என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "International Women's Day"
- அதிக பணம் கொடுத்தால் சூப்பர் Fast டெலிவரி என்ற புதிய அம்சத்தை அறிமுகம் செய்வதற்கான சோதனை முயற்சியில் ஈடுபட்டுள்ளது
- சோமேட்டோ நிறுவனம் ஒவ்வொரு ஆர்டருக்கும் உண்டான Platform Fee எனப்படும் கட்டணத்தையும் ₹5 ஆக உயர்த்துகிறது
ஆன்லைன் உணவு நிறுவனமான சோமேட்டோ, கூடுதல் தொகை செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு விரைவாக உணவை டெலிவரி செய்யும் வகையில் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தவுள்ளது.
இதற்கான சோதனை முயற்சியில் சொமேட்டோ நிறுவனம் ஈடுபட்டுள்ளது. முதல்கட்டமாக மும்பை, பெங்களூரு போன்ற நகரங்களில் இந்த சோதனை முயற்சி நடைபெறவுள்ளது.
மேலும், சோமேட்டோ நிறுவனம் ஒவ்வொரு ஆர்டருக்கும் உண்டான தனது பிளாட்பார்ம் கட்டணத்தை 25% உயர்த்தியுள்ளது, இதன்படி ஒவ்வொரு ஆர்டருக்கும் கூடுதலாக 5 ரூபாய் வசூலிக்கப்படும். இந்த மாற்றம் டெல்லி, பெங்களூரு, மும்பை, ஹைதராபாத் மற்றும் லக்னோ போன்ற முக்கிய நகரங்களில் தற்போது அமலாகியுள்ளது.
பிளாட்ஃபார்ம் கட்டணம் என்பது டெலிவரி கட்டணத்திற்கு மேல் வசூலிக்கப்படும் கூடுதல் கட்டணமாகும். 2023 ஆகஸ்ட் மாதத்தில் 2 ரூபாயாக அறிமுகப்படுத்தப்பட்ட பிளாட்பாரம் கட்டணம் தற்போது 5 ரூபாயாக உயர்ந்துள்ளது.
- பல பெண்களுக்கு டீ சர்ட் அணிவது அசௌகரியத்தை ஏற்படுத்துவதாக எங்களிடம் தெரிவித்தனர்
- சொமேட்டோவின் சுடிதார் சீருடையை அணிந்த பெண்களின் வீடியோவை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.
ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான சொமேட்டோ, தனது பெண் ஊழியர்களுக்கு டீ சர்ட்டுக்கு பதிலாக, சுடிதாரை சீருடையாக மாற்றி அமைத்துள்ளது.
சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி பெண்களுக்கு இந்த புதிய சீருடையை சொமேட்டோ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
எங்கள் நிறுவனத்தில் வேலை செய்யும் பல பெண்களுக்கு டீ சர்ட் அணிவது அசௌகரியத்தை ஏற்படுத்துவதாக எங்களிடம் தெரிவித்தனர். ஆதலால் தான் நாங்கள் பெண்களுக்கான சீருடையை மாற்றுள்ளோம் என்று சொமேட்டோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
சொமேட்டோவின் சுடிதார் சீருடையை அணிந்த பெண்களின் வீடியோவை அந்நிறுவனம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
- மார்ச் 8, பல நாடுகளில் விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது
- ஐ.நா. பொதுச்சபை மார்ச் 8 தேதியை சர்வதேச மகளிர் தினமாக பிரகடனப்படுத்தியது
1914 மார்ச் 8 அன்று முதல்முதலாக ஜெர்மனியில் சர்வதேச பெண்கள் தினம் என கொண்டாடப்பட்டது. அந்த சந்திப்பில், ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் வாக்குரிமை பெற பல வருடங்களாக நடைபெற்ற போராட்டங்கள் வெற்றி பெற்றதை தொடர்ந்து நடந்த கலந்துரையாடல்களில், மார்ச் 8 எனும் தேதியை சர்வதேச மகளிர் தினமாக கொண்டாட முடிவெடுக்கப்பட்டது.
