search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "farmer happy"

    கரூர் மாவட்டத்தில் உற்பத்தி குறைவால் தேங்காய் பருப்பு விலை உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    வேலாயுதம்பாளையம்:

    கரூர் மாவட்டம், நொய்யல், மரவாபாளையம், சேமங்கி, குளத்துப்பாளையம், வேட்டமங்கலம், ஒரம்புபாளையம், நல்லிக்கோவில் திருக்காடுதுறை, தவுட்டுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் நிலங்களில் தென்னை பயிரிட்டு உள்ளனர். இதில் விளையும் தேங்காய்களை உடைத்து அதில் உள்ள தேங்காய் பருப்புகளை நன்கு உலர வைத்து திங்கட்கிழமை செயல்படும்  சாலைப்புதூர் ஒழுங்கு முறை விற்பனை மையத்திற்கு கொண்டு சென்று, அங்கு ஏலம் மூலம் விற்பனை செய்கின்றனர். 

    தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகளும், அதேபோல் பிரபல எண்ணெய் நிறுவனங்களில் இருந்தும் ஏஜெண்ட்கள் வந்திருந்து ஏலம் எடுத்து செல்கின்றனர். மேலும் வியாபாரிகள் தேங்காய்களை லாரிகள் மூலம் கேரளா, ஆந்திரா, கர் நாடகா, உத்திரபிரதேசம் உள்ளிட்ட  பல்வேறுவெளி மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கின்றனர். 

    கடந்த வாரம் 100 கிலோ கொண்ட ஒரு மூட்டை தேங்காய் பருப்பு ரூ.9200-க்கு வாங்கி சென்றனர். இந்த வாரம் 100 கிலோ கொண்டதேங்காய்பருப்பு ரூ.9 ஆயிரத்து 500-க்கு வாங்கி சென்றனர். தேங்காய் உற்பத்தி குறைவின் காரணமாக தேங்காய்பருப்பு விலை அதிகரித்துள்ளது. இதனால்  விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
    டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் நேற்று மழை பெய்தது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டத்தில் நேற்று பரவலாக பல இடங்களில் மழை பெய்தது. குறிப்பாக தஞ்சை, கும்பகோணம், திருவிடைமருதூர், ஒரத்தநாடு, பாபநாசம், திருவையாறு உள்ளிட்ட இடங்களில் நேற்று இரவில் மழை பெய்தது. சுமார் 40 நிமிடங்கள் வரை இந்த மழை நீடித்தது.

    இதேபோல் திருவாரூர் மாவட்டத்திலும் திருவாரூர், மன்னார்குடி, கோட்டூர், பேரளம், முத்துப்பேட்டை, நீடாமங்கலம், வலங்கைமான் ஆகிய பகுதிகளில் மழை பெய்தது. இதனால் சாலையோரங்களில் வெள்ள நீர் பெருக்கெடுத்து சென்றது.

    நாகை மாவட்டத்தில் நாகை, வேதாரண்யம், சீர்காழி, மயிலாடுதுறை, வேதாரண்யம், தலைஞாயிறு, மணல்மேடு ஆகிய இடங்களில் நேற்று இரவு மழை பெய்தது.

    வேதாரண்யத்தில் பெய்த மழையால் உப்பு உற்பத்தி தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் மயிலாடுதுறை அருகே மணக்குடி கிராமத்தில் உள்ள நேரசி நெல் கொள்முதல் நிலையத்தில் வெளியே அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமானது.

    தற்போது காவிரி , வெண்ணாறு, கொள்ளிடத்தில் தண்ணீர் சென்றாலும் டெல்டா மாவட்டங்களில் உள்ள கடைமடை பகுதிகளுக்கு இன்னும் செல்லவில்லை. இதனால் சம்பா சாகுபடி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

    இந்த நிலையில் தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் பெய்த மழையால் பாசனத்துக்கு தண்ணீருக்காக ஏங்கி நின்ற கடைமடை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மழை தொடர்ந்து பெய்தால் நல்லது என்று அவர்கள் தெரிவித்தனர்.

