என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Heat wave"

    • இயல்பைவிட 5,6 செல்சியசுக்கு மேல் அதிகமாக வெப்பம் தாக்கினால் சிவப்பு எச்சரிக்கை கொடுக்கப்படும்.
    • வயதானவர்கள், இணை நோய் உள்ளவர்களுக்கு வெப்ப பக்கவாதம் (ஸ்டோக்) ஏற்படக்கூடும்.

    சென்னை:

    தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் மார்ச் மாதத்திலேயே தொடங்கிவிட்டது. வழக்கமாக ஏப்ரல் மாதத்தில் வெயில் தாக்கம் தொடங்கி மே மாதத்தில் அக்னி நட்சத்திரத்தின் போது வெயிலின் உக்கிரம் உச்சத்தை அடையும்.

    ஆனால் இந்த வருடம் கோடை வெயில் முன் கூட்டியே தாக்கி வருவதால் பொதுமக்கள் வாடி வதங்கி வருகின்றனர். பருவகால மாற்றத்தால் சுட்டெரிக்கும் வெயில் கொளுத்தி வருகிறது.

    தமிழகத்தின் வட உள்மாவட்டங்களில் இயல்பைவிட 3,4 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரித்து உள்ளது. இதனால் மக்கள் வெளியில் நடமாட முடியவில்லை.

    தமிழகத்தில் அதிகபட்சமாக ஈரோட்டில் 109 டிகிரி வெயில் தாக்கி உள்ளது. சேலத்தில் 107, தர்மபுரி 106 டிகிரி வெயில் கொளுத்தியது.

    ஏப்ரல் மாதம் தொடக்கத்தில் இருந்தே வெப்ப அலை வீசி வருவதால் மக்கள் பகலில் மட்டுமின்றி இரவு நேரத்திலும் உஷ்ணத்தில் அவதிப்படுகிறார்கள்.

    14 மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் தாக்கி வருகிறது. வெயில் தாக்கத்தால் மக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர். சிறுவர்கள், முதியவர்கள் வெயிலில் செல்வதை தவிர்த்து வருகின்றனர்.

    வெயிலின் தாக்கம் ஜூன் மாதம் வரை இருக்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். தமிழகம் மட்டுமின்றி பிற மாவட்டங்களிலும் வெயில் அதிகமாக இருப்பதால் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. பகலில் வெளியே வரவேண்டாம் என அம்மாநில அரசுகள் அறிவித்துள்ளன. வெயிலின் கோர தாண்டவத்தை தாங்க முடியாமல் உயிர் இழப்பும் ஏற்பட்டுள்ளது.

    தமிழகத்தில் பொது மக்கள் கோடை வெயில் தாக்கத்தால் பாதிக்கக்கூடாது என்பதற்காக அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் முன் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வெப்ப ஸ்டோக், மயக்கம், சோர்வு ஏற்படுவோருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க சுகாதாரத்துறை முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

    தமிழகத்தில் வழக்கத்திற்கு மாறாக வெப்பதாக்குதல் அதிகரித்து வருவதால் சென்னை வானிலை மையமும் பொதுமக்களுக்கு அவ்வப்போது முன்னெச்சரிக்கை செய்து பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தி வருகின்றது.


    இதுகுறித்து வானிலை ஆராய்ச்சியாளர்கள் கூறியதாவது:-

    வெப்ப அலை என்பது புதிதல்ல. ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் ஏற்படக் கூடியவைதான். சராசரி வெப்ப அளவைவிட கூடுதலாக 4,5 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும் போது வெப்ப அலை என்கிறோம். காற்றின் ஈரப்பதம் அதிகரிப்பதால் அதாவது 50 சதவீதத்திற்கு மேல் அதிகரித்தால் உடலில் இருந்து வியர்வை ஆவியாக மாறாது. ஆவியாக மாறாமல் போகும் போது உடலில் சூடு ஏற்படும். பல பிரச்சினைகள் வரும்.

    தலைவலி, மயக்கம், சோர்வு போன்றவை ஏற்படக் கூடும். வயதானவர்கள், இணை நோய் உள்ளவர்களுக்கு வெப்ப பக்கவாதம் (ஸ்டோக்) ஏற்படக்கூடும். தமிழ்நாடு, புதுச்சேரி கடலோர பகுதிகளை ஒட் டிய மாவட்டங்களில் காற்றின் ஈரப்பதம் அதிகரிப்பதால் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    அதே நேரத்தில் கடல் காற்று உள்ளே வரும் போது வெப்ப நிலை குறையும். பொதுமக்கள் காலை 11 மணி முதல் பகல் 3 மணி வரை வெயிலில் செல்லாமல் தவிர்ப்பது நல்லது. இதனால் வயல் வெளியில் வேலை செய்பவர்கள் கூலித் தொழிலாளர்கள், மூட்டைத் தூக்குபவர்கள் பாதிக்கக்கூடும். ஓட்டப் பயிற்சி, உடல் பயிற்சி செய்பவர்கள் கூட கவனமாக அதில் ஈடுபட வேண்டும்.

    வெப்ப அலையை மஞ்சள் அலர்ட் மூலம் எச்சரிக்கப்படுகிறது. இயல்பைவிட 5,6 செல்சியசுக்கு மேல் அதிகமாக வெப்பம் தாக்கினால் சிவப்பு எச்சரிக்கை கொடுக்கப்படும். தமிழகத்தில் அது போன்ற நிலை இல்லை.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் வெப்பம் அதிகரித்து காணப்படுகிறது.
    • அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் ஒருசில இடங்களில் இயல்பை விட 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    கோவை :

    தமிழகத்தில் வெயிலின் தாக்கம் இந்த ஆண்டு கடுமையாக உள்ளது. இயல்பை விட 4, 5 டிகிரி செல்சியஸ் வெயில் அதிகமாக இருப்பதால் மக்கள் அவதிப்படுகிறார்கள். வட உள் மாவட்டங்களில் வெப்ப அலை தாக்கி வருகிறது.