1975ல் ஐக்கிய நாடுகளின் (UN) சபை, மார்ச் 8 அன்று சர்வதேச பெண்கள் தினத்தை கொண்டாடியது.
1977ல் ஐ.நா. பொதுச்சபை (UN General Assembly) தனது உறுப்பினர் நாடுகளுக்கு மார்ச் 8 தேதியை அதிகாரபூர்வமாக சர்வதேச மகளிர் தினமாக பிரகடனப்படுத்தியது.
2024 சர்வதேச மகளிர் தின கருப்பொருளாக, "பெண் இனத்தில் முதலீடு செய்யுங்கள் – வளர்ச்சியை துரிதப்படுத்துங்கள்" (Invest In Women: Accelerate Progress) என்றும் பிரச்சார கருப்பொருள் (campaign theme) "இணைப்பதை ஊக்குவியுங்கள்" (Inspire Inclusion) என்றும் ஐ.நா. அறிவித்தது.
பெண்கள் பொருளாதார ரீதியாக தன்னிறைவு பெறாமல் இருப்பதையும், தன்னிறைவு காண்பதில் உள்ள சிக்கல்களையும், சவால்களையும் களையும் விதமாக இந்த கருப்பொருள் உருவாக்கப்பட்டது.
அனைத்து துறைகளிலும் ஆண்களுக்கு நிகராக பெண்கள் பங்கேற்பதையும், முடிவுகளை எடுப்பதில் சமமான வாய்ப்பளிப்பதை ஊக்குவிப்பதன் மூலமும், ஒரு வலுவான சமுதாய கட்டமைப்பை நாம் உருவாக்க முடியும்.
சமூக, பொருளாதார, கலாச்சார மற்றும் அரசியல் சார்ந்த அனைத்து அம்சங்களிலும் பெண்களின் சாதனைகள் இந்நாளில் பிரசாரம் செய்யப்படும்.
சர்வதேச அளவில் அரசியலில் சிரிமாவோ பண்டாரநாயகே (இலங்கை), இந்திரா காந்தி (இந்தியா), பெனாசிர் பூட்டோ (பாகிஸ்தான்), ஷேக் ஹசினா (வங்காளம் தேசம்), மார்கரெட் தாட்சர் (இங்கிலாந்து) போன்ற பெரும் தலைவர்கள் பல போராட்டங்களை கடந்து வெற்றி பெற்றனர்.
முதல்முதலாக ரசாயன துறையில் மேரி கியூரி, உலக புகழ் பெற்ற நோபல் பரிசு (Nobel Prize) வென்றதற்கு பிறகு 60க்கும் மேற்பட்ட பெண்கள் நோபல் பரிசு வென்றுள்ளனர்.
முழுக்க முழுக்க அறிவு சார்ந்த போட்டி என கருதப்படும் சதுரங்க (Chess) விளையாட்டில் நோனா கப்ரின்டாஷ்வில்லி எனும் ஜார்ஜியா நாட்டை சேர்ந்தவர் கிராண்ட்மாஸ்டர் பட்டம் வென்றதை தொடர்ந்து 41 பெண்கள் கிராண்ட்மாஸ்டர் பட்டம் வென்றுள்ளனர்.
மருத்துவ துறையில் 1960ல் டாக்டர் நினா ப்ரான்வால்ட் முதல் முதலாக இருதய அறுவை சிகிச்சை செய்து புகழ் பெற்றார். அவரை தொடர்ந்து தற்போது வரை பல பெண்கள் மருத்துவ துறையின் பல பிரிவுகளிலும் வியத்தகு சாதனை புரிந்து வருகின்றனர்.
ஆண்களுக்கு எந்த வகையிலும் பெண்கள் சளைத்தவர்கள் அல்ல என நாளுக்கு நாள் பெண்கள் நிரூபித்து வரும் நிலையில், சர்வதேச மகளிர் தினமான இன்று, பெண்களின் ஆற்றலை மதிக்கும் சமுதாயத்தை உருவாக்க நாம் அனைவரும் உறுதி ஏற்போம்.
- சர்வதேச மகளிர் தினம் நாளை கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு ஜனாதிபதி வாழ்த்து தெரிவித்தார்.
