என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Fireworks"

    • பல்வேறு காரணங்களால் 4 மாதங்கள் வரை அதிகபட்சமாக பட்டாசு உற்பத்தி தடைப்பட்டது.
    • சிவகாசியில் தயாரிக்கப்பட்ட பட்டாசுகள் லாரிகள் மூலம் இந்தியா முழுவதும் அனுப்பி வைக்கப்பட்டது.

    சிவகாசி :

    சிவகாசி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் உள்ள 1,070-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகளில் இந்த ஆண்டு தீபாவளிக்கு தேவையான பட்டாசுகள் தயாரிக்கப்பட்டன. இதில் பல்வேறு காரணங்களால் 4 மாதங்கள் வரை அதிகபட்சமாக பட்டாசு உற்பத்தி தடைப்பட்டது. இந்தநிலையில் இந்த ஆண்டுக்கு தேவையான பட்டாசுகளில் சுமார் 60 சதவீதம் மட்டுமே பட்டாசுகள் தயாரிக்கப்பட்டதாக உற்பத்தியாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    சிவகாசியில் தயாரிக்கப்பட்ட பட்டாசுகள் லாரிகள் மூலம் இந்தியா முழுவதும் அனுப்பி வைக்கப்பட்டது. பட்டாசுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்று உணர்ந்த சில வடமாநில பட்டாசு வியாபாரிகள் முன் கூட்டியே சிவகாசியில் உள்ள ஆலைகளில் பட்டாசுகளுக்கு ஆர்டர் கொடுத்துவிட்டு அதற்கான பணத்தையும் கொடுத்துவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.

    அதனால் வடமாநிலங்களுக்கு தேவையான பட்டாசுகள் முன்கூட்டியே அனுப்பி வைக்கப்பட்டது. தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்கு தேவையான பட்டாசுகள் முழுமையாக அனுப்பி வைக்க முடியாத நிலை ஏற்பட்டது. இருந்தபோதும் விருதுநகர் மாவட்டத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட ரூ.10 ஆயிரம் கோடி மதிப்புள்ள பட்டாசுகள் இந்தியா முழுவதும் விற்பனை ஆனதாக கூறப்படுகிறது. எதிர்பார்த்ததை போலவே பட்டாசு விற்பனை அதிகமாக இருந்ததால் சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • சிவகாசியில் கிடப்பில் போடப்பட்ட பட்டாசு ஆராய்ச்சி மையத்தை உடனே அமைக்க வேண்டும்.
    • பட்டாசு ஆலை உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    சிவகாசி

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி, திருத்தங்கல், வெம்பக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. பட்டாசு ஆலைகள் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் 8 லட்சம் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர்.

    நாட்டில் 90 சதவீத பட்டாசு உற்பத்தி சிவகாசியில் தயாரிக்கப்படுகிறது. சுற்றுச்சூழலை பாதுகாக்க பசுமை பட்டாசு தயாரிக்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டது.

    பட்டாசு தொழிலை மேம்படுத்துவதற்காக மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பட்டாசு ஆலை உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    அதன் பேரில் கடந்த ஆண்டு தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி கழக விஞ்ஞானிகளின் ஆலோசனைக்கூட்டம் சிவகாசியில் நடைபெற்றது. கூட்டத்தில் தலைமை விஞ்ஞானி சாதனா ராயலு, விஞ்ஞானி சரவணன் உள்பட ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பட்டாசு ஆலை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

    இதில் சிவகாசியில் பட்டாசு ஆலை வேதிப்பொருள் ஆராய்ச்சி மையம் தொடங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்று வெம்பக்கோட்டை ஒன்றியம் வெற்றிலையூரணி கிராமத்தில் பட்டாசு ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அறிவிப்பு செய்யப்பட்டு ஒரு வருடம் ஆகியும் பட்டாசு ஆராய்ச்சி மையம் அமைவதற்கான எவ்வித பணியும் தொடங்கப்படாமல் உள்ளது.

    பட்டாசு ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட்டால் பட்டாசு ஆலைகளில் பயன்படுத்தப்படும் வேதிப்பொருட்கள் பரிசோதனை செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்படும். அந்த சான்றுகளை பயன்படுத்தி வேதிப்பொருட்கள் இந்தியா முழுவதும் உள்ள கெமிக்கல் ஆலை மற்றும் பட்டாசு ஆலைகளில் பயன்படுத்த அனுப்பி வைக்கலாம்.