    ஈரோடு, சேலம், தர்மபுரி, வேலூர், திருச்சி, கரூர், மதுரை, திருப்பத்தூர், கோவை, நாமக்கல் மாவட் டங்களில் 40 டிகிரி செல்சியஸ்க்கு மேல் வெயில் சுட்டெரித்தது.

    அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் ஒருசில இடங்களில் இயல்பை விட 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என்றும் தமிழக உள் மாவட்டங்களில் 39 முதல் 42 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் வெப்பம் அதிகரித்து காணப்படும் நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் தனது 23.4.2024 நாளிட்ட அறிவிக்கையில், தமிழ்நாட்டின் வட உள் மாவட்டமான கோயம்புத்தூர் மாவட்டத்தில் வரும் நாட்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    எனவே, பொதுமக்கள் போதுமான அளவு தண்ணீர் அருந்துமாறும், அத்தியாவசிய தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்குமாறும், குறிப்பாக நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்த்திடுமாறும், வெயிலின் தாக்கத்தால் உடல்நலக் குறைவு ஏற்படும் நிலையில், உடனடியாக மருத்துவரை அணுகுமாறும் இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பல்வேறு பகுதிகளில் வெப்ப அலை வீசுவதால் பொதுமக்கள் தவித்து வருகிறார்கள்.
    • பகல் நேரங்களில் வெளியில் செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கி உள்ளனர்.

    அகர்தலா:

    வட மாநிலங்களில் கோடை வெயில் தாக்கம் அதிகரித்து வருகிறது. பல்வேறு பகுதிகளில் வெப்ப அலை வீசுவதால் பொதுமக்கள் தவித்து வருகிறார்கள்.

    பகல் நேரங்களில் வெளியில் செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். கால நிலை மாற்றம் மற்றும் வெயில் கொளுத்தி வருவதால் இமயமலை பகுதியில் இருக்கும் பனிப்பாறைகள் வேகமாக உருகி வருகின்றன என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

    நாடு முழுவதும் பல மாநிலங்களில் வெப்ப அலை வீசும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இப்படி நாடு முழுவதும் வெப்பத்தின் தாக்கம் அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது.

    இந்நிலையில், அதிகரித்து வரும் வெப்ப அலையைக் கருத்தில் கொண்டு, திரிபுரா மாநிலத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளுக்கு இன்று முதல் 4 நாட்களுக்கு விடுமுறை அறிவித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

    • அடுத்த 5 நாட்களுக்கு வடதமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் அதிக வெப்பமும் வெப்ப அலையும் ஏற்படக்கூடும்
    • பொதுமக்கள் கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும்

    அடுத்த 5 நாட்களுக்கு வடதமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் அதிக வெப்பமும் வெப்ப அலையும் ஏற்படக்கூடும்' என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. பொதுமக்கள் கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    வெப்ப நிலை அதிகரிக்கும், வெப்ப அலை வீசும், என்பது போன்ற செய்திகள் தினந்தோறும் வெளிவந்து கொண்டு இருக்கிறது. இதனை உணர்த்தும் வகையில் கோடை வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 'அடுத்த 5 நாட்களுக்கு வடதமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் அதிக வெப்பமும் வெப்ப அலையும் ஏற்படக்கூடும்' என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இத்தகைய சூழலில் பொதுமக்கள் கவனத்துடனும் மிகுந்த எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    பொதுவாக கோடை காலம் என்பது வெப்பம் அதிகம் உள்ள மாதங்களாக இருந்தாலும், நாளுக்கு நாள் வெப்ப அளவு அதிகமாகி வருகிறது. இதில் இருந்து மக்களை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை ஆகும். அதனால்தான் நேற்றைய தினம் தலைமைச் செயலகத்தில் அரசுத்துறை அதிகாரிகளுடன் இது தொடர்பாக விரிவான ஆலோசனை நடத்தினேன்.

    இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், மருத்துவர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் ஆகியோரின் ஆலோசனையை அரசு அதிகாரிகள் கேட்டுத் தெரிந்து கொண்டதன் அடிப்படையில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த அறிக்கையை வெளியிடுவது மிக மிக அவசியமானதாகக் கருதுகிறேன்.

    வெப்பநிலை அதிகமாகும் காலங்களில் குழந்தைகள், பள்ளி மாணவ, மாணவிகள், வயதானவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், உடல்நலக் குறைபாடுகள் உடையவர்கள் அதிகமாகப் பாதிக்கப்படலாம் இவர்களை மிகக் கவனமாக பாதுக்காக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    கோடை வெயிலினால் அதிக வியர்வை வெளியேறும்போது, உடலில் உப்புச்சத்து மற்றும் நீர்ச்சத்து பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனால் அதிக தாகம், தலைவலி, உடல் சோர்வு, தலைசுற்றல், தசைப்பிடிப்பு, மயக்கம் மற்றும் வலிப்பு போன்ற அறிகுறிகள் ஏற்படலாம் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்.

    பணிநேரங்களில் அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும். தாகம் இல்லை என்றாலும், போதிய அளவு நீரை தொடர்ந்து பருகவேண்டும். அதிக அளவில் மோர், அரிசிக்கஞ்சி, இளநீர், எலுமிச்சை பழச்சாறு போன்றவற்றை பருகவேண்டும். உணவுப் பழக்க வழக்கங்களில் மாறுதல்களைச் செய்து கொள்ள வேண்டும். நீர்ச்சத்து காய்கறிகளைச் சாப்பிட வேண்டும். பழச்சாறுகளை அதிகமாக உட்கொள்ள வேண்டும்.

    வெளியே செல்லும்போதும், திறந்த வெளியில் வேலை செய்யும் போதும் தலையில் பருத்தித் துணி,துண்டு,தொப்பி அணிந்துகொள்ள வேண்டும். பயணத்தின்போது குடிநீர் எடுத்துச் செல்லவேண்டும். தேவையில்லாமல் வெயிலில் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

    வியர்வை எளிதாக வெளியேறும் வகையில் மிருதுவான, தளர்ந்த, காற்றோட்டமான பருத்தி ஆடைகளை அணிவது நல்லது. வயது முதிர்ந்தவர்கள் நடந்து செல்லும் போது களைப்பாக இருந்தால் நிழலில் சற்று ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும். வெப்பம் அதிகமாக உள்ள திறந்த வெளியில் வேலை செய்யும்போது, களைப்பு, தலைவலி, தலைசுற்றல் போன்ற அறிகுறிகள் ஒருவருக்கு ஏற்பட்டால், உடனடியாக நிழலுக்குச் செல்ல வேண்டும்.

