என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Government employees"

    • ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் போராட்டத்திற்கு தமிழக வெற்றிக் கழகம் முழு ஆதரவு.
    • திமுக அரசின் கபட நாடக வேலையால் விடுமுறை நாளான இன்றும் கூட அரசு ஊழியர்கள் போராட்டக் களத்தில் உள்ளனர்.

    ஜாக்டோ ஜியோவின் போராட்டத்திற்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் முழுமையான ஆதரவை தெரிவித்துக் கொள்கிறேன் என அக்கட்சியின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசுப் பணியாளர்கள், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல், உயர்கல்வி சார்ந்த ஊக்க ஊதிய உயர்வு, முடக்கி வைக்கப்பட்ட சரண் விடுப்பு ஒப்படைப்பு, ஊதிய முரண்பாடுகளைக் களைதல், பணி உயர்வு கோருதல், சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள், கல்வித் துறையில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளர்கள், MRB செவிலியர்கள், ஊராட்சிச் செயலாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள், கணினி உதவியாளர்கள், சிறப்பு ஆசிரியர்கள், பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு வரையறை செய்யப்பட்ட ஊதியம் வழங்குதல், ஒருங்கிணைந்த கல்வித் துறையில் பணியாற்றும் பணியாளர்கள், ஆசிரியர்கள், தொழிற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் பகுதிநேர ஆசிரியர்கள் ஆகியோருக்குப் பணி நிரந்தரம் செய்தல், அரசின் பல்வேறு துறைகளிலும் உள்ள காலிப் பணியிடங்களைக் காலமுறை ஊதியத்தில் நிரப்புதல் உள்ளிட்ட பத்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் மூலம் நீண்ட காலமாகப் போராடி வருகின்றனர்.

    1-4-2003-க்குப் பிறகு அரசுப் பணியில் சேர்ந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள். அரசு அலுவலர்களுக்குப் பழைய ஓய்வூதியத் திட்டம் (OPS Old Pension Scheme) வழங்கப்படுவதில்லை. அவர்களுக்கு CPS (Contributory Pension Scheme) எனப்படும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டமே வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் அரசு ஊழியர்களுக்குப் பணி ஓய்விற்குப் பிறகு மாதாமாதம் வழங்கப்படும் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் உட்பட எதுவும் கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது. போராட்டத்தின் முக்கிய அம்சங்களுள் இதுவும் ஒன்றாகும்.

    ஜாக்டோ ஜியோ போராட்டம் என்பது, தமிழகத்தில் வாழ்ந்து வரும் லட்சக்கணக்கான குடும்பங்கள் சார்ந்த நல்வாழ்வு மற்றும் வாழ்வாதாரம் சார்ந்த போராட்டம். இதை அரசியல் கண்கொண்டோ, ஆட்சி அதிகாரக் கண்கொண்டோ நோக்கவே கூடாது. லட்சக்கணக்கான குடும்பங்களை மனத்தில் வைத்து, முற்றிலும் மனிதாபிமான அடிப்படையில் மட்டுமே அணுக வேண்டும்.

    உரசு எந்திரத்தின் நிர்வாக முறை அச்சாணியான அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் மற்றும் அரசுப் பணியாளர்களின் கோரிக்கைகளுக்குச் செவி சாய்த்து, அதற்கான நியாயமான தீர்வுகளைக் காண வேண்டியது அரசின் கடமை ஆகும். ஆனால். அதை இப்போது இருக்கும் வெற்று விளம்பர மாடல் தி.மு.க. அரசு செய்ய முன்வரவில்லை. அதை விடுத்து, கண்துடைப்புக்காகப் பேச்சுவார்த்தை மட்டும் நடத்திவிட்டு, கண்டும் காணாமல் கை விட்டுவிட்டது.

    2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்காக மட்டும் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பைக் கெஞ்சிக் கூத்தாடியும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை ஆட்சிக்கு வந்ததும் அமல்படுத்துவோம் என்றும் கூறி, தேர்தல் அறிக்கையிலும் 309ஆவது வாக்குறுதியாக வெளியிட்டு நம்பிக்கையை ஏற்படுத்திவிட்டு, இப்போது அவர்கள் கோரிக்கையை நிறைவேற்றாமல் லட்சக்கணக்கான குடும்பங்களை இந்தத் தி.மு.க. அரசு ஏமாற்றி உள்ளது.

