search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "MKStalin"

    • தங்க நகை தொழில் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத காரணத்தால் தொழில் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது.
    • தங்க நகை தொழில்துறையினர் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

    தொழில் நகரான கோவை தங்க நகை தொழிலிலும் புகழ்பெற்று விளங்குகிறது.

    தேசிய அளவில் தங்க நகை தயாரிப்பில் மும்பை, கொல்கத்தாவுக்கு அடுத்து 3-வது இடத்தில் கோவை மாவட்டம் உள்ளது. கோவையில் 25 ஆயிரம் பட்டறைகள், 45 ஆயிரம் பொற்கொல்லர்கள், முதன்மை நகை தயாரிப்பாளர்கள் என இந்த தொழிலில் நேரடியாக ஒரு லட்சம் பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.

    கோவையில் தயாரிக்கப்படும் தங்க நகைகள் சிங்கப்பூர், மலேசியா, லண்டன், அமெரிக்கா உள்ளிட்ட பல வெளிநாடுகளிலும் அதிகளவு விற்பனை செய்யப்படுகின்றன.

    வங்கதேசம், இலங்கை போன்ற நாடுகளுக்கு நேரடியாக ஏற்றுமதி செய்தால் அதிக வரி விதிக்கப்படும் என்பதால், துபாய் மூலம் அதிக ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

    இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இந்த தொழில் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத காரணத்தால் தொழில் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் சமீபத்தில் கோவையில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், குறிச்சி தொழிற்பேட்டையில் ரூ.126 கோடி மதிப்பில் தங்க நகை தொழில் பூங்கா அமைக்கப்படும் என அறிவித்தார். இந்த அறிவிப்பானது தங்க நகை தொழில்துறையினர் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

    இதுகுறித்து கோவை தங்க நகை தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் கூறியதாவது:-

    கோவை மாவட்டத்தில் வணிகர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் விற்பனை பிரிவுகளில் தினமும் 200 கிலோ எடையிலான தங்கம் வர்த்தகம் நடைபெறுகிறது.

    தமிழக முதலமைச்சரின் அறிவிப்பு இந்த தொழிலில் உள்ள அனைவருக்கும் மிகப்பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.

    தினமும் கோவை, பிற மாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமானோர் தங்க நகை வர்த்தகம் தொடர்பான பணிகளுக்கு கோவை வந்து செல்கிறார்கள். இவ்வாறு வருவோருக்கு குடிநீர், ஓய்வறை, கழிப்பிடம் என அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை தமிழக அரசு சார்பில் ஏற்படுத்தி தர வேண்டும்.

    கோவை குறிச்சியில் அமைக்கப்படும் தங்க நகை தொழில் பூங்கா திட்டத்தால் இந்த தொழில் மேலும் சிறப்பான வளர்ச்சியை பெறும். தினசரி வர்த்தகம் 250 கிலோவாக உயரும்.

    வேலை வாய்ப்பு 20 சதவீதம் அதிகரிக்கும். கோவைக்கு தினமும் வர்த்தகம் செய்ய வருவோர் எண்ணிக்கை அதிகரிக்கும். தொழில் வளர்ச்சிக்கு ஏற்ப பூங்கா செயல்பட தொடங்கிய பின் வளாகத்தில் வாங்குவோர் விற்போர் கண்காட்சி நடத்த தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    இதனால் தேசிய அளவில் மட்டுமின்றி துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் வர்த்தகர்கள் பலர் கோவைக்கு அதிக எண்ணிக்கையில் வந்து தங்க வணிகம் மேற்கொள்வார்கள்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • 77 மீட்டர் நீளத்திலும் 10 மீட்டர் அகலத்திலும் பாலம் அமைக்கப்பட உள்ளது.
    • இரு பக்கங்களிலும் கல் மண்டபம் அமைக்கப்படுகிறது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம், 133 அடிஉயர திருவள்ளுவர் சிலையை இணைக்கும் வகையில் இரண்டுக்கும் இடையே நெடுஞ்சாலை துறை மூலம் ரூ.37 கோடி செலவில் கண்ணாடி இழையிலான கூண்டு பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

    77 மீட்டர் நீளத்திலும் 10 மீட்டர் அகலத்திலும் பாலம் அமைக்கப்பட உள்ளது. அதிகபட்சம் கடல் அலைக்கு மேல் 7 மீட்டர் உயரத்தில் இந்த பாலம் அமைக்கப்படுகிறது.

    இந்த பாலத்தின் ஆர்ச் உயரம் 11 மீட்டர் ஆகும். முற்றிலும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கம்பிகளால் வடிவமைக்கப்பட்ட கூண்டின் மீது 2.40 மீட்டர் அகலத்தில் கண்ணாடி பகுதி அமைகிறது. இரு பக்கங்களிலும் கல் மண்டபம் அமைக்கப்படுகிறது.

    இந்த பாலத்தில் 101 கூண்டுகள் பொருத்தப்பட உள்ளன. இவை புதுச்சேரியில் இருந்து கண்டெய்னர் லாரிகள் மூலம் கன்னியாகுமரிக்கு கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து முதல் கட்டமாக 30 கூண்டுகள் படகு மூலம் திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள பாறையில் கொண்டு சென்று இறக்கி வைக்கப்பட்டுள்ளது.

    கண்ணாடி கூண்டு பாலம் அமைப்பதற்காக திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள பாறையிலும் விவேகானந்தர் பாறையிலும் ராட்சத கான்கிரீட் தூண்கள் அமைக்கப்பட்டு இரு பக்கத்தையும் இணைக்கும் வகையில் ஆர்ச் போன்ற கூண்டு அமைப்பை பொருத்து வதற்காக இரும்பு தூண்கள் மூலம் சாரமும் அமைக் கப்பட்டுள்ளது.

    திருவள்ளுவர் பாறை மற்றும் விவேகானந்தர் பாறையில் அமைக்கப்பட்டு உள்ள 2 ராட்சத தூண்களுக்கு இடையே இரும்பு கம்பிகளால் வடம் போன்று தயாரிக்கப்பட்ட ரோப்புகள் அமைக்கப்பட்டு அந்த ரோப்புகள் வழியாக தொழில் நுட்ப வல்லுநர்கள் விஞ்சு மூலம் சென்று இந்த கூண்டு ஆர்சுகளை பொருத்தி வருகின்றனர்.

