search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "marriage stop"

    • டெல்லியில் இருந்து இரவு 8 மணி அளவில் மணமகன் குடும்பத்தினர் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.
    • மணமகனும் அவரது குடும்பத்தினரும் குழப்பம் அடைந்தனர்.

    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலம் புலந்த்ஷாஹர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும், டெல்லி சீமாபுரி பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.

    இவர்களது திருமணம் கடந்த சனிக்கிழமை இரவு நடைபெற இருந்த நிலையில் மணமகள் வீட்டார் அதற்கான ஏற்பாடுகளை தடபுடலாக செய்திருந்தனர்.

    அதன்படி டெல்லியில் இருந்து இரவு 8 மணி அளவில் மணமகன் குடும்பத்தினர் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.


    இந்நிலையில் மணமகனின் வயதான பாட்டி உட்காருவதற்காக ஒரு நாற்காலி கேட்டுள்ளார். ஆனால் மணமகளின் உறவினர்கள் அவருக்கு நாற்காலி வழங்கவில்லை என கூறப்படுகிறது. இதுதொடர்பாக அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

    சிறிது நேரத்தில் வாக்குவாதம் முற்றியுள்ளது. இதுபற்றி பாட்டி மணமகனிடம் முறையிட்டுள்ளார். இதனால் இந்த விவகாரம் பெரிதாகியது. இதையடுத்து மணமகனும் அவரது குடும்பத்தினரும் குழப்பம் அடைந்தனர்.

    அவர்கள் மணமகளிடம் சென்று நீ எங்களுடன் வீட்டுக்கு வந்தால் கடும் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் இரு குடும்பத்தினருக்கும் வாக்குவாதம் மேலும் அதிகரித்தது.

    இதைத்தொடர்ந்து திருமணத்தை நிறுத்துவதாக மணமகன் அறிவித்தார். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. திருமண வரவேற்புக்காக தாங்கள் செலவழித்த தொகையை தந்த பின்னரே இடத்தை விட்டு போகுமாறு மணமகனின் குடும்பத்தினரிடம் மணமகள் வீட்டார் கூறினர்.

    அதன்படி மணமகன் குடும்பத்தினர் நஷ்டஈடு தொகையை கொடுக்க ஒப்புக்கொண்டனர். அதன் பிறகு மணமகன் வீட்டார் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

    இதுகுறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. ஆனால் இந்த சம்பவம் தொடர்பாக எங்களுக்கு எந்த ஒரு புகாரும் வரவில்லை என அப்பகுதியை சேர்ந்த உதவி போலீஸ் சூப்பிரண்டு அனுக்ரிதிசர்மா கூறினார்.

    • மொட்டை தலையுடன் இருந்த மணமகன் அதனை விக் வைத்து மறைத்து ஏமாற்றி திருமணம் செய்ய முயன்று உள்ளார்.
    • மணமகன் தன்னை மன்னித்து விடுமாறு கைகளை கூப்பி கெஞ்சினார்.

    பாட்னா:

    பீகார் மாநிலம் கயா மாவட்டத்தில் உள்ள இக்பால்பூர் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும், அங்குள்ள டோபி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பஜவுரா கிராமத்தை சேர்ந்த ஒரு இளம்பெண்ணுக்கும் நிச்சயிக்கப்பட்டு திருமண ஏற்பாடுகள் நடைபெற்றது.

    அப்போது மணமக்கள் மேடைக்கு வந்தனர். விழாவின் போது மணமகன் பாரம்பரிய வழக்கப்படி 'செஹ்ரா' என்ற தலையை மறைக்கும் கவசம் அணிவது வழக்கம். அதன்படி தலைக்கவசம் அணிய முயன்ற போது அவர் விக் வைத்து மறைத்து திருமணம் செய்ய முயன்றது அம்பலமானது.

    அதாவது மொட்டை தலையுடன் இருந்த மணமகன் அதனை விக் வைத்து மறைத்து ஏமாற்றி திருமணம் செய்ய முயன்று உள்ளார். இதை கண்ட மணமகள் குடும்பத்தினர் அதிர்ச்சியும், ஆவேசமும் அடைந்தனர்.

    அவர்கள் மணமகனை சரமாரியாக அடித்து உதைத்து தாக்கினர். அப்போது மணமகன் தன்னை மன்னித்து விடுமாறு கைகளை கூப்பி கெஞ்சினார்.

