என் மலர்
நீங்கள் தேடியது "Edappadi Palaniswamy"
- கேரளா கழிவுகள் தமிழ்நாட்டிற்குள் நுழைவது பெருமளவு தடுக்கப்பட்டு வருகிறது.
- கேரளா எல்லைப்பகுதிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
கேரளா மாநில மருத்துவக் கழிவுகள் மற்றும் இறைச்சிக் கழிவுகள் தமிழக மாவட்டங்களில் கொட்டப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சமீபத்தில் நெல்லை மாவட்டத்தை ஒட்டிய கிராமங்களில் கேரள கழிவுகள் கொட்டப்பட்டன.
இந்த விவகாரம் பூதாகாரமாக வெடித்த நிலையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தமிழக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருந்தார். இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில், தமிழ்நாடு நிதித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், "கடந்த பத்தாண்டுகால அடிமை அதிமுக ஆட்சியில் தான், கோவை, தேனி , திருநெல்வேலி, விருதுநகர் உள்ளிட்ட தமிழ்நாடு கேரளா எல்லையோர பகுதிகளில், கேரளாவில் இருந்து சட்டவிரோதமாக கழிவுகளை கொண்டுவந்து கொட்டி தமிழ்நாடே கேரளாவின் குப்பைத்தொட்டியாகி கிடந்தது. 2016 ஆம் ஆண்டு "மருத்துவக் கழிவுகள் அபாயம்: இன்னும் விழித்துக்கொள்ளாத தமிழகம்!" என்று விகடன் தனி கட்டுரையே வெளியிட்டது. 2019 ஆம் ஆண்டில் விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகே உள்ள இனாம் கரிசல்குளம் கிராமத்தில் கேரளாவில் இருந்து குப்பைகளை லாரி லாரியாக கொண்டுவந்து கொட்டிய லாரிகளை மக்களே சிறைபிடித்த நிகழ்வு என பல்வேறு உதாரணங்களை எடுத்துக்கூற முடியும்.
மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி அமைந்தவுடனே தமிழ்நாடு - கேரளா எல்லை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு கேரளா கழிவுகள் தமிழ்நாட்டிற்குள் நுழைவது பெருமளவு தடுக்கப்பட்டு வருகிறது. கழிவுகளை கொட்டுவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எதிர்பாரா விதமாக நடக்கும் ஓரிரு நிகழ்வுகள் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு சம்மந்தப்பட்ட குற்றவாளிகள் சட்டப்படி தண்டிக்கப்பட்டு வருகின்றனர்.
சமீபத்தில் திருநெல்வேலி மாவட்டத்தின் கல்லூர் பகுதிகளில் சட்டவிரோதமாக கேரளாவில் இருந்து கழிவுகள் கொண்டுவந்து கொட்டப்படுகிறது என புகார் வந்தவுடன் விரைந்து நடவடிக்கை எடுத்ததன் பேரில், கழிவுகளை கொட்டிய சுத்தமல்லி கிராமத்தை சேர்ந்த மனோகரன், மாயாண்டி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் கேரள மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறும் கேரள மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு இதுகுறித்து உத்தரவுகளைப் பிறப்பிக்குமாறும் ஒன்றிய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
மாண்புமிகு முதலமைச்சர் உத்தரவின் பேரில் தமிழ்நாடு - கேரளா எல்லைப்பகுதிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்பதுபோல் எதிலாவது அரசியல் செய்து பேர் எடுக்கத் துடித்துக் கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி," என்று குறிப்பிட்டுள்ளார்.
- சென்னை, கீழ்பாக்கம், சி.எஸ்.ஐ. லைட் ஆடிட்டோரியத்தில் கிறிஸ்துமஸ் பெருவிழா நடக்கிறது.
- கிறிஸ்தவப் பெருமக்களை கவுரவிக்கும் விதமாக, கழகத்தின் சார்பில் நடைபெறுகிறது.
சென்னை:
அ.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
அ.தி.மு.க. சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு அரணாக என்றென்றும் விளங்கி வருகிறது. புரட்சித் தலைவி அம்மா கிறிஸ்தவப் பெருமக்களை கவுரவிக்கும் விதமாக, கழகத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் பெருவிழா நிகழ்ச்சியை நடத்தி வந்துள்ளார்.
அம்மாவைத் தொடர்ந்து கழகத்தின் சார்பில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் கிறிஸ்துமஸ் பெருவிழா நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்தி வருகின்றார்.
