search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "external affairs minister"

    • மீனவர்கள் 2024 ஜூலை 5 ஆம் தேதி ரயில் மறியல் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
    • தமிழ் மீனவர்கள் பல நூற்றாண்டுகளாக மீன்பிடித்து வந்த கடலில் மீன்பிடிக்கும் உரிமையை எமர்ஜென்சி காலத்தில் காங்கிரஸ் அரசு பறித்தது.

    இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 25 மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது,

    தமிழகத்தின் ராமந்தபுரத்தில் உள்ள பாம்பனில் இருந்து 25 மீனவர்கள் மற்றும் 4 படகுகள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். தொடர் கைது சம்பவங்கள் காரணமாக, மீனவர்கள் 2024 ஜூலை 5 ஆம் தேதி ரயில் மறியல் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

    1974ல் கச்சத்தீவை கைவிட்டதால், கடந்த பல தசாப்தங்களாக இந்த தொடர் கைதுகளால் தமிழக மீனவர்கள் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர். 1974 ஒப்பந்தம், பிரிவு 5, மீனவர்கள் மற்றும் யாத்ரீகர்கள் கச்சத்தீவுக்கு வருகை தராமல் கலாசார மற்றும் பொருளாதார உரிமைகளை வழங்கியது. பயண ஆவணங்கள் அல்லது விசாக்கள் பெறுதல். பிரிவு 6 இன் கீழ், பாரம்பரிய (வரலாற்று) நீரில் இரு நாடுகளின் கப்பல்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டது.

    பின்னர், எமர்ஜென்சியின் போது, மன்னார் வளைகுடா மற்றும் வங்காள விரிகுடாவின் எல்லைகளை தீர்மானிக்க இந்தியா மற்றும் இலங்கை இடையே (மார்ச் 23, 1976) மற்றொரு ஒப்பந்தம் போடப்பட்டது. பிரிவு 5இல், முன்னர் வழங்கப்பட்ட கலாச்சார மற்றும் பொருளாதார உரிமைகள், 'ஒவ்வொரு கட்சிக்கும் நீர் மற்றும் பிராந்திய கடல், அத்துடன் தீவுகள் ஆகியவற்றின் மீதும், எல்லையில் அதன் பக்கத்தில் விழும் இறையாண்மை மற்றும் 'ஒவ்வொரு கட்சிக்கும் உரிமை உண்டு. இறையாண்மை உரிமைகள் மற்றும் கான்டினென்டல் ஷெல்ஃப் மற்றும் பிரத்தியேக பொருளாதார மண்டலம் மற்றும் அவற்றின் வளங்கள் மீது, வாழும் அல்லது உயிரற்றவை, மேற்கூறிய எல்லையின் அதன் பக்கத்தில் விழும்.

    தமிழ் மீனவர்கள் பல நூற்றாண்டுகளாக மீன்பிடித்து வந்த கடலில் மீன்பிடிக்கும் உரிமையை எமர்ஜென்சி காலத்தில் காங்கிரஸ் அரசு பறித்தது. நமது பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் திறமையான தலைமையின் கீழ், நமது தமிழ் மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதித்துள்ள இந்த நீண்டகால நெருக்கடிக்குத் தீர்வு காண்பதற்கான நிரந்தரத் தீர்வைக் காணும் முயற்சியில் நமது வெளியுறவு அமைச்சகத்தின் முயற்சிகளை நாங்கள் முழுமையாக ஒப்புக்கொள்கிறோம்.

    இலங்கை கடற்படையினரின் தொடர் கைது நடவடிக்கைகளில் இருந்து தமிழக மீனவர்களை காப்பாற்றி கச்சத்தீவு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணவும், கைதிகளை முன்கூட்டியே திருப்பி அனுப்பவும், அவர்களின் மீன்பிடி படகுகளை விடுவிக்குமாறு வலியுறுத்துகிறோம் என்று கூறியுள்ளார்.

    • இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது.
    • பாஜக ஆட்சியில் இருந்தாலும், இந்தப் பிரச்சனையை தேர்தல் நேர முழக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்தி வருகிறது.

    இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள 25 மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவிக்க வேண்டும், மீனவர்களின் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு ஏற்படுத்த கோரியும் ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

    இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள 25 மீனவர்களையும், அவர்களது படகுகளை விடுவிக்கவும், மீனவர்களின் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வை ஏற்படுத்த கோரியும் ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

    முதலமைச்சர் அவர்கள் எழுதியுள்ள கடிதத்தில், சமீப வாரங்களில் இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளதாகக் கவலைபடத் தெரிவித்துள்ளதோடு, IND-TN-10 MO 1379 மற்றும் IND-TN-09-MO-2327 என்ற பதிவெண்களைக் கொண்ட இரண்டு மோட்டார் பொருத்தப்பட்ட நாட்டுப் படகுகளிலும் இரண்டு பதிவு செய்யப்படாத மீன்பிடிப் படருகளிலும் சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 25 மீனவர்கள் 1-7-2024 அன்று இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

    1974 ஆம் ஆண்டிலிருந்தே, அப்போதைய ஒன்றிய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையிலான புரிந்துணர்வைத் தொடர்ந்து இந்தப் பிரச்சினை நிலவுவதாக ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்கள் தனது 27-6-2024 நாளிட்ட கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதை கோடிட்டுக் காட்டியுள்ள முதலமைச்சர் அவர்கள், தி.மு.க. தலைமையிலான மாநில அரசு கச்சத்தீவு ஒப்பந்தத்தை அப்போது முழுவீச்சில் எதிர்த்தது என்பதையும், தனது எதிர்ப்பை தமிழ்நாடு சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

    ஒப்பந்தம் நிறைவேற்றப்படுவதற்கு முன்பு இது சம்பந்தமாக மாநில அரசடன் முறையாக கலந்தாலோசிக்கவில்லை என்பது அனைவரும் அறிந்த ஒன்று என்று குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், இந்திய உரிமைகளுக்கும் நலன்களுக்கும் ஆபத்தை விளைவிக்கும் வகையிலும் அவற்றைப் பறிக்கும் வகையிலும் கச்சத் தீவை முழுமையாக இலங்கைக்கு விட்டுக் கொடுத்தது அப்பொதைய ஒன்றிய அரசு தான் என்று தனது கடிதத்தில் அழுத்தத்திருத்தமாகக் குறிப்பிட்டுள்ளார்.

    தனது தலைவரும் அப்போதைய தி.மு.க. தலைவருமான முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் உச்சநீதிமன்றத்தில் ஒரு பிரமாணப் பத்திரத்தைத் தூக்கல் செய்து, அதில் 'ஒன்றிய அரசு மேற்கொண்ட அனைத்து நடவடிக்கைகளும் அரசியலமைப்பிற்கு முரணானதாக இருக்கும்போது. கச்சத்தீவின் இறையாண்மை ஒரு தீர்க்கப்பட்ட விஷயம் என்று கூற முடியாது" என்று திட்டவட்டமாகக் கூறியிருந்ததை முதலமைச்சரி அவர்கள் நமது கடிதத்தில் நினைவு கூர்ந்துள்ளார்.

    தொடர்ந்து மூன்றாவது முறையாக பாஜக ஆட்சியில் இருந்தாலும், இந்தப் பிரச்சனையை தேர்தல் நேர முழக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்தி வருவதாகவும் கச்சத்தீவை மீட்க குறிப்பிடத்தக்க அர்த்தமுள்ள எந்த முயற்சியையும் அது எடுக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் . தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் எதிர்நோக்கும் இன்னல்களுக்கு நிரந்தாத் தீர்வு காண்பது காலத்தின் கட்டாயமாகும் எனத் தெளிவுபடக் குறிப்பிட்டுள்ளார்.

