என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "INC"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • காப்பீட்டு தொகை ரூ.10 லட்சமாக உயர்த்தப்படும் என ராகுல் கூறினார்
    • ஆட்சிக்கு மீண்டும் வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவோம் என உறுதியளித்தார்

    இந்தியாவில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கு நவம்பரில் வெவ்வேறு தேதிகளில் சட்டசபை தேர்தல் நடக்கவிருக்கிறது. இந்த தேர்தல்களுக்கான முடிவுகள், டிசம்பர் 3 அன்று வெளியிடப்படும்.

    அடுத்த வருடம், இந்தியாவிற்கு பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் இந்த 5 மாநில தேர்தலை அதற்கு முன்னோட்டமாக அரசியல் கட்சிகள் கருதுகின்றன. எனவே இதில் வெல்ல தீவிர பிரச்சாரத்தை முடுக்கி விட்டுள்ளன.

    இதன் ஒரு பகுதியாக சத்தீஸ்கர் மாநிலத்தில் ராகுல் காந்தி ஒரு பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார்.

    அதில் அவர் தெரிவித்ததாவது:

    காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஏழைகளுக்கு தற்போது வழங்கப்படும் காப்பீட்டுத்தொகை ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தப்படும். நிலமில்லாத கூலி தொழிலாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் உதவித்தொகை, தற்போது வழங்கப்படும் ரூ.7 ஆயிரத்திலிருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்படும். இது குறித்து நான் முதல்வர் பூபேஷ் பாகேலுடன் கலந்து ஆலோசித்து விட்டுத்தான் இந்த வாக்குறுதியை அளிக்கிறேன். அது மட்டுமல்ல, ஆட்சிக்கு வந்தவுடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். 2018ல் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தையும் காங்கிரஸ் கட்சி நிறைவேற்றி விட்டது. காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு விவசாயிகள் முன்பு போல் தங்கள் நிலங்களை விற்காமல் விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இவ்வாறு ராகுல் கூறினார்.

    இந்த பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தியுடன் முதல்வர் பூபேஷ் பாகேல், துணை முதல்வர் சிங் தியோ, உள்துறை அமைச்சர் டம்ரத்வாஜ் சாகு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    5 மாநில தேர்தல்களில் மக்களுக்கு வாக்குறுதிகளை தேர்தல் அறிக்கையாக வெளியிடாமல் தேர்தல் பொதுக்கூட்டங்களில் வெளிப்படுத்தும் யுக்தியை தற்போது காங்கிரஸ் கடைபிடித்து வருகிறது.

    • சத்தீஸ்கரில் ஆட்சியை தக்க வைக்க காங்கிரஸ் தீவிரமாக போராடி வருகிறது
    • சிலிண்டருக்கு ரூ.500 மானியமாக வழங்கப்படும் என்றார் பிரியங்கா

    இந்தியாவில் 5 மாநிலங்களுக்கு நவம்பரில் வெவ்வேறு தேதிகளில் சட்டசபை தேர்தல் நடக்கவிருக்கிறது. இந்த தேர்தல்களுக்கான முடிவுகள், டிசம்பர் 3 அன்று வெளியிடப்படும்.

    அடுத்த வருடம் இந்தியாவிற்கு பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், இந்த 5 மாநில தேர்தல்களை அதற்கு முன்னோட்டமாக அரசியல் கட்சிகள் கருதுகின்றன. இதன் காரணமாக 5 மாநிலங்களிலும் காங்கிரஸ், பா.ஜ.க. ஆகிய தேசிய கட்சிகளும், அந்தந்த மாநிலங்களில் வலுவாக உள்ள பிராந்திய கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தை முடுக்கி விட்டுள்ளன.

    இந்த 5 மாநிலங்களில் சத்தீஸ்கர் மாநிலத்தில் தற்போது காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு ஆட்சியை தக்க வைத்து கொள்ள காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதன் ஒரு பகுதியாக சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ஜல்பந்தா பகுதியில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வதேரா ஒரு பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார்.

    அதில் அவர் தெரிவித்ததாவது:

    மதத்தின் பெயரால் உங்களிடையே பிரிவை ஏற்படுத்துபவர்களுக்கு (பா.ஜ.க.) வாக்களிப்பீர்களா அல்லது உங்கள் நல்வாழ்வுக்காக பாடுபடும் கட்சிக்கு (காங்கிரஸ்) வாக்களிப்பீர்களா? மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இங்குள்ள சுமார் 6 ஆயிரம் உயர்நிலை பள்ளிகள் சுவாமி ஆத்மானந்த் ஆங்கில மற்றும் ஹிந்தி மொழி பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். பொதுமக்களுக்கு 200 யூனிட்டுகள் வரை மின்சாரம் இலவசமாக வழங்கப்படும். சமையல் எரிவாயு தொகையில் சிலிண்டருக்கு ரூ.500 மானியம் வழங்கப்படும். சுய உதவிக்குழுக்கள் மற்றும் பெண்கள் பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். சாலை விபத்தில் சிக்கும் பொதுமக்களுக்கு இலவச மருத்துவ சேவை வழங்கப்படும்.

    இவ்வாறு பிரியங்கா கூறினார்.