    பழைய ஓய்வூதியத் திட்டமானது ராஜஸ்தான், மேற்கு வங்கம். ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம் ஆகிய ஆறு மாநிலங்களில் மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. கர்நாடக அரசும் அதை மீண்டும் கொண்டுவரப் போவதாக அண்மையில் அறிவித்துள்ளது. எல்லா மாநிலங்களுக்கும் முன்னோடியாகத் திகழ்கிறோம் என்று மார்தட்டும் வெற்று விளம்பர மாடல் தி.மு.க. அரசு, இதில் மட்டும் புறமுதுகு காட்டுவது ஏன்?

    தி.மு.க. அரசின் கபட நாடக ஏமாற்று வேலையால், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசுப் பணியாளர்கள், விடுமுறை நாளான இன்றும்கூட போராட்டக் களத்தில் உள்ளனர். இது, மிகப் பெரிய கையறு நிலை ஆகும். தற்போதைய ஆளும் தி.மு.க. அரசுக்கு. இது ஒரு பொருட்டாகவே படவில்லை என்பதும் வெளிப்படையாகத் தெரிகிறது.

    இதுபோன்ற பாராமுகச்செயல்களால், அரசு மீதும் அரசியல்வாதிகள் மீதும் நம்பிக்கை இழந்து, கையறு நிலையில் உள்ள லட்சக்கணக்கான குடும்பங்களின் நலன்களை ஆழமாக மனத்தில் வைத்து, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசுப் பணியாளர்களின் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் போராட்டத்திற்குத் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக, முழுமையான மனப்பூர்வமான ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒருங்கிணைப்பாளர்கள் தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் போராட்டம் ஒருங்கிணைக்கப்படுகிறது.
    • பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.

    சென்னை:

    பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல் படுத்தக் கோரி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள்.

    தி.மு.க. தேர்தல் அறிக்கைகளில் குறிப்பிட்டதை போல பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய முறையை கொண்டு வர வேண்டும் என்று அனைத்து சங்கங்களும் வலியுறுத்தி வருகின்றன.

    இந்த நிலையில் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பை சேர்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வருகிற 23-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்தனர். விடுமுறை நாளில் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரதம் இருந்து அரசுக்கு தங்கள் எதிர்ப்பை தெரிவிக்க முடிவு செய்து உள்ளனர். காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த போராட்டம் நடைபெறுகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒருங்கிணைப்பாளர்கள் தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் போராட்டம் ஒருங்கிணைக்கப்படுகிறது.

    சென்னையில் எழிலகம் பின்பகுதியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. போராட்டம் குறித்து ஒருங்கிணைப்பாளர்கள் தியாகராஜன், மாயவன் ஆகியோர் கூறியதாவது:-

    பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். விடுமுறை நாளில் போராட்டம் நடைபெறுவதால் அரசு ஊழியர்கள் அதிகளவில் பங்கேற்க வாய்ப்பு உள்ளது. ஈட்டிய விடுப்பு சரண் சலுகையை 1.4.2026 பதிலாக வருகிற ஏப்ரல் மாதத்தில் இருந்து வழங்க வேண்டும்.

    இதற்கான அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பட்ஜெட் கூட்டத்தில் வெளியிட வேண்டும். தேர்தல் வாக்குறுதியில் கூறியதை நிறைவேற்ற வேண்டும். உண்ணாவிரதப் போராட்டத்திற்கு பிறகு ஒருங்கிணைப்பாளர்கள் ஒன்று கூடி ஆலோசித்து அடுத்த கட்டமாக வேலை நிறுத்தம் அல்லது மறியல் போராட்டம் என தீவிரமாக முன்னெடுத்து செல்ல திட்டமிட்டுள்ளோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் 3 நாட்கள் நடை பயணம் வருகிற 15-ந் தேதி நடக்கிறது.
    • திருமங்கலம் நெடுஞ்சாலை துறை வளாகம், ஊராட்சி அலு வலகம் வழியாக ராஜாஜி சிலையில் முடிகிறது.

    மதுரை

    தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி மாநிலம் முழுவதும் 3 நாள் நடை பயண பேரணி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

    மதுரை கள்ளிக்குடி உதவி கல்வி அலுவலர் அலுவ கத்தில் சங்க நிர்வாகிகள் ஜெயராஜராஜேஸ்வரன், சரவணன் ஆகியோர் தலைமையில் வருகிற 15-ந்தேதி நடைபயண பேரணி தொடங்குகிறது. அங்கிருந்து திருமங்கலம் நெடுஞ்சாலை துறை வளாகம், ஊராட்சி அலு வலகம் வழியாக ராஜாஜி சிலையில் முடிகிறது.

