என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "hindu temple"

    • ஆஸ்திரேலியாவில் இரண்டு மாதங்களில் 4 கோவில்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது
    • இந்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை மந்திரியிடம் இதுபற்றி பேசி உள்ளார்

    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலியாவில் இந்து கோவில்களை குறிவைத்து காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தி சேதப்படுத்துவதும், அவமதிப்பு செய்வதும் தொடர்ந்து நடைபெறுகிறது. இது இந்துக்களின் மனதை புண்படுத்துவதாக அமைந்துள்ளது.

    இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் மேலும் ஒரு இந்து கோவிலை காலிஸ்தான் ஆதரவாளர்கள் சேதப்படுத்தி அவமதிப்பு செய்துள்ளனர். பிரிஸ்பேனில் உள்ள ஸ்ரீ லட்சுமி நாராயணன் கோவிலில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. கோவில் காம்பவுண்டு சுவரில் இந்தியாவுக்கு எதிராகவும், மோடிக்கு எதிராகவும் வாசகங்களை எழுதி வைத்துள்ளனர். இதுபற்றி போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கோவில் மற்றும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதாக காவல்துறை தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் இரண்டு மாதங்களில் 4 கோவில்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    கடந்த மாதம் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் ஆஸ்திரேலியா வந்தபோது, ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை மந்திரி பென்னி வாங்கை சந்தித்தார். அப்போது, ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய சமூகத்தினருக்கு எதிரான செயல்பாடுகள் குறித்து பேசினார். இந்த விஷயத்தில் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

    • பார்வதி, விஷ்ணு ஆகிய கடவுள்கள் உட்படப் பல கடவுளருக்கான கோவில்கள் உள்ளன.
    • தாக் பாம் என அழைக்கப்படும் இவர்கள் இப்பயணத்தின்போது ஒரு இடத்தில் கூட நிற்பதில்லையாம்.

    வைத்தியநாதர் கோவில், தேவ்கர் இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள தேவ்கர் என்னும் நகரத்தில் அமைந்துள்ள ஒரு இந்துக் கோவில் ஆகும். இது சிவனுக்காக அமைக்கப்பட்டுள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்று. இராவணன் இத்தலத்தில் சிவனை வணங்கி வரங்கள் பெற்றான் என்பது ஐதீகம். புனிதமான தலமாகக் கருதப்படும் இவ்விடத்துக்கு ஆண்டுதோறும் பத்து இலட்சத்துக்கு மேற்பட்ட யாத்திரீகர்கள் வருவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இவ்விடம் பாபா தாம் அல்லது பைத்யநாத் தாம் என்றும் அழைக்கப்படுவதுண்டு.

    இக்கோயிலில், பார்வதி, விஷ்ணு ஆகிய கடவுள்கள் உட்படப் பல கடவுளருக்கான கோவில்கள் உள்ளன. ஆனி மாதத்தில் பல நூறாயிரம் யாத்திரீகர்கள் இக்கோயிலுக்கு வருகிறார்கள். இவர்கள் சுல்தான்கஞ்ச் என்னும் இடத்திலிருந்து கங்கை நீரை எடுத்துக் கொண்டு 100 கிலோமீட்டர்கள் வரை கால்நடையாக இக் கோயிலுக்கு வருகிறார்கள். சிலர் இத்தூரத்தை 24 மணி நேரத்தில் கடந்து விடுகிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது. தாக் பாம் என அழைக்கப்படும் இவர்கள் இப்பயணத்தின்போது ஒரு இடத்தில் கூட நிற்பதில்லையாம்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்து கோவில்களில் ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளின் கூட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
    • மீறி செயல்படும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் உள்ள இந்து கோவில்களில் ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளின் கூட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இதனை அனுமதிக்க கூடாது என்று ஒரு தரப்பினர் கூறிவந்தனர்.

    இந்நிலையில் திருவிதாங்கூர் தேவசம்போர்டின் கீழ் உள்ள கோவில்களில் இனி ஆர்.எஸ்.எஸ். கூட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் நடத்த அனுமதிக்க கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை மீறி செயல்படும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    • இக்கோவிலின் கருவறையில் மகாவிஷ்ணு நான்கு கைகளுடன் அமர்ந்த நிலையில் இருக்கிறார்.
    • இங்கு வந்து வழிபடுபவர்களுக்குப் பயம் விலகி, நீண்ட ஆயுள் கிடைக்கும்.

    கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம், அடுவச்சேரியில் அமைந்திருக்கிறது, வாசுதேவபுரம் மகாவிஷ்ணு கோவில். இங்கு அட்சய திருதியை தொடங்கி, 8 நாட்கள் லட்சுமி தேவி அஷ்டலட்சுமியாக, ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு தோற்றத்தில் காட்சியளித்து அருள்கிறார். சிறப்பு மிக்க இந்த ஆலயத்தைப் பற்றி பார்க்கலாம்.

    தல வரலாறு

    விஷ்ணுவின் ஆறாவது அவதாரமாக அமைந்தது, பரசுராமர் அவதாரம். பரசுராமர் ஒருமுறை, மகாலட்சுமியைத் தன் கைகளால் தழுவிய நிலையில் இருப்பது போன்ற மகாவிஷ்ணு சிலை ஒன்றை உருவாக்கினார். அதனை ஓரிடத்தில் நிறுவி, ஆலயம் அமைத்தார். பின்னர் அதை வேதியர்களிடம் ஒப்படைத்துச் சென்றார். பரசுராமரிடம் இருந்து அந்தக் கோவிலைப் பெற்றவர்கள், கோவிலுக்குத் தேவையான அனைத்துப் பணிகளையும் சிறப்பாகச் செய்து, லட்சுமி தேவியின் அருளைப் பெற்றுச் செல்வ நிலையில் உயர்ந்தனர்.

    பிற்காலத்தில் அவர்களது மரபுவழியில் வந்தவர்கள், கோவில் பணிகளில் ஆர்வம் காட்டாமல் ஒதுங்கி இருக்கத் தொடங்கினர். அதனால், அவர்களுக்கு லட்சுமியின் அருள் கிடைக்காமல் போனது. மேலும் அவர்கள் செல்வத்தை இழந்து, வறுமையில் வாடினர். கோவில் பணிகள் எதையும் செய்யாததாலும், கோவிலுக்கு வந்து வழிபடுபவர்கள் இல்லாமையாலும், அந்த இடம் மனித நடமாட்டமில்லாமல் மாறிப் போனது. ஒரு கட்டத்தில் வழிபாடின்றி கிடந்த ஆலயத்தில் பூஜைகளைச் செய்ய, லட்சுமிதேவியே அங்கு வந்தாள்.