    முன்னதாக சத்தீஸ்கரில் பிரியங்கா காந்தியின் சகோதரரும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவருமான ராகுல் காந்தியும் தனது பிரச்சாரத்தில் பல வாக்குறுதிகளை அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பயனர்களின் தரவுகள் மீது தாக்குதல் நடப்பதாக ஆப்பிள், குறுஞ்செய்தி அனுப்பியுள்ளது
    • இதே போன்ற குற்றச்சாட்டு முன்னர் பொய் என தெரிய வந்தது என அமைச்சர் கூறினார்

    இந்திய பாராளுமன்ற உறுப்பினர்களில் காங்கிரஸ் கட்சியின் சசி தரூர் மற்றும் பவன் கேரா, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மஹுவா மொய்த்ரா, ஆம் ஆத்மி கட்சியின் ராகவ் சத்தா ஆகியோர் தங்களின் ஐபோனுக்கு ஆப்பிள் நிறுவனத்திலிருந்து வந்ததாக ஒரு குறுஞ்செய்தியின் ஸ்க்ரீன் ஷாட்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.

    அந்த செய்தியில், "அரசாங்கத்தால் ஊக்குவிக்கப்படும் ஹேக்கர்கள் சிலரால் உங்கள் ஐபோனில் உள்ள தனிப்பட்ட தகவல் பரிமாற்ற தரவுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஆப்பிள் நிறுவனம் நம்புகிறது. இந்த தகவலை அலட்சியப்படுத்த வேண்டாம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனை வெளியிட்ட அந்த எம்.பி.க்கள், ஆளும் பா.ஜ.க. அரசு தங்களை வேவு பார்க்க முயல்வதாக குற்றம் சாட்டினர்.

    அவர்கள் குற்றச்சாட்டை உறுதி செய்யும் விதமாக இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தனது கட்சி அலுவலகத்தில் பலருக்கு இவ்வாறு மின்னஞ்சல் வந்துள்ளதாகவும், இதன் மூலம், ஆளும் பா.ஜ.க. அரசு அதானி விவகாரம் உட்பட பல விவகாரங்களில் இருந்து மக்களை திசை திருப்பும் அரசியலில் ஈடுபடுவதாகவும் கூறினார்.

    இந்நிலையில், ஐபோன் தயாரிக்கும் ஆப்பிள் நிறுவனம் இது குறித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. தெளிவில்லாமல் இருக்கும் அதன் அறிக்கையில் இந்த தகவல் உண்மையா பொய்யா என்பதை அந்நிறுவனம் உறுதிபடுத்தவோ மறுக்கவோ இல்லை.

    இதற்கிடையே மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இது குறித்து தெரிவித்திருப்பதாவது:

    இந்த சம்பவத்தை அரசு தீவிரமாக பார்க்கிறது. நடந்தது என்ன என்பது முழுவதுமாக ஆராயப்படும். தாங்கள் ஆட்சியில் இருந்த போது தங்கள் குடும்ப முன்னேற்றத்தை மட்டுமே கவனத்தில் கொண்டு செயல்பட்ட சிலருக்கு நாட்டின் வளர்ச்சியை பொறுக்க முடியாது. அவர்கள் அனைத்தையும் விமர்சிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். சுமார் 150 நாடுகளில் உள்ள பயனர்களுக்கு ஆப்பிள் இத்தகைய குறுஞ்செய்தியும், மின்னஞ்சலும் அனுப்பியுள்ளது. ஆனால், நடந்தது என்ன என்பது குறித்து அந்நிறுவனமே தெளிவான விளக்கத்தை இதுவரை தரவில்லை. முன்னர் ஒரு முறை இதே போன்ற ஒரு குற்றச்சாட்டு வைக்கப்பட்டு நீதிமன்ற மேற்பார்வையில் ஆய்வுகள் நடத்தப்பட்டன. இறுதியில் அந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய் என தெரிய வந்தது.

    இவ்வாறு அஸ்வினி கூறினார்.

    • தேசிய கட்சிகளான காங்கிரஸ், பா.ஜ.க. தீவிரமாக களம் இறங்கியுள்ளன
    • காங்கிரசார் ஏதோ மன வியாதியில் உள்ளனர் என பிரதமர் மோடி விமர்சித்தார்

    ராஜஸ்தான் மாநிலத்தில் தற்போது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அசோக் கெலாட் தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு நவம்பர் 25 அன்று அம்மாநில சட்டசபையில் உள்ள 200 இடங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் முடிவுகள் டிசம்பர் 3 அன்று வெளியிடப்படும்.

    இத்தேர்தலில் வெற்றி பெற தேசிய கட்சிகளான காங்கிரசும், பா.ஜ.க.வும் தீவிரமாக களமிறங்கி உள்ளன.

    முன்னதாக, மத்திய பிரதேசத்தில் ஒரு பிரசார கூட்டத்தில் ராகுல் காந்தி, மக்கள் அனைவரும் சீனாவில் தயாரிக்கப்படும் மொபைல்களையே பயன்படுத்துகின்றனர் என்றும் இதனை மாற்றி மத்திய பிரதேசத்திலேயே மொபைல் தயாரிப்பை ஊக்குவித்து இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை அதிகரிப்பதையே காங்கிரஸ் விரும்புகிறது என்றும் அறிவித்திருந்தார்.

