சுமார் 1000-க்கும் மேற்பட்ட தசரா குழுவினர் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் ஊர் ஊராக சென்று கலை நிகழ்ச்சிகள் நடத்தி காணிக்கை வசூல் செய்வது மேலும் சிறப்பாகும்.

    • தசராத்திருவிழா அக்டோபர் 3-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    • சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் அக்டோபர் 12-ந் தேதி.

    நெல்லை:

    தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் நடைபெறும் தசரா திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது.

    இங்கு ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் நடைபெறும் தசரா திருவிழா இந்தியாவில் மைசூருக்கு அடுத்து மிகவும் புகழ்பெற்றது. இந்த திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    இந்த திருவிழாவை காண வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்தும் சென்னை, கோவை, கன்னியாகுமரி, நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் காளி, அம்மன், சிவன், கிருஷ்ணா், முருகன், விநாயகர் போன்ற சாமி வேடங்கள் மற்றும் குறவன், குறத்தி, போலீஸ், குரங்கு, கரடி, சிங்கம், புலி போன்ற வேடங்கள் அணிவார்கள்

    குலசேகரன்பட்டினம் கோவிலை பொறுத்தவரை 90 நாள், 48 நாள், 31 நாள், 12 நாள், 10 நாள் என பல்வேறு நாட்கள் விரதத்தை கடை பிடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

    இந்த நிலையில் இந்த ஆண்டிற்கான திருவிழாவை முன்னிட்டு 48 நாட்கள் மாலை அணிந்து விரதம் இருக்கும் பக்தர்கள் குலசேகரப்பட்டினம் கடலில் புனித நீராடி, சிவப்பு ஆடை அணிந்து, துளசி மாலையுடன் கோவிலுக்கு வந்து கோவில் அர்ச்சகர் கையால் மாலை அணிந்து விரதம் இருக்க தொடங்கி உள்ளனர்.

    சிறப்பு வாய்ந்த குலசேகரப்பட்டினம் தசராத்திருவிழா வருகிற அக்டோபர் 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக சூரசம்ஹாரம் அக்டோபர் 12-ந் தேதி குலசேகரன்பட்டினம் கடற்கரையில் நடைபெறுகிறது. அன்றைய தினம் கடற்கரை பகுதியில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து அம்மனை தரிசனம் செய்வார்கள்.

    இதற்கிடையே, தசரா திருவிழாவில் கலந்து கொள்ளும் பக்தர்கள் வசதிக்காக குலசேகரன்பட்டி னம் புறவழிச் சாலை, உடன்குடி சாலை, மணப்பாடு சாலை, திருச்செந்தூர் செல்லும் சாலை ஆகிய பகுதிகளில் உள்ள 250 ஏக்கர் இடங்களில் வாகனங்களை நிறுத்துவதற்கு அப்பகுதியில் உள்ள முட்செடிகளை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றி, மேடு, பள்ளங்களை சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

    மேலும் பக்தர்கள் வாகனம் நிறுத்தும் 20 இடங்களில் 150-க்கும் மேற்பட்ட உயர் மின் கோபுர விளக்குகள் பொருத்தப்பட உள்ளது. இந்த வாகன நிறுத்தும் இடங்களில் தற்காலிக நடமாடும் சுகாதார வளாகங்களும் அமைக்கப்பட உள்ளது.

    • மின்னொளியில் 11 சப்பரங்கள் நள்ளிரவு 8 ரத வீதிகளிலும் வலம் வந்தன.
    • விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று அதிகாலையில் நடைபெற்றது.

    நெல்லை:

    நெல்லை பாளையங்கோட்டையில் நடைபெறும் தசரா திருவிழா குலசேகரன்பட்டினம் தசராவுக்கு அடுத்து தென் மாவட்டங்களில் பிரசித்தி பெற்றது. இங்கு 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்களுடன் மிக விமரிசையாக நடைபெறும்.

    இந்த ஆண்டு தசரா விழா கடந்த 14-ந்தேதி பாளை ஆயிரத்தம்மன் கோவிலில் கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடா்ந்து பாளையில் அமைந்துள்ள தூத்துவாரி அம்மன், வடக்கு, தெற்கு முத்தாரம்மன், பேராத்து செல்வி அம்மன் உள்ளிட்ட 11 கோவில்களிலும் திரு விழா தொடங்கியது.