- அனைத்துத் துறைகளிலும் பெண்கள் புதிய சாதனைகளை படைத்து வருகின்றனர் என்றார்.
புதுடெல்லி:
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ம் தேதி 'சர்வதேச மகளிர் தினம்' கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில், சர்வதேச மகளிர் தினம் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஜனாதிபதி முர்மு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளதாவது:
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு எனது சக குடிமக்கள் அனைவருக்கும், குறிப்பாக பெண்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பாலின சமத்துவம் மற்றும் பெண்கள் உரிமைகள் குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதில் பெண்களின் சாதனைகள் மற்றும் அவர்களின் முயற்சிகளை அங்கீகரிக்க இந்த நாள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
பெண்களுக்கு சமமான வாய்ப்புகளை வழங்குவதன் அவசியத்தை வலியுறுத்துவதற்கும், வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் அவர்களை வலுப்படுத்துவதற்கும் இது ஒரு முக்கியமான சந்தர்ப்பமாகும். இன்றும் பெண்கள் பல சவால்களை எதிர்கொள்கின்றனர், அதை நாம் தீர்க்க வேண்டும்.
அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம், விண்வெளி, ஆயுதப்படை மற்றும் விளையாட்டு என அனைத்துத் துறைகளிலும் பெண்கள் புதிய சாதனைகளை படைத்து வருகின்றனர். பெண்களின் சக்தி மற்றும் தலைமைத்துவத்தின் அடையாளமாக இந்த ஆண்டு நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பை நாம் கண்டோம்.
மகளிர் தின கொண்டாட்டங்கள் சிறப்பாக நடைபெறவும், அனைத்துப் பெண்களின் ஒளிமயமான எதிர்காலத்திற்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
- இந்தியா உள்பட உலகெங்கும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.
- மார்ச்-8 பெண்கள் தினமாக 1909-ம் ஆண்டு அறிவித்தது அமெரிக்க சோசலிஸ்ட் கட்சி.
வருகிற 8-ந் தேதி, இந்தியா உள்பட உலகெங்கும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. ஆனால் இந்த நாள் பிறந்ததோ, போராட்டத்தில். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 1908-ம் ஆண்டு மார்ச் 8-ந் தேதி, உழைக்கும் பெண்கள் 15 ஆயிரம் பேர் திரண்டு ஒரு மாபெரும் பேரணியை நடத்தினர். வேலை நேரத்தை குறைக்கவும், கூலியை உயர்த்தவும் வலியுறுத்தியும், வாக்களிக்கும் உரிமை கோரியும் இந்த பேரணி நடத்தப்பட்டது.
இந்த நாளை தேசிய பெண்கள் தினமாக 1909-ம் ஆண்டு அறிவித்தது அமெரிக்க சோசலிஸ்ட் கட்சி. இத்தினத்தை சர்வதேச மகளிர் தினமாக கடைப்பிடிக்க வேண்டும் என்ற யோசனையை முன்வைத்தவர் கிளாரா ஜெட்கின் என்ற அம்மையார். டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் 1910-ம் ஆண்டு நடந்த உழைக்கும் பெண்களின் சர்வதேச மாநாட்டில் இந்த யோசனையை தெரிவித்தார் அவர். அந்த மாநாட்டில் 17 நாடுகளைச் சேர்ந்த 100 பெண்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
அதையடுத்து 1911-ம் ஆண்டு முதல் ஆஸ்திரியா, டென்மார்க், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது. அதை அடிப்படையாகக் கொண்டே கடந்த 2011-ம் ஆண்டு நூறாவது சர்வ தேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. ஆனால் 1975-ம் ஆண்டில்தான் ஐக்கிய நாடுகள் சபை. மார்ச் 8-ந் தேதியை சர்வதேச மகளிர் தினமாக முறைப்படி அறிவித்து கொண்டாடத் தொடங்கியது.
