search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "emergency landing"

    • இந்த விமானம் நவம்பர் 16 ஆம் தேதி இரவு டெல்லி நோக்கி புறப்பட்டதாக தகவல்.
    • தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் ரத்து.

    டெல்லி வரவேண்டிய 100-க்கும் மேற்பட்ட ஏர் இந்தியா விமான பயணிகள் கிட்டத்தட்ட மூன்று நாட்களாக தாய்லாந்தின் பூகெட்டில் சிக்கித் தவிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பிட்ட விமானத்தில் பயணம் செய்த பயணிகள் இது குறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த விமானம் நவம்பர் 16 ஆம் தேதி இரவு டெல்லி நோக்கி புறப்பட்டதாக கூறப்படுகிறது.

    எனினும், தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமான புறப்பாடு தாமதமாகி இருக்கிறது. பல மணி நேரம் விமான நிலையத்தில் காத்திருந்த பயணிகள் அதன்பிறகு தான் விமானத்தில் ஏற அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனினும், அடுத்த ஒரு மணி நேரத்தில் விமானத்தில் இருந்து பயணிகள் இறக்கிவிடப்பட்டனர். மேலும், அந்த விமானம் ரத்து செய்யப்பட்டது.

    தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் ரத்து செய்யப்பட்டதாக ஏர் இந்தியா நவம்பர் 16 ஆம் தேதி அறிவித்து இருக்கிறது. பயணிகளுக்கு ஏற்பட்ட இடையூறை தொடர்ந்து அவர்களுக்கு தேவையான தங்கும் வசதி, உணவு மற்றும் இதர உதவிகளுக்கு ஏர் இந்தியா வழிவகை செய்வதாக அறிவித்து இருக்கிறது.

    சில பயணிகளுக்கு மாற்று விமானங்களில் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டது. சில பயணிகளுக்கு டிக்கெட் கட்டணத்தை முழுமையாக திரும்ப வழங்குவது மற்றும் வேறு தேதியில் பயணம் மேற்கொள்வது பற்றி பயணிகளுக்கு ஏர் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிகிறது. பயணிகளில் வயதானவர்கள் மற்றும் குழந்தைகள் உள்ளனர்.

    ஏற்கனவே தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்ட விமானம் பயணத்திற்குத் தயார்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து விமானம் புறப்பட்ட நிலையில், சுமார் இரண்டரை மணி நேரம் கழித்து மீண்டும் ஃபூகெட்டில் தரையிறங்கியது, அதன்பின்னர், விமானத்தில் ஏற்பட்ட கோளாறு சரி செய்யப்பட்டது. எனினும் பயணிகள் ஃபூகெட்டில் சிக்கிக்கொண்டனர்.

    முன்னதாக, விமான நிறுவன வட்டாரம், "பல பயணிகள் திருப்பி அனுப்பப்பட்டனர். சுமார் 40 பேர் இன்னும் ஃபூகெட்டில் உள்ளனர், அவர்கள் இன்று மாலை திருப்பி அனுப்பப்படுவார்கள்" என்று கூறினார்.

    • காயம் அடைந்த ஒருவரை கரைக்கு அழைத்துச் செல்ல ஹெலிகாப்டர் சென்றது.
    • வீரர்களுடன் கடலில் தரையிறங்கி ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.

    குஜராத் மாநிலம் போர்பந்தரில் இருந்து 45 கி.மீட்டர் தூரத்தில் எண்ணெய் உற்பத்தி கப்பல் நிறுத்தப்பட்டுள்ளது. மோட்டார் டேங்கர் ஹரி லீலா என்ற இந்த கப்பலில் உள்ள பணியாளர் ஒருவர் பலத்த காயம் அடைந்ததாக இந்திய கடற்படைக்கு தகவல் வந்தது.

    அதனைத் தொடர்ந்து காயம் அடைந்தவரை கரைக்கு கொண்டு வர இந்திய கடற்படை வீரர்கள் நான்கு பேருடன் லைட் ஹெலிகாப்டர் நேற்றிரவு புறப்பட்டது.

    ஹெலிகாப்டர் கப்பல் அருகே சென்றபோது தரையிறங்க முடியாத நிலை ஏற்பட்டது. சிறிது நேரத்தில் கடலில் அவசரமாக தரையிறங்கியது. இதில் ஹெலிகாப்டரில் இருந்த நான்கு வீரர்களும் மாயமானர்கள். அதில் ஒருவர் மீட்கப்பட்டார். மற்ற மூன்று பேரை மீட்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.

    அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா? என்பது தெரியவில்லை. இதற்கிடையே ஹெலிகாப்டர் பாகங்கள் கிடக்கும் பகுதியை கண்டுபிடித்துள்ளதாக கடற்படை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மூன்று வீரர்களை தேடும் பணியில் நான்கு கப்பல்கள், இரண்டு ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

    • நடுவானில் பறந்த போது விமானத்தின் என்ஜின் செயல்படாமல் போனது.
    • சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்.

    அமெரிக்காவின் நியூ யார்க் பகுதியில் உள்ள செடார் கடற்கரையில் ஒற்றை என்ஜின் கொண்ட செஸ்னா 152 எனும் சிறிய விமானம் தரையிறங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    விமானம் கடற்கரையில் தரையிறங்கிய நிலையில், விமானி மற்றும் பயணிகளுக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை. கடற்கரையில் தரையிறங்கியதால் விமானத்திற்கு பலத்த சேதம் ஏற்பட்டது. விமானத்தின் என்ஜினில் கோளாறு ஏற்பட்டதால் அவசரமாக தரையிறக்கியதாக விமானி தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

    "ஒற்றை என்ஜின் கொண்ட சிறிய ரக விமானம் ஒன்று செடார் கடற்கரையில் அவசரமாக தரையிறங்கியது. நடுவானில் பறந்த போது விமானத்தின் என்ஜின் செயல்படாமல் போனது. இதன் காரணமாக விமானத்தை இயக்கிய 60 வயது விமானி, கடற்கரையில் தரையிறக்கினார்," என்று அமெரிக்க வான்வழி கட்டுப்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. 


    • சில நிமிடங்களில் தீடீரென ஆலங்கட்டி மழை பெய்தது.
    • பயணிகள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

    புவனேஷ்வரில் இருந்து புதுடெல்லி நோக்கி புறப்பட்ட விமானம் ஒன்று அவசர அவசரமாக தரையிறங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் தீடீரென ஆலங்கட்டி மழை பெய்ததால், விமானம் சேதமடைந்தது.

    சேதமடைந்த விமானத்தில் 169 பேர் பயணித்த நிலையில், புதுடெல்லி நோக்கி புறப்பட்ட விமானம் பத்தே நிமிடங்களில் பிஜூ பட்நாயக் சர்வதேச விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. இதனால் விமானத்தில் இருந்த பயணிகள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

    அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானத்தில் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், ஆலங்கட்டி மழை பெய்ததில் விமானத்தின் வின்ட்ஷீல்டு பகுதியில் விரிசல் ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. 

    • ஓம்ஸ்க் நகர் அருகே சென்ற நிலையில் விமானத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
    • விமானத்தில் பயணித்தவர்களுக்கு நிவாரணமாக சுமார் ரூ.87 ஆயிரம் வழங்கப்படும் என யூரல் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைமை அதிகாரி அறிவித்தார்.

    மாஸ்கோ:

    ரஷியாவின் சோச்சி நகரில் இருந்து யூரல் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ஏர்பஸ் ஏ320 விமானம் புறப்பட்டது. சைபீரியா நாட்டின் ஓம்ஸ்க் நோக்கி சென்ற இந்த விமானத்தில் 6 விமான பணியாளர்கள் உள்பட 167 பேர் பயணம் செய்தனர். ஓம்ஸ்க் நகர் அருகே சென்ற நிலையில் விமானத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் அடுத்து வரவுள்ள நோவோசிபிர்ஸ்க் விமான நிலையத்தில் தரையிறங்க விமானி முயற்சி செய்தார்.

    ஆனால் போதுமான அளவுக்கு எரிபொருள் இல்லாததால் நோவோசிபிர்ஸ்க் நகரில் உள்ள ஒரு வயலில் விமானத்தை தரையிறக்க முடிவு செய்யப்பட்டது. இதனால் பயணிகள் பெரும் அச்சத்துக்குள்ளாகினர். எனினும் விமானியின் சாமர்த்தியத்தால் அந்த விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் காயம் அடைந்த 5 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதனையடுத்து விமானத்தில் பயணித்தவர்களுக்கு நிவாரணமாக சுமார் ரூ.87 ஆயிரம் வழங்கப்படும் என யூரல் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைமை அதிகாரி செர்ஜி ஸ்குராடோவ் அறிவித்தார்.

    • விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் ஒரு என்ஜின் வேலை செய்யவில்லை.
    • பாதுகாப்பு கருதி விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

    புதுடெல்லி விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு நேற்று இரவு 9.46 மணிக்கு இண்டிகோ விமானம் புறப்பட்டது. அதில் 231 பயணிகள் மற்றும் 2 விமான ஊழியர்கள் பயணித்தனர்.

    விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் ஒரு என்ஜின் வேலை செய்யவில்லை. இதனை அறிந்த விமானி, உடனடியாக விமானத்தை டெல்லிக்கு திருப்பினார். டெல்லி விமான நிலையத்தை அடைந்ததும் பாதுகாப்பு கருதி விமானத்தை அவசரமாக தரையிறக்க அனுமதி கோரினார். அனுமதி கிடைத்ததும், விமானம் இரவு 10.38 மணிக்கு பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. பயணிகள் அனைவரும் கீழே இறக்கப்பட்டனர். 

    • விமானம் உள்ளூர் நேரப்படி நள்ளிரவு 12.05 மணிக்கு சான் பிரான்சிஸ்கோ சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    • சான்பிரான்சிஸ்கோ விமான நிலைய குழுவினர், பயணிகளுக்கு உதவிகளை வழங்கத் தயாராக உள்ளனர்

    புதுடெல்லி:

    டெல்லியில் இருந்து அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகருக்கு நேற்று முன்தினம் புறப்பட்டுச் சென்ற ஏர் இந்தியா விமானம், என்ஜின் கோளாறு காரணமாக ரஷியாவிற்கு திருப்பி விடப்பட்டு, அங்குள்ள மகாதன் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அதில், 216 பயணிகள் மற்றும் 16 விமான ஊழியர்கள் பயணித்தனர்.

    விமானம் பத்திரமாக தரையிறங்கியதும் பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டனர். அவர்களுக்கு மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்படும் என விமான நிறுவனம் தெரிவித்திருந்தது. அதன்படி ஏர் இந்தியா நிறுவனம் மாற்று விமானத்தை ரஷியாவுக்கு அனுப்பி வைத்தது.

    அந்த விமானம் மகாதன் விமான நிலையத்தை அடைந்த நிலையில், இன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகருக்கு புறப்பட்டது. விமானம் உள்ளூர் நேரப்படி நள்ளிரவு 12.05 மணிக்கு சான் பிரான்சிஸ்கோ சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகவலை ஏர் இந்தியா தனது டுவிட்டர் தளத்தில் உறுதி செய்துள்ளது.

    சான்பிரான்சிஸ்கோ விமான நிலையத்தில் உள்ள குழுவினர், பயணிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கத் தயாராக உள்ளனர் என்றும், பயணிகளின் மருத்துவ உதவி, தரைவழிப் போக்குவரத்து மற்றும் தொடர் பயணங்களுக்கான உதவிகளை செய்வார்கள் என்றும் ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

    • என்ஜின் பழுது குறித்து தகவல் தெரிவித்து அவசரமாக விமானத்தை தரையிறக்க அனுமதி கேட்கப்பட்டது.
    • பயணிகளுக்கு மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்படும் என விமான நிறுவனம் தெரிவித்தது.

    வாஷிங்டன்:

    டெல்லியில் இருந்து அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகருக்கு நேற்று ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது. அதில், 216 பயணிகள் மற்றும் 16 விமான ஊழியர்கள் பயணித்தனர். இந்த விமானம் பறந்துகொண்டிருந்தபோது ஒரு என்ஜினில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனைக் கண்டறிந்த விமானி, விமானத்தை அருகில் உள்ள ரஷியாவுக்கு திருப்பினார்.

    ரஷியாவின் மகாதன் விமான நிலையத்தை நெருங்கியதும், விமானத்தின் என்ஜின் பழுது குறித்து தகவல் தெரிவித்து அவசரமாக விமானத்தை தரையிறக்க அனுமதி கேட்கப்பட்டது. அனுமதி கிடைத்ததையடுத்து, விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டு, பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். பயணிகளுக்கு மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்படும் என விமான நிறுவனம் தெரிவித்தது.

    அமெரிக்கா நோக்கி வந்த விமானம் ரஷியாவில் அவசரமாக தரையிறக்கப்பட்டதைத் தொடர்ந்து நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

    அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் வேதாந்த் பட்டேல் செய்தியாளர்களிடம் கூறுகையில், "அமெரிக்கா வந்த விமானம் ரஷியாவில் அவசரமாக தரையிறக்கப்பட்டதை அறிவோம். நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். மேலும், அந்த விமானத்தில் எத்தனை அமெரிக்க குடிமக்கள் இருந்தனர் என்பதை இப்போது உறுதிப்படுத்த முடியவில்லை. பயணிகள் தங்கள் பாதையில் செல்ல வேண்டிய இடத்திற்கு மாற்று விமானத்தை அனுப்ப உள்ளனர்" என்றார்.