அந்த வகையில் இந்த ஆண்டு வருகிற 21-ந்தேதி (சனிக்கிழமை) மாலை 4.30 மணியளவில், சென்னை, கீழ்பாக்கம், சி.எஸ்.ஐ. லைட் ஆடிட்டோரியத்தில் கிறிஸ்துமஸ் பெருவிழா நிகழ்ச்சியை நடத்த உள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் கிறிஸ்தவ பேராயர்கள், ஆயர்கள், போதகர்கள் மற்றும் கிறிஸ்தவப் பெருமக்களும், தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோரும் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- நல்லாட்சி வழங்கிவரும் திராவிட மாடல் ஆட்சியின்மீது சில கண்டன தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது.
- அ.தி.மு.க.வின் கட்டுக்கதை அறிக்கைகளை மக்கள் நம்பப் போவதில்லை என தெரிவித்தார்.
சென்னை:
தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ள அறிக்கை:
அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழுவில் முதலமைச்சர் தலைமையிலே நல்லாட்சி வழங்கிவரும் திராவிட மாடல் ஆட்சியின் மீது சில கண்டனத் தீர்மானங்களை நிறைவேற்றி அதன்மூலம் களங்கம் சுமத்திடலாம் என கற்பனைக் கோட்டை கட்டியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி
தி.மு.க. அரசுமீது எதைச் சொல்லி பழி போடுவது என தெரியாமல் இட்டுக்கட்டிய பொய்களை எழுதி நிரப்பி கண்டனத் தீர்மானம் என கதை கட்டியிருக்கிறார் 'கட்டுக்கதை' பழனிசாமி.
ஃபெஞ்சல் புயலால் எதிர்பார்க்காத அளவு அதி கனமழை பெய்தபோதும் முதலமைச்சரின் உத்தரவின் பேரில் எடுக்கப்பட்ட முன் எச்சரிக்கை நடவடிக்கைகளால் தமிழ்நாட்டு மக்களுக்கு பெரும் சேதம் ஏற்படாமல் தடுக்கப்பட்டது.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு, சாத்தான்குளம் தந்தை மகன் கொலை, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைகள் என கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்கள் பசிபிக் கடலளவு பெருகிக் கிடந்த அலங்கோல ஆட்சி நடத்திய பழனிசாமி தற்போது குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கி மக்களைக் காத்துவரும் திராவிட மாடல் ஆட்சிமீது சுண்டுவிரலை நீட்டிக்கூட பேச தகுதியில்லை.
டங்ஸ்டன் சுரங்கத்துக்கான அனுமதியைக் கொடுக்க காரணமே அடிமை அ.தி.மு.க. ஆட்சிதான். 2019-ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் மதுரை மேலூர் பகுதியில் இரவோடு இரவாக நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில்தான் அங்கு டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க ஒன்றிய அரசு முடிவு செய்து ஏலம் விட்டுள்ளது.
தனது ஆட்சிக்காலத்தில் சிறையில் வாடும் இஸ்லாமிய மக்களை விடுவிக்க சிறு துரும்பை கூட கிள்ளிப்போடாத பழனிசாமி தற்போது யோக்கியன் நாடகம் போட்டால் மக்கள் ஏமார்ந்து விடுவார்களா என்ன?
தற்போதும் கூட மறைமுகமாக மதவாத பாஜகவோடு கள்ள உறவில் கைகோத்து இருக்கும் பழனிசாமி, ஒன்றிய அரசின் மக்கள் விரோத செயலை கண்டித்து ஒரு வார்த்தை கூட உச்சரிக்கவில்லை; தீர்மானங்களில் கூட பாஜகவுக்கு வலிக்காத வகையில் வலியுறுத்தல் தான். ஆனால் சிறப்பாகச் செயல்பட்டுவரும் தமிழ்நாடு அரசுக்குக் கண்டனமாம்.
இப்படி கபட வேடம் பூண்டிருக்கும் பழனிசாமி என்றுமே சிறுபான்மை மக்களின் அரணாக நிற்கும் திராவிட மாடல் ஆட்சியை குறை கூறினால் மக்கள் நம்பிவிடுவார்களா என்ன?
தமிழ்நாட்டு மக்களின் நலனே முக்கியம் என முதலமைச்சரின் தலைமையிலே சிறப்பாக நடந்துவரும் திராவிட மாடல் ஆட்சிமீது அள்ளிவிடும் அ.தி.மு.க.வின் கண்துடைப்பு கண்டனக் கதைகளைத் தமிழ்நாட்டு மக்கள் துளியும் நம்பப்போவதில்லை; கட்டுக்கதை பழனிசாமியின் துரோகத்தையும் மறக்கப்போவது இல்லை என தெரிவித்துள்ளார்.
- அரியலூர் மாவட்டம் அ.தி.மு.க.வின் கோட்டையாகும்.
- அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் எண்ணற்ற திட்டங்கள் கொண்டுவரப்பட்டன.