    அங்கிருந்த சாலக்குடி ஆற்றில் நீரெடுத்து, கோவில் பணிகள் அனைத்தையும் செய்து வரத் தொடங்கினாள். அப்படி ஒருநாள் லட்சுமி தேவி நீர் எடுத்து வரும்போது, அவரைப் பார்த்து வில்வமங்கள சுவாமிகள் ஆச்சரியமடைந்தார். அவர், லட்சுமி தேவியிடம் "ஆற்றில் இருந்து நீரெடுத்துச் செல்வது ஏன்?" என்று கேட்டார். லட்சுமி தேவி, அங்கிருக்கும் மகாவிஷ்ணு கோவில் குறித்த செய்தியைத் தெரிவித்து, அங்கு கோவில் பணி செய்து வந்தவர்கள், அதனைத் தொடர்ந்து செய்யாமல் விட்டுவிட்ட தகவலையும் சொன்னாள்.

    வில்வமங்கள சுவாமிகள், கோவிலைப் புறக்கணித்தவர்கள் திருந்திட, அவர்களுக்கு வாய்ப்பு வழங்கி, அவர்கள் மீது கருணைப் பார்வையைச் செலுத்தி, அவர்களை நல்வழிப்படுத்த லட்சுமிதேவியிடம் வேண்டினார். லட்சுமிதேவியும் அவர் வேண்டுகோளை ஏற்று, அட்சய திருதியை நாள் முதல் எட்டு நாட்களுக்கு, ஆலயத்தில் அஷ்டலட்சுமியாக இருந்து அருள் புரிவதாகவும், அவர்களது வறுமையைப் போக்கி அருளுவதாகவும் கூறினாள். உடனே வில்வமங்கள சுவாமிகள், கோவில் பணிகளைச் செய்து வந்தவர்களை அழைத்து வந்து, அக்கோவிலில் மீண்டும் வழிபாடுகளைச் செய்யும்படி அறிவுறுத்தினார்.

    அவர்களும் சுவாமிகள் சொன்னபடி, கோவில் பணிகளை மீண்டும் செய்யத் தொடங்கினர். பின்னர் ஆலயத்தில் அட்சயதிருதியை தொடங்கி எட்டு நாட்களுக்கு லட்சுமி தேவி, அஷ்டலட்சுமியாக ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு தோற்றத்தில் அவர்களுக்குக் காட்சிஅளித்தாள். அதனால் கோவில் பணிகள் செய்தவர்களும், கோவிலுக்குச் சென்று வழிபட்டவர்களும் மீண்டும் அனைத்துச் செல்வங்களையும் பெற்று, உயர்ந்த நிலையை அடைந்தனர் என்று இக்கோவிலின் தலவரலாறு சொல்லப்படுகிறது.

    ஆலய அமைப்பு :

    கேரளக் கட்டுமான முறையில் அமைந்த இக்கோவிலின் கருவறையில் மகாவிஷ்ணு நான்கு கைகளுடன் அமர்ந்த நிலையில் இருக்கிறார். இவருக்குப் பின்புறத்தில் லட்சுமி தேவி சிற்பம் இருக்கிறது. அட்சய திருதியை நாளில் தொடங்கி 8 நாட்களுக்கு மட்டும் மகாவிஷ்ணுவின் இடதுபுறத்தில் லட்சுமிதேவி அமர்ந்த நிலையில் காட்சியளிப்பாள். இந்த ஆலயத்தில் மகாவிஷ்ணுவுக்குரிய அனைத்துச் சிறப்பு நாட்களிலும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன.

    இங்கு வந்து வழிபடுபவர்களுக்குப் பயம் விலகி, நீண்ட ஆயுள் கிடைக்கும். மாங்கல்ய பலன், குழந்தைப்பேறு கிடைக்கும். விவசாயம் மற்றும் வணிகம் பெருகும் என்பதுடன் அனைத்துச் செல்வங்களும் கிடைக்கும் என்பது பொதுவான பலனாக இருக்கிறது. இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள், பட்டுத்துணி, கண்ணாடி ஆகியவற்றை வாங்கிக் கோவில் சன்னிதியில் சமர்ப்பித்து வழிபடுகின்றனர். கோவில் அர்ச்சகர்கள், சமர்ப்பிக்கப்படும் பட்டுத்துணி மற்றும் கண்ணாடியை வழிபாட்டிற்குப் பின்பு, மீண்டும் பக்தர்களிடமேத் திருப்பித் தந்துவிடுகின்றனர்.

    இந்தப் பொருட்களை வீட்டின் பூஜையறையில் வைத்தால், வீட்டில் செல்வம் பெருகும் எனும் நம்பிக்கை இருக்கிறது. இதே போன்று, சுமங்கலிப் பெண்கள் அரிசி மற்றும் மஞ்சள் ஆகியவற்றைச் சமர்ப்பித்து வழிபடுகின்றனர். அரிசியை மகாவிஷ்ணுவுக்கும், மஞ்சளை லட்சுமி தேவிக்கும் சமர்ப்பிப்பதாகச் சொல்லி, அர்ச்சகர் சொல்லும் மந்திரங்களைச் சொல்லி வழிபடுகின்றனர்.

    இதன் மூலம், வீட்டிலிருக்கும் அனைவருக்கும் நல்ல உடல் நலமும், பொருள் வளமும் கிடைக்கும் என்கின்றனர். இந்தத் திருத்தலத்தில் சித்திரை மாதம் அட்சய திருதியை நாளில் தொடங்கி 8 நாட்கள் லட்சுமிதேவி, அஷ்டலட்சுமியாக அருள்கிறார்.

    அட்சய திருதியை நாள் அன்று வீரலட்சுமி, இரண்டாம் நாளில் கஜலட்சுமி, மூன்றாம் நாளில் சந்தான லட்சுமி, நான்காம் நாளில் விஜயலட்சுமி, ஐந்தாம் நாளில் தான்யலட்சுமி, ஆறாம் நாளில் ஆதிலட்சுமி, ஏழாம் நாளில் தனலட்சுமி, எட்டாம் நாளில் மகாலட்சுமியாக காட்சி தருகிறாள். இந்த எட்டு நாட்களிலும் தாம்பூல சமர்ப்பண வழிபாடு எனும் சிறப்பு வழிபாடு நடத்தப் பெறுகிறது.