    மேலும், தண்ணீர், எலுமிச்சைப் பழச்சாறு, ஓ.ஆர். எஸ். பருக வேண்டும். மயக்கம், உடல் சோர்வு, அதிக அளவு தாகம், தலைவலி, கால், மணிக்கட்டு அல்லது அடிவயிற்றில் வலி ஏற்பட்டால் அருகிலுள்ள நபரை உதவிக்கு அழைக்கவும். மிகவும் சோர்வாகவோ, மயக்கமாகவோ இருந்தால் மருத்துவ உதவியை நாடவேண்டும். சிறுபிரச்சினை என்றாலும் அதனை சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று அனைத்து பொதுமக்களையும் கேட்டுக் கொள்கிறேன்.

    இத்தகை சூழலில் அரசு நிர்வாகமானது கவனத்துடனும் பாதுகாப்பு உணர்வுடனும் செயல்பட அனைத்து அதிகாரிகளுக்கும், அரசு அலுவலர்களுக்கும் நான் அறிவுறுத்தி இருக்கிறேன். தமிழ்நாடு பேரிடர் அபாயக் குறைப்பு முகமை, மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் அனைத்து துறை அலுவலர்களும் இணைந்து பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    தொழிற்சாலைகள், கட்டடப் பணி, கல் குவாரி மற்றும் சாலை அமைத்தல் போன்ற திறந்த இடங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் நலன் கருதி பணி இடத்தில் போதுமான குடிநீர், நிழற்கூடங்கள் மற்றும் முதலுதவி வசதி ஏற்பாடு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இப்பணியாளர்கள் வெயிலின் தாக்கத்தால் பாதிப்படையாத வகையில், பணி நேரத்தை மாற்றி அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    வனத்துறையினர் காட்டுத் தீ பரவுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மலையேறுபவர்கள் அனுமதியின்றி வனப்பகுதிக்குள் நுழைவதைத் தடுக்க தீவிர ரோந்து பணி மேற்கொள்ள வேண்டும். வன விலங்குகளுக்கு போதுமான அளவு தண்ணீர் கிடைப்பதை உறுதிசெய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அதிக அளவில் கூடும் இடங்களான பேருந்து நிலையம், சந்தை உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் பந்தல்கள் மூலம் சுகாதாரமான குடிநீர் வழங்கிட உள்ளாட்சி அமைப்புகளுக்கு உத்தரவிட்டு இருந்தேன்.

    அதன்படி நகர்ப்புறங்களில் இயங்கிவரும் 299 பேருந்து நிலையங்கள், 68 சந்தைகள், 338 சாலையோரங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் கூடக்கூடிய 277 இடங்கள், நகர்ப்புறங்களை ஒட்டியுள்ள 56 கிராம ஊராட்சிகள் என மொத்தம் 1038 இடங்களில் நிழலுடன் கூடிய தண்ணீர் பந்தல்களில் வெப்பத்தைத் தணிக்க குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. பேரூராட்சிகளுக்கு உட்பட்ட 842 இடங்களில் கூடுதல் தண்ணீர் பந்தல் வசதி ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேற்கண்ட தண்ணீர் பந்தல்களில் பொதுமக்களுக்கு கூடுதலாக ஓ.ஆர்.எஸ். உப்புக்கரைசல் விநியோகிக்கப்பட உள்ளது. இதற்கு தேவையான ஓ.ஆர்.எஸ். பாக்கெட்டுகள் பொது சுகாதாரத்துறையின் கையிருப்பில் போதிய அளவில் உள்ளது.

    அதிகரித்துவரும் கோடை வெப்பத்தை எதிர்கொள்ளும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் மூலமாகவும், அரசால் தெரிவிக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுவதன் மூலமாகவும், பொதுமக்கள் திறந்த இடங்களில் பணிபுரிவோர், நீண்டதூரம் சாலை பயணங்களை மேற்கொள்வோர் பாதுகாப்பாக இருக்குமாறும் கேட்டுக் கொள்கிறேன். அரசு அதிகாரிகள், அலுவலர்கள் அனைவரும் மக்கள் பாதுகாப்பில் முழு அக்கறை செலுத்தி பாதுகாப்பை உறுதி செய்யுமாறும் கேட்டுக் கொள்கிறேன். வெப்ப அலை காலத்தை விவேகமான செயற்பாடுகளால் வெல்வோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கடந்த 3 மாதமாகவே வெப்பம் அதிகரித்து காணப்படும் நிலையில் கடந்த சில நாட்களாக உச்ச நிலை அடைந்துள்ளது.
    • தங்கும் விடுதிகள் மற்றும் ஓட்டல்களிலும் கூட்டம் அதிகரிக்க தொடங்கி உள்ளது.

    ஏற்காடு:

    தமிழகம் முழுவதும் தற்போது வெப்ப அலை வீசி வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். குறிப்பாக குழந்தைகள், வயதானவர்கள் வீட்டில் இருந்தாலும் வெப்பத்தின் தாக்கம் காரணமாக சோர்வடைந்து காணப்படுகின்றனர். இதன் காரணமாக அவர்கள் அதிகளவில் நீர், மோர், பழங்கள், கரும்பு பால், இளநீர், நுங்கு ஆகியவற்றை சாப்பிட்டு வெப்பத்தை தணித்து வருகிறார்கள்.

    குறிப்பாக சேலம் மாவட்டத்தில் கடந்த 3 மாதமாகவே வெப்பம் அதிகரித்து காணப்படும் நிலையில் கடந்த சில நாட்களாக உச்ச நிலை அடைந்துள்ளது. இதனால் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை பொதுமக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. பகலில் வெப்பம் நிலவி வந்தாலும், இரவிலும் அதன் தாக்கம் குறையவில்லை. இரவில் பேன், ஏர்கூலர் போட்டாலும் வெப்ப காற்றாகவே வருகிறது. இதனால் பொதுமக்கள் தூங்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.


