என் மலர்
நீங்கள் தேடியது "jayalalithaa"
- வக்கீலை நியமித்து சொத்துக்களை ஏலம் விட கர்நாடக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
- தீர்ப்பு வழங்கப்பட்டு 1 மாதம் ஆகியும் வக்கீல் நியமிக்கப்படாததால் கர்நாடக அரசுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் நரசிம்மமூர்த்தி மனுதாக்கல் செய்தார்.
புதுடெல்லி:
பெங்களூருவை சேர்ந்த நரசிம்மமூர்த்தி என்ற சமூக ஆர்வலர் சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை ஏலம் விட பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் கடந்த மாதம் தீர்ப்பளிக்கப்பட்டது. உடனடியாக வக்கீலை நியமித்து சொத்துக்களை ஏலம் விட கர்நாடக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
தீர்ப்பு வழங்கப்பட்டு 1 மாதம் ஆகியும் வக்கீல் நியமிக்கப்படாததால் கர்நாடக அரசுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் நரசிம்மமூர்த்தி மனுதாக்கல் செய்தார். மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட சுப்ரீம் கோர்ட்டு ஏப்ரல் 11-ந்தேதி விசாரிக்கும் என்று தெரிவித்தது.
- அண்ணன் என்ற முறையில் நான்தான் ஜெயலலிதாவின் நேரடி வாரிசு ஆவேன்.
- ஜெ.தீபா சார்பில் வக்கீல் தொண்டன் சுப்பிரமணியன் ஆஜரானார்.
சென்னை :
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் சட்டப்படியான வாரிசு என்று அவரது அண்ணன் மகள் ஜெ.தீபா, மகன் ஜெ.தீபக் ஆகியோரை அறிவித்து சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
இந்த தீர்ப்பு பிறப்பித்து சுமார் 2 ஆண்டுகளுக்கு பின்னர், ஜெயலலிதாவின் அண்ணன் என்று கூறி கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 83 வயது முதியவர் என்.ஜி.வாசுதேவன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில், வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், ஜெயலலிதாவின் சொத்தில் தனக்கு 50 சதவீதம் பங்கு வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
என் தந்தை ஆர்.ஜெயராமுக்கு 2 மனைவிகள். முதல் மனைவி ஜெ.ஜெயம்மாவுக்கு நான் ஒரே மகன். 2-வது மனைவி வேதவல்லி என்ற வேதம்மாவுக்கு, ஜெயக்குமார், ஜெயலலிதா என்று இருவர் பிறந்தனர்.
இந்த வகையில் ஜெயக்குமாரும், ஜெயலலிதாவும் என்னுடைய சகோதர, சகோதரி ஆவர். 1950-ம் ஆண்டில், என் தந்தையிடம் ஜீவனாம்சம் கேட்டு மைசூரு கோட்டில் என் அம்மா தொடர்ந்த வழக்கில், வேதவல்லி, ஜெயக்குமார், ஜெயலலிதா ஆகியோர் எதிர்மனுதாரராக சேர்க்கப்பட்டனர். ஆனால், இந்த வழக்கு சமரசத்தில் முடிந்துவிட்டது.
ஜெயலலிதா இறப்பதற்கு முன்பு ஜெயக்குமார் இறந்து விட்டதால், அண்ணன் என்ற முறையில் நான்தான் ஜெயலலிதாவின் நேரடி வாரிசு ஆவேன்.
எனவே, ஜெயலலிதாவின் மொத்த சொத்துகளில் 50 சதவீத பங்கை எனக்கு தர தீபா, தீபக் ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியிருந்தார்.
இந்த வழக்கு காலதாமதமாக தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்பது குறித்து சென்னை ஐகோர்ட்டில் உள்ள மாஸ்டர் கோர்ட்டுக்கு, ஐகோர்ட்டு மாற்றியது. இந்த வழக்கு காலதாமதமாக தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், அதை விசாரணைக்கு ஏற்கலாமா, வேண்டாமா? என்பது குறித்து பதில் அளிக்கும்படி ஜெ.தீபா, ஜெ.தீபக் ஆகியோருக்கு மாஸ்டர் கோர்ட்டு ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பியது.
ஆனால், இருவரும் பதில் மனு தாக்கல் செய்யவில்லை. இந்த நிலையில், இந்த வழக்கு மாஸ்டர் கோர்ட்டு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜெ.தீபா சார்பில் வக்கீல் தொண்டன் சுப்பிரமணியன் ஆஜரானார். ஆனால், எதிர்மனுதாரர்கள் இருவரும் பதில் மனு தாக்கல் செய்யவில்லை. இதையடுத்து, ஜெயலலிதாவின் சொத்தில் பங்கு கேட்டு முதியவர் வாசுதேவன் தாக்கல் செய்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டதாக மாஸ்டர் கோர்ட்டு நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
- தி.மு.க.வை எதிர்த்து பா.ஜ.க. அடிக்கடி போராட்டங்கள் நடத்தி வந்தது.
- தி.மு.க.வுக்கு எதிரி அ.தி.மு.க.தான் என்பதை நிரூபிக்க தொடர் போராட்டங்கள் நடைபெறுகிறது.
சென்னை:
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டு பல அணிகளாக அ.தி.மு.க. செயல்பட்டது. பின்பு இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். அணிகள் இணைந்து இரட்டை தலைமையுடன் செயல்பட தொடங்கியது.
இது கட்சிக்கு பல்வேறு முடிவுகளை எடுக்க மிகப்பெரிய பிரச்சனையாக இருந்து வந்தது. இதன் காரணமாக ஒற்றைத் தலைமை பிரச்சினை ஏற்பட்டு பொதுக்குழு கூடி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இதை எதிர்த்து ஓ.பி.எஸ். அணியினர் சுப்ரீம் கோர்ட்டு வரை சென்றனர். கோர்ட்டு பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்று தீர்ப்பளித்தது. இதை தேர்தல் கமிஷனும் அங்கீகரித்தது.
இதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி கட்சி பணிகளில் அதிக தீவிரம் காட்டி வருகிறார்.
முதல்கட்டமாக கட்சியில் உறுப்பினர் சேர்க்கை பணிகளில் தீவிரம் காட்ட கட்சியினருக்கு உத்தரவு பிறப்பித்தார். ஆலோசனை கூட்டம் நடத்தி உண்மையான உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். இளைஞர்கள், இளம்பெண்களை அதிகமாக உறுப்பினர்களாக சேர்க்க வலியுறுத்தினார்.
அது மட்டுமல்லாமல் அனைத்து மாவட்ட செயலாளர்களை அடிக்கடி அவரே தொடர்பு கொண்டு எத்தனை உறுப்பினர்கள் சேர்ந்துள்ளார்கள். பணிகளை தீவிரப்படுத்துங்கள் என்று உத்தரவிட்டுள்ளார்.
ஓ.பி.எஸ். சமீபத்தில் டி.டி.வி. தினகரனை சந்தித்தார். சசிகலாவை விரைவில் சந்திப்பதாகவும் கூறியுள்ளார். இதுகுறித்து கட்சியினரிடம் கழக பணியில் தீவிரமாக ஈடுபட்டு அதிக உறுப்பினர் சேர்க்கையால் நமது அணியை பலப்படுத்த அறிவுறுத்தி வருகிறார்.
சமீபத்தில் நடந்த கள்ளச்சாராய பலியை கண்டித்தும் முறைகேடுகளை விசாரணை செய்யக் கோரியும் அவர்கள் மாளிகை நோக்கி பேரணி நடத்தி கவர்னரிடம் புகார் மனு கொடுத்தார்.
இதைத் தொடர்ந்து வருகிற 29-ந்தேதி அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற உள்ளது.
அடுத்த கட்டமாக பொதுமக்கள் அடிப்படை பிரச்சினையை உடனடியாக ஆங்காங்கே பிரமாண்ட போராட்டங்கள், பொதுக்கூட்டங்கள் நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. தி.மு.க.வை எதிர்த்து பா.ஜ.க. அடிக்கடி போராட்டங்கள் நடத்தி வந்தது. தி.மு.க.வுக்கு எதிரி அ.தி.மு.க.தான் என்பதை நிரூபிக்க தொடர் போராட்டங்கள் நடைபெறுகிறது.
வருகிற பாராளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு கட்சியில் பல்வேறு கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. காலியாக உள்ள மாவட்ட செயலாளர்கள் பதவிகளுக்கு புதிய மாவட்ட செயலாளர்கள் விரைவில் நியமனம் செய்யப்பட உள்ளனர். கட்சியில் ஸ்லீப்பர் செல்லாக சில மாவட்ட செயாளர்கள் செயல்படுவதாக புகார் வருவதை தொடர்ந்து அவற்றை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. முன்னாள் முதலமைச்சரும் அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதா பாணியில் தவறு செய்வோர் உடனடியான தண்டிக்கப்படுவதும் தி.மு.க. எதிர்ப்பு போராட்டங்கள் நடத்துவதும் தீவிரம் அடைவதாக தெரிகிறது.
- உலகம் வியந்த திட்டங்களைத் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தியவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா.
- அன்னை தெரசா உட்பட பன்னாட்டுத் தலைவர்களும் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து பாராட்டி மகிழ்ந்தனர்.
சென்னை:
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அரசியல் வரலாற்று அறிவு ஏதுமின்றி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை பற்றி அண்ணாமலை வெளிப்படுத்திய கருத்து, அவரது அறியாமையையும், அனுபவமற்ற தனத்தையும் வெளிக்காட்டுகிறது.
மக்களுக்கு நல்லது செய்வதையே தன் அடிப்படை குணமாகக் கொண்டவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. அதனால்தான் அவரை அரசியல் ரீதியாக எதிர்கொள்ளாமல் காழ்ப்புணர்ச்சியோடு பொய் வழக்குகள் பலவற்றை தி.மு.க. தொடுத்தது.
எத்தனையோ குற்றச்சாட்டுகளையும் பொய் வழக்குகளையும் அவர் மீது எதிர்க்கட்சிகள் வாரி இரைத்த போதும், தமிழகத்தை ஆளுகிற பொறுப்பு தமிழக மக்களால் ஜெயலலிதாவிடம் வழங்கப்பட்டது.
இந்தக் காலக்கட்டத்திலும் இந்திய அளவில் தமிழகம் பல துறைகளில் அடைந்திருக்கக் கூடிய பெருமைமிகு வளர்ச்சிக்கு முக்கியக் காரணம் ஜெயலலிதா ஆவார் என்பதை அண்ணாமலை புரிந்து நடந்துகொள்ள வேண்டும்.
ஏழைகளைத் தேடி அரசு, ஏழைகளுக்கான அரசு என்பதை நிலைநாட்டியதோடு, தமிழகத்திற்கான வளர்ச்சிப் பாதையை உருவாக்கியவர் அம்மா. அதனால்தான், அவரது ஆட்சி முறையைப் பல்வேறு மாநில அரசுகள் இன்றும் பின்பற்றுகின்றன.
உலகம் வியந்த திட்டங்களைத் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தியவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா.
அதனால்தான் அன்னை தெரசா உட்பட பன்னாட்டுத் தலைவர்களும் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து பாராட்டி மகிழ்ந்தனர்.
ஏன், இன்றைய பாரதப் பிரதமர் நரேந்திர மோடியும் போயஸ் தோட்டத்தில் வந்து அம்மாவை சந்தித்து தனது மிகுந்த மரியாதையை வெளிப்படுத்தினார்.
உலக அரசியலையே திரும்பிப் பார்க்க வைத்தவர் அம்மா. இவை எதையும் உணராமல், அரசியல் பக்குவமின்றி அண்ணாமலை பேசிவருவது கடும் கண்டனத்திற்குரியது.
கடந்த இரண்டு ஆண்டுகாலமாக தி.மு.க அரசின் குடும்ப உறுப்பினர்களின் சொத்து விவரங்களை வெளியிடும் அண்ணாமலை, அதற்கு மத்திய அரசு மூலம் நடவடிக்கை எடுக்க என்ன செய்தார் என்பதைச் சொல்ல முடியுமா? வெறுமனே சோதனைகள் மட்டும் தீர்வாகாது. ஊழலை ஒழிக்க வாய் கிழிய பேசும் அண்ணாமலை உருப்படியான நடவடிக்கை எடுக்க இனி சிந்திக்க வேண்டும்.
முதிர்ச்சியான அரசியல் புரிதல் இல்லாமல் வாய்க்கு வந்ததைப் பேசும் அண்ணாமலை தேசிய கட்சியின் மாநில தலைவர் பொறுப்பிற்கு தகுதியானவரா என்பதை அவரே சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- அண்ணாமலைக்கு ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவராக செயல்படக் கூடிய தலைமை பண்பு தேவைப்படுகிறது.
- கூட்டணி தர்மத்தை மீறி மலிவு விளம்பரத்திற்காக தவறான தகவல்களை கூறி வருவதை புதுவை மாநில அ.தி.மு.க. வன்மையாக கண்டிக்கிறது.
புதுச்சேரி:
மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கடுமையாக விமர்சித்திருந்தார்.
இதற்கு அ.தி.மு.கவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். புதுவை மாநில அ.தி.மு.க. சார்பில் அண்ணாமலையை கண்டித்து உப்பளம் தலைமை அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
அ.தி.மு.க. மாநில செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். மாநில அவைத்தலைவர் அன்பானந்தம் முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலைக்கு எதிராக கண்டன கோஷங்களை அ.தி.மு.கவினர் எழுப்பினர்.
தொடர்ந்து நிருபர்களிடம் மாநில செயலாளர் அன்பழகன் கூறியதாவது:-
தன்னுடைய தகுதி, உயரம் என்னவென்று தெரியாமல் தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை ஜெயலலிதா பற்றி தவறான கருத்தை கூறியுள்ளார். இது தி.மு.க.விற்கு வலு சேர்க்கும் வகையில் உள்ளது. அ.தி.மு.க.வை பற்றி பேச அண்ணாமலைக்கு எந்தவித தகுதியும், அருகதையும் கிடையாது.
அண்ணாமலைக்கு ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவராக செயல்படக் கூடிய தலைமை பண்பு தேவைப்படுகிறது. கூட்டணி தர்மத்தை மீறி மலிவு விளம்பரத்திற்காக தவறான தகவல்களை கூறி வருவதை புதுவை மாநில அ.தி.மு.க. வன்மையாக கண்டிக்கிறது.
கூட்டணியில் இருந்து கொண்டு அண்ணாமலை அ.தி.மு.க.வை பற்றி திட்டமிட்டு அவதூறு பரப்பும் வகையில் பேசுவது அபத்தமாகும். இதுபோல் அவதூறு பேசி வரும் அண்ணாமலையை தமிழக தலைவர் பதவியில் இருந்து பா.ஜனதா தேசிய தலைமை உடனடியாக நீக்க வேண்டும்.
எதிர்காலங்களில் அ.தி.மு.க.வுடன் பா.ஜனதா கூட்டணி சேர்ந்தாலும் அவர்களை மக்கள் ஏற்றுக்கொள்ளாத முடியாத நிலை ஏற்படும். 3 மாதத்திற்கு ஒரு முறை அண்ணாமலை இதுபோல் அ.தி.மு.கவை அவதூறாக பேசி வருகிறார்.
இவ்வாறு அன்பழகன் கூறினார்.
- அகில இந்திய அளவில் மருத்துவம் பொது கலந்தாய்வு முறையை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும்.
- காவிரியில் தமிழகத்திற்கு உரிய தண்ணீரை பெறுவதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தஞ்சாவூர்:
தஞ்சையில் இன்று அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி .டி.வி தினகரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :-
பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை அரசியலுக்கு புதியவர் என்பதை அடிக்கடி நிரூபித்து வருகிறார். ஜெயலலிதாவின் ஆளுமை, சாதனைகள் பற்றி எதுவும் தெரியாமல் அறியாமையில் பேசுகிறார். பிரதமர் மோடி, முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உள்ளிட்ட பல முக்கிய பா.ஜ.க தலைவர்கள் ஜெயலலிதாவுடன் அன்புடனும், நட்புடனும் இருந்தவர்கள். 1998-ம் ஆண்டு தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்து தென் நாட்டில் காலூன்ற வாய்ப்பு கொடுத்தது ஜெயலலிதா தான். இதெல்லாம் தெரியாமல் அண்ணாமலை பேசி வருகிறார்.
ஜெயலலிதா கொண்டு வந்த தொட்டில் குழந்தை திட்டம் உள்பட பல்வேறு நல்ல திட்டங்களை அன்னை தெரசாவே பாராட்டி உள்ளார். ஏழை எளிய மக்களின் வளர்ச்சிக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் ஜெயலலிதா. அவரது 30 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் ஏராளமான சாதனைகள் செய்துள்ளார் . அந்த சாதனைகளை பொறுக்க முடியாமல் தான் சிலர் காழ்ப்புணர்ச்சியால் அவர் மீது வழக்கு தொடுத்தனர். 1996 ஆம் ஆண்டு மட்டும் அவர் மீது 49 வழக்குகள் போட்டனர் . அந்த வழக்கை எல்லாம் அவர் வென்றார். ஜெயலலிதாவின் மரணம் வரை அவரை யாராலும் வெல்ல முடியவில்லை.
அகில இந்திய அளவில் மருத்துவம் பொது கலந்தாய்வு முறையை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும்.
காவிரியில் தமிழகத்திற்கு உரிய தண்ணீரை பெறுவதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளை காக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழக அலுவலகத்தில் நடந்தது.
- கூட்டத்துக்கு அவை தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமை தாங்கினார்.
சென்னை:
அ.தி.மு.க.வுக்கும், தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர்களுக்கும் அடிக்கடி மோதல் ஏற்பட்டபடி இருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு சென்றிருந்த போது அமித்ஷா சமரசம் செய்தார்.
பா.ஜ.க. தேசிய தலைவர்கள் அறிவுறுத்தலின் பேரில் சில வாரங்கள் அமைதியாக இருந்த தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை மீண்டும் அதிரடி கருத்துக்களை வெளியிட தொடங்கி உள்ளார். நேற்று அவர் ஆங்கில பத்திரிகைக்கு அளித்திருந்த பேட்டியில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பற்றி கருத்துக்களை வெளியிட்டு இருந்தார்.
இதற்கு அ.தி.மு.க. கடும் கண்டனம் தெரிவித்தது. பாரதிய ஜனதாவுடன் உள்ள கூட்டணியை மறுபரிசீலனை செய்ய நேரிடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் கூட்டணி என்பது எல்லோரும் இணைந்ததுதான். பெரியண்ணன் வேலை யாருக்கும் கிடையாது என்று பா.ஜ.க. பதிலடி கொடுத்தது.
இந்த நிலையில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழக அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு அவை தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் அ.தி.மு.க. மூத்த தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்த கருத்துக்கள் பற்றி கூட்டத்தில் காரசாரமாக பேசப்பட்டது.
இதையடுத்து அண்ணாமலைக்கு எதிராக அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், அண்ணாமலையை கண்டித்து பேசிய அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் அனைவரும் பா.ஜ.க.வுடனான கூட்டணியை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.
பாரதிய ஜனதாவுடன் கூட்டணியில் இருப்பதால் ஏற்படும் சிக்கல்கள் பற்றியும் சில அ.தி.மு.க. தலைவர்கள் பேசினார்கள்.
- தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அவதூறாக பேசியிருப்பது துரதிஷ்டவசமானது.
- இனி யார் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் ஜெயலலிதா செய்த சாதனைகளை முறியடிக்க முடியாது.
சென்னை:
சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
மக்களால் நான், மக்களுக்காகவே நான் என்று தன் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து காட்டிய மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை பற்றி தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அவதூறாக பேசியிருப்பது துரதிஷ்டவசமானது. அண்ணாமலைக்கு, ஜெயலலிதாவின் அரசியல் பயணம், அவர் மக்களுக்கு ஆற்றிய அரும்பணிகள் எதுவும் தெரியவில்லை.
ஜெயலலிதாவை 6 முறை முதலமைச்சராக்கி அழகு பார்த்தவர்கள் தமிழக மக்கள். ஜெயலலிதாவுக்கு தமிழக மக்கள் அளித்த இந்த நற்சான்றிதழே போதும். வேறு யாருடைய சான்றிதழும் தேவை இல்லை. இனி யார் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் ஜெயலலிதா செய்த சாதனைகளை முறியடிக்க முடியாது.
இதை பற்றியெல்லாம் எதுவும் அறியாத, அரசியல் அனுபவம் இல்லாத ஒரு குழந்தையான அண்ணாமலையின் பேச்சுகளுக்கெல்லாம் பதில் அளிக்கவேண்டிய தேவை இல்லை என்றே நான் கருதுகிறேன். அதேசமயம் அம்மா உணவகம் தந்து ஏழை-எளிய சாமானிய மக்களின் பசியை போக்கி அன்னலட்சுமியாக விளங்கிய ஜெயலலிதாவின் பெயருக்கு களங்கம் ஏற்படுவதை பார்த்துக்கொண்டு இருக்கமுடியாது.
இதுபோன்ற கருத்துகளால் தி.மு.க.வினர் வேண்டுமென்றால் மகிழ்ச்சியடையலாம். எனவே பொறுப்பற்றவர்கள் பேசும் இதுபோன்ற பயனற்ற பேச்சுக்களையெல்லாம் புறந்தள்ளிவிட்டு, மக்கள் அளித்த தீர்ப்பே, மகேசன் தீர்ப்பு என்பதை மனதில் வைத்து மக்கள் பணிகளில் கவனம் செலுத்துவோம். ஒருங்கிணைந்த அ.தி.மு.க. உருவாக்கி தமிழக மக்களை காத்திடுவோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- 28 வகையான பொருட்களை ஒப்படைக்க வேண்டும்.
- ஜெயலலிதாவின் 30 கிலோ தங்க, வைர நகைகளை தவிர மற்ற எதுவும் கர்நாடகா நீதிமன்றத்தில் இல்லை.
சொத்துக்குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் பொருட்களை ஒப்படைக்க கோரி தமிழக லஞ்ச ஒழிப்பு துறைக்கு கர்நாடகா அரசு வழக்கறிஞர் கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில், விலை மதிப்புடைய கடிகாரம், 11 ஆயிரம் புடவைகள், பரிசு பொருட்கள் உட்பட 28 வகையான பொருட்களை ஒப்படைக்க வேண்டும். ஜெயலலிதாவின் 30 கிலோ தங்க, வைர நகைகளை தவிர மற்ற எதுவும் கர்நாடகா நீதிமன்றத்தில் இல்லை என வழக்கறிஞர் தெரிவித்து உள்ளார்.
பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை ஏலம் விட கர்நாடகா அரசு சார்பில் அரசு வழக்கறிஞர் கிரண் எஸ். ஜவாலி ஏற்கனவே நியமனம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
- தமிழக மக்களை தி.மு.க.விடம் இருந்து காப்பாற்ற வேண்டும்.
- ஜெயலலிதா வழியில் பொற்கால ஆட்சியை அமைப்போம்.
அவினாசி:
ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக சசிகலா அரசியல் சுற்றுப்பயணம் செய்தார். திருப்பூர் மாவட்டத்தில் அவினாசியில் மக்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறிய தாவது:-
ஜெயலலிதா ஏழை எளிய மக்களுக்காகவே வாழ்ந்தவர். அவர் அம்மா மருந்தகம், அம்மா உணவகம், அம்மா சிமெண்ட், சூரியஒளி மின் விளக்குடன் பசுமை வீடுகள், பெண்களுக்கு இலவச ஆடு மாடுகள், கிரைண்டர், மின்விசிறி, மிக்சி, பெண்களுக்கு தாலிக்கு தங்கம் என எண்ணற்ற பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தியுள்ளார்.
தி.மு.க., அரசு மக்களை ஏமாற்றுகிறது. சொத்து வரி, தண்ணீர் வரி, மின் கட்டணம், பத்திர பதிவு கட்டணம், சாலை வரி என அனைத்தும் உயர்ந்துள்ளது. இதை தி.மு.க., அரசு திரும்ப பெற வேண்டும். காவிரி நீரை கர்நாடக அரசிடம் இருந்து பெற்று தர வேண்டும். அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை கொண்டு வந்தது ஜெயலலிதாதான்.
தி.மு.க., அரசு வந்தால் சட்டம் ஒழுங்கு சரி இருக்காது. கள்ள சாராயம், கட்டப்பஞ்சாயத்து, கொலை, கொள்ளை மற்றும் சந்தன மரம் நிறைய கடத்துவதாக பல பேர் சொல்கிறார்கள். இதை அரசு கவனிக்க வேண்டும்.
தமிழக மக்களை தி.மு.க.விடம் இருந்து காப்பாற்ற வேண்டும். இதற்காக அ.தி.மு.க. ஒன்றுபட வேண்டும்.வலிமையோடு நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள வேண்டும். அ.தி.மு.க.. மக்களுக்காகவே இயங்கும் என்று சொன்ன ஜெயலலிதா வழியில் பொற்கால ஆட்சியை அமைப்போம். இவ்வாறு அவர் பேசினார்.
- ‘எனக்கு அதிகாரம் இல்லை’ என்று சொல்லிக் கொள்ளும் கவர்னர் ஆர்.என்.ரவி, அதிகாரத்தை மீறிச் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறார்.
- மணிப்பூரில் அமைதி திரும்ப வேண்டுமானால் முதலில் அந்த மாநிலத்தை ஆளும் பா.ஜ.க. அரசு மீது நடவடிக்கை எடுத்தாக வேண்டும்.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு ஆங்கில நாளேட்டுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-
கேள்வி:- மக்களவையில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் போது பேசிய பிரதமர் எதிர்க்கட்சிகளின் கூட்டணியை சந்தர்ப்பவாத, அகங்காரக் கூட்டணி என்று விமர்சித்துள்ளாரே இது குறித்து உங்கள் கருத்து என்ன?
பதில்:- 2014 தேர்தலுக்கு முன்னதாக அவர் காங்கிரஸ் கட்சி மீது என்ன குற்றச்சாட்டு வைத்தாரோ, அதே குற்றச்சாட்டை 9 ஆண்டுகளுக்குப் பிறகும் வைத்துக் கொண்டு இருந்தார். பா.ஜ.க. அமைச்சர்கள் சிலரே கொட்டாவி விட்ட காட்சிகளை நேரலையில் பார்க்க முடிந்தது.
பிரதமர் உரையை யாராவது எடுத்து முழுமையாகப் படித்தால், இது காங்கிரஸ் ஆட்சி மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்து 'எதிர்க்கட்சித் தலைவர்' மோடி பேசுவதைப் போல இருக்கும்.
பா.ஜ.க. ஆட்சியை ஒரு வாக்கில் கவிழ்த்த கட்சி அ.தி.மு.க. அந்தக் கட்சிக்கு எதிராகத் தான் 2009, 2014 பாராளுமன்றத் தேர்தல்களில் வாக்கு கேட்டார் மோடி. இப்போது அ.தி.மு.க.வை அருகில் வைத்திருப்பதை விட சந்தர்ப்பவாதம் இருக்க முடியுமா?
கேள்வி:-மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது பேசுகையில், 1989-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஜெயலலிதாவின் சேலை இழுக்கப்பட்டதாகக் கூறி, பெண்கள் பாதுகாப்பு தொடர்பாகத் தி.மு.க.வை நேரடியாகத் தாக்கிப் பேசியிருக்கிறார். உங்களது பதில் என்ன?
பதில்:- நிர்மலா சீதாராமன் ஏதாவது வாட்ஸ்அப் வரலாற்றைப் படித்து விட்டுப் பேசுவார். ஜெயலலிதாவுக்குத் தமிழ்நாடு சட்டமன்றத்தில் அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை. அது அவராக நடத்திக் கொண்ட நாடகம் என்பதை அப்போது அவையில் இருந்த அனைவரும் அறிவார்கள்.
இப்படி சட்டமன்றத்தில் செய்ய வேண்டும் என்று முன்னதாகவே தனது போயஸ்கார்டன் வீட்டில் வைத்து ஜெயலலிதா ஒத்திகை பார்த்தார் என்றும், அப்போது நான் உடனிருந்தேன் என்றும் முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசு (இப்போதைய திருச்சி காங்கிரஸ் எம்.பி) சட்டமன்றத்திலேயே பேசி அதுவும் அவைக் குறிப்பில் உள்ளது. எனவே தமிழ்நாடு சட்டமன்ற நிகழ்வைப் பொய்யாகத் திரித்து பாராளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் பேசியது வருந்தத்தக்கது.
கேள்வி:-தமிழ்நாடு கவர்னருக்கும் உங்களுக்குமான மோதல் அவர் அமைச்சர் செந்தில்பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கிக் கடிதம் எழுதியதில் தீவிரமடைந்தது. அவரைத் திரும்பப் பெற வைக்க நீங்கள் ஜனாதிபதிக்கே கடிதம் எழுதினீர்கள். தமிழ்நாடு அரசாங்கத்தில் அவர் எத்தகைய பாத்திரத்தை ஏற்றுள்ளார்?
பதில்:- மோடி, குஜராத் மாநில முதல்-மந்திரியாக இருந்த போது, 'குஜராத் கவர்னர் மாளிகை என்பது காங்கிரஸ் கட்சி அலுவலகம்' என்று குற்றம் சாட்டினார். இன்றைய கவர்னர் மாளிகைகள், பா.ஜ.க. அலுவலகங்களாக மாற்றப்பட்டு இருக்கின்றன.
'எனக்கு அதிகாரம் இல்லை' என்று சொல்லிக் கொள்ளும் கவர்னர் ஆர்.என்.ரவி, அதிகாரத்தை மீறிச் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறார். 'எனக்கு வேலையே இல்லை' என்று சொல்லிக் கொள்ளும் கவர்னர் ரவி, வேண்டாத வேலைகளை மட்டுமே பார்த்துக் கொண்டு இருக்கிறார்.
கேள்வி:- செந்தில் பாலாஜியை கைது செய்ததிலும், அமலாக்கத்துறை விசாரிப்பதிலும் தவறில்லை என்று சுப்ரீம் கோர்ட்டே கூறியுள்ளது. பிறகு ஏன் அமைச்சராகத் தொடர அனுமதிக்கிறீர்கள்?
பதில்:- பா.ஜ.க. தனது அரசியல் எதிரிகளைப் பழி வாங்க இது போன்ற விசாரணை அமைப்புகளை வைத்துள்ளது. இது பொத்தாம் பொதுவான குற்றச்சாட்டு அல்ல. இதற்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து உதாரணங்களைச் சொல்ல முடியும்.
பா.ஜ.க.வின் அரசியல் எதிரிகளின் வீடுகளுக்குள் மட்டுமே இந்த அமைப்புகள் போகும். அப்படி விசாரிக்கப்பட்ட நபர்கள், பா.ஜ.க.வில் ஐக்கியம் ஆனால், அவர்கள் புனிதமாகி விடுவார்கள். வழக்குகளில் இருந்து தப்பிக்கலாம். இத்தகைய வாஷிங் மிஷினாகத்தான் இவை இருக்கின்றன.
எனவேதான் இவர்களது கைதுகளைக் 'குற்ற விசாரணைகள்' என நாங்கள் பார்க்கவில்லை. 'அரசியல் விசாரணைகள்' ஆகத் தான் பார்க்கிறேன். அரசியல் வழக்கில் கைதானவர்களுக்கு தரப்படும் சலுகையே செந்தில் பாலாஜிக்கும் தரப்பட்டுள்ளது.
கேள்வி:- கூட்டாட்சி வடிவத்தையும், கூட்டுறவுக் கூட்டாட்சியியலையும் மத்திய அரசு சிதைக்கிறது என சி.பி.ஐ., அமலாக்கத்துறை நடவடிக்கைகளை வைத்து நீங்கள் கூறுவது ஏன்?
பதில்:- பா.ஜ.க.வுக்கு எதிராக உள்ள கட்சிகள் ஒரே அணியாக ஆகிவிடக் கூடாது என்பதில் பா.ஜ.க. உறுதியாக இருக்கிறது. அனைவரும் பிரிந்து நின்றால்தான் பா.ஜ.க.வுக்கு லாபம். எனவேதான் அனைவரையும் ஒன்று சேர்க்காமல் இருக்கவே இது போன்ற (சி.பி.ஐ, ஈ.டி) ரெய்டுகள் செய்யப்படுகின்றன. அச்சுறுத்துவது, பயமுறுத்துவதுதான் இந்த ரெய்டுகளின் நோக்கமாகும்.
கேள்வி:- இந்திய பொருளாதாரத்தில் தற்போது மந்தநிலை உள்ள சூழலில், தமிழ்நாட்டில் முதலீட்டுச் சூழல் எப்படி இருப்பதாகக் கருதுகிறீர்கள்?
பதில்:- தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் அப்படி எந்த மந்தநிலையும் இல்லை என்றே சொல்வேன். அப்படி நினைத்திருந்தால் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டைச் சென்னையில் வரும் ஜனவரி மாதம் கூட்டி இருக்க மாட்டோமே. இதற்கு அழைப்பு விடுக்க ஜப்பான், சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு நான் சென்றிருந்தேன். அங்கு நான் சந்தித்துப் பேசிய முதலீட்டாளர்கள் பலரும், தமிழ்நாட்டில் முதலீடு செய்ய ஆர்வமாக இருந்தார்கள். அமைதியான மாநிலம், சிறந்த உள்கட்டமைப்பு உள்ள மாநிலம் எனத் தமிழ்நாட்டை நினைக்கிறார்கள்.
எனவே நீங்கள் சொல்லும் மந்த நிலைமை நம் மாநிலத் துக்கு இல்லை.
கேள்வி:- மணிப்பூரில் தொடரும் வன்முறைக்குத் தீர்வுகாண நீங்கள் சொல்லும் வழி என்ன?
பதில்:- பா.ஜ.க.வின் பிளவுவாத வெறுப்பரசியல் தான் மணிப்பூர் பற்றி எரிவதற்குக் காரணம். இரண்டு பிரிவினருக்கு இடையில் பிளவை ஏற்படுத்தி அவர்களை ஆயுதம் ஏந்த வைத்தது பா.ஜ.க.வின் மதவாத அரசியல் ஆகும். இன்று அவர்கள் அடக்க முடியாத அளவுக்கு கைமீறிப் போய்விட்டது.
மணிப்பூரில் இப்படி நடக்கும் என்பது அந்த மாநிலத்தை ஆளும் பா.ஜ.க. அரசுக்கும் தெரியும். ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கும் தெரியும். ஆனால் இவ்வளவு பெரிதாக நடக்கும் என்று அவர்கள் கணிக்கவில்லை. வன்முறை இருபக்கமும் கூர்மையான ஆயுதம். 'பூதத்தை உருவாக்கினால், அந்த பூதம் உருவாக்கியவனேயே தாக்கும்' என்பார்கள். அதுதான் மணிப்பூரில் நடக்கிறது.
மணிப்பூரில் அமைதி திரும்ப வேண்டுமானால் முதலில் அந்த மாநிலத்தை ஆளும் பா.ஜ.க. அரசு மீது நடவடிக்கை எடுத்தாக வேண்டும். அனைத்துப் பிரிவினருக்கும் பொதுவானவர்கள் தான் நாங்கள் என்பதை ஒன்றிய அரசு நிரூபிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களைப் போய் பிரதமர் பார்க்க வேண்டும். அங்கே ஊர் ஊராக மக்களைச் சந்திக்க வேண்டும்.
சாதாரணமாக அங்கு அமைதி திரும்பி விடாது. இத்தனை நாட்களாக எரியும் தீயில் எண்ணெய் ஊற்றும் செயல்களைச் செய்துவிட்டு, அவ்வளவு சீக்கிரம் அதனை அணைத்து விட முடியாது.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
- தீய நோக்கத்தோடும் திட்டமிட்டு சிலவற்றை மறைப்பதற்காகவும் செய்யப்பட்ட இடைச்செருகல் வேலை.
- ஒருவேளை உண்மையை 'நாடகம்' என்று சொல்வதுதான் திராவிட மாடல் போலும்!
சென்னை:
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மத்திய அரசின் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின்மீது பேசிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், கனிமொழி எம்.பி. மகாபாரதத்தில் திரவுபதிக்கு இழைக்கப்பட்ட அநீதியை பற்றி பேசியதை சுட்டிக்காட்டி, பெண்கள் எங்கு இழிவுபடுத்தப்பட்டாலும் அதனை கடுமையாக ஒடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதில் அரசியல் இருக்கக்கூடாது என்றும் தெரிவித்தார்.
மேலும், கனிமொழி எம்.பி.க்கும், பாராளுமன்றத்திற்கும் 25-03-1989 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நடந்த ஒரே ஒரு நிகழ்வை நினைவுபடுத்துவதாகத் தெரிவித்து, அந்த புனிதமான சபையில் முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவரான ஜெயலலிதா தி.மு.க.வினரால் அவமானப்படுத்தப்பட்டதையும், அவருடைய புடவை இழுக்கப்பட்டதையும், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்கு வந்தால் முதலமைச்சராகத்தான் திரும்ப வருவேன் என்று ஜெயலலிதா சபதம் எடுத்ததையும், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு முதலமைச்சராக பொறுப்பேற்றதையும் குறிப்பிட்டார். இது உண்மையிலே நடைபெற்ற சம்பவம்.
ஆனால், இந்தச் சம்பவம் நாடகம் என்று தி.மு.க. எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் கூறினர். இதுகுறித்து ஒரு நாளிதழுக்கு பேட்டியளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதுபோன்ற நிகழ்வு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிகழவில்லை என்றும், அன்று சட்டமன்றத்தில் இருந்தவர்களுக்கு இது ஒரு நாடகம் என்பது தெரியும் என்றும் பேட்டியளித்து இருக்கிறார். நடந்த சம்பவத்தை, நடந்த உண்மையை திரித்துப் பேசுவது கடும் கண்டனத்திற்குரியது.
இது குறித்து 25-3-1992 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் பேசிய ஜெயலலிதா, "இது கருப்பு தினம் மட்டுமல்ல, வன்முறையால் அரசியலில் எதையும் சாதித்து விட முடியும் என்று தப்புக் கணக்கு போடுகிறவர்களுக்கு பாடமாக அமையும் தினம்" என்றும் குறிப்பிட்டார்.
தி.மு.க.வின் இதுபோன்ற ஜனநாயக விரோதச் செயல்களையெல்லாம் மனதில் வைத்து தான் 1991-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் மக்கள் 'சாட்டை அடி', 'சம்மட்டி அடி' கொடுத்தார்கள் என்பதை தி.மு.க. தலைவருக்கு நான் கோடிட்டுக் காட்ட விரும்புகிறேன்.
இது மட்டுமல்லாமல், 25-3-1989-ம் நாளைய நடவடிக்கைக் குறிப்புகளில் உள்ள செய்திகள் குறித்து 26-3-1992 அன்று அப்போதைய பேரவைத் தலைவர் தீர்ப்பு வழங்கியிருப்பதையும், அவை நடவடிக்கைக் குறிப்புகள் என அன்றைய தினம் 25-03-1989 அன்று நடந்ததாக வெளியிடப்பட்டுள்ள இக்குறிப்புகள் அனைத்தும் மன்ற மரபுகள் மற்றும் நடைமுறைகளுக்கு முற்றிலும் விரோதமானவை.
தீய நோக்கத்தோடும் திட்டமிட்டு சிலவற்றை மறைப்பதற்காகவும் செய்யப்பட்ட இடைச்செருகல் வேலை. மோசடி என்று தீர்ப்பளித்திருப்பதையும் தி.மு.க. தலைவருக்கு கூறுகிறேன்.
25-03-1989 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நடைபெற்ற நிகழ்வுகளை நன்கு கண்ணுற்றும் அதனை 'நாட கம்' என்று சொல்வதுதான் 'நாடகம்'. 25-03-1989 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நடைபெற்ற நாகரிகமற்ற செயலை 'நாடகம்' என்று சொல்வது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பதற்கு சமம். அன்று நடந்தது உண்மை என்பதை மக்கள் அடுத்து வந்த சட்டமன்றப் பொதுத்தேர்தலில் உணர்த்திவிட்டார்கள் என்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நினைவூட்டக் கடமைப்பட்டிருக்கிறேன். ஒருவேளை உண்மையை 'நாடகம்' என்று சொல்வதுதான் திராவிட மாடல் போலும்!
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.