    மேலும் இந்த மையத்தின் மூலம் பட்டாசு ஆலைகளில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின் தரம் பரிசோதனை செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்படும். இதன் மூலம் சுற்றுச்சூழலுக்கு மாசில்லாத, தரமான வேதிப்பொருட்களை பயன்படுத்தி பட்டாசு தயாரிக்க முடியும். எனவே சிவகாசியில் பட்டாசு ஆராய்ச்சி மையத்தை உடனடியாக தொடங்குவதற்கு ஆக்கப்பூர்வமான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பட்டாசு ஆலை உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சிவகாசியில் பட்டாசு ஆராய்ச்சி மைய கட்டிட பூமிபூஜை மார்ச் மாதத்தில் பணிகள் முடியும்.
    • இது குறித்த செய்தி கடந்த சில நாட்களுக்கு முன்பு மாலைமலரில் வெளியானது.

    சிவகாசி

    நாட்டின் பட்டாசு உற்பத்தி மையமாக விளங்கும் சிவகாசி பட்டாசு ஆராய்ச்சி மையம் அமைக்கவேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். அதன்படி விரைவில் பட்டாசு ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்து இருந்தது. ஆனால் இந்த திட்டம் செயல்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டு இருந்தது.

    இந்த நிைலயில் சிவகாசியில் பட்டாசு ஆராய்ச்சி மையம் அமைப்பதன் அவசியம் குறித்த செய்தி கடந்த சில நாட்களுக்கு முன்பு மாலைமலரில் வெளியானது. இதன் எதிரொலியாக சிவகாசி அருகே உள்ள ஆனை கூட்டம் கிராமத்தில் மத்திய அறிவியல் மற்றும் தொழில் துறை ஆராய்ச்சி கவுன்சில் அமைப்பின் கீழ் இயங்குகி வரும் தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி கழகம் (நீரி)சார்பில் ரூ. 15 கோடியில் பட்டாசு வேதிப்பொருள் ஆய்வு மையம் கட்டிடத்திற்கான பூமி பூஜை பூமிபூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.

    மத்திய சுற்றுச்சூழல் வனம் மற்றும் பருவநிலை துறை இயக்குனர் வேட் பிரகாஷ் மிஸ்ரா, நீரி இயக்குனர் அடுல் வைத்தியா ஆகியோர் காணொலி காட்சி மூலமாக கலந்து கொண்டு பூமிபூஜையை தொடங்கி ைவத்தார் .

    இதில் விஞ்ஞானி சாதனா ராயலு, பட்டாசு மற்றும் கேப் வெடி சங்கத் தலைவர் கணேசன், துணைத் தலைவர்கள் ராஜரத்தினம், அபி ரூபன், பொதுச் செய லாளர் பாலாஜி, பாபநாசம், ஆகியோர் கலந்து கொண்டனர்.

    பின்னர் விஞ்ஞானி சாதனா ராயலு நிருபர்களிடம் கூறுகையில், ஆனை கூட்டம் கிராமத்தில் 5 ஏக்கர் நிலப்பரப்பில் அமைய உள்ள இந்த ஆராய்ச்சி மையத்தில் பட்டாசு ஆலைகளில் பயன்படுத்தப்படும் வேதிப் பொருட்கள் பரிசோதனை செய்யப்பட்டு சான்று வழங்கப்படும். விருதுநகர் மாவட்டத்தில் 900-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் நீரில் பதிவு செய்து சான்று பெற்றுள்ளனர். கட்டுமான பணி இந்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் கட்டிட பணி நிறைவு பெறும் என்றார்.

    • நெல்லை சந்திப்பு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் சுந்தர், அப்துல்காதர் தலைமையிலான போலீசார் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • அப்போது கொக்கிர குளம் புதிய ஆற்றுபாலத்தில் சிலர் பட்டாசு வெடித்து கொண்டிருந்தனர். உடனடியாக போலீசார் அங்கு சென்று பார்த்தனர். அங்கு 2 மோட்டார் சைக்கிள்களில் 6 பேர் நின்று கொண்டு இருந்தனர்.