அத்துடன் ஒவ்வோர் ஆண்டின் பெண்கள் தினத்துக்கும் ஒரு முழக்கத்தையும் முன்வைத்து வருகிறது ஐ.நா. சமூகம், அரசியல், பொருளாதாரம் போன்ற துறைகளில் பெண்கள் அடைந்துள்ள முன்னேற்றத்தை கொண்டாடும் இந்த நாள், பெண்கள் சாதிக்க வேண்டிய, எதிர்கொள்ள வேண்டிய சவால்களை நினைவுபடுத்தும் நாளாகவும் அமைந்திருக்கிறது.
சர்வதேச பெண்கள் தினம் ரஷியா உள்ளிட்ட பல நாடுகளில் தேசிய விடுமுறை நாளாக உள்ளது. இந்த நாடுகளில் பெண்கள் தினத்தை யொட்டி சில நாட்களுக்கு பூக்கள் விற்பனை இருமடங்காக களை கட்டுகிறது. சீனாவில் பல இடங்களில் மார்ச் 8 அன்று பெண் ஊழியர்களுக்கு அரை நாள் விடுமுறை அளிக்கப்படுகிறது.
இத்தாலியில் பெண்கள் தினத்தில் மிமோசா பூக்களை வழங்கும் வழக்கம் உள்ளது. அமெரிக்காவில் மார்ச் மாதம் பெண்கள் வரலாற்று மாதமாக கொண்டாடப்படுகிறது. அமெரிக்கப் பெண்களின் சாதனையை கவுரவப்படுத்தி ஒவ்வோர் ஆண்டும் அமெரிக்க அதிபர் இந்த மாதத்தில் ஒரு பிரகடனத்தை வெளியிடுகிறார்.
சமூகத்தின் சரிபாதியாய் உள்ள பெண்கள்தான், ஆண்களுடன் இந்த உலகத்தை நகர்த்தும் இரு சக்கரங்களில் ஒன்றாக உள்ளனர். அவர்களைப் போற்றும் பெண்கள் தினம் பெருமைக்குரியதே.
- பெண்களின் தனித்துவத்தை எடுத்துரைத்து பேசினார்
- 200-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி டவுன் அரசு மகளிர் மேல்நிலை பள்ளி கூட்ட அரங்கில் உலக பெண்கள் தினம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியை தாமரை செல்வி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக நியாட் இன்ஸ்டியூட் ஆப் அட்வான்ஸ் டெக்னிக்கல் டிரைனிங்கின் நிர்வாக தலைவர் வினோத்குமார் கலந்து கொண்டு பெண்களின் தனித்துவத்தை எடுத்துரைத்து பேசினார்.
நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியைகள் மகேஷ்வரி, வசந்தா, தமிழரசி மற்றும் 200-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.
- இந்தியாவில் இப்போது தேர்தல் முடிவை நிர்ணயிக்கும் சக்தியாகவும் பெண்கள் மாறி வருகிறார்கள்.
- பீகார், ஒடிசா, உத்தரபிரசேதம் போன்ற மாநிலங்களிலும் தேர்தலில் வாக்களிக்கும் பெண்களின் பங்கு கணிசமாக அதிகரித்து வருகிறது.
இன்று உலக மகளிர் தினம்.
ஆணுக்கு பெண் நிகரென்று கூறும் காலம் வரும் என 50 ஆண்டுகளுக்கு முன்பு கூறியிருந்தால் அதனை பெண்கள் கூட நம்பி இருக்கமாட்டார்கள்.
ஆனால் இப்போது ஆணுக்கு சரிநிகர் சமமாக அனைத்து பணிகளிலும் பெண்களும் ஈடுபட்டு அசத்துகிறார்கள். ஏர் முனை தொடங்கி போர் முனை வரையிலும் பெண்கள் கால் பதிக்காத இடமே இல்லை என்று கூறிவிடலாம். அந்த அளவுக்கு சமூகத்திலும், குடும்பத்திலும் பெண்களின் பங்களிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
தமிழ்நாடு மற்றும் கேரளாவில் பள்ளி கல்வியில் முதலிடம் பிடிப்போர் பெண்களாகவே உள்ளனர். கற்போர் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. அதுமட்டுமின்றி சமூக பங்களிப்பிலும் பெண்களின் ஆர்வம் அதிகரித்துள்ளது.