    இதனால் பொதுமக்கள் குடும்பம், குடும்பமாக குளு குளு பிரதேசங்களை நோக்கி படையெடுகின்றனர். குறிப்பாக சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் இன்று ஏற்காட்டுக்கு வந்தனர். காலை நேரத்திலேயே சுற்றுலா தலங்களில் கூட்டம் அலைமோதியது. சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் படகு சவாரி செய்தும், பூங்காவில் உள்ள ஊஞ்சலில் விளையாடியும் மகிழ்ந்தனர். மேலும் தற்போது பூக்க தொடங்கியுள்ள டேலியா மலர்கள் முன்பு நின்றும் போட்டோ எடுத்து கொண்டனர். மலைப்பாதையில் கடுமையான வறட்சி நிலவினாலும் ஏற்காடு மலை பகுதியில் களை கட்டும் சீசனை அனுபவிக்க கூட்டம் அலைமோதியது. தற்போது தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு இருப்பதால் இனிவரும் நாட்களில் சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்து காணப்படும். இதனால் வியாபாரிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    தங்கும் விடுதிகள் மற்றும் ஓட்டல்களிலும் கூட்டம் அதிகரிக்க தொடங்கி உள்ளது. ஏற்காட்டில் கோடை மழை பெய்தால் சீசன் இன்னும் களை கட்டும் எனவே கோடை மழையை எதிர்நோக்கி வியாபாரிகள் உள்ளனர். 

    • தமிழகம் முழுவதுமே வெயில் தனது உக்கிரத்தை காட்டி வருகிறது. வெயிலின் தாக்கத்தால் பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

    சென்னை:

    தமிழகம் முழுவதும் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்த ஆண்டு கோடை காலம் தொடங்கும் முன்பே வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கி விட்டது. கடந்த மார்ச் மாதத்தில் இருந்தே சுமார் ஒரு மாத காலமாக கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது.

    இந்த ஆண்டு வழக்கத்தை விட வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும், அடிக்கடி வெப்ப அலையும் வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து வருகிறது. அதற்கு ஏற்பவே வெயிலின் உக்கிரமும் தினமும் அதிகரித்து வருகிறது.

    தமிழகத்தில் கடந்த மார்ச் மாதமே வெயில் 100 டிகிரியை தாண்டி கொளுத்தி வருகிறது. ஈரோடு, திருப்பத்தூர், சேலம் உள்பட சுமார் 12 மாவட்டங்களில் கடந்த மாதமே வெயில் 100 டிகிரியை தாண்டியது. கடந்த 22-ந்தேதி ஈரோடு மாவட்டத்தில் இந்தியாவிலேயே 3-வது அதிக அளவில் வெயில் பதிவாகியுள்ளது. அன்று ஈரோட்டில் 109.4 டிகிரி வெயில் கொளுத்தியது.

    நேற்று ஈரோடு, திருப்பத்தூர், சேலம், தர்மபுரி, கரூர், திருத்தணி, வேலூர், திருச்சி, நாமக்கல், கோவை, மதுரை, தஞ்சாவூர், பாளையங்கோட்டை ஆகிய 13 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி கொளுத்தியது. ஈரோட்டில் அதிகபட்சமாக 107.6 டிகிரி வெயில் பதிவானது. திருப்பத்தூர், சேலத்தில் 106 டிகிரியை தாண்டி வெயில் பதிவானது. ஈரோட்டை பொறுத்தவரை தொடர்ந்து 6-வது நாளாக 108 டிகிரியை நெருங்கி வெயில் பதிவாகி வருகிறது.

    சென்னையில் வெயில் 100 டிகிரியை நெருங்கி பதிவாகி வருகிறது. இதனால் சென்னையிலும் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. தமிழகம் முழுவதுமே வெயில் தனது உக்கிரத்தை காட்டி வருகிறது. வெயிலின் தாக்கத்தால் பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    குறிப்பாக பகல் நேரங்களில் சுட்டெரிக்கும் வெயிலால் வெளியே செல்ல முடிவதில்லை. இரவிலும் காற்று இல்லாததால் புழுக்கத்தின் காரணமாக பொதுமக்கள் தவித்து வருகிறார்கள். இரவு நேரத்தில் மின் விசிறியில் இருந்து வெளியே வரும் காற்று அனலை கக்குவதால் பொதுமக்கள் தூங்க முடியாமல் தவிக்கிறார்கள். சென்னை உள்பட தமிழகம் முழுவதுமே வெப்பம் அதிகரிப்பால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். வெயிலின் தாக்கம் அதிகரிப்பதால் தமிழகத்தில் வெப்ப அலை வீசும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் தமிழகத்தில் 4 நாட்களுக்கு வெப்ப அலை வீசும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    தமிழகத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் 4 நாட்களுக்கு கடுமையான வெப்ப அலை வீசும். தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா, கேரளா, பீகார், உத்தரபிரதேசம், தெலுங்கானா, கோவா ஆகிய மாநிலங்களில் வெப்ப அலை வீசும். மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசாவிலும் கடுமையான வெப்ப அலை தாக்குவதற்கான வாய்ப்பு உள்ளது. மேற்கு வங்காளத்தில் வெப்ப அலைக்கான 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 5 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    வருகிற 30 மற்றும் 1-ந்தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். மற்ற தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    மே 2-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக் கூடும். மற்ற மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    இன்று முதல் வருகிற 30-ந்தேதி வரை தமிழக உள் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி வரை படிப்படியாக உயரக்கூடும். அதிகபட்ச வெப்ப நிலை வட தமிழக உள் மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் 102 டிகிரி முதல் 107 டிகிரி வரை பதிவாகும். மற்ற மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 95 டிகிரி முதல் 102 டிகிரிவரை பதிவாகும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 97 முதல் 99 டிகிரியை ஒட்டி இருக்கும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் நாளை முதல் 4 நாட்கள் வெப்ப அலை தாக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் தமிழகம் முழுவதும் வருகிற 30-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) கடுமையான வெப்ப அலை வீசுவதற்கான மஞ்சள் நிற எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

    இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி இருப்பதாவது:-

    தமிழகம் முழுவதும் வருகிற 30-ந்தேதி கடுமையான வெப்ப அலை வீசும். அன்று வெப்ப அலை வீசுவதற்கான மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. வெப்ப அலை வீசும் என்பதால் அன்று நண்பகல் நேரங்களில் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே செல்ல வேண்டாம். வெப்ப அலை வீசும் நேரங்களில் அசவுகரியமான சூழல் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வருவதை தவிர்ப்பது நல்லது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வெயிலின் தாக்கம் அதிகரிப்புக்கு ஏற்ப பொதுமக்களுக்கு கூடுதல் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
    • தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் வெப்பநிலைக்கு ஏற்ப மின்சார தட்டுப்பாடும் அதிகரித்துள்ளது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் வாட்டி வதைக்கும் வெப்ப அலையால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். தமிழகம் முழுவதும் கடந்த ஒரு மாதமாக வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்பே பகல் நேரத்தில் பொதுமக்கள் வெளியே செல்வதைத் தவிர்த்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக சென்னையில் அதிகபட்சமாக 35 முதல் 38 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப நிலை பதிவானது. மேலும், கடல் காற்றால் காற்றின் ஈரப்பதம் அளவு 70 சதவீதம் வரை உள்ளது. இனிவரும் நாட்களில் வெப்பநிலை மேலும் உயரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

    குறைந்தபட்ச வெப்ப நிலை 27 முதல் 28 டிகிரி செல்சியஸ் வரையும், அதிகபட்சமாக 36 முதல் 37 டிகிரி செல்சியஸ் வரையும் காணப்படும். கடற்கரையோர மாவட்டங்களில் 50 முதல் 80 சதவீதம் வரை காற்றில் ஈரப்பதம் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று (திங்கட்கிழமை) முதல் மே 2-ந்தேதி வரை தமிழக வட மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கும். ஏனைய தமிழக மாவட்டங்களில் 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும். வட தமிழக உள் மாவட்டங்களின் ஒருசில இடங்களில் 109 டிகிரி பாரன்ஹீட் வரை வெயில் சுட்டெரிக்கும். இதர தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 102 டிகிரி வரையும் வெப்பம் இருக்கும்.

    மேலும் வடதமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசும். சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாளை முதல் அடுத்த 3 நாட்களுக்கு வட தமிழகத்தில் மிக கடுமையான வெப்ப அலை வீசும்" என்று எச்சரித்துள்ளது. குறிப்பாக நாளை மறுநாள் (புதன்கிழமை) மிக கடுமையான வெப்ப அலை தாக்குதல் இருக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி மே 1-ந்தேதிக்கு ஆரஞ்சு வண்ண எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    அன்றைய தினம் 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை கூடுதல் வெப்ப தாக்குதல் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மன்னார் வளைகுடா மற்றும் அதனையொட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் இன்று முதல் மே 1-ந்தேதி வரை கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக் கூடும். இதற்கிடையே தமிழ்நாட்டில் வெப்ப அலை மே 1 முதல் 4-ந்தேதி வரை அதன் உச்சத்தை அடைய வாய்ப் புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.


    இது குறித்து அவர் தனது எக்ஸ் சமூக வலைதளத்தில், "மே 1 முதல் 4-ந்தேதி வரை வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ஈரோடு, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர் ஆகிய மாவட்டங்களில் வெப்ப அலையின் பாதிப்பு அதிகமாக இருக்கும். அதேநேரத்தில் உள்மாவட்டங்களில் மே 5-ந்தேதிக்குப் பின் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது' என்று தெரிவித்து உள்ளார். இதனால், மே தொடக்கத்தில் வட மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் வெப்பநிலை புதிய உச்சத்தை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில், வெப்பத்தில் இருந்து மக்களைக் காக்க ஆங்காங்கே அரசு சார்பிலும், அரசியல் கட்சிகள், தொண்டு நிறுவனங்கள் சார்பிலும் தண்ணீர், மோர், ஓஆர்எஸ் கரைசல் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், தண்ணீர் தட்டுப்பாட்டைத் தவிர்க்க மாநில அரசு சார்பில் கூட்டு குடிநீர் திட்டம் நீரேற்று நிலையங்கள் மூலம் தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது.

    வெயிலின் தாக்கம் அதிகரிப்புக்கு ஏற்ப பொதுமக்களுக்கு கூடுதல் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் வெப்பநிலைக்கு ஏற்ப மின்சார தட்டுப்பாடும் அதிகரித்துள்ளது. பெரும்பாலும் இரவில் மின் நுகர்வு அதிகரித்து காணப்பட்டு வந்த நிலையில், தற்போது பகலிலும் அதிக அளவில் மின்சாரம் செலவிடப்படுகிறது. வீடு, அலுவலகங்களில் ஏ.சி. பயன்பாடு, விவசாயத்துக்கு நீர்ப்பாசனம் செய்வது உள்ளிட்ட காரணங்களால் மின் தேவை அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை மட்டும் 20,583 மெகாவாட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால், மின் மாற்றிகள், மின்சார வயர்களில் மின் சேதம் ஏற்படுவதைத் தடுக்க தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாக மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • பல மாநிலங்களில் வெப்பஅலை இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
    • 5 மாநிலங்களில் நீர் இருப்பு வரலாறு காணாத வகையில் கணிசமாக குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

    திருவனந்தபுரம்:

    தமிழகம் மற்றும் கேரள மாநிலத்தில் இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிக வெப்பம் நிலவி வருகிறது. கோடை காலம் தொடங்குவதற்கு முன்னதாகவே இந்த இரு மாநிலங்களிலும் வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக காணப்பட்டது. இந்நிலையில் ஏப்ரல் மாதம் தொடங்கியதில் இருந்து வெயில் கடுமையாக சுட்டெரித்து வருகிறது.

