என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "illegal immigrants"
- ஜோஸ் அன்டோனியோ இபார்ரா என்பவரை காவல்துறை கைது செய்தது
- பைடனை போன்ற ஒரு திறமையில்லாத அதிபரை அமெரிக்கா கண்டதில்லை என்றார் டிரம்ப்
அமெரிக்காவின் தென்கிழக்கில் உள்ள மாநிலம் ஜியார்ஜியா. இதன் தலைநகரம், அட்லான்டா.
பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த லேக்கன் ஹோப் ரைலி (Laken Hope Riley) எனும் 22 வயது மாணவி காலையில் உடற்பயிற்சி ஓட்டத்திற்கு சென்றவர் திரும்பவில்லை.
இதையடுத்து அவருடன் தங்கி இருந்த மாணவிகள், புகார் செய்ததையடுத்து, காவல்துறை அவரை தேடி வந்தது. அவர்கள் தேடலில் மரங்களடர்ந்த பகுதியில் ரைலியின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
விசாரணையில், கண்காணிப்பு கேமிரா காட்சிகளை வைத்து ஜோஸ் அன்டோனியோ இபார்ரா (Jose Antonio Ibarra) என்பவரை சந்தேகத்தின் பேரில் காவல்துறை கைது செய்து விசாரித்தனர்.
தீவிர விசாரணையில் ஜோஸ், லேக்கனை தாக்கி கொலை செய்தது தெரிய வந்துள்ளது.
ஜோஸ் தாக்கும் போது, சமாளித்த லேக்கன், உடனடியாக 911 எனும் அவசர உதவிக்கான எண்ணை லேக்கன் அழைக்க முயன்றதாகவும், அதில் பதட்டமடைந்த ஜோஸ் அவரை கொலை செய்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
லேக்கனின் பிரேத பரிசோதனையில் உயிரிழப்பதற்கு முன்பாக அவர் ஜோசுடன் தீவிரமாக போராடிய அறிகுறிகள் தெரிந்தன.
வெனிசுயலா நாட்டை சேர்ந்த ஜோஸ், 2022ல் அமெரிக்காவிற்குள் சட்ட விரோதமாக நுழைந்தவர் என்பதும் தெரிய வந்துள்ளது.
இவ்வருட இறுதியில் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தற்போதைய அதிபர் ஜோ பைடனும், முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பும் ஒருவரையொருவர் எதிர்த்து தீவிரமாக களம் இறங்கியுள்ளனர்.
இந்நிலையில், அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த பைடன் ரைலி மரணம் குறித்து ஏதும் பேசவில்லை.
பைடனை குற்றம்சாட்டி டெக்சாஸ் மாநில பிரச்சார உரையில் பேசிய டிரம்ப் தெரிவித்ததாவது:
நிலைகுலைந்து போயிருக்கும் ரைலியின் பெற்றோர்களுடன் தொலைபேசியில் பேசினேன். சட்டவிரோதமாக குடியேறுபவர்களை பைடன் தடுக்க தவறியதால்தான் இது போன்ற குற்றங்கள் நடைபெறுகின்றன.
பைடனை போன்ற ஒரு திறமையில்லாத அதிபரை அமெரிக்கா இதுவரை கண்டதில்லை.
தனது பிரச்சாரத்தில் பைடன், ரைலியின் பெயரை கூட உச்சரிக்கவில்லை.
ஆனால், நான் ரைலியை மறக்க மாட்டேன்."
இவ்வாறு டிரம்ப் கூறினார்.
