என் மலர்
நீங்கள் தேடியது "Jallikattu"
- எம்.காம் பட்டதாரியான மகேஸ் பாண்டியன், சீனாவில் பணியில் உள்ளார்.
- பொங்கல் விடுமுறைக்காக ஊருக்கு வந்தவர், இன்று மாடுமுட்டி உயிரிழந்தார்.
சீனாவில் இருந்து விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வந்த இளைஞர், மதுரை அலங்காநல்லூரில் நடந்த ஜல்லிக்கட்டில் மாடு முட்டி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாடு முட்டியதில் உயிரிழந்த மகேஸ் பாண்டியன் (22), எம்.காம் படித்து விட்டு சீனாவில் வேலையில் இருந்துள்ளார். பொங்கல் விடுமுறைக்காக ஊருக்கு வந்தவர் ஏறுதழுவுதல் அரங்கில் நடந்த ஜல்லிக்கட்டில் பங்கேற்றுள்ளார்.
அப்போது மாடு முட்டியதில் நுரையீரலில் பலத்த காயமடைந்த மகேஸ் பாண்டியன் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
- ஜல்லிக்கட்டு தொடர்ந்து நடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்-பா.ஜனதா வலியுறுத்தி உள்ளது.
- இதில் மத்திய அரசு கவனம் செலுத்தி ஜல்லிகட்டு தடைபடாமல் தொடர்ந்து நடைபெற வழிவகை செய்ய வேண்டும்.
வாடிப்பட்டி
பா.ஜ.க. மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் ராமசீனிவாசன் டெல்லியில் மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன், எல்.முருகன் ஆகியோரை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தார்.அதில் கூறியிருப்பதாவது:- தமிழக அரசு பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு எதிரான மனநிலையில் செயல்படுகிறது. தமிழகத்தில் பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுப்ரீம் கோர்ட்டில் ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கு விசாரனைக்கு வர உள்ளது. இந்த வழக்கை தமிழக அரசு சரிவர கையாளவில்லை. இந்த நிலை தொடர்ந்தால் மீண்டும் ஜல்லிகட்டுக்கு தடை விதிக்கப்படலாம். இதில் மத்திய அரசு கவனம் செலுத்தி ஜல்லிகட்டு தடைபடாமல் தொடர்ந்து நடைபெற வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. அப்போது கே.ஆர்.முரளி ராமசாமி, மாணிக்கம், நடராஜன், சிவகுருநாதன் ஆகியோர் உடனிருந்தனர். அதன்பின் பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் நடந்த தகவல் தொழில் நுட்ப பிரிவு பயிற்சி கருத்தரங்கில் பங்கேற்ற தேசிய தலைவர் நட்டா, பேராசியர் ராமசீனிவாசனை திண்டுக்கல் மாவட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்ட நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தியதற்காக வாழ்த்து தெரிவித்தார்.
- ஜல்லிக்கட்டுக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை 29ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பு
- ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் அவசர சட்டம் ஒருதலைப்பட்சமானது என மனுதாரர் தரப்பு வாதம்
புதுடெல்லி:
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கும் தமிழக அரசின் அவசர சட்டத்தை எதிர்த்து பீட்டா உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன. இந்த மனுக்கள் இன்று உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, பீட்டா உள்ளிட்ட மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சித்தார்த் லூத்ரா வாதாடும்போது, உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றியபோது எழுப்பிய கேள்விகளை பட்டியலிட்டார். ஜல்லிக்கட்டு பாரம்பரியமான விளையாட்டு என்று கூறும்போது, இதற்காக அரசியல் சட்ட அங்கீகாரம் உள்ளதா? என்றும், இந்த சட்டப்பிரிவு குறிப்பாக ஜல்லிக்கட்டுக்கு பொருந்துமா? அல்லது ஜல்லிக்கட்டு தமிழகத்தின் பண்பாடுதானா? ஆகிய கேள்விகளை நினைவுகூர்ந்தார். ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் அவசர சட்டம் ஒருதலைப்பட்சமானது, கர்நாடகா, மகாராஷ்டிரா, தமிழகத்தில் இயற்றப்பட்ட அவரச சட்டங்கள் விலங்குவதையை தடுக்கவில்லை என்றும் வாதிட்டார்.