    எனவே தமிழ்நாட்டு மீனவர்களின் பாரம்பரிய உரிமைகளை நிலைநாட்டும் வலையில் மீனவர்களுக்குத் தொடர்ந்து இடையூறு விளைவித்து வரும் இந்தப் பிரக்கினைக்கு நிரந்தரத் தீர்வு காணத் தேவையான, உறுதியான நடவடிக்கைகளை எடுக்குமாறு வெளியுறவுத் துறை அமைக்கர் டாக்டர் ஜெய்சங்கர் அவர்களை தமிழ்நாடு முதலமைச்சர் முகஸ்டாலின் அவர்கள் தனது கடிதத்தில் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.

    • மூன்று இயந்திரப் படகுகளுடன் மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாகச் தெரிவித்துள்ளார்.
    • தமிழ்நாட்டைச் சேர்ந்த பல்வேறு மீனவர் சங்கங்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகளைக் கனிவுடன் பரிசீலிக்க வேண்டுமென்றும் முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.

    இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்க இலங்கை அரசை வலியுறுத்திடக் கோரி வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது,

    தனது முந்தைய கடிதத்தில் சுட்டிக் காட்டியது போன்று மீனவர்களை கைது செய்தல் மற்றும் அச்சுறுத்தல் சம்பவங்கள் தொடர்வதால் அவர்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அச்சமுதாயத்தினரிடையே மிகுந்த அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ள முதலமைச்சர் கடந்த 22.06.2024 அன்று, ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தைச் சேர்ந்த 22 மீனவர்கள். IND- TN-10-MM-84, IND-TN-10-MM-88 IND-TN-10-MM-340 எண்களைக் கொண்ட மூன்று இயந்திரப் படகுகளுடன் மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாகச் தெரிவித்துள்ளார்.

    எனவே, இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட மீனவர்களையும், அவர்களது படகுகளையும் உடனடியாக விடுவிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ள முதலமைச்சர். ஏற்கெனவே விடுவிக்கப்பட்ட படகுகளை இலங்கையில் இருந்து கொண்டு வருவதற்கு மீட்புப் படகுகள் மற்றும் பணியாளர்களுக்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை என்றும் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். அதேபோன்று, இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை சந்தித்து, அவர்களுக்கு ஆறுதலும் அடிப்படைத் தேவைகளையும் வழங்கிட அனுமதி தர வேண்டுமென தமிழ்நாட்டைச் சேர்ந்த பல்வேறு மீனவர் சங்கங்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகளைக் கனிவுடன் பரிசீலிக்க வேண்டுமென்றும் முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.

    மீனவர்களின் வாழ்வை சீர்குலைக்கும் இந்தப் பிரச்சினைக்கு தீர்வுகாண உடனடியாக உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்றும், இதற்காக ஏற்கெனவே அமைக்கப்பட்ட கூட்டுப் பணிக்குழுவினை மீண்டும் புதுப்பிக்க வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ள முதலமைச்சர், இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வைக் காண இலங்கை அதிகாரிகளிடம் எடுத்துரைத்திட உரிய நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ் ஜெய்சங்கர் அவர்களை தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

    • வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர் நாளை இலங்கைக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.
    • ரணில் விக்ரமசிங்கேயுடன் பிரதமர் மோடி சந்திப்பதற்காக ஆலோசனை நடத்துகிறார்.

    புதுடெல்லி:

    இந்திய வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர் நாளை இலங்கைக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கேயுடன் பிரதமர் மோடி சந்திப்பதற்காக ஆலோசனை நடத்துகிறார். மேலும் இரு நாடுகள் இடையேயான உறவை வலுப்படுத்துவதற்காக பல்வேறு உயர்மட்ட பேச்சு வார்த்தையில் ஜெய்சங்கர் பங்கேற்கிறார்.