ஜியார்ஜியா மக்களை ரைலியின் கொலைச் சம்பவம் அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில், அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறுபவர்களினால் தோன்றும் பிரச்சனைகள், அமெரிக்காவில் தீவிர விவாதத்தை கிளப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- 2021லிருந்து தற்போது வரை 6.3 மில்லியன் அகதிகள் நுழைந்துள்ளனர்
- தாக்கிய அகதிகளில் 6 பேர் கைது செய்யப்பட்டனர்; ஒருவர் சிறையில் உள்ளார்
தினந்தோறும் அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
ஆண்டுதோறும், லட்சக்கணக்கான மக்கள் தங்கள் நாடுகளில் இருந்து கடல் மற்றும் தரை வழியாக ஆபத்தான நீண்ட பயணங்களை மேற்கொண்டு, சட்டவிரோதமாக அமெரிக்காவில் நுழைந்து சில ஆண்டுகள் தங்கியிருந்து, குடியுரிமைக்கு விண்ணப்பிக்க முயல்வது தொடர்கதையாகி வருகிறது.
2021லிருந்து தற்போது வரை மட்டுமே 6.3 மில்லியன் அகதிகள் சட்டவிரோதமாக உள்ளே நுழைந்துள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு வரும் அகதிகளால் அமெரிக்காவில் சமீப சில வருடங்களாக சட்டம்-ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்படுவதாக விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில், அமெரிக்காவின் நியூயார்க் நகரின் மன்ஹாட்டன் பகுதியின் மையத்தில் உள்ள புகழ் பெற்ற டைம்ஸ் ஸ்கொயர் (Times Square) பகுதியில் ஒரு சிறிய அகதிகள் குடியிருப்பில், கும்பலாக கூடியிருந்த அகதிகள் சிலரை கலைந்து போகுமாறு சில காவல் அதிகாரிகள் கூறினர்.
அவர்கள் அதற்கு மறுத்து, காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, அவர்களை கைது செய்ய காவல் அதிகாரிகள் முயன்றனர்.
அப்பொது அந்த அகதிகளில் சிலர் காவல் அதிகாரிகளை தாக்கினர். இதில் அந்த அதிகாரிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது.
சுமார் 12 பேர் ஈடுபட்டதாக கூறப்படும் இச்சம்பவம் தொடர்பாக 6 அகதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் 5 பேர் பிணையில் விடப்பட்டனர்; ஒருவர் சிறையில் உள்ளார்.
தாக்குதலில் ஈடுபட்ட பிறரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர். அவர்கள் ஒரு பேருந்தில் ஏறி தப்பி விட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் பரவியதால், இரு கட்சிகளை சேர்ந்த வாக்காளர்களில் பலர், கட்சி பேதம் இன்றி சமூக வலைதளங்களில் இத்தாக்குதலுக்கு கண்டனங்களை தெரிவித்தனர்.
காவல் துறையினர் மீதான தாக்குதலுக்கு நியூயார்க் காவல்துறையும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இவ்வருட இறுதியில் அமெரிக்காவில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில், தீவிரமாக களம் இறங்கியுள்ள ஜனநாயக கட்சியை சேர்ந்த தற்போதைய அதிபர் ஜோ பைடனுக்கும், முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கும் "சட்டவிரோத அகதிகள்" பிரச்சனை, வாக்காளர்களை ஈர்க்கும் அம்சமாக மாறி உள்ளது.
- ஹெச்1-பி விசா நடைமுறை இந்தியர்களுக்கு பெரிதும் பயனளித்தது
- கள்ளத்தனமாக வருபவர்களுக்கு வசதி செய்திருக்கிறோம் என்கிறார் மஸ்க்
சட்டவிரோதமாக அமெரிக்காவிற்கு உள்ளே நுழைபவர்களை தடுக்க எல்லைகளை பலப்படுவது உள்ளிட்ட பல முயற்சிகளை அந்நாட்டு அரசு எடுத்து வருகிறது. அதே போல், சட்டரீதியாக அனுமதி பெற்று அங்கு கல்வி பயிலவும், பணியாற்றவும் வருபவர்களின் எண்ணிக்கையையும் குறைக்க முடிவு செய்து பல கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது.