    பகல் நேரத்தில் பொது மக்கள் வெளியில் சென்று வர முடியாத அளவுக்கு வெயில் கடுமையாக அடிக்கிறது. இந்த வெப்பம் இரவிலும் நீடிப்பதால் மக்கள் இரவில் தூங்க முடியாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில் பல மாநிலங்களில் வெப்பஅலை இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில் தமிழகம் மற்றும் கேரள மாநிலமும் அடங்கும்.

    கேரள மாநிலத்தை பொறுத்தவரை, தினமும் வெயில் பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்கள் விவரம் அறிவிக்கப்பட்டு, அந்த மாவட்ட மக்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். மேலும் உடலில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்படாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை பொதுமக்கள் தினமும் கடைபிடிக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட மக்களும் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். வழக்கத்தை விட வெப்பநிலை அதிகமாக இருப்பதால் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.

    அதிக தண்ணீர் குடித்தல் உள்ளிட்டவைகளை கடைபிடித்தாலும் வெப்ப பாதிப்பு அதிகமாகவே இருக்கிறது. இந்நிலையில் மத்திய நீர் ஆணையம் வெளியிட்டுள்ள தகவலின்படி தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய 5 மாநிலங்களில் நீர் இருப்பு வரலாறு காணாத வகையில் கணிசமாக குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. அதிலும் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் நீர் இருப்பு மிகவும் குறைந்துவிட்டதாக கூறியிருக்கிறது. தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய 5 மாநிலங்களிலும் தற் போதைய நிலவரப்படி 17 சதவீதம் மட்டுமே நீர் இருப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இந்த 5 மாநிலங்களிலும் உளள 42 நீர்த்தேக்கங்களின் மொத்த கொள்ளளவு 53.334 பில்லியன் கன மீட்டர்கள் ஆகும். தற்போது இந்த நீர்த்தேக்கங்களில் 8.865 பில்லியன் கன மீட்டர்கள் அளவே தண்ணீர் இருப்பு இருக்கிறது. கடந்த ஆண்டு இந்த நீர்த்தேக்கங்களில் இந்த நேரத்தில் 29 சதவீதம் தண்ணீர் இருந்தது. கடந்த பத்து ஆண்டுகளில் இந்த நேரத்தில் சராசரி நீர் இருப்பு 23 சதவீதமாக உள்ளது. இந்நிலையில் தற்போது நீர் இருப்பு 17 சதவீதமாக குறைந்திருப்பதால் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது.

    • 14 மாவட்டங்களில் வெப்ப அலையின் தாக்கம் கடுமையாக இருக்கும் என்று வானிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    • காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் கோடை மழை பரவலாக பெய்யும்.

    சென்னை:

    தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வரை வெயில் கொளுத்துவதால் மக்கள் கடுமையான சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

    குறிப்பாக வடதமிழக உள் மாவட்டங்களில் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்தே வெப்ப அலை வீசி வருகிறது. தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் படிப்படியாக பெரும்பாலான மாவட்டங்களிலும் ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப்பகுதிகளிலும் வெப்பம் அதிகரித்தது.

    ஈரோடு, கரூர், சேலம், வேலூர், திருப்பூர் உள்ளிட்ட வட உள் மாவட்டங்களில் இயல்பைவிட வெப்பம் அதிகமாக இருந்து வருகிறது.

    தமிழகத்தில் 15 மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக ஈரோட்டில் 109 டிகிரி வெயில் நேற்று பதிவானது.

    இந்த நிலையில் இன்று முதல் வெப்பத்தின் தாக்கம் மேலும் அதிகரிக்கும். வெப்ப அலையின் தாக்கம் வட உள் மாவட்டங்களில் இயல்பைவிட 5 டிகிரி செல்சியசை விட அதிகரிக்கும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.

    இன்று முதல் 4 நாட்களுக்கு வெப்ப அலை கடுமையாக வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இன்று முதல் 3-ந்தேதி வரை தமிழக உள் மாவட்டங்களில் இயல்பைவிட வெப்ப நிலை அதிகமாக இருக்கும். 109 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தக் கூடும் என்பதால் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    கடலோரம் இல்லாத இந்த மாவட்டங்களில் உஷ்ணம் அதிகமாக இருக்கும். இதனால் அசவுகரியமான சூழல் ஏற்படக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 14 மாவட்டங்களில் வெப்ப அலையின் தாக்கம் கடுமையாக இருக்கும் என்று வானிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கூறியதாவது:-

    கோடை வெயிலின் தாக்கம் வருகிற 3 நாட்கள் கடுமையாக இருக்கும். இன்று வெப்ப அலை கடுமையாக இருக்க வாய்ப்புள்ளது. மே 1 முதல் 3-ந்தேதி வரை வட உள் மாவட்டங்களில் 43 டிகிரி செல்சியஸ் வரை வெப்பத்தின் தாக்கம் இருக்கும். அதாவது இயல்பைவிட 5 செல்சியஸ் அதிகமாகக் கூடும். 110 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பம் பதிவாக வாய்ப்பு உள்ளது.

    மே 4-ந்தேதி முதல் கோடை மழை பெய்யக்கூடும். கடலோரப் பகுதிகள் தவிர வட மாவட்டங்கள் உள் மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் இடி-மின்னலுடன் கோடை மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது.

    கோடை மழை மே 2-வது வாரம் வரை தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் பெய்யக்கூடும் என்பதால் வெப்பத்தின் தாக்கம் குறையும். சென்னையில் 50 சதவீதம் தான் மழைக்கு வாய்ப்பு உள்ளது. காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் கோடை மழை பரவலாக பெய்யும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கேரள மாநிலத்தில் பாலக்காடு உள்ளிட்ட சில மாவட்டங்களில் வெப்பநிலை 104 டிகிரிக்கு மேல் இருந்து வருகிறது.
    • தேர்தல் நாளில் வாக்களிக்க வந்த வாக்காளர்களில் 10 பேர் சுருண்டு விழுந்து பலியாகினர்.

    திருவனந்தபுரம்:

    கேரளா மற்றும் தமிழகத்தில் இந்த ஆண்டு கோடை காலம் தொடங்குவற்கு முன்னதாகவே வெயில் சுட்டெரித்தது. இந்நிலையில் ஏப்ரல் மாத தொடங்கியதில் இருந்து வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது.