    டெல்டா மாவட்டங்களில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    முள்ளியாறு - 37.4, கோரையாறு - 32.4, மன்னார்குடி - 29.6, வேதாரண்யம் - 28.4, மஞ்சலாறு - 24.6, தலைஞாயிறு - 21.8, சீர்காழி - 17.2, ஒரத்தநாடு - 15.4, திருவாரூர் - 14.4, வலங்கைமான் - 7.4, நாகை - 4.3.


    வேலூரில் நேற்று இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    வேலூர்:

    வேலூரில் கோடை காலத்தில் தான் எப்போதும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். அப்போது 110 டிகிரி வரை வெயில் அளவு பதிவாகும்.

    இந்தாண்டு கோடை காலம் முடிந்த பின்னரும் வெயில் சுட்டெரித்து வருகிறது. ஜூலை மாதத்தின் கடைசி வாரத்தில் வெயில் 100 டிகிரியை தொட்டது. அதைத்தொடர்ந்து இந்த மாதத்தின் முதல்வாரம் முதல் தொடர்ந்து சில நாட்கள் 100 டிகிரிக்கு மேல் வெயிலின் அளவு பதிவானது.

    நேற்று காலை 10 மணிக்கேவெயில் வாட்டி எடுத்தது. மதியம் 2 மணியளவில் 99.9 டிகிரி வெயில் அளவு பதிவானது.

    இந்த நிலையில் மாலை 4.30 மணியளவில் வேலூர் பகுதியில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்தன. தொடர்ந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. 5 மணியளவில் மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து மிதமாக பெய்த மழை சிறிது நேரத்தில் இடி, மின்னலுடன் பெய்தது. இவ்வாறாக சுமார் 1½ மணி நேரம் பலத்த மழை பெய்தது. அதைத்தொடர்ந்து விட்டு, விட்டு மழை பெய்து கொண்டிருந்தது.

    பலத்த மழை காரணமாக புதிய, பழைய பஸ் நிலையங்கள், ஆரணி சாலை, காமராஜர் சிலை அருகே மற்றும் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியது. அதனால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு உள்ளாகினர். அதேபோன்று அலுவலக வேலை முடிந்து வீடுகளுக்கு சென்றவர்களும் அவதி அடைந்தனர்.

    பலத்த மழையால் வேலூரில் வெப்பம் தணிந்தது. அதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    ஓமலூர் பகுதிகளில் வெண்டை விளைச்சல் அமோகமாக இருப்பதால் அதிக அளவில் பயிரிட விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் மற்றும் காடையாம்பட்டி பகுதி விவசாயம் சார்ந்த பகுதியாகும். இங்கு அதிக அளவில் கரும்பு, வெண்டைக்காய், நெல், மஞ்சள், மரவள்ளிக்கிழங்கு, சாமந்திப் பூ, குண்டுமல்லி, உள்ளிட்ட பயிர்கள் பயிரிடப்படுவது வழக்கம்.

    மேலும் வறட்சியான பகுதிகளில் குறைந்த அளவு தண்ணீரை கொண்டு காய்கறிகள் பயிரிட்டுள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெண்டை பயிர் அதிக அளவில் விவசாயிகள் சாகுபடி செய்தனர்.