உலகின் பல நாடுகளிலிருந்து அமெரிக்காவில் உள்ள நிறுவனங்களில் பணியாற்ற விரும்புபவர்களுக்கு, குடியுரிமை இல்லாமல், அயல்நாட்டு பணியாளராக மட்டுமே நீண்ட காலம் அமெரிக்காவில் பணி புரிய வாய்ப்பளித்து வருவது ஹெச்1-பி விசா (H1-B visa) நடைமுறை.
இது இந்தியாவில் மென்பொருள் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறையை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான ஊழியர்களுக்கு மிகவும் பயனளித்து வந்தது.
ஹெச்1-பி விசா எண்ணிக்கைக்கும் அரசு உச்சபட்ச அளவை நிர்ணயித்துள்ளது.
கடந்த 2020 ஜூலை மாதம், அப்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புது விசா வழங்கலை தற்காலிகமாக நிறுத்தி வைத்தார்.
தற்போதைய ஜோ பைடன் அரசு விசா வழங்கலில் கட்டுப்பாடுகளை தளர்த்தவில்லை.
இந்நிலையில், சுமார் 7 லட்சத்திற்கும் மேல் திறமை வாய்ந்த பணியாளர்கள் அமெரிக்காவிற்கு வர காத்திருக்கும் நிலையில், 85 ஆயிரத்திற்கு மேல் ஹெச்1-பி விசா வழங்கப்படாது என உச்சவரம்பை அமெரிக்கா நிர்ணயித்துள்ள தகவல் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.
அதே போன்று, முன்னாள் அதிபர்கள் டொனால்ட் டிரம்ப் மற்றும் பராக் ஒபாமா ஆகியோரின் ஆட்சிகளிலும் தற்போது ஜோ பைடனின் ஆட்சியிலும் சட்டவிரோதமாக உள்ளே நுழைபவர்களின் எண்ணிக்கை குறித்து ஒப்பிட்டு தகவல் வெளியானது.
அதன்படி, கடந்த ஆட்சிகளில் 98,000 என இருந்த சட்டவிரோதமாக உள்ளே நுழைவோரின் எண்ணிக்கை தற்போதைய அதிபர் பைடன் காலத்தில் 2,42,000 என உயர்ந்துள்ளது.
இந்த விவரங்களை ஒப்பிட்டு உலகின் நம்பர் 1 கோடீசுவரரும் டெஸ்லா, எக்ஸ், ஸ்பேஸ்எக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் தலைவருமான எலான் மஸ்க், தனது அதிகாரபூர்வ எக்ஸ் சமூக வலைதள கணக்கில் விமர்சித்துள்ளார்.
அதில் மஸ்க் தெரிவித்திருப்பதாவது:
திருட்டுத்தனமாகவும், சட்டவிரோதமாகவும் அமெரிக்காவிற்கு உள்ளே நுழைவது மிக எளிதாக உள்ளது. ஆனால், சட்டரீதியாக உள்ளே நுழைய விரும்புபவர்களுக்கு அது மிக கடினமாக்கப்பட்டுள்ளது.
நாம் சட்டபூர்வ வழிமுறைகளை கடினமாக்கி, சட்டவிரோத வழிகளை எளிதாக்கி விட்டோம்.
இது அசல் பைத்தியக்காரத்தனம்.
பைடனின் நிர்வாகம் கள்ளத்தனமாக வருபவர்களுக்குத்தான் வசதி செய்து கொடுத்துள்ளது என தரவுகள் உறுதிபடுத்தி உள்ளன.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
While it is trivial to enter the United States illegally, it is insanely difficult for legal immigrants to move to the United States.
