என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "FIR"

    • புதிய குற்றவியல் சட்டங்கள் கடந்த ஜூலை மாதமே அமலுக்கு வந்துவிட்டது.
    • இந்த வழக்கில் மட்டும் விபரங்கள் எப்படி கசிந்தது ? என்ற கேள்வி எழுகிறது.

    சி.பி.ஐ (எம்) மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அண்ணா பல்கலை கழகத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை பற்றிய முதல் தகவல் அறிக்கையின் விபரங்கள் வெளிவந்த வழக்கில், தேசிய தகவல் மையத்தை வழக்கு விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்து விசாரணை நடத்த வேண்டுமென சி.பி.ஐ (எம்) மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

    அண்ணா பல்கலை கழகத்தில் நடந்த பாலியல் வன்கொடுமையின் முதல் தகவல் அறிக்கை விபரங்கள், வன்கொடுமைக்குள்ளான பெண் விபரங்களோடு வெளியாகி பரவலான கண்டனம் எழுந்தது. இவ்வாறு குற்றமிழைத்த அதிகாரிகள் உள்ளிட்டு கைது செய்து நடவடிக்கை எடுக்கவேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், சென்னை உயர் நீதிமன்றமும், பல அமைப்புகளும் இது தொடர்பாக கடுமையாக எதிர்வினையாற்றியது.

    இந்த நிலையில், முதல் தகவல் அறிக்கை வெளிவந்த குற்றத்திற்கு ஒன்றிய அரசின் தேசிய தகவல் மையமே காரணம் என்று அந்த முகமையின் விளக்கம் மூலம் தெரியவந்துள்ளது. அதன்படி, புதிய குற்றவியல் சட்டங்களின் பிரிவுகளும், பெயரும் மாற்றப்பட்டிருக்கும் நிலையில் முதல் தகவல் அறிக்கை விபரங்களை மறைக்க முடியாமல் போனதாக தெரிவிக்கின்றன.

    அவ்வாறானால், புதிய குற்றவியல் சட்டங்கள் கடந்த ஜூலை மாதமே அமலுக்கு வந்துவிட்ட நிலையில் அப்போதிருந்து நடைபெற்ற எல்லா வழக்குகளிலும் பாதிக்கப்பட்டோர் விபரங்கள் இப்படி கசியவில்லையே, இந்த வழக்கில் மட்டும் விபரங்கள் எப்படி கசிந்தது ? என்ற கேள்வி எழுகிறது.

    எனவே, கடுமையான குற்றத்திற்கு காரணமான ஒன்றிய தகவல் முகமை மீதும் வழக்கு பதிய வேண்டுமென்றும், இந்த பாலியல் வன்கொடுமை வழக்கின் விபரங்களை வெளியிட்டு அரசியல் ஆதாயம் தேடும் சதி நோக்கம் உள்ளதா என்பதையும் விசாரிக்க வேண்டுமென சி.பி.ஐ(எம்) மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

    மேலும், மன உளைச்சலுக்கும், கடும் பாதிப்புக்கும் ஆளாகியுள்ள பெண்ணுக்கு உயர்நீதிமன்றத்தின் உத்தரவுபடி நிவாரணத்தை தாமதமின்றி வழங்க வேண்டுமென்று சி.பி.ஐ(எம்) மாநில செயற்குழு கேட்டுக்கொள்கிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • விளம்பரப் பலகைகளை நிறுவ அரசு நிதியை தவறாகப் பயன்படுத்தியதாக புகார்
    • மார்ச் 18 ஆம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்க போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    அரசு நிதியை தவறாக பயன்படுத்தியதற்காக அரவிந்த் கெஜ்ரிவால் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய டெல்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    2019 ஆம் ஆண்டு டெல்லியின் துவாரகா பகுதியில் பெரிய விளம்பரப் பலகைகளை நிறுவ அரசு நிதியை தவறாகப் பயன்படுத்தியதாக கூறப்படும் வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இந்த புகாரில் கெஜ்ரிவால் ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் எம்எல்ஏ குலாப் சிங் மற்றும் துவாரகா கவுன்சிலர் நிதிகா சர்மா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து அதன் அறிக்கையை மார்ச் 18 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    • நேதாஜியின் இறந்த தேதி குறித்த குறிப்புக்கு பா.ஜ.க. கடும் கண்டனத்தை தெரிவித்தது.
    • பா.ஜ.க. விமர்சனத்துக்கு ராகுல் காந்தியும், காங்கிரசும் இதுவரை பதில் அளிக்கவில்லை.