    நேற்று இது குறித்து தனது பிரசாரத்தில் பிரதமர் மோடி பதிலளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:

    ஒரு காங்கிரஸ் தலைவர் (ராகுல் காந்தி) சீனாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை மட்டுமே மக்கள் வைத்துள்ளதாக கூறுகிறார். அட அறிவில்லாதவர்களின் தலைவரே, எந்த உலகில் இருக்கிறீர்கள்? இந்தியாவின் வளர்ச்சியை மறைக்கும் அளவு எந்த வெளிநாட்டு கண்ணாடியை அணிந்து கொண்டு நிலைமையை பார்க்கிறீர்கள்? இந்தியாவின் சாதனைகளை புறக்கணிக்கும் அளவிற்கு ஏதோ மன வியாதியில் காங்கிரசார் உள்ளனர்.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

    இந்திய பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை மறைமுகமாக "அறிவில்லாதவர்களின் தலைவன்" என விமர்சித்திருப்பதற்கு ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர் அசோக் கெலாட் கருத்து தெரிவித்தார்.

    அவர் இது குறித்து தெரிவித்ததாவது:

    "இது வருந்தத்தக்க செயல். பிரதமர் பதவிக்கு என்று ஒரு மரியாதை (dignity) உள்ளது. பிரதமரை அதிகம் விமர்சிக்கும் போது, அப்பதவிக்கான மரியாதை குறைந்து விடும். ஆனால், அத்தகைய ஒரு மரியாதைக்குரிய பதவியை வகிக்கும் ஒருவரே (மோடி) இவ்வாறு பேச தொடங்கினால், அவரிடமிருந்து வேறு எதனை எதிர்பார்க்க முடியும்?"

    இவ்வாறு அசோக் கெலாட் கருத்து தெரிவித்தார்.

    சில தினங்களுக்கு முன் மகாராஷ்டிரா மாநிலத்தின் முக்கிய அரசியல் கட்சியான சிவசேனா (உத்தவ் தாக்கரே பிரிவு) தலைவர் சஞ்சய் ராவத், "அடுத்த வருட பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ராகுல் காந்தி பிரதமர் ஆக போவது உறுதி என்பதால் மோடி ராகுலை கண்டு அஞ்சுகிறார்" என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • அனைத்து திருடர்களின் பெயர்களும் ஏன் "மோடி" என உள்ளது என்றார் ராகுல்
    • 2023 மார்ச் முதல் ஆகஸ்ட் வரை ராகுல் எம்.பி. பதவியை இழந்திருந்தார்

    கடந்த 2019ல் இந்திய பாராளுமன்றத்திற்கான பொது தேர்தல் நடைபெற்றது. அப்போது இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் பிரச்சார கூட்டம் ஒன்று கர்நாடகாவில் நடைபெற்றது.

    அக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, "அனைத்து திருடர்களின் பெயர்களும் மோடி, மோடி, மோடி என ஏன் உள்ளது? நிரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி..." என கருத்து தெரிவித்திருந்தார்.

    ராகுலின் கருத்து தங்கள் மோடி இனத்தையே அவமதிப்பதாக கூறி 2019, ஏப்ரல் 16 அன்று பா.ஜ.க.வை சேர்ந்த பூர்ணேஷ் மோடி (58) எனும் குஜராத் மாநில சட்டசபை உறுப்பினர், கிரிமினல் அவமதிப்பு வழக்கு ஒன்றை குஜராத் கீழமை நீதிமன்றத்தில் தொடர்ந்தார். இதில் ராகுல் குற்றவாளி என தீர்ப்பானது.

    அதனை எதிர்த்து ராகுல் காந்தி தரப்பில் குஜராத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அங்கும் அவர் குற்றவாளி என தீர்ப்பு உறுதியாகி 2 வருட சிறை தண்டனை வழங்கப்பட்டு அவரது பாராளுமன்ற உறுப்பினர் பதவியும் பறி போனது.

    இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. அதில் அவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு இடைக்கால தடை வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து மீண்டும் ராகுல் பாராளுமன்ற உறுப்பினரானார். இவ்வழக்கில் இறுதி தீர்ப்பு இன்னும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    இவ்வழக்கினால், 2023 மார்ச் 24 முதல் 2023 ஆகஸ்ட் 7 வரை ராகுல் காந்தி மக்களவை உறுப்பினர் பதவியை இழந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், தாத்ரா நகர் மற்றும் ஹவேலி யூனியன் பிரதேசத்திலும், கோவா, டமன் மற்றும் டியு யூனியன் பிரதேசத்திலும் உள்ள பா.ஜ.க.வின் அரசியல் விவகாரங்களுக்கான தலைமை பொறுப்பாளராக பூர்ணேஷ் மோடியை பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நியமித்துள்ளார்.

    இப்பதவி பூர்ணேஷ் இதுவரை ஆற்றிய பணிகளுக்கு கிடைத்த அங்கீகாரம் என பா.ஜ.க.வினர் கருத்து தெரிவிக்கின்றனர்.

    • 2018ல் கே.சி.ஆர். கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது
    • கே.சி.ஆர். குடும்பத்தினரால் மாநிலம் முழுவதும் ஊழல் பரவி உள்ளது என்றார் ராகுல்

    தெலுங்கானாவில், வரும் நவம்பர் 30 அன்று அம்மாநில சட்டசபையின் 119 இடங்களுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலின் முடிவுகள், டிசம்பர் 30 அன்று வெளியிடப்படும்.

    கடந்த 2018ல் நடந்த சட்டசபை தேர்தலில் - தற்போது பி.ஆர்.எஸ். என பெயர் மாற்றப்பட்டுள்ள (பாரத் ராஷ்டிர சமிதி) அப்போதைய தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி வென்றது. அதை தொடர்ந்து, அக்கட்சியின் தலைவர் கே. சந்திரசேகர் ராவ் ஆட்சியமைத்தார்.

