என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Neet exam"

    • நீட் விலக்கு மசோதாவை கவர்னர் ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்தார்.
    • நீட் விலக்கு மசோதா குறித்து மத்திய உள்துறை அமைச்சகம், ஆயுஷ் அமைச்சகம் மூலமாக தமிழக அரசுக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பி உள்ளது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு மே மாதம் தி.மு.க. ஆட்சி பொறுப்புக்கு வந்ததும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்தினார்.

    ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆராயப்பட்டது. இந்த குழு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான சட்ட ஆலோசனைகள் அடங்கிய அறிக்கையை அந்த குழு அரசிடம் சமர்ப்பித்தது.

    இந்த பரிந்துரையின் அடிப்படையில் நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று சட்டசபையில் செப்டம்பர் மாதம் சட்ட மசோதா கொண்டு வரப்பட்டது.

    இந்த மசோதா தமிழக கவர்னரின் ஒப்புதலுக்கு முதலில் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் இந்த மசோதா தொடர்பாக கவர்னர் ஆர்.என்.ரவி முதலில் எந்த முடிவும் எடுக்காமல் இருந்தார்.

    இந்த மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்க வலியுறுத்தி பல்வேறு தரப்பினரும் அவ்வப்போது கவர்னர் மாளிகை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

    அதன் பிறகு கடந்த 2022 பிப்ரவரி மாதம் 1-ந்தேதி இந்த மசோதாவில் கையெழுத்திடாமல் அவையின் மறுபரிசீலனைக்கு கவர்னர் அதை திருப்பி அனுப்பினார்.

    பின்னர் பிப்ரவரி 8-ந்தேதி தமிழக சட்டசபையின் சிறப்பு கூட்டம் கூட்டப்பட்டு நீட் விலக்கு மசோதா மீண்டும் நிறைவேற்றப்பட்டு அன்றைய தினமே கவர்னருக்கு மீண்டும் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனாலும் அந்த மசோதா மீது கவர்னர் உடனே கையெழுத்திடவில்லை.

    அதன் பிறகும் இந்த மசோதாவில் சில சந்தேகங்களை கேட்டார். அந்த சந்தேகங்களுக்கு சட்ட அமைச்சர் ரகுபதி விரிவான விளக்கம் அளித்திருந்தார்.

    அதன் பிறகு நீட் விலக்கு மசோதாவை கவர்னர் ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்தார்.

    இப்போது நீட் விலக்கு மசோதா குறித்து மத்திய உள்துறை அமைச்சகம், ஆயுஷ் அமைச்சகம் மூலமாக தமிழக அரசுக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பி உள்ளது. இந்த கடிதம் இப்போது தமிழக அரசுக்கு வந்துள்ளது.

    இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், "ஏற்கனவே விளக்கம் கேட்டு மத்திய அரசு கடிதம் அனுப்பி இருந்தது. அதற்கு விளக்கம் அளிக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் மறுவிளக்கம் கேட்கப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து சட்ட வல்லுனர்களின் கருத்தை பெற்று மீண்டும் மத்திய அரசுக்கு அடுத்த வாரம் பதில் அனுப்ப ஏற்பாடு செய்வோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசு புதிய மனு தாக்கல் செய்துள்ளது.
    • நீட் தொடர்பான சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு மாநில அரசை கட்டுப்படுத்தாது என அறிவிக்க கோரப்பட்டுள்ளது.

    சென்னை:

    மத்திய அரசு கொண்டு வந்த நீட் தேர்வுக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு நிலவி வந்தது. இதனால் நீட் தேர்வுக்கு தடை கோரி நீண்ட நாட்களாக பல போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதையடுத்து, நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரி 2021-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டசபையில் ஒருமனதாக தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

    இந்த மசோதாவை தமிழ்நாடு கவர்னர் ரவி நீண்ட காலமாக கிடப்பில் வைத்திருந்து பின்னர் மீண்டும் தமிழ்நாடு அரசுக்கு திருப்பி அனுப்பினார். இதனையடுத்து 2-வது முறையாக தமிழ்நாடு சட்டசபையில் நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதா நிறைவேற்றப்பட்டு மீண்டும் கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மசோதாவை ஜனாதிபதி ஒப்புதலுக்காக அனுப்பி வைத்திருப்பதாகவும் கவர்னர் தெரிவித்தார்.