    ஆனாலும் மணமகள் குடும்பத்தினர் தொடர்ந்து அவரை தாக்கினர். மேலும் அந்த மணமகன் ஏற்கனவே திருமணமானவர் என்பதும், முதல் திருமணத்தை மறைத்து 2-வது திருமணத்திற்கு ஏற்பாடு செய்ததும் தெரியவந்தது.

    இதனால் மேலும் ஆத்திரம் அடைந்த மணமகளின் குடும்பத்தினர் தொடர்ந்து அவரை சரமாரியாக தாக்கினர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவுகிறது.

    • சிவநாதபுரம் மலை அடிவாரத்தில் இருந்த தனிப்படை போலீசார், சங்கரை மடக்கி அரியூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
    • திருமணம் நின்று போனதால் மலைவாழ் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், அணைக்கட்டு பகுதியில் 80-க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. குருமலை அடுத்துள்ள அணி மலை கிராமத்தில் 50 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இந்த மலை கிராமத்தின் நாட்டாமையாக சேகர் என்கிற சங்கர் உள்ளார். இவரது அண்ணன் மகனின் திருமணம், அணி மலையில் நேற்று நடைபெற இருந்தது.

    இதற்காக நாட்டாமை சங்கர் தனது குடும்பத்தினருடன் திருமண விழாவிற்கு தாலி உள்ளிட்ட பொருட்கள் வாங்குவதற்காக கடந்த 5-ந்தேதி ஊசூர் பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது.

    அப்போது சிவநாதபுரம் மலை அடிவாரத்தில் இருந்த தனிப்படை போலீசார், சங்கரை மடக்கி அரியூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

    பின்னர் சங்கர் மீது சாராயம் காய்ச்சி விற்றதாக வழக்கு பதிவு செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி அவரை ஜெயிலில் அடைத்தனர்.

    இதையறிந்த அப்பகுதி மக்கள், எங்கள் வழக்கப்படி திருமணத்தின்போது நாட்டாமை தான் மணமகனிடம் தாலி எடுத்து கொடுப்பார். அப்போது தான் திருமணத்தை நடத்த முடியும்.

    எனவே அவரை விடுவிக்க வேண்டும் என்று போலீசாரிடம் கோரிக்கை விடுத்தனர். ஆனாலும் சங்கரை விடுவிக்கவில்லை.

    இதற்கிடையில் அத்தியூர் ஊராட்சி தலைவரும், அணி மலை மக்களும் சேர்ந்து நாட்டாமை சங்கரை திருமணத்துக்கு ஜாமீனில் அழைத்து வர முயற்சித்தனர். ஆனால் சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் அந்த முயற்சியும் தோல்வி அடைந்தது.

    இதனால் மலை கிராம வழக்கப்படி மணமகன் கையில் தாலி எடுத்து கொடுக்க நாட்டாமை இல்லாத நிலையில் நேற்று நடைபெற இருந்த திருமணத்தை அவரது குடும்பத்தினர் நிறுத்தி விட்டனர்.

    திருமணம் நின்று போனதால் மலைவாழ் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • பெண்ணிற்கு அவரது பெற்றோர் வேறொரு மாப்பிள்ளையை பார்த்து நிச்சயித்தனர்.
    • திருமணத்திற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வந்தது.

    பல்லடம்:

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மேட்டுப்பட்டியை சேர்ந்த செல்வராஜ் என்பவரது மகன் தரணிதரன்(வயது 29). இவர் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அம்மாபாளையம் பகுதியில் உள்ள தனியார் நூற்பாலையில் தங்கி பணிபுரிந்து வந்தார்.

    அப்போது அங்கு பணிபுரிந்த இளம்பெண்ணுக்கும் தரணிதரனுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் காதலாக மாறியது. இருவரும் நெருங்கி பழகி வந்தனர். இந்தநிலையில் பழகிய சில நாட்களில் தரணிதரனின் நடவடிக்கைகள் பிடிக்காததால் அந்த பெண் தரணிதரனிடம் பேசுவதை நிறுத்தி விட்டார்.

    மேலும் அந்த பெண்ணிற்கு அவரது பெற்றோர் வேறொரு மாப்பிள்ளையை பார்த்து நிச்சயித்தனர். திருமணத்திற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வந்தது.