    தற்போது வெண்டை பயிர் அறுவடைக்கு வந்துள்ளது. தொடர்ந்து இரண்டு மாதங்கள் வரை அறுவடை செய்யலாம். தற்போது ஓமலூர் மற்றும் காடையாம்பட்டி பகுதியில் ஒரு கிலோ வெண்டை ரூ.15 முதல் 20 ரூபாய் வரை விற்பனையாவதால் நல்ல லாபம் கிடைப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர். இது குறித்து சரவணன் என்ற விவசாயி கூறும்போது, வெண்டை எந்த பருவத்தில் வேண்டுமானாலும் பயிர் செய்யலாம். வெண்டை விதை ஊன்றப்பட்டு 45 நாட்களில் அறுவடைக்கு தயாராகும். இதற்கு வாரம் ஒரு முறை தண்ணீர் பாய்ச்சினால் போதுமானது. தினமும் வெண்டைக்காயை பறித்து உழவர் சந்தை மற்றும் மார்க்கெட்டுகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகிறோம் விளைச்சல் அமோகமாக இருப்பதால் ஓமலூர் பகுதிகளில் வெண்டை அதிக அளவில் பயிரிட விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    கரூர் மாவட்டத்தில் மரவள்ளிக்கிழங்கு விலை தொடர்ந்து உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    வேலாயுதம்பாளையம்:

    கரூர் மாவட்டம், நொய்யல் வேட்டமங்கலம், ஒரம்புபாளையம், ஓலப் பாளையம், நல்லிக்கோவில், கவுண்டன் புதூர், குளத்துப் பாளையம், புன்னம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் மரவள்ளிக் கிழங்கு பயிரிட்டுள்ளனர்.  

    இப்பகுதிகளில் விளையும் மரவள்ளிக்கிழங்குகளை நாமக்கல் மாவட்டம், புதன் சந்தை, புதுச்சத்திரம், செல்லப்பம்பட்டி, மின்னாம் பள்ளி, கீரனூர், நாமகிரி பேட்டை, தொ. ஜேடர்பாளையம், ஆத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வரும் சவ்வரிசி தயார் செய்யும்  கிழங்கு மாவு மில்களுக்கு புரோக்கர்கள் மூலம் டன் கணக்கில் வாங்கி அனுப்பி வைக்கின்றனர்.  மரவள்ளிக்கிழங்குகளை (டார்ச்) பாய்ண்ட் அடிப்படையில் வாங்குகின்றனர்.  

    கிழங்குகளில் எத்தனை பாய்ண்ட் டார்ச் சத்து இருக்கின்றதோ அதற்கு தகுந்தாற்போல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.  அதே போல் சவ்வரிசி விலை உயரும் போது மரவள்ளி கிழங்குக்கு விலை உயர்வும், வீழ்ச்சி அடையும் போது விலை குறைத்தும் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.  சவ்வரிசி விலையை  சேகோசர்வ் மூலம் நிர்ணயம் செய்யப்படுகிறது.  

    கடந்த வாரம் ஜவ்வரிசி தயாரிக்கும் மில் அதிபர்கள் ஒரு டன் மரவள்ளிக்கிழங்கை ரூ. 6 ஆயிரத்து 500க்கு வாங்கிச்சென்றனர்.  ஜிப்சம் தயாரிப்போர் ஒரு டன் ரூ.8,000 ஆயிரத்திற்கு வாங்கிச் சென்றனர். இந்த வாரம் ஜவ்வரிசி தயாரிக்கும் மில் அதிபர்கள் ஒரு டன் மரவள்ளிக்கிழங்கு ரூ.7,500-க்கும் அதேபோல் ஜிப்ஸ் தயாரிப்போர்  ஒரு டன் ரூ.9,500-க்கும் வாங்கிச் சென்றனர். ஜவ்வரிசி விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், மரவள்ளிக்கிழங்கின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    விளைச்சல் குறைந்துள்ளதால் சின்ன வெங்காயம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    நாகர்கோவில்:

    நாகர்கோவிலில் வடசேரி கனகமூலம் சந்தை, அப்டா மார்க்கெட்டுகளில் வெளியூர்களில் இருந்து காய்கறிகள் கொண்டுவந்து விற்பனை செய்யப்படுகிறது.