    அமைவிடம் :

    எர்ணாகுளத்தில் இருந்து ஆலுவா செல்லும் பேருந்தில் அத்தாணி என்னும் இடத்தில் இறங்க வேண்டும். அங்கிருந்து மேற்கே 5 கிலோமீட்டர் தூரம் சென்றால் அடுவச்சேரியை அடையலாம்.

    • இந்த ஆலய இறைனை தரிசித்தால், திருமணத் தடை நீங்கும்.
    • காசியைப் போல இந்த ஆலயத்திலும் அஷ்ட பைரவர்கள் எனப்படும் எட்டு பைரவர்கள் தரிசனம் தருகின்றனர்.

    திருவாரூர் மாவட்டம் திருவாய்மூர் என்ற இடத்தில் உள்ளது, பாலின் நன்மொழியாள் உடனாய வாய்மூர்நாதர் திருக்கோவில். பல்லவர் மற்றும் சோழர்களின் ஆட்சிக் காலத்தில் இந்த ஆலயம் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது.

    தேவாரப் பாடல்கள் இடம்பெற்ற சிவபெருமானின் 274 சிவாலயங்களில் இது 188-வது ஆலயமாகும். மேலும் தேவாரப் பாடல்கள் பெற்ற காவிரி தென்கரை தலங்களில் இது 124-வது தலமாகும்.

    சிவபெருமான், தேவலோகத்தில் வீற்றிருக்கும் வடிவமே, 'விடங்க வடிவம்' ஆகும். இந்த வடிவம் பூலோகத்திலும் இருக்க வேண்டும் என்று சிவபெருமான் விரும்பினார். அதற்காக ஒரு திருவிளையாடலை அவர் நிகழ்த்தினார். அதுவே இந்த ஆலயத்தின் தல வரலாறாகவும் அமைந்திருக்கிறது. அதைப் பார்ப்போம்.

    தல வரலாறு

    தேவலோகத்தின் அதிபதியான இந்திரன், ஒரு முறை சிவபெருமானிடம் விடங்க வடிவத்தை யாசித்தான். அப்போது சிவன், "இந்த லிங்கத்தை போக வாழ்வு நிறைந்த இந்திரலோகத்தில் வைத்து பூஜை செய்வது கடினம்" என்று கூறினார். இருப்பினும் இந்திரன் விடாமல் வற்புறுத்தியதால், சிவன் விடங்க வடிவத்தை அவனிடம் கொடுத்தார். அதன் சிறப்பை உணர்ந்த இந்திரன், அந்த லிங்கத்திற்கு நல்ல முறையில் பூஜைகளை செய்வித்து வந்தான்.

    இந்த நிலையில் முசுகுந்த சக்கரவர்த்தி என்பவர், பூலோகத்தை ஆட்சி செய்து வந்தார். அப்போது மக்கள் பலரும் மிருகங்களால் துன்பப்பட்டனர். இதனால் அவர் வனத்திற்குள் வேட்டைக்குச் சென்று மிருகங்களை கட்டுப்படுத்த எண்ணினார். அதன்படி வேட்டையாடுவதற்காக காவிரி கரைக்கு வந்தாா்.

    ஒரு நாள் சிவராத்திரி இரவில் முசுகுந்த சக்கரவர்த்தி, வனத்தில் வேட்டையாடிக்கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சில முனிவர்கள் சென்றனர். அவர்களிடம் மன்னன், 'எங்கு செல்கிறீர்கள்?' என்று கேட்டதற்கு, அந்த முனிவர்கள், "நாங்கள் சிவராத்திரி பூஜைக்காக வில்வாரண்யம் எனப்படும் பகுதிக்கு சென்று சிவலிங்க பூஜை செய்யப் போகிறோம்" என்று கூறினர். சிவராத்திரி அன்று மிருகங்களை வேட்டையாட சாஸ்திரம் அனுமதிப்பதில்லை என்றும் அவர்கள் கூறினர்.

    இதனால் வருத்தம் அடைந்த முசுகுந்த மன்னன், தன்னுடைய ராஜ உடையை களைந்து, முனிவர்களின் உடையை தரித்து, அந்த முனிவர்களுடனேயே, சிவ பூஜை செய்வதற்காகச் சென்றார். தன் தவறை உணர்ந்த முசுகுந்த சக்கரவர்த்திக்கு, சிவபெருமான் காட்சி கொடுத்து அருள் செய்தார்.

    அப்போது ஈசன், "இந்திரனிடம் இருக்கும் விடங்க வடிவ சிவலிங்கத்தை எப்படியாவது வாங்கி வந்து, பூலோகத்தில் வைத்து வழிபாடு நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும்" என்று முசுகுந்த சக்கரவர்த்தியிடம் தெரிவித்தார். அந்த சமயத்தில் வாலாசுரன் என்ற அசுரனை கொல்பவர்களுக்கு, தன்னிடம் உள்ள ஐராவத யானை, வெண்குடை தவிர எதைக் கேட்டாலும் தருவதாக இந்திரன் அறிவித்திருந்தான்.

    எனவே வாலாசுரனைக் கொன்று, விடங்க லிங்கத்தை இந்திரனிடம் இருந்து பூலோகத்திற்கு கொண்டு வரும்படி, சிவபெருமானே மன்னனுக்கு யோசனையும் கூறினார்.

    உடனே முசுகுந்த சக்கரவர்த்தி, "இறைவா.. அப்படியே செய்கிறேன். ஆனால் இந்திரன் விடங்கரைப் போலவே உள்ள வேறு ஏதாவது ஒரு லிங்கத்தைக் கொடுத்து என்னை ஏமாற்ற வாய்ப்பிருக்கிறது அல்லவா? எனவே எனக்கு முதலில் உங்களுடைய விடங்க வடிவம் எப்படி இருக்கும் என்பதை காண்பித்தருள வேண்டும்" என்று வேண்டினார்.

    சிவபெருமானும் முசுகுந்த சக்கரவர்த்திக்கு தன்னுடைய விடங்க லிங்க வடிவத்தைக் காட்டி அருளினார். அப்போது அங்கு பெரும் ஒளி வெள்ளம் தோன்றியது. முசுகுந்தன், அவருடன் இருந்த முனிவர்கள் மட்டுமின்றி தேவலோகமே அங்கு திரண்டு விட்டது.

    இதைக் கண்டு உணர்ச்சிவசப்பட்ட முசுகுந்தன், "இறைவா.. தாங்கள் இந்திரலோகத்திலும் இருங்கள், இங்கேயும் அப்படியே இருங்கள். இங்கு நான் உங்களுக்கு ஆலயம் எழுப்புகிறேன்" என்றார். முனிவர்களும், தேவர்களும் கூட ஈசனை மன்றாடியதால், கலியுக பக்தர்களுக்காக ஈசன் இங்கு விடங்க வடிவத்தில் தங்கியதாக தல வரலாறு சொல்கிறது.