    தற்போது அவருக்கு எதிராக தேசிய கட்சிகளான இந்திய தேசிய காங்கிரஸ் (INC) மற்றும் பாரதிய ஜனதா கட்சி (BJP) ஆகியவை மும்முரமாக களத்தில் இறங்கியுள்ளன. இக்கட்சிகளை தவிர அசாதுத்தீன் ஒவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம். (AIMIM) கட்சியும் போட்டியிடுகிறது.

    காங்கிரஸ் கட்சியின் சார்பில் அதன் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி, தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    கம்மம் மாவட்ட பினபாகா மற்றும் வாரங்கல் மாவட்ட நரசம்பேட்டை பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டு ஆதரவு தேடி வருகிறார்.

    அப்போது அவர் கூறியதாவது:

    காங்கிரஸ் வெற்றி எனும் புயலை எதிர்கொள்ள கே.சி.ஆர். தயாராக வேண்டும். மக்களாட்சியை கொண்டு வர காங்கிரஸ் உறுதி எடுத்துள்ளது. தெலுங்கானாவில் நிலவும் ஊழல் மக்களை சலிப்படைய செய்து விட்டது. பணம் சம்பாதிக்க வாய்ப்புள்ள அனைத்து துறைகளையும் தன் குடும்பத்தின் வசம் வைத்து கொண்டு ஊழலை வளர்த்திருக்கிறார், கே.சி.ஆர். காங்கிரஸ் இலவசமாக ஏழைகளுக்கு அளித்த விவசாய நிலங்களை கே.சி.ஆர். அரசு டிஜிட்டல்மயமாக்கல் எனும் பெயரில் பதிவுகள் இல்லாமல் அழித்து விட்டது.

    காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும், கே.சி.ஆர். குடும்பம் ஏமாற்றி அபகரித்து வைத்துள்ள செல்வத்தை மீட்டு மக்களுக்கு செலவு செய்வோம். தனி தெலுங்கானா அமைய பாடுபட்ட கட்சி காங்கிரஸ் கட்சிதான். ஐதராபாத் நகரை "மென்பொருள் துறை தலைநகர்" (IT Capital) என மாற்றியதும் காங்கிரஸ் கட்சிதான். தேர்தலில் தனித்தனியாக போட்டியிட்டாலும் பா.ஜ.க., பி.ஆர்.எஸ்., மற்றும் ஏ.ஐ.எம்.ஐ.எம். ஆகியவை மறைமுகமாக கூட்டணி வைத்துள்ளன.

    தெலுங்கானாவில் மக்களாட்சி அமைந்ததும், அடுத்த வருட பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. அகற்றப்பட்டு காங்கிரஸ் கட்சியே ஆட்சி அமைக்கும்.

    இவ்வாறு ராகுல் தெரிவித்தார்.

    • 2018ல் தெலுங்கானா ராஷ்டிர சமிதி 88 இடங்களை பெற்று ஆட்சி அமைத்தது
    • காங்கிரஸ் கட்சி தலைவர் ரேவந்த், ஆர்.எஸ்.எஸ். பின்னணி கொண்டவர் என்றார் ஒவைசி

    இந்தியாவின் 5 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல்கள் இம்மாத இறுதிக்குள் நிறைவடைந்து, இறுதி முடிவுகள் டிசம்பர் 3 அன்று வெளியிடப்பட உள்ளது.

    தெலுங்கானாவில் 2018-ல் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் 47 சதவீத வாக்குகளை பெற்று பாரத ராஷ்டிரிய சமிதி (அப்போதைய தெலுங்கானா ராஷ்டிர சமிதி) 119 இடங்களில் 88 இடங்களில் வெற்றி பெற்றது. பாரதிய ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்.) கட்சியை சேர்ந்த கே. சந்திரசேகர் ராவ் தலைமையில் அங்கு ஆட்சி நடைபெறுகிறது.

    இந்திய தேசிய காங்கிரஸால் 19 இடங்களை மட்டுமே வெல்ல முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    நவம்பர் 30 அன்று தெலுங்கானா சட்டசபையில் உள்ள 119 இடங்களுக்கு தேர்தல் நடைபெறவிருக்கிறது. வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் வெல்வதற்கு அங்கு பாரதிய ராஷ்டிர சமிதியை தவிர, காங்கிரஸ், பா.ஜ.க., மற்றும் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சிகள் களத்தில் உள்ளன. பிரசாரத்தில் அனல் பறக்கும் விமர்சனங்கள் நடைபெறுவதால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.

    இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் அதன் முக்கிய தலைவர் ராகுல் காந்தி, வாக்கு சேகரிப்பின் போது ஏ.ஐ.எம்.ஐ.எம். மற்றும் பி.ஆர்.எஸ்., ஆகிய இரு கட்சிகளும் பா.ஜ.க.வுடன் மறைமுகமாக கூட்டணி அமைத்துள்ளதாக குற்றம் சாட்டினார்.

    ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி, தெலுங்கானா தேர்தலில் ஐதராபாத்திற்கு உட்பட்ட 9 இடங்களுக்கு வேட்பாளர்களை களம் இறக்கி உள்ளது. அங்குள்ள நம்பள்ளி தொகுதி வேட்பாளருக்கு ஆதரவாக வீடு வீடாக ஏ.ஐ.எம்.ஐ.எம். தலைவர் அசாதுதீன் பிரசாரம் செய்தார்.

    அப்போது ராகுல் காந்திக்கு பதிலளிக்கும் விதமாக காங்கிரஸ் கட்சியை விமர்சித்தார்.

