என் மலர்
நீங்கள் தேடியது "Metro Train"
- சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் அடுத்த மாதம் இறுதியில் தேசிய பொது பயண அட்டையை வழங்க இருக்கிறது.
- மெட்ரோ ரெயில், மாநகர பஸ், புறநகர் ரெயிலில் ஒரே பயண அட்டையில் பயணம் செய்ய முடியும்.
சென்னை:
சென்னையில் பெருகி வரும் மக்கள் தொகைக்கும், நகர விரிவாக்கத்துக்கும் ஏற்ப போக்குவரத்து வசதிகள் திட்டமிடப்பட்டு வருகிறது.
தற்போது சென்னையில் மாநகர பஸ், மெட்ரோ ரெயில், புறநகர் மின்சார ரெயில் சேவையை பொது மக்கள் அதிகம் பயன்படுத்தி வருகிறார்கள். இதற்காக தனித்தனியாக பயணச் சீட்டு எடுத்து பயணம் செய்கிறார்கள்.
இந்த நிலையில் மெட்ரோ ரெயில், மாநகர பஸ், புற நகர் மின்சார ரெயிலில் செல்பவர்கள் பொதுவான ஒரே பயண அட்டை மூலம் பயணம் செய்வதற்கான புதிய திட்டம் அடுத்த மாதம் இறுதியில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இதுதொடர்பான சாத்தியக்கூறுகள் தொடர்பாக கடந்த வாரம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் சென்னை பெருநகர ஒருங்கிணைந்த போக்குவரத்து குழும கூட்டத்தில் ஆலோசனை நடத்தினார். அப்போது புதிய பயண திட்டத்துக்கு ஒப்புதல் அளித்ததாக தெரிகிறது.
இதையடுத்து சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் அடுத்த மாதம் இறுதியில் தேசிய பொது பயண அட்டையை வழங்க இருக்கிறது. இதற்கான பணிகள் நடந்து வருகின்றன.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரெயில் அதிகாரி ஒருவர் கூறும்போது, 'சென்னை மெட்ரோ ரெயிலில் தேசிய பொது பயண அட்டை (என்.சி.எம்.சி) அடுத்த மாதம் இறுதியில் வழங்கப்பட உள்ளது. இதன்மூலம் மெட்ரோ ரெயில், மாநகர பஸ், புறநகர் ரெயிலில் ஒரே பயண அட்டையில் பயணம் செய்ய முடியும். பார்க்கிங் கட்டணம், சுங்கச்சாவடி கட்டணமும்செலுத்தலாம்.
டிசம்பர் இறுதியில் வழங்கப்படும் இந்த பொதுவான பயண அட்டை முதலில் புதிய பயணிகளுக்கு வழங்கப்படும். தற்போது உள்ள பயண அட்டையை பயணிகள் தொடர்ந்து பயன்படுத்தலாம்.
தேசிய பொது பயண அட்டை தயாராக உள்ளது. வங்கிகளுடன் சில சிக்கல்கள் உள்ளன. அதை சரி செய்யும் பணி நடந்து வருகிறது' என்றனர்.
- அதிகபட்சமாக கடந்த 7-ந் தேதி 2 லட்சத்து 47 ஆயிரத்து 352 பேர் பயணம் செய்தனர்.
- பயண அட்டை பயன்படுத்துபவர் எண்ணிக்கை 3 லட்சத்து 96 ஆயிரத்து 240 ஆக அதிகரித்துள்ளது.
சென்னை:
சென்னை மெட்ரோ ரெயிலில் ஒவ்வொரு மாதமும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த நவம்பர் மாதம் 62 லட்சத்து 71 ஆயிரத்து 730 பேர் பயணித்தனர். அதிகபட்சமாக கடந்த 7-ந் தேதி 2 லட்சத்து 47 ஆயிரத்து 352 பேர் பயணம் செய்தனர். அக்டோபர் மாதத்தை விட நவம்பர் மாதத்தில் ஒரு லட்சத்து 15 ஆயிரம் பேர் அதிகமாக பயணம் செய்துள்ளனர்.