    இதையறிந்த தரணிதரன், தனது காதலியை தொடர்பு கொண்டு தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தினார். இல்லாவிட்டால் 2பேரும் சேர்ந்து இருந்த புகைப்படங்களை மாப்பிள்ளைக்கு அனுப்பி வைத்து விடுவேன் என்று மிரட்டியதுடன், அந்த புகைப்படங்களை காதலிக்கு பார்த்திருந்த மாப்பிள்ளையின் செல்போனுக்கு அனுப்பினார். இதனால் அந்த பெண்ணின் திருமணம் தடைப்பட்டது.

    மேலும் காதலியை தொடர்பு கொண்ட தரணிதரன் ரூ.3 லட்சம் பணம் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் நாம் இருவரும் சேர்ந்திருந்த படங்களை இணைய தளத்தில் வெளியிடுவேன் என மிரட்டி உள்ளார். இதனால் பயந்து போன அந்தப்பெண் அவரது பெற்றோரிடம் கூறியுள்ளார்.

    உடனே இது குறித்து பல்லடம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி தரணிதரனை கைது செய்தனர். தொடர்ந்து அவர் இது போல் வேறு பெண்களை ஏமாற்றியுள்ளாரா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நீண்ட நேரம் ஆகியும் மாப்பிள்ளை வீட்டார் திருமண மண்டபத்திற்கு வரவில்லை.
    • மணப்பெண்ணின் தந்தை மணமகன் வீட்டிற்கு சென்று மாப்பிள்ளை மற்றும் உறவினர்களை திருமண மண்டபத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், ஐதராபாத் பகுதியை சேர்ந்தவர் 30 வயது வாலிபர். இவர் பஸ் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவருக்கும் ஐதராபாத் அருகே உள்ள ஒரு பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு நேற்று முன்தினம் திருமணம் நடைபெற இருந்தது.

    மணமகனின் வீட்டார் பெண்ணின் வீட்டாரிடம் கட்டில், மெத்தை, பீரோ, பிரிட்ஜ், வாஷிங்மெஷின் உள்ளிட்ட பொருட்களை சீர்வரிசையாக கேட்டு இருந்தனர்.

    அதன்படி மணப்பெண்ணின் வீட்டார் அவர்கள் கேட்டதை விட குறைவான பொருட்களை திருமணத்திற்கு முந்தின நாள் மண்டபத்திற்கு கொண்டு வந்தனர்.

    மேலும் அவர்கள் கொண்டு வந்த கட்டில் உள்ளிட்ட பர்னீச்சர்கள் பழைய பொருட்களாக இருந்தது.

    மணப்பெண்ணின் உறவினர்கள் மண்டபத்தில் விருந்து சமைத்து தங்களது உறவினர்களுடன் மாப்பிள்ளை வீட்டாருக்காக காத்துக் கொண்டு இருந்தனர்.

    நீண்ட நேரம் ஆகியும் மாப்பிள்ளை வீட்டார் திருமண மண்டபத்திற்கு வரவில்லை. இதையடுத்து மணப்பெண்ணின் தந்தை மணமகன் வீட்டிற்கு சென்று மாப்பிள்ளை மற்றும் உறவினர்களை திருமண மண்டபத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.

    அப்போது மணமகனின் வீட்டார் நாங்கள் கேட்ட சீர்வரிசை பொருட்களை தரவில்லை. மேலும் நீங்கள் கொண்டு வந்துள்ள கட்டில், பீரோ உள்ளிட்ட பர்னீச்சர்கள் ஏற்கனவே பயன்படுத்தியது போல் பழையதாக உள்ளது.

    இந்த திருமணத்தில் எங்களது மகனுக்கு விருப்பமில்லை என அநாகரிகமாக பேசி திருப்பி அனுப்பினர்.

    அப்போது மணமகளின் தந்தை பர்னீச்சர் பொருட்கள் புதியதாக வாங்கி தருவதாகவும் தற்போது திருமணத்தை நிறுத்த வேண்டாம். இல்லை என்றால் உறவினர்கள் முன்னிலையில் அவமானம் ஆகிவிடும் என பலமுறை கெஞ்சி பார்த்தும் அவர்கள் மனம் இறங்கவில்லை.

    இதனால் ஆத்திரமடைந் மணப்பெண்ணின் தந்தை வரதட்சணை கேட்டு திருமணத்தை நிறுத்தியதாக மணமகன் மற்றும் அவரது பெற்றோர்கள் மீது அங்குள்ள போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • சதீசும், ரேவதியும் ராயபுரத்தில் உள்ள பிரபல நகைக்கடையில் வேலை பார்த்து வந்துள்ளனர். அப்போது அவர்களுக்குள் இடையே காதல் ஏற்பட்டது.
    • ரேவதிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது பற்றி அறிந்ததும் சதீஷ் கவலை அடைந்தார். அவர் எப்படியாவது திருமண நேரத்தில் கடைசியில் புகுந்து ரேவதியின் கழுத்தில் தாலி கட்டி விட வேண்டும் என்று திட்டமிட்டு இருக்கிறார்.