    காங்கிரஸ் குறித்து அவர் தெரிவித்ததாவது:

    பிறரை குற்றம் சாட்டும் முன் ராகுல் காந்தி கண்ணாடியில் தன்னை பார்த்து கொள்ள வேண்டும். 2019ல் 540 பாராளுமன்ற இடங்களுக்கு போட்டியிட தலைமையேற்ற ராகுல் காந்தியால் அக்கட்சிக்கு 50 இடங்கள் மட்டுமே நாடு முழுவதும் கிடைத்தது. இது ஏன்? நீங்கள் (ராகுல்) பிரதமர் மோடியிடம் இருந்து எவ்வளவு தொகையை பெற்றீர்கள்? மைனாரிட்டி ஆதரவாளர்கள் என சொல்லி கொண்டு, பாபரி மஸ்ஜித் தகர்ப்பிற்கு காரணமான சிவசேனையுடன் காங்கிரஸ் மகாராஷ்டிரத்தில் கூட்டணி வைத்திருக்கிறது. மைனாரிட்டிகளுக்கும் ஏழைகளுக்கும் குரலாக ஏ.ஐ.எம்.ஐ.எம். வளர்ச்சி பெற்று வருவதால் எங்களை கண்டு காங்கிரஸ் அஞ்சுகிறது. காங்கிரஸ் தேர்தல் அறிக்கை, இங்க் தெளிக்கப்பட்ட வெறும் காகிதம்; அதில் ஒன்றுமில்லை. அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் திருமண திட்டத்தின்படி இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு பலன் கிடைக்குமே தவிர இஸ்லாமியர்களுக்கு பலன் எதுவும் இல்லை. எங்கள் ஆடைகளையும், தொப்பிகளையும் நோக்கி காங்கிரஸார் விரல் நீட்டும் போது அன்பு குறித்து அவர்கள் பேசுவதை எவ்வாறு ஏற்று கொள்ள முடியும்? தெலுங்கானாவில் அவர்கள் கட்சி தலைவர் ரேவந்த் ரெட்டி, ஆர்.எஸ்.எஸ். பின்னணியை கொண்டவர் என்பதை மறக்காதீர்கள்.

    இவ்வாறு ஒவைசி பேசினார்.

    • 2009ல் மத்தியில் காங்கிரஸ் ஆட்சியும், தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியும் நடைபெற்றது
    • முள்ளிவாய்க்கால் சம்பவத்திற்காக மன்னிப்பு கேட்பேன் என்றார் தி.மு.க. எம்.பி.

    கடந்த 2009ல், இலங்கை ராணுவத்திற்கும் விடுதலை புலிகள் (LTTE) அமைப்பினருக்கும் இடையே நடைபெற்ற ஈழப்போரின் கடைசி கட்டத்தில், இலங்கையின் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் பகுதியில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் பரிதாபமாக கொல்லப்பட்டனர்.

    எல்.டி.டி.ஈ. அமைப்பினருக்கு எதிராக இந்திய அரசாங்கம் மறைமுகமாக இலங்கை அரசுக்கு ராணுவ உதவிகளை செய்து வந்ததாக அப்போது விமர்சனங்கள் எழுப்பப்பட்டன.

    இந்தியாவில் அப்போது காங்கிரஸ் தலைமையில் நடைபெற்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணி (UPA) ஆட்சியில் தமிழ்நாட்டின் முக்கிய கட்சியான தி.மு.க.வும் அங்கம் வகித்தது. இது மட்டுமின்றி தமிழகத்திலும் தி.மு.க. ஆட்சியே  அப்போது நடைபெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.

    இந்தியாவின் ராணுவ உதவி அப்போதைய தி.மு.க. அரசாங்கத்திற்கு தெரிந்தே நடந்ததாகவும், அன்றைய முதல்வர் கருணாநிதி இதனை அறிந்திருந்தும் தடுக்க தவறியதால்தான் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நடைபெற்று அதில் அப்பாவி இலங்கை தமிழர்கள் உயிரிழந்ததாக தமிழகத்தின் மற்றொரு முக்கிய கட்சியான அ.தி.மு.க. குற்றஞ்சாட்டியது. தற்போது தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துள்ள பல கட்சிகளும் அப்போது தி.மு.க.வை இதே காரணத்திற்காக குற்றஞ்சாட்டி வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

    இது குறித்த சச்சரவுகள் இன்று வரை ஓயவில்லை.

    இந்நிலையில், தற்போதைய ஆளும் கட்சியான தி.மு.க.வின் முக்கிய பிரமுகரும், தென் சென்னை பாராளுமன்ற உறுப்பினருமான தமிழச்சி தங்கபாண்டியன் ஒரு தனியார் தொலைக்காட்சி நேர்காணலில் பங்கேற்றார். அவரிடம், "வரலாற்று சிறப்புமிக்க ஒரு நபருடன் உணவு உண்ண வேண்டுமென்றால், யாருடன் உண்ன விரும்புகிறீர்கள். அந்த நபரிடம் என்ன கேட்பீர்கள்?' என்று கேட்கப்பட்டது.

    இதற்கு பதிலளித்த தமிழச்சி தங்கபாண்டியன், "மேதகு தலைவர் பிரபாகரன் உடன் உணவருந்தி, அவரிடம் முள்ளிவாய்க்கால் படுகொலை சம்பவத்திற்காக மன்னிப்பு கேட்பேன்" என பதிலளித்தார்.