பயண அட்டை பயன்படுத்துபவர் எண்ணிக்கை 3 லட்சத்து 96 ஆயிரத்து 240 ஆக அதிகரித்துள்ளதாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ள தொலைத் தொடர்பு அடிப்படையிலான ரெயில் கட்டுப்பாட்டு அமைப்பு டிரைவர் இல்லாமல் தானாகவே ரெயில் இயங்குவதற்கு வழிவகுக்கிறது.
- டிரைவர் இல்லா பயணிகள் ரெயிலை இயக்குவதற்கு, பல்வேறு பாதுகாப்பு அளவீடுகள் கையாளப்படும்.
சென்னை:
சென்னையில் ரூ.1,620 கோடி செலவில் டிரைவர் இல்லாத தானியங்கி மெட்ரோ ரெயில் இயக்குவதற்கான பணிகள் தொடங்க இருப்பதாக சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ள தொலைத் தொடர்பு அடிப்படையிலான ரெயில் கட்டுப்பாட்டு அமைப்பு டிரைவர் இல்லாமல் தானாகவே ரெயில் இயங்குவதற்கு வழிவகுக்கிறது. இந்தச் சிறப்பான கட்டமைப்புக்கு உயரிய பாதுகாப்பு மதிப்பீட்டுக் குழுவால் சான்றளிக்கப்பட இருப்பதாகவும் மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
டிரைவர் இல்லா பயணிகள் ரெயிலை இயக்குவதற்கு, பல்வேறு பாதுகாப்பு அளவீடுகள் கையாளப்படும். வெற்றிகரமான பரிசோதனைகளுக்கு பின்னர் ரெயில் கட்டுப்பாட்டு அமைப்பு, தள பரிசோதனை மற்றும் இதர அமைப்புகளுடன் ஒருங்கிணைக்கப்படும்.
இவ்வாறு மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
- மெட்ரோ ரெயில் சேவை 2 வழித்தடத்திலும் தடையில்லாமல் இயக்கப்பட்டன.
- புயல், மழையின் தாக்கம் இரவில் அதிகமாக இருந்த போதிலும் மெட்ரோ ரெயில் பயணிகள் பயணத்தை தொடர்ந்தனர்.
சென்னை:
புயல் மழை காரணமாக சென்னையில் பஸ் போக்குவரத்து தடைப்பட்ட போதும் எக்ஸ்பிரஸ், மின்சார ரெயில் சேவை வழக்கம் போல் செயல்பட்டன.
மெட்ரோ ரெயில் சேவையும் 2 வழித்தடத்திலும் தடை யில்லாமல் இயக்கப்பட்டன. புயல், மழையின் தாக்கம் இரவில் அதிகமாக இருந்த போதிலும் மெட்ரோ ரெயில் பயணிகள் பயணத்தை தொடர்ந்தனர்.
- சென்னையில் உள்ள 41 மெட்ரோ ரெயில் நிலையங்களில் 4 குழுக்கள் ஆய்வு செய்து சேத மதிப்பீட்டை கணக்கிட்டது.
- மெட்ரோ ரெயில் நிலைய மேற்கூரைகள், வழிகாட்டி பலகைகள் சேதம் மற்றும் குழாய் உடைப்பு உள்ளிட்டவை ஏற்பட்டுள்ளன.
சென்னை:
வங்க கடலில் உருவான 'மாண்டஸ்' புயல் நேற்று நள்ளிரவில் மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது.
மாண்டஸ் புயல் காரணமாக சென்னை மாநகர் முழுவதும் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. கிழக்கு மண்டலத்துக்குட்பட்ட பகுதியில் 73 மரங்களும், வடக்கு மற்றும் மேற்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் 24 மரங்களும் சாய்ந்து விழுந்தன. இப்படி நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் விழுந்த மரங்களை மாநகராட்சி ஊழியர்களும், போலீசாரும் ஒருங்கிணைந்து அகற்றினார்கள்.