அரியலூர்:
அரியலூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும் முன்னாள் அரசு கொறடாவுமான தாமரை எஸ்.ராஜேந்திரன் இல்ல திருமண விழா இன்று அரியலூரில் நடந்தது.
இதில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தி பேசியதாவது:-
அரியலூர் மாவட்டம் அ.தி.மு.க.வின் கோட்டையாகும். நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் கூட அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிகளில் அதிக வாக்குகளை அ.தி.மு.க. பெற்றது.
அதற்குக் காரணமான அரியலூர் மாவட்ட செயலாளர் தாமரை ராஜேந்திரனை மனதார பாராட்டுகிறேன். அவரது இல்ல திருமண விழாவில் கலந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் அரியலூர் மக்களுக்கு சாலை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது. கடந்த ஆட்சியில் மழையின் காரணமாக மக்காச்சோள பயிர்கள் பாதிக்கப்பட்டது. அப்போது விவசாயிகள் தங்களுக்கு இழப்பீடு வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
உடனடியாக அ.தி.மு.க. அரசு ரூ.156 கோடி விவசாயிகளுக்கு இழப்பீடாக வழங்கியது. அடுத்த ஆண்டு மக்காச்சோள பயிர்கள் பாதிக்கப்பட்ட போது தமிழகம் முழுவதும் பூச்சிக்கொல்லி மருந்து ரூ. 45 கோடியில் வாங்கப்பட்டு எங்கெல்லாம் பயிர்கள் பாதிக்கப்பட்டதோ அங்கெல்லாம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.
எந்த ஆட்சியிலும் இல்லாத வகையில் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகம் முழுவதும் 11 அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டது. அதில் அரியலூருக்கும் ஒரு கல்லூரி வழங்கப்பட்டது. ஜெயலலிதா ஆட்சி காலத்தில் கல்வித்துறையில் புரட்சி நடந்தது.
வேளாண்மை கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், கால்நடை மருத்துவக் கல்லூரிகள் கால்நடை ஆராய்ச்சி மையம் போன்றவைகள் அமைக்கப்பட்டது. ஜெயங்கொண்டம் தொகுதியில் ஒரு அரசு கலைக் கல்லூரி தொடங்கப்பட்டது.
மேலும் அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் பல்வேறு எண்ணற்ற திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. இதனால் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்ந்தது.
ஆனால் தற்போது பொய்யான வாக்குறுதிகள் அளித்து ஆட்சிக்கு வந்துள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் தமிழகத்தில் எந்த திட்டமும் நிறைவேற்றப்படவில்லை என பொய்யான பிரசாரம் செய்து வருகிறார். இது மிகவும் கண்டனத்துக்குரியது. தமிழகத்தில் மீண்டும் அம்மாவின் நல்லாட்சி அமைய நீங்கள் எலலாம் நல்ல ஆதரவு தர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- எடப்பாடி பழனிசாமி தி.மு.க. ஆட்சியின் அவலங்களை எடுத்துக் கூறி வருகிறார்.
- கூட்டணிக்கு வருபவர்கள் ரூ. 100 கோடி கொடுங்க என்று கேட்கின்றனர்.
திருச்சி மாவட்ட அ.தி.மு.க. கள ஆய்வு கூட்டம் இன்று காலை நடைபெற்றது. திருச்சி மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, கோகுல இந்திரா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், "பல முனைகளில் இருந்து அ.தி.மு.க.-வை தாக்கி வருகிறார்கள். தனி ஒரு மனிதனாக எடப்பாடி பழனிசாமி தி.மு.க. ஆட்சியின் அவலங்களை எடுத்துக் கூறி வருகிறார்."
"அ.தி.மு.க. கட்சியின் சில மாவட்டங்களில் கோஷ்டி பூசல்கள் உள்ளன. அதனை முதலில் சரி செய்ய வேண்டும். ஆபரேஷன் செய்தால் மட்டும் தான் மருத்துவம் பலிக்கும் என்ற நிலை உள்ளது. கூட்டணிக்கு வருபவர்கள் 20 சீட் கொடுங்க, ரூ. 50 அல்லது ரூ. 100 கோடி கொடுங்க என்று கேட்கின்றனர்."
"கூட்டணி குறித்து நான் பார்த்துக் கொள்கிறேன் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துவிட்டார். கூட்டணி குறித்து நீங்கள் பேட்டி கொடுத்து அதை கெடுத்துவிட வேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தி.மு.க. கூட்டணிக்கு செல்பவர்கள் ஜெயிக்க முடியாது. எடப்பாடி பழனிசாமி தான் ஜெயிப்பார்," என்று கூறினார்.
- தளவாய் சுந்தரத்திற்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது.
- நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கு தளவாய்சுந்தரம் வருத்தம்.