    பிரதமர் மோடி, ஆகஸ்ட் மாதம் இலங்கையில் பயணம் மேற்கொள்வார் என்ற தகவல் வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • தீ விபத்தில் இறந்தவர்களில் 40 பேர் இந்தியர்கள் என தகல் வெளியாகியுள்ளது.
    • தீ விபத்தில் 90 இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

    குவைத்தில் கேரளாவை சேர்ந்த ஆபிரகாம் என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

    தெற்கு குவைத்தில் உள்ள மங்காப் நகரில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 41 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியானது.

    தீ விபத்தில் இறந்தவர்களில் 40 பேர் இந்தியர்கள் என தகல் வெளியாகியுள்ளது. தீ விபத்து நிகழ்ந்த இடத்தில் இருந்து 90 இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

    இருப்பினும், வெளியுறவு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்த பிறகே, இந்தியர்கள் எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என்பது தெரியவரும் என கூறப்படுகிறது.

    இந்நிலையில், குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்த்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    அப்போது அவர் கூறுகையில், " குவைத் நகரில் தீ விபத்து ஏற்பட்ட செய்தியால் ஆழ்ந்த அதிர்ச்சி அடைந்துள்ளேன். 40 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர் மற்றும் 50 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    எங்கள் தூதர் முகாமுக்குச் சென்றுள்ளார். மேலும் தகவலுக்காக காத்திருக்கிறோம். பரிதாபமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். காயமடைந்தவர்கள் விரைவில் பூரண குணமடைய வாழ்த்துகிறேன்.

    இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் எமது தூதரகம் முழுமையான உதவிகளை வழங்கும் என்றும் அவர் தெரிவித்தார்" என்றார்.

    • வெளியுறவுத்துறை மந்திரியாக எஸ்.ஜெய்சங்கர் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
    • அப்போது அவர் கூறுகையில், எல்லை பிரச்சனைகளில் கவனம் செலுத்தப்படும் என்றார்.

    புதுடெல்லி:

    பிரதமர் மோடியின் மந்திரி சபையில் அவருடன் சேர்த்து 61 பேர் பா.ஜ.க.வில் இருந்து மந்திரிகளாகி இருக்கிறார்கள். மீதமுள்ள 11 இடங்கள் கூட்டணி கட்சிகளுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது.

    புதிதாக பதவியேற்றுக்கொண்ட மந்திரிகளுக்கு நேற்று இலாகாக்கள் ஒதுக்கப்பட்டன. பிரதமர் மோடி பரிந்துரையின்பேரில் ஜனாதிபதி திரவுபதி முர்மு இலாகாக்களை ஒதுக்கீடு செய்துள்ளார்.

    இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதை அடுத்து மந்திரிகள் தங்களது பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு இன்று காலை முதல் பணிகளை கவனிக்கத் தொடங்கியுள்ளனர்.

    இந்நிலையில், தலைநகர் டெல்லியில் உள்ள வெளியுறவுத்துறை அமைச்சக அலுவலகத்தில் வெளியுறவுத்துறை மந்திரியாக எஸ்.ஜெய்சங்கர் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:

    ஜனநாயக நாட்டில் ஒரு அரசு தொடர்ச்சியாக 3 முறை தேர்ந்தெடுக்கப்படுவது பெரிய விஷயம். பிரதமர் மோடியின் தலைமையில் வெளியுறவுத்துறை சிறப்பாக செயல்படும் என முழுமையாக நம்புகிறேன்.

    வெளியுறவுத்துறை மந்திரி பொறுப்பு மீண்டும் ஒருமுறை வழங்கப்பட்டுள்ளது. இது ஒரு மகத்தான மரியாதையாகும். கடந்த காலத்தில் இந்த அமைச்சகம் சிறப்பாகச் செயல்பட்டது. எல்லை பிரச்சனைகளில் கவனம் செலுத்தப்படும். நெருக்கடி காலங்களில் உலக நாடுகளுக்கு உதவி செய்வதால் இந்தியா படிப்படியாக வளர்ந்து வருகிறது என தெரிவித்தார்.