    தமிழகத்தில் பல மாவட்டங்களில் பகல் நேரத்தில் 100 டிகிரிக்கு மேல் வெயில் அடிக்கும் நிலையில், கேரள மாநிலத்தில் பாலக்காடு உள்ளிட்ட சில மாவட்டங்களில் வெப்பநிலை 104 டிகிரிக்கு மேல் இருந்து வருகிறது.

    வெப்பஅலை தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கும் மாநிலங்களில் கேரளாவும் இடம் பெற்றிருக்கிறது. இதனால் மக்கள் வெயில் கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் கேரள மாநிலத்தில் அதிக வெப்பம் காரணமாக உயிர்பலி ஏற்படுவதும் அரங்கேறி வருகிறது. தேர்தல் நாளில் வாக்களிக்க வந்த வாக்காளர்களில் 10 பேர் சுருண்டு விழுந்து பலியாகினர். அதனைத்தொடர்ந்து பொது இடங்களுக்கு வந்த 3 பேரும் அடுத்தடுத்து இறந்தனர்.

    கடும் வெயில் காரணமாகவே அவர்கள் பலியாகியிருப்பது தெரியவந்தது. இதனால் பகல் நேரத்தில் தேவையில்லாமல் வெளியே வருவதை மக்கள் தவிர்க்க வேண்டும் என்று மாநில சுகாதாரத்துறை கேட் டுக்கொண்டுள்ளது.

    இந்நிலையில் கேரள மாநிலத்தில் கடும் வெயில் காரணமாக நேற்று ஒரே நாளில் 2 வாலிபர்கள் மற்றும் ஒரு பெண் என 3 பேர் இறந்துள்ளனர். பாலக்காடு மாவட்டத்தில் மட்டும் 2 பேர் பலியாகி இருக்கின்றனர். அது பற்றிய விவரம் வருமாறு:-

    கோட்டயம் மாவட்டம் வைக்கம் தாளை யோலப்பறம்பு தாளப்பாறை பகுதியை சேர்ந்தவர் ஷமீர்(வயது35). இவர் நேற்று வைக்கம் கடற்கரை பகுதியில் நடந்த கிரிக்கெட் போட்டியில் பங்கேற்று விளையாட வந்திருந்தார்.

    மதிய நேரத்தில் அவர் கிரிக்கெட் விளையாடினார்.அப்போது அவர் திடீரென சுருண்டு விழுந்தார். இதையடுத்து ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது அவர் ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது.

    பாலக்காடு மாவட்டம் மன்னார்காடு பகுதியை சேர்ந்த ரமணி-அம்புஜத் தம்பதியரின் மகன் சபரீஷ்(27). இவர் நேற்று பகல் நேரத்தில் தனது நண்பர்களுடன் நின்று கொண்டிருந்தார்.

    அப்போது சபரீஷ் திடீ ரென சுருண்டு விழுந்தார். அருகில் உள்ள தாலுகா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இருந்தபோதிலும் சபரீஷ் பரிதாபமாக இறந்து விட்டார்.

    பாலக்காடு தென்கரை பகுதியை சேர்ந்த சரோஜினி(56) என்ற பெண் நேற்று பகலில் பஸ்சுக்காக காத்து நின்றார். அப்போது அவர் திடீரென சுருண்டு விழுந்தார். சுய நினைவின்றி கிடந்த அவரை அந்த பகுதியில் நின்றவர்கள் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இருந்தபோதிலும் அவர் பரிதாபமாக இறந்தார்.

    சுருண்டு விழுந்து இறந்த 2 வாலிபர்கள் உள்ளிட்ட 3 பேரும் கடும் வெயில் காரணமாகவே இறந்ததாக கூறப்படுகிறது. ஆனால் பிரேத பரிசோதனைக்கு பிறகே அவர்களது இறப்புக்கான சரியான காரணம் தெரியவரும் என்று போலீசார் கூறியுள்ளனர்.

    இருந்தபோதிலும் கேரளாவில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

    • உடற்பயிற்சி செய்வதையோ, கடுமையான வேலை செய்வதையோ தவிருங்கள்.
    • வியர்வை ஆவியாக மாறுவதற்கு ஏற்ப பருத்தியாலான ஆடைகளை அணியுங்கள்.

    அக்னி நட்சத்திரம் ஆரம்பிப்பதற்கு முன்பே வெயிலின் உக்கிரம் அதிகரிக்க தொடங்கிவிட்டது. நாட்டின் பல நகரங்கள் 100 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை சர்வ சாதாரணமாக எட்டிப்பிடித்துவிட்டன. இன்னும் அச்சுறுத்தும் வகையில் வெப்ப அலையும் விஸ்வரூபம் எடுத்திருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறுகிறது. வெப்ப அலை என்றால் என்ன? அது எதனால் ஏற்படுகிறது? அது என்னென்ன பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று பார்ப்போம்.

    வெப்ப அலை ஏன் ஏற்படுகிறது?

    வெப்பநிலை அதிகரிக்கும் சமயங்களில் காற்றழுத்தம் குறைவாக இருக்கும் பகுதிகளுக்கு தொடர்ந்து காற்றை அழுத்தித் தள்ளும் செயல்முறை நடக்கும். அப்படி காற்று ஒரே பகுதியில் குவிந்து காற்றழுத்தம் அதிகரிக்கும்போது மேகங்கள் உருவாவது கட்டுப்படுத்தப்படும். வானம் நீல நிறத்தில் தெளிவாக காணப்படும்.

    அப்போது வானின் மேற்பரப்பில் வெப்பம் பரவி வெப்பநிலை உயர்வுக்கு வழிவகுக்கும். இப்படி காற்றின் வடிவங்களில் ஏற்படும் தொடர்ச்சியான மாற்றம் குறிப்பிட்ட பகுதிக்கு வெப்பமான காற்றை கொண்டு வரக்கூடும். அத்துடன் காலநிலை மாற்றம் காரணமாக அதிகரித்து வரும் வெப்பநிலையும் இணைந்து வெப்ப அலைக்கு வித்திடுகின்றன.