    திருப்பரங்குன்றம் உதவி கல்வி அலுவலர் அலுவலகத்தில் 16-ந் தேதி தொடங்கும் பேரணி பசுமலை பஸ் நிறுத்தம், பழங்காநத்தம் கூட்டுறவுத்துறை அலுவலகம், காளவாசல் பி.ஆர்.சி. டெப்போ வழியாக எல்லீஸ் நகர் இந்து சமய அறநிலையத்துறை அலுவலக வளாகத்தில் முடிகிறது.

    மதுரை அரசு பாலி டெக்னிக் வளாகத்தில் 17-ந் தேதி தொடங்கும் நடை பயண பேரணி சம்பள கணக்கு அலுவலகம், திருமலை நாயக்கர் மகால், செல்லூர் கல்லூரி கல்வி அலுவலகம், தல்லாகுளம் மாவட்ட கல்வி அலுவலகம், தாமரைத் தொட்டி நெடுஞ்சாலை துறை அலுவலகம், ராஜா முத்தையா மன்றம் வழியாக மாலை 5.45 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தை வந்தடைகிறது.

    இதனைத்தொடர்ந்து தமிழ்நாடு அரசு ஊழி யர்கள் சங்க நிர்வாகிகள், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வலியு றுத்தி கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுக்கின்றனர்.

    • 21 மாத நிலுவைத் தொகையை உடனடியாக வழங்கிட வேண்டும்.
    • சாலைப் பணியாளா்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணி காலமாக அறிவிக்க வேண்டும்.

    திருப்பூர்:

    தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் பல்லடம் வட்டக் கிளையின் 15 -வது பேரவைக் கூட்டம் பல்லடத்தில் நடைபெற்றது.இக்கூட்டத்துக்கு வட்ட கிளைத் தலைவா் பாண்டியம்மாள் தலைமை வகித்தாா்.

    கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்களின் விவரம் வருமாறு:- 21 மாத நிலுவைத் தொகையை உடனடியாக வழங்கிட வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். முடக்கப்பட்ட சரண்டா் விடுப்பு அகவிலைப்படி ஊதியத்துடன் நிலுவை தொகையையும் வழங்க வேண்டும்.சாலைப் பணியாளா்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணி காலமாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

    மாவட்ட செயலாளா் பாலசுப்பிரமணியம், வட்ட கிளைச் செயலாளா் ஆறுச்சாமி, பொருளாளா் ஜெயகுமாரி, மாவட்ட சத்துணவு ஊழியா் சங்கத்தலைவா் ராணி, மாவட்டச் செயலாளா் முருகேசன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

    • தென்காசி மாவட்டத்தில் 35 அரசு அலுவலகங்களின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
    • கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் திருமலை முருகன் தலைமை தாங்கினார்.

    தென்காசி:

    சேலத்தில் கடந்த 17-ந்தேதி நடைபெற்ற தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில பிரதிநிதித்துவ பேரவை அறைகூவல் தீர்மானத்தின்படி தென்காசி மாவட்டத்தில் 35 அரசு அலுவலகங்களின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர். தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் திருமலை முருகன் தலைமை தாங்கினார். மாவட்ட இணை செயலாளர் மாடசாமி கோரிக்கைகள் குறித்த விளக்கவுரையாற்றினார்.

    மேலும் தமிழ்நாடு வருவாய் துறை அலுவலரும், சங்க மாவட்ட செயலாளர் சீனிப்பாண்டி, மாவட்ட நிதி காப்பாளர் ஜாக்டோ-ஜியோ இசக்கி துரை, தமிழ்நாடு பேரூராட்சி ஊழியர் சங்க மாநில பொதுச்செயலாளர் கனகராஜ், தமிழ்நாடு வேலைவாய்ப்பு துறை ஊழியர் சங்கம் மாநில பொதுச் செயலாளர் மார்த்தாண்ட பூபதி,

    தமிழ்நாடு தொழிற்பயிற்சி அலுவலர் சங்க நெல்லை மண்டல செயலாளர் சேகர் , தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்க மாவட்ட துணை தலைவர் கணேசன், தமிழ்நாடு புள்ளியியல் சார்நிலை அலுவலர், சங்க மாநில துணை தலைவர் ராதாகிருஷ்ணன் மற்றும் மாவட்ட செயலாளர் துரைசிங் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். மாவட்ட இணை செயலாளர் ராஜ் நன்றி கூறினார்.

    • புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
    • அரசு துறைகளில் காலியாக உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

    மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்திற்கு சங்க வட்ட நிர்வாகி மாலா தலைமை தாங்கினார்.