    இரு தலைமுறைகளாக தி.மு.க.வில் முக்கிய பொறுப்பில் இருக்கும் குடும்பத்தை சேர்ந்தவரான தமிழச்சி தங்கபாண்டியனின் இந்த பதில், முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை தி.மு.க. தடுக்க தவறிய குற்றத்தை தாமாக முன் வந்து ஒப்பு கொண்டதாக ஆகி விட்டது என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

    இதற்கிடையே, பிரபாகரனை ஒரு மாவீரனை போல் சித்தரித்து தமிழச்சி பேசியிருப்பதை, தி.மு.க.வுடன் கூட்டணி ல் உள்ள காங்கிரஸ் கட்சியின் சிவகங்கை தொகுதி உறுப்பினரும், முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரத்தின் மகனுமான கார்த்தி சிதம்பரம் கண்டித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

    அடுத்த வருடம் இந்திய பாராளுமன்றத்திற்கு நடைபெற உள்ள தேர்தலில் பல கூட்டணிகளில் மாற்றங்கள் வரலாம் எனும் பின்னணியில் தி.மு.க. மற்றும் காங்கிரஸின் இந்த கருத்து மோதல் அரசியல் விமர்சகர்களால் பார்க்கப்படுகிறது.

    • ராஜிவ் காந்தியுடன் 17 பேர் கொல்லப்பட்டதை மூடி மறைக்க கூடாது என்றார் கார்த்தி சிதம்பரம்
    • ராஜிவ் காந்தியின் முடிவு அவரே தேடி கொண்ட ஒன்று என்றார் வன்னி அரசு

    தி.மு.க.வின் தென் சென்னை பாராளுமன்ற உறுப்பினரான தமிழச்சி தங்கபாண்டியன் ஒரு நேர்காணலில் "சரித்திர புகழ் வாய்ந்த தலைவர் ஒருவருடன் உணவருந்த வேண்டும் என்றால், விடுதலை புலிகளின் தலைவர் மேதகு பிரபாகரனுடன் உணவு அருந்த விரும்புகிறேன். அப்போது முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்காக அவரிடம் மன்னிப்பும் கேட்பேன்" என கருத்து தெரிவித்தார்.

    இதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக காங்கிரஸ் கட்சியின் சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், தனது அதிகாரபூர்வ எக்ஸ் சமூக வலைதள கணக்கில் பதிவிட்டார்.

    அதில் அவர் கூறியதாவது:

    பிரபாகரனை பாராட்டி பேசுவது இந்திய காங்கிரஸ் கட்சியினருக்கு இசைவான கருத்து அல்ல. ராஜிவ் காந்தியும், அவருடன் 17 பேரும் விடுதலை புலிகளால் கொல்லப்பட்ட படுகொலை சம்பவத்தை மூடி மறைத்து பிரபாகரனின் புகழ் பாட நினைப்பது தவறு. இந்துத்துவா தேசியவாதம் போல்தான் பிரபாகரனின் தமிழ் தேசிய சித்தாந்தங்களும் மிக சிறுமையானது.

    இவ்வாறு கார்த்தி சிதம்பரம் பதிவிட்டார்.

    இதற்கு பதிலளிக்கும் வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு, தனது அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கில் பதிவிட்டுள்ளார்.

    அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:

    எந்த விதத்திலும் சமரசம் செய்து கொள்ளாமல் புத்த, சிங்கள ஆதிக்க நடவடிக்கைகளுக்கு எதிராகவும், சிறுபான்மை தமிழ் சமூகத்திற்கு ஆதரவாகவும் போராடிய பெரும் தலைவர், மேதகு பிரபாகரன்.

    சனாதன இந்துத்துவம் ஆதிக்க மனப்பான்மையை வலியுறுத்துகிறது. மேதகு பிரபாகரனின் அரசியல், இந்துத்துவா சித்தாந்தத்திற்கு எப்போதுமே ஆதரவு அளித்ததில்லை.

    திரு. ராஜிவ் காந்தியின் படுகொலையை காரணம் காட்டி எத்தனை நாட்கள் தமிழ் மக்களை நீங்கள் இழிவு படுத்துவீர்கள்? தமிழ் ஈழத்தில் தமிழர்கள் சொல்ல முடியாத துயரங்களை அனுபவித்து வருகிறார்கள். தங்கள் நிலைப்பாட்டில் ஒரு மாற்றத்தை காங்கிரஸ் கொண்டு வர வேண்டிய தருணம் இது என்பதை உணருங்கள்.

    சிறுபான்மை தமிழர்களுக்கு ஆதரவாக நின்றதால் மேதகு பிரபாகரனுக்கும் விடுதலை புலிகளுக்கும் திருமதி இந்திரா காந்தி ஆதரவு அளித்தார்.

    ராஜிவ் காந்தியின் படுகொலையை யாரும் கொண்டாடவில்லை. அவரது முடிவு அவரே தேடி கொண்ட ஒன்றாகும்.

    மேதகு பிரபாகரனுக்கு ஆதரவு அளிப்பதுதான் இந்துத்துவாவை எதிர்ப்பதற்கு ஒப்பாகும்.

    இவ்வாறு வன்னி அரசு பதிவிட்டுள்ளார்.

    தி.மு.க.வுடன் தமிழகத்தில் ஒரே கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் முக்கிய பிரமுகர்களின் இந்த சித்தாந்த கருத்து மோதல் அரசியல் விமர்சகர்களால் கூர்ந்து கவனிக்கப்பட்டு வருகிறது.