    • தெற்காசிய பிராந்தியத்தில் இந்தியா ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
    • இந்தியாவின் எழுச்சிக்கு வெளிநாடு வாழ் இந்தியர்களின் வெற்றியும் ஒரு காரணம்.

    வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் வழிபாடு நடத்தினார். முன்னதாக பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த காசி தமிழ் சங்கமம் கண்காட்சியை அவர் பார்வையிட்டார். பின்னர் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் கூறியதாவது: 

    இந்தியா தெற்காசிய பிராந்திய ரீதியாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. உலகம் இந்தியாவையும் பாகிஸ்தானையும் சமமாகப் பார்க்கும் ஒரு சகாப்தம் இருந்தது, இன்று, யாரும் அதைச் செய்வதில்லை, இந்த பிராந்தியத்தில் முதன்மை சக்தியாக இந்தியா உருவெடுத்துள்ளது.

    சார்க் அமைப்பு தற்போது செயல்படவில்லை. ஏனெனில் அதன் உறுப்பு நாடுகளில் ஒன்று (பாகிஸ்தான்) அண்டை நாடுகளை, எல்லை தாண்டிய பயங்கரவாதம் மூலம் கையாளலாம் என்று நம்புகிறது. இந்த பிரச்சனையில் தெளிவான நிலைப்பாட்டை எடுக்காத நாடுகள் உள்ளன, ஆனால் அவர்களின் பிரச்சினையில் ஒரு நிலைப்பாட்டை எடுக்கும்படி நாங்கள் கேட்கிறோம். நாம் ஒரு சுதந்திர சக்தியாக இருக்க வேண்டும். அப்போதுதான் இந்தியாவை உலகம் மதிக்கும்.

    இந்தியாவின் எழுச்சியை உலகமே இன்று உற்று நோக்கும் போது, அதற்கு வெளிநாடு வாழ் இந்தியர்களின் பங்களிப்பும் வெற்றிகளும் ஒரு பகுதியாகும். எனவே, நமக்கும் ஒரு பொறுப்பு உள்ளது. வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களை கவனித்துக் கொள்வது நமது கடமை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • இந்தியா தகவல் தொழில்நுட்பத்தில் நிபுணராக கருதப்படுகிறது.
    • பாகிஸ்தான் சர்வதேச பயங்கரவாதத்தில் நிபுணராக அறியப்படுகிறது.

    வதோதரா:

    குஜராத் மாநிலம் வதோதரா நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்தியாவும் உலகமும், மோடி சகாப்தத்தில் வெளியுறவுக் கொள்கை என்ற தலைப்பில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

    பாகிஸ்தானை போல வேறு எந்த நாடும் பயங்கரவாதிகளுக்கு பயிற்சி கொடுத்ததில்லை. இந்த வகையான நடத்தை மற்றும் நடவடிக்கை ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் இத்தனை ஆண்டுகளாக என்ன செய்தது என்பதை நீங்கள் உலகிற்கு எப்படி காட்டுவீர்கள். நரேந்திர மோடி அரசு, இராஜ தந்திர நடவடிக்கையால் மற்ற நாடுகளையும் (பாகிஸ்தான்) பயங்கரவாத பிரச்சினையை தீவிரமாக எடுத்துக் கொள்ள வைத்துள்ளது.

    இந்தியா தகவல் தொழில்நுட்பத்தில் நிபுணராக கருதப்படுகிறது. அண்டை நாடு (பாகிஸ்தான்) சர்வதேச பயங்கரவாதத்தில் நிபுணராக அறியப்படுகிறது. பயங்கரவாதம் இப்போது கட்டுப்படுத்தப்படா விட்டால் எதிர்காலத்தில் அவர்களுக்கும் தீங்கு விளைவிக்கும் என்பதை உலக நாடுகளுக்கு இந்தியா வெற்றிகரமாக உணர்த்தி உள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிரான இந்த போரில் உலக நாடுகளுடன் இணைந்து செயல்படுவதில் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம்.