    கொல்கத்தா:

    சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் 128-வது பிறந்தநாளை முன்னிட்டு, காங்கிரஸ் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி கடந்த வியாழக்கிழமை அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.

    இதுதொடர்பாக ராகுல் காந்தி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட செய்தியில், மகத்தான புரட்சியாளரான நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு இதயப்பூர்வமான அஞ்சலி. நேதாஜியின் தலைமை, தைரியம், சமூக நீதிக்கான அவரது போராட்டம் மற்றும் அவரது பங்களிப்பு சகிப்புத்தன்மை மற்றும் உள்ளடக்கம் இன்றும் ஒவ்வொரு இந்தியனுக்கும் ஊக்கமளிக்கிறது என பதிவிட்டார்.

    மேலும், நேதாஜியின் படத்துடன் அவரது வாழ்நாள் ஜனவரி 23, 1897-ஆகஸ்ட் 18, 1945 என குறிப்பிட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

    நேதாஜியின் இறந்த தேதி குறித்த இந்தக் குறிப்புக்கு பா.ஜ.க. கடும் கண்டனத்தை தெரிவித்தது. பா.ஜ.க.வின் விமர்சனத்துக்கு ராகுல் காந்தியும், காங்கிரஸ் கட்சியும் இதுவரை பதில் அளிக்கவில்லை.

    இந்நிலையில், நேதாஜியின் இறந்த தேதி குறித்த ராகுல் காந்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி அகில பாரதியஇந்து மகாசபை சார்பில் தெற்கு கொல்கத்தாவில் உள்ள பவானிபூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, போலீசார் ராகுல் காந்தி மீது வழக்குப்பதிவு செய்தனர்.

    இதுதொடர்பாக, இந்து மகாசபை மாநில தலைவர் சந்திரசூட் கோஸ்வாமி கூறுகையில், ராகுல் காந்தியும் அவரது முன்னோர்களும் எப்போதும் நேதாஜியின் நினைவுகளை இந்திய மக்களின் நினைவிலிருந்து அழிக்க முயற்சி செய்கிறார்கள். அவரை இந்திய மக்கள் தண்டிப்பார்கள். எங்களைப் பொறுத்தவரை நேதாஜி பற்றிய தகவல்களை யாராவது திரிபுபடுத்த முயன்றால் எதிர்ப்பு தெரிவிப்போம் என கூறினார்.

    • கணவர் இல்லாத போதெல்லாம் இளைஞன் தனது வீட்டிற்கு வருவார்
    • இளைஞன் தனது மனைவியை விவாகரத்து செய்து தன்னை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்ததாக அப்பெண் குறிப்பிட்டுள்ளார்.

    மத்தியப் பிரதேசம் சத்தர்பூரில் வசிக்கும் திருமணமான பெண் ஒருவர், தன்னை பக்கத்து வீட்டை சேர்ந்த வீரேந்திர யாதவ் என்ற திருமணமான இளைஞர் திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பாலியல் வன்புணர்வு செய்ததாக புகார் அளித்தித்தார்.

    இதைத்தொடர்ந்து வீரேந்திர யாதவ் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். தன் மீதான எப்ஐஆரை எதிர்த்து வீரேந்திர யாதவ் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

    இந்த மனு  நீதிபதி எம்.எஸ்.பாட்டி அமர்வில் சமீபத்தில் விசாரணைக்கு வந்தது. வீரேந்திர யாதவ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், பாலியல் வன்கொடுமை வழக்குகள் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மேற்கோள் காட்டி, திருமணமான ஒரு பெண், பொய்யான வாக்குறுதி அளித்து உடலுறவுக்கு ஒப்புதல் பெறப்பட்டதாகக் கூற முடியாது என்று வாதிட்டார்.

    பதிவுசெய்யப்பட்ட எப்ஐஆரில் புகார் கொடுத்த பெண்ணுடைய வாக்குமூலத்தை நீதிபதி ஆராய்ந்தார். அதில், இளைஞனுடன் மூன்று மாதங்களாக தான் உறவு கொண்டிருந்ததாக அப்பெண் விவரித்துள்ளார். தனது கணவர் இல்லாத போதெல்லாம் இளைஞன் தனது வீட்டிற்கு வருவார் என்றும், அவர்கள் ஒருமித்த உடல் உறவுகளில் ஈடுபடுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    தங்கள் உறவில் வற்புறுத்தலோ அல்லது கட்டாயப்படுத்தலோ இல்லை எனவும் அந்த பெண்ணே கூறியுள்ளார். இளைஞன் தனது மனைவியை விவாகரத்து செய்து தன்னை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்ததாக அப்பெண் குறிப்பிட்டுள்ளார்.