    கடந்த 2 மாதத்திற்கு முன்பு சின்ன வெங்காயத்தின் விலை மிகவும் அதிகமாக உயர்ந்து காணப்பட்டது. அப்போது ஒரு கிலோ ரூ.135-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதன்பிறகு படிப்படியாக விலை குறைந்தது. இந்த நிலையில் மீண்டும் சின்ன வெங்காயத்தின் விலை கிடு கிடுவென்று உயர்ந்துள்ளது. ஒரு வாரத் திற்கு முன்பு கிலோ ரூ.35-க்கு விற்பனையான சின்ன வெங்காயம் இன்று ஒரு கிலோ ரூ.70-ஆக உயர்ந்துள்ளது.

    திண்டுகல் பகுதியில் இருந்து அதிகளவு குமரி மாவட்டத்திற்கு சின்ன வெங்காயம் கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. தற்போது அங்கு சின்னவெங்காயம் விளைச்சல் குறைந்துள்ளதால் விலையும் ஏறுமுகமாக உள்ளது. அதே சமயம் ஆந்திரா சின்ன வெங்காயம் 3 கிலோ ரூ.100-க்கு விற்பனையாகிறது.

    இதேபோல காய்கறிகள் விலையும் உயர்ந்து காணப்படுகிறது. பீன்ஸ் விலை 2 மடங்கு உயர்ந்துள்ளது. ரூ.40-க்கு ஒரு கிலோ பீன்ஸ் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இன்று கிலோ ரூ.82-ஆக உள்ளது. இதே போல மற்ற காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ளது. ஒரு கிலோ தக்காளி ரூ.28, கேரட் ரூ.42, வெள்ளரி ரூ.28, தடியங்காய் ரூ.15, கத்தரிக்காய் ரூ.36, புடலங்காய் ரூ.25, பீட்ரூட் ரூ.20, கோழி அவரை ரூ.50, இஞ்சி ரூ.95, முருங்கக்காய் ரூ.40-க்கு விற்பனையானது.
    அமராவதி அணை தண்ணீர் கரூருக்கு வந்ததால் ஆழ் குழாய் கிணறுகளில் நீர் மட்டமும் உயரும் என்பதால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    கரூர்:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அமராவதி அணை உள்ளது. 90 அடி உயரமும், 4,047 மில்லியன் கன அடி கொள்ளளவும் கொண்ட இந்த அணையில் நேற்று முன்தினம் காலை நிலவரப்படி 62 அடி நீர் மட்டம் இருந்தது. 
    அமராவதி நீரை நம்பி கரூர், திருப்பூர் மாவட்டங் களில் 54 ஆயிரம் ஏக்கர் பாசன நிலங்கள் உள்ளன. குடிநீருக்காகவும், அமராவதி ஆற்றையே மக்கள் சார்ந்துள்ளனர். 

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருவதால் நீர்வரத்து அதிகரித்தது. அணையின் நீர்மட்டமும் உயர்ந்துள்ளது. இதைத்தொடர்ந்து குடிநீருக்காக அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி அமராவதி அணையில் இருந்து கடந்த 13-ந்தேதி விநாடிக்கு 2,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. 

    நேற்று முன்தினம் நீர் வெளியேற்றம் 1,700 கன அடியாக குறைக்கப்பட்டது. இந்த அளவு படிப்படியாக குறைக்கப்பட்டு 10 நாட்களுக்கு திறக்கப்படும். அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர், கரூர் மாவட்ட எல்லைப்பகுதியான சின்னதாராபுரம் அருகே உள்ள அணைபுதூர் தடுப்பணையை நேற்று முன்தினம் வந்தடைந்தது. 