இது எந்த அளவுக்கு உள்ளது என்பது குறித்து சமீபத்தில் சில ஆய்வுகள் நடத்தப்பட்டன. அந்த ஆய்வின் முடிவுகள் ஆச்சரியத்தையும், அதிசயத்தையும் ஏற்படுத்தியதோடு பெண்மையின் மாண்பை உயர்த்துவதாகவும் அமைந்தது.
குறிப்பாக இந்திய அளவில் பெண்கள் தான் அதிக அளவில் உடல் உறுப்பு தானம் செய்கிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா?
நம்பித்தான் ஆகவேண்டும் என்கிறது மும்பையை சேர்ந்த பிரபல தனியார் மருத்துவமனை நடத்திய ஆய்வு முடிவுகள். நோயுடன் போராடும் உறவுகளுக்கு உடல் உறுப்புகளை தானம் செய்ய முதலில் முன்வருவது பெண்கள் என்று கூறிய மருத்துவமனை நிர்வாகம் உறுப்பு தானம் செய்த 986 பேரில் 672 பேர் பெண்கள் என்பதை கண்டறிந்தது.
இது 68 சதவீதம் ஆகும். அதாவது 10 பேர் உடல் உறுப்பு தானம் செய்தால் அதில் 7 பேர் பெண்கள் என்று தெரியவந்துள்ளது. உடல் உறுப்பு தானம் செய்தவர்களில் 35 சதவீதம் பேர் தங்களின் சிறுநீரகங்கள் அல்லது கல்லீரலில் ஒன்றை தானம் செய்துள்ளனர்.
இதில் 33 சதவீதம் பேர் தங்கள் பெற்றோருக்கு அல்லது உடன்பிறப்புகளுக்கு உறுப்பு தானம் செய்துள்ளனர். 30 பேர் குழந்தைகளுக்கும் 2 சதவீதம் பெண்கள் தங்கள் மாமியாருக்கும் உறுப்பு தானம் செய்துள்ளனர்.
குடும்பத்தை தாங்கும் பெண்கள் உடல் உறுப்பு தானத்திலும் முன்னிலை வகிப்பது சமூகத்தில் அவர்களின் பங்கையும், குடும்பத்தின் மீது அவர்கள் காட்டும் பாசத்தையும் வெளிப்படுத்துவதாக உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
இதுபோல இந்தியாவில் இப்போது தேர்தல் முடிவை நிர்ணயிக்கும் சக்தியாகவும் பெண்கள் மாறி வருகிறார்கள். இதுபற்றிய ஆய்வும் தேர்தல் பார்வையாளர்களை அதிசயிக்க வைத்துள்ளது.
இந்தியாவில் ஆரம்ப காலத்தில் தேர்தல் நடந்த போது அதில் பெண்களின் பங்களிப்பு குறைவாகவே இருந்தது. காலப்போக்கில் அவர்களும் அரசியலில் பங்கேற்க தொடங்கிய பின்னர், தேர்தலில் வாக்களிக்கும் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது. இப்போது அவர்கள்தான் பல தொகுதிகளில் தேர்தல் முடிவை நிர்ணயிக்கும் சக்தியாக மாறியுள்ளனர்.
30 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் வாக்கு சாவடிகளுக்கு சென்று வாக்களிக்கும் பெண்கள் 4.4 சதவீதமாக இருந்தனர். இது அடுத்து வந்த தேர்தல்களில் கொஞ்சம், கொஞ்சமாக அதிகரிக்க தொடங்கியது.
இதுபோல பாராளுமன்றத்தில் பெண் எம்.பி.க்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. 1989-ல் 5.5 சதவீதமாக இருந்த எம்.பி.க்கள் எண்ணிக்கை 2019-ல் 14 சதவீதம் அதிகரித்து உள்ளது.