    ஆனால் அந்தப் பெண் பொய்யான வாக்குறுதியின் பேரில் பாலியல் உறவு கொள்ள வற்புறுத்தப்பட்டதற்கான நேரடி அறிகுறி எதுவும் இல்லை என்று கூறிய நீதிபதி திருமணம் ஆன பெண்ணுக்கு பொய்யான திருமண வாக்குறுதியை அளித்து உடல் உறவுக்கு மனுதாரர் சம்மதம் பெற்றார் என்பது தவறான புரிதல் என கூறி அவர் மீதான எப்ஐஆரை ரத்து செய்து இளைஞனை விடுவிக்க உத்தரவிட்டார். 

    பிரதமருக்கு எதிராக அவதூறாக பேசியதாக ராகுல் காந்தி மீது பதிவான வழக்கில், தீர்ப்பை நிறுத்திவைத்து டெல்லி கோர்ட்டு உத்தரவிட்டது.
    புதுடெல்லி:

    பிரதமர் மோடி, ராணுவ வீரர்களின் ரத்தத்தின் பின்னால் ஒளிந்துகொள்வதாகவும், அவர்களது தியாகத்தை காசாக்குவதாகவும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடந்த 2016-ம் ஆண்டு அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

    இது தொடர்பாக ராகுல் காந்தி மீது வழக்கு பதிவு செய்ய போலீசாருக்கு உத்தரவிடுமாறு டெல்லி கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஜோகிந்தர் துலி என்ற வக்கீல் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் கடந்த 15-ந் தேதி போலீசார் பதில் மனு தாக்கல் செய்தனர்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சமர் விஷால் அடுத்த மாதம் (ஜூன்) 7-ந் தேதி வரை இந்த வழக்கில் தீர்ப்பை நிறுத்தி வைப்பதாக அறிவித்து நேற்று உத்தரவிட்டார்.
    மதுரை மத்திய சிறையில் போராட்டத்தில் ஈடுபட்டதாக 25 கைதிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். #MaduraiCentralPrison #MaduraiPrisoners
    மதுரை:

    மத்திய சிறையில் காவல் துறையினர் தங்களை துன்புறுத்துவதாக கூறி சிறையில் உள்ள கைதிகள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். சட்டைகளை அவிழ்த்துவிட்டு, சிறை கட்டிடத்தின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், தடுக்க சென்ற காவலர்கள் கற்களை வீசி தாக்கி உள்ளனர்.



    இதையடுத்து, சிறைத்துறை அளித்த புகாரின்பேரில், போராட்டத்தில் ஈடுபட்ட 25 கைதிகள் மீது 4 பிரிவின் கீழ் கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதிகாரிகளை பணி செய்ய விடாமல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. #MaduraiCentralPrison #MaduraiPrisoners

    ஆண்டிப்பட்டியில் வருமான வரி சோதனை நடத்திய அதிகாரிகளை தடுத்ததாக அமமுகவைச் சேர்ந்த சுமார் 150 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. #LokSabhaElections2019 #AndipattiITRaids
    ஆண்டிப்பட்டி:

    பாராளுமன்றத் தேர்தல் பிரசாரம் ஓய்ந்த நிலையில், இறுதிக்கட்ட பணப் பட்டுவாடாவை தடுப்பதற்காக தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அதேசமயம், கட்சி தலைவர்களின் செயல்பாடுகளை வருமான வரித்துறையினரும் கவனித்து வந்தனர்.

    இந்நிலையில், நேற்று இரவு ஆண்டிப்பட்டியில் அமமுக கட்சியின் ஒன்றிய அலுவலகத்தில், வாக்குக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. அவர்கள் அலுவலகத்தில் போலீசார் உதவியுடன் சோதனை செய்ய முயன்றனர்.

    அப்போது அமமுக கட்சியின் தொண்டர்கள் அவர்களை தடுத்தனர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது போலீசார் வானத்தை நோக்கி நான்கு முறை துப்பாக்கியால் சுட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அங்கு விடிய விடிய நடத்தப்பட்ட சோதனையில், ரூ.1.50 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.