    பிறகு தடுப்பணையை தாண்டி கரூருக்கு தண்ணீர் வந்தது. இதன் காரணமாக கரூர் மாவட்டத்தில் குடிநீர் பிரச்சனை சீராக வாய்ப்புள்ளது. ஆழ் குழாய் கிணறுகளில் நீர் மட்டமும் உயரும் என்பதால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
    டெல்டா மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கொட்டி தீர்த்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

    தஞ்சை மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களாக கோடை வெயில் வறுத்தெடுத்தது. இந்த நிலையில் கடந்த வாரம் முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

    தஞ்சையில் நேற்று பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. மாலை நேரத்தில் திடீரென கருமேகங்கள் திரண்டு வந்தன. மாலை 4.30 மணி அளவில் லேசான தூறலுடன் மழை பெய்யத் தொடங்கியது. 5 மணி அளவில் பலத்த மழையாக பெய்ய ஆரம்பித்தது. இடி-மின்னல் எதுவும் இல்லாமல் பெய்த இந்த மழை 6.30 மணி வரை நீடித்தது. 1½ மணி நேரம் கொட்டித்தீர்த்த இந்த மழையினால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    மேலும் இரவிலும் மழை தூறிக்கொண்டே இருந்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    தஞ்சை ரெயில்வே கீழ்பாலத்தில் வழக்கம்போல் தண்ணீர் தேங்கி நின்றதால் அந்த வழியாக போக்குவரத்து நிறுத்தப்பட்டு மாற்று வழியில் இயக்கப்பட்டன. மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்களில் சிலர் மட்டும் தேங்கி நின்ற தண்ணீரையும் பொருட்படுத்தாமல் ரெயில்வே கீழ்பாலம் வழியாகவே சென்றனர். அவர்களால் முழுமையாக தண்ணீரை கடந்து வர முடியாமல் மோட்டார் சைக்கிள் நடுவழியில் நின்று விட்டது.

    தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே பெரியார் சிலை முன்பு குளம்போல் தண்ணீர் தேங்கி நின்றது.

    மழையின் காரணமாக தஞ்சை மேலவீதியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த தண்ணீர் அகழியில் சென்று சேரும் வகையில் வடிகால் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அந்த வடிகாலில் அடைப்பு ஏற்பட்டதால் மேலவீதி மூலை அனுமார் கோவில் முன்பு குளம்போல் தண்ணீர் தேங்கியதுடன், கோவிலுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. உற்சவர் சாமி இருக்கும் இடம் வரை தண்ணீர் தேங்கி நின்றது.

    இதேபோல் திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப் பூண்டி, மன்னார்குடி ஆகிய பகுதிகளில் நேற்று மழை பெய்தது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    நாகை மாவட்டத்தில் சீர்காழி, கொள்ளிடம், வைத்தீஸ்வரன் கோவில் பகுதிகளில் நேற்று மாலை மழை பெய்தது. சுமார் 1 மணி நேரம் மழை பெய்ததால் தாழ்வான பகுதிகளில் மழை தேங்கி நின்றது.

    சீர்காழி அருகே கொள்ளிடம் பகுதியை சேர்ந்தவர் பசீர் அகமது (வயது 50). நேற்று பெய்த மழை காரணமாக இவரது வீட்டில் இருந்த டியூப் லைட் திடீரென உயர்மின் அழுத்தம் காரணமாக வெடித்தது. இதனால் தீ பிடித்து எரிந்ததால் வீட்டில் இருந்த சோபா, மற்றும் கட்டிலில் தீ பரவியது. இதில் வீட்டில் இருந்த சுமார் ரூ.1 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலானது. நல்லவேளையாக வீட்டில் இருந்த அனைவரும் வெளியே வந்து தப்பி விட்டனர்.

    மேட்டூர் அணையில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால் இந்த ஆண்டு டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்படவில்லை.

    இதனால் ஆற்றுப்பாசனம் மூலம் குறுவை நெல் சாகுபடி செய்யப்படவில்லை. ஆழ்குழாய் கிணறு மூலம் மட்டுமே குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

    இந்த சாகுபடி செய்த விவசாயிகள் நேற்று பெய்த இந்த மழையினால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.கடும் வறட்சியின் காரணமாக தஞ்சையில் பல்வேறு இடங்களில் நீர்மட்டம் குறைந்து குடிநீர் பற்றாக்குறை நிலவுகிறது. மழை தொடர்ந்து பெய்தால் நிலத்தடி நீர்மட்டம் உயர வாய்ப்பு உள்ளது.