    பெரம்பூர்:

    தண்டையார்பேட்டை நேதாஜி நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன். என்ஜினீயர். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ரேவதிக்கும் கடந்த 4 மாதத்துக்கு முன்பு திருமணம் செய்ய பெற்றோர் நிச்சயம் செய்தனர்.

    இன்று அவர்களது திருமணம் தண்டயார்பேட்டை வைத்தியநாதன் மேம்பாலம் அருகே உள்ள முருகன் கோவிலில் உள்ள மண்டபத்தில் நடைபெற ஏற்பாடு செய்து இருந்தனர். முன்னதாக நேற்று இரவு மணமக்கள் வரவேற்பும் சிறப்பாக நடைபெற்றது.

    இன்று காலை 6.30 மணிக்கு மேல் திருமண சடங்குகள் முடிந்து மணமேடையில் மணமகன் மணிகண்டனும், மணமகள் ரேவதியும் அமர்ந்து இருந்தனர். வேதமந்திரங்கள் முழங்க மணமகன் மணிகண்டன் தாலியை எடுத்து மணமகள் ரேவதியின் கழுத்தில் கட்ட தயார் ஆனார்.

    அந்த நேரத்தில் அருகே நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவர் திடீரென மணமகன் மணிகண்டன் கையில் வைத்திருந்த தாலியை தட்டி விட்டார். இதில் தாலி கீழே தரையில் விழுந்தது.

    இதனால் மணமகன் மணிகண்டன் அதிர்ச்சி அடந்தார். அப்போது எதிர்பாராமல் நடந்து விட்டதாக கூறிய அந்த வாலிபர் தாலியை எடுத்து மணிகண்டனிடம் கொடுப்பது போல் நடித்து மணமகள் ரேவதியின் கழுத்தில் கட்ட முயன்றார்.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த மணமகனும், அருகில் இருந்த உறவினர்களும் அந்த வாலிபரை மடக்கி பிடித்து தாலி கட்டும் முயற்சியை தடுத்தனர். அவனிடம் இருந்த தாலியையும் பறித்தனர்.

    உடனே அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். அவனை அங்கிருந்தவர்கள் மடக்கி பிடித்து விசாரித்தனர்.

    அப்போதுதான் அவர் மணமகள் ரேவதியை காதலித்து வந்தது தெரிந்து திருமண வீட்டார் அதிர்ச்சி அடைந்தனர்.

    விசாரணையில் அவர் தண்டையார்பேட்டை கைலாசம் தெருவைச் சேர்ந்த சதீஷ் என்பது தெரிந்தது.

    இதைத் தொடர்ந்து திருமணம் நின்று போனது. இதனால் மணமக்களை வாழ்த்த வந்த உறவினர்கள் சோகத்துடன் திருமண மண்டபத்தில் இருந்து வெளியேறினர்.

    சதீசும், ரேவதியும் ராயபுரத்தில் உள்ள பிரபல நகைக்கடையில் வேலை பார்த்து வந்துள்ளனர். அப்போது அவர்களுக்குள் இடையே காதல் ஏற்பட்டது.

    இதற்கிடையே ரேவதிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது பற்றி அறிந்ததும் சதீஷ் கவலை அடைந்தார். அவர் எப்படியாவது திருமண நேரத்தில் கடைசியில் புகுந்து ரேவதியின் கழுத்தில் தாலி கட்டி விட வேண்டும் என்று திட்டமிட்டு இருக்கிறார்.

    அதன்படி சதீஷ் நேற்று நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் இருந்தே திருமண மண்டப தில் சுற்றி வந்துள்ளார். மணமகள் ரேவதியின் நண்பர் என்று கூறியதால் அவர் மீது யாருக்கும் சந்தேகம் ஏற்படவில்லை.

    இதனை சாதகமாக பயன்படுத்திய சதீஷ் மணமேடை வரை அருகே வந்து நின்றார். தாலி கட்டும் நேரத்தில் மணமகன் கையில் இருந்த தாலியை தட்டி விட்டு அதனை காதலியின் கழுத்தில் கட்ட முயன்று கடைசியில் தோல்வி அடைந்தார்.

    திருமணம் நின்றதால் இரு வீட்டாருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இரு தரப்பினரும் சரமாரியாக குற்றம் சாட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் திருமண மண்டபம் களை இழந்து சோகமயமாக காணப்பட்டது.

    இது தொடர்பாக ஆர்.கே.நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் இருவீட்டாரையும் மற்றும் மணமகள், மணமகன், காதலன் ஆகிய 3 பேரையும் வரவழைத்து விசாரித்தனர்.

    3 பேரும் மாறி மாறி ஒருவர் மீது ஒருவர் குற்றம் கூறி வருவதால் இதில் எந்த முடிவும் எடுக்க முடியாமல் போலீசார் குழப்பத்தில் உள்ளனர். 3 பேரின் எதிர்காலமும் பாதிக்காத வகையில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

    திருமணம் நிச்சயம் செய்த நாள் முதல் ரேவதி தனது காதலன் குறித்து யாரிடமும் சொல்லாமல் இருந்தார். அவர் எப்போதும் போல் மணமகன் மணிகண்டனிடம் பேசி இருக்கிறார்.

    இதனால் யாருக்கும் அவர் மீது சந்தேகம் ஏற்படவில்லை. திருமண வரவேற்பின்போது சதீஷ் மணமக்கள் அருகில் நின்று போட்டோவுக்கு போஸ் கொடுத்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் இன்று காலை 14 வயது சிறுமிக்கு நடக்க இருந்த திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
    சேத்தியாத்தோப்பு:

    கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள சாந்தி நகர் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயகணேசமூர்த்தி(வயது25). விவசாயி. இவருக்கும் சேத்தியாத்தோப்பை அடுத்த வட்டாத்தூர் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமிக்கும் திருமணம் செய்ய அவர்களது பெற்றோர்கள் முடிவு செய்தனர்.

    அதன் பேரில் இவர்களது திருமணம் சேத்தியாதோப்பில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் இன்று காலை நடக்க இருந்தது.

    இந்த நிலையில் சிறுமிக்கு நடக்க இருந்த திருமணம் குறித்து கடலூரில் உள்ள குழந்தைகள் நல பாதுகாப்பு குழும அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து குழந்தைகள் நல பாதுகாப்பு குழும அதிகாரிகள் மற்றும் சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் அக்னீஸ்வரி, சப்- இன்ஸ்பெக்டர் திரிபுர சுந்தரி ஆகியோர் தலைமையிலான போலீசார் நேற்று நள்ளிரவில் வட்டாத்தூரில் உள்ள சிறுமியின் வீட்டிற்கு சென்றனர்.

    பின்னர் அங்கிருந்த சிறுமியின் பெற்றோரிடம் சிறுமிக்கு நடக்க இருந்த திருமணம் குறித்து விசாரித்தனர். 18 வயது நிரம்பும் வரை சிறுமிக்கு திருமணம் செய்து வைக்க கூடாது.

    அதை மீறி திருமணம் செய்து வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிறுமியின் பெற்றோரிடம் அதிகாரிகள் கூறினர்.

    இதை ஏற்று திருமணத்திற்கான ஏற்பாடுகளை உடனே நிறுத்துவதாக சிறுமியின் பெற்றோர் கூறினர்.

    இதை தொடர்ந்து அந்த 14 வயது சிறுமிக்கு நடக்க இருந்த திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.

    அந்த சிறுமியை அதிகாரிகள் மீட்டு கடலூரில் உள்ள குழந்தைகள் நலக்காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
    திருச்சி அருகே மணப்பெண் மாயமானதால் திருமணம் நிறுத்தப்பட்டது. மணப்பெண் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருச்சி:

    திருச்சி பாலக்கரை மல்லிகைபுரத்தை சேர்ந்தவர் ஜான்சன் (வயது 55), ரெயில்வே பாதுகாப்பு படை வீரர்.

    இவரது மகள் மோனிகா (21) . இவருக்கு நேற்று திருமணம் நடைபெற இருந்தது. இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு திடீரென மோனிகா மாயமானார்.

    இது குறித்து அவரது தந்தை பாலக்கரை போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி மோனிகா எங்கு சென்றார் , திருமணம் பிடிக்காமல் சென்றாரா? அல்லது யாராவது அவரை கடத்தி சென்றனரா? என்று விசாரணை நடத்தி தேடி வருகின்றனர். இதனால் திருமணம் நிறுத்தப்பட்டது.

    ×