பீகார், ஒடிசா, உத்தரபிரசேதம் போன்ற மாநிலங்களிலும் தேர்தலில் வாக்களிக்கும் பெண்களின் பங்கு கணிசமாக அதிகரித்து வருகிறது. சமீபத்தில் இங்கு நடந்த சட்டசபை தேர்தல் முடிவுகள் குறித்து ஆய்வு செய்த போது அதில் பெண்களின் பங்கு அதிகரித்து இருப்பது தெரியவந்தது.
இப்படி சமூகம், குடும்பம், அரசியல் என பல துறைகளிலும் பெண்களின் பங்களிப்பு அதிகரித்து வருவதை ஆய்வுகள் உறுதி செய்திருப்பது பெண் ஆர்வலர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதனிடையே, இந்தியாவில் உள்ள ஜெயில்களில் பெண் கைதிகளுக்கு மாதவிடாய் காலத்தில் போதிய பாதுகாப்பு இல்லை என்ற அதிர்ச்சி தகவலும் ஆய்வில் அதிர்ச்சி தெரியவந்துள்ளது.
இந்தியாவில் உள்ள சிறைகளில் சுமார் 22,918 பெண் கைதிகள் உள்ளனர். இவர்களில் 18 முதல் 30 வயதுக்கு உட்பட்ட பெண் கைதிகள் மட்டும் 31.3 சதவீதம் பேர் உள்ளனர்.
இந்த பெண் கைதிகளுக்கு அவர்களின் மாதவிடாய் காலத்தில் போதுமான வசதிகள் சிறைகளில் செய்து கொடுக்கப்பட்டுள்ளதா? என்பது பற்றி சமீபத்தில் ஒரு தன்னார்வ அமைப்பு ஆய்வு செய்தது. இதில் பெரும்பாலான சிறைகளில் பெண் கைதிகளுக்கு போதுமான சுகாதார வசதிகளும், பாதுகாப்பும் இல்லை என்பது தெரியவந்துள்ளது.
- கூகுள் நிறுவனம் ஒவ்வொரு சிறப்பு தினத்திற்கும் டூடுல் வெளியிடுவது குறிப்பிடத்தக்கது.
- சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இன்று சிறப்பு டூடுலை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
வாஷிங்டன்:
அமெரிக்காவைச் சேர்ந்த கூகுள் நிறுவனம் ஒவ்வொரு சிறப்பு தினத்திற்கும் டூடுல் வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
உலகம் முழுவதும் சர்வதேச மகளிர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையடுத்து சிறப்பு டூடுலை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
உலகின் பல நாடுகளில் வாழும் பல்வேறு கலாசாரத்தைச் சேர்ந்த பெண்களைக் குறிப்பிடும் வகையில் இந்த சிறப்பு டூடுல் அமைந்துள்ளது.
மருத்துவம், விண்வெளி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றி வரும் பெண்களை குறிக்கும் வகையிலான காட்சிகள் இந்த டூடுலில் இடம்பெற்றுள்ளன.
- ஒடிசாவை சேர்ந்த சுதா்சன் பட்நாயக் பிரபல மணல் சிற்ப கலைஞா்.
- மகளிர் தினத்தை முன்னிட்டு மணல் சிற்பம் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புவனேஷ்வர்:
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் சுதர்சன் பட்நாயக். இவர் சிறந்த மணல் சிற்ப கலைஞராவார். உலகில் நடந்து வரும் அனைத்து விஷயங்கள் தொடர்பாக தனது கருத்தை தயங்காமல் தெரிவித்து வருபவர். எந்த விஷயமானாலும் அது தொடர்பாக ஒடிசா கடற்கரையில் மணல் சிற்பங்களை வரைந்து வருபவர். பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.
இதற்கிடையே, உலகம் முழுவதும் மார்ச் மாதம் 8ம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. அந்த அடிப்படையில் இன்று மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. அரசியல் கட்சி தலைவா்கள், முக்கிய பிரமுகா்கள் என பலரும் சர்வதேச மகளிர் தின வாழ்த்துகளை தொிவித்து வருகின்றனா்.
இந்நிலையில், சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மணல் சிற்ப கலைஞா் சுதா்சன் பட்நாயக், பூரி கடற்கரையில் மணல் சிற்பம் வரைந்து மகளிர் தின வாழ்த்தை தொிவித்துள்ளாா்.