    தற்போது கர்நாடகாவில் பெய்து வரும் மழையால் கபினி அணை நிரம்பியுள்ளது. இதனால் காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அத்துடன் டெல்டா மாவட்டங்களில் மழையும் பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இந்த மழை தொடர்ந்து பெய்ய வேண்டும் என அனைத்து தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர்.

    சத்திரப்பட்டி பகுதியில் சின்னவெங்காயம் விளைச்சல் அதிகரிப்பு மற்றும் விலை உயர்வு காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    சத்திரப்பட்டி:

    ஒட்டன்சத்திரம் தாலுகா, சத்திரப்பட்டி, விருப்பாட்சி, வீரலப்பட்டி, தாசரிபட்டி, புதுக்கோட்டை ஆகிய பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் வெங்காயம் நடவு செய்துள்ளனர். ரம்ஜான், திருமண விழாக்கள், கேரளா ஏற்றுமதி போன்ற காரணங்களினால் சின்னவெங்காய விலை உயர்ந்துள்ளது.

    சத்திரப்பட்டி பகுதியில் சின்னவெங்காயம் விளைச்சல் அதிகரிப்பு மற்றும் விலை உயர்வு காரணமாக சின்னவெங்காயம் நடவு செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கடந்த மாதம் ஒரு கிலோ சின்னவெங்காயம் ரூ.27 முதல் ரூ.30 வரை ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் மொத்த வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்பட்டது.

    தற்போது ரம்ஜான் பண்டிகை, திருமண விழாக்கள் காரணமாக வெங்காயத்தின் தேவை அதிகரித்தது. இதனால் உள்ளூர் மற்றும் கேரளா மாநில வியாபாரிகள் அதிகளவு வெங்காயத்தை ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டிலிருந்து கொள்முதல் செய்து வருகின்றனர்.

    இதனால் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் சற்றே நிம்மதி அடைந்துள்ளனர். வரும் நாட்களில் மேலும் விலை உயரும் என்ற நம்பிக்கையில் வெங்காயம் பயிரிட்டுள்ள விவசாயிகள் உள்ளனர்.

    கொடைக்கானலில் பெய்து வரும் தொடர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    பெருமாள்மலை:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் கடந்த வருடம் கடுமையான வறட்சி ஏற்பட்டது. இதனால் லாரிகளில் தண்ணீரை விலைக்கு வாங்கும் சூழல் ஏற்பட்டது. இதன் காரணமாக லாட்ஜ் மற்றும் ஓட்டல்களில் கட்டணமும் உயர்த்தப்பட்டதால் சுற்றுலா பயணிகள் அவதியடைந்தனர்.

    இந்த வருடம் கோடை மழை கைகொடுத்ததால் வெள்ளிநீர்வீழ்ச்சி, வட்டக்கானல் நீர்வீழ்ச்சி உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது. மேலும் கொடைக்கானல் மலைப்பகுதியில் புதுஅருவிகள் உருவானது காண்பவரை வெகுவாக ஈர்த்தது.

    கடந்த 2 நாட்களாகவே நகர்பகுதியில் சாரல்மழை பெய்தது. நேற்று பிற்பகலில் கருமேகங்கள் சூழ்ந்து சாரலாக ஆரம்பித்து கனமழை பெய்தது. இதனால் நகராட்சி நீர்தேக்கம், மனோரஞ்சிதம் உள்ளிட்ட இடங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தற்போது நகர்பகுதியில் குடிநீர் தட்டுப்பாட்டிற்கு ஓரளவு தீர்வு காணப்பட்டுள்ளது.