அப்போது நீதிபதிகள் பல சுவாரஸ்யமான கேள்விகளை எழுப்பினர். கொசு போன்ற பூச்சியினங்கள் உங்களை கடிக்க வரும்போது, அதை அடித்து கொன்றால், விலங்கு வதை தடுப்பு சட்டத்தின் கீழ் வருமா? என கேட்டனர். ஜூடோ போன்ற விளையாட்டுகளில் மனிதர்கள் இறப்பது குறித்து என்ன கூறுவீர்கள்? என்றும் கேட்டனர்.
இதற்கு பதிலளித்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், ஜூடோ போன்ற விளையாட்டுகளில் காயங்கள் ஏற்படும் என தெரிந்துதான் பங்கேற்கிறோம் என்றார். விளையாட்டில் பங்கேற்பதா? வேண்டாமா? என்பது தேர்வைப் பொருத்து அமைவதாகவும் அவர் கூறினார்.
விலங்குகளுக்கு அதுபோன்று தேர்வு இல்லாமல் போகும்போது அவற்றுக்கு தன்னுரிமை உள்ளதா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
ஜல்லிக்கட்டில் 11 லட்சம் காளைகள் பங்கேற்றன. சில புகைப்படங்களை கொண்டு எந்தவித முன்முடிவுக்கும் வரக்கூடாது என தமிழக அரசு தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதிகள், வழக்கின் விசாரணையை வரும் 29ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்களில் மட்டுமே செயல்படும் என்பதால், அடுத்த செவ்வாய்க்கிழமைக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. அன்றைய தினம் தொடர்ந்து வாதம் நடைபெறும்.
- அலகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நலச்சங்கத்தின் செயற்குழு கூட்டம் ஜல்லிக்கட்டு தலைவர் தோட்டத்தில் நடைபெற்றது.
- டிசம்பர் 18-ந் தேதி கால்கோள் விழாவை சிறப்பாக நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது.
பல்லடம் :
திருப்பூர் மாவட்டம் அலகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நலச்சங்கத்தின் செயற்குழு கூட்டம் ஜல்லிக்கட்டு தலைவர் தோட்டத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஜல்லிக்கட்டு காளைகள் நல சங்கத்தின் தலைவர் பழனிசாமி தலைமை தாங்கினார். முன்னாள் ஒன்றிய குழு தலைவர் சிவாசலம், சங்கத்தின் செயலாளர் சத்தியமூர்த்தி, பொருளாளர் சுப்ரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
ஜல்லிக்கட்டு காளைகள் நல சங்கத்தின் சார்பில் அடுத்த மாதம் டிசம்பர் 18-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கால்கோள் விழாவை சிறப்பாக நடத்துவது என்றும், அந்த கால்கோள் விழாவிற்கு தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் ராஜசேகரை அழைப்பது என்றும் ஒரு மனதாக முடிவெடுக்கப்பட்டது. மேலும் அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்களையும் அழைப்பது, தைப்பொங்கலையொட்டி ஜல்லிக்கட்டு போட்டியை அடுத்த ஆண்டு ஜனவரி 29-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) சிறப்பாக நடத்துவது என்றும் ஒருமனதாக கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
ஜல்லிக்கட்டு விழாவிற்கு தி.மு.க. இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலினை அழைப்பது, மேலும் செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களை அழைப்பது என்றும் ஒரு மனதாக தீர்மானிக்கப்பட்டது. கால் கோள் விழாவன்று காளைகளுக்கான முன்பதிவு தொடங்குவது என்றும், முதலில் உள்ளூர், மாவட்ட காளைகளுக்கு முன்னுரிமை கொடுப்பது என்றும் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
- ஜல்லிக்கட்டு காளைகளுக்கு தனியாக பயிற்சி அளிப்பதோடு, அந்த காளைகளை தங்கள் சொந்த குடும்ப உறுப்பினராகவே பாவிக்கின்றனர்.
- காளைகளுக்கு கொடுமை இழைக்கப்படுவதை அனுமதிக்க முடியாது.
புதுடெல்லி:
சுப்ரீம் கோர்ட்டில் ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு விசாரணை 3-வது நாளாக நடைபெற்று வருகிறது. இதில் பீட்டா அமைப்பு சார்பில் வக்கீல் சியாம் திவான் ஆஜராகி வாதாடினார். அவர் வாதாடுகையில், 'பாரம்பரிய காளை இனங்களை காப்பாற்றுவதற்காக தான் ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது என கூறுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இது ஜல்லிக்கட்டு காளைகளுக்கு இழைக்கப்படும் கொடூரம்' என்றார்.