    இதற்கு முன், இது வேறு எங்கோ நடப்பதால், தங்களுக்கு பாதிப்பு ஏற்படாது என நினைத்து, மற்ற நாடுகள் இதை புறக்கணித்தன. இன்று, பயங்கரவாதத்தை ஆதரிப்பவர்கள் (பாகிஸ்தான்) மீது அழுத்தம் உள்ளது. இது எங்களின் இராஜதந்திர நடவடிக்கைக்கு ஒரு எடுத்துக்காட்டு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • ரஷியாவுடனான ராணுவ தளவாட கொள்முதலில் எந்தச் சிக்கலும் இல்லை.
    • இந்தியா, அமெரிக்காவிடமிருந்தும் நிறைய கொள்முதல் செய்துள்ளது.

    வாஷிங்டன்:

    மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் 4 நாள் அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். வாஷிங்டனில் அமெரிக்க பாதுகாப்புத்துறை மந்திரி லாயிட் ஆஸ்டின் மற்றும் அந்நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் ஆகியோரை தனித் தனியாக சந்தித்த அவர், இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை நடத்தினார். 


    இரு நாடுகள் இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு, தகவல் பகிர்வு, தளவாட ஒத்துழைப்பு உள்ளிட்டவை குறித்து இந்த ஆலோசனையின் போது விவாதிக்கப்பட்டது. பின்னர் ஜெய்சங்கரும், ஆண்டனி பிளிங்கனும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது மத்திய மந்திரி ஜெய்சங்கர் கூறியதாவது:

    உக்ரைனில் நடைபெறும் போருக்குப் பிறகு ரஷியாவிடம் இருந்த ராணுவத் தளவாடங்கள் மற்றும் உதிரி பாகங்களை கொள்முதல் செய்வதில் இந்தியா எந்தச் சிக்கலையும் எதிர்கொண்டதாக நான் நினைக்கவில்லை. ராணுவ உபகரணங்கள் மற்றும் தளவாடங்களை நாங்கள் எங்கிருந்து பெறுகிறோம் என்பது ஒரு பிரச்சினை அல்ல, தற்போது போர் காரணமாக ஏற்பட்ட அரசியல் பதட்டத்தால் அது ஒரு பிரச்சினையாகி இருக்கிறது. 


    தொழில்நுட்ப தரம், திறன், குறிப்பிட்ட உபகரணங்கள் வழங்கப்படும் விதிமுறைகள் ஆகியவற்றை நாங்கள் பார்க்கிறோம், மேலும் எங்கள் தேசிய நலனுக்காக நாங்கள் நம்பும் ஒரு தேர்வை செய்கிறோம். கடந்த 15 ஆண்டுகளில், இந்தியா அமெரிக்காவிடமிருந்து நிறைய கொள்முதல் செய்துள்ளது.

    பிரான்சிடம் இருந்து நாங்கள் ரஃபேல் விமானத்தை வாங்கினோம், இஸ்ரேலிடம் இருந்தும் வாங்கி உள்ளோம். எங்களைப் பொறுத்தவரை, போட்டி நிறைந்த சூழ்நிலையில் சிறந்த ஒப்பந்தத்தை எப்படி பெறுவது என்பதுதான் உண்மை. இவ்வாறு அவர் தெரிவித்தார். 


    அப்போது பேசிய பிளிங்கன், பருவநிலை மாற்றத் துறையில் இரு நாடுகளும் இணைந்து பணியாற்றி வருவதாக கூறினார். குவாட் மற்றும் ஜி20 அமைப்புகளில் இணைந்து பணியாற்றுவதன் மூலம் இரு நாடுகள் இடையேயான உறவுகள் உண்மையான முன்னேற்றத்தை அடைந்துள்ளன என்றம் அவர் குறிப்பிட்டார்.