தளவாய் சுந்தரத்திற்கு மீண்டும் மாவட்ட செயலாளர் பொறுப்பை வழங்கியது அ.தி.மு.க. தலைமை. கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக தளவாய் சுந்தரத்திற்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது.
முன்னதாக ஆர்.எஸ்.எஸ். பேரணியை தொடங்கி வைத்து அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்காக அ.தி.மு.க. கட்சியில் இருந்து தளவாய்சுந்தரம் நீக்கப்பட்டு இருந்தார். மேலும், நிகழ்ச்சியில் கலந்து கொண்டது தொடர்பாக அவர் விளக்கம் அளிக்கவும் அ.தி.மு.க. தலைமை உத்தரவிட்டுருந்தது.
இந்த நிலையில், நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கு தளவாய்சுந்தரம் வருத்தம் தெரிவித்து, அதற்கான விளக்கத்தையும் அளித்துள்ளார் என்று அ.தி.மு.க. தெரிவித்துள்ளது. இதுதவிர இன்று முதல் அவர் அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட கழக செயலாளர் பொறுப்பில் நியமிக்கப்படுவதாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
- கட்சிப் பணிகளை விரைவுபடுத்த "கள ஆய்வுக் குழுவினர்" நியமித்து எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
- கள ஆய்வு செய்து, அதன் விபரங்களை 7.12.2024-க்குள் அறிக்கையாக சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
அதிமுக கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கிளை, வார்டு, வட்டம் வாரியாக கள ஆய்வு செய்து, கட்சி பணிகளை விரைவுப்படுத்துவதற்காக 'கள ஆய்வுக் குழுவினர்' நியமனம் செய்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கிளை, வார்டு, வட்டக் கழகங்கள் மற்றும் சார்பு அமைப்புகளின் பணிகள், செயல்பாடுகள் குறித்து நேரடியாக கள ஆய்வு செய்து, அவற்றின் பணிகளை மேம்படுத்துவது குறித்தான கருத்துகளைப் பெற்றிடவும். புதுப்பிக்கப்பட்ட கழக உறுப்பினர் உரிமைச் சீட்டுகள் முழுமையாக கழக உறுப்பினர்கள் அனைவரிடமும் சென்றடைந்ததா என்பதை உறுதி செய்தும், அதன் விபரங்களை அறிக்கையாக அளிப்பதற்காக, கழகத்தின் சார்பில் 'கள ஆய்வுக் குழு' கீழ்க்கண்டவாறு அமைக்கப்படுகிறது.
முன்னாள் அமைச்சர்களான கே.பி. முனுசாமி, திண்டுக்கல் C. சீனிவாசன், நத்தம் இரா. விசுவநாதன், தங்கமணி, எஸ்.பி. வேலுமணி, ஜெயக்குமார், சி.வி. சண்முகம், செ. செம்மலை, பா. வளர்மதி, வரகூர் அ. அருணாசலம்.
மேற்கண்ட குழுவினர், கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் அனைத்து மாவட்டங்களுக்கும் நேரில் சென்று கள ஆய்வு செய்து, அதன் விபரங்களை 7.12.2024-க்குள் அறிக்கையாக சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் 'புரட்சித் தமிழர்' திரு. @EPSTamilNadu அவர்களின் முக்கிய அறிவிப்பு. pic.twitter.com/feVhScD9x3
— AIADMK - Say No To Drugs & DMK (@AIADMKOfficial) November 7, 2024
- மான நஷ்ட ஈடாக வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- எடப்பாடி பழனிசாமி தரப்பில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது.
கொடநாடு கொலை வழக்கில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தொடர்பு படுத்தி பேசக்கூடாது என உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், கொடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி பேசிய தனபால், ரூ. 1 கோடியே 10 லட்சம் ரூபாயை மான நஷ்ட ஈடாக வழங்கவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு, சாலை விபத்தில் உயிரிழந்தவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ். இவரின் சகோதரர் தனபால் கொடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோரை குற்றம்சாட்டி பேட்டி அளித்து வந்தார்.
இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இது தொடர்பான மனுவில், கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி பேச தனபாலுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் இதுவரை அவதூறாக பேசி வந்த தனபால் ரூ. 1 கோடியே 10 லட்சத்தை மான நஷ்ட ஈடாக வழங்க உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்ற நிலையில், சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கு விசாரணை இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி பேச தனபாலுக்கு தடை விதித்து, 1 கோடியே 10 லட்சம் ரூபாயை எடப்பாடி பழனிசாமிக்கு மான நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
- அண்ணாமலை தான் காரணம் என்று இன்றளவும் கூறப்பட்டு வருகிறது.