    10 நாட்கள் நடைபெற்ற நவராத்திாி தசரா திருவிழாவில் தினமும் பல்வேறு அலங்காரங்களில் அம்மன் கொலு வீற்றிருக்கும் வைபவம் நடைபெற்றது. 10-ம் திருநாளான விஜயதசமியையொட்டி இரவு அம்மன் கோவில்களில் இருந்து சிம்ம வாகனத்தில் போா்க்கோலம் புரிந்து வண்ண மின்னொளியில் 11 சப்பரங்கள் நள்ளிரவு 8 ரத வீதிகளிலும் வலம் வந்தன. இதன் காரணமாக பாளை பகுதி முழுவதும் விழா கோலமாக இருந்தது.

    தொடர்ந்து 11 சப்பரங்க ளும் வீதி உலா வந்த பின்னர் எருமைக்கிடா மைதானத்தில் நள்ளிரவில் அணிவகுத்து நின்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று அதிகாலையில் நடைபெற்றது. தொடர்ந்து ஆயிரத்தம்மன் மகிஷா சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரி சனம் செய்தனர். முன்னதாக நேற்று இரவு முதல் பாளை சமாதானபுரம் பகுதியில் இருந்து வாகனங்கள் ஒருவழிப் பாதையில் செல்ல அனுமதிக்கப்படாமல் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டது.

    • நெல்லையில் தசரா விழாவுக்கு பிரசித்தி பெற்ற பாளையங்கோட்டை ஆயிரத்தம்மன் கோவிலில் தசரா திருவிழா கடந்த 14-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • நேற்று தசரா திருவிழா நடந்தது. இதையொட்டி 11 அம்மன் கோவில்களிலும் அம்மன்களுக்கு துர்கா ஹோமமும், யாக சாலை பூஜையும் நடந்தது.

    நெல்லை:

    நெல்லையில் தசரா விழாவுக்கு பிரசித்தி பெற்ற பாளையங்கோட்டை ஆயிரத்தம்மன் கோவிலில் தசரா திருவிழா கடந்த 14-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதேபோல் பாளையங்கோட்டையில் உள்ள பேராச்சி அம்மன், தூத்துவாரி அம்மன், தெற்கு முத்தாரம்மன், வடக்கு முத்தாரம்மன், யாதவ உச்சிமாகாளி, விசுவகர்ம உச்சிமாகாளி, வடக்கு உச்சிமாகாளி, முப்பிடாதி அம்மன், புதுப்பேட்டை தெரு உலகம்மன் கோவில், புது உலகம்மன் கோவில் ஆகிய அம்மன் கோவில்களிலும் தசரா விழா துர்கா பூஜையுடன் தொடங்கியது. பின்னர் விழா நாட்களில் தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும், சிறப்பு பூஜையும் நடந்தது.

    நேற்று தசரா திருவிழா நடந்தது. இதையொட்டி 11 அம்மன் கோவில்களிலும் அம்மன்களுக்கு துர்கா ஹோமமும், யாக சாலை பூஜையும் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. இரவில் தாமிரபரணி ஆற்றில் இருந்து கிரகம் எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து அம்மன்களுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும், சிறப்பு பூஜையும் நடைபெற்றது. 11 அம்மன் கோவில் சப்பரங்களும் பாளையங்கோட்டையில் உள்ள தெருக்களில் பவனி வந்தன.

    இன்று நள்ளிரவில் சூரசம்ஹாரம்

    இன்று காலை 8 மணிக்கு 11 சப்பரங்களும் பாளையங்கோட்டை ராமசாமி கோவில் திடலில் அணிவகுத்து நின்றன. அப்போது ஏராளமான பக்தர்கள் தேங்காய் உடைத்து சுவாமி தரிசனம் செய்தனர். மதியம் 1 மணிக்கு ராஜகோபாலசாமி கோவில் முன்பு அணிவகுத்தன. இரவு 7 மணிக்கு மார்க்கெட் பகுதியில் நிற்கின்றன. இரவு 12 மணிக்கு போலீஸ் கட்டுப்பாட்டு அறை அருகே உள்ள மாரியம்மன் கோவில் முன்பு 11 அம்மன்களும் அணிவகுத்து நிற்க சூரசம்ஹாரம் நடக்கிறது.

    இதேபோல் நெல்லை டவுனில் புட்டாபுரத்தி அம்மன், முத்தாரம்மன், உச்சிமாகாளியம்மன், முப்பிடாதி அம்மன், வாகையடி அம்மன், திரிபுரசுந்தரி அம்மன், துர்க்கை அம்மன், தங்கம்மன், மாரியம்மன், சாலியர் தெரு மாரியம்மன் உள்ளிட்ட 36 அம்மன் கோவில்களில் நேற்று தசரா திருவிழா நடந்தது. இதையொட்டி காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும், இரவில் சப்பரத்தில் அம்மன் வீதி உலாவும் நடந்தது.