இந்த நீதிமன்றம் முன்னர் ஜல்லிக்கட்டில் இருக்கும் நடைமுறைகளை கொடூரம் என்றதே தவிர, ஜல்லிக்கட்டு விளையாட்டே கொடூரமானது என கூறவில்லை.
மேலும் தற்போது ஜல்லிக்கட்டுக்கென சட்டம் உள்ளது, உரிய வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. எனவே அந்த விதிமுறைகளை மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை பாய்கிறது.
மேலும் தற்போது மனுதாரர் தரப்பு பல்வேறு விதிமீறல் அறிக்கைகளை சமர்பிக்கிறீர்கள். இது விதிமுறைகளை முறையாக கட்டாயம் அமல்படுத்துவதில் ஏற்பட்ட தவறு மட்டுமே. மேலும், ஜல்லிக்கட்டு காளைகள் என்பது திடீரென இந்த விளையாட்டில் பயன்படுத்தப்படுவதில்லை அதற்கான முறையான பயிற்சிகள் வழங்கப்பட்டு தனியாக தேர்ந்தெடுக்கப்பட்டு அவைதானே பயன்படுத்தப்படுகிறது.
நாய்களுக்கான போட்டிகள் நடத்தப்படுகிறது. அதை துன்புறுத்தலாக நாம் எடுத்துக் கொள்ள முடியுமா? இதற்காக நாய்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு அவை தானே பயன்படுத்தப்படுகிறது.
போட்டிகளில் பயன்படுத்தப்படும் விலங்குகளின் கண்களில் மிளகாய் பொடி தூவுதல் போன்றவை எல்லாம் தான் விலங்குகள் துன்புறுத்தலாக இருக்க முடியும். ஆனால், 1000 ஆண்டுகளாக காளைகளை வைத்து இத்தகைய போட்டிகள் நடத்தப்படுகிறது.
இந்தபோட்டிக்காக காளைகள் தனியாக பழக்கப்பட்டு வருகின்றன. ஜல்லிக்கட்டு காளைகளுக்கு தனியாக பயிற்சி அளிப்பதோடு, அந்த காளைகளை தங்கள் சொந்த குடும்ப உறுப்பினராகவே பாவிக்கின்றனர். ஆனால் காளைகளுக்கு கொடுமை இழைக்கப்படுவதை அனுமதிக்க முடியாது.
மேலும் தற்போது அவ்வாறான எந்த விதிமீறலும் நடைபெறுவதாக தெரியவில்லை. மேலும் இந்த போட்டிகளுக்கான விதிமுறை வகுக்கப்பட்டுள்ளதால் அதனை கட்டாயம் அமல்படுத்த வேண்டும்.
ஜல்லிக்கட்டு விவகாரத்தில் விதிகளை அமல்படுத்த வேண்டும் என்பதே முக்கியம். மேலும், ஜல்லிக்கட்டு நடைமுறையை மாற்ற வேண்டும் என்பது அல்ல.
இவ்வாறு நீதிபதிகள் கூறினார்கள்.
அதற்கு பீட்டா அமைப்பு சார்பில் வாதாடிய வக்கீல், 'ஏற்கனவே இந்த நீதிமன்றம் தனது தீர்ப்பின் மூலம் ஒரு பழக்கத்தை காட்டு மிராண்டித்தனம் என அறிவித்துவிட்டதால், அதனை மீண்டும் இந்த நீதிமன்றம் மாற்றி அமைக்கக் கூடாது.
இவ்வாறு விவாதம் நடந்தது.
- ஜல்லிக்கட்டு அனுமதிக்கு எதிராக பீட்டா என்ற அமைப்பு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.
- ஜல்லிக்கட்டு போட்டியை காண வருமாறு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளுக்கு தமிழக அரசு வக்கீல் அழைப்பு விடுத்துள்ளார்.
சென்னை:
பொங்கல் பண்டிகையொட்டி அடுத்த மாதம் (ஜனவரி) மதுரை அலங்காநல்லூர் உள்பட பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. இந்த ஜல்லிக்கட்டு அனுமதிக்கு எதிராக பீட்டா உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜல்லிக்கட்டுக்கு எதிரான அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்ற வாதத்தை தமிழக அரசு வைத்தது.