— Elon Musk (@elonmusk) January 4, 2024
This is madness! We should shut down illegal immigration and greatly increase legal immigration. https://t.co/ElW9PZaIqh
- எதிர் கட்சியின் ஒத்துழைப்புடன் ஆளும் கட்சி இந்த மசோதாவை வெற்றி பெற செய்தது
- நாட்டு மக்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது எங்கள் கடமை என்றார் மேக்ரான்
பல ஆண்டுகளாக அல்ஜீரியா, மொராக்கோ, போர்ச்சுகல், துருக்கி உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து பிரான்ஸ் நாட்டிற்குள் சட்டவிரோத அகதிகளாக தரைவழியாகவும், கடல் வழியாகவும் நீண்ட தூர ஆபத்தான பயணங்களை மேற்கொண்டு மக்கள் உள்ளே நுழைவது தொடர்கதையாகி வருகிறது.
சமீப சில வருடங்களாக பிரான்ஸில் இவ்வாறு உள்ளே நுழையும் அகதிகளால் பல்வேறு உள்நாட்டு சிக்கல்கள் எழுந்தன. கட்டுக்கடங்காமல் அகதிகள் நுழைவதை தடுக்கும் விதமாக சட்டம் இயற்ற வேண்டும் என அந்நாட்டு அரசியல் தலைவர்கள் விவாதித்து வந்தனர்.
இந்நிலையில், பிரான்ஸ் நாட்டிற்கு வரும் அகதிகள் குறித்த புலம் பெயர்வோர் சட்டத்தில் கடுமையான மாற்றங்களை கொண்டு வரும் வகையில் மசோதாவை வெற்றிகரமாக தாக்கல் செய்துள்ளது. இந்த மசோதாவை பிரான்ஸ் அதிபர் எம்மானுவல் மேக்ரானின் ரெனய்ஸான்ஸ் கட்சி (Renaissance party) மற்றும் எதிர்கட்சி தலைவரும் தீவிர வலதுசாரி சிந்தனையாளருமான மரின் லெ பென் (Marine Le Pen) சார்ந்த நேஷனல் ரேலி (National Rally) ஆகிய இரு கட்சிகளுமே ஒருமித்து கொண்டு வந்திருக்கின்றன.
மேக்ரானின் கட்சிக்குள்ளேயே இதற்கு ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்தாலும் அவர் இதனை பொருட்படுத்தவில்லை.
விரைவில் சட்ட அந்தஸ்து பெற உள்ள இந்த மசோதாவின்படி புலம் பெயர்ந்தவர்கள் தங்கள் குடும்பத்தினரை கொண்டு வருவது கடினமாக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகள் கிடைப்பதும் தாமதமாகும்.
குடிமகன்கள் வேறு, அகதிகள் வேறு என பாகுபாடு காட்டும் இதன்படி சட்டபூர்வமாக குடியேறுவர்களுக்கும் நலத்திட்ட உதவிகள் கிடைப்பதை கடினமாகி உள்ளது.
மரின் லெ பென் வரவிருக்கும் புதிய சட்டத்தை, தங்கள் சித்தாந்தத்திற்கு கிடைத்த வெற்றி என கூறியுள்ளார்.
இது குறித்து பேசிய மேக்ரான், "நாட்டில் புலம் பெயர்பவர்களால் பிரச்சனை இருப்பது உண்மைதான். இதனால் உள்நாட்டில் அமைதியின்மை தோன்ற கூடிய நிலை இருந்தது. அதனை தடுக்க வேண்டியது அரசின் கடமை. வெள்ளம் போல் உள்ளே நுழையும் அகதிகளை தடுக்கும் கவசமாக இந்த சட்டம் அமையும்" என தெரிவித்தார்.
ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழையும் அகதிகளுக்கு உறுப்பினர் நாடுகளின் எல்லைக்கருகே மையம் அமைக்கவும், நுழைவதற்கு அனுமதி மறுக்கப்படும் அகதிகளை உடனுக்குடன் அவரவர் சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பவும், ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர் நாடுகள் ஒரு ஒப்பந்தத்தை சில தினங்களுக்கு முன் உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.