- பாஜக கட்சி கூட்டணியை முறித்துக் கொள்வதாக அறிவித்தது.
பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை கடந்த 2021 ஆம் ஆண்டு பதவியேற்றார். இவர் மாநில தலைவராக பொறுப்பேற்றதில் இருந்து, தமிழக பாஜக-வில் ஏராளமான மாற்றங்கள் அரங்கேறின. கூடவே ஏராளமான சர்ச்சைகளும் உருவாகின.
மிகக் குறுகிய காலக்கட்டத்தில் கட்சியின் மாநில தலைவர் பொறுப்பேற்ற காரணத்தால் உட்கட்சியிலேயே அண்ணாமலை சில சிக்கல்கள் மற்றும் சவால்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை இருந்து வந்தது, தற்போது இது ஓரளவுக்கு குறைந்தும் இருக்கிறது.
2021 ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகித்த பாஜக பிறகு கூட்டணியில் இருந்து விலகியது. இதற்கு பாஜக தலைவர் அண்ணாமலை தான் காரணம் என்று இன்றளவும் கூறப்பட்டு வருகிறது.
இதைத் தொடர்ந்து பாஜக தலைவர் அண்ணாமலை, தனது கட்சி சார்ந்த வளர்ச்சியில் அதிக கவனம் செலுத்தி வந்தார். இடையிடையே கட்சியை உயிர்ப்புடன் வைத்திருக்க தேவை என கருதி சில கருத்துக்களையும், அண்ணாமலை தொடர்ச்சியாக கூறி வந்தார்.
தமிழக அரசியலில் பிரதான எதிர்கட்சியாக பிரதிநிதித்துவப்படுத்தும் முயற்சிகளில் பாஜக தீவிரம் காட்டியது. இதோடு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரையிலும் அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்த பாஜக கூட்டணியை முறித்துக் கொள்வதாகவும் அறிவித்தது.
இதன் விளைவாக கடந்த பாராளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணியை உருவாக்கிய அண்ணாமலை தமிழக தேர்தல் களத்தில் மூன்றாவது அணி உருவாகவும் காரணமாக இருந்தார். இதே தேர்தலில் பாஜக போட்டியிட்ட பல தொகுதிகளில் அக்கட்சிக்கு அதிக வாக்குகள் கிடைத்ததாகவும் தகவல்கள் வெளியாகின.
அதிமுக மற்றும் பாஜக இடையே கூட்டணி முறிந்த நிலையில், இருகட்சியை சேர்ந்தவர்கள் கருத்து மோதல்களில் ஈடுபட்டு வந்தனர். இருதரப்பும் மாறி மாறி குற்றம்சாட்டி வந்தன. இது ஒருக்கட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பாஜக தலைவர் அண்ணாமலை இடையிலான நேரடி மோதலாக மாறத் துவங்கியது.
அதன்படி கடந்த சில தினங்களுக்கு முன் பாஜக கூட்டத்தில் உரையாற்றிய மாநில தலைவர் அண்ணாமலை, "தவழ்ந்து காலில் விழுந்து பதவியை பிடித்த எடப்பாடி பழனிசாமிக்கு பண்பாடு மிக்க விவசாயியின் மகனை, பச்சை இங்கில் 10 ஆண்டுகாலம் கையெழுத்து போட்ட தன்னைப் பற்றி பேச எந்த அதிகாரமும் கிடையாது" என்று மிகக் கடுமையாக பேசினார்.
இதற்கு அதிமுக சார்பில் கடும் கண்டனங்கள் எழுந்தது. மேலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அண்ணாமலையை கண்டித்து ஆர்ப்பாட்டங்கள் மற்றும் உருவபொம்மை எரிப்பு என அதி.மு.க.-வினர் எதிர்ப்பை பதிவு செய்தனர். இதோடு, அதிமுக தலைவர்களும் அண்ணாமலைக்கு கண்டனம் தெரிவித்தனர்.
இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த தமிழக பாஜக முன்னாள் தலைவர் மற்றும் தெலுங்கானா மாநில முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், "மாநிலத் தலைவருக்கு கருத்து சொல்ல உரிமை உள்ளது; ஆனால் கடும் சொற்கள் கூடாது," என்று தெரிவித்தார்.
கடும் கண்டனங்கள் எழுந்ததைத் தொடர்ந்து நேற்று (ஆகஸ்ட் 27) செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்து தெரிவித்த கருத்தில் இருந்து பின்வாங்க போவதில்லை என்று உறுதியாக தெரிவித்தார். அரசியல் களத்தில் தலைவர்கள் இடையே கருத்து மோதல்கள் சாதாரண விஷயம் தான், ஆனால் தனிநபர் விமர்சனங்கள் வீண் பதற்றத்திற்கு மட்டுமே வழிவகுக்கும்.