    நீட் தேர்வு விலக்கு குறித்து ஏற்கனவே விளக்கம் கேட்டு மத்திய அரசு அனுப்பிய கடிதத்துக்கு தமிழ்நாடு அரசு விளக்கம் தந்த நிலையில், மீண்டும் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியது. அதற்கான விளக்கத்தையும் சட்ட வல்லுநர்களின் துணையுடன் தமிழக அரசு அனுப்பிவைத்தது.

    இந்நிலையில், நீட் தேர்வை ரத்துசெய்ய வேண்டும் என்று கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசு புதியதாக மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது.

    அந்த மனுவில், நீட் தேர்வு நடத்துவது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது, நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க வேண்டும். மேலும் கூட்டாட்சி கொள்கையை இது மீறுவதாக உள்ளது. நீட் தொடர்பான சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு மாநில அரசை கட்டுப்படுத்தாது என்று அறிவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தமிழ்நாட்டிற்கு தேவையான வெவ்வேறு மருத்துவமனைகளுக்கு நிதி ஆதாரங்களை பெற்றிருக்கின்றோம். எய்ம்ஸ் நிதி ஆதாரத்தை கேட்டிருக்கின்றோம்.
    • ஏப்ரல் மாதத்தில் டெண்டர் முடிந்தவுடன் கட்டுமானத்திற்கான ஒப்பந்தங்கள் பெறப்படும்.

    ஈரோடு:

    ஈரோடு வ.உ.சி. பூங்கா நடைபயிற்சி மைதானத்தில் இன்று காலை அமைச்சர் மா. சுப்பிரமணியம் யோகா மற்றும் நடைபயிற்சி மேற்கொண்டார்.

    பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    ஈரோடு மாநகராட்சி 2008-ல் உருவாக்கப்பட்டாலும் 10 ஆண்டுகளாக மாநகராட்சி புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் ரூ.480 கோடி மதிப்பில் திட்டங்களை கொண்டு வந்து முதல்-அமைச்சர் பல்வேறு பணிகளை செய்து வருகிறார்.

    ஈரோடு கிழக்குக்கு முதல்-அமைச்சர் வெளிச்சம் பாய்ச்சி இருக்கிறார். ஈரோடு கிழக்கு உதிக்கும். ஈரோட்டில் மக்களை சந்திக்கும் போது 3 பிரதான கோரிக்கைகளை முன் வைத்துள்ளார்கள்.

    ஜவுளி துறைக்கு நிரந்தரமான கண்காட்சி அமைக்கப்பட வேண்டும். சாலை வசதி மேம்படுத்த வேண்டும். சாயகழிவு அதனால் ஏற்படும் புற்றுநோய்க்கு தீர்வு காணப்பட வேண்டும் என கேட்டிருக்கிறார்கள்.

    தேர்தல் முடிந்த பிறகு ஈரோடு நகரின் புற்றுநோய்க்கான நிரந்தர தீர்வு நிதிநிலை அறிக்கையில் கிடைக்கும்.

    நீட் தொடர்பான மசோதா குடியரசுத் தலைவர் மேல் நடவடிக்கைக்காக அனுப்பியதை உள்துறை அமைச்சகம் சுகாதாரத்துறை அமைச்சகத்திற்கும், ஆயுஷ் அமைச்சகத்திற்கும் அனுப்பி உள்ளது. 2 அமைச்சகமும் சிறு விளக்கம் கேட்டு மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு கடிதம் அனுப்பியது. அதற்கும் விளக்கம் அனுப்பி இருக்கின்றோம்.

    ஆயுஷ் அமைச்சகத்திடம் இருந்து கடிதம் மீண்டும் வந்துள்ளது. அதற்கு பதில் அனுப்பும் பணி நடந்து வருகிறது. நீட் விலக்கு பெற தொடர்ச்சியாக பணி நடந்து வருகிறது. ஏற்கனவே எடப்பாடி தலைமையிலான அரசு நீர்த்துப்போன சட்டம் 1956-ல் வந்த பழைய சட்டத்தை வைத்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்கள்.

    அந்த வழக்கை தொடர்ந்து நடத்தினால் பாதகமான தீர்ப்பு வரும். இந்த நிலையில் தான் தமிழ்நாட்டின் முதல்-அமைச்சர் சட்ட வல்லுனர்களுடன் கலந்து பேசி புதிய வழக்கை நீதிமன்றத்தில் தொடர்ந்து உள்ளார்.

    இவ்வாறு பல நடவடிக்கைகள் தொடர்ச்சியாக நடந்து கொண்டிருக்கிறது. முதல்-அமைச்சர் சட்ட போராட்டம் நடத்தி வருகிறார். எனவே தமிழகத்திற்கு நிச்சயம் நீட்டிலிருந்து விலக்கு கிடைக்கும்.

    எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக 2015-ல் அறிவிப்பு வெளியானது. 2018-ல் அமைச்சரவை ஒப்புதல் தந்தது. 2019-ல் பிரதமர் அடிக்கல் நாட்டினார். 8 ஆண்டு காலம் இதற்கான முயற்சி நடைமுறையில் இருக்கிறது என்றாலும் அதற்கான நிதி ஆதாரம் கிடைக்கவில்லை.

    மற்ற மாநிலங்களுக்கு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஒன்றிய அரசு நிதி ஆதாரமாக இருந்தது. ஆனால் தமிழ்நாட்டிற்கு மட்டும் ஜெய்க்கா நிதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    பல்வேறு பணிகளுக்கு கடன் பெறுவதற்கான விளக்கங்களையும் வரைபடங்களையும் டோக்கியோவில் நடைபெற்ற கூட்டத்தில் ஜெயிக்கா நிறுவனத்திடம் விளக்கி இருக்கின்றோம்.

    தொடர்ச்சியான நடவடிக்கைகள் மேற்கொண்டால் மட்டுமே நிதி ஆதாரம் கிடைக்கும். ஒன்றிய அரசு நிதி ஆதாரம் பெறுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இப்போதுதான் இதற்கான தனி அலுவலர் ஒன்றிய அரசு நியமித்திருக்கிறது. இதை முதலிலேயே செய்திருந்தால் அங்கிருந்து நிதி பெற்று எய்ம்ஸ் மருத்துவமனையை கட்டியிருக்கலாம்.

    தமிழ்நாட்டிற்கு தேவையான வெவ்வேறு மருத்துவமனைகளுக்கு நிதி ஆதாரங்களை பெற்றிருக்கின்றோம். எய்ம்ஸ் நிதி ஆதாரத்தை கேட்டிருக்கின்றோம். ஏப்ரல் மாதத்தில் டெண்டர் முடிந்தவுடன் கட்டுமானத்திற்கான ஒப்பந்தங்கள் பெறப்படும்.

    அவை இறுதி செய்யப்பட்டு 2024 இறுதியில் எய்ம்ஸ் கட்டுமான பணிகள் தொடங்கும் என தெரிவித்திருக்கிறார்கள். 2024-ல் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் தொடங்கினால் 2028 இறுதியில் தான் பணிகள் முடியும். இது தான் உண்மை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நீட் தேர்வில் இருந்து விளக்கு பெறுவதில் போராடி வரும் ஒரே மாநிலம் தமிழ்நாடு.
    • இணக்கமாக செல்ல வேண்டும் என்பதால் கவர்னரை சந்திக்க காத்திருக்கிறோம்.

    சென்னை:

    சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் நடந்த விழாவில் மருத்துவம் மற்றும் பல் மருத்துவ பட்டப்படிப்பில் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு பெற்ற அரசு பள்ளி மாணவர்கள் 582 பேருக்கு கையடக்க கணினியை அமைச்சர் மா. சுப்பிரமணியன் வழங்கினார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

    நீட் தேர்வில் இருந்து விளக்கு பெறுவதில் போராடி வரும் ஒரே மாநிலம் தமிழ்நாடு. மத்திய ஆயுஷ் அமைச்சகம் நீட் விலக்கு குறித்து சில விளக்கங்களை கேட்டுள்ளது இன்னும் இரண்டு தினங்களில் விளக்கம் அளிக்கப்படும்.

    மருத்துவத்துறையின் வரலாற்றில் ஒரே நாளில் ரூ.1,941 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் புதிய மருத்துவ கட்டமைப்பு பணிகளை அடுத்த வாரம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

    கடந்த டிசம்பர் 31-ந்தேதியோடு டாக்டர் எம்.ஜிஆர் மருத்துவமனை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பொறுப்பு முடிவு பெற்றது. கடந்த ஜனவரி 4-ந்தேதி முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் சுப்புராஜ் தலைமையில் இரண்டு மருத்துவர்கள் அடங்கிய தேடுதல் குழு உருவாக்கப்பட்டது. கவர்னரின் ஒப்புதலும் பெறப்பட்டது.

    அந்தக் குழு அமைத்து இரண்டு மாதங்கள் நிறைவடைய உள்ள நிலையில் கவர்னர் தான் இனி அந்த குழுவிற்கு வழிகாட்ட வேண்டும்.

    கவர்னரின் சார்பில் அந்தக் குழுவிற்கு அலுவலர் ஒருவரை நியமிப்பார்கள். அந்த பணிகள் முடிந்த பிறகு அந்த தேடுதல் குழுவானது 3 பேர்களை தேர்ந்தெடுத்து கவர்னரிடம் வழங்குவார்கள். அந்த மூவரில் ஒருவரை கவர்னர் விரைவில் தேர்ந்தெடுப்பார் என்று கருதுகிறோம்.

    தற்போது மக்கள் அதிக அளவில் அரசு மருத்துவமனை சேவைகளை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். கவர்னரை சந்திக்க நேரம் கேட்டுள்ளோம். இரண்டு மாதங்களாக காத்திருக்கிறோம். கவர்னரை சந்திப்பது விதி அல்லது மரபு தான். ஆனால் அவருடன் இணக்கமாக செல்ல வேண்டும் என்பதால் அவரை சந்திக்க காத்திருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நீட் தேர்வை கட்டாயமாக்கிய சட்ட திருத்தத்துக்கு எதிராக புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை திரும்பப் பெற தமிழ்நாடு அரசின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
    • ரிட் மனு எவ்வாறு தாக்கல் செய்யப்பட்டது என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பிய போது, கடந்த ஆட்சியில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது என தமிழ்நாடு அரசின் சார்பில் பதில் அளிக்கப்பட்டது.

    சென்னை:

    நீட் தேர்வை கட்டாயமாக்கிய சட்ட திருத்தத்துக்கு எதிரான ரிட் மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான அமர்வு இன்று விசாரித்தது.

    அப்போது நீட் தேர்வை கட்டாயமாக்கிய சட்ட திருத்தத்துக்கு எதிராக புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை திரும்பப் பெற தமிழ்நாடு அரசின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த ரிட் மனு எவ்வாறு தாக்கல் செய்யப்பட்டது என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பிய போது, கடந்த ஆட்சியில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது என தமிழ்நாடு அரசின் சார்பில் பதில் அளிக்கப்பட்டது.

    இதை பதிவு செய்து கொண்ட உச்சநீதிமன்றம், நீட் தேர்வை கட்டாயமாக்கிய சட்ட திருத்தத்துக்கு எதிரான ரிட் மனுவை திரும்ப பெற தமிழ்நாடு அரசுக்கு அனுமதி அளித்தது.

    நீட் தேர்வை கட்டாயமாக்கிய சட்டம் கூட்டாட்சி அமைப்புக்கு எதிராக உள்ளதால், சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ‘நீட்' தேர்வு வழக்கையே தமிழ்நாடு அரசு வாபஸ் பெற்றுவிட்டது என்று சிலர் கருத்துகளை பகிர்ந்துள்ளனர்.
    • அமைச்சர் மா.சுப்பிரமணியன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    சென்னை :

    'நீட்' தேர்வு தொடர்பாக அ.தி.மு.க. ஆட்சியில் தொடரப்பட்ட வழக்கை தமிழ்நாடு அரசு வாபஸ் பெற்று புதிய வழக்கை தாக்கல் செய்தது. ஆனால் 'நீட்' தேர்வு வழக்கையே தமிழ்நாடு அரசு வாபஸ் பெற்றுவிட்டது என்று சிலர் கருத்துகளை பகிர்ந்துள்ளனர்.

    அதற்கு தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு மருத்துவப் பட்டப்படிப்புகளுக்கான சேர்க்கைச்சட்டம் 2021 என்ற சட்டமுடிவு, சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதியின் ஒப்புதலைப் பெறுவதற்காக மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    மேலும் அதற்கு ஜனாதிபதியின் ஒப்புதலை விரைவாக பெற்றுத்தருமாறு மத்திய அரசை தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

    இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருந்த வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், உரிய சட்டவிதிகளை ஆராயாமல் அவசர கோலத்தில், நடைமுறையில் உள்ள சட்டங்களுக்கு பதிலாக முந்தைய சட்டவிதிகளை எதிர்த்தும், அவற்றை ரத்து செய்யுமாறும் குறிப்பிட்டு 4.01.2020 அன்று முந்தைய அ.தி.மு.க. அரசால் சுப்ரீம் கோர்ட்டில் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

    அ.தி.மு.க. அரசால் தவறான சட்டப்பிரிவுகளின்படி தொடரப்பட்ட இந்த வழக்கை மேற்கொண்டு தொடர்ந்து நடத்தினால் அது 'நீட்' தேர்வுக்கு எதிரான நமது போராட்டத்துக்கும், நமது மாணவர்களின் நலனுக்கும் பாதகமாக அமையும் என்று சட்ட வல்லுனர்கள் கருத்து தெரிவித்தனர்.

    இந்நிலையில் முதல்-அமைச்சர் தலைமையில் நடைபெற்ற உயர்நிலை ஆய்வுக்கூட்டத்தில் இதுகுறித்து சுப்ரீம் கோர்ட்டு வக்கீல்களுடன் கலந்தாலோசிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், புதிய வழக்கை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யலாம் எனவும், அ.தி.மு.க. ஏற்கனவே தாக்கல் செய்து நிலுவையில் இருக்கும் வழக்கை திரும்பப்பெறலாம் எனவும் முடிவெடுக்கப்பட்டது.

    அதன்படி அந்த வழக்கை திரும்பப்பெறவும், தமிழ்நாடு அரசின் 'நீட்' தேர்வுக்கு எதிரான நிலைப்பாடுகளை உள்ளடக்கியும், மத்திய அரசின் பாதகமான சட்டவிதிகளை எதிர்த்தும் உரியவாறு புதிய வழக்கு தொடர்ந்தும் உரிய மனுக்கள் இப்போது பதிவு செய்யப்பட்டுள்ளன. அ.தி.மு.க. அரசின் தவறான வழக்கை திரும்பபெற்றதை, ஏதோ 'நீட்' தேர்வு வழக்கையே திரும்பப் பெற்றுவிட்டது போலவும், தி.மு.க. அரசு தாக்கல் செய்துள்ள புதிய வழக்கை மறைத்து, திசைதிருப்பும் பிரசாரத்திலும் ஈடுபட்டுள்ளது கண்டனத்துக்குரியது.

    'நீட்' தேர்வை அகற்றுவதற்கான சட்டப் போராட்டத்தை தமிழ்நாடு அரசு தொடர்ந்து நடத்தி வெல்லும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பிரதமர் மோடியை சந்தித்தபின் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார்.
    • தமிழ்நாட்டில் விளையாட்டு மைதானங்கள் அமைப்பது தொடர்பாகவும் பிரதமரிடம் கோரிக்கை.

    இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 2 நாள் அரசு முறை பயணமாக நேற்று டெல்லி சென்றார்.

    டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் தங்கி இருந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழக முன்னாள் கவர்னரும் தற்போதைய பஞ்சாப் கவர்னருமான பன்வாரிலால் புரோகித் பேத்தி பூஜா-சிவம் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

    இதைத் தொடர்ந்து இன்று மதியம் 1 மணியளவில் மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் மந்திரி ஸ்ரீகிரிராஜ் சிங்கை சந்தித்து பேசினார்.

    தொடர்ந்து இன்று மாலை 4.30 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடியை தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து பேசினார்.

    பிரதமர் மோடியை சந்தித்தபின் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    நீட் தேர்தவில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்குமாறு பிரதமரிடம் வலியுறுத்தினேன்.

    கேலோ இந்தியா போட்டிகளை தமிழகத்தில் நடத்துமாறும் கோரிக்கை வைத்தேன்.

    தமிழ்நாட்டில் விளையாட்டு மைதானங்கள் அமைப்பது தொடர்பாகவும் பிரதமரிடம் கோரிக்கை வைத்தேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கு தனித் தனியே நீட் தேர்வு நடைபெறுகிறது.
    • https://neet.nta.nic.in/ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    இந்தியா முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் படிப்புகளில் சேர நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கு தனித் தனியே நீட் தேர்வு நடைபெறுகிறது. இந்நிலையில், முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு இன்று நாடு முழுவது நடைபெற்றது.

    இந்நிலையில், 2023-ம் ஆண்டுக்கான இளங்கலை மருத்துவ மாணவர்களுக்கான நீட் தேர்வுக்கு நாளை (மார்ச் 6) முதல் விண்ணப்பிக்கலாம் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. தேர்வர்கள் தேசிய தேர்வு முகமையின் (https://neet.nta.nic.in/) இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இளங்கலை படிப்புக்கான நீட் தேர்வு வரும் மே மாதம் 7 ஆம் தேதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • neetnta.nic.in என்ற இணையதளத்தின் வழியாக பெயர் மற்றும் விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.
    • விண்ணப்ப படிவத்தினை நேரடி லிங் மூலம் பதிவு செய்யலாம்.

    சென்னை:

    எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்ததை தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளாக நாடு முழுவதும் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. கொரோனா பெருந்தொற்றால் கடந்த 2 வருடமாக நீட் தேர்வு காலதாமதமாக நடத்தப்பட்டு மாணவர் சேர்க்கையும் தாமதமாக நடந்தது.

    இந்த ஆண்டு நீட் தேர்வுக்கான தேதியை 2 மாதத்திற்கு முன்பே தேசிய தேர்வு முகமை அறிவித்தது. மே மாதம் 7-ந்தேதி நடைபெறுவதாக முன்கூட்டியே அறிவிக்கப்பட்டதால் மாணவ-மாணவிகள் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர்.

    அரசு பள்ளி மாணவர்களும், தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்களும் நீட் பயிற்சி வகுப்பில் சென்று பயிற்சி பெற்று வருகின்றனர். தற்போது சி.பி.எஸ்.இ. பிளஸ்-2 மாணவர்களுக்கு தேர்வு நடைபெற்று வருகிறது. மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு வருகிற 13-ந்தேதி தேர்வு தொடங்குகிறது. தேர்வு எழுதி வரும் மாணவர்கள் நீட் தேர்வுக்கும் தங்களை தயார்படுத்தி கொள்கின்றனர்.

    பள்ளியிலும் அதற்கான சிறப்பு வகுப்புகளுக்கும் சென்று பயிற்சி எடுத்து வரும் நிலையில் நீட் தேர்வுக்கு இன்று (6-ந்தேதி) முதல் விண்ணப்பிக்கலாம் என்று தேசிய முகமை தெரிவித்துள்ளது. neetnta.nic.in என்ற இணையதளத்தின் வழியாக பெயர் மற்றும் விவரங்களை பதிவு செய்ய வேண்டும். அதற்கான விண்ணப்ப படிவத்தினை நேரடி லிங் மூலம் பதிவு செய்யலாம்.

    மாணவ-மாணவிகள் முக்கியமான ஆவணங்களை இணைத்து பதிவு கட்டணம் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நீட் தேர்வு தொடர்பாக தகவல் கையேடும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

    • இளநிலை மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
    • வெளிநாட்டு மாணவர்களுக்கான கட்டணம் ரூ.8500-ல் இருந்து ரூ.9,500 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    இளநிலை மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்ப பதிவு நேற்று துவங்கி உள்ளது. www.nta.nic.in என்ற இணையதளத்தில் வருகிற ஏப்ரல் 6 வரை விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த ஆண்டை விட பொதுப்பிரிவின், பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் சாதி வகுப்பினர் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் விண்ணப்பிக்க கடந்த ஆண்டை விட 100 ரூபாய் கட்டணத்தை தேசிய தேர்வு முகமை உயர்த்தி உள்ளது.

    பொது பிரிவினருக்கு 1,700 ரூபாயும், பிற்படுத்தப்பட்டோருக்கு 1,600 ரூபாயும், எஸ்.சி.எஸ்.டி. மாணவர்களுக்கு 1,000 ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. வெளிநாட்டு மாணவர்களுக்கான கட்டணம் ரூ.8500-ல் இருந்து ரூ.9,500 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    • புதுமைப் பெண் திட்டத்தில் 2 லட்சம் மாணவிகள் பயனடைந்துள்ளனர்.
    • இல்லம் தேடி மருத்துவம் திட்டத்தில் 1 கோடியே 10 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளனர்.

    அரியலூர்:

    அரியலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

    அரியலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கலையரங்கத்துக்கு மாணவி அனிதா பெயர் சூட்டப்படுவதால், மருத்துவக்கல்வி பயில வரும் மாணவர்கள், நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்கள், எதிர்ப்புகள் குறித்து தெரிந்து கொள்வார்கள்.

    நீட் தேர்வை ரத்து செய்வது தொடர்பான ரகசியம் என்னிடம் உள்ளது என கூறிவந்தது என்னவெனில், நீட் தேர்வுக்கு எதிராக போராட்டங்கள் தொடரும் என்பதே.

    நான் பிரதமர் மோடியை சந்தித்தபோது கூட, நீட் தேர்வு ரத்து செய்யும் வரை, நீட் தேர்வுக்கு எதிரான சட்டப் போராட்டங்கள் தொடரும் என்று தெரிவித்து வந்தேன். தமிழகத்தில் அரசின் திட்டங்களான மகளிருக்கான இலவச பேருந்து பயணத்தில் 250 கோடி பயணங்களை மகளிர் மேற்கொண்டுள்ளனர்.

    புதுமைப் பெண் திட்டத்தில் 2 லட்சம் மாணவிகள் பயனடைந்துள்ளனர். இல்லம் தேடி மருத்துவம் திட்டத்தில் 1 கோடியே 10 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளனர்.

    அதேபோல், தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத்திட்டம், இன்னுயிர் காக்கும் 48 திட்டம், இல்லம் தேடி கல்வித்திட்டம் என பல்வேறு திட்டங்களினால் மக்கள் பயனடைந்து வருகின்றனர் என்றார்.

    • தற்கொலை செய்து கொண்ட மாணவன் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்தவர்.
    • மாணவர் தற்கொலை குறித்து ஆத்தூர் கோட்டாட்சியர் சரண்யா விசாரணை நடத்துகிறார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் அம்மம்பாளையத்தில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த சந்துரு என்ற மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தனியார் பள்ளியில் உள்ள நீட் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வந்த மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து விடுதி வார்டன் அளித்த தகவலின் பேரில் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    சம்பவ இடத்தில் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளதால் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மாணவர் தற்கொலை குறித்து ஆத்தூர் கோட்டாட்சியர் சரண்யா விசாரணை நடத்துகிறார்.

    தற்கொலை செய்து கொண்ட மாணவன் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×