    வருமான வரித்துறை அதிகாரிகளை தடுத்தது தொடர்பாக 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். அந்த கட்சியைச் சேர்ந்த சுமார் 150 பேர் அதிகாரிகளை பணிசெய்யவிடாமல் தடுத்தல், மிரட்டுதல் உள்பட 7 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு  செய்துள்ளனர். வருமான வரித்துறையினரை தடுத்த புகாரில் அமமுகவின் பேரூராட்சி செயலாளர் பொன்முருகன் கைது செய்யப்பட்டார். #LokSabhaElections2019 #AndipattiITRaids
    ஜெயப்பிரதா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் ஆசம் கான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. #LokSabhaElections2019 #AzamKhan
    லக்னோ:

    உத்தர பிரதேச மாநிலம் ராம்பூர் மக்களவைத் தொகுதியில் சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் ஆசம் கானை எதிர்த்து, பாஜக சார்பில் நடிகை ஜெயப்பிரதா போட்டியிடுகிறார். சமீபத்தில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய ஆசம் கான், தன்னை எதிர்த்து போட்டியிடும் நடிகை ஜெயப்பிரதா, காக்கி நிற உள்ளாடை அணிந்துள்ளதாக கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    ஆசம் கான் பேசிய இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில், அவருக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்தது. ஆசம் கானின் கருத்தை தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா சர்மாவும் கண்டித்துள்ளார். சர்ச்சை பேச்சு குறித்து விளக்கம் அளிக்கும்படி ஆசம் கானுக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.



    ஆனால், ஜெயப்பிரதா குறித்து அப்படி பேசவில்லை என்று கூறிய ஆசம் கான், தன் மீதான குற்றச்சாட்டை நிரூபித்தால் தேர்தலில் இருந்து விலகுவதாக கூறினார்.

    இந்நிலையில்,  ஜெயப்பிரதா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக ஆசம் கான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் பறக்கும் படை அளித்த புகாரின் அடிப்படையில், ஷகாபாத் காவல் நிலையத்தில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. #LokSabhaElections2019 #AzamKhan
    உத்தரபிரதேச மாநிலம் புலந்த்சாகரில் நடந்த வன்முறை தொடர்பாக 27 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #BulandshahrViolence
    புலந்த்சாகர்:

    உத்தரபிரதேச மாநிலம் புலந்த்சாகரில் பசுவதைக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தில் வன்முறை வெடித்தது. போராட்டக்காரர்கள், போலீசாரை நோக்கி கற்களை வீசி தாக்கியதுடன், புறக்காவல் நிலையம் மற்றும் அங்கிருந்த வாகனங்களுக்கும் தீ வைத்ததால் பதற்றம் அதிகரித்தது.

    இதையடுத்து போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் ஒருவர் உயிரிழந்தார். போராட்டக்காரர்கள் தாக்கியதில் போலீஸ் தரப்பில் இன்ஸ்பெக்டர் சுபோத் குமார் சிங் உயிரிழந்தார்.



    இந்த வன்முறை தொடர்பாக 27 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி உள்ளனர். போலீசாரின் முதல் தகவல் அறிக்கையில் அடையாளம் தெரியாத 60 பேரின் பெயர்களும் சேர்க்கப்பட்டுள்ளன. இதேபோல் பசுவைக் கொன்ற நபருக்கு எதிராக மற்றொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    விசாரணை தொடர்பாக காவல்துறை கூடுதல் இயக்குனர் பிரசாந்த் குமார் கூறுகையில், ‘புலந்த்சாகர் வன்முறை தொடர்பாக 2 பேரை காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகிறோம். போராட்டத்தில் வன்முறை ஏன் ஏற்பட்டது? இன்ஸ்பெக்டர் சுபோத் குமாரை மற்ற போலீசார் தனியே விட்டது ஏன்? என்பது குறித்து விசாரிப்பதற்காக சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது’ என்றார். #BulandshahrViolence
    சிபிஐ இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவுக்கு எதிரான வழக்கை விசாரித்து வந்த சிபிஐ அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். #CBIVsCBI #CBIOfficerTransfer #RakeshAsthana
    புதுடெல்லி:

    இறைச்சி ஏற்றுமதியாளர் மொயின் குரேஷி தொடர்புடைய வழக்கில் தொடர்புடைய ஐதராபாத் தொழிலதிபரை விடுவிக்க லஞ்சம் பெற்றதாக சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்து வந்த சிபிஐ அதிகாரிகளில் ஒருவரான மணிஷ் குமார் சின்கா மகாராஷ்டிர மாநிலம் நாக்பூருக்கு திடீரென மாற்றப்பட்டார்.