2027ல் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் அகதிகள் பிரச்சனை வாக்குகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் அம்சமாக இருக்கும் என மேக்ரான் கருதுவதால் தன் நாட்டு மக்களை ஈர்க்கும் வகையில் விரைவாக இந்த சட்டத்தை கொண்டு வர முயல்கிறார் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
- மத்திய அரசுக்கே சட்டம் இயற்ற அதிகாரம் உள்ளதாக நீதிமன்றங்கள் தெரிவித்தன
- புதிய சட்டத்தின்படி அகதிகளை மீண்டும் எல்லையில் கொண்டுவிட நீதிபதி உத்தரவிட முடியும்
வாழ்வாதாரத்தை தேடி அமெரிக்காவின் அண்டை நாடுகளில் இருந்து கூட்டம் கூட்டமாக மிக நீண்ட, ஆபத்தான பயணங்களை மேற்கொண்டு மக்கள் சட்டவிரோதமாக அமெரிக்காவில் நுழைவது பல ஆண்டுகளாக தொடர்கதையாகி வருகிறது.
சமீப சில வருடங்களாக இவர்களால் பல்வேறு உள்நாட்டு சிக்கல்கள் தோன்றுவதால் சட்டவிரோதமாக உட்புகுவதை தடுக்க அங்கு அரசியல் தலைவர்கள் விவாதிக்கிறார்கள். தேர்தல்களில் இப்பிரச்சனை வாக்குகளை ஈர்க்கும் ஒரு முக்கிய அம்சமாக முன்வைக்கப்படுகிறது.
கடந்த அக்டோபர் 31 அன்று, 2023 நிதியாண்டில் மட்டும் சுமார் 6 லட்சம் அகதிகள் சட்டவிரோதமாக உள்ளே நுழைந்து எல்லை பாதுகாப்பு படையால் கைது செய்யப்பட்டுள்ளதாக உள்துறை பாதுகாப்பு துறை தெரிவித்தது.
அமெரிக்க மத்திய அரசின் சட்டப்படி இவ்வாறு உள்ளே நுழைவது குற்றமாக கருதப்பட்டாலும், அமெரிக்க குடியுரிமை நீதிமன்றங்களில் சிவில் வழக்காகவே இவை விசாரிக்கப்படுகின்றன. மேலும், இது குறித்து சட்டம் இயற்றும் அதிகாரம் மத்திய அரசுக்கே உள்ளதாக அந்நாட்டு நீதிமன்றங்கள் தீர்ப்பளித்தன.
இந்நிலையில், அகதிகளை தடுக்கும் விதமாக தென்மத்திய மாநிலமான டெக்ஸாஸ், கடுமையான சட்டத்தை நிறைவேற்றி உள்ளது.
இப்புதிய சட்டத்தினபடி உள்ளூர் காவல்துறை அதிகாரிகளே அகதிகளை கண்டறிந்து கைது செய்யலாம். கடும் தண்டனைக்குரிய கிரிமினல் குற்றமாக கருதப்படும் இதற்கு நீண்டகால சிறை தண்டனையும், சுமார் ரூ.1.50 லட்சத்திற்கும் ($2000) மேல் அபராதம் விதிக்கப்படும். மேலும், டெக்ஸாஸ் நீதிமன்ற நீதிபதிகள் அந்த அகதிகளை மீண்டும் எல்லைக்கு அப்பால் கொண்டு சென்று விட உத்தரவிட முடியும். மீண்டும் நுழைய முயல்பவர்களுக்கு 20 வருடம் வரை சிறை தண்டனை வழங்கப்படும்.
குடியரசு கட்சியை சேர்ந்த டெக்ஸாஸ் கவர்னர் க்ரெக் அப்பாட் (Greg Abbott), "இச்சட்டம் பேரலையாக மெக்சிகோ மற்றும் அண்டை நாடுகளிலிருந்து டெக்ஸாஸ் எல்லை வழியாக அகதிகள் வருவதை தடுக்கும்" என தெரிவித்தார்.