10-க்கும் மேற்பட்ட இடங்களில் மின்கம்பங்களும் சரிந்து விழுந்தன. புயலின் தாக்கம் நள்ளிரவுக்கு மேல் தீவிரமானதை தொடர்ந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் மாண்டஸ் புயல் காரணமாக சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் ரூ.3 கோடியே 45 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள 41 மெட்ரோ ரெயில் நிலையங்களில் 4 குழுக்கள் ஆய்வு செய்து சேத மதிப்பீட்டை கணக்கிட்டுள்ளது. மெட்ரோ ரெயில் நிலைய மேற்கூரைகள், வழிகாட்டி பலகைகள் சேதம் மற்றும் குழாய் உடைப்பு உள்ளிட்டவை ஏற்பட்டுள்ளன.
சீரமைக்கும் பணிகள் உடனடியாக மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மெட்ரோ ரெயில் திட்டத்தின் 2ஆம் கட்ட பணிகளுக்காக காந்தி சிலையை இடமாற்றம் செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.
- பணிகள் நிறைவடைந்ததும் காந்தி சிலை மீண்டும் பழைய இடத்தில் வைக்கப்படும்.
சென்னை:
சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் 2ஆம் கட்ட பணிகளுக்காக காந்தி சிலையை இடமாற்றம் செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. இதையடுத்து, தமிழக அரசிடம் மெட்ரோ ரெயில் நிர்வாகம் அனுமதி கோரியிருந்தது.
தமிழக அரசு இன்று ஒப்புதல் அளித்திருப்பதை அடுத்து, இந்த மாத இறுதிக்குள் காந்தி சிலையை இடமாற்றம் செய்ய மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது. தற்போது காந்தி சிலை அமைந்திருக்கும் பகுதியில் தான், இரண்டாம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்தின் 90 சதவீத பணிகள் நடைபெறவிருக்கிறது.
இந்தப் பணிகள் நிறைவடைந்ததும் காந்தி சிலை மீண்டும் பழைய இடத்தில் வைக்கப்படும். சிலை மீண்டும் பழைய இடத்துக்கு மாற்றப்படும் வரை காந்தி சிலையை மக்கள் பார்வையிடவோ, மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதோ இயலாது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மெட்ரோ ரெயில் திட்டப் பணிகளுக்காக ராட்சத இயந்திரங்களை பயன்படுத்தும் போது சிலைக்கு ஏதேனும் சேதாரம் ஆகக் கூடாது என்பதற்காகவே காந்தி சிலை 15 மீட்டர் தொலைவுக்கு இடமாற்றம் செய்யப்படுவதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
- மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட திட்டத்தில் 43 கிலோ மீட்டர் தொலைவுக்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட உள்ளது.
- அடையாறு ஆற்றில் 40 மீட்டர் ஆழத்திற்கு துளைகள் அமைக்க மண் பரிசோதனை செய்யும் பணிகள் நிறைவடைந்துள்ளது.
சென்னை:
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் விமான நிலையம் - விம்கோ நகர், சென்ட்ரல்- பரங்கிமலை ஆகிய இரண்டு வழித்தடங்களில் சுமார் 55 கிலோமீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
இதை தொடர்ந்து தற்போது ரூ.63,246 கோடி மதிப்பில் 118.9 கிலோ மீட்டர் தூரத்துக்கு 3 வழித்தடங்களில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டப்பணி நடைபெறுகிறது.
இந்த திட்டத்தில் கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி புறவழிச்சாலை வரை 26.1 கிலோ மீட்டர் தொலைவுக்கும், மாதவரம்-சிறுசேரி சிப்காட் வரை 45.8 கி.மீட்ட ருக்கும், மாதவரம் முதல்- சோழிங்கநல்லூர் வரை 47 கிலோ மீட்டர் தூரத்துக்கும் வழித்தடம் அமைய உள்ளது.
இதில் உயர்மட்ட பாதை, சுரங்க பாதையில் ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. உயர்மட்ட பாதைக்காக தூண்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட திட்டத்தில் 43 கிலோ மீட்டர் தொலைவுக்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட உள்ளது. இதில் 48 ரெயில் நிலையங்கள் இடம் பெறுகின்றன.
மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான வழித்தடத்தில் கிரீன்வேஸ் சாலை மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து அடையாறு சந்திப்பு மெட்ரோ ரெயில் நிலையம் செல்வதற்காக அடையாறு ஆற்றின் கீழ் சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது.
கிரீன்வேஸ் சாலையில் இருந்து அடையாறு ஆற்றை கடந்து அடையாறு டெப்போ நோக்கி சுரங்கப்பாதை அமைக்கும் பணி அடுத்த மாதம் (ஜனவரி) 15-ந்தேதி நடைபெற உள்ளது. அடையாறு ஆற்றின் கீழே அமைய இருக்கும் இந்த சுரங்கப்பாதை மக்களை வியக்க வைக்கும்படியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்காக ஆரம்பகட்ட பணிகள் நடந்தது முடிந்துள்ளன. அடையாறு ஆற்றில் 40 மீட்டர் ஆழத்திற்கு துளைகள் அமைக்க மண் பரிசோதனை செய்யும் பணிகள் நிறைவடைந்துள்ளது.
இதற்காக துளையிடும் ராட்சத எந்திரம் பயன்படுத்தப்பட உள்ளது. தற்போது பருவமழை பெய்து வந்ததால் சுரங்கப்பாதை தோண்டுவதற்கான பணிகளை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது.
அடுத்த மாதம் பருவமழை முழுவதும் ஓய்ந்துவிடும் என்பதால் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அடையாறு ஆற்றின் கீழ் சுரங்கப்பாதை தோண்டப்படும்.
இதுகுறித்து மெட்ரோ ரெயில் அதிகாரி ஒருவர் கூறும்போது, கிரீன்வேஸ் சாலையில் இருந்து அடையாறு ஆற்றை கடந்து சுரங்கப்பாதை அமைக்கும் பணி அடுத்த மாதம் 15-ந் தேதி தொடங்கும். இது மாதவரம் பால்பண்ணையில் இருந்து சிறுசேரி சிப்காட் வரையிலான வழித்தடத்தின் ஒரு பகுதியாகும். சுரங்கப்பாதை தோண்டுவதற்கான ஆரம்ப கட்ட பணிகள் முடிந்து உள்ளன. சுரங்கப்பாதை அமைக்கும்போது பல பாதுகாப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்படும். அடையாறு மற்றும் திருவான்மியூரில் உள்ள நிலையங்கள், புரசைவாக்கம், நுங்கம்பாக்கம், ராயப்பேட்டை மற்றும் மந்தவெளி போன்ற இடங்களுக்கு முக்கியமான இணைப்பாக இருக்கும் என்றார்.
- 35 மீட்டர் ஆழத்தில் ஒன்றன் மேல் ஒன்றாக 2 சுரங்க வழித்தட பாதை அமைக்கப்பட உள்ளன.
- மயிலாப்பூரில் மெட்ரோ ரெயில் பல அடுக்கு சுரங்கப்பாதையாக அமைக்க திட்டமிட்டு உள்ளது.
சென்னை:
மெட்ரோ 2-வது கட்ட வழித்தட பாதையில் டிரைவர் இல்லாமல் மெட்ரோ ரெயிலை இயக்க ஏற்பாடு செய்யப்படுகிறது.
சென்னை மெட்ரோ ரெயில் 2-வது கட்ட பணிகள் நடந்து வருகிறது. 118.9 கி.மீ தூரத்துக்கு மெட்ரோ ரெயில் பணிகள் தற்போது நடக்கிறது. இதில் 42 கி.மீட்டர் பூமிக்கடியில் சுரங்க வழித்தட பாதையில் அமைகிறது. இதில் 48 ரெயில் நிலையங்கள் அமைக்கப்படுகிறது.