    இந்த மழை தொடர்ந்து பெய்துவரும் பட்சத்தில் விவசாயத்தை நம்பியுள்ள மக்களுக்கு ஏதுவாக இருக்கும். இந்த மழையை நம்பி விவசாயிகள் கேரட், பீன்ஸ், உருளைகிழங்கு, முட்டைகோஸ், சவ்சவ் உள்ளிட்ட காய்கறிகளை பயிரிட்டுள்ளனர். தொடர்ந்து பெய்து வரும் மழையால் காய்கறிகள் செழித்து வளரதொடங்கியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ஒட்டன்சத்திரம் பகுதியில் பலத்த மழை பெய்த தால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

    ஒட்டன்சத்திரம்:

    திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் கடந்த 3 ஆண்டுகளாக கடும் வறட்சி நீடித்தது. எனவே எப்போது மழை பெய்யும் என மக்கள் கவலையில் இருந்தனர். மாவட்டத்தில் ஒட்டன்சத்திரம் பகுதியில் தமிழகத்திலேயே மிகப் பெரிய காய்கறி சந்தை உள்ளது.

    இந்த சந்தையை சுற்றி ஏராளமான விவசாயிகள் காய்கறி சாகுபடி செய்து வருகின்றனர். பருவ மழை பொய்த்துப் போனதால் விவசாயத்தில் எதுவும் கிடைக்காததால் வறுமையில் வாடினர். இந்த ஆண்டு ஓரளவு கிணற்றில் நீர் இருப்பு உள்ளது. அதுவும் போதுமானதாக இல்லை.

    மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தாலும் ஒட்டன்சத்திரம் நகர் பகுதியில் மழை தூறல் எட்டிப்பார்க்கவில்லை. நேற்று மாலை கரு மேகங்கள் சூழ்ந்தது. பின்னர் திடீரென ஒட்டன்சத்திரம் பகுதியில் பலத்த மழை கொட்டியது. சுமார் 2 மணி நேரம் இந்த மழை பெய்ததால் மழை நீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது.

    அதோடு ஓரளவு வெப்ப மும் குறைந்துள்ளது. இதே போல ஒட்டன் சத்திரம் பகுதியை சுற்றியுள்ள விருப்பாட்சி, அத்திக் கோம்பை, வடகாடு, சாலைப்புதூர், கேதையறும்பு, அம்பிளிக்கை, கரியாம்பட்டி, கள்ளிமந்தயம், காவேரியம்மாபட்டி பகுதியிலும் பலத்த மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

    கொடைக்கானலிலும் பரவலாக மழை பெய்தது. இதனால் சுற்றுலா பயணிகள் குதூகலித்தனர்.

    வடகாடு மலைப்பகுதியில் காலி பிளவர் வரத்து குறைவு காரணமாக விலை உயர்ந்து உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    சத்திரப்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் சத்திரப்பட்டி அருகே வடகாடு, வண்டிப்பாதை, பால்கடை, கண்ணணூர், மேட்டுப்பட்டி, பெத்தேல்புரம், புலிக்குத்திக்காடு, சிறுவாட்டுக்காடு உள்பட 14 மலைக்கிராமங்களில் ஏராளமான விவசாயிகள் காலிப்பிளவர் நடவு செய்துள்ளனர்.

    தற்போது அறுவடை நடைபெற்று வருகிறது. மலைப்பகுதிகளில் காலிப்பிளவர் வரத்து குறைவு காரணமாக விலை 2மடங்கு உயர்வடைந்துள்ளது. கடந்த மாதம் 15 காலிப்பிளவர் பூக்கள் கொண்ட ஒரு மூட்டை ரூ.130-க்கு ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் மொத்த வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்பட்டது.

    தற்போது காலிப்பிளவர் வரத்து குறைவு காரணமாக ஒரு பை காலிப்பிளவர் ரூ.250-க்கு மொத்த வியாபாரிகளால் கொள்முதல் செய்வதால் மலைப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    ×