சிலர், பாஜக தலைவர் அண்ணாமலை கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அரசியல் விமர்சகர்களில் சிலர் இதுபோன்ற கருத்துக்கள் அரசியல் களத்தில் பாஜக - அதிமுக மோதல் போக்கை உயிர்ப்புடன் வைத்திருக்கும் என்றும், எதிர்காலங்களில் இருகட்சிகளின் தேர்தல் கூட்டணிக்கு உதவும் என்றும் கருத்து தெரிவித்தனர்.
தமிழக பாஜக-வின் சமீபத்திய செயல்பாடுகள் மற்றும் அதிமுக, எடப்பாடி பழனிசாமி எதிர்ப்புக் குரல் ஆகியோவை திமுக மற்றும் பாஜக இடையே அரசியல் கூட்டணி உருவாகி வருவதை உணர்த்துவதாக பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். இதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில், திமுக மற்றும் பாஜக கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் இரு கட்சிகளின் அரசியல் கூட்டணிக்கு வாய்ப்பே இல்லை என்றும் மறுப்பு தெரிவித்தனர்.
இதனிடையே பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழக எதிர்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமியை தரக்குறைவாக பேசிய விவகாரம், 2026 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் தமிழக சட்டசபை தேர்தல் களம் வரை எதிரொலிக்கும் என்று தெரிகிறது. சமீபத்திய பாராளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி அமைத்ததை போன்று, 2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியை தவிர்த்து பாஜக தலைமையிலான கூட்டணியை வலுப்பெற வழி செய்யுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழக அரசியல் களத்தில் தலைவராக பொறுப்பேற்றதில் இருந்தே, அதிரடி முடிவுகளை தொடர்ச்சியாக எடுத்து வரும் அண்ணாமலை, 2026 தமிழக சட்டசபை தேர்தலில் திமுக - பாஜக நேரடி மோதலை உருவாக்கும் வகையில் தான் மிக கடுமையான கருத்துக்களை தெரிவித்து வருகிறார் என்றும் கூறப்படுகிறது.
அரசியல் ஆதாயம் கருதி, தனிநபர் எதிர்ப்பு கருத்து வீண் பதற்றத்தை ஏற்படுத்துவதோடு தேவையற்ற குழப்பங்களை மட்டுமே உருவாக்கும் என்பதை யாரும் மறுக்க முடியாது.
எதிர்கட்சி தலைவரை கடும் சொற்களால் வசைபாடிய அண்ணாமலை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி பயில இங்கிலாந்து புறப்பட்டு சென்றுள்ளார். மேலும், வெளிநாட்டில் இருந்தாலும் தமிழக அரசின் நடவடிக்கைகளை உற்று கவனித்து, ஆளும்கட்சிக்கு எதிரான சண்டை தொடர்வேன் என்று தெரிவித்துள்ளார்.
- அதிமுக கொடியுடன் திரண்ட தொண்டர்கள் அண்ணாமலையின் உருவபொம்மையை எரித்தனர்.
- எடப்பாடி பழனிசாமி குறித்து மிக கடுமையான கருத்துக்களை தெரிவித்தார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறு கருத்து தெரிவித்த பாஜக தலைவர் அண்ணாமலையின் உருவபொம்மை எரிப்பு. இந்த சம்பவம் காரணமாக கும்பகோணத்தில் பரபரப்பான சூழல் நிலவியது.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் உச்சி பிள்ளையார் கோவில் அருகே அண்ணாமலையின் உருவபொம்மை எரிக்கப்பட்டது. இதோடு எடப்பாடி பழனிசாமி குறித்து அண்ணாமலை தரம் தாழ்ந்து விமர்சித்ததாக கூறி போராட்டம் நடத்தப்பட்டது. அதிமுக கொடியுடன் திரண்ட தொண்டர்கள் அண்ணாமலையின் உருவபொம்மையை எரித்தனர்.
முன்னதாக தமிழக பாஜக சென்னை பெருங்கோட்டம் சார்பில், ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட அண்ணாமலை பேசும் போது, "தவழ்ந்து காலில் விழுந்து பதவியை பிடித்த எடப்பாடி பழனிசாமிக்கு பண்பாடு மிக்க விவசாயி மகனை, பச்சை இங்கில் 10 ஆண்டுகாலம் கையெழுத்து போட்ட அண்ணாமலையை பற்றி பேச எடப்பாடி பழனிசாமி என்ற தற்குறிக்கு எந்த அதிகாரமும் கிடையாது" என்று மிகக் கடுமையாக பேசினார்.