அடுத்த வருடம் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இச்சட்டம் விவாத பொருளாக மாறும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
- பிரதர்ஸ் ஆஃப் இத்தாலியின் சந்திப்பில் ரிஷி சுனக், எலான் மஸ்க் ஆகியோரும் பங்கேற்றனர்
- ஐரோப்பிய கலாச்சாரம் மதிக்கும் கோட்பாடுகளும், அளிக்கும் உரிமைகளும் உயர்வானவை என்றார் மெலோனி
மத்திய தரைக்கடல் பகுதி வழியாக ஐரோப்பாவிற்குள் தஞ்சம் புக அகதிகள் சிறு கப்பல்கள் மூலம் தினசரி வந்து கொண்டே இருக்கிறார்கள். சமீப சில காலங்களாக இவ்வாறு நுழையும் அகதிகளால் உள்நாட்டில் சட்ட சிக்கல்கள் ஏற்படுவதாக விமர்சனங்கள் எழுந்தன. பல ஐரோப்பிய நாடுகளின் தேர்தல்களில் வாக்குகளை ஈர்க்க இதை ஒரு விவாத பொருளாக சில தலைவர்கள் முன்னெடுத்தனர்.
சட்ட விரோதமாக ஐரோப்பிய நாடுகளில் நுழைவதை கட்டுப்படுத்த கடுமையான முடிவுகளை எடுக்க அந்நாடுகளின் தலைவர்கள் பல கட்டமாக சந்தித்து வருகின்றனர்.
அகதிகள் நுழைவதை கட்டுப்படுத்த இத்தாலி தலைநகரான ரோம் நகரில், Giorgio Meloni) தீவிர வலது சாரி அமைப்பான பிரதர்ஸ் ஆஃப் இத்தாலி (Brothers of Italy) அமைப்பு ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் ஜியோர்ஜியோ மெலோனி (உரையாற்றினார். இதில் இங்கிலாந்தின் பிரதமர் ரிஷி சுனக் மற்றும் அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் ஆகியோரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது உரையில் மெலோனி தெரிவித்ததாவது:
நமது கலாச்சாரத்துடன் இஸ்லாமிய கலாச்சாரம் இணைவது கடினம் என நான் நினைக்கிறேன். இத்தாலியில் உள்ள பல இஸ்லாமிய கலாச்சார மையங்கள் சவுதி அரேபியாவின் நிதியுதவியால் நடப்பவை என்பதை நான் கவனிக்காமல் இல்லை. சவுதி அரேபியா நாட்டில் மத கோட்பாடுகளை கை விடுவது, தன்பாலின சேர்க்கை போன்றவைகளுக்கு மரண தண்டனை, கல்லெறி தண்டனை போன்றவற்றை வலியுறுத்தும் ஷரியா (Sharia) சட்டம் கடைபிடிக்கப்படுகிறது. அந்த கலாச்சாரத்தை ஐரோப்பிய நாடுகளில் அவர்கள் புகுத்த நினைக்கிறார்கள். ஆனால், ஐரோப்பிய நாகரிகம் பல தசாப்தங்களாக வளர்த்து வந்த மதிப்புக்குரிய அம்சங்களிலிருந்தும் மக்களுக்கு அளிக்கும் உரிமைகளிலிருந்து இந்த கலாச்சாரம் மாறுபட்டு நிற்கிறது. நான் ஷரியா சட்டத்தை இத்தாலியில் புகுத்த அனுமதிக்க மாட்டேன்.
இவ்வாறு மெலோனி கூறினார்.
கடந்த 2022 அக்டோபர் முதல் ஐரோப்பியாவின் முக்கிய நாடான இத்தாலியில், பிரதமராக பதவி வகிக்கும் ஜியோர்ஜியா மெலோனி (46), தீவிர வலதுசாரி ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
- மீண்டும் அதிபராக தீவிரமாக பிரசாரம் செய்து வருகிறார் டிரம்ப்
- பல கண்டங்களிலிருந்தும் அமெரிக்காவிற்கு உள்ளே அகதிகள் குவிகிறார்கள் என்றார் டிரம்ப்
அமெரிக்காவில் அடுத்த வருடம் அந்நாட்டு பாராளுமன்றத்திற்கான தேர்தல் நடைபெற உள்ளது.