இதில் 3 நிலையங்கள் மிக தாழ்வாக அமைக்கப்பட உள்ளது. இந்த பணிகள் வருகிற 2026-க்குள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. முதல்கட்டமாக, அண்ணா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை மற்றும் அண்ணாநகர் ஆகிய பகுதிகளில் உள்ள அகலமான சாலைகளின் கீழ் உள்ளதால், நிலத்தடிப் பகுதியில் சுரங்கப்பாதைகள் ஒன்றன்பின் ஒன்றாக அமைக்கப்பட்டன.
2-வது கட்ட மெட்ரோ ரெயில் பணிகள் மாதவரம் -சிறுசேரி வரை அமைய கச்சேரி சாலை, ஆழ்வார்பேட்டை மற்றும் பாரதிதாசன் சாலையில் அமைய உள்ள மெட்ரோ ரெயில் நிலையங்கள் மிக குறுகிய இடத்தில் அமைக்கப்பட இருக்கிறது.
இதற்காக மெட்ரோ ரெயில் சுரங்கம் பல அடுக்குகளாக அமைக்கப்பட இருக்கிறது. இந்த நிலையங்கள் குறுகியதாகவும் ஆழத்தில் அமைய உள்ளது.
35 மீட்டர் ஆழத்தில் ஒன்றன் மேல் ஒன்றாக 2 சுரங்க வழித்தட பாதை அமைக்கப்பட உள்ளன. மயிலாப்பூரில் மெட்ரோ ரெயில் பல அடுக்கு சுரங்கப்பாதையாக அமைக்க திட்டமிட்டு உள்ளது.
மயிலாப்பூர் பகுதியில் அமைய உள்ள மெட்ரோ சுரங்கபாதை பணிகள் கடினமான பாறையில் சவாலான வகையில் அமைய உள்ளது. இந்த சுரங்க பாதைகள் அடுக்கு சுரங்கமாக ஒன்றன் பின் ஒன்றாக கீழே இருந்து கட்டப்பட உள்ளது.
4 ஆண்டுகள் இந்த பணிகள் நடைபெறும். 2026-ம் ஆண்டில் மெட்ரோ ரெயில் 2-வது கட்ட பணிகள் முடிந்து பொதுமக்கள் விரைவு சேவைக்கு மெட்ரோ ரெயில் இயக்கப்படும். இந்த வழித்தடத்தில் டிரைவர் இல்லாமல் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட உள்ளது. கட்டுப்பாட்டு அறையில் இருந்து வரும் சிக்னல்களுக்கு ஏற்ப மெட்ரோ ரெயில்கள் தானாக இயங்கும்.
- மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்பட்ட 2015-ம் ஆண்டில் இருந்து 2022 வரை 15.88 கோடி பேர் பயணித்துள்ளனர்.
- 2021-ம் ஆண்டு 3.56 கோடி பேர் அதிகமாக பயணம் மேற்கொண்டுள்ளனர்.
சென்னை :
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க கடந்த 2015- ஆம் ஆண்டு மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்பட்டது. மெட்ரோவின் முதல் கட்ட சேவை ஆலந்தூர், சென்னை கோயம்பேடு இடையே தொடங்கப்பட்டது. பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டதை அடுத்து ரெயில் சேவை விரிவாக்கம் செய்யப்பட்டது. விமானநிலையம் முதல் விம்கோ நகர் வரை விரிவாக்கம் செய்யப்பட்டது. இதையடுத்து பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்தது.
இந்நிலையில் 2022-ம் ஆண்டில் 6.09 கோடி பேர் மெட்ரோ ரெயிலில் பயணம் மேற்கொண்டுள்ளதாக நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்பட்ட 7 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 2022-ம் ஆண்டு 6.09 கோடி பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
முன்னதாக 2021-ம் ஆண்டு 3.56 கோடி பேர் அதிகமாக பயணம் மேற்கொண்டுள்ளனர்.
மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்பட்ட 2015-ம் ஆண்டில் இருந்து 2022 வரை 15.88 கோடி பேர் பயணித்துள்ளனர்.
- மாதவரம் போன்ற தொலை தூர பகுதிகளை பழைய மகாபலிபுரம் சாலையில் ஐ.டி. நிறுவனங்களுடன் இணைக்கும்.