- 4-வது ஆண்டு விருது வழங்கும் விழா நடைபெற்றது.
- விழாவில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த 26 சாதனை பெண்கள் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
திருப்பூர் :
திருப்பூர் இந்திரா சுந்தரம் அறக்கட்டளை சார்பில் அதன் நிறுவனத் தலைவர் இந்திரா சுந்தரம் ஆண்டுதோறும் உலக மகளிர் தினத்தையொட்டி பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெண்களை கவுரவித்து, அவர்களுக்கு விருதுகள் வழங்கி வருகிறார். அதன்படி 4-வது ஆண்டு விருது வழங்கும் விழா மகா திறன் மங்கை என்ற தலைப்பில் திருப்பூர் ராயபுரத்தில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது.
அறக்கட்டளை நிறுவனத்தலைவர் இந்திரா சுந்தரம் தலைமை தாங்கினார். மாநகர தெற்கு போலீஸ் துணை கமிஷனர் வனிதா, அவினாசி கோட்டக்கலால் அலுவலர் ராகவி, பல்லடம் அரசு கல்லூரி ஆங்கிலத்துறை தலைவர் கிருஷ்ணவேணி ஆகியோர் தலைமை விருந்தினர்களாகவும், கிட்ஸ் கிளப் கல்வி நிறுவனங்களின் தலைவர் மோகன் கார்த்திக், நடிகர் அருண்குமார் ராஜன் ஆகியோர் கவுரவ விருந்தினர்களாகவும் கலந்துகொண்டனர். விழாவில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த 26 சாதனை பெண்கள் மற்றும் யாருடைய உதவியும் இன்றி தானாகவே படித்து, முயற்சி செய்து தற்போது கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றி வரும் திருநங்கை சமீரா ஆகியோருக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
இதில் மணியம் எலக்ட்ரிக்கல்ஸ் முத்துசாமி, அருண்குமார், மனோரஞ்சிதம், மாணிக்கவாசகம், திவ்யா, அறக்கட்டளை செயலாளர் ராஜா முகம்மது, நிர்வாகிகள் கண்ணாம்பாள், சதீஷ்குமார், சுரேஷ், மலர், புவனேஷ்வரி உள்பட அரசு அதிகாரிகள், தொழிலதிபர்கள், சமூக ஆர்வலர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். முன்னதாக மணியம் எலக்ட்ரிக்கல்ஸ் நிறுவனர் சுந்தரம் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்–டது.
கொடைக்கானலில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கோடை குறிஞ்சி பெண்கள் அமைப்பு சார்பாக பூரண மதுவிலக்கை அமுல்படுத்த கோரி வட்டாச்சியர் அலுவலகத்திலிருந்து டாக்டர் சிவந்திஆதித்தினார் திருமணமண்டபம் வரை பெண்கள் அமைப்பினர் ஊர்வலமாக சென்றனர்.
அதன் பின் கருத்தரங்கம் நடைபெற்றது. பூம்பாறை கிராம நிர்வாக அலுவலர் செல்வராணி குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். கருத்தரங்கில் மகளிர் தினம் எப்படி உருவானது எப்போது அறிவிக்கப்பட்டது என்பது குறித்த விளக்கத்தை பெண்களுக்கு எடுத்துரைத்தனர்.
மேலும் பெண்களை காட்சி பொருளை பார்க்காமல் பெண்களை ஆண்கள் மதிக்கவேண்டும்.பெண்கள் வீட்டில் டிவி நாடகங்கள் பார்ப்பதை தவிர்க்க வேண்டும். பெண்கள் பெண்களை மதிக்க வேண்டும் என எடுத்துரைக்கப்பட்டது.மதுவினால் குடும்பப் பெண்கள் அதிகமான இடையூறுகளை சந்திப்பதால் பூரண மதுவிலக்கை அமுல்படுத்த வேண்டும் என்று இந்நாளில் கோரிக்கை வைப்பதாகக் கூறிப் பேசினர். நிகழ்ச்சியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் அமைப்பினர் கலந்து கொண்டனர். #tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்