    நெல்லை:

    நெல்லை சந்திப்பு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் சுந்தர், அப்துல்காதர் தலைமையிலான போலீசார் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    கல்லூரி மாணவர்கள்

    அப்போது கொக்கிர குளம் புதிய ஆற்றுபாலத்தில் சிலர் பட்டாசு வெடித்து கொண்டிருந்தனர். உடனடியாக போலீசார் அங்கு சென்று பார்த்தனர். அங்கு 2 மோட்டார் சைக்கிள்களில் 6 பேர் நின்று கொண்டு இருந்தனர்.

    அவர்களிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள் டவுன், சேரன்மகாதேவி பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் என்பது தெரியவந்தது.

    சக மாணவர் ஒருவருக்கு இன்று பிறந்தநாள் வருவதையொட்டி நள்ளிரவில் பட்டாசு வெடித்து, கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இதைத்தொடர்ந்து மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இந்நிலையில் இன்று காலை மாணவர்கள் தங்களது பெற்றோர்க ளுடன் போலீஸ்நிலையம் சென்றனர். அப்போது இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என போலீசார் அவர்களை எச்சரித்து அனுப்பினர்.

    • ஆலைகளில் விபத்தில்லாமல் பட்டாசு உற்பத்தி செய்ய மாணவர்கள் தீர்வு காண வேண்டும் என ஐகோர்ட்டு நீதிபதி ஸ்ரீமதி பேசினார்.
    • சிவகாசியில் ஏற்கனவே தொழில்முனைவோர்கள் அதிக அளவில் உள்ளனர்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் 18-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடந்தது. கல்லூரியின் செயலர் ஏ.பி.செல்வராஜன் தலைமை தாங்கினார். முதல்வர் பாலமுருகன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஸ்ரீமதி கலந்து கொண்டார்.

    பட்டமளிப்பு விழாவில் அவர் பேசியதாவது:-

    விருதுநகர் மாவட்டத்தில் பலர் அறக்கட்டளைகள் தொடங்கி கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார்கள். இவர்களுக்கு முன்னாள் முதல்வர் காமராஜரே முன்னோடியாக திகழ்கிறார். பட்டம் பெற்ற நீங்கள் அடுத்து என்ன செய்ய போகிறீர்கள்? சிவகாசியில் ஏற்கனவே தொழில்முனைவோர்கள் அதிக அளவில் உள்ளனர்.

    நீங்களும் தொழில்முனைவோராக மாறி சிவகாசியின் பெயரை உலக அளவில் உச்சரிக்க உதவியாக இருக்கவேண்டும். இந்தியாவில் உள்ள பணிகளை செய்ய அதிகமானவர்கள் தேவைப்படும் நிலையில் பட்டம் பெற்ற திறமையான மாணவர்கள் வெளிநாடுகளுக்கு வேலை தேடி செல்வதை தவிர்க்கவேண்டும்.

    தமிழகத்தில் போதிய ஆட்கள் இல்லாத நிலையில் தான் வடமாநிலங்களில் இருந்து தினமும் பல ஆயிரம் பேர் தமிழகத்துக்கு வந்து கொண்டு இருக்கிறார்கள். மாணவர்கள் நீர்நிலைகளை உருவாக்கி, பாதுகாக்க வேண்டும்.

    பட்டாசு ஆலைகளில் விபத்து இல்லாமல் பட்டாசு உற்பத்தி செய்ய தேவையான வழிமுறைகளையும், நிரந்தர தீர்வுகளையும் மாணவர்கள் கண்டுபிடிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் 1,057 மாண-மாணவிகளுக்கு பட்டங்களை நீதிபதி ஸ்ரீமதி வழங்கினார். காளீஸ்வரி கல்லூரியின் முன்னாள் முதல்வர் கிருஷ்ண மூர்த்தி, காளீஸ்வரி மேலாண்மை மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் முதல்வர் வளர்மதி, மாணவர்களின் பெற்றோர்கள், உறவி னர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடு களை துணை முதல்வர் முத்துலட்சுமி செய்திருந்தார்.

    • பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக 3 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சாத்தூர்

    சாத்தூர் அருகே உள்ள ஒத்தையால் பகுதியில் செயல்படும் பட்டாசு ஆலையில் 2 தினங்களுக்கு முன்பு தீ விபத்து ஏற்பட்டு 3 அறைகள் சேதமாகின.