    • மத்திய இணை மந்திரி ராமேஸ்வர் டெலி, திப்துகர் எம்எல்ஏ பிரசாந்த புகான் உள்ளிட்ட பலர் பயணம் மேற்கொண்டனர்.
    • விமானம் டேக் ஆப் ஆகி வானில் பறக்கத் தொடங்கியபோது, இயந்திரத்தில் ஏதோ பிரச்சனை இருப்பதை விமானி கண்டறிந்தார்.

    அசாம் மாநிலம் கவுகாத்தி விமான நிலையத்தில் இருந்து திப்ருகர் நோக்கி இண்டிகோ விமானம் புறப்பட்டது. அந்த விமானத்தில் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை இணை மந்திரி ராமேஸ்வர் டெலி, திப்துகர் எம்எல்ஏ பிரசாந்த புகான், துலியாஜன் தொகுதி எம்எல்ஏ தெராஸ் கோவல்லா உள்ளிட்ட பலர் பயணம் மேற்கொண்டனர்.

    விமானம் டேக் ஆப் ஆகி வானில் பறக்கத் தொடங்கியபோது, இயந்திரத்தில் ஏதோ பிரச்சனை இருப்பதை விமானி கண்டறிந்தார். இதையடுத்து மீண்டும் கவுகாத்தி விமான நிலையத்திற்கே விமானத்தை திருப்பினார். விமான நிலையத்தை தொடர்புகொண்டு விமானத்தை அவசரமாக தரையிறக்க அனுமதி கோரினார். அனுமதி கிடைத்ததும் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. புறப்பட்ட 12 நிமிடத்தில் விமானம் திரும்பி வந்த நிலையில், பயணிகள் அனைவரும் இறக்கப்பட்டனர். தொழில்நுட்பப் பிரிவைச் சேர்ந்த குழுவினர், விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    • விமானத்தில் திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டிருப்பதை விமானி கண்டறிந்தார்.
    • விமானி உடனடியாக ஓடுபாதை அருகே அவசரமாக விமானத்தை தரையிறக்கினார்.

    சென்னையில் இருந்து இன்று கத்தாருக்கு 336 பயணிகளுடன் விமானம் புறப்பட்டது. அப்போது விமானத்தில் திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டிருப்பதை விமானி கண்டறிந்தார்.

    இதையடுத்து விமானி உடனடியாக ஓடுபாதை அருகே அவசரமாக விமானத்தை தரையிறக்கினார். சரியான நேரத்தில் கோளாறை கண்டுபிடிக்கப்பட்டதால் விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    இந்த சம்பவத்தால் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    • பறவை மோதியதால் கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டிருக்கலாம் என தெரிகிறது.
    • டெல்லி விமான நிலையத்தில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.

    புதுடெல்லி:

    மகாராஷ்டிர மாநிலம் புனேயில் இருந்து இன்று மாலை டெல்லி நோக்கி 180 பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் புறப்பட்டு வந்துகொண்டிருந்தது. விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது விமானத்தின் கண்ணாடியில் திடீரென விரிசல் ஏற்பட்டது. இதுகுறித்து டெல்லி விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்கப்படது.

    உடனடியாக டெல்லி விமான நிலையத்தில் அவசரமாக விமானத்தை தரையிறக்க அனுமதி கோரப்பட்டது. இதையடுத்து, விமான நிலையத்தில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு, விமானத்தை தரையிறக்க அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி, விமானம் தரையிறக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் விமான பயணிகள் யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை.

    பறவை மோதியதால் கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டிருக்கலாம் என தெரிகிறது. விமானத்தில் விரிசல் ஏற்பட்ட கண்ணாடி மாற்றப்பட்டு பாதுகாப்பு வசதிகள் சரியாக உள்ளனவா? என்பது குறித்து ஆய்வு செய்யப்படுகிறது.

    • பாதிப்பு எதுவும் இல்லை என்பது உறுதியான பின்னர் விமானம் மீண்டும் புறப்பட்டது.
    • இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

    புதுடெல்லி:

    டெல்லியில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய்க்கு இன்று 'பெட்எக்ஸ்' சரக்கு விமானம் புறப்பட்டது. விமானம் புறப்பட்டு 1,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது திடீரென விமானம் மீது பறவைகள் மோதின. இதனால், அதிர்ச்சியடைந்த விமானி உடனடியாக விமானத்தை டெல்லி விமான நிலையத்தில் அவசர அவசமாக தரையிறக்கினார். இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

    பறவை மோதியதால் விமானத்தின் இறக்கை, எஞ்சின் உள்ளிட்ட பகுதிகளில் ஏதேனும் பாதிப்பு அல்லது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதா என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பாதிப்பு எதுவும் இல்லை என்பது உறுதியான பின்னர் விமானம் டெல்லியில் இருந்து மீண்டும் துபாய்க்கு புறப்பட்டது. 

    ×