தமிழக அரசு வழக்கறிஞர் வாதாடும்போது, 'ஜல்லிக்கட்டு போட்டி என்பது ஒரு பொழுதுபோக்கு போட்டி இல்லை. காலம் காலமாக நடத்தப்படும் இந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கு பின்னால் நாட்டு மாடுகளின் இனவிருத்தி, கலாச்சாரம், பாரம்பரியம் உள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஒருமுறை தமிழ்நாட்டிற்கு வந்து ஜல்லிக்கட்டு போட்டியைக் காண வேண்டும். 18 மாதம் முதல் ஆறு வயதுக்குள் இருக்கும் நாட்டுமாட்டு காளைகள் மட்டுமே ஜல்லிக்கட்டு போட்டியில் களமிறக்கப்படும். அதன் பின்னர் வயது முதிர்ந்த காளை மாடுகளை வீட்டில் தங்கள் குடும்ப உறுப்பினராக வளர்ப்பார்கள். வெளிநாட்டில் இருப்பது போன்று காளை மாடுகளைக் கொல்லும் வழக்கம் தமிழ்நாட்டில் கிடையாது. ஜல்லிக்கட்டு காளைகளுக்கு, போட்டியில் பங்கு பெற சிறப்பு பயிற்சி தரப்படுகிறது. அதனை துன்புறுத்தல் என்று கூற முடியாது.' என குறிப்பிட்டார்.
தமிழ்நாடு அரசின் வாதத்தினை கேட்ட நீதிபதிகள், 'ஜல்லிக்கட்டில் காளை அவிழ்த்து விடப்படும்போது அதனை அடக்குவதாக பலர் காளை மீது பாய்கிறார்களே?' எனக் கேள்வி எழுப்பினர்.
அதற்கு, 'பலர் காளையை அடுக்குவதாக காளை மீது பாய்ந்தாலும் ஒருவர் காளையின் திமிலைப் பிடித்தவுடன் மற்றவர்கள் அந்த காளையை விட்டு விடுவார்கள். போட்டி நடக்கும்போது ஒருவர் மட்டுமே காளையைப் பிடிக்க வேண்டும் எனத் தொடர்ச்சியாக மைக்கில் அறிவித்துக் கொண்டே இருப்பார்கள். ஒருவேளை ஒரு காளையைப் பிடிக்க ஒருவருக்கு மேல் பலர் அந்த காளையின் மீது பாய்ந்தால், அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள். இந்த விதி போட்டியின்போது மிகக் கடுமையாக அமல்படுத்தப்பட்டு வருகிறது' என தமிழக அரசு வழக்கறிஞர் பதிலளித்தார்.
- ஜல்லிக்கட்டு பிரச்சினைக்கு தீர்வு காண நிரந்தரம் சட்டம் கொண்டு வந்தவர் மோடி என ஓ.பன்னீர் செல்வம் பேட்டியில் பேசினார்.
- தற்போது சில அமைப்புகள் சில சந்தேகங்களை எழுப்புகின்றனர்
அவனியாபுரம்
சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஜல்லிக்கட்டு பிரச்சினை வந்தபோது அன்று தமிழக அரசு சார்பில் முதல்வராக இருந்த நான், பிரதமர் மோடியை சந்தித்து பேசினேன். அவரின் உதவியால் ஜல்லிக்கட்டு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்கின்ற வகையில் சட்டம் கொண்டுவரப்பட்டது. அந்த சட்டம் தற்போது வரை அப்படியே இருக்கிறது.
தற்போது சில அமைப்புகள் சில சந்தேகங்களை எழுப்புகின்றனர். அதற்கு தமிழக அரசு தான் உரிய பதில்களை அளிக்க வேண்டும் என்பதே அ.தி.மு.க.வின் கோரிக்கை.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த பேட்டியின் போது மாவட்ட செயலாளர்கள் முன்னாள் எம்.பி., கோபாலகிருஷ்ணன், ஐயப்பன் எம்.எல்.ஏ., முருகேசன், இளைஞரணி மாநில செயலாளர் வி.ஆர்.ராஜ்மோகன், அண்ணா தொழிற்சங்க செயலாளர் வையத்துரை மாரி, ஒத்தக்கடை பாண்டியன், தேன் சுகுமாறன், ஆட்டோ கருப்பையா, கொம்பையா, மார்க்கெட் ராமமூர்த்தி, உசிலை பிரபு, ஆரைக்குடி முத்துராமலிங்கம் உள்பட பலர் இருந்தனர்.விமான நிலையத்தில் ஓ.பன்னீர் செல்வத்தை கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர். அருகில் கோபாலகிருஷ்ணன் எம்.பி. உள்பட பலர் உள்ளனர்.
- ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு பின்பும் காளைகளை பரிசோதிக்க அரசு தயாராக உள்ளது என தமிழக அரசு உறுதி அளித்துள்ளது.
- புகைப்படங்களின் அடிப்படையில் மட்டும் முடிவுக்கு வர முடியுமா? என பீட்டாவுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
புதுடெல்லி:
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கும் தமிழக அரசின் ஜல்லிக்கட்டு அவசர சட்டம் மற்றும் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு தடை கோரி பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளன. இந்த வழக்கு இன்று நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான அரசியல் சாசன அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜல்லிக்கட்டு கலாச்சாரத்தின் பகுதியாகும்; ஒரு குறிப்பிட்ட நடைமுறை அவசியமானதா இல்லையா என்று நீதிமன்றம் எவ்வாறு தீர்மானிக்க முடியும்? என்று தமிழ்நாடு அரசு தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.
மேலும் விளையாட்டிற்கு முன்பு ஐல்லிக்கட்டு காளைகள் மருத்துவர்களால் முழுமையாக பரிசோதனை செய்யப்படுகின்றன; கடுமையான விதிமுறைகள் வகுக்கப்பட்டு, பல சிறந்த நடைமுறைகளும் பின்பற்றப்பட்ட பிறகே ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது எனவும் அவர் குறிப்பிட்டார்.
அப்போது ஐல்லிக்கட்டிற்கு முன்பு கால்நடை மருத்துவர்களால் பரிசோதனை செய்யப்படும் காளைகள், ஐல்லிக்கட்டிற்கு பிறகு பரிசோதனை செய்யப்படுகிறதா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு பின்பும் காளைகளை பரிசோதிக்க தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது என தமிழக அரசு உறுதி அளித்துள்ளது.
அப்போது பீட்டா முன்வைத்த வாதங்களை மறுக்காமல் எவ்வித பிரமாண பத்திரத்தையும் தாக்கல் செய்யாமல் தமிழக அரசு முன்வைத்த வாதங்கள் அனைத்தும் மோசடியே என்றும், திருத்தப்பட்ட விதிமுறைகளின் அடிப்படையில் தமிழக அரசு முன்வைத்த வாதங்கள் அனைத்தும் கண்துடைப்பே என்றும் பீட்டா தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். மேலும், இதற்கு சாட்சியாக புகைப்படங்கள், செய்திதாள்கள் அடிப்படையில் வெளியான தகவல்களை தாக்கல் செய்திருப்பதாகவும் கூறினார்.
அப்போது பேசிய நீதிபதிகள், ஜல்லிக்கட்டு தொடர்பான புகைப்படங்களை உங்களுக்கு எடுத்துக் கொடுத்தது யார்? விதிமுறைகள் மீறல் தொடர்பாக எங்கேனும் புகார் அளித்தீர்களா? புகைப்படங்களின் அடிப்படையில் மட்டும் முடிவுக்கு வர முடியுமா? என பீட்டாவுக்கு சரமாரியாக கேள்வி எழுப்பினர். அத்துடன் வழக்கு விசாரணையை நாளை பிற்பகலுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர். நாளை பீட்டா சார்பில் மேலும் வாதங்களை முன்வைக்க அனுமதி அளித்தனர்.
- ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு தடை கோரி பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன.
- இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு ஒத்திவைத்தது.
புதுடெல்லி:
தமிழக அரசின் ஜல்லிக்கட்டு அவசர சட்டம் மற்றும் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு தடை கோரி பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளன. இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான அரசியல் சாசன அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
இதில் ஜல்லிக்கட்டுக்கு எதிரான மனுக்கள் மீதான தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு ஒத்திவைத்தது.
- அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலக புகழ்பெற்றது.
- ஜல்லிக்கட்டை காண வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் உற்சாகமாக வருவதுண்டு.
சென்னை:
தமிழகத்தின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி மிகவும் பிரசித்தி பெற்றது.