    • சிம்ஹாஸ்த மேலா நடைபெற 872 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது
    • தகாத வார்த்தைகள் பேசியவருக்கு முதல்வர் பதவியா என ஜெய்ராம் விமர்சித்தார்

    மத்திய பிரதேச மாநில சட்டசபையில் உள்ள 230 இடங்களுக்கு நவம்பர் 17 அன்று நடைபெற்ற தேர்தல் முடிவுகள் டிசம்பர் 3 அன்று வெளியிடப்பட்டது.

    வெளியான முடிவுகளின்படி 230 இடங்களில் 163 இடங்களில் பா.ஜ.க. வென்று ஆட்சியை பிடித்தது. பா.ஜ.க.வை எதிர்த்து போட்டியிட்ட இந்திய தேசிய காங்கிரஸ் 66 இடங்களில் மட்டுமே வென்றது.

    இத்தேர்தலுக்கான பிரசார காலம் முழுவதும், இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் சாதனைகளையும் ம.பி.க்கான தேர்தல் அறிக்கையை மட்டுமே பிரசாரத்தில் முன்னெடுத்த பா.ஜ.க., முதல்வர் வேட்பாளர் யார் என்பதை கூறாமலே தேர்தலில் களம் இறங்கி வென்றது.

    வெற்றியை தொடர்ந்து இதுவரை முதல்வராக இருந்த பா.ஜ.க.வின் மூத்த தலைவர் சிவராஜ் சிங் சவுகானுக்கு கட்சியில் வேறு பொறுப்பு அளிக்கப்பட உள்ளதாகவும், ஒரு புதிய முகம் முதல்வராக முன்னிறுத்தப்படுவார் என தகவல்கள் வெளியாகின.

    நேற்று, அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. அதை தொடர்ந்து உஜ்ஜயின் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வான மோகன் யாதவ் அடுத்த முதல்வர் என அக்கட்சி அறிவித்தது.

    ம.பி.யின் உஜ்ஜயின் நகரத்தில் 12 வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் இந்து திருவிழா "உஜ்ஜயின் சிம்ஹாஸ்த மேலா." இந்த பண்டிகை கொண்டாட்டத்திற்காக 872 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டிருந்தது.

    ஆனால், விவசாய நிலங்கள் எனும் பிரிவிலிருந்து குடியிருப்புக்கான நிலங்கள் என யாதவ், யாதவின் மனைவி, யாதவின் சகோதரி ஆகியோர் பயன்பெறும் வகையில் திட்டம் மாற்றப்பட்டதாக நவம்பர் மாத தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி வந்தது.

    மேலும், இது குறித்து மோகன் யாதவ் தகாத வார்த்தைகளால் பேசுகின்ற வீடியோ ஒன்றும் சமூக வலைதளங்களில் பரவி வந்தது.

    இந்நிலையில், மோகன் யாதவ் முதல்வராக பா.ஜ.க.வினரால் தேர்ந்தெடுக்கப்பட்டதை இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார்.

    தனது அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கில் ஜெய்ராம் பதிவிட்டிருப்பதாவது:

    தேர்தல் முடிவுகள் வெளியான 8 நாட்களில் ம.பி.யின் முதல்வராக உஜ்ஜயின் நகர வளர்ச்சி திட்டத்தில் பெருமளவு நிலங்களை முறைகேடாக பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சிம்ஹாஸ்தாவிற்காக ஒதுக்கப்பட்ட 872 ஏக்கர் நில திட்டம் யாதவ் பயன்பெறும் வகையில் மாற்றப்பட்டது. பேசக்கூடாத வார்த்தைகளை யாதவ் பேசிய வீடியோவும் இணையத்தில் பரவி கிடக்கிறது. இதுதான் பிரதமர் மோடி ம.பி.க்கு அளிக்கும் உத்தரவாதமா?

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • 64 இடங்களில் வென்று காங்கிரஸ் முதல்முறையாக ஆட்சியமைத்தது
    • ஒரு முதல்வர் இவ்வாறு பேசுவது கவலை அளிக்கிறது என்றார் அஷ்வினி

    கடந்த நவம்பர் மாதம், தெலுங்கானா சட்டசபைக்கான 119 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தல் முடிவுகள் டிசம்பர் 3 அன்று வெளியாகியது.

    தேர்தல் முடிவுகளின்படி, இந்திய தேசிய காங்கிரஸ் 64 இடங்களில் வெற்றி பெற்றது. இதன் மூலம் தெலுங்கான மாநிலம் உருவானதிலிருந்து இரு முறை முதல்வராக இருந்த பி.ஆர்.எஸ். (பாரதிய ராஷ்டிர சமிதி) கட்சியின் தலைவர் கே.சி.ஆர். (கே. சந்திரசேகர் ராவ்) தலைமையிலான ஆட்சி முடிவுக்கு வந்தது.

    இதையடுத்து, காங்கிரஸ் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த ரேவந்த் ரெட்டி முதல்வராக அக்கட்சியினரால் தேர்வு செய்யப்பட்டார்.

    இந்நிலையில், ஒரு தொலைக்காட்சி பேட்டியில் பேசிய ரேவந்த் ரெட்டியிடம் முன்னாள் முதல்வர் கே.சி.ஆர். குறித்து கேட்கப்பட்டது. அப்போது அதற்கு பதிலளிக்கும் விதமாக பேசும் போது, "எனது மரபணு (டி.என்.ஏ.) தெலுங்கானாவை சேர்ந்தது. ஆனால், சந்திரசேகர் ராவ், பீகாரிலிருந்து விஜயநகரம் வந்து அங்கிருந்து தெலுங்கானாவிற்கு வந்தவர். பீகார் டி.என்.ஏ.வை விட தெலுங்கானா டி.என்.ஏ. சிறப்பு வாய்ந்தது" என பொருள்பட கூறினார்.

    இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.

    ரேவந்த் ரெட்டியின் இந்த பேச்சிற்கு பீகார் மாநில பா.ஜ.க. தலைவர் அஷ்வினி சவ்பே (Ashwini Choubey) கடுமையாக விமர்சித்தார்.

    இது குறித்து அவர் தெரிவித்ததாவது:

    காங்கிரஸ் தலைவர்கள் அசுத்த அரசியலில் ஈடுபடுகின்றனர். ஒரு முதல்வரிடமிருந்து இத்தகைய கருத்து வருவது துரதிர்ஷ்டவசமானது மட்டுமின்றி கவலையளிப்பதும் கூட. பீகார் டி.என்.ஏ. சிறப்பானதுதான். இது குறித்து பதிலளிக்க வேண்டிய பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மவுனம் காத்து வருவது ஏன் என தெரியவில்லை. பொதுமக்கள் தக்க பதிலளிப்பார்கள்.

    இவ்வாறு அஷ்வினி சவ்பே கூறினார்.

    அஷ்வினியை போன்று பா.ஜ.க.வின் முக்கிய தலைவரான ரவிசங்கர் பிரசாத் ரேவந்த் ரெட்டியின் கருத்தை, "பொறுப்பற்ற, வெட்கக்கேடான, நாட்டு மக்களை பிரிக்க முயற்சிக்கும் கருத்து" என விமர்சித்துள்ளார்.

    ரேவந்த் ரெட்டியின் கருத்திற்கு பல பா.ஜ.க. தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

    • இதுவரை இரு அவைகளிலிருந்தும் 141 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்
    • எம்.பி.க்கள் வெளியேற்றம் ஏன் என மக்கள் புரிந்து கொள்வார்கள் என பா.ஜ.க. தெரிவித்துள்ளது

    நடப்பு பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில், டிசம்பர் 13 அன்று மக்களவைக்கு உள்ளேயும், பாராளுமன்ற வளாகத்திலும் நடந்த பாதுகாப்பு குறைபாடு குறித்து அவையில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கமளிக்க வேண்டும் என்றும் இது குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்றும் கோரி எதிர்கட்சி உறுப்பினர்கள் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டனர்.

    தொடர்ந்து, அவையில் கண்ணிய குறைவாக நடந்து கொண்டதாக எதிர்கட்சி எம்.பி.க்கள் 141 பேர் இதுவரை "சஸ்பெண்ட்" செய்யப்பட்டுள்ளனர்.

    இந்த நடவடிக்கையை கண்டித்து எதிர்கட்சி எம்.பி.க்கள் அவைக்கு வெளியே வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    புதிய பாராளுமன்றத்தின் "மகர் த்வார்" வாயிலில் உள்ள படிக்கட்டுகளில் அவர்கள் அமர்ந்து கோஷங்களை எழுப்பினர்.

    அப்போது மேற்கு வங்க செரம்போரே (Serampore) தொகுதியை சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சி (TMC) மக்களவை உறுப்பினர் கல்யாண் பேனர்ஜி (Kalyan Banerjee) மாநிங்களவை தலைவரும், துணை ஜனாதிபதியுமான ஜக்தீப் தங்கர் (Vice president Jagdeep Dhankhar) பேசுவதை போல் மிமிக்ரி செய்து நடித்து காண்பித்தார். அத்துடன் அவர், "எனது முதுகெலும்பு நேராக உள்ளது. நான் மிக உயர்ந்து இருக்கிறேன்" என கூறினார். உடலசைவகளையும் துணை ஜனாதிபதியை போலவே செய்து காட்டினார்.

    நகைச்சுவையாக அவர் மிமிக்ரி செய்ததை பல எம்.பி.க்கள் ரசித்தனர்; சிலர் தங்கள் மொபைல் போனில் வீடியோ பதிவும் செய்தனர்.

    காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் ராகுல் காந்தியும் இதனை தனது போனில் பதிவு செய்தார்.

    இச்சம்பவம் குறித்த வீடியோவும் சமூக வலைதளங்களில் பரவியது.

    மீண்டும் பாராளுமன்றம் மதியம் கூடிய போது ராகுலின் இந்த நடவடிக்கை குறித்து, "மாநிலங்களவை தலைவர் பதவியும் சபாநாயகர் பதவியும் வெவ்வேறானவை. அரசியல் கட்சிகளுக்குள் பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், உங்கள் கட்சியின் (காங்கிரஸ்) மூத்த தலைவர் மற்றொரு கட்சியின் உறுப்பினரின் நடத்தையை வீடியோ எடுக்கிறார். மக்களவை தலைவரை மிமிக்ரி செய்வது எவ்வளவு அபத்தமானது? எவ்வளவு வெட்கக்கேடானது? இதை ஒருக்காலும் ஒப்பு கொள்ள முடியாது" என ஜக்தீப் தங்கர் தெரிவித்தார்.

    இந்நிலையில், பா.ஜ.க. தனது அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கில், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.யின் நடவடிக்கையையும், அதன் தலைவர் மம்தா பானர்ஜியையும், ராகுல் காந்தியையும் விமர்சித்து, "எம்.பி.க்கள் ஏன் வெளியேற்றப்பட்டார்கள் என நாட்டு மக்கள் இப்போது புரிந்து கொள்வார்கள்" என பதிவிட்டுள்ளது.


    ×