    எங்கு வெப்பநிலை அதிகமாகும்?

    பொதுவாகவே இந்தியாவில் ஏப்ரல் மாதத்தில் பல பகுதிகளில் வெப்பநிலை அதிகரிக்க தொடங்கும். இயல்பை விட 4 முதல் 6 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கும். குறிப்பாக ஒடிசா, மேற்கு வங்காளம், ஜார்கண்ட், சத்தீஸ்கார், மத்தியபிரதேசம், குஜராத், தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களின் சில பகுதிகளில் சராசரி வெப்பநிலை 42 டிகிரி செல்சியஸ் முதல் 45 டிகிரி செல்சியஸ் வரை நிலவும்.

    வெப்ப அலை என்றால் என்ன?

    பொதுவாக இந்தியாவின் வட மேற்கு பகுதிகளில் கோடை காலங்களில் நிலவும் அதிகபட்ச வெப்பநிலையை விட கூடுதலாக வெப்பநிலை உயருவதைத்தான் வெப்ப அலை என்று குறிப்பிடுகிறார்கள். பொதுவாக வெப்ப அலை மார்ச் முதல் ஜூன் மாதங்களுக்கு இடைப்பட்ட காலகட்டங்களில் ஏற்படும்.

    சில சமயம் ஜூலை மாதம் வரை நீடிக்கும். இயல்பாக இருக்கும் வெப்பநிலையை விட 3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை தொடர்ச்சியாக 3 நாட்களுக்கு மேல் நீடித்தால் அதனை வெப்ப அலை என்று வரையறை செய்கிறார்கள். அதிலும் சமவெளி பகுதியில் 40 டிகிரி செல்சியசுக்கும் அதிகமாகவும், கடலோர பகுதிகளில் 37 டிகிரி செல்சியஸுக்கு அதிகமாகவும், மலைப்பகுதிகளில் 30 டிகிரி செல்சியசுக்கு கூடுதலாகவும் வெப்பநிலை உயர்ந்தால் அங்கு வெப்ப அலை வீசுவதாக கணக்கிடப்படுகிறது.

    எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தும்?

    வெப்ப அலையின் தாக்கம் அதிகரிக்கும்போது நீரிழப்பு, சோர்வு, உடல் பலவீனம், தலைச்சுற்றல், தலைவலி, குமட்டல், வாந்தி, தசைப்பிடிப்பு, வியர்வை, வெப்ப பக்கவாதம் போன்ற பாதிப்புகள் எற்படும். உடல் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் அதாவது 104 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் அதிகமாகும்.

    அதனால் மயக்கம், வலிப்பு, காய்ச்சல் போன்ற பிரச்சினைகள் உண்டாகும். சிலர் கோமா நிலைக்கு தள்ளப்படலாம். வெப்ப அலைகள் உடலில் இருந்து வெளியேறும் வியர்வையின் அளவை அதிகப்படுத்தும். அதனை ஈடுசெய்ய போதுமான திரவ நிலை உணவுகளை உட்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் நீரிழப்புக்கு வழிவகுக்கும்.

     வெப்ப அலை வீசும் சமயத்தில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கைகள்:

    * தாகம் எடுக்காவிட்டாலும் நாள் முழுவதும் தண்ணீர் மற்றும் திரவ பானங்கள் அருந்திக்கொண்டிருக்க வேண்டும். பருகும் தண்ணீர் அறை வெப்பநிலைக்குள்ளாகவே இருக்க வேண்டும்.

    குறிப்பாக குளிர்ந்த நீர் அல்லது ஐஸ் நீர் பருகுவதை தவிர்க்கவும். அதிலும் வெப்பநிலை 40 டிகிரி செல்சியல் நிலையில் இருந்தால் குளிர்ந்த நீரை அறவே தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். அதனை பருகுவது ரத்த நாளங்களில் பாதிப்பை ஏற்படுத்தும்.

    * வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமாக இருக்கும் சமயங்களில் வெளியே சென்று விட்டு வீட்டுக்குள் நுழைந்தால் உடனே கை, கால்களை கழுவக்கூடாது. அறை வெப்பநிலைக்கு உடல் தன்னை தயார் செய்த பிறகு அல்லது அரை மணி நேரம் கழித்து கை, கால்களை கழுவவோ, குளிக்கவோ செய்யலாம்.

    * வெப்பம் அதிகம் நிலவும் வேளையில் சோர்வாக இருந்தால், உடனடியாக குளிர்ந்த நீரை குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். அது நரம்புகள், ரத்த நாளங்கள் சுருங்குவதற்கு வழிவகுக்கும். பக்கவாதத்திற்கும் வித்திடும்.

    * வெப்பம் அதிகம் நிலவும் சமயத்தில் உடற்பயிற்சி செய்வதையோ, கடுமையான வேலை செய்வதையோ தவிருங்கள்.

    * உடலில் இருந்து வெளிப்படும் வியர்வை ஆவியாக மாறுவதற்கு ஏற்ப பருத்தியாலான ஆடைகளை அணியுங்கள்.

    * வெப்பநிலை அதிகமாக இருக்கும் சமயத்தில் குளிரூட்டப்பட்ட அறை, நூலகம் மற்றும் உயரமான அடுக்குமாடி கட்டிடங்களில் நேரத்தை செலவிடலாம். தினமும் இருமுறை குளியல் போடலாம்.

    • தமிழ்நாட்டில் வெப்ப அலை மேலும் தீவிரமடையும் என எச்சரிக்கை.
    • தமிழக மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை.

    வட தமிழக உள் மாவட்டங்களில் இன்றும், நாளையும் அநேக இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    குறிப்பாக, மே 4ம் தேதி முதல் மே 6ம் தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என கூறப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் வெப்ப அலை மேலும் தீவிரமடையும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    தமிழ்நாட்டில் உள்ள கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, தருமபுரி, பெரம்பலூர், கரூர், ஈரோடு, நாமக்கல் ஆகிய 7 மாவட்டங்களுக்கு தீவிர வெப்ப அலைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்களில் இடி மின்னல், பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

    ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    ×