இருகட்சி ஜனநாயகம் நடைமுறையில் உள்ள அமெரிக்காவில், தற்போது ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடன் பிரதமராக உள்ளார். அவர் மீண்டும் அடுத்த வருட தேர்தலில் பிரதமர் வேட்பாளராக களம் இறங்க உள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட தயாராகி வரும் குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் நாடு முழுவதும் தீவிரமாக பிரசாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில், அமெரிக்காவின் நியூ ஹேம்ப்ஷையர் (New Hampshire) மாநிலத்தின் டுர்ஹாம் (Durham) நகரில் ஒரு பேரணியில் டொனால்ட் டிரம்ப் உரையாற்றினார்.
அதில் அவர் தெரிவித்ததாவது:
ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்கா உள்ளிட்ட பல கண்டங்களிலும் உள்ள பல நாடுகளிலிருந்து அமெரிக்காவிற்கு உள்ளே அகதிகள் குவிந்து வருகின்றனர். அவர்களால் நம் நாட்டு "ரத்தம்" விஷமாகி வருகிறது. அவர்கள் உலகம் முழுவதும் உள்ள மனநல காப்பகங்கள், சிறைச்சாலைகள் உள்ளிட்ட இடங்களை "விஷம்" ஆக்கி வருகின்றனர். மீண்டும் அதிபராக நான் தேர்வானால் இவ்வாறு லட்சக்கணக்கில் மக்கள் சட்ட விரோதமாக நம் நாட்டிற்குள் நுழைவதை முற்றிலும் ஒழித்து விடுவேன்."
இவ்வாறு டிரம்ப் கூறினார்.
தனது பிரசாரம் முழுவதும் எல்லைகளை பலப்படுத்த சட்ட விரோதமாக வரும் அகதிகளை தடுக்க மிக கடுமையான நடவடிக்கைகளை எடுக்க உள்ளதாக தெரிவித்து வரும் டிரம்ப், ஏற்கெனவே கடந்த செப்டம்பரில் அகதிகளை "அமெரிக்க ரத்தத்தை விஷம் ஆக்குபவர்கள்" என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- குடியேறும் நாட்டு கலாச்சாரத்தோடு இணைய கட்டாயமில்லாதது தவறு
- நாட்டின் பாதுகாப்பு, சமூக அமைதி ஆகியவை கேள்விக்குறியாகிறது
இங்கிலாந்து நாட்டின் உள்துறை செயலாளராக பணிபுரிபவர் சுவெல்லா பிரேவர்மேன் (Suella Braverman). அமெரிக்காவில் வாஷிங்டனில் உள்ள அமெரிக்கன் என்டர்பிரைஸ் எனப்படும் நிறுவனம் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:
பன்முக கலாச்சாரம் தோல்வியடைந்து விட்டது. பன்முக கலாச்சாரம் என்பது தற்காலத்திற்கு ஒவ்வாத சித்தாந்தம். இந்த தவறான சித்தாந்தத்தால் இங்கிலாந்திற்குள் அகதிகளாக பலர் வரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சித்தாந்தத்தின்படி ஒரு நாட்டிற்குள் அகதிகளாக வருபவர்களுக்கு அந்த நாட்டு மக்களோடு இணைந்து வாழ வேண்டும் எனும் கட்டாயம் இல்லாத நிலை உள்ளது. இதனால் பல சிக்கல்கள் ஏற்படுகிறது. அவர்கள் குடியேறும் நாட்டு மக்களோடு இணைந்து வாழாமல் தங்கள் கலாச்சாரத்தையே பின்பற்றி தனியாக வாழ்கிறார்கள். ஒரு சில சமயம், நாட்டின் பாதுகாப்பிற்கும், சமூக அமைதிக்கும் கேடு விளைவிக்கும் செயல்களிலும் ஈடுபடுகிறார்கள். ஐரோப்பாவின் அனைத்து நகரங்களின் தெருக்களிலும் பன்முக கலாச்சாரம் தோல்வியடைந்ததற்கான அடையாளங்கள் தெரிகின்றன. இங்கிலாந்தில் லெய்சஸ்டர் பகுதியில் கடந்த வருடம் நடந்த மோதல்களும் இதில் அடங்கும். ஒரு நாட்டின் கலாச்சாரத்தில் பெரும் வேகத்தில், பெரும் திரளாக வேறொரு கலாச்சாரத்தை சேர்ந்தவர்கள் உள்ளே நுழையும் போது, அந்நாட்டில் ஏற்கெனவே இருந்த கலாச்சாரம் நீர்த்து போகிறது.