    இந்த இரு பாறைகளிலும் தலா 4 ஆர்ச்சுகள் பொருத்தப்பட்டு உள்ளன. தொடர்ந்து பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை அடுத்த மாதம் (டிசம்பர்) 15-ந் தேதிக்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    திருவள்ளுவர் சிலை கடந்த 2000-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ந்தேதி அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதி திறந்து வைத்தார். இந்த சிலை நிறுவி 25 ஆண்டுகள் நிறைவு பெறும் வெள்ளி விழா அடுத்த மாதம் வர உள்ளது.

    இதனை முன்னிட்டு வருகிற ஜனவரி 1-ந் தேதி புத்தாண்டு பிறக்கும் போது வெள்ளி விழா கொண்டாட்டம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இந்த விழாவில் முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு கண்ணாடி இழை கூண்டு பாலத்தை திறந்து வைப்பார் என கூறப்படுகிறது.

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து மாவட்டங்களிலும் கள ஆய்வு மேற்கொள்ள முடிவு செய்தார்.
    • முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பட்டாசு உற்பத்தியாளர்கள் மற்றும் பட்டாசு தொழிலாளர்களுடன் கலந்துரையாடினார்.

    தமிழக அரசின் நலத் திட்டங்கள் மக்களை சென்று சேர்வதை உறுதி செய்யும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து மாவட்டங்களிலும் கள ஆய்வு மேற்கொள்ள முடிவு செய்தார்.

    அதன்படி, 2 நாள் பயணமாக இன்று விருதுநகர் சென்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அங்குள்ள தனியார் பட்டாசு ஆலையில், பட்டாசு உற்பத்தியாளர்கள் மற்றும் பட்டாசு தொழிலாளர்களுடன் கலந்துரையாடினார்.

    மேலும், பல்வேறு நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்துக் கொண்டு வருகிறார்.

    இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது விருதுநகர் பயணம் தொடர்பாக எக்ஸ் தள பக்கத்தில் நெகிழ்ச்சி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில், " தென்தமிழ்நாட்டுக்கே உரிய வாஞ்சையுடன் "அண்ணே… அண்ணே…" என்றும் - குலவையிட்டும் வரவேற்ற விருதுநகர் மக்கள்" என்று குறிப்பிட்டிருந்தார்.

    மேலும் மற்றொரு பதிவில், "இன்று விருதுநகர் மாவட்ட ஆய்வின்போது, 2 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் பட்டாசுத் தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்களிடம் அவர்களது தேவைகள் குறித்து கலந்துரையாடினேன்" என்றார்.

    • மு.க.ஸ்டாலினின் அளவற்ற அன்பிற்கு நான் எந்நாளும் கடமைப்பட்டுள்ளேன்.
    • கோவை மாவட்ட மக்களின் மேம்பாட்டுக்காக அயராது பாடுபடுவேன்.

    கோவை:

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவையில் 2 நாட்கள் கள ஆய்வு மேற்கொண்டார்.

    முதல் நாள் நிகழ்ச்சியில் விளாங்குறிச்சியில் புதிய தகவல் தொழில்நுட்ப பூங்கா கட்டிடத்தை திறந்து வைத்ததுடன், வீட்டு வசதி வாரியம் சார்பில் நிலம் விலக்கு அளிக்கப்பட்டவர்களுக்கு நில விடுவிப்பு ஆணைகளை வழங்கினார்.

    நேற்று 2-வது நாளாக கள ஆய்வு செய்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கோவை காந்திபுரம் அடுத்த அனுப்பர் பாளையத்தில் சிறைச்சாலைக்கு சொந்தமான 6.98 ஏக்கர் நிலத்தில் ரூ.300 கோடி மதிப்பில் அமைய தந்தை பெரியார் நூலகம் மற்றும் அறிவியல் மையத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

    இந்த விழாவில் பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சரான செந்தில்பாலாஜியை வெகுவாக பாராட்டி பேசினார்.

    செந்தில் பாலாஜி கோவையின் பொறுப்பு அமைச்சராக இருந்து அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் தீவிர களப்பணியாற்றி வந்தார். அவருக்கு இடையில் சில தடைகள் வந்தன.

    அந்த தடைகளை எல்லாம் உடைத்தெறிந்து தற்போது மீண்டும் கோவைக்கு கம்பேக் கொடுத்திருக்கிறார்.

    மீண்டும் அதே உத்வேகத்துடன் கோவை மாவட்டத்தில் அரசின் நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க தீவிர களப்பணியாற்றுவார். அது உறுதி உறுதி என தெரிவித்து, அமைச்சர் செந்தில்பாலாஜியை பாராட்டி தள்ளினார்.

    இந்த நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னை பாராட்டியதற்கு அமைச்சர் செந்தில்பாலாஜி நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது:-

    தடைகள் வந்தபோதெல்லாம் தாயுமானவராய் இருந்து என்னை தாங்கிய தி.மு.க. தலைவரும், தமிழக முதல்-அமைச்சருமான தளபதி மு.க.ஸ்டாலினின் இந்த அளவற்ற அன்பிற்கு நான் எந்நாளும் கடமைப்பட்டுள்ளேன்.

    முதல்-அமைச்சர் ஆணைக்கு இணங்க களப்பணியாற்றி நலத்திட்ட பணிகளை வேகப்படுத்தி கோவை மாவட்ட மக்களின் மேம்பாட்டுக்காக அயராது பாடுபடுவேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார். அத்துடன் முதலமைச்சர் தன்னை பாராட்டிய பேசிய அந்த வீடியோவையும் அந்த பதிவுக்கு கீழே பகிர்ந்துள்ளார்.

    • கலைஞரின் சிலையை திறக்கவாய்ப்பு பெற்றிருப்பது எனக்கு மகிழ்ச்சி.
    • முதலமைச்சர் எண்ணற்ற திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூரில் உள்ள மரகதம் கந்தசாமி திருமண மண்டபத்தின் முன்பு முன்னாள் முதலமைச்சர் மறைந்த கருணாநிதிக்கு 3 அடி உயரத்தில் வெண்கல சிலை நிறுவப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று மாலை நடைபெற்றது.

    விழாவில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு, கருணாநிதியின் சிலையை திறந்து வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் பேசியதாவது:-

    எனக்கும் இந்த விழுப்புரம் மாவட்டத்திற்கும் ஒரு நெருங்கிய, மறக்க முடியாத சொந்தமும், பந்தமும் உண்டு. நான் இளைஞரணி செயலாளராகவும், சட்டப்பேரவை உறுப்பினராகவும், அமைச்சராகவும் பலமுறை இங்கு வந்துள்ளேன்.

    ஆனால் துணை முதல்-அமைச்சராக பொறுப்பேற்று முதல் முறையாக உங்களுடைய அன்பைப்பெற்று இங்கு வந்துள்ளேன். அதுவும் முதல் நிகழ்ச்சியாக கலைஞரின் சிலையை திறக்கவாய்ப்பு பெற்றிருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

    நான் 21 ஆண்டுகளுக்கு முன்பு, கடந்த 2003-ம் ஆண்டில் தளபதி நற்பணி மன்றம் சார்பாக கவுதமசிகாமணி ஏற்பாடு செய்த விளையாட்டுப்போட்டி தான், எனது பொது வாழ்வில் முதன்முறையாக தொடங்கி வைத்த போட்டியாகும்.

    தற்போது விளையாட்டுத்துறை அமைச்சராகவும், துணை முதலமைச்சராகவும் பொறுப்பேற்று மாநில, தேசிய, சர்வதேச அளவிலான போட்டிகளை தொடங்கிவைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளேன்.

    கலைஞரின் கொள்கைகள், லட்சியங்கள், அவருடைய எழுத்துக்கள் ஆகியவற்றை மக்களிடம் கொண்டு சொல்ல வேண்டும் என்பதற்காகத்தான் இதுபோன்று அனைத்து இடங்களிலும் கலைஞர் சிலையை திறந்து வைத்து வருகிறோம்.

    கலைஞர் வழியில் சிறப்பாக ஆட்சி நடத்தி வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த மூன்றரை ஆண்டுகளாக ஏழை, எளிய மக்களுக்காக எண்ணற்ற திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.

    முதலமைச்சராக தலைவர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு செயல்படுத்திய திட்டங்களில் சிலவற்றை மட்டும் இங்கு குறிப்பிடுகிறேன். மகளிருக்கு கட்டண மில்லா பஸ் பயணம் திட்டத்தின் மூலம் மாதம் ரூ.900 முதல் ரூ.1,000 வரை மகளிர் சேமிக்கிறார்கள்.

    இந்த திட்டத்தை மற்ற மாநிலங்களும் செயல்படுத்த தொடங்கியுள்ளன. அதேபோல் புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 கல்வி ஊக்கத்தொகைவழங்கப்பட்டு வருகிறது.

    இந்த திட்டத்தின் மூலம் ஒவ்வொரு மாதமும் 2 லட்சம் மாணவிகள் பயன்பெற்று வருகின்றனர். இத்திட்டம் மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டு தமிழ் புதல்வன் என்றபெயரில் மாதம் ரூ.1,000 ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

    மேலும் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் காலை உணவு திட்டம் என்ற அற்புதமான திட்டம் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் முதன்முதலாக தொடங்கப்பட்டது.

    இதுதவிர முத்தாய்ப்பு திட்டமாக கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தின் மூலம் தகுதியுள்ள அனைத்து மகளிருக்கும் மாதம் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் இதுவரை 1 கோடியே 16 லட்சம் மகளிருக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது.

    ஒரு சில மாவட்டங்களில் இந்ததொகை விடுபட்டிருப்பதாக குறைகள் இருக்கிறது. அந்த குறைகள் விரைவில் நிவர்த்தி செய்யப்பட்டு தகுதியுள்ள அனைத்து மகளிருக்கும் மாதந்தோறும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று இந்தநேரத்தில் உறுதி அளிக்கிறேன்.

    நடந்து முடிந்த நாடாளுமன்றதேர்தலில் மிகப்பெரிய வெற்றியை தி.மு.க.விற்கு தேடிக் கொடுத்தீர்கள்.

    40-க்கு 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வைத்து 100 சதவீதம் வெற்றியை கொடுத்தீர்கள். தி.மு.க. அரசுக்கு மக்களால் கொடுக்கப்பட்ட நற்சான்றுதான் இந்த வெற்றிக்கு காரணம்.

    வரக்கூடிய 2026-ல் நடைபெறும் சட்டமன்ற தேர்தலிலும் தி.மு.க. தலைமையிலான நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவு தந்து குறைந்தது 200 தொகுதிகளில் மாபெரும் வெற்றி பெற வைத்து தலைவர் மு.க.ஸ்டாலினை மீண்டும் முதலமைச்சராக ஆட்சி கட்டிலில் அமர வைக்க வேண்டும் என்ற நிலையை நீங்கள் எல்லோரும் ஏற்படுத்த வேண்டும். அதற்காக இன்று முதலே பிரசாரம் மேற்கொள்ள வேண்டும். நம்முடைய அரசின் திட்டங்கள் மூலம் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு பயனாளி இருப்பார்.

    அவர்களை தொடர்பு கொண்டு இப்போதே பிரசாரத்தை ஆரம்பிக்க வேண்டும். அதனை கலைஞர் சிலை முன்பு நாம் எல்லோரும் உறுதி ஏற்கவேண்டும். எந்த திசையிலிருந்து யார் வந்தாலும் டெல்லியில் இருந்து வந்தாலும், லோக்கலில் இருந்து வந்தாலும், எப்பேற்பட்ட கூட்டணி போட்டு வந்தாலும் அவர்களை வீழ்த்தி விட்டு தி.மு.க. கூட்டணியை மாபெரும் வெற்றி பெற வைக்கவேண்டும். அதற்காக நாம் அனைவரும் அயராது தேர்தல் பணியாற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். 

    • மாவட்ட வாரியாக சென்று கள ஆய்வு செய்ய உள்ளார்.
    • கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது.

    கோவை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக அரசு சார்பில் நிறைவேற்றப்பட்டு வரும் மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் நலத்திட்ட பணிகள் மக்களை முழுமையாக சென்றடைகிறதா? என்பதை மாவட்ட வாரியாக சென்று கள ஆய்வு செய்ய உள்ளார்.

    கள ஆய்வுப்பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாளை (5-ந்தேதி) கோவையில் இருந்து தொடங்க உள்ளார். நாளையும், நாளை மறுநாளும் கோவையில் முகாமிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று ஆய்வு செய்கிறார்.

    இதற்காக நாளை காலை 10 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு கோவை வருகிறார். கோவை விமான நிலையத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    காலை 11.30 மணிக்கு விளாங்குறிச்சியில் எல்காட் நிறுவனம் சார்பில் தகவல் தொழில்நுட்ப சிறப்பு பொருளாதார மண்டல வளாகத்தில் ரூ.114.16 கோடி மதிப்பீட்டில் 8 தளங்களுடன் 3.94 ஏக்கர் பரப்பளில் கட்டப்பட்டுள்ள புதிய தகவல் தொழிநுட்ப பூங்கா கட்டிடத்தை திறந்து வைக்கிறார்.

    மதியம் 12 மணிக்கு சுகுணா திருமண மண்டபத்தில் கள ஆய்வுப்பணியின் ஒரு அங்கமாக முதல்-அமைச்சர் முன்னெடுப்பு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் நில எடுப்பு நடவடிக்கையில் விலக்கு அளிக்கப்பட்டவர்களுக்கு விடுப்பு ஆணைகளை வழங்க உள்ளார்.

    மாலை 4 மணிக்கு சிவாலயா திருமண மண்டபத்தில் தங்க நகை தொழில் அமைப்பு நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடுகிறார். தங்க நகை தொழிலில் உள்ள பிரச்சினைகள் குறித்து அவர் கேட்டறிகிறார்.

    தொடர்ந்து போத்தனூர் பிவிஜி திருமண மண்டபத்தில் நடைபெறும் தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கிறார். தி.மு.க. நிர்வாகிகளுடன் கலந்துரையாடி 2026 சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது குறித்து அவர் ஆலோசனை வழங்குகிறார். பின்னர் இரவில் அரசு விருந்தினர் மாளிகையில் தங்குகிறார்.

    மறுநாள் (6-ந் தேதி) காலை 9.30 மணிக்கு கோவை சிறைச்சாலை வளாகத்தில் நடைபெற்று வரும் செம்மொழி பூங்கா கட்டுமான பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்கிறார்.

    தொடர்ந்து திறந்தவெளி சிறைச்சாலையின் ஒரு பகுதியில் ரூ.300 கோடி மதிப்பில் கட்டப்பட உள்ள கலைஞர் நூற்றாண்டு நூலக கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டுகிறார். பின்னர் அவர் மதியம் கோவையில் இருந்து விமானம் மூலம் சென்னை புறப்பட்டுச் செல்கிறார்.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையை ஒட்டி கோவை மாவட்ட தி.மு.க.வினர் உற்சாகம் அடைந்துள்ளனர். மு.க.ஸ்டாலின் வந்து செல்லும் அனைத்து இடங்களிலும் திரண்டு நின்று அவருக்கு வரவேற்பு அளிக்க திட்டமிட்டுள்ளனர்.

    கலைஞர் நூலக அடிக்கல் நாட்டு விழாவில் ஆயிரக்கணக்கான தி.மு.க.வினர் மற்றும் பொதுமக்கள் பங்கேற்க உள்ளனர். இதற்காக அங்கு பிரமாண்ட பந்தல் மற்றும் மேடை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    முதலமைச்சர் வருகையை யொட்டி கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது. உள்ளூர் போலீசார் மட்டும் அல்லாமல் வெளி மாவட்டங்களில் இருந்தும் போலீசார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

    • பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தி மற்றும் 62-வது குருபூஜை விழா.
    • 2-ம் நாளான இன்று அரசியல் விழா.

    மதுரை:

    விடுதலை போராட்ட வீரர் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை விழா ஆண்டு தோறும் அக்டோபர் மாதம் 28-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை 3 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.

    இதில் முதல் நாள் தேவரின் ஆன்மீக விழாவாகவும், இரண்டாம் நாள் அரசியல் விழாவாகவும், மூன்றாம் நாள் குரு பூஜை விழாவாகவும் நடை பெற்று வருகிறது.

    அதன்படி பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தி மற்றும் 62-வது குருபூஜை விழா நேற்று பசும்பொன்னில் தேவர் நினைவாலய பொறுப்பாளர் காந்தி மீனாள் நடராஜன் தலைமையில், பழனி, தங்கவேல் ஆகியோர் முன்னிலையில்யாக வேள்வியுடன் தொடங்கியது.

    பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள் தலைமையில் சிவாச்சாரியார்கள் லட்சார்ச்சனை, வேள்வி மற்றும் யாகசாலை பூஜைகள் நடந்தன.

    முன்னதாக கமுதி பஸ் நிலைய பகுதியில் உள்ள தேவர் சிலை முன்பிருந்து ராமநாதபுரம் மாவட்ட மூவேந்தர் பண்பாட்டுக் கழகம் சார்பில் பொங்கல் வைத்து சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடந்தன. பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக வந்து தேவர் நினை விடத்தில் மரியாதை செலுத்தினர்.

    இதேபோல் சாயல்குடி, கடலாடி, முதுகுளத்தூர், கமுதி பகுதிகளை சேர்ந்த ஏராளமான தேவரின் பக்தர்கள் மேளதாளங்களுடன் ஊர்வலமாக வந்து நினைவிடத்தில் வணங்கினர். மாலையில் நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் திரளான பெண்கள் கலந்து கொண்டனர்.

    பொதுமக்கள் ஏராளமானோர் பால்குடம், ஜோதி, முளைப்பாரி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். 2-ம் நாளான இன்று அரசியல் விழாவாக நடைபெற்றது. இதில் தேவரின் அரசியல் பயணம் குறித்து சொற்பொழிவாளர்கள் பேசுகிறார்கள்.

    நிறைவு நாளான நாளை (30-ந்தேதி) குருபூஜை விழாவாக நடைபெறுகிறது. இதையொட்டி அவரது நினைவிடம் அமைந்துள்ள ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் அனைத்து அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் திரண்டு வந்து அஞ்சலி செலுத்த இருக்கிறார்கள்.

    முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்துவதற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து இன்று இரவு சென்னையில் இருந்து புறப்பட்டு 7 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்தடைகிறார். மதுரை விமான நிலையத்தில் அமைச்சர்கள், கலெக்டர், மேயர் மற்றும் நிர்வாகிகள் வரவேற்கிறார்கள்.


    பின்பு புதூர் செல்லும் சாலையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் இரவு தங்குகிறார். நாளை (30-ந்தேதி) காலை அங்கிருந்து புறப்பட்டு கோரிப்பாளையத்தில் உள்ள முத்து ராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். பின்னர் தெப்பக்குளத்தில் உள்ள மருது சகோதரர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.

    பின்பு அங்கிருந்து காரில் புறப்பட்டு காலை 10 மணிக்கு ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி குருபூஜையில் கலந்து கொள்கிறார்.

    இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்துகின்றனர். இதையடுத்து மதுரை வரும் விமானம் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்புகிறார்.

    இதேபோல் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, ம.தி.மு.க. முதன்மை செயலாளர் துரை வைகோ, அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், முக்குலத் தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர், அமைப்புகளை சேர்ந்தவர்கள் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார்கள்.

    பாதுகாப்பு முன்னேற்பா டுகளை கருத்தில் கொண்டு மதுரை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளிலும், மதுரை முதல் ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலை பகுதியிலும், டிரோன் கேமிரா பறக்க தடை விதித்து மதுரை, ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர். 

    • "தெக்கணமும் அதன் சிறந்த திராவிடநல் திருநாடும் " என்னும் வரி திட்டமிட்டே தவிர்க்கப்பட்டுள்ளது.
    • ஆளுநரின் 'வெறுப்பு உளநிலையை' உறுதிபடுத்துகிறது.

    சென்னை டிடி தமிழ் தொலைக்காட்சி அலுவலகத்தில் நேற்று நடந்த இந்தி மாத விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றிருந்தனர். விழாவின் தொடக்கத்தில் பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலில் 'தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்' என்ற வரி இடம்பெறாமல் விடுபட்டது சர்ச்சையை ஏற்படுதியது. இதுதொடர்பாக தனது முதல்வர் ஸ்டாலின் உட்பட அனைத்து அரசியல் தலைவர்களும் தங்களின் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

    அந்த வகையில் விசிக தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ள கண்டனப் பதிவில்,

    டி.டி.தமிழ் தொலைக்காட்சி அலுவலகத்தில் நடைபெற்ற 'இந்தி மாத' கொண்டாட்ட நிறைவு விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி அவர்கள் பங்கேற்றுள்ளார்.

    அந்நிகழ்வில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடப்பட்ட போது, "தெக்கணமும் அதன் சிறந்த திராவிடநல் திருநாடும் " என்னும் வரி திட்டமிட்டே தவிர்க்கப்பட்டுள்ளது.

    இது தமிழ்நாட்டு மக்களுக்கு எதிரான ஆளுநரின் 'வெறுப்பு உளநிலையை' உறுதிபடுத்துகிறது. ஆளுநரின் இத்தகைய போக்கு கண்டனத்துக்குரியது.

    ஏற்கனவே, பொதிகை என்னும் பெயரை நீக்கியது, தொலைக்காட்சியின் இலச்சினையை காவி நிறத்துக்கு மாற்றியது என தொடர்ந்து தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துவரும் பாஜக அரசையும்; ஆளுநர் ஆர்.என். ரவி அவர்களையும் விசிக சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

    • 'பெருமையோடு துல்லியமாகப் பாடுவேன்' என விளக்கம் கொடுக்கும் ஆளுநர் மேடையிலேயே அந்த தவறை சுட்டிக்காட்டி இருக்கலாமே
    • சமஸ்கிருதத்திற்குச் செலவிடப்பட்டதில் வெறும் 7 விழுக்காடு மட்டுமே தமிழுக்கு ஒதுக்கப்பட்டது.

    சென்னை டிடி தமிழ் தொலைக்காட்சி அலுவலகத்தில் நேற்று நடந்த இந்தி மாத விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றிருந்தனர். விழாவின் தொடக்கத்தில் பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலில் 'தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்' என்ற வரி இடம்பெறாமல் விடுபட்டது சர்ச்சையை ஏற்படுதியது.

    இதுதொடர்பாக தனது கண்டனத்தை பதிவு செய்த முதல்வர் ஸ்டாலின் ஆளுநரை மத்திய அரசு உடனே திரும்பபெற வேண்டும் என்று தெரிவித்தார். இதற்கிடையே ஆளுநருக்கும் , அந்த நிகழ்ச்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் ஆளுநர் சிறப்பு விருந்தினராக மட்டுமே அதில் கலந்துகொண்டார் என்றும் ராஜ் பவன் விளக்கம் அளித்தது. மேலும் ஸ்டாலின் அவசர கதியில் ஆளுநரை விமர்சித்துள்ளார் என்றும் இனவாதம் கொண்டு பேசுகிறார் குற்றம்சாட்டப்பட்டது. இந்நிலையில் இந்த குற்றச்சாட்டுக்கு முதல்வர் ஸ்டாலின் விரிவான விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.

    ஆளுநர் ரவிக்கு முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது,

    இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழாவில் பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்தில், 'தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்' என்ற வரியைப் பாடாமல் விட்டதற்கு, எனது கடும் கண்டனத்திற்குப் பதிலளித்துள்ள மாண்புமிகு ஆளுநருக்குச் சில கேள்விகள்:

    'தமிழ்த்தாய் வாழ்த்தை முழுமையாக பக்திச்சிரத்தையோடு பாடுவேன்' எனச் சொல்லும் நீங்கள், முழுமையாகப் பாடப்படாத தமிழ்த்தாய் வாழ்த்தை உடனே மேடையிலேயே கண்டித்திருக்க வேண்டாமா? அதனை ஏன் செய்யவில்லை?

    'பெருமையோடு துல்லியமாகப் பாடுவேன்' என விளக்கம் கொடுக்கும் ஆளுநர் - உரிமையோடு அந்த இடத்திலேயே தவற்றைச் சுட்டிக்காட்டியிருக்கலாமே! சரியாகப் பாடும்படி பணித்திருக்கலாமே? துல்லியமாக அந்தச் செயலை நீங்கள் செய்திருந்தால் எதிர்வினை ஏற்பட்டிருக்குமா?

    'ஒரு ஆளுநருக்கு எதிராக முதலமைச்சர் இனவாதக் கருத்தைத் தவறான குற்றச்சாட்டுகளுடன் முன்வைப்பது துரதிருஷ்டவசமாக மலிவானது' எனச் சொல்லியிருக்கிறீர்கள்.

    ஆளுநர் அவர்களே, தமிழ் எங்கள் இனம்! அது எங்கள் உயிர்மூச்சு! தமிழ்மொழியைக் காக்க உயிர்களை நெருப்புக்குக் கொடுத்தவர்கள் தமிழர்கள். முதல் அரசியலமைப்புச் சட்டத்திருத்தத்திற்கு அடிகோலியதோடு, இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தின் வரலாறுகளைத் தாங்கி நிற்கும் மண் இது. இந்த மண்ணின் தாய்மொழிப் பற்றினை இனவாதம் என்றால் அது எங்களுக்குப் பெருமைதான்!

    'பாஜக அரசு பல்வேறு அமைப்புகளை நிறுவித் தமிழ்மொழி மற்றும் அதன் பாரம்பரியத்தைத் தமிழ்நாடு உள்பட இந்தியாவுக்கு உள்ளேயும் உலகின் பல நாடுகளிலும் பரப்புகிறது. ஐக்கிய நாடுகள் சபைக்கும் கூட தமிழைக் கொண்டு சென்றார் பிரதமர் மோடி' எனச் சொல்லியிருக்கிறார் ஆளுநர்.

    தமிழைத் தலையில் தூக்கிப் போற்றுவதாக நீங்கள் கூறும் மோடி அரசு தமிழ்மொழிக்கு என்ன செய்தது? 2013-2014 முதல் 2022 -2023-ஆம் ஆண்டு வரை சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்காக டெல்லியில் உள்ள மத்திய சமஸ்கிருதப் பல்கலைக்கழகத்துக்கு ரூ.2029 கோடி, திருப்பதியில் உள்ள தேசிய சமஸ்கிருதப் பல்கலைக்கழகத்துக்கு ரூ.406 கோடி என மொத்தம் ரூ.2435 கோடி செலவிடப்பட்டுள்ளது.

    இது கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு செலவிடப்பட்டதைவிட இரண்டரை மடங்கு அதிகம். இதே காலகட்டத்தில் தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக வெறும் ரூ.167 கோடி மட்டுமே செலவிடப்பட்டது. அதாவது சமஸ்கிருதத்திற்குச் செலவிடப்பட்டதில் வெறும் 7 விழுக்காடு மட்டுமே தமிழுக்கு ஒதுக்கப்பட்டது.

    அதுமட்டுமில்ல, கடந்த காலத்தில் நீங்கள் பேசியது நினைவிருக்கிறதா?

    "தமிழ்நாடு என்ற பெயரைப் புறக்கணித்து, தமிழகம் என்று அழைக்க வேண்டும்" என்றும்; "திராவிடம் என்ற கோட்பாடே பிரிட்டிஷார் அறிமுகப்படுத்தியதுதான்" என்றும் கூறியதை மறக்க முடியுமா?

    'திராவிட மாடல் காலாவதியான கொள்கை' என ஆங்கிலப் பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டி அளித்த வெறுப்புதானே, இன்றைக்குத் தமிழ்த்தாய் வாழ்த்து வரை வந்து நிற்கிறது?

    தமிழை நேசிப்பதாக இப்போது சொல்லும் நீங்கள் முன்பு, திருவள்ளுவர் படத்தைக் காவி நிறத்தில் ஏன் வெளியிட்டீர்கள்? எனச் சொல்ல முடியுமா?

    தமிழ்மீது ஒன்றிய பா.ஜ.க. அரசுக்குப் பற்றிருப்பது உண்மையானால், உலகப் பொதுமறையான திருக்குறளைத் தேசிய நூலாக அறிவிக்காமல் உங்களைத் தடுப்பது எது?

    பிரதமர் மோடி அவர்கள் அறிமுகப்படுத்தும் திட்டங்கள், தொடர்வண்டிகள், முன்வைக்கும் முழக்கங்கள் என 'எங்கும் இந்தி – எதிலும் இந்தி' என்ற கொள்கையுடன் இந்தியைத் திணிப்பது நீங்கள்தான்.

    ஆளுநராகப் பொறுப்பேற்றதிலிருந்து அரசியல்சட்ட நெறிமுறைகளை மறந்து நாள்தோறும் அரசியல் பேசுவதும், ஆளுநர் மாளிகையை அரசியல் அலுவலகமாக மாற்றியதும் - திராவிட இனத்தையே கொச்சைப்படுத்திப் பேசி வருவதும் எந்த வகை அரசியல் நாகரிகம்? எந்த வகை கண்ணியம்?

    சட்டப்பேரவையில் நீங்கள் படிக்க வேண்டிய ஆளுநர் உரையில் கூட திராவிட மாடல், தந்தை பெரியார், புரட்சியாளர் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராசர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் போன்ற பெயர்களைத் தவிர்த்தவர்தானே நீங்கள்?

    உங்கள் வரலாறு இப்படி இருக்கும்போது, #திராவிடநல்திருநாடு தவிர்க்கப்பட்டதைத் தற்செயலானது எனத் தமிழர்கள் எப்படி நம்புவார்கள்?

    அரசியலமைப்புச் சட்டப் பதவியில் சட்டப்புத்தகத்தின்படி பொறுப்பேற்றவர், வகுப்புவாதக் கும்பலின் கைப்பாவையாக மாறி, பிளவுவாத அழிவு விஷக் கருத்துகளைத் தமிழ்மண்ணில் விதைக்க நினைத்தால் அதன் வேரில் வெந்நீர் ஊற்றுவார்கள் தமிழ்நாட்டு மக்கள்.

    நீங்கள் ஆளுநர் பதவியில் தொடர நினைத்தால், பிளவுவாத சக்திகளிடமிருந்து விடுவித்துக்கொண்டு, அரசியல்சட்ட நெறிமுறைகளின்படி கடமையை ஆற்ற வேண்டும் என உங்களைக் கேட்டுக் கொள்கிறேன். என்று தெரிவித்துள்ளார்.

    • ஆயுதக் கிடங்கை அழித்து தியாகச் சுடராகி சிவகங்கை வெற்றிக்கு வழிவகுத்தார்.
    • எத்தலப்பர் நாயக்கர் நினைவு அரங்கத்தையும் முதலமைச்சர் திறந்து வைத்தார்.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற மே 2021 முதல், விடுதலைப் போரில் இன்னுயிர் ஈந்தும், சொத்து சுகங்களை இழந்தும், தியாகங்கள் புரிந்த சுதந்திரப் போராட்ட தியாகிகளைப் போற்றிப் பெருமைப்படுத்திடும் வகையில், காந்தி மண்டபத்தில் வ.உ.சி. சிறையில் இழுத்த செக்கு வைக்கப்பட்டிருக்கக்கூடிய மண்டபம் பொலி வூட்டப்பட்டு அங்கு அவரது மார்பளவு சிலை, வீரபாண்டிய கட்ட பொம்மன் அவர்களுக்கு திருவுருவச் சிலை, மருது சகோதரர்களுக்கு திருவுருவச் சிலை, கோயம்புத்தூர் வ.உ.சி. பூங்காவில் வ.உ. சிதம்பரனார் முழு உருவச்சிலை, மூவலூர் ராமாமிர்தம் அம்மையாருக்கு திருவுருவச் சிலை, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையாருக்கு திருவுருவச் சிலை, என பல்வேறு தியாக சீலர்களுக்கு சிலைகளை நிறுவி, மணி மண்டபங்கள் அமைத்து அவர்களின் புகழ்போற்றி வருகிறது.

    அதன் தொடர்ச்சியாக இன்று "தானம் என்றால் கேள் தருகிறேன். வரி யென்றால் ஒருநெல்மணி கூட கட்டமாட்டேன்" என்று முழங்கி நெல்கட்டான் செவல் எனப்பேர் படைத்த பூலித்தேவனின் முக்கிய தளபதியாகத் திகழ்ந்து வெள்ளையரை வென்றழித்து பூலித்தேவன் மடியில் உயிர்நீத்த மாவீரன் வெண்ணி காலாடியின் தியாக வீரத்தைப் போற்றிடும் வகையில், 2023-24-ம் ஆண்டிற்கான செய்தி மக்கள் தொடர்புத்துறை மானியக் கோரிக்கையில், சுதந்திரப் போராட்ட வீரர் வெண்ணி காலாடியின் நினைவைப் போற்றும் வகையில் தென்காசி மாவட்டத்தில் திருவுருவச் சிலை அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    அந்த அறிவிப்பிற்கிணங்க, தென்காசி மாவட்டம், நெல்கட்டும் செவல் கிராமம், பச்சேரியில் வெண்ணி காலாடிக்கு 50 லட்சம் ரூபாய் செலவில் நிறுவப்பட்டுள்ள திருவுருவச் சிலையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    சிவகங்கை மன்னர் முத்து வடுகநாதரைக் கொன்று வஞ்சகத்தால் சிவகங்கையை கைப்பற்றிய, வெள்ளையரை வென்று சிவகங்கையை மீட்டிடச் குளுரைத்துத் திண்டுக்கல் விருப்பாட்சி கோபால் நாயக்கரிடம் உதவிகேட்டுத் தஞ்சமடைந்தார் அவருடைய மனைவி வேலுநாச்சியார்.

    அவர் தம்முடைய படைத் தளபதியாக விளங்கிய வீரத்தாய் குயிலி, மருதுபாண்டியர்களுடன், திப்புசுல்தான் உதவியோடு சிவகங்கையை மீட்டிடப் படைதிரட்டி, வழியில் எதிர்ப்பட்ட பகைவர்களை எல்லாம் வென்றழித்து சிவகங்கையில் முகாமிட்டிருந்த வெள்ளையரைத் தாக்கினார்.

    வீராங்கனை வேலுநாச்சியாரின் மெய்க்காப்பாளராக விளங்கிய குயிலி மெய் முழுதும் எரியெண்ணெயைத் தடவிக் கொண்டு வெள்ளையரின் ஆயுதக் கிடங்கில் குதித்து அழித்துத் தியாகச் சுடராகி சிவகங்கை வெற்றிக்கு வழிவகுத்தார்.

    2023-24-ம் ஆண்டிற்கான செய்தி மக்கள் தொடர்புத் துறை மானியக் கோரிக்கையில், சுதந்திரப் போராட்ட வீராங்கனை குயிலிக்கு சிவகங்கையில் திருவுருவச் சிலை அமைக்கப்படும் என்ற அறிவிப்பிற்கிணங்க, சிவகங்கை வட்டம், ராகினிப்பட்டியில் அமைந்துள்ள வேலுநாச்சியார் மணிமண்டப வளாகத்தில் குயிலித்தாய்க்கு 50 லட்சம் ரூபாய் செலவில் நிறுவப்பட்டுள்ள திருவுருவச் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    சுதந்திரப் போராட்ட வீரர் தளி பாளையக்காரர் மலையாண்டி வெங்கிடுபதி எத்தலப்பர் நாயக்கர் வீரத்தை போற்றி 2 கோடியே 60 லட்சம் ரூபாய் செலவில் திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை நகராட்சி அலுவலக வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள எத்தலப்பர் நாயக்கர் திருவுருவச் சிலையையும், தளி பேரூராட்சி, திருமூர்த்தி நகரில் அமைக்கப்பட்டுள்ள எத்தலப்பர் நாயக்கர் நினைவு அரங்கத்தையும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், தலைமைச் செயலாளர்நா. முருகானந்தனம், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் வே.ராஜாராமன், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் மருத்துவர்வைத்தி நாதன், ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இவ்வாறு அதில் கூறிப்பட்டு உள்ளது.

    • தியேட்டரில் ஒளிபரப்பான விழிப்புணர்வு வாசகத்தில் எழுத்துப்பிழை.
    • பிழையை மாற்றக் கோரி முதலமைச்சருக்கு கடிதம்.

    கோவை:

    கோவை பீளமேடு அடுத்த காந்திமாநகர் ஹட்கோ காலனியை சேர்ந்தவர் பழனிச்சாமி. தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கணக்கு உதவியாளராக வேலை பார்த்து வருகிறார்.

    இவரது மனைவி கிருத்திகா. இந்த தம்பதிக்கு பிரணவிகா (வயது10). இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இந்த நிலையில் கடந்த 6-ந்தேதி பழனிச்சாமி தனது குடும்பத்தினருடன் கோவையில் உள்ள பிரபல மாலில் படம் பார்க்கச் சென்றார்.

    தியேட்டரில் படம் தொடங்குவதற்கு முன்பு போதைப்பொருள் தடுப்பு தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக விழிப்புணர்வு வாசகம் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

    அதில், "புகைப்பிடித்தால் புற்றுநோய் உருவாகும் மற்றும் உயிரைக் கொள்ளும் என்ற வாசகம் வந்தது.

    அதை பார்த்த சிறுமிக்கு கொல்லும் என்பதற்கு பதிலாக கொள்ளும் என தவறாக இருப்பதாக சிறுமி தனது தந்தையிடம் கூறி கேள்வி எழுப்பியுள்ளார்.

    மேலும் அந்த வாசகம் எழுத்துப் பிழையுடன் வருவதால் இதனை பார்க்கும் பல லட்சம் மக்களும், குழந்தைகளும் எழுத்துப் பிழையுடனே அதனை எழுத வாய்ப்புள்ளதாக கருதிய சிறுமி, தனது தந்தையுடன் சென்று திரையரங்கு மேலாளரிடம் இதுகுறித்து முறையிட்டுள்ளனர்.

    அதற்கு அவர், இந்த படத்தின் காப்பி மும்பையில் இருந்து வந்துள்ளது. அதனை தங்களால் மாற்ற இயலாது என தெரிவித்தார்.

    இதனைத் தொடர்ந்து வீட்டிற்கு வந்த மாணவி இதுகுறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் தியேட்டரில் ஒளிபரப்பான விழிப்புணர்வு வாசகத்தில் உள்ள எழுத்து பிழையை சுட்டிக்காட்டியும், அதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் கடிதம் எழுதி அனுப்பினார்.

    இதுகுறித்து சிறுமியின் தந்தை பழனிச்சாமி கூறியதாவது:-

    கடந்த ஞாயிற்றுக்கிழமை படம் பார்க்கச் சென்றபோது, படம் துவங்கும் முன்பு வந்த விழிப்புணர்வு வாசகத்தில் எழுத்துப் பிழை இருப்பதை எனது மகள் பார்த்தார்.

    அதனை என்னிடம் தெரிவித்த அவர், எழுத்துபிழையை சரி செய்யாவிட்டால் அதனை பார்க்கும் அனைவரும் அதே எழுத்துப் பிழையுடன் எழுத வாய்ப்புள்ளது. அதனால் அதனை மாற்ற கோரி தமிழக முதலமைச்சருக்கு எனது மகளே கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். இது வரவேற்கத்தக்கது.

    தமிழை ஊக்குவிக்க தமிழக முதலமைச்சர் பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். எழுத்து பிழையை உடனடியாக மாற்றுவார்கள். மேலும் தன்னுடைய மகள் கொரோனா காலத்திலும், மழை வெள்ள பாதிப்புகளுக்கும் தான் சேர்த்து வைத்திருந்த தொகையைத் தமிழக அரசுக்கு வழங்கியுள்ளார்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • 5 மாடிகளுடன் புதிய கட்டிடம் கட்டப்பட்டது.
    • காவல் நிலையம் திறக்கப்பட்டு இன்றுமுதல் பயன்பாட்டிற்கு வந்தது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகர காவல் ஆணையரகம் கடந்த 2014-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. திருப்பூர் மாநகர காவல்துறைக்கு கீழ் சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து, மகளிர் காவல் நிலையங்கள் உள்ளிட்ட 17 போலீஸ் நிலையங்கள் உள்ளன.

    திருப்பூர் மாநகரிலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிறுபூலுவப்பட்டியில் உள்ள வாடகை கட்டிடத்தில் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் இயங்கி வந்தது.

    இந்தநிலையில் திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு புதிய அலுவலகம் அமைக்க பல இடங்களில் இடம் தேடப்பட்டு வந்த நிலையில், கடந்த 2 ஆண்டுக்கு முன் அவிநாசி ரோடு, குமார்நகர் 60 அடி ரோட்டில் உள்ள பழைய ஆர்.டி.ஓ., அலுவலகம் தேர்வு செய்யப்பட்டு பணிகள் தொடங்கி முழு வீச்சில் நடந்தது.


    இதையடுத்து தமிழ்நாடு காவலர் குடியிருப்பு கழகம் சார்பில் 2.24 ஏக்கர் பரப்பில், 5 மாடிகளுடன் புதிய கட்டிடம் கட்டப்பட்டது.

    கமிஷனர், துணை கமிஷனர்கள் அறை, உதவி கமிஷனர் கட்டுப்பாட்டு அறை, மத்திய குற்றப்பிரிவு உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் இடம்பெற்றுள்ளது. பணிகள் முடிந்து, 6 மாதங்களாகியும் திறக்கப்படாமல் இருந்து வந்தது.

    இந்தநிலையில் புதிய போலீஸ் கமிஷனர் அலுவலக கட்டிடம் இன்று காலை திறக்கப்பட்டது. சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    திருப்பூர் புதிய போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் , நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் , சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் , மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் , மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ், மாநகர போலீஸ் கமிஷனர் லட்சுமி , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா , அரசு துறை அலுவலர்கள் , காவல்துறை அலுவலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் திருப்பூர் வீரபாண்டி போலீஸ் நிலையம் மற்றும் தெற்கு மகளிர் காவல் நிலையம் பலவஞ்சிபாளையம் பகுதியில் வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வந்தது.

    பல்வேறு பிரச்சனைகள் சம்பந்தமாக புகார் அளிக்கவும், நிகழ்ச்சிகளுக்கு அனுமதி பெறவும் ஏராளமானோர் தினந்தோறும் காவல் நிலையம் வந்து சென்றனர். போதிய இடவசதி இல்லாததால் பொதுமக்களுக்கும், காவல்துறையினருக்கும் இட நெருக்கடி ஏற்பட்டு வந்தது.

    இதன் காரணமாக ரூ.1.90 கோடி மதிப்பீட்டில் பலவஞ்சிபாளையத்தில் இருந்து வீரபாண்டி செல்லும் சாலையில் புதிய காவல் நிலையம் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டு 7000 சதுர அடி பரப்பளவில் 2 மாடி கட்டிடமாக கட்டுமான பணி நடைபெற்று முடிவடைந்தது. இதனைத்தொடர்ந்து இன்று வீரபாண்டி காவல் நிலையம் திறக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தது.

    ×