    இந்த இடமாற்ற உத்தரவை எதிர்த்து மணிஷ் குமார் சின்கா இன்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். தனது வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும், தனது இடமாற்றத்தை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்றும் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்விடம் முறையிட்டார்.

    கட்டாய விடுப்பில் அனுப்பியதை எதிர்த்து சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா தொடர்ந்த வழக்கு, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி எஸ்கே கவுல், கேஎம் ஜோசப் ஆகியோர் கொண்ட அமர்வில் நாளை விசாரணைக்கு வர உள்ளது. அப்போது தனது மனுவையும் சேர்த்து விசாரிக்க வேண்டும் என சின்கா கேட்டுக்கொண்டுள்ளார். எனவே, சின்காவின் மனு மீது நாளை விசாரணை நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. #CBIVsCBI #CBIOfficerTransfer #RakeshAsthana
    ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக வழக்கு பதிவு செய்ய சி.பி.ஐ.க்கு உத்தரவிடக்கோரி யஸ்வந்த் சின்கா, அருண் சோரி மற்றும் வக்கீல் பிரசாந்த் பூஷண் ஆகியோர் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். #FafaleDeal #YashwantSinha #ArunShourie #PrashantBhushan
    புதுடெல்லி:

    பிரான்ஸ் நாட்டிடம் இருந்து ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கு மத்திய அரசு செய்து கொண்ட ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்திருப்பதாக பா.ஜனதாவின் முன்னாள் மத்திய மந்திரிகளான யஸ்வந்த் சின்கா, அருண் சோரி ஆகியோர் முன்னாள் சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மாவை சந்தித்து இது தொடர்பாக கடந்த 4-ந்தேதி புகார் செய்தனர். ரபேல் ஒப்பந்தத்தில் குற்ற முறைகேடு நடந்திருப்பதாக அவர்கள் குற்றம் சாட்டியிருந்தனர்.



    இந்தநிலையில் ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக வழக்கு பதிவு செய்ய சி.பி.ஐ.க்கு உத்தரவிடக்கோரி யஸ்வந்த் சின்கா, அருண் சோரி மற்றும் வக்கீல் பிரசாந்த் பூஷண் ஆகியோர் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

    தங்கள் புகாரில் தெரிவித்த குற்றச்சாட்டுகள் குறித்து குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் விசாரித்து அது குறித்த அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்ய உத்தரவிடுமாறும் அவர்கள் தங்கள் மனுவில் கூறியிருந்தனர்.
    பெண்கள் கூறும் பாலியல் தொல்லை புகார்கள் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்பது தொடர்பாக தொடரப்பட்ட பொதுநல வழக்கை உடனடியாக விசாரிக்க நீதிபதிகள் மறுப்பு தெரிவித்தனர். #SupremeCourt #MeToo
    புதுடெல்லி:

    சினிமா துறை உள்ளிட்ட பல்வேறு துறை களைச் சேர்ந்த பெண்கள், தாங்கள் பாலியல் தொல்லைக்கு ஆளானது குறித்து ‘மீ டூ’ இயக்கத்தின் மூலம், புகார் கூறி வருகிறார்கள். நடிகர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பாலியல் புகார்களுக்கு ஆளாவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புகார் தெரிவிக்கும் பெண்களுக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துகள் தெரிவிக்கப்படுகின்றன.

    இந்த நிலையில், இந்த பிரச்சினை தொடர்பாக எம்.எல்.சர்மா என்ற வக்கீல் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்து உள்ளார். இது தொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘மீ டூ’ இயக்கத்தின் மூலம் பெண்கள் கூறும் பாலியல் தொல்லை புகார்கள் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்யுமாறு உத்தரவிட வேண்டும் என்றும், மேலும் அப்படி புகார் தெரிவிக்கும் பெண்களுக்கு தேவையான உதவிகளையும், பாதுகாப்பையும் வழங்குமாறு தேசிய பெண்கள் நல ஆணையத்துக்கு கட்டளையிட வேண்டும் என்றும் கூறப்பட்டு உள்ளது.

    சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி எஸ்.கே.கவுல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு மனுதாரர் எம்.எல்.சர்மா நேற்று ஆஜராகி, இந்த மனுவை அவசர வழக்காக கருதி உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அவரது கோரிக்கை ஏற்க மறுத்த நீதிபதிகள், உரிய நேரத்தில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று கூறினார்கள்.
    ×