    இதுகுறித்து ஒத்தையால் கிராம நிர்வாக அதிகாரி மணிகண்டன் அங்கு ஆய்வு செய்து விருதுநகர் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    போலீசார் ஆலையின் உரிமையாளர் சிவகாசியை சேர்ந்த மாரியப்பன், ஆலையை குத்தகைக்கு எடுத்து நடத்திய தாயில்பட்டியை சேர்ந்த வினோத், அன்பில் நகரத்தை சேர்ந்த பாண்டி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பட்டாசு தொழிலுக்கு குறைந்தபட்ச ஊதியம் மறுநிர்ணயம் செய்வது தொடர்பான கருத்து கேட்பு கூட்டம் சிவகாசியில் நடந்தது.
    • மேற்கண்ட தகவலை விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) தெரிவித்துள்ளார்.

    விருதுநகர்

    பட்டாசு தயாரிக்கும் தொழிலுக்கு குறைந்தபட்ச ஊதியம் மறுநிர்ணயம் செய்வது தொடர்பான கருத்துக் கேட்பு கூட்டம் சிவகாசியில் நடந்தது

    குறைந்தபட்ச ஊதியச் சட்டப்பிரிவு 5-ன்படி, பட்டாசு உற்பத்தி தொழிலில் ஈடுபடும் தொழிலா ளர்களுக்கு நிர்ணயம் செய்யப்பட்ட குறைந்தபட்ச ஊதிய விகிதங்களை மாற்றியமைக்க உரிய விசார ணைகள் மேற்கொண்டு மாநில அரசுக்கு ஆலோ சனை தெரிவிக்க வேண்டும்.

    இதன்படி தமிழக அரசு ஒரு ஆலோசனைக்குழுவை அமைத்து ஆணை பிறப்பித்தது. அதில் மதுரை கூடுதல் தொழிலாளர் ஆணையர் தலைவராகவும், விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) செயலாளராகவும் கொண்ட மேற்கண்ட குழுவின் முதல் கருத்துக் கேட்பு கூட்டம் சிவகாசி டான்பாமா திருமண மண்டபத்தில் நடந்தது.

    இதில் வேலையளிப்பவர் பிரதிநிதிகளும், தொழிற்சங்க பிரதிநிதிகளும் கலந்து கொண்டு கருத்து களை எடுத்துரைத்தனர். பின்னர் செங்கமலபட்டியில் அமைந்துள்ள விநாயகா பயர் ஒர்க்ஸ் மற்றும் சோனி பயர் ஒர்க்சில் களப்பணி மேற்கொள்ளப்பட்டது. ஊதியம் நிர்ணயம் செய்வது தொடர்பாக அங்கு பணிபுரியும் தொழிலாளர்களிடம் கருத்து கேட்கப்பட்டது.

    நாளை (19-ந் தேதி) வெம்பக்கோட்டை மற்றும் திருவேங்கடத்தில் உள்ள பட்டாசு தொழிற்சா லைகளில், பட்டாசு உற்பத்தி செய்யும் தொழிலாளர்களிடமும் கருத்துக் கேட்பு நடத்த மேற்கண்ட குழுவினர் தீர்மானித்துள்ளனர்.

    அப்போது பட்டாசு தயாரிக்கும் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்கள் மற்றும் வேலையளிப்பவர்கள் பட்டாசு தயாரிக்கும் தொழிலாளர்களுக்கு ஊதியம் நிர்ணயம் செய்வது தொடர்பான கருத்து ருக்களை வாய்மொ ழியாகவும், எழுத்து பூர்வமாகவும் வழங்கலாம் என்று அறிவுறுத்தப் பட்டுள்ளது.

    மேற்கண்ட தகவலை விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) காளிதாஸ் தெரிவித்துள்ளார்.

    • பட்டாசு திரி வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்.
    • 150 பட்டாசு திரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    விருதுநகர்

    திருத்தங்கல் கே.கே.நகரை சேர்ந்தவர் சிவபெருமான் (வயது43). இவர் அனுமதியின்றி வீட்டில் பட்டாசு திரிகள், மூலப்பொருட்கள் பதுக்கி வைத்திருந்ததாக போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

    இவரிடம் இருந்து 150 பட்டாசு திரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    • அனுமதியின்றி பட்டாசு திரி தயாரிக்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • 158 குரோஸ் பட்டாசு திரி பறிமுதல்; 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள இ.மீனாட்சிபுரம் பகுதியில் அனுமதியின்றி பட்டாசு திரி தயாரிக்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அந்த பகுதியில் ரோந்து சென்று கண்காணித்தனர். அப்போது அந்த பகுதியில் உள்ள பாலுசாமி(54) என்பவரது வீட்டில் 38 குரோஸ் பட்டாசு திரிகளும், பாலசுப்பிரிமணியின்(45) வீட்டில் 40 குரோஸ் பட்டாசு திரிகளும், காளிராஜ்(48) வீட்டில் 42 குரோஸ் பட்டாசு திரிகளும், சரவணன்(56) வீட்டில் 38 குரோஸ் பட்டாசு திரிகளும் பறிமுதல் செய்யப்பட்டது. ேபாலீசார் அவர்கள் 4 பேரையும் கைது செய்தனர்.

    • அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 6 பேரை கைது செய்தனர்.
    • பட்டாசு ஆலை உரிய அனுமதியின்றி செயல்பட்டு வந்தது தெரியவந்தது.

    விருதுநகர்

    விருதுநகர் அருகே உள்ள பட்டம்புதூர் பகுதியில் அனுமதியின்றி பட்டாசு தயாரிக்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சூலக்கரை இன்ஸ்பெக்டர் மாரியப்பன் மற்றும் போலீசார் அந்த பகுதியில் ரோந்து சென்று கண்காணித்தனர்். அங்குள்ள பட்டாசு ஆலை ஒன்றில் சோதனை செய்தனர். அதில் அந்த ஆலை உரிய அனுமதியின்றி செயல்பட்டு வந்தது தெரியவந்தது.

    இதையடுத்து அங்கு வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் சிவகாசியை சேர்ந்த ஆலை உரிமையாளர் ராஜமாணிக்கம்(57), ேபார்மேன் ஜெகதீசுவரன்(31) மற்றும் பணியாளர்கள் பாலமுருகன்(42), கருப்பசாமி(37), ரவிக்குமார்(34) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

    • அனுமதியின்றி பட்டாசு ஆலை வைத்திருந்தவர் மீது ேபாலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
    • இதில் ஆறுமுகசாமி கைது செய்யப்பட்டார்.

    விருதுநகர்

    விருதுநகர் அருகே உள்ள மல்லநாயக்கன்பட்டியில் சேகர் என்பவருக்கு சொந்தமான இடத்தில் அனுமதியின்றி பட்டாசு ஆலை செயல்பட்டு வந்தது. இதுகுறித்து கிராம நிர்வாக அதிகாரி சமயன் அப்பநாயக்கன்பட்டி போலீசில் புகார் செய்தார். ேபாலீசார் சம்பவ இடத்தில் அதிரடி சோதனை நடத்தி பட்டாசுகளை கொண்ட அட்டைபெட்டிகள், மூலப்பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் பட்டாசு ஆலை நடத்த இடம் கொடுத்த சேகர், ஆலை உரிமையாளர் திருத்தங்கல் ராஜசேகர், போர்மென் ஆறுமுகசாமி ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் ஆறுமுகசாமி கைது செய்யப்பட்டார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வடுகப்பட்டி- அழகாபுரி சாலையில் உள்ள மூலிகை சேமிப்பு பண்ணையில் நாட்டு வெடிகுண்டு தயாரிப்பதாக நத்தம்பட்டி கிராம நிர்வாக அதிகாரி பாண்டியனுக்கு தகவல் கிடைத்தது. அவர் கொடுத்த புகாரின்பேரில் நத்தம்பட்டி போலீசார் பண்ணையில் ேசாதனை நடத்தினர். அப்ேபாது அங்குள்ள தகர ெகாட்டகையில் நாட்டு வெடிகுண்டு தயாரிக்கப்பட்டதற்கான வெடி மருந்துகள் மற்றும் மூலப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்தி அழகாபுரியை சேர்ந்த மணிவைரம் என்பவரை தேடி வருகின்றனர்.

    • படுகாயமடைந்த 5 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
    • போலீசார் நடத்திய விசாரணையில் பட்டாசு கடை சட்ட விரோதமாக நடத்தி வந்தது தெரியவந்துள்ளது.

    சீனாவின் ஹெபெய் மாகாணம் டச்செங் பகுதியில் உள்ள பட்டாசு கடையில் திடீரென தீ பிடித்தது. இதில், பட்டாசுகள் வெடித்து சிதறி அங்கிருந்தவர்கள் தூக்கி வீசப்பட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் பட்டாசு விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

    இதில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த 5 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், பட்டாசு கடை சட்ட விரோதமாக நடத்தி வந்தது தெரியவந்துள்ளது.

    ×