    மூன்று நிலைகளுடன் கூடிய ராஜகோபுரம் கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறது. வெளிசுற்றில் சமயக்குரவர்கள் நால்வர், பைரவர் சன்னிதிகளும், கருவறை சுற்றில் விநாயகர், வள்ளி-தெய்வானை உடனாய முருகப்பெருமான், மகாலட்சுமி ஆகியோரும் காட்சி தருகின்றனர். நடராஜர் சபையும் உள்ளது. இந்த ஆலயத்தில் தல விருட்சமாக பலா மரமும், தீர்த்தமாக சூரிய தீர்த்தமும் உள்ளது. இவ்வாலயத்தில் உள்ள இறைவனைப் பற்றி சமயக்குரவர்கள் நால்வரில் திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் தேவாரப் பாடல்களை பாடியுள்ளனர்.

    இந்த திருத்தலத்தில் சூரிய பகவானும் வழிபாடு செய்திருக்கிறார். ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதத்தில் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் இத்தல இறைவன் மற்றும் இறைவியை தன்னுடைய கதிர்களால் சூரியன் வழிபடும் நிகழ்வு இன்றளவும் நடைபெற்று வருவது அதிசயமானது. இந்தக் கோவிலில் நவக்கிரகங்கள் அனைத்தும் ஒரே வரிசையில் அமைந்திருப்பது மற்றொரு விசேஷம். கருவறை கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி ரிஷபத்தின் மீது அமர்ந்திருப்பது சிறப்புக்குரியதாக கருதப்படுகிறது.

    காசியைப் போல இந்த ஆலயத்திலும் அஷ்ட பைரவர்கள் எனப்படும் எட்டு பைரவர்கள் தரிசனம் தருகின்றனர். அவர்களை வழிபட்டால் பயம் விலகும். திரியம்பகாஷ்டமி நாளில் சிவன் முப்புரம் எரித்ததாக கருதப்படுகிறது. அந்த நாளில் இவர்களை வழிபடுவது கூடுதல் சிறப்பு. நான்கு பைரவர்கள் சிலை வடிவமாகவும், மேலும் நான்கு பைரவர்கள் தண்டங்களின் வடிவில் பைரவரின் அம்சமாகவும் இங்கே வீற்றிருக்கின்றனர். மூலவருக்கு தெற்கு பக்கம் தியாகராஜா்- நீலவிடங்கராகவும், வடக்கே வேதாரண்யேஸ்வரரும் உள்ளனர். கோவிலுக்கு எதிரில் குளம் உள்ளது. கரையில் விநாயகர் அருள்பாலிக்கிறார்.

    இந்த ஆலய இறைனை தரிசித்தால், திருமணத் தடை நீங்கும். கல்வியில் சிறந்து விளங்கலாம். செல்வ வளம் பெருகும். பக்தர்கள் தங்களின் வேண்டுதல் நிறைவேறியதும் இறைவனுக்கும், அம்பாளுக்கும் அபிஷேகம் செய்தும், வஸ்திரம் சாத்தியும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். இந்தக் கோவிலில் சிவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம், மார்கழி திருவாதிரை, வைகாசி விசாகத்தில் பிரம்மோற்சவம் நடத்தப்படுகிறது.

    இவ்வாலயம் தினமும் காலை 6 மணி முதல் 11 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

    அமைவிடம்

    நாகப்பட்டினத்தில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தூரத்திலும், திருவாரூரில் இருந்து சுமார் 28 கிலோமீட்டர் தொலைவிலும், திருக்குவளை என்ற இடத்தில் இருந்து சுமார் 4 கிலோமீட்டர் தூரத்திலும் திருவாய்மூர் திருத்தலம் இருக்கிறது.

    • பத்ராசல ராமர் ஆலயம் மலைமேல் அமைந்துள்ளது.
    • மலை அடிவாரத்தில் கோதாவரி நதி தவழ்கிறது.

    தெலுங்கானாவில் கொத்தகூடம் மாவட்டம் பத்ராத்ரியில் பத்ராசலம் அமைந்துள்ளது. நம்மம் சாலையிலிருந்து பத்ராசலம் செல்ல ரயில்வசதி உண்டு. பத்ராசலம் சாலையிலிருந்து 15 நிமிடத்திற்கு ஒருமுறை பஸ் செல்கிறது. பத்ராசலம் மலைமீது ஸ்ரீ சீதா ராமசந்திரமூர்த்தி ஆலயம் அமைந்துள்ளது. மலை அடிவாரத்தில் கோதாவரி நதி தவழ்கிறது. ராமாயணத்தில் நடந்த சம்பவங்கள் இத்தலத்தை ஒட்டி அமைந்ததால் உலகெங்கிலுமிருந்து பக்தர்கள் வந்து தரிசிக்கின்றனர்.

    மேரு-மேனகாவின் புதல்வரான பத்ரா, ராமபிரான் அருளைப் பெற தண்டகாரண்யக் காட்டில் கோதாவரி நதிக்கரையில் கடுந்தவம் செய்தார். பின் ராமனை பத்ரகிரி மலைமேல் அமரக் கேட்டபோது, ஸ்ரீராமன், தான் சீதையைத் தேடிச் செல்வதால், சீதையைக் கண்டுபிடித்து இராவணனை வதம் செய்தபிறகு உன் விருப்பம் நிறைவேறும் என்றார். ஆனால், ராமனால் வாக்குத் தந்தபடி ராமாவதாரத்தில் அதனை நிறைவேற்ற இயலாததால், பத்ரமுனி யாகத்தைக் மிகத் தீவிரமாகச் செய்ய ஆரம்பித்தார். அதன்பின் மஹாவிஷ்ணு வைகுந்த இராமனாக, வலது கையில், சங்கு, இடது கையில் சக்ரம் ஏந்தி, சீதை, லட்சுமணருடன் விரைந்து வந்து காட்சி தந்தார். ராமர் தனது வனவாசத்தின்போது சீதை, லட்சுமணனுடன் இங்கு தங்கியதாகவும், பத்ரமுனியின் வேண்டுகோளுக்கிணங்கி பத்ரமலையின் உச்சியில் அமர்ந்து காட்சி தந்ததால் இத்தலம் 'பத்ராசலம்' எனப்பட்டது.