அண்ணாமலையின் இந்த கருத்துக்கு தமிழக அரசியல் களத்தில் பூதாகாரமாக வெடித்தது. அண்ணாமலை தெரிவித்த கருத்துக்களை கண்டித்து அதிமுக சார்பில் எச்சரிகை வாசகங்கள் அடங்கிய பேனர்கள் ஒட்டப்பட்டன. இதைத் தொடர்ந்து தான் அதிமுக தொண்டர்கள் சிலர் அவரது உருவபொம்மையை எரித்து போராடியுள்ளனர்.
- தேமுதிக கட்சியின் நிறுவன தலைவர் விஜயகாந்த்-க்கு இன்று 72-வது பிறந்தநாள்.
- விஜயகாந்த் பிறந்தநாளை ஒட்டி அவரது நினைவிடத்தில் பொது மக்கள் மரியாதை செலுத்தினர்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர், நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவர், தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சியின் நிறுவன தலைவரும், தமிழக சட்டப்பேரவை முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான மறைந்த கேப்டன் விஜயகாந்த்-க்கு இன்று 72-வது பிறந்தநாள்.
இதையொட்டி அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில் வாழ்த்து செய்தி பகிர்ந்துள்ளார்.
அதில், ""இயன்றதைச் செய்வோம் இல்லாதவர்க்கே" என்ற கோட்பாட்டின் வழி வாழ்ந்த மனிதநேயப் பண்பாளர், தமிழ்த் திரையுலக வரலாற்றில் தனக்கென தனித்த இடத்தைக் கொண்டவர், தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் நிறுவனத் தலைவர், மறைந்த அன்புச் சகோதரர் கேப்டன் திரு. விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளில், திரைவாழ்விலும் பொதுவாழ்விலும் அவர் நிகழ்த்திய சாதனைகளை நினைவுகூர்கிறேன்," என குறிப்பிட்டுள்ளார்.
இதோபோன்று நடிகர் சரத்குமார் தனது எக்ஸ் தளத்தில், "நீங்காத நினைவுகளுடன், என்றும் ரசிக பெருமக்களின் இதயங்களில் வாழும், அன்பு நண்பர் கேப்டன் திரு.விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளில், அவருடன் பயணித்த இனிய தருணங்களை எண்ணி நெகிழ்கிறேன்," என பதிவிட்டுள்ளார்.
- இந்தியாவில் நாணயம் மற்றும் ரூபாய் நோட்டுகளை வெளியிடுவது ஒன்றிய அரசுதான்.
- இந்தியாவில் உள்ள நாணயங்கள் எதுவாக இருந்தாலும் அதில் ஆங்கிலமும் இந்தியும் இருப்பது வழக்கம்.
இன்று திமுக அரசிற்கு எதிராக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி முன்வைத்த குற்றச்சாட்டிற்கு திமுக எம்.பி. ஆ. ராசா தனது எக்ஸ் பக்கத்தில் பதில் கொடுத்துள்ளார்.
அவரது பதிவில், "முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டை சிறப்பிக்கும் வகையில் இந்திய ஒன்றிய அரசு 100 ரூபாய் நாணயம் வெளியிட்டு சிறப்பித்திருக்கிறது. இந்த விழாவுக்கு ராஜ்நாத் சிங் ஏன் வருகிறார், ராகுல்காந்தியை ஏன் எதற்கும் அழைப்பதில்லை என்று அவர் எடப்பாடி பழனிசாமி கேட்டிருக்கிறார். இந்தியாவில் நாணயம் மற்றும் ரூபாய் நோட்டுகளை வெளியிடுவது ஒன்றிய அரசுதான் என்பதால், ஒன்றிய அரசில் பாதுகாப்புத்துறை அமைச்சராக உள்ள ராஜ்நாத்சிங் கலந்து கொண்டு சிறப்பிப்பதில் என்ன பிரச்சினை எடப்பாடி பழனிசாமிக்கு?
கலைஞரின் உருவம் பொறித்த நாணயத்தில் இந்தி எழுத்து ஏன் இருக்கிறது என்று எடப்பாடி பழனிசாமி கேட்பதால் அவருக்கு என்ன ஆச்சு என்ற கவலை மேலும் அதிகரிக்கிறது. இந்தியாவில் உள்ள நாணயங்கள் எதுவாக இருந்தாலும் அதில் ஆங்கிலமும் இந்தியும் இருப்பது வழக்கம். அ.திமு.க.வை உருவாக்கிய எம்.ஜி.ஆர் அவர்களுக்கு நாணயம் வெளியிடப்பட்டிருப்பதையும் அதிலும் இந்தி எழுத்துகள் இருப்பதையும்கூடவா எடப்பாடி பழனிசாமி அறியவில்லை? முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்காக வெளியிடப்பட்டுள்ள நாணயத்தில்தான் 'தமிழ் வெல்லும்' என்ற எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளது. இதைக்கூட உணராமல் எடப்பாடி பழனிசாமி உளறியிருப்பதால் அவரை எந்த லிஸ்ட்டில் சேர்ப்பதில்லை எனப் புரியவில்லை.