    தச்சநல்லூர்

    இதேபோல் தச்சநல்லூரில் இன்று இரவு சந்திமறித்தம்மன், தேனீர்குளம் எக்காளதேவி அம்மன், வாலாஜபேட்டை முத்துமாரியம்மன், தளவாய்புரம் துர்க்கை அம்மன், உச்சினிமகாளியம்மன், உலகம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் இருந்து சப்பரங்கள் அணிவகுத்து நாளை மதியம் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறும். 

    • திரளான பக்தர்கள் திரண்டு வந்து தரிசனம்
    • ஐம்பொன் உற்சவ சிலையை கோயிலுக்கு எடுத்து வந்து வழிபாடு

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் முது மலை புலிகள் காப்பகம் அடுத்த மசினகுடியில் மசினியம்மன் கோவில் உள்ளது. இது மிகவும் புராதன தலம் ஆகும்.

    இஸ்லாமியர் ஆட்சிக்காலத்தில் மைசூருவைச் சேர்ந்த வியாபாரிகள் சிலர், திப்புவின் அராஜகம் தாங்க முடியாமல் இப்பகுதியில் குடியேறினர். அப்போது அவர்கள் தங்களின் குலதெ ய்வம் மசினி அம்மனை நேரில் சென்று வழிபட முடியாத காரணத்தால், தாங்கள் வசிக்கும் பகுதியில் மசினியம்மனுக்கு கோயில் எழுப்பினர். அங்கு அவ ர்கள் அம்மனை சிறப்பாக வழிபட்டு வருகின்றனர்.

    கர்நாடக மாநிலம் மைசூருவில் ஆண்டுதோறும் தசரா திருவிழா கோலா கலமாக கொண்டாட ப்படும். அப்போது மசினியம்மன் கோவிலிலும் தசரா பண்டிகை நடக்கும்.

    மசினக்குடி அம்மன் கோவி லில் தற்போது தசரா கொலு பண்டிகை சீரும் சிறப்புமாக கொண்டா டப்பட்டு வருகிறது. கோவில் கருவறையில் 4 அடி உயரம், 2 அடி அகலம் உடைய அம்மன் சிலை உள்ளது.

    மேலும் தொட்டம்மன், மசினியம்மனின் சகோதரிகளான மாயார் சிக்கம்மன், பொக்காபுரம் மாரி யம்மன், சிறியூர் மாரி யம்மன், ஆணிகல் மாரிய ம்மன், சொக்கனல்லி மாரிய ம்மன், தண்டு மாரியம்மன் ஆகிய 6 சிலைகள், கருவறை யைச் சுற்றி அமைக்கப்பட்டு உள்ளது.

    அங்கு ஞாயிறு, செவ்வாய், வெள்ளி மற்றும் அமாவாசை ஆகிய நாட்களில் கோயிலில் நடை திறக்கப்பட்டு பூஜை நடக்கிறது. மேலும் ஞாயிறு மட்டும் பூசாரியின் பாதுகாப்பில் கோவில் வளாகம் இருக்கும். அப்போது ஐம்பொன் உற்சவர் அம்மன் சிலை கோயிலுக்கு எடுத்து வரப்படும். இதற்கான பூஜை நடக்கும்போது அம்மனின் தலையில் சூடியுள்ள பூக்கள் வலதுபுறம் கீழே விழுந்தால் பக்தர்களின் வேண்டு தலை நிறைவேற்ற உத்தரவு கிடைத்து விட்டது என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    மசினக்குடி அம்மன் கோவிலிலும் ஆடி அமாவாசை, தை அமாவாசை, மகாளய அமாவாசை மற்றும் மைசூரு தசரா ஆகிய நிகழ்ச்சிகள் சிறப்பாக நடத்தப்பட்டு வருகி ன்றன. அதிலும் குறிப்பாக மசினியம்மன் கோவிலில் தசரா தேர் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது.அப்போது மாயார் சிக்கம்மன் கோவில் இருந்து அம்மன் சிலையை பழங்குடி மக்கள் ஊர்வலமாக எடுத்து வந்து, மசியம்மன் கோவிலை சென்ற டைவர். தொடர்ந்து நடக்கும் திருத்தேர் முக்கிய சாலைகள் வழியாக செல்லும்.