    17ம் நூற்றாண்டில் வாழ்ந்த போகலா தம்மக்கா என்ற ராமர் பக்தை, பத்ரரெட்டி பாலம் என்னும் இடத்தில் வாழ்ந்து வந்தாள். ராமர், லட்சுமணர், சீதை உருவச் சிலைகளைக் கண்டாள். ஒருநாள் ராமர், அவள் கனவில் தோன்றி, "முனிவர்களும், யோகிகளும் பத்ரகிரியில் எனது உருவச் சிலையை பூஜித்தார்கள். அதைத் தேடியெடுத்துப் பூஜை செய்" எனச் சொல்ல, அதன்படி மறுநாள் அவள் சிலையைத் தேடிச் செல்லும்போது எறும்புமலை என்னுமிடத்தில் உருவச் சிலைகள் மறைந்து இருந்ததைக் கண்டு, கோதாவரி நீரை, குடங்களில் எடுத்து, அதன் மேல் ஊற்றியதும் சிலைகள் கண்ணுக்குத் தெரிந்தன. தினசரி இப்படிச் செய்து பக்கத்தில் இருந்த மரங்களிலிருந்து பழங்களைப் பறித்து நைவேத்யம் செய்துவந்து, பின்னர் உள்ளூர் கிராமத்தினர் உதவியோடு மண்டபம் கட்டி வழிபட ஆரம்பித்தனர். ஸ்ரீராமர் சிறிதுகாலத்திற்குப் பின் "எனது பக்தன் இவ்விடத்தில் கோவிலைக் கட்டுவான்" என தம்மக்கா தேவியிடம் தெரிவித்தார். அந்த பக்தர்தான் பக்த ராமதாசர்.

    17வது நூற்றாண்டில் காஞ்சல்லா கோபண்ணா என்ற தாசில்தாரால் கோவில் கட்டப்பட்டது. கிராமத்து மக்கள் கோவில் கட்டப் பணம் வழங்கினார்கள். பணம் போதவில்லை. அதனால் நிஜாமின் அனுமதியின்றி கஜானாவிலிருந்து பணத்தை எடுத்து அவர் உபயோகித்தார். செய்தி அறிந்த நிஜாம் சினமுற்று அவரைச் சிறையில் அடைத்துவிட்டார். கோபண்ணா மனந்தளராமல் ராமபிரானைப் பிரார்த்தித்தார். நிஜாம் ஆலயப் பொறுப்பை ஏற்றார். தனது பக்தனுக்காக ராம, லட்சுமணர், ராமோஜி, லட்சுமணாஜி எனக் கூறிக் கொண்டு கோபண்ணாவின் விடுதலைக்காக 6 லட்சம் மோகராக்களை நிஜாமிடம் கட்டினார்கள். கட்டியதற்காக வாங்கிய ரசீதை, கோபண்ணா அறியாமல், அவரது தலையணைக்குக் கீழே வைத்துவிட்டுச் சென்றுவிட்டனர்.

    காலையில் எழுந்த நிஜாம் தானிஷா, இரவில் வந்து பணம் செலுத்தியது ராம, லட்சுமணர்கள் தான் என்பதை இறையருளால் உணர்ந்து கொண்டார். கோபண்ணாவை விடுதலை செய்தார். ராம, லட்சுமணர் அளித்த பணத்தில் இரண்டு மோகராக்களை மட்டும் அடையாளமாக எடுத்துக்கொண்டார். அந்தக் காசுகள் இன்றும் ஸ்ரீசீதா ராமச்சந்திர ஸ்வாமி தேவஸ்தானத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. கோபண்ணா தனது சிறைத் தண்டனையின்போது இடைவிடாமல் ராமனைத் துதித்துப் பாடிய 'தாசரதி சதகம்' என்னும் கீர்த்தனைகள் இன்றளவும் இசைக்கப்பட்டு வருகின்றன. பக்த ராமதாஸ் பாடல்களால் ஈர்க்கப்பட்டு, சத்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள் நேரில் பத்ராசல ராமரைத் தரிசித்துச் சில பாடல்களை இயற்றியுள்ளார்.

    பத்ராசல ராமர் ஆலயம் மலைமேல் அமைந்துள்ளது. மூலவர் ஸ்ரீ சீதாராமசுவாமி. ராமரின் இடதுபக்கம் மடியில் சீதை அமர்ந்த வண்ணம் ராமனுடனும் லட்சுமணனுடன் தெய்வீக அழகுடன் காட்சி அளிப்பதை பக்தர்கள் நேரில் தரிசிக்கும்போது உணரமுடியும். மண்டபத்தின் நான்கு தூண்களிலும் அஷ்டலக்ஷ்மி, 18 விதத் தோற்றங்களில் சிவன், தசாவதாரம் மற்றும் பன்னிரு ஆழ்வார்கள் சிலா வடிவங்களைக் காணலாம். கர்ப்பக்கிரகத்தின் மேல் மூன்றடுக்கு விமானம், அதன் மறுபக்கம் மஹாவிஷ்ணுவின் 48 விதத் தோற்றங்கள், கருடன், சிம்மம், ஸோமாஸ்கந்தர், தக்ஷிணாமூர்த்தி அழகிய சிலைகளைக் காணலாம். விமானத்தின் சிகரம் ஒரே சலவைக்கல்லில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தூண்களில் சம்க்ஷிப்த ராமாயணம், தாசரதி சதகம் அதை எழுதிய ராமதாசர் சிலையின் எதிரில் பொறிக்கப்பட்டுள்ளது.

    ஆண்டுதோறும் ஸ்ரீராமநவமி உற்சவம் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. சீதாராம கல்யாண தினத்தன்று உலகெங்கிலும் இருந்து பக்தர்கள் திரளாக வந்து கலந்து கொள்கின்றனர். பக்த ராமதாசர் சிறந்த பாடகர் ஆனதால் 'வாக்கேயக்காரர் உற்சவம்' மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. வைகுண்ட ஏகாதசி, தெப்போத்ஸவம், தசாவதார உற்சவம், அத்யயன உற்சவம் எனப் பல உற்சவங்கள் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.

    செல்லும் வழி

    பத்ராச்சலம் நகரமானது ஐதராபாத்தில் இருந்து கிழக்கே 325 கிலோ மீட்டர் தூரத்திலும் கம்பம் நகரத்தில் இருந்து 120 கிலோமீட்டர் தூரத்திலும் அமைந்துள்ளது.

    முகவரி:

    பத்ராச்சலம் கோவில் சாலை,

    பத்ராசலம்,

    தெலுங்கானா - 507111.