இவ்வாறு சுவெல்லா தெரிவித்தார்.
ஆனால், ஐ.நா. கூட்டமைப்பின் அகதிகளுக்கான அமைப்பு, சுவெல்லாவின் கருத்துக்களுக்கு ஆட்சேபம் தெரிவித்துள்ளது.
இங்கிலாந்தில், எதிர்கட்சியான லேபர் கட்சியை சேர்ந்தவர்கள் இவரது கருத்துக்களை எதிர்க்கின்றனர். ஆனால் சுவெல்லா சார்ந்திருக்கும் கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்தவர்கள் இதனை ஆதரித்து "உலகில் உள்ளவர்களுக்கெல்லாம் இங்கிலாந்து அகதிகள் முகாமாக இருக்க முடியாது" என கூறி வருகின்றனர்.
லிபியாவில் கடாபியின் ஆட்சி வீழ்த்தப்பட்ட பிறகு அங்கு அதிகாரப் போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. பதவிவெறி பிடித்த போராளிக் குழுக்களின் மோதலில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து தப்பித்து உயிரை பாதுகாத்து கொள்ள லிபியாவில் வறுமை நிலையில் வாடும் மக்களில் பலர் புகலிடம் தேடி ஐரோப்பிய நாடுகளுக்கு செல்கின்றனர்.
இதேபோல் வன்முறை, உள்நாட்டுப் போர், வறுமை உள்ளிட்ட காரணங்களால் மற்ற ஆப்பிரிக்க நாடுகளில் இருந்தும் அகதிகள் கடல் வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கு செல்வதற்கு லிபியா ஒரு முக்கிய போக்குவரத்து வழியாக உள்ளது. லிபியாவில் இருந்து அவர்கள் மத்திய தரைக்கடல் வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கு, சட்டவிரோத ஆட்கடத்தல் கும்பல் மூலம் படகுகளில் செல்கின்றனர். இவ்வாறு செல்லும்போது பல சமயம் விபத்தில் பெரிய அளவில் உயிரிழப்பு ஏற்படுகிறது. இதனால் லிபிய கடற்பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், லிபியாவின் அல் கோம்ஸ் கடற்பகுதியில் நேற்று ஏராளமான அகதிகள் ஒரு ரப்பர் படகில் சென்றுகொண்டிருந்தனர். அவர்களின் படகு கடலில் தள்ளாடியதைக் கவனித்த லிபிய கடலோர காவல் படையினர், உடனடியாக அங்கு சென்று அனைவரையும் மீட்டனர். விசாரணையில் அவர்கள் பல்வேறு ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.
மீட்கப்பட்ட 84 ஆண்கள், 15 பெண்கள் மற்றும் 18 குழந்தைகள் என 117 பேருக்கும் தேவையான உணவு மற்றும் மருத்துவ உதவி வழங்கப்பட்டு, தலைநகர் திரிபோலியில் உள்ள அகதிகள் மையத்திற்கு அழைத்து வந்து தங்க வைத்துள்ளனர். #ImmigrantsRescued #LibyanCoast
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்