    அன்றைய தினம் ஊட்டி சாலையில் அம்பு எய்தல் நிகழ்ச்சி நடைபெறும். தொடர்ந்து பக்தர்களின் ஆரவாரத்துடன் புறப்படும் தேர் கடைசியாக நிலையை வந்தடையும்.

    மசினகுடியில் நடந்த தசரா விழாவில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். அப்போது திரளான பக்தர்கள் திரண்டு வந்து சுவாமியை கண்குளிர கண்டு தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.

    மேலும் மசினகுடி மசினிய ம்மன் கோவிலில் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு, தசரா கொலு திருவிழா தொடங்கியது. இதற்காக மாயார் சிக்க ம்மன் கோவிலில் இருந்து சிக்கம்மனை பழ ங்குடி மக்கள் ஊர்வ லமாக, மசினியம்மன் கோவிலுக்கு அழைத்து வந்தனர்.தொடர்ந்து மசினியம்மன், சிக்கம்மன் சிறப்பு அலங்கா ரத்துடன் கொலு வைத்து, தசரா விழா தொட ங்கியது.

    கடைசி நாளான நேற்று நடந்த விழாவில் மசினி யம்மன் சிக்கம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தொடர்ந்து மாலை வரை சிறப்பு பூஜைகள் நடந்தது.

    • ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா பிரசித்தி பெற்றது.
    • தசரா திருவிழா கடந்த 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    தூத்துக்குடி:

    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) சூரசம்ஹாரம் நடக்கிறது. இதையொட்டி வேடம் அணிந்த பக்தர்கள் ஊர் ஊராக சென்று காணிக்கை வசூலிக்கின்றனர். இதனால் தென்மாவட்டங்களில் தசரா திருவிழா களைகட்டியது.

    தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா பிரசித்தி பெற்றது. இந்தியாவில் கர்நாடக மாநிலம் மைசூருக்கு அடுத்தபடியாக இங்குதான் தசரா திருவிழா விமரிசையாக கொண்டாடப்படும். கோவிலில் இந்த ஆண்டு தசரா திருவிழா கடந்த 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    தொடர்ந்து பல்வேறு நாட்கள் விரதம் இருந்த பக்தர்கள் தங்களது வலது கையில் மஞ்சள் கயிற்றாலான காப்பு அணிந்தனர். ஒவ்வொரு ஊரிலும் விரதம் இருக்கும் பக்தர்கள், அங்குள்ள கோவில் வளாகத்தில் தசரா பிறை அமைத்து தங்கியிருந்து ஒருவேளை மட்டும் பச்சரிசி உணவு உண்டு அம்மனை வழிபடுகின்றனர்.

    விரதம் இருந்து காப்பு அணிந்த பக்தர்கள் நேர்த்திக்கடனாக சிவன், பிரம்மன், விஷ்ணு, விநாயகர், முருகபெருமான், ராமர், லட்சுமணர், நாராயணர், கிருஷ்ணர், காளி, அனுமார் உள்ளிட்ட பல்வேறு சுவாமி வேடங்களையும், அரசன், குறவன், கரடி, கிளி உள்ளிட்ட வேடங்களையும் அணிந்து, ஊர் ஊராக சென்று காணிக்கை வசூலிக்கின்றனர். ஒவ்வொரு ஊரிலும் விரதம் இருக்கும் தசரா பக்தர்கள் குழுக்களாக வாகனங்களில் பல்வேறு ஊர்களுக்கும் சென்று காணிக்கை வசூலிக்கின்றனர்.

    அப்போது கரகாட்டம், சிலம்பாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளையும், மேற்கத்திய நடனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளையும் நடத்துகின்றனர். இதனால் தூத்துக்குடி, நெல்லை, தென்காசி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் தசரா திருவிழா களைகட்டியது.

    தசரா திருவிழாவையொட்டி, குலசேகரன்பட்டினம் கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் நின்று அம்மனை வழிபடுகின்றனர். விழா நாட்களில் தினமும் காலை முதல் இரவு வரையிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.

    ஒவ்வொரு நாள் இரவிலும் அம்மன் வெவ்வேறு வாகனத்தில் பல்வேறு திருக்கோலத்தில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். 10-ம் நாளான வருகிற 24-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) இரவு 12 மணியளவில் கடற்கரையில் மகிஷாசூரனை அம்மன் வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசிப்பார்கள்.

    ×