    வட்டாரத்தலைவர் பேபி, செயலாளர் செல்வி, மாவட்ட நிர்வாகி கலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

    சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை வரன்முறைப்படுத்த வேண்டும்.

    அரசு துறைகளில் காலியாக உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    இதில் பொறுப்பாளர் இளங்கோவன் மற்றும் சங்கத்தினர் திரளாக கலந்து கொண்டனர்.

    முடிவில் பொருளாளர் கஸ்தூரி நன்றி கூறினார்.

    • அரசு துறைகளில் ஒப்பந்தம் தினக்கூலி அவுட்சோர்சிங் முறைகளை ரத்து செய்து, உடனடியாக காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும்.
    • சத்துணவு ஊழியர் சங்க முருகேசன், மற்றும் பாக்கியம், விஜயகுமார், நாராயணன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பல்லடம்:

    தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பல்லடம் நகராட்சி அலுவலகம், தாலுகா அலுவலகம், நெடுஞ்சாலை துறை அலுவலகம் உள்ளிட்ட 11 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல் படுத்தவேண்டும் அகவிலைப்படி உடனே வழங்கப்பட வேண்டும், நகராட்சி நிரந்தர பணியிடங்களை அழித்திடும் அரசாணை 152-ஐ திரும்ப பெற வேண்டும், தமிழக அரசின் காலை சிற்றுண்டி திட்டத்தினை சத்துணவு ஊழியர்களைக் கொண்டு முழுமையாக அமல்படுத்திட வேண்டும். அரசு துறைகளில் ஒப்பந்தம் தினக்கூலி அவுட்சோர்சிங் முறைகளை ரத்து செய்து, உடனடியாக காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும்.

    சத்துணவு அங்கன்வாடி, வருவாய் கிராம ஊழியர்கள், ஊர் புற நூலகர்கள், உள்ளிட்ட தொகுப்பூதியம் ஊதியம் பெறும் ஊழியர்களை நிரந்தரப்படுத்தி காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும். சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தினை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும். ஊராட்சி செயலாளர்களுக்கு கருவூலம் மூலமாக ஊதியம் வழங்கிட வேண்டும். கருவூலம் உள்ளிட்ட அரசுத்துறை மென்பொருள் திட்டங்களை தனியார் வசம் ஒப்படைப்பதை கைவிட வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்லடம் வட்டார கிளை தலைவர் பாண்டியம்மாள் செயலாளர், ஆறுச்சாமி, மற்றும் சத்துணவு ஊழியர் சங்க முருகேசன், மற்றும் பாக்கியம், விஜயகுமார், நாராயணன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அரசு ஊழியர்கள்-ஓய்வூதியர்களின் அனைத்து கோரிக்கைகளையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றுவார்.
    • ஆசிரியர் முன்னேற்ற சங்கம் நம்பிக்கை வைத்துள்ளனர்.

    ராமநாதபுரம்

    தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் ராமநாதபுரம் மாவட்டத்தலைவரும், ஜாக்டோ-ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான முருகேசன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கடந்த ஆட்சியில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதியத் திட்டம் உட்பட பல கோரிக்கைகளை முன் வைத்து போராடினர். போராட்ட களத்திற்கு வந்த முன்னாள் எதிர்கட்சித் தலைவரும், தற்போதைய முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் ஆசிரியர்-அரசு ஊழிய ர்களின் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றுவோம் என்று கூறினார். அவர் உறுதியளித்தபடி அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றுவார் என்பதில் முழு நம்பிக்கை உள்ளது.

    முதல்-அமைச்சர் பிறந்தநாளில் நாங்கள் கேட்காத கோரிக்கைகளான அனைத்து ஆசிரியர்க ளுக்கும் கையடக்க கணினி வழங்கப்படும் என்றும், அனைத்து ஆசிரியர்க ளுக்கும் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மருத்துவ பரிசோதனை செய்யப்படும் என்றும், உயர் கல்வி பயிலும் ஆசிரியர்களின் குழந்தைகளுக்கு ரூ.50 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும் எனவும் அறிவித்திருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆசிரியர்-அரசு ஊழியர்களின் அனைத்து கோரிக்கைகளையும் முதல்-அமைச்சர் நிறைவேற்றுவார் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வாலிபால் போட்டி திருவனந்தபுரத்தில் மாா்ச் 22 ந் தேதி தொடங்கி மாா்ச் 26 ந் தேதி வரையில் நடைபெறுகிறது.
    • மாா்ச் 20 -ந் தேதி காலை 8 மணி அளவில் நடைபெறுகிறது.