    • எல்லை தாண்டிய பயங்கரவாதத்தால் இந்தியா பாதிக்கப்பட்டு வருகிறது
    • பயங்கரவாதத்தின் ரத்தக் கறைகளை மறைக்க முடியாது.

    பாகிஸ்தானில் இருந்து செயல்படும் பயங்கரவாதிகளை கறுப்புப் பட்டியலில் சேர்க்க இந்தியா, அமெரிக்கா மற்றும் பல மேற்கத்திய நட்பு நாடுகள் பலமுறை ஐ.நா.சபையில் தீர்மானங்கள் கொண்டு வந்தன. ஆனால் இந்த விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்ட சீனா, தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி அந்த தீர்மானம் நிறைவேறாமல் தடுத்து நிறுத்தியது.

    இந்த நிலையில் நியூயார்க்கில் நடைபெற்ற ஐ.நா. பொதுச் சபையின் உயர்மட்ட அமர்வில் இந்தியா சார்பில் பேசிய வெளிவிவகாரத்துறை மந்திரி ஜெய்சங்கர் இதை கடுமையாக குறை கூறினார். தமது உரையில் தமது தெரிவித்துள்ளதாவது:

    பல தசாப்தங்களாக எல்லை தாண்டிய பயங்கரவாதத்தால் இந்தியா பாதிக்கப்பட்டு வருகிறது. எனினும் பூஜ்ஜிய சகிப்புத்தன்மை அணுகுமுறையை இந்தியா உறுதியாக பின்பற்றுகிறது. எங்கள் பார்வையில், எந்த ஒரு பயங்கரவாதச் செயலையும் நியாயப்படுத்த முடியாது. எவ்வளவு புனிதமானதாக இருந்தாலும், பயங்கரவாதத்தின் ரத்தக் கறைகளை மறைக்க முடியாது.

    ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்ட பயங்கரவாதிகளைப் பாதுகாக்கும் நாடுகளும் உள்ளன. ஐ.நா.வின் தடைகளை அரசியலாக்குபவர்கள், சில சமயங்களில் பயங்கரவாதிகள் என்று அறிவிக்கப்பட்டவர்களை பாதுகாக்கும் அளவிற்கு கூட அதை செய்கிறார்கள். அவர்களின் சொந்த நலனுக்கோ அல்லது அவர்களின் நற்பெயருக்கோ அதனால் எந்த பலனும் ஏற்படப் போவதில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார். 

    • குமரி மாவட்ட மூன்று மீனவர்கள், இந்தோனேசிய அரசால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.
    • கைது நடவடிக்கைகளை தவிர்க்க கடல் சார்ந்த நாடுகளுடன் அரசு ஒப்பந்தம் செய்ய வேண்டும்.

    டெல்லி:

    கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், டெல்லியில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெயசங்கரை சந்தித்து தமிழக மீனவர்கள் மீட்பு தொடர்பான கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார்.

    வெளிநாட்டு சிறைகளில் கைதிகளாக அடைக்கப்பட்டுள்ள மீனவர்களின் துயரங்கள் குறித்து தெரிவித்த அவர், கடலில் மீன் பிடிக்க செல்லும்போது வழி தவறி அந்நிய நாட்டு கடல் எல்லைக்குள் செல்லும் மீனவர்களை அந்நாட்டு அரசாங்கம் கைது செய்வதை அவர் எடுத்துரைத்தார்.

    குறிப்பாக இந்தோனேசிய அரசால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைபட்டிருக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த மூன்று மீனவர்களை அரசு தலையிட்டு விடுதலை செய்யுமாறு அவர் கேட்டுக் கொண்டார். சிறையில் இருந்த போது ஒரு மீனவர் உயிரிழந்ததையும் மற்றும் மீனவர்களின் படகுகள் மற்றும் பொருட்கள் அந்த அரசின் வசம் இருப்பதையும் சுட்டிக் காட்டினார்.