- ராதாகிருஷ்ணன் சாலை- ராயப்பேட்டை சந்திப்பில் உள்ள மேம்பாலத்தின் ஒரு பகுதி 50 சதவீதம் அளவுக்கு இடிக்கப்பட உள்ளது.
சென்னை:
சென்னை நகரில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக 2-ம் கட்டமாக 118.9 கிலோ மீட்டர் தொலைவுக்கு 3 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதில் மாதவரம் முதல் சிறுசேரி சிப்காட் வரையிலான 45.8 கிலோ மீட்டர் தூரத்திற்கான பணிகள் 2026-ம் ஆண்டு நிறைவடையும். இந்த வழித்தடத்தில் 50 ரெயில் நிலையங்கள் அமைகின்றன.
இந்த வழித்தடத்தில் கிரீன்வேஸ் சாலையில் இருந்து அடையாறு ஆற்றை கடந்து அடையாறு டெப்போ நோக்கி சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது. இதற்காக அடையாறு ஆற்றின் கீழேயும் சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது.
இந்த மெட்ரோ ரெயில் பாதையில் சுரங்கம் தோண்டும் பணிக்காக சென்னை அடையாறு சந்திப்பில் உள்ள மேம்பாலமும், ராதாகிருஷ்ணன் சாலை- ராயப்பேட்டை சந்திப்பில் உள்ள மேம்பாலமும் இடிக்கப்பட உள்ளன.
இந்த 2 மேம்பாலங்களும் 4 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கட்டப்படும். அடையாறு சந்திப்பில் பாலம் இடிக்கும் பணிகளை தொடங்குவதற்கு முன்பு போக்குவரத்து பாதிக்கப்படாத வகையில் அதற்கு இணையாக இருவழி மேம்பாலம் கட்டப்பட உள்ளது.
அதன் பிறகு சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் தொடங்கப்படும். அந்த பணிகள் முடிந்த பிறகு இடிக்கப்பட்ட பாலம் மீண்டும் கட்டப்பட உள்ளது. இதன் மூலம் அடையாறு சந்திப்பில் 4 வழிச்சாலை மேம்பாலம் அமைய உள்ளது. இதற்கான கட்டுமான பணிகள் அடுத்த ஆண்டு தொடங்குகிறது.
இந்த மேம்பாலம் அடையாறை பெசன்ட் நகர் மற்றும் திருவான்மியூருடன் இணைக்கிறது. அடையாறு டெப்போ மெட்ரோ ரெயில் நிலையம் 15 மீட்டர் ஆழத்தில் அமைக்கப்படுகிறது.
இது மாதவரம் போன்ற தொலை தூர பகுதிகளை பழைய மகாபலிபுரம் சாலையில் ஐ.டி. நிறுவனங்களுடன் இணைக்கும்.
மேலும் ராதாகிருஷ்ணன் சாலை- ராயப்பேட்டை சந்திப்பில் உள்ள மேம்பாலத்தின் ஒரு பகுதி 50 சதவீதம் அளவுக்கு இடிக்கப்பட உள்ளது. இந்த இடிக்கப்பட்ட பகுதி மீண்டும் கட்டப்படும். இந்த பாலம் இடிக்கப்பட்ட பிறகு இங்கு போக்குவரத்து மாற்று பாதையில் திருப்பி விடப்பட உள்ளது.
இதுகுறித்து மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
ஆரம்பத்தில் அடையாறை திருவான்மியூருடன் இணைக்கும் மேம்பாலத்தின் ஒரு பகுதியை இடித்து விட்டு தற்காலிக இரும்பு பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது. தற்காலிக பாலத்தை உருவாக்கி அகற்றுவதால் எந்த பலனும் இல்லை. ஏனென்றால் அதற்கு கான்கிரீட் கட்டுமானம் போலவே செலவு அதிகமாகும்.
எனவே அதற்கு இணையாக புதிய மேம்பாலத்தை கட்ட திட்டமிட்டோம். தற்போதுள்ள மேம்பாலத்தின் சில தூண்கள் அகற்றப்பட்டு தற்போதைய வாகன போக்குவரத்து இணையான மேம்பாலத்தை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் அமைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மெட்ரோ ரெயில் டிக்கெட்டை வாட்ஸ்அப் மூலம் பெறும் வசதியை கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.
- மெட்ரோ ரெயில் கேட்டுகள் வழியாக வாட்ஸ்அப் டிக்கெட்களை காண்பித்துவிட்டு ரெயில் நிலையத்துக்குள் செல்லலாம்.
சென்னை:
சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. மெட்ரோ ரெயில் டிக்கெட், கவுண்டர்களில் வழங்கப்படுகிறது. எந்திரத்திலும் டிக்கெட் கொடுக்கப்படுகிறது. மேலும் டிக்கெட் அட்டை பெற்று ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இந்த நிலையில் மெட்ரோ ரெயில் டிக்கெட்டை வாட்ஸ்அப் மூலம் பெறும் வசதியை கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப் எண்ணுக்கு பயணிகள் தகவல் அனுப்பினால் அவர்களுக்கு பயண விருப்பங்கள் வழங்கப்படும். புறப்படும் இடம் மற்றும் சேருமிடத்தை தேர்வு செய்த பிறகு பணம் செலுத்துவதற்கான வழிமுறை வரும் அதன்பிறகு டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மெட்ரோ ரெயில் கேட்டுகள் வழியாக வாட்ஸ்அப் டிக்கெட்களை காண்பித்துவிட்டு ரெயில் நிலையத்துக்குள் செல்லலாம். இந்த வாட்ஸ்-அப் எண், ரெயில் நிலையங்கள், ரெயில்கள் மற்றும் சமூக ஊடகங்களில் விரைவில் விளம்பரப்படுத்தப்படும்.
- சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் கட்டம்-2-ல் வழித்தடங்கள் 3 மற்றும் 5-ல் தண்டவாளங்களை அமைக்க ரூ.163.31 கோடி மதிப்பில் ஒப்பந்தமானது.
- செப்டம்பர் 2023 மற்றும் பிப்ரவரி 2025-க்கு இடையில் தண்டவாளங்கள் 3 அடுக்குகளில் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை:
சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் கட்டம்-2-ல் வழித்தடங்கள் 3 மற்றும் 5-ல் தண்டவாளங்களை அமைக்க ரூ.163.31 கோடி மதிப்பில் ஒப்பந்தமானது. சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் கட்டம்-2-ல் வழித்தடங்கள் 3 மற்றும் 5-ல் பயன்படுத்த 60 கிலோ எச்எச் 1080 தரத்தில் தண்டவாளங்களை அமைப்பதற்காக ஜப்பானில் உள்ள மிட்சி அண்ட் கோ நிறுவனத்திற்கு ஒப்பந்தத்தை ரூ.163.31 கோடி மதிப்பீட்டில் வழங்கியுள்ளது.
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் இயக்குனர் த. அர்ச்சுனன் (திட்டங்கள்) மற்றும் தலைமை பொது மேலாளர் ஹாஜிம் மியாகே மிட்சி அண்ட் கோ நிறுவனம் ஜப்பான் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
அமைக்கப்பட வேண்டிய தண்டவாளங்களின் மொத்த அளவு 13885 மெட்ரிக் டன். சோதனை நடைமுறையுடன் கூடிய தண்டவாளங்களின் உற்பத்தி ஏப்ரல் 2023 முதல் தொடங்க உள்ளது. செப்டம்பர் 2023 மற்றும் பிப்ரவரி 2025-க்கு இடையில் தண்டவாளங்கள் 3 அடுக்குகளில் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தண்டவாளங்கள் சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் கட்டம்-2-ல் வழித்தடம் 3-ல் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை மற்றும் வழித்தடம் 4- ல் மாதவரம் முதல் சி.எம்.பி.டி வரை பயன்படுத்தப்பட உள்ளது என்று மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.