    திருப்பூர் :

    சென்னையில் நடை பெறும் மாநில அளவிலான வாலிபால் தோ்வு போட்டியில் பங்கேற்க திருப்பூா் மாவட்ட அரசு ஊழியா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு ள்ளது. இது குறித்து திருப்பூா் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் எம்.ராஜகோபால் வெளியி ட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    மாநில அரசு ஊழியா்களுக்கான தேசிய அளவிலான வாலிபால் போட்டி கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் மாா்ச் 22 ந் தேதி தொடங்கி மாா்ச் 26 ந் தேதி வரையில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் பங்கேற்பதற்கான மாநில அளவிலான தோ்வு போட்டி சென்னை ஜவஹா்லால் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் மாா்ச் 20 -ந் தேதி காலை 8 மணி அளவில் நடைபெறுகிறது.இந்த போட்டியில் பங்கேற்க பயணப்படி எதுவும் வழங்கப்படமாட்டாது. திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அரசு ஊழியா்கள் மாநில அளவிலான தோ்வு போட்டியில் பங்கேற்கலாம். இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 74017-03515 என்ற செல்போன் எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வட்ட கிளை தலைவர் குப்புசாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பி.செந்தில்குமார், சத்துணவு ஊழியர் சங்க ஒன்றிய தலைவர் ரதி, சத்துணவு ஊழியர் சங்க முன்னாள் மாவட்ட செயலாளர் ராமசாமி, அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் முருகேசன், கவிதா ஆகியோர் கலந்து கொண்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த கோரியும், தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் , பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதிநிலை அறிக்கையில் அரசு ஊழியர்களுக்கு என எவ்வித அறிவிப்பும் இல்லாததை கண்டித்தும் அதை நிறை வேற்ற கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    • தமிழகத்தில் அரசு ஊழியர்கள்-பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லை.
    • சட்டம்- ஒழுங்கு கெட்டுள்ளதால் மக்கள் அச்சத்துடன் செல்லக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.

    திருப்பரங்குன்றம்

    திருப்பரங்குன்றத்தில் சட்டமன்ற உறுப்பினர் அலுவ லக வாயிலில் கோடை காலத்தை முன்னிட்டு நீர்-மோர் பந்தல் திறப்பு விழா நடந்தது. அ.தி.மு.க. இளைஞரணி மாவட்ட செயலாளர் வக்கீல் ரமேஷ் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன் முன்னிலை வகித்தார்.

    அ.தி.மு.க.அமைப்புச் செயலாளரும், மாவட்ட செயலாளருமான ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. நீர் மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு தர்பூசணி உள்ளிட்ட பழங்கள் வழங்கினார். பின்னர் அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் கிராம நிர்வாக அலுவலர், வட்டாட்சியர், பெண் போலீசார் என அரசு ஊழி யர்கள் மற்றும் பொது மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகியுள்ளது. சட்டம்- ஒழுங்கு கெட்டுள்ளதால் மக்கள் அச்சத்துடன் செல்லக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை மக்கள் ஏற்கவில்லை. தொண்ட ர்களும் ஏற்க வில்லை என்பது அவர் நடத்திய மாநாட்டில் தெளி வாக தெரிந்தது.

    நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் கால அவகாசம் இருப்பதால் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தமிழகத்தில் அனைத்து நாடாளுமன்ற தொகுதிக ளிலும் அ.தி.மு.க. தலைமை யிலான கூட்டணியே வெற்றி பெறும். கூட்டணி குறித்து தலைமைக் கழகம் அறிவிக்கும். மதுரையில் நடைபெற உள்ள மாநாடு இதுவரை தமிழகத்தில் நடந்தி ராத திருப்புமுனை மாநாடாக அமையவுள்ளது. 50 லட்சம் பேர் அங்கு திரண்டு புதியதொரு சகாப்தத்தை உருவாக்க உள்ளனர். அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் பகுதி துணைச்செயலாளர் செல்வகுமார், வட்டச் செயலாளர் பொன்.முருகன், நாகரத்தினம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மதுரையில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

    மதுரை

    மத்திய அரசுக்கு இணையாக அகவிலைப்படி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் மதுரை கலெக்டர் அலுவலக வளாகத்தில் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது மத்திய அரசு வழங்கியது போல நடப்பாண்டு ஜனவரி மாதம் முதல் 4 சதவீத அகவிலைப்படியை உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மதுரை மாவட்டத்தில் கள்ளிக்குடி, திருமங்கலம் தாசில்தார் அலுவலகங்கள் முன்பும் அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ×