search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kidnapping case"

    • ரேவண்ணாவை போலீசார் 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.
    • விசாரணை முடிவடைந்து மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு அக்ரஹார சிறையில் அடைக்கபட்டார்.

    கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்திய ஆபாச வீடியோ தொடர்பாக ஹாசன் தொகுதி எம்.பி. பிரஜ்வால் ரேவண்ணா தேடிப்படும் நபராக அறிவிக்க்ப்பட்டு லுக்அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே பிரஜ்வாலின் தந்தையும், எம்.எல்.ஏவுமான ரேவண்ணா ஆகியோர் மீது வீட்டு பணிப்பெண் கொடுத்த பாலியல் புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    மேலும் பிரஜ்வாலுடன் ஆபாச வீடியோவில் இருந்த ஒரு பெண் கடத்தப்பட்ட சம்பவத்திலும் ரேவண்ணா மற்றும் அவரது உறவினர் சதீஸ்பாபு ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    ரேவண்ணாவை கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு போலீசார் 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். விசாரணை முடிவடைந்து மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு அக்ரஹார சிறையில் அடைக்கபட்டார்.

    இதற்கிடையே எச்.டி.ரேவண்ணா ஜாமின் கோரி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று நீதிபதி முன்பு வந்தது.

    இந்நிலையில், பெண்ணை கடத்திய வழக்கில், ஜேடிஎஸ் எம்எல்ஏ ஹெச்.டி ரேவண்ணாவுக்கு ஜாமின் வழங்கி பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    அதன்படி, ஹெச்.டி. ரேவண்ணா ரூ.5 லட்சம் மதிப்பிலான பிரமாண பத்திரம் தாக்கல் செய்து ஜாமின் பெற்றுக்கொள்ள, பெங்களூரு மக்கள் பிரதிநிதி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

    • ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது.
    • போலீசார் 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.

    பெங்களூரு:

    கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்திய ஆபாச வீடியோ தொடர்பாக ஹாசன் தொகுதி எம்.பி. பிரஜ்வால் ரேவண்ணா தேடப்படும் நபராக அறிவிக்க்ப்பட்டு லுக்அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே பிரஜ்வா லின் தந்தையும், எம்.எல்.ஏவுமான ரேவண்ணா ஆகியோர் மீது வீட்டு பணிப்பெண் கொடுத்த பாலியல் புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்ப ட்டது. மேலும் பிரஜ்வாலுடன் ஆபாச வீடியோவில் இருந்த ஒரு பெண் கடத்தப்பட்ட சம்பவத்திலும் ரேவண்ணா மற்றும் அவரது உறவினர் சதீஸ்பாபு ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    ரேவண்ணாவை போலீசார் 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். விசாரணை முடிவடைந்து மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நேற்று மாலை பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கபட்டார்.

    இதற்கிடையே எச்.டி.ரேவண்ணா ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு நேற்று கர்நாடக ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது அந்த மனு மீதான விசாரணையை இன்றைக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

    இந்த நிலையில் ரேவண்ணாவிடம் மேலும் விசாரணை நடத்த வேண்டியுள்ளதால் மேலும் 7 நாட்கள் காவலை நீட்டிக்குமாறு சிறப்பு புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்ற நீதிபதி ரேவண்ணாவை வருகிற 14-ந் தேதி வரை விசாரணை நடத்த போலீசாருக்கு அனுமதி வழங்கி உத்திரவிட்டார்.

    இதையடுத்து போலீசார் ரேவண்ணாவை சிறையிலிருந்து அழைத்துச் சென்று மீண்டும் விசாரணை நடத்துகிறார்கள்.

    இதற்கிடையே ஆபாச வீடியோ சர்ச்சை தொடர்பான விசாரணைக்கு ஆஜராக பிரஜ்வால் ரேவண்ணா 7 நாட்கள் காலஅவகாசம் கேட்டிருந்தார். அந்த காலஅவகாசம் நேற்றுடன் முடிந்தது. இதையடுத்து சர்வதேச அளவில் பிரஜ்வால் ரேவண்ணாவை போலீசார் தேடிவருகிறார்கள்.

    பிரஜ்வால் ரேவண்ணா எப்போது வேண்டுமானாலும் இந்தியாவுக்கு திரும்பலாம் என்று கூறப்படுகிறது. இதனால் அவரை கைது செய்ய விமான நிலையங்களில் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

    • போலீசார் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
    • தகவல் தெரிவிக்க ஹெல்ப்லைன் அமைக்கப்பட்டு உள்ளது.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி எம்.பி. பிரஜ்வால் ரேவண்ணா தொடர்பான ஆபாச வீடியோக்கள் கடந்த மாதம் 21-ந் தேதி முதல் வெளியே வரத் தொடங்கியது. இதையடுத்து ஹாசன் தொகுதியில் கடந்த 26-ந் தேதி ஓட்டுப்பதிவு முடிந்த சில மணி நேரங்களில் பிரஜ்வால் ரேவண்ணா ஜெர்மனிக்கு தப்பி சென்றார்.

    ஆபாச வீடியோக்கள் வெளியானதையடுத்து சிறப்பு விசாரணைக்குழு அமைத்து கர்நாடக அரசு உத்தரவிட்டது. அவர்கள் ஆபாச படத்தில் இருந்த பெண்களை அடையாளம் கண்டு வாக்குமூலம் பெற தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த பிரஜ்வாலுக்கு 2 முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து அவருக்கு லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டு தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டார்.

    மேலும் கர்நாடக சிறப்புக் குழுவினர் புளூ கார்னர் நோட்டீஸ் கொடுக்கவும் பரிந்துரை செய்தனர். அதன் அடிப்படையில் வெளிநாட்டில் உள்ள பிரஜ்வாலை அங்குள்ள போலீசார் மூலம் கைது செய்து அழைத்து வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    இந்த நிலையில் பெண் கடத்தல் வழக்கில் பிரஜ்வாலின் தந்தை ரேவண்ணா கைது செய்யப்பட்டதால் பிரஜ்வால் கர்நாடகா திரும்புகிறார் என்ற தகவல் வெளியானது.

    ஜெர்மனியில் இருப்பதாக கூறப்பட்ட பிரஜ்வால் துபாயில் இருந்து கர்நாடகம் திரும்புவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து கர்நாடகாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

    துபாயில் இருந்து வரும் பிரஜ்வாலை விமான நிலையத்தில் வைத்தே கைது செய்ய போலீசாருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

    போலீசார் விமான நிலையங்களில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி இருப்பதால் பிரஜ்வால் ரேவண்ணா துபாயில் இருந்து வேறு மாநிலத்திற்கு வந்து அங்கிருந்து ரெயில் மூலம் கர்நாடகா வரலாம் என்ற தகவலும் சிறப்பு விசாரணைக்குழு அதிகாரிகளுக்கு கிடைத்தது.

    இதையடுத்து அனைத்து முக்கிய ரெயில் நிலையங்களிலும் போலீசார் பிரஜ்வாலை கைது செய்ய தயாராக உள்ளனர்.

    மேலும் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வரும் சிறப்பு விசாரணைக்குழு அதிகாரிகள் கூறும்போது, பிரஜ்வால் வெளிநாட்டில் இருந்தபடி கர்நாடகாவைச் சேர்ந்த சிலருடன் அடிக்கடி பேசி வந்துள்ளார். அவர்களை கண்காணித்து வருகிறோம். மேலும் பிரஜ்வாலை கண்டுபிடித்து கைது செய்ய மத்திய புலனாய்வு அமைப்புகளுடன் தகவல் பரிமாறப்பட்டு வருகிறது என்று கூறினர்.

    இதற்கிடையே எஸ்.ஐ.டி. தலைவர் பி.கே.சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    ஹாசன் மாவட்டத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குறித்து விசாரிக்க எஸ்.ஐ.டி. குழு அமைக்கப்பட்டு உள்ளது.

    எனவே ஆபாச வீடியோவில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அதுபற்றிய தகவல் தெரிந்தவர்கள் தகவல் தெரிவிக்க ஹெல்ப் லைன் அமைக்கப்பட்டு உள்ளது.

    எனவே இதுதொடர்பான தகவல் தெரிந்தவர்கள் 6360938947 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் கொடுப்பவர்கள் பெயர் விவரம் ரகசியமாக வைக்கப்படும். பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்ட உதவி, பாதுகாப்பு மற்றும் பிற உதவிகளை வழங்க நாங்கள் தயாராக உள்ளோம்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • பல்லடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
    • வழக்கில் தொடர்புடைய 2 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

    பல்லடம் :

    ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சஞ்சய் மண்டல் என்பவரை கடந்த 20-ந் தேதி ஒரு கும்பல் கடத்தி அவரிடம் இருந்த ரூ.40 ஆயிரம் பணத்தை பறித்துக் கொண்டு அங்கேயே விட்டுவிட்டு சென்று விட்டனர். இது குறித்து பல்லடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய 2 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். மேலும் 2 பேரை போலீசார் தேடி வந்தனர். இதில் முக்கிய குற்றவாளியான சென்னையைச் சேர்ந்த சுசிதரன் என்பவரது மகன் டாட்டூ தினேஷ் (வயது 28) என்பவரை போலீசார் சின்னக்கரை அருகே வைத்து கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.

    இதனை தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொரு நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

    • கொலை, கடத்தல் உள்ளிட்ட சுமார் 100 குற்றவழக்குகளில் தொடர்புடையவர் அதிக் அகமது
    • அதிக் அகமதுவின் சகோதரர் காலித் அசீம் என்ற அஷ்ரப் உள்ளிட்ட 7 பேர் விடுவிக்கப்பட்டனர்.

    பிரயாக்ராஜ்:

    உத்தர பிரதேச மாநிலத்தில் 2006ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட ஆட்கடத்தல் வழக்கில் பிரபல தாதா அதிக் அகமது மற்றும் இரண்டு நபர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து பிரயாக்ராஜ் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. அதிக் அகமதுவின் சகோதரர் காலித் அசீம் என்ற அஷ்ரப் உள்ளிட்ட 7 பேர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

    உமேஷ் பால் என்பவரை கடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2005 ஆம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏ ராஜூ பால் கொலை வழக்கில் உமேஷ் பால் முக்கிய சாட்சி ஆவார். கடந்த பிப்ரவரி மாதம் இவர் சுட்டுக்கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    கொலை கடத்தல் உள்ளிட்ட சுமார் 100 குற்றவழக்குகளில் தொடர்புடைய அதிக் அகமது, அரசியலுக்கு வந்து எம்.பி. மற்றும் எம்எல்ஏ உள்ளிட்ட பதவிகளையும் வகித்துள்ளார். குற்ற வழக்கில் சிறைத்தண்டனை பெற்ற இவர் குஜராத் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கடத்தல் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டதால் குஜராத் சிறையில் இருந்து அதிக் அகமதுவை பிரயாக்ராஜ் நீதிமன்றத்திற்கு போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்து வந்தனர்.

    • பணம் கேட்டு கடத்தியதாகவும், ரூ.1.50 கோடி பறித்து கொண்ட தாகவும் புளியம்பட்டி போலீஸ் நிலையத்தில் ஈஸ்வரன் புகார் அளித்தார்.
    • கைது செய்யப்பட்ட தர்மலிங்கமும், கர்ணனும் அண்ணன் தம்பிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் தொகுதி அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ. ஈஸ்வரன்(46). புஞ்சைபுளியம்பட்டி அருகே புஜங்கனூரியில் பெற்றோருடன் வசித்து வருகிறார்.

    கடந்த மாதம் 24-ந் தேதி 6 பேர் கொண்ட கும்பல் தன்னை பணம் கேட்டு கடத்தியதாகவும், ரூ.1.50 கோடி பறித்து கொண்ட தாகவும் புளியம்பட்டி போலீஸ் நிலையத்தில் ஈஸ்வரன் புகார் அளித்தார்.

    இது குறித்து புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசார ணையில் சத்தியமங்கலம் அடுத்த அரியப்பம் பாளையம் பகுதியை சேர்ந்த முன்னாள் அ.தி.மு.க. நிர்வாகி மிலிட்டரி சரவணன் இந்த கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டது தெரியவந்தது.

    ஈஸ்வரன் எம்.எல்.ஏ.வாக இருந்த போது அவருக்கு உதவியாளராக சரவணன் இருந்துள்ளார். அவர் தூண்டுதல் பெயரில் மோகன் உள்பட 6 பேர் ஈஸ்வரனை கடத்தி அடித்து உதைத்து பணம் பறித்துள்ளனர். அவர்கள் அனை வரும் தலை மறைவாகி விட்டனர். கடத்தல் கும்பலை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

    இதற்கிடையில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய கோவை மாவட்டம் தொண்டாமுத்தூரை சேர்ந்த பிரைட் பாலு (45), சத்தியமங்கலம் செண்பகப் புதுரை சேர்ந்த சீனிவாசன் (45) ஆகிய 2 பேரையும் கோவை கலெக்டர் அலுவலகம் அருகே போலீசார் கைது செய்தார்கள். அவர்களிடமிருந்து ரூ.4 லட்சம் மீட்கப்பட்டது.

    இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்கள் கொடுத்த தகவலின் பெயரில் மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய கோவை தொண்டா முத்தூரை சேர்ந்த தர்மலிங்கம் (47), சத்திய மங்கலம் அருகே உள்ள உக்கிரம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த கர்ணன் (42) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.4.50 லட்சம் மீட்கப்பட்டது.

    கைது செய்யப்பட்ட தர்மலிங்கமும், கர்ணனும் அண்ணன் தம்பிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட சரவணன் மற்றும் மோகன் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகின்றனர்.

    இவர்களை பிடிக்க போலீசார் தீரும் காட்டி வருகின்றனர். சரவணன் பிடிபட்டால் தான் எதற்காக கடத்தல் சம்பவம் நடைபெற்றது என உண்மையான நிலவரம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

    சென்னையில் கல்லூரி மாணவரை கடத்திய கும்பலில் ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அமெரிக்க பெண் ஒருவரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.

    போரூர்:

    சென்னை டி.பி.சத்திரம் ராமநாதன் தெருவைச் சேர்ந்தவர் நவீத்முகமது (19). தனியார் கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    நேற்று முன்தினம் கல்லூரிக்கு சென்றுவிட்டு நவீத்முகமது வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து கத்தியைக் காட்டி மிரட்டி மோட்டார் சைக்கிளில் ஏறும்படி கூறினர்.

    உயிருக்கு பயந்த மாணவர் அந்த கும்பல் கூறியபடி மோட்டார் சைக்கிளில் ஏறினார். அவரை ஏற்றிக்கொண்டு அண்ணாநகர், கொளத்தூர், மாதவரம் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு அழைத்து சென்றனர்.

    இரவு 11 மணி அளவில் ஜாபர்கான்பேட்டை காசி தியேட்டர் மேம்பாலம் அருகே உள்ள முட்புதரில் வைத்து நவீத்முகமதை சரமாரியாக தாக்கினார்கள்.

    வலி தாங்கமுடியாமல் அவர் கதறினார். ஆனாலும், அவர்கள் விடவில்லை. மாணவரிடம் இருந்து விலை உயர்ந்த வாட்ச் மற்றும் ஐபேடு போன்வற்றை பறித்துக்கொண்டு புதரில் தள்ளிவிட்டு சென்றனர்.

    அதிகாலை 4 மணி அளவில் மயக்கம் தெளிந்து நவீத்முகமது முட்புதர் பகுதியில் இருந்து எழுந்து அருகில் இருந்த கடைக்கு சென்று உதவி கேட்டுள்ளார்.

    கடை ஊழியரிடம் செல்போனை வாங்கி தனது வீட்டிற்கு தகவல் தெரிவித்தார். 3 பேர் கொண்ட கும்பலால் தாம் கடத்தப்பட்டது குறித்து அவர் கூறியதையடுத்து சிறிது நேரத்தில் சம்பவ இடத்துக்கு அவரது சகோதரர் வந்தார்.

    ரத்த காயங்களுடன் நின்ற நவீத்முகமதை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். பின்னர் சம்பவம் குறித்து டி.பி. சத்திரம் போலீசில் அவர் புகார் அளித்தார். அதனை தொடர்ந்து கீழ்பாக்கம் உதவி கமி‌ஷனர் ராஜா, இன்ஸ்பெக்டர் விநாயகம் மற்றும் போலீஸ் படை கடத்தல் கும்பலை பிடிக்க விரைந்தனர்.

    சிகிச்சை பெற்று வரும் நவீத்முகமதுவிடம் விசாரித்துவிட்டு அவர் கொடுத்த தகவலின் பேரில் கடத்தப்பட்ட பகுதியில் உளவு கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தப்பட்டது.

    மாணவரை கடத்தி சென்றது வேளச்சேரியை சேர்ந்த பாஸ்கர் மற்றும் அவரது நண்பர் பாட்ஷா, சரவணன் என தெரிய வந்தது. மோட்டார் சைக்கிளை ஒருவரிடம் வாங்கிக் கொண்டு மாணவரை கடத்தி சென்று இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

    மேலும் அமெரிக்காவில் உள்ள இளம்பெண் ஒருவரை நவீத்முகமது காதலித்து வந்ததாகவும் அவர் கடந்த 6-ந்தேதி சென்னை வந்து ஓட்டலில் தங்கி இருந்ததாகவும் அவரை நவீத்முகமது சந்தித்து பேசியபோது இருவரும் தகராறு ஏற்பட்டதாகவும் விசாரணையில் தெரிய வந்தது.

    ஓட்டலில் தங்கி இருந்த பெண்ணிடம் திடீரென தகராறு ஏற்பட்டதில் ஹெல்மெட்டால் அந்த பெண்ணை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரம் அடைந்த பெண் தனது நண்பர்கள் மூலம் நவீத்முகமதை கடத்தி தாக்கி இருப்பது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    ஓட்டலில் தங்கி உள்ள பெண்ணை போலீசார் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்த பெண்ணிற்கு நவீத்முகமதுவுக்கும் என்ன தொடர்பு? எதற்காக இந்த மோதல் ஏற்பட்டது என்பது பற்றி தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

    மேலும் இந்த கடத்தலில் ஈடுபட்ட பாஸ்கரனை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இருவரை தேடி வருகிறார்கள். பிடிபட்ட பாஸ்கர் வடபழனி போலீஸ் நிலையத்தில் உள்ள சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரின் உறவினர் எனவும் தெரிய வந்துள்ளது.

    மர்மநபர்களால் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் நேற்று வீடு திரும்பினார். #PowerStarSrinivasan
    பூந்தமல்லி:

    சென்னை அண்ணாநகர் எல்.பிளாக்கில் வசித்து வருபவர் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன். இவர் லத்திகா, கண்ணா லட்டு தின்ன ஆசையா உள்ளிட்ட பல்வேறு படங்களில் கதாநாயகனாகவும், நகைச்சுவை நடிகராகவும் நடித்துள்ளார். இவரது மனைவி ஜூலி. இவர் கடந்த 6-ந் தேதி தனது கணவரை (பவர்ஸ்டார் சீனிவாசன்) காணவில்லை என்று அண்ணாநகர் போலீசில் புகார் கொடுத்தார்.

    இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தியபோது, நிலம் பத்திரப்பதிவு செய்வது தொடர்பாக பவர்ஸ்டார் சீனிவாசன் தனது மனைவியிடம் கூறாமல் ஊட்டி சென்றிருப்பதும், நிலத்தை பத்திரப்பதிவு செய்ய தனது மனைவி ஜூலியின் கையெழுத்து போட வேண்டி இருந்ததால் அவரையும் ஊட்டிக்கு வரும்படி அழைத்துள்ளதும் தெரியவந்தது.

    ஆனால் புகார் கொடுத்த ஜூலி, தனது கணவர் ஊட்டியில் இருப்பதை போலீசாரிடம் தெரிவிக்காமல் ஊட்டிக்கு சென்றதும் விசாரணையில் தெரியவந்தது.

    அதனை தொடர்ந்து பவர்ஸ்டார் சீனிவாசனை போலீசார் செல்போனில் தொடர்புகொண்டபோது, ஊட்டியில் உள்ள நிலத்தை பத்திரப்பதிவு செய்து முடித்துவிட்டு சென்னை திரும்பி வந்து விடுவதாக அவர் போலீசாரிடம் தெரிவித்தார். இதற்கிடையே பவர்ஸ்டார் சீனிவாசன் மர்மநபர்களால் கடத்தப்பட்டதாக தகவல்கள் பரவின.



    இந்த நிலையில் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் நேற்று ஊட்டியில் இருந்து தனது மனைவியுடன் அண்ணாநகரில் உள்ள தனது வீட்டிற்கு வந்தார். தான் சென்னை வந்துவிட்டது குறித்து அவர் போலீசாரிடம் தகவல் தெரிவித்தார்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறியதாவது:-

    நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் காணாமல் போனதாக அவரது மனைவி புகார் அளித்து இருந்தார். அதன்பேரில் விசாரணை செய்தபோது நிலம் பத்திரப்பதிவு தொடர்பாக ஊட்டி சென்றதாக தெரிவித்தார். அவர் கடத்தப்பட்டதாக புகார்கள் எதும் வரவில்லை. அவரும் தான் கடத்தப்பட்டதாக கூறவில்லை.

    தற்போது பவர்ஸ்டார் வீட்டிற்கு திரும்ப வந்துவிட்டதால் அவரது மனைவி கொடுத்த புகாரின் மீதான நடவடிக்கை முடித்து வைக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    ஆனாலும் பவர்ஸ்டார் சீனிவாசன், தனது மனைவியிடமே கூறாமல் ஊட்டிக்கு சென்று நிலம் பத்திரப்பதிவு செய்தது பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதுதொடர்பான முழு தகவல்களை அவர் எங்களிடம் தெரிவித்தால் மட்டுமே என்ன நடந்தது? என்பது தெரியவரும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். #PowerStarSrinivasan
    விருகம்பாக்கத்தில் ரூ.20 லட்சம் கேட்டு தொழில் அதிபர் கடத்தல் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    பெங்களூரைச் சேர்ந்தவர் அருண்குமார். கார் வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி பத்மாவதி. இவர்கள் இருவரும் சென்னை விருகம்பாக்கம் சஞ்சய்காந்தி நகரில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்திருந்தனர்.

    இந்த நிலையில் வீட்டில் இருந்து வெளியே சென்ற அருண்குமார் திரும்பி வரவில்லை. இதுகுறித்து மனைவி பத்மாவதி விருகம்பாக்கம் போலீசில் புகார் அளித்தார்.

    நானும் எனது கணவர் அருண்குமாரும் 2நாட்களுக்கு முன்பு விருகம்பாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்தோம். நேற்று மாலை கணவர் அருண்குமார் வெளியே சென்றார். இதுவரை வீடு திரும்பவில்லை.

    இந்த நிலையில் கணவரின் நண்பரான சத்தியநாராயணா என்னை செல்போனில் தொடர்பு கொண்டு “உன் கணவர் எனக்கு 20 லட்சம் பணம் தரவேண்டும். அப்படி தரவில்லை என்றால் உன் கணவரை கொன்று விடுவேன் என்று மிரட்டல் விடுத்தார். எனவே எனது கணவரை மீட்டு தரவேண்டும்” என்று கூறியுள்ளார்.

    இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த பூ வியாபாரியை ரூ.50 லட்சம் கேட்டு கடத்திய வழக்கில் மேலும் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    கோவை:

    கோவை ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த பூ வியாபாரி விஷ்ணு ராஜ்(வயது 38) என்பவரை கடந்த மாதம் 30-ந் தேதி ஒரு கும்பல் காரில் கடத்தியது.

    பின்னர் அவரது தந்தை கோவிந்தராஜூக்கு போன் செய்து ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டினர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இந்நிலையில் கடத்தல் கும்பல் விஷ்ணுராஜை திருச்சி-மதுரை பைபாஸ் சாலையில் தள்ளி விட்டு விட்டு தப்பிச் சென்றனர். போலீசார் திருச்சி சென்று விஷ்ணுராஜை மீட்டனர்.

    தொடர்ந்து நடந்த விசாரணையில் கோவை நல்லாம் பாளையத்தை சேர்ந்த தினகரன் (33), தடாகம் ரோட்டை சேர்ந்த பிரபு(28), சந்தோஷ் (22), உக்கடத்தை சேர்ந்த சதாம் உசேன் (23), ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த ஹரி பிரசாத் (20), ராஜவீதியை சேர்ந்த அரவிந்த்(23), இடையர் வீதியை சேர்ந்த நாகராஜ்(26) ஆகிய 7 பேரை கைது செய்தனர்.

    இந்த வழக்கில் மேலும் சிலரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் திருச்சியை சேர்ந்த மணிகண்டன், மதுரையை சேர்ந்த சூரிய பிரபு, ராஜேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். #tamilnews
    சென்னையில் கடத்தல் வழக்கில் சம்பந்தப்பட்ட குழந்தையின் பெற்றோர் யார்? என்பதை கண்டறிவதற்காக கைது செய்யப்பட்ட தம்பதிக்கும், குழந்தைக்கும் நேற்று டி.என்.ஏ. பரிசோதனை செய்யப்பட்டது.
    சென்னை:

    சென்னை சேத்துப்பட்டை சேர்ந்தவர் சோமன். ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரியான இவரது மகன் யோகேஷ்குமாருக்கும், பத்மினி என்ற இளம் பெண்ணுக்கும் கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் நடந்தது. பத்மினி தான் கர்ப்பமானதாகவும், பெண் குழந்தையை பெற்றது போலவும் ஒரு குழந்தையோடு கணவன் வீட்டிற்கு வந்தார்.

    போலீஸ் அதிகாரி சோமனுக்கு இதில் சந்தேகம் ஏற்பட்டு மருமகள் பத்மினி கர்ப்பமானது போல அடிக்கடி சிகிச்சை பெற்று வந்த ஆஸ்பத்திரியில் விசாரித்தார். அப்போது பத்மினி கர்ப்பமாகவில்லை என்பது தெரியவந்தது. இதனால் குழந்தை பெற்றதாக பத்மினி கூறியது பொய்யாக இருக்கலாம் என்று கருதி தனது மகன் யோகேஷ்குமார் மூலம் பத்மினி மீது எழும்பூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் எழும்பூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில், பத்மினி தான் குழந்தையை பெற்றெடுக்கவில்லை என்றும், வட மாநிலத்தை சேர்ந்த தம்பதி ஒருவரிடம் அந்த பெண் குழந்தையை தத்தெடுத்ததாகவும் தெரிவித்தார். தன்மீது வழக்குபதிவு செய்யப்பட்டதால், அதில் கைதாகாமல் இருக்க பத்மினி கோர்ட்டில் முன் ஜாமீன் பெற்றுக்கொண்டார்.

    பின்னர் கோர்ட்டு உத்தரவின் பேரில், இந்த வழக்கை சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் செயல்படும் குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரித்தனர். துணை கமிஷனர் மல்லிகா, கூடுதல் துணை கமிஷனர் சியாமளாதேவி ஆகியோர் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ரஞ்சித் விசாரணை நடத்தினார். போலீசார் நடத்திய விசாரணையில் பத்மினி வைத்திருந்த பெண் குழந்தை கடத்தல் குழந்தை என்று கண்டறியப்பட்டது. உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தை சேர்ந்த குழந்தை கடத்தல் கும்பலிடம் இருந்து ரூ.2 லட்சம் விலைகொடுத்து குழந்தையை பத்மினி வாங்கியதாகவும் தெரிகிறது.

    கடத்தல் கும்பலைச் சேர்ந்த ரிக்கி வர்மா (வயது 40), அவரது மனைவி கோமல் வர்மா (35), அஜய்சர்மா (40), அவரது மனைவி ஜெயா சர்மா (35) ஆகியோர் கடந்த 7-ந் தேதி அன்று கைது செய்யப்பட்டனர். அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற காவலில் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் இந்த வழக்கில் புதிய பிரச்சினை ஒன்று எழுந்தது. சம்பந்தப்பட்ட குழந்தையை அஜய்சர்மா, ஜெயாசர்மா ஆகியோரிடமிருந்து தத்தெடுத்ததாக பத்மினி போலீசார் விசாரணையில் தெரிவித்திருந்தார். அதுதொடர்பான சான்றிதழ்களையும் பத்மினி போலீசாரிடம் கொடுத்திருந்தார். எனவே சம்பந்தப்பட்ட குழந்தை கடத்தல் குழந்தையா? அல்லது அஜய்சர்மா, ஜெயாசர்மா தம்பதியின் குழந்தையா? என்பதை டி.என்.ஏ. பரிசோதனை மூலம் கண்டறிய போலீசார் முடிவு செய்தனர்.

    இதனால் டி.என்.ஏ. பரிசோதனை செய்ய போலீசார் கோர்ட்டு அனுமதி பெற்றனர். நேற்று புழல் சிறையில் இருந்து அஜய்சர்மாவும், அவரது மனைவி ஜெயாசர்மாவும் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள கஸ்தூரிபாய் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களுக்கு டி.என்.ஏ. பரிசோதனை நடந்தது.

    சம்பந்தப்பட்ட குழந்தையும் ஆஸ்பத்திரிக்கு கொண்டுவரப்பட்டு டி.என்.ஏ. பரிசோதனை செய்யப்பட்டது. டி.என்.ஏ பரிசோதனை முடிவு வந்த பிறகு தான் இந்த வழக்கில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவர வாய்ப்புள்ளது.

    ×