    • பாகிஸ்தானில் 150 ஆண்டுகால இந்து கோவில் இரவோடு இரவாக இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.
    • காலையில் சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் கோவில் இல்லாதது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    லாகூர்:

    பாகிஸ்தான் நாட்டில் கராச்சி நகரில் ராணுவ வீரர்களுக்கான பஜார் பகுதியில் முகி சோஹித்ரம் சாலையில் 150 ஆண்டுகால பழமையான இந்து கோவில் ஒன்று அமைந்திருந்தது.

    இந்த கோவிலுக்கு இந்து சமூகத்தினர் சென்று வழிபட்டு வந்தனர். மாரி மாதா என்ற பெயரிலான அந்த கோவில் கடந்த வெள்ளிக்கிழமை இரவோடு இரவாக இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டது.

    அடுத்த நாள் காலையில் சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் கோவில் இல்லாதது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இரவில் மின்சாரம் இல்லாத நிலையில், புல்டோசர்கள் உள்ளிட்டவற்றை கொண்டு வந்து கோவிலை இடித்து தள்ளி விட்டுச் சென்றனர்.

    கோவிலின் உட்புற பகுதி முழுவதும் இடித்து தள்ளப்பட்டு உள்ளது. எனினும், வெளிப்புற சுவர்கள் மற்றும் முக்கிய நுழைவு வாயிலை அவர்கள் விட்டு சென்று உள்ளனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு பாதுகாப்பாக போலீசார் வாகனம் ஒன்றும் காணப்பட்டது என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர் என அங்கிருந்து வெளிவரும் டான் பத்திரிகை தெரிவிக்கிறது.

    இதேபோல், பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள இந்து கோவில் மீது, கொள்ளையர்கள் ராக்கெட் லாஞ்சர்'களை கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.

    • ஆறுமுத்தாம் பாளையம் ஊராட்சி ராம குருவாயூரப்பன் நகரில் மகா கணபதி திருக்கோவில் கட்டப்பட்டு வந்தது.
    • இஸ்லாமிய மக்கள் மகாகணபதி கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பூ, பழம், இனிப்புகள் உள்ளிட்ட சீர் வரிசைகள் அடங்கிய தட்டுக்களுடன் ஊர்வலமாக வந்தனர்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள ஆறுமுத்தாம் பாளையம் ஊராட்சி ராம குருவாயூரப்பன் நகரில் மகா கணபதி திருக்கோவில் கட்டப்பட்டு வந்தது. இந்த நிலையில் திருப்பணிகள் முடிவுற்று இன்று காலை மகா கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து நேற்று தீர்த்தக்குட ஊர்வலம் நடைபெற்றது.

    இந்த நிலையில் அங்கு வசிக்கும் இஸ்லாமிய மக்கள் மகாகணபதி கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பூ, பழம், இனிப்புகள் உள்ளிட்ட சீர் வரிசைகள் அடங்கிய தட்டுக்களுடன் ஊர்வலமாக வந்தனர். ஊர்வலமாக வந்த இஸ்லாமிய மக்களை மகாகணபதி கோவில் முன்பு அவர்களை வரவேற்று பெண்கள் ஆரத்தி எடுத்து கோவிலுக்குள் அழைத்துச் சென்றனர்.

    மத நல்லிணக்கத்தை போற்றும் விதமாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சி அங்கிருந்தோரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

    இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது :- பல ஆண்டுகளாக இப்பகுதி மக்கள் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகிறோம். இந்து கோவில்களின் திருவிழாவின் போது இஸ்லாமியர்கள் நேரில் சென்று வாழ்த்து தெரிவிப்பதும், அதேபோல் இஸ்லாமியர்களின் மசூதி திறப்பு விழா மற்றும் பெரு நாட்களுக்கு இந்துக்கள் நேரில் சென்று வாழ்த்து தெரிவிப்பதும் பாரம்பரியமாக தொடர்ந்து வருகிறது.

    மதங்களை கடந்து மனித நேயத்தை தொடர்ந்து போற்றி வருகின்றோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • 183 ஏக்கர் நிலப்பரப்பில் இத்திருக்கோவில் கட்டப்பட்டுள்ளது
    • திருப்பணியில் அமெரிக்காவிலிருந்து 12,500க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் பங்கேற்றனர்

    இந்தியாவிலுள்ள போசசன்வாசி ஸ்ரீ அக்ஷர் புருசோத்தம் சுவாமிநாராயன் சன்ஸ்தா (BAPS) எனும் இந்து மத அமைப்பினால் அமெரிக்காவில் உருவாக்கப்பட்டு வரும் அந்நாட்டிலேயே மிக பெரிய இந்து கோயில், வரும் அக்டோபர் 8ம் தேதி திறக்கப்பட இருக்கிறது. பிறகு 10 நாட்களுக்கு பிறகு பொது மக்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

    ஏற்கெனவே இந்த அமைப்பினால் 100 ஏக்கரில் உருவாக்கப்பட்ட கோவில் இந்திய தலைநகர் புது டெல்லியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    அட்லாண்டிக் கடற்பகுதியிலிருந்து சுமார் 210 கிலோமீட்டர் தொலைவில் அமெரிக்காவில் உள்ள வடகிழக்கு மாநிலம் நியூ ஜெர்சி. இத்திருக்கோவில் இம்மாநிலத்தின் பிரபலமான டைம்ஸ் சதுக்கத்திலிருந்து தெற்கே 90 கிலோமீட்டர் தொலைவில் கட்டப்பட்டுள்ளது. சுமார் 183 ஏக்கர் நிலபரப்பில் கட்டப்பட்டுள்ள இத்திருக்கோவிலை கட்டி முடிக்க சுமார் 12 ஆண்டு காலம் ஆனது.

    இதன் கட்டுமான பணியில் அமெரிக்கா முழுவதிலுமிருந்து 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் ஈடுபட்டனர்.

    உலக பாரம்பரிய தளமாக ஐ.நா. கூட்டமைப்பின் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோவினால் அங்கீகரிக்கப்பட்ட தென்மேற்கு ஆசியாவில் உள்ள கம்போடியா நாட்டின் அங்கோர் வாட் திருக்கோவில், 500 ஏக்கர் நிலப்பரப்பில் உருவாக்கப்பட்டது. நியூ ஜெர்சியின் ராபின்ஸ்வில்லே டவுன்ஷிப் பகுதியில் உருவாக்கப்பட்டு வரும் இந்த அக்ஷர்தாம் திருக்கோவில், அங்கோர் வாட் கோவிலுக்கு அடுத்தபடியாக இரண்டாவது உலகிலேயே மிக பெரிய இந்து கோவிலாகும்.

    அமெரிக்காவில் உள்ள சுவாமிநாரயன் அக்ஷர்தாம் கோவில், பண்டைய இந்திய கலாச்சார முறைப்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்திருக்கோவிலில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிலைகள், இந்திய இசைக்கருவிகள் மற்றும் நடன வடிவங்களின் செதுக்கல்கள் ஆகியவை வடிவமைக்கப்பட்டுள்ளன.

    இந்து மதத்தில் மூலவர் எனப்படும் முக்கிய தெய்வத்தின் விக்கிரகத்தை தவிர, இத்திருக்கோவிலில் 12 விக்கிரகங்கள் உள்ளன. இக்கோவிலில் 9 சுழல் வடிவ கோபுரங்கள் மற்றும் 9 பிரமிடு வடிவ கோபுரங்கள் உள்ளன. இது பாரம்பரிய கட்டிடக்கலைகளின் சிறப்பம்சங்களை பிரதிபலிக்கும் மிகப்பெரிய நீள்வட்ட குவிமாடத்தையும் (elliptical dome) கொண்டுள்ளது.

    சுண்ணாம்பு, கிரானைட், இளஞ்சிவப்பு மணற்கல் மற்றும் பளிங்கு உள்ளிட்ட கிட்டத்தட்ட 20 லட்சம் (2 மில்லியன்) கன அடி கற்கள் கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்பட்டது. இந்தியா, துருக்கி, கிரீஸ், இத்தாலி மற்றும் சீனா உள்ளிட்ட உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து இவை வரவழைக்கப்பட்டன.

    இக்கோவிலில், 'பிரம்ம குண்ட்' என அழைக்கப்படும் ஒரு பாரம்பரிய இந்திய படிக்கிணறு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் உலகம் முழுவதிலுமிருந்து 300-க்கும் மேற்பட்ட புனித நீர்நிலைகளில் இருந்து தண்ணீர் கொண்டு வரப்பட்டு சேர்க்கப்பட்டுள்ளது.

    அக்டோபர் 18 முதல் பொதுமக்களின் தரிசனத்திற்காக இத்திருக்கோயில் திறக்கப்படும். அக்ஷர்தாம் என்றால் இறைவனின் புனிதமான இருப்பிடம் என பொருள்படும்.

    • கடவுள் முன்பு எல்லோரும் சமம் என்ற புரட்சியை ஏற்படுத்தியது அறநிலையத்துறைதான்.
    • தமிழகத்தின் இந்த வரலாறுகள் தெரியாமல் மோடி பேசி இருக்கிறார்.

    சென்னை:

    பல மாநிலங்களில் அரசின் பிடியில் இந்து கோவில்கள் இருக்கக்கூடாது என்று காங்கிரஸ் கூறுகிறது. தமிழ்நாட்டில் அரசின் கட்டுப்பாட்டில் இந்து கோவில்கள் உள்ளது. அதை எதிர்த்து காங்கிரஸ் குரல் கொடுக்குமா என்று பிரதமர் மோடி கேள்வி எழுப்பினார்.

    அதை தொடர்ந்து தமிழக பா.ஜனதாவினரும் இந்து கோவில்களை விட்டு அரசு வெளியேற வேண்டும் என்று வலியுறுத்த தொடங்கி உள்ளனர்.

    இதுபற்றி தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியதாவது:-

    தமிழகத்தை பொறுத்தவரை அரசின் அறநிலையத்துறை தான் இந்து ஆலயங்களை சீரமைத்தது. தொடர்ந்து சிறப்பாக சீரமைத்து கொண்டிருக்கிறது.

    அதற்கு முன்பு தனியாரிடமும், வசதி படைத்தவர்களிட மும் சிக்கி எளியவர்கள் கோவில்களுக்குள் செல்ல முடியாத நிலை இருந்தது. இப்போது எல்லோரும் செல்ல முடிகிறது. நிர்வாகத்தில் வெளிப்படை தன்மை இருக்கிறது.

    தலித்துகளும் கோவில்களுக்கு சென்று வழிபடலாம் என்று சட்டம் கொண்டு வரப்பட்டது. உச்சபட்சமாக தலித் சமூகத்தை சேர்ந்த பரமேஸ்வரன், கக்கன் ஆகியோரை அறநிலையத்துறை அமைச்சராக்கினார் காங்கிரஸ் ஆட்சியில் காமராஜர். கொள்ளையடித்தவர்களிடம் இருந்து கோவில்கள் மீட்கப்பட்டுள்ளது.

    கடவுள் முன்பு எல்லோரும் சமம் என்ற புரட்சியை ஏற்படுத்தியது அறநிலையத்துறைதான். தமிழகத்தின் இந்த வரலாறுகள் தெரியாமல் மோடி பேசி இருக்கிறார். அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருப்பதால்தான் கோவில்கள் கோவில்களாக இருக்கின்றன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கோவில் கட்டுமான பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.
    • இந்து கோவில் கட்டுவதற்கு அமீரக அரசு சார்பில் அனுமதி அளிக்கப்பட்டது.

    அபுதாபி:

    அபுதாபியில், இந்து கோவில் கட்டுமான பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. பணிகள் அனைத்தும் முடிந்து அடுத்த ஆண்டு (2024) பிப்ரவரி மாதம் திறக்கப்படுகிறது.

    அமீரகத்திற்கு கடந்த 2015-ம் ஆண்டு முதல் முறையாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை பயணமாக வருகை புரிந்தார். அப்போது மோடியின் வேண்டுகோளுக்கு இணங்க அமீரகத்தில் வசிக்கும் இந்திய இந்து மக்களுக்காக அபுதாபியில் இந்து கோவில் கட்டுவதற்கு அமீரக அரசு சார்பில் அனுமதி அளிக்கப்பட்டது. மேலும் அந்த கோவிலை கட்டுவதற்கு துபாய்-அபுதாபி, ஷேக் ஜாயித் சாலையில் உள்ள அல் ரக்பா பகுதியில் 55 ஆயிரம் சதுர அடி இடம் அபுதாபி அரசு சார்பில் ஒதுக்கப்பட்டது.