எதையாவது சொல்ல வேண்டும் என்பதற்காக, தமிழ்நாடு அரசின் சார்பில் முத்தமிழறிஞர் கலைஞருக்கு நிறுவப்பட்ட சிலையை, பா.ஜ.க தலைவராக ஒரு காலத்தில் இருந்த இந்திய குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைத்ததை இப்போது விமர்சிக்கிற எடப்பாடி பழனிசாமி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அண்ணா அறிவாலயத்தில் நிறுவப்பட்ட கலைஞர் சிலையைத் திறந்து வைத்தது காங்கிரஸ் தலைவராக இருந்த அன்னை சோனியா காந்திதான் என்பதையாவது அறிவாரா?
உறவுக்கு கை கொடுப்போம்-உரிமைக்கு குரல் கொடுபபோம் என்பதே முத்தமிழறிஞர் கலைஞர் எங்களுக்கு கற்றுத் தந்திருக்கும் அரசியல் இலக்கணம். அந்த வகையில்தான் ஒன்றிய அரசின் நாணயம் வெளியீட்டு விழாவும், ஆளுநரின் தேநீர் விருந்தும் நடைபெற்றது. தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், தமிழ்நாட்டிற்குரிய நிதியை வழங்காமலும்-தமிழ்நாட்டிற்கானத் திட்டங்களை செயல்படுத்தாமலும் வஞ்சிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசைக் கண்டித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை எதிர்க்கட்சித் தலைவர் ஒருமுறையாவது படித்துப் பார்க்கட்டும்.
ஆதரித்தாலும் எதிர்த்தாலும் அதில் உறுதியாக இருக்கின்ற இயக்கம் தி.மு.கழகம் என்பதை இந்தியாவின் பிரதமராக இருந்த இந்திராகாந்தி அம்மையாரே முத்தமிழறிஞர் கலைஞரின் தலைமைப் பண்பு குறித்து பாராட்டியிருக்கிறார். அதே தலைமைப் பண்பையும் பக்குவமான அணுகுமுறையையும் இன்றைய கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் நிறைந்திருக்கிறது. அ.தி.மு.க.வைப் போல பா.ஜ.க.வுடன் கள்ளக்கூட்டணி வைக்க வேண்டிய அவசியம் எங்களுக்கில்லை. பா.ஜ.க.வை எப்படியாவது தமிழ்நாட்டில் வளரச் செய்ய வேண்டும் என்று சொந்தக் கட்சியான அ.தி.மு.க.வையே அழித்துக்கொண்டிருக்கிறார் என்று அவரது கட்சித் தொண்டர்களே குமுறுகின்ற நிலையை மறைப்பதற்கு, தி.மு.க. மீது பழி போட்டுத் திசை திருப்ப நினைக்கும் எடப்பாடி பழனிசாமியின் நாடகத்தை பொதுமக்கள் நம்பமாட்டார்கள்.
அத்திக்கடவு-அவினாசி திட்டம் என்பது மேற்கு மாவட்ட மக்களின் நெடுங்கனவு. அதனை 1972ஆம் ஆண்டில் முதன்முதலில் செயல்படுத்த முனைந்தவர் முத்தமிழறிஞர் கலைஞர். அதன் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளையும், ஒவ்வொரு முறையும் தி.மு.க ஆட்சி அமைந்தபோது மேற்கொள்ளப்பட்ட செயல்பாடுகளையும், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சியில் அந்தத் திட்டம் எப்படி செயல்படுத்தப்பட்டது என்பதை மேற்கு மாவட்ட மக்கள் அறிவார்கள். அதனால் தான் மேற்கு மாவட்ட மக்களும், விவசாயிகளும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு தங்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். திராவிட மாடல் ஆட்சியின் முதல்வர் தலைமையிலான அரசுதான் உறுதியான நடவடிக்கைகள் மூலம் அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை நிறைவேற்றியுள்ளது.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களை இந்திய ஒன்றியமே கொண்டாடுவதையும், மேற்கு மாவட்ட மக்களின் நெடுங்காலக் கனவை திராவிட மாடல் அரசு நிறைவேற்றியிருப்பதையும் பொறுத்துக் கொள்ள முடியாமல் 'காந்தாரி' போலக் கதறுகிறார் எடப்பாடி பழனிசாமி. பதற்றத்தில் அவர் பேசுவதெல்லாம் பிதற்றலாக உள்ளது" என்று அவர் பதிவிட்டுள்ளார்.