மக்களால் மிகவும் விரும்பப்படும் விளையாட்டு ஜல்லிக்கட்டு என்பதால் அதனை நல்ல முறையில் கொண்டு வர அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை நாளன்று அவனியாபுரத்திலும், மறுநாள் பாலமேட்டிலும், அதற்கு அடுத்த நாள் அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது வழக்கம். இதில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலக புகழ்பெற்றது.
இந்த ஜல்லிக்கட்டை காண வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் உற்சாகமாக வருவதுண்டு.
இந்த நிலையில், ஜல்லிக்கட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் தேதி அறிவிக்காமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஜல்லிக்கட்டு போட்டிகள் கடந்த 2017-ம் ஆண்டு தெரிவித்த அதே சட்டத்திட்டம் படி நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தமிழ்நாடு அரசின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜல்லிக்கட்டு போட்டிகள் வரும் ஆண்டு கட்டாயம் நடத்தப்படும் எனவும், அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் கூறி உள்ளனர்.
- தமிழக கலாச்சாரம், பாரம்பரியம் காளைகளை பாதுகாக்கவே ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுகிறது
- காலம் காலமாக விவசாயத்துடன் ஜல்லிக்கட்டு ஒன்றி போய் இருக்கிறது.
புதுடெல்லி:
தமிழக அரசின் ஜல்லிக்கட்டு அவசர சட்டம் மற்றும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு எதிராக பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில், கடந்த 8-ந்தேதி மனுதாரர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தங்கள் தரப்பு வாதங்களை ஒரு வாரத்துக்குள் தொகுத்து எழுத்துப்பூர்வமாக அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டதுடன் தீர்ப்பையும் ஒத்திவைத்தனர்.
இந்த நிலையில் தமிழக அரசின் வாதம் எழுத்துப்பூர்வமாக சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறி இருப்பதாவது:
தமிழக கலாச்சாரம், பாரம்பரியம் நாட்டு காளைகளை பாதுகாக்கவே ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது. ஜல்லிக்கட்டின்போது எந்த விதிமீறல்களும் இல்லை. காளைகளின் உயிர், நல்வாழ்வை உறுதி செய்யும் விதமாக அனைத்து வழிமுறைகளும் கடைபிடிக்கப்படுகின்றன. ஜல்லிக்கட்டு விளையாட்டு போட்டி பொழுதுபோக்குக்காக நடத்தப்படும் விளையாட்டு அல்ல. ஜல்லிக்கட்டு தமிழர்களின் வாழ்வோடு ஒன்றிப்போன ஒன்று. காளைகளை பெருமைப்படுத்தவும், கவுரவிக்கவும் ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது. காலம் காலமாக விவசாயத்துடன் ஜல்லிக்கட்டு ஒன்றி போய் இருக்கிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள கால்நடை ஆராய்ச்சி அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் கால்நடைத்துறை அலுவலர்கள் அதிகாரிகளுடன் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விரிவான ஆலோசனை நடத்துகிறார்.
- கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளுக்கு ஏற்ப ஜல்லிக்கட்டு போட்டி புதிய விதிமுறைகள் என்னென்ன என்பது தெரியவரும்.
சென்னை:
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை அலங்காநல்லூர், வாடிவாசல், புதுக்கோட்டை, விராலிமலை உள்பட பல ஊர்களில் ஜல்லிக்கட்டு போட்டி பாரம்பரியமாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியை எதிர்த்து பீட்டா உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. இதன் மீதான தீர்ப்பு விரைவில் வர உள்ளது.
இந்த நிலையில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா குழுவினர் மதுரை மாவட்ட கலெக்டரை சந்தித்து ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி கோரி மனு அளித்துள்ளனர்.
இந்த நிலையில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான ஏற்பாடுகள், நெறிமுறைகள் குறித்து ஆலோசிக்க கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நாளை மறுநாள் (22-ந்தேதி) ஆலோசனை நடத்த உள்ளார்.
சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள கால்நடை ஆராய்ச்சி அலுவலகத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் கால்நடைத்துறை அலுவலர்கள் அதிகாரிகளுடன் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விரிவான ஆலோசனை நடத்துகிறார்.
கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளுக்கு ஏற்ப ஜல்லிக்கட்டு போட்டி புதிய விதிமுறைகள் என்னென்ன என்பது தெரியவரும்.