    இதற்கான உத்தரவை அப்போதைய அபுதாபி பட்டத்து இளவரசர் மேதகு ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான் பிறப்பித்தார். இந்த கோவிலின் கட்டுமான பணிகளை நிர்வகிக்க குஜராத் மாநிலத்தின் ஆமதாபாத் நகரை சேர்ந்த பாப்ஸ் (போச்சசன்வாசி ஸ்ரீ அக்ஷார் புருஷோத்தம் சுவாமிநாராயண் சன்ஸ்தா) என்ற இந்து அமைப்பிற்கு அனுமதி வழங்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து கோவில் கட்டுமான பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இது குறித்து பாப்ஸ் அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- அரசின் இந்த அனுமதியை தொடர்ந்து கோவிலின் கட்டுமான பணிகள் முழுவீச்சில் நடக்கிறது. மொத்தம் 30 ஆயிரம் சிற்ப வேலைபாடுகளை கொண்ட கற்கள் இந்த கட்டுமானத்தில் பயன்படுத்தப்படுகிறது. சுவரின் அடிப்பகுதியில் கிரானைட் கற்களும் அதன் மீது இளஞ்சிவப்பு கற்களும் கொண்டு சுவர்கள் எழுப்பப்படுகிறது. இந்து கோவிலின் கட்டுமான பணிகளில் தங்கள் பங்கும் இருக்க வேண்டும் என அமீரகத்தில் வசிக்கும் இந்திய மக்கள், தன்னார்வலர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் என பலரும் கற்களை கட்டுமான தளத்திற்கு எடுத்து செல்கின்றனர்.

    இரும்பு கம்பிகள் எதுவும் இல்லாமல் பாரம்பரிய இந்து கோவிலாக கட்டப்படுவது இதன் சிறப்பம்சமாகும். கட்டிட உறுதிக்காக சிறப்பு தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள 7 அமீரகங்களை குறிக்கும் வகையில் ௭ கோபுரங்கள் அமைக்கப்பட உள்ளது. அடித்தளம் அமைக்கும் பணி நிறைவு பெற்று முதல் தளத்தின் கட்டுமான பணிகள் மும்முரமாக நடைபெறுகிறது.

    கட்டிடத்தின் வெளிப்புறத்தில் கட்டப்படும் கற்கள் அனைத்தும் இந்தியாவின் ராஜஸ்தானில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளது. அதேபோல் உட்புறத்தில் உள்ள கட்டமைப்புகள் இத்தாலி நாட்டு மார்பிள் கற்களால் செய்யப்படுகிறது. பூக்கள் மற்றும் கொடிகள் போன்ற வேலைபாடுகளுடன் இந்த சிற்ப கற்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் சிலைகள் வைப்பதற்கு தேவையான இடைவெளி விட்டு கட்டப்படுகிறது.

    இதில் ராமரின் வாழ்க்கை வரலாறு குறித்த சம்பவங்களை விளக்கும் வகையில் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இவை அந்த கோவில் வளாகம் முழுவதும் பதிக்கப்பட உள்ளன. இந்த கோவிலின் ஆயுட்காலம் குறைந்தபட்சம் 1,000 ஆண்டுகளாக இருக்கும் வகையில் கட்டப்படுகிறது. இதற்காக கட்டுமான பகுதியில் மேற்கு ராஜஸ்தானில் இருந்து 70 சிற்ப கலைஞர்கள் வரவழைக்கப்பட்டு பணியாற்றுகின்றனர்.

    இதில் மிகப்பெரிய கலையரங்கம், கண்காட்சி அரங்கம், நூலகம், உணவகங்கள், கூட்டங்கள் நடத்தும் பகுதி மற்றும் 5 ஆயிரம் பேர் நிகழ்ச்சிகளை ஒரே நேரத்தில் பார்வையிடும் வசதியுடன் 2 சமூக அரங்குகளுடன் கட்டமைக்கப்படுகிறது. கூடுதலாக வளாகத்தின் அருகே 53 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் கார் நிறுத்தப்பகுதி அமைக்கப்படுகிறது. இதில் மொத்தம் 1,200 கார்கள் மற்றும் 30 பஸ்கள் ஒரே நேரத்தில் நிறுத்திக்கொள்ளலாம். கூடுதலாக ஹெலிகாப்டர் இறங்குவதற்கு வசதியாக 2 தளங்கள் ஏற்படுத்தப்படுகிறது.

    இந்த கோவிலின் கட்டுமான பணிகள் நிறைவடைந்து அடுத்த ஆண்டு (2024) பிப்ரவரி மாதம் முதல் பொதுமக்கள் வழிபாட்டுக்கு திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. கோவில் முழுமையான செயல்பாட்டுக்கு வந்ததும் நாள் ஒன்றுக்கு 25 ஆயிரம் பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • காலிஸ்தான் அமைப்புக்கு ஆதரவாகவும் இந்தியாவுக்கு எதிராகவும் வாசகங்கள் எழுதப்பட்டு உள்ளன.
    • கோவிலுக்கு வரும் மக்களை காயப்படுத்துவதற்காகவும், வன்முறை பயத்தை உருவாக்குவதற்காகவும் வெறுப்பூட்டும் வாசகங்கள்.

    அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஒரு இந்து கோவிலில் காலிஸ்தான் அமைப்புக்கு ஆதரவாகவும் இந்தியாவுக்கு எதிராகவும் வாசகங்கள் எழுதப்பட்டு உள்ளன. நெவார்க் நகரில் உள்ள சுவாமிநாராயண் கோவில் சுவற்றில் எழுதப்பட்ட வாசகங்களுடனான புகைப்படங்களை இந்து- அமெரிக்கன் அறக்கட்டளை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளது.

    கோவிலின் பல சுவர்களில் இந்தியாவுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் எதிரான வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன. கோவிலுக்கு வரும் மக்களை காயப்படுத்துவதற்காகவும், வன்முறை பயத்தை உருவாக்குவதற்காகவும் இந்த வெறுப்பூட்டும் வாசகங்கள் எழுதப்பட்டிருக்கலாம் என்று அந்த அமைப்பு கூறி உள்ளது.

    இது தொடர்பாக நெவார்க் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதுபோன்று இந்து கோவில் குறிவைக்கப்படுவது இது முதல் முறை அல்ல. கடந்த காலங்களில் அமெரிக்காவிலும் அண்டை நாடான கனடாவிலும் இதே போன்ற சம்பவங்கள் நடந்துள்ளது. காலிஸ்தான் ஆதரவாளர்கள் மற்றும் பல்வேறு நாடுகளில் பிரிவினைவாத உணர்வைத் தூண்ட முயற்சிக்கும் அமைப்புகள் மற்றும் தனிநபர்களின் நடவடிக்கைகளால் இந்த சம்பவங்கள் அதிகரித்து வருவதாக இந்தியா கவலை தெரிவித்துள்ளது.

    ×