    இத்தகைய கைது நடவடிக்கைகளை தவிர்க்க கடல் சார்ந்த நாடுகளுடன் தூதரக ரீதியான ஒப்பந்தத்தை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் எனவும், அத்தகைய பேச்சு வார்த்தைகளின் போது கடலோர பாராளுமன்ற தொகுதிகளின் உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குழு அமைத்து கருத்து கேட்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

    மேலும் வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்லும் மீனவர்கள் வேலைக்கு சேர்ந்தவுடன் அவர்களது பாஸ்போர்ட்களை வேலை செய்யும் நிறுவனங்கள் பிணையாக எடுத்துக் கொள்வதை சுட்டிக்காட்டிய விஜய்வசந்த் எம்.பி., மீனவர்கள் நாடு திரும்ப விரும்பும் போது பாஸ்போர்ட் கிடைக்காமல் தவிப்பதாக கூறினார்.

    குமரி மாவட்டத்தை சேர்ந்த எட்டு மீனவர்கள் ஓமன் நாட்டில் இத்தகைய சந்தர்ப்பத்தில் சிக்கி அலை கழிக்கப்படுவதையும் அப்போது அவர் தெரிவித்தார்.  இந்திய தூதரகங்கள் இந்த விஷயங்களில் தலையிட்டு மீனவர்களை உடனடியாக இந்தியாவிற்கு பத்திரமாக திருப்பி அனுப்ப வழிவகை செய்ய வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

    • இலங்கைக்கு உதவுவதில் இந்தியாவின் பங்கு குறித்த விவாதம் நடைபெற்றது
    • இலங்கை பொருளாதார நெருக்கடி குறித்து மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது.

    பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இலங்கையில், உணவு, மருந்துகள், சமையல் எரிவாயு மற்றும் எரிபொருள் போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் பற்றாக்குறை காணப்படுவதால் அந்நாட்டு பொதுமக்கள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இலங்கைக்கு கடன் உதவித் திட்டத்தின் கீழ், எரிபொருள், எரிவாயு, உரம் மற்றும் உணவு பொருள்களை வழங்கி இந்தியா உதவி வருகிறது.

    இந்நிலையில் இலங்கை நிலைமை குறித்து வெளியுறவுத் துறை மந்திரி எஸ் ஜெய்சங்கர் தலைமையில் டெல்லியில் இன்று வெளியுறவு விவகாரங்களுக்கான ஆலோசனைக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் வெளியுறவுத் துறை இணை மந்திரிகள் முரளீதரன், மீனாட்சி லேகி, ராஜ்குமார் ரஞ்சன் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    மேலும் பாஜகவை சேர்ந்த ராஜ்தீப் ராய் மற்றும் ஜிவி எல் நரசிம்மராவ் சிவசேனாவின் பிரியங்கா சதுர்வேதி, திமுக எம்பி திருச்சி சிவா, பிஜு ஜனதா தளம் சார்பில் சுஜீத் குமார் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    இலங்கை பொருளாதார நெருக்கடி, அந்நாட்டில் வெளியேறி இந்தியாவிற்கு வருவோர் உள்ளிட்டவை குறித்து அரசு உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் இந்த ஆலோசனை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

    பல்வேறு விவகாரங்கள் மற்றும் இலங்கைக்கு உதவுவதில் இந்தியாவின் பங்கு குறித்த சாதகமான சூழ்நிலை குறித்து விவாதம் நடைபெற்றதாக மத்திய மந்திரி ஜெய்சங்கர் தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டார்.

    இந்த கடினமான நேரத்தில் நமது அண்டை நாடான இலங்கையுடன் நிற்பதன் அவசியத்திற்கு இந்த ஆலோசனை கூட்டத்தில் ஒருமித்த ஆதரவு தெரிவிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ×