என் மலர்
நீங்கள் தேடியது "NIA"
- இறந்தவரின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் வெடிமருந்துகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது
- கைது செய்யப்பட்டவர்கள் மீது உபா சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை:
கோவை கோட்டைமேட்டில் உள்ள சங்கமேஸ்வரர் கோவில் முன்பு தீபாவளிக்கு முந்தைய நாளான 23-ந்தேதி காரில் சிலிண்டர் வெடித்து சிதறியது. காரில் இருந்த ஜமேஷா முபின் (வயது 29) உடல் கருகி பலியானார். கார் வெடித்த இடத்தில் ஆணிகளும், கோலிக்குண்டுகளும், பால்ரஸ் குண்டுகளும் கைப்பற்றப்பட்டன. ஜமேஷா முபின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் அங்கு 75 கிலோ வெடிமருந்துகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் பொட்டாசியம் நைட்ரேட், சார்கோல், அலுமினியம் பவுடர், சல்பர் உள்ளிட்ட வெடிபொருட்கள் அடங்கும்.
இதையடுத்து போலீசார் 9 தனிப்படை அமைத்து விசாரணை நடத்தியதில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது உபா சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளனர். அவர்களை நவம்பர் 8ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது. தொடர்ந்து விசாரணை நடந்து வரும் நிலையில், வழக்கில் கூடுதல் ஆதாரங்கள் மற்றும் முக்கிய தகவல்களை பெற வேண்டியிருப்பதால் கைது செய்யப்பட்ட 5 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறை முடிவு செய்தது.
அதன்படி கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் காவல்துறை தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட 5 பேரையும் 5 நாட்கள் போலீஸ் கஸ்டடியில் வைத்து விசாரிக்க அனுமதிக்கும்படி காவல்துறை மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி, 3 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தார். இதையடுத்து, கைது செய்யப்பட்ட 5 பேரையும் நீதிமன்றத்தில் இருந்து அழைத்து வந்து, ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்த உள்ளனர்.
இந்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றும்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- இந்த வழக்கு தொடர்பாக 6 பேரை தனிப்படை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
- கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கில் என்.ஐ.ஏ. விசாரணை அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக கடந்த 23-ம் தேதியன்று அதிகாலை கார் வெடித்துச் சிதறியது. அதில் உக்கடம் ஜி.எம். நகர் பகுதியை சேர்ந்த ஜமேசா முபின் என்பவர் உடல் கருகி உயிரிழந்தார்.
இந்த வழக்கில் தொடர்புடைய முகமது தல்கா (25), முகமது அசாருதீன் (23), முகமது ரியாஸ் (27), பரோஸ் இஸ்மாயில் (27), முகமது நவாஸ் இஸ்மாயில் (26), அப்சர்கான் ஆகிய 6 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் 2-வது நாளாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக என்.ஐ.ஏ. விசாரணை அதிகாரியாக காவல் ஆய்வாளர் விக்னேஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
என்.ஐ.ஏ பதிவு செய்து விசாரித்து வரும் இந்த வழக்கு பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
- கோவையில் என்.ஐ.ஏ.வுக்கு அலுவலகம் இல்லாததால் கோவை ஆயுதப்படை பயிற்சி மையத்தில் என்.ஐ.ஏ.வுக்கு புதிதாக அலுவலகம் ஒதுக்கப்பட்டுள்ளது.
- என்.ஐ.ஏ. அதிகாரிகள் போலீசாரிடம் இருந்து பெற்றுக்கொண்ட ஆவணங்கள், தடயங்கள் உள்ளிட்டவற்றை பரிசோதித்து விசாரணையின் ஆரம்ப கட்ட பணிகளை தொடங்கினர்.
கோவை:
கோவை கோட்டைமேடு பகுதியில் கடந்த 23-ந்தேதி அதிகாலையில் கார் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதில் காரில் இருந்த ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தான்.
போலீசார் நடத்திய விசாரணையில் கோவையில் நாச வேலைக்கு திட்டமிட்டது தெரியவந்தது. இது தொடர்பாக இறந்த ஜமேஷா முபினுடன் தொடர்பில் இருந்த முகமது தல்கா, முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில், அப்சர்கான் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களை தனிப்படை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். இதில் இறந்த முபின் மற்றும் கைதானவர்கள் 3 கோவில்களை தகர்க்க ஒத்திகை பார்த்த அதிர்ச்சி தகவலும் தெரியவந்தது.
இதுவரை இந்த வழக்கினை கோவை மாநகர போலீசாரால் அமைக்கப்பட்ட 7 தனிப்படை போலீசார் புலன் விசாரணை நடத்தி வந்தனர்.
தற்போது இந்த வழக்கு என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்பட்டது. என்.ஐ.ஏ. தென் மண்டலங்களுக்கான டி.ஐ.ஜி.வந்தனா தலைமையிலான அதிகாரிகள் கோவையில் முகாமிட்டு போலீசாருடன் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வழக்கு என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்பட்டதை தொடர்ந்து, இதுவரை விசாரணை நடத்தி வந்த கோவை போலீசார் தாங்கள் சேகரித்த ஆவணங்களை என்.ஐ.ஏவிடம் ஒப்படைத்தனர்.
கார் வெடிப்பு தொடர்பான அனைத்து ஆவணங்கள், கைதானவர்களிடம் நடத்திய விசாரணையின் அறிக்கைகள், கைப்பற்றப்பட்ட பொருட்கள், தடயங்கள் உள்ளிட்டவற்றையும் ஒப்படைத்தனர்.
கோவையில் என்.ஐ.ஏ.வுக்கு அலுவலகம் இல்லாததால் கோவை ஆயுதப்படை பயிற்சி மையத்தில் என்.ஐ.ஏ.வுக்கு புதிதாக அலுவலகம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அங்கு என்.ஐ.ஏ. அதிகாரிகள் போலீசாரிடம் இருந்து பெற்றுக்கொண்ட ஆவணங்கள், தடயங்கள் உள்ளிட்டவற்றை பரிசோதித்து விசாரணையின் ஆரம்ப கட்ட பணிகளை தொடங்கினர்.
போலீசாரிடம் இருந்து ஆவணங்களை பெற்றுக்கொண்ட என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று தங்களது விசாரணையை தொடங்கினர்.
இன்று காலை என்.ஐ.ஏ. இன்ஸ்பெக்டர் விக்னேஷ் தலைமையிலான அதிகாரிகள் கோவை பி.ஆர்.எஸ். மைதானத்தில் இருந்து காரில், கார் வெடிப்பு சம்பவம் நடந்த கோட்டை ஈஸ்வரன் கோவில் பகுதிக்கு செல்கின்றனர்.
அங்கு கார் வெடிப்பு நடந்த இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளனர். பின்னர் கோவிலுக்குள் சென்று ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்த உள்ளனர்.
தொடர்ந்து கோவில் மற்றும் வெளிப்புற பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிராக்களை பார்வையிட்டு ஆய்வு செய்து, கூடுதல் தடயங்கள் கிடைக்கிறதா? என சோதனை மேற்கொள்ள உள்ளனர்.
தொடர்ந்து கார் வந்த இடமான உக்கடத்தில் இருந்து கோட்டைமேடு பகுதி வரையிலும் ஆய்வு மேற்கொள்கின்றனர். மேலும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள 6 பேரின் வீடுகளுக்கும் சென்றும் அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளனர்.
மேலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைதான 6 பேரையும் மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது. இதுதவிர இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பெரோஸ், இலங்கை குண்டு வெடிப்பில் தொடர்புடையதாக என்.ஐ.ஏ.வால் கைது செய்யப்பட்டு கேரளா சிறையில் இருந்த ரசித் அலி, முகமது அசாருதீனை சந்தித்துள்ளார். இது தொடர்பாக இவர்களை கேரளாவுக்கு அழைத்து சென்று விசாரிக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
என்.ஐ.ஏ. விசாரணை தொடங்கி உள்ளதால் இந்த வழக்கில் மேலும் புதிய தகவல்கள் கிடைக்கும் என தெரிகிறது.
- கார் வெடிப்பு சம்பவத்தின் போது முபின் வைத்திருந்த ஒரு செல்போன் உடைந்து நொறுங்கி விட்டது.
- முபின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ஒரு செல்போன் போலீசாருக்கு கிடைத்தது. இதேபோல் கைதான மற்றவர்களின் வீடுகளில் இருந்தும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கோவை:
கோவை கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோவில் முன்பு கடந்த மாதம் 23-ந்தேதி நடந்த கார் வெடிப்பு சம்பவத்தில் ஜமேஷா முபின் என்பவன் உயிரிழந்தான்.
போலீஸ் விசாரணையில் முபின் தனது கூட்டாளிகளுடன் கோவையில் நாச வேலைக்கு திட்டமிட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் இறந்த முபினின் கூட்டாளிகளான 6 பேரை கைது செய்தனர்.
முபின் வீட்டில் இருந்து வெடிகுண்டுகள் தயாரிக்க பயன்படும் ரசாயனங்கள், ஐ.எஸ். ஆதரவு வாசகங்கள் அடங்கிய பொருட்கள், செல்போன்கள், சிம்கார்டுகள் உள்ளிட்ட பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கார் வெடிப்பு வழக்கினை தற்போது என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். உயிரிழந்த முபின் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.
கோவில்கள் மற்றும் அங்கு நடக்கும் உருவ வழிபாடுகள் மீது முபினுக்கு வெறுப்புணர்வு இருந்து வந்துள்ளது. இதனால் கடந்த 2 ஆண்டுகளாகவே அவர் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபடுவதற்காக திட்டமிட்டு வந்த தகவலையும் போலீசார் கண்டுபிடித்தனர்.
2019-ம் ஆண்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் முபின் வீட்டில் சோதனை நடத்தினர். அதன்பின்னர் அவரை தொடர்ந்து கண்காணிக்க உளவுத்துறைக்கு அறிவுறுத்தப்பட்டது. உளவுத்துறையினரும் அவரை கண்காணித்து வந்தனர்.
ஆனால் அவர்களின் கண்காணிப்பையும் மீறி அடுத்தடுத்து முபின் 3 வீடுகளுக்கு மாறியதும், இதை மத்திய, மாநில உளவுத்துறையினர் கண்காணிக்க தவறியதும் தெரியவந்தது.
இந்த நிலையில் போலீசாரின் தொடர் விசாரணையில், முபின் தனது கூட்டாளிகளுடன் பேசுவதற்கு பிரத்யேகமாக செயலி ஒன்றை பயன்படுத்தியது தற்போது தெரியவந்துள்ளது.
கார் வெடிப்பு சம்பவத்தின் போது முபின் வைத்திருந்த ஒரு செல்போன் உடைந்து நொறுங்கி விட்டது.
தொடர்ந்து அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ஒரு செல்போன் போலீசாருக்கு கிடைத்தது. இதேபோல் கைதான மற்றவர்களின் வீடுகளில் இருந்தும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பறிமுதல் செய்த செல்போன்களை போலீசார் ஆய்வு செய்த போது, முபின் தனது கூட்டாளிகளுடன் பேசுவதற்காக ஐ.எம்.ஓ. என்ற பிரத்யேக செயலியை பயன்படுத்தியது தெரியவந்தது.
இந்த செயலியை பயன்படுத்தி இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் உள்ளவர்களுடனும் பேசலாம். மேலும் செல்போனில் சிம்கார்டுகளை பயன்படுத்தி பேசினால் ஏதாவது ஒரு வகையில் போலீசாரிடம் சிக்கி விடுவோம் என்பதை அறிந்து ஐ.எம்.ஓ. எனப்படும் பிரத்யேக செயலியை பயன்படுத்திருக்கலாம்.
இந்த செயலியில் வீடியோ அழைப்பு, வாய்ஸ் கால் எனப்படும் குரல்பதிவு அழைப்பு, சாட் எனப்படும் எழுத்து பரிமாற்றம் மூலமாகவும் பேச முடியும்.
இதில் முபின் மற்றும் அவரது கூட்டாளிகள் சாட்களை பயன்படுத்தாமல் வீடியோ, வாய்ஸ் கால் அழைப்புகள் மூலம் பேசி வந்துள்ளனர். இவற்றை ரெக்கார்டு செய்ய முடியாது. மேலும் பேசியவுடன் அந்த தகவல்களை உடனுக்குடன் அழித்தும் உள்ளனர்.
மேலும் முபின் ஐ.எ.ம்.ஓ. செயலி மூலம் வெளிநாட்டு நபர்களுடன் பேசியிருக்க வாய்ப்புள்ளது. அவர்கள் முபினை மூளைச்சலவை செய்தததுடன், அவருக்கு வெடிபொருட்கள் வாங்க பணம் உதவி செய்திருக்கலாம் என என்.ஐ.ஏ. அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் கூறும்போது, வாட்ஸ்அப் அழைப்பு, ஐ.எம்.ஓ. போன்ற செயலிகளில் இருதரப்பினரின் ரகசியம் காக்கப்படும் என்பதாலும், போலீசாரால் கண்காணிக்க முடியாது என்பதாலும் குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் இதனை அதிகம் பயன்படுத்துகின்றனர்.
இதுபோன்ற செயலிகளின் தலைமையை தொடர்பு கொண்டு கேட்டாலும் தகவல்கள் எளிதாக கிடைப்பதில்லை. சட்டவிரோத செயல்களை தடுக்க இதுபோன்ற செயலிகளின் பயன்பாட்டை கண்காணிக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுப்பது ஒன்றே தீர்வாகும் என்றனர்.
கோவை கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து, கோவையில் யாரெல்லாம் இதுவரை ஆன்லைனில் வெடி பொருட்கள் வாங்கி உள்ளனர் என்ற பட்டியலை தயாரிக்கும் பணியில் போலீசார் துரிதமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே இந்த வழக்கில் கைதான 6 பேரும் நாளை சென்னை பூந்தமல்லியில் உள்ள என்.ஐ.ஏ. கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
இதற்காக இன்று 6 பேரும் கோவை மத்திய ஜெயிலில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்னைக்கு அழைத்து செல்லப்படுகின்றனர். நாளை காலை என்.ஐ.ஏ. கோர்ட்டில் 6 பேரும் ஆஜர்படுத்தப்படுகின்றனர்.
அதன்பின்னர் அவர்கள் 6 பேரும் புழல் சிறையில் அடைக்கப்படுவார்கள் என தெரிகிறது.
இதையடுத்து என்.ஐ.ஏ. கோர்ட்டில் அனுமதி பெற்று கைதான 6 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்கவும், அவர்களின் வீடுகளில் சோதனை மேற்கொள்ளவும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
- என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை முழுவதையும் ஆடியோ மற்றும் வீடியோவாக பதிவு செய்து கொண்டனர்.
- கோவையின் 20 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி வருகின்றனர்.
கோவை:
கோவையில் கடந்த 23-ம் தேதி நடந்த கார் வெடிப்பு சம்பவத்தில் ஜமேஷா முபின் என்பவன் உயிரிழந்தான். விசாரணையில் முபின் கூட்டாளிகளுடன் சேர்ந்து கோவையில் நாச வேலைக்கு திட்டமிட்டது தெரியவந்தது. இது தொடர்பாக முபினின் கூட்டாளிகள் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் நடந்த கோட்டை ஈஸ்வரன் கோவிலுக்கு வந்து கார் வெடிப்பு நடந்த இடம், கார் இருந்த நிலை, வெடிவிபத்தால் பாதிக்கப்பட்ட கோவிலின் முன்புறம் உள்ளிட்ட இடங்கள், காரின் உதிரி பாகங்கள், சிலிண்டர்கள் கிடந்த இடம், முபின் உயிரிழந்து கிடந்த இடம், கோவில் வளாகம், சுற்றுப்புற பகுதி ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
என்.ஐ. அதிகாரிகள் விசாரணை முழுவதையும் ஆடியோ மற்றும் வீடியோவாக பதிவு செய்து கொண்டனர். தொடர்ந்து கோவையில் முகாமிட்டு இந்த வழக்கு சம்பந்தமாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், கோவையில் உள்ள 20 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.
- சென்னை மற்றும் கேரள மாநிலம் கொச்சியில் இருந்து வந்த 30-க்கும் மேற்பட்ட என்.ஐ.ஏ. அதிகாரிகள், கோவை மாநகர போலீசாருடன் இணைந்து சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
- சோதனையின் போது வீடுகளில் இருந்தவர்களை வெளியே செல்ல அனுமதிக்கவில்லை.
கோவை:
கோவையில் நாச வேலைக்கு திட்டமிட்ட ஜமேஷா முபின் என்ற வாலிபர் கார் வெடித்து சிதறி பலியானார்.
காரில் வெடி பொருட்களை நிரப்பி கியாஸ் சிலிண்டரை பயன்படுத்தி தீபாவளிக்கு முந்தைய நாள் மக்கள் நெருக்கம் நிறைந்த இடத்தில் அதனை வெடிக்கச் செய்து பெரும் உயிரிழப்பை ஏற்படுத்த முபின் திட்டமிட்டு இருந்தார்.
ஆனால் முபின் திட்டம் பலிக்காமல் அவரது சதித்திட்டத்தில் அவரே சிக்கி உயிரிழந்தார். அவரது வீட்டில் இருந்து 75 கிலோவுக்கும் அதிகமான வெடிபொருட்களை போலீசார் கைப்பற்றினர்.
இது தொடர்பாக போலீசார் அவரது கூட்டாளிகளான முகமது அசாருதீன், முகமது தல்கா, அப்சர்கான், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகிய 6 பேரை கைது செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன.
இதற்கிடையே இந்த வழக்கு என்.ஐ.ஏ.வுக்கு (தேசிய புலனாய்வு முகமை) மாற்றப்பட்டது. என்.ஐ.ஏ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர்.
முதற்கட்டமாக கார் வெடிப்பு சம்பவம் நடந்த இடமான கோட்டை ஈஸ்வரன் கோவில் பகுதியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ததுடன், கோவில் பூசாரியிடமும் விசாரித்தனர்.
வழக்கில் கைதான 6 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளிலும் ஈடுபட்டுள்ளனர். இதற்காக கோவை ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த 6 பேரையும் நேற்றுமுன்தினம் சென்னை அழைத்து சென்று பூந்தமல்லியில் உள்ள என்.ஐ.ஏ. சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
கார் வெடிப்பு தொடர்பாக விசாரித்த போது தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக கோவை மட்டுமல்லாமல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 100-க்கும் அதிகமானோர் செயல்படுவது தெரிய வந்தது. இதனால் அவர்களை கண்காணிப்பதுடன் அவர்களின் வீடுகளில் சோதனையிடவும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் திட்டமிட்டனர்.
இந்த நிலையில் சென்னை, கோவை உள்பட தமிழகம் முழுவதும் 45 இடங்களில் இன்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஒரே நேரத்தில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். காலை 6 மணிக்கு இந்த சோதனை தொடங்கியது.
கார் வெடிப்பு சம்பவத்தில் கைதானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், தடை செய்யப்பட்ட இயக்கங்களை சேர்ந்த ஆதரவாளர்களின் பட்டியல்களை தயாரித்து உளவுத்துறை, என்.ஐ.ஏ.விடம் அளித்து உள்ளது. அதன் அடிப்படையிலேயே தமிழகம் முழுவதும் இன்று இந்த சோதனை நடந்தது.
கோவையில் கோட்டை மேடு, உக்கடம், பொன்விழா நகர், புல்லுக்காடு, ரத்தின புரி, ஜி.எம்.நகர் உள்பட 33 இடங்களில் சோதனை நடந்தது.
பலியான முபின் மற்றும் கைதான 6 பேரின் உறவினர்கள், நண்பர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், தடை செய்யப்பட்ட இயக்கங்களின் ஆதரவாளர்களின் வீடுகள் என 33 இடங்களில் அதிகாலை முதலே அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
சென்னை மற்றும் கேரள மாநிலம் கொச்சியில் இருந்து வந்த 30-க்கும் மேற்பட்ட என்.ஐ.ஏ. அதிகாரிகள், கோவை மாநகர போலீசாருடன் இணைந்து இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
சோதனையின் போது வீடுகளில் இருந்தவர்களை வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. அதேபோல வெளியாட்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. வீடுகளில் உள்ள அனைத்து அறைகளிலும் அதிகாரிகள் சல்லடை போட்டு அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
வீடுகளில் இருந்த லேப்டாப், செல்போன் உள்ளிட்டவற்றை பார்வையிட்டு அதனை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதில் ஏதாவது தகவல்கள் இருக்கிறதா? என்பது குறித்தும் ஆய்வு நடத்தினர்.
சோதனை நடந்த சில இடங்களில் இருந்து அதிகாரிகள் முக்கிய ஆவணங்களை கைப்பற்றி உள்ளதாக கூறப்படுகிறது.
காலை 6 மணிக்கு தொடங்கிய சோதனையானது மாலை வரை நீடிக்கும் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இதனால் இந்த சோதனையில் என்.ஐ.ஏ. அதிகாரிகளுக்கு பல்வேறு முக்கிய தகவல்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும் சோதனை முடிவிலேயே என்ன ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன என்பது குறித்த முழுமையான விவரங்கள் தெரியவரும்.
என்.ஐ.ஏ. சோதனை நடந்த இடங்களில் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நிகழாமல் இருக்க அந்த இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
சென்னையில் புதுப்பேட்டை, மண்ணடி, பெரம்பூர், ஜமாலியா உள்பட 5 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். நெல்லையில் 2 இடங்களிலும், திருப்பூரில் ஒரு இடத்திலும், மதுரையில் 2 இடத்திலும், கயல்பட்டினத்தில் ஒரு இடத்திலும் சோதனை நடந்தது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள திரு முல்லைவாசல் சொக்கலிங்கம் நகர் பகுதியைச் சேர்ந்த அல்பாஷித் (22) என்பவர் வீட்டில் சோதனை நடந்தது. காலை 5 மணிக்கு 6 பேர் கொண்ட அதிகாரிகள் சென்று சோதனை நடத்தினர். அப்போது அல்பாஷித் வீட்டில் தான் இருந்தார். ஆம்புலன்ஸ் டிரைவாக பணியாற்றும் அவரிடம் விசாரணையும் நடத்தப்பட்டது.
கார் வெடிப்பு தொடர்பாக கோவையில் கைதானவர்கள் வீடுகள் மற்றும் பல இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஏற்கனவே சோதனை நடத்தி இருந்தனர். தற்போது 2-வது முறையாக என்.ஐ.ஏ. சோதனை நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கியூ பிரிவு அதிகாரிகள் விசாரித்த நிலையில், இந்த வழக்கு கடந்த ஜூலை 27-ந் தேதி தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது.
- இந்த கும்பலுக்கு துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்களை வாங்குவதற்கு யார் உதவினார்கள்? என்பது குறித்தும் என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம்:
சேலம் மாவட்டம் ஓமலூர் போலீசார், கடந்த மே மாதம் 19-ந் தேதி, புளியம்பட்டியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த சேலம் சன்னியாசிகுண்டு மணல்காரர் தெருவை சேர்ந்த நவீன் என்கிற நவீன்சக்கரவர்த்தி (வயது 25), செவ்வாய்ப்பேட்டை ஜம்புலிங்கம் தெருவைச் சேர்ந்த சஞ்சய்பிரகாஷ் (25) ஆகியோரிடம் இருந்து 2 துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் அவர்கள், சேலம் செட்டிச்சாவடி பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து துப்பாக்கி தயாரித்தது தெரியவந்தது. இருவரையும் ஓமலூர் போலீசார் கைது செய்தனர். இவர்களுக்கு உதவிபுரிந்த கிச்சிப்பாளையத்தை சேர்ந்த கபிலர் என்கிற கபிலன் என்பவரும் கைதானார். கைதானவர்களிடம் இருந்து துப்பாக்கிகள் மற்றும் வீரப்பன், பிரபாகரன் ஆகியோரின் புத்தகங்கள் இருந்ததால், இவ்வழக்கை சேலம் கியூ பிரிவுக்கு மாற்றினர்.
கியூ பிரிவு அதிகாரிகள் விசாரித்த நிலையில், இந்த வழக்கு கடந்த ஜூலை 27-ந் தேதி தேசிய புலனாய்வு முகமைக்கு (என்.ஐ.ஏ.) மாற்றப்பட்டது. அவர்கள் மீண்டும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இவ்வழக்கில் கைதான 3 பேர் மீது, என்.ஐ.ஏ. அதிகாரிகள் நீதிமன்றத்தில் நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
இந்த நிலையில் நேற்று என்.ஐ.ஏ போலீசார் நவீன்சக்கரவர்த்தி, சஞ்சய்பிரகாஷ் மற்றும் சேலத்தைச் சேர்ந்த கபிலர் என்கிற கபிலன் ஆகியோர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் உட்பட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.
இதில் நவீன் சக்கரவர்த்தி சேலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.சி.ஏ 3-ம் ஆண்டும், சஞ்சய் பிரகாஷ் திருச்செங்கோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பி.இ படித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. தற்போது நவீன் சக்கரவர்த்தி மற்றும் சஞ்சய் பிரகாஷ் ஆகியோர் சிறையில் உள்ளனர்.
கபிலர் என்கிற கபிலன் ஜாமீனில் வந்து தலைமறைவானதால் போலீசார் தேடி வருகின்றனர். மேலும் இந்த கும்பலுக்கு துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்களை வாங்குவதற்கு யார் உதவினார்கள்? என்பது குறித்தும் என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 6 பேரும் காவலில் எடுத்து விசாரிக்கப்படும் பட்சத்தில் அவர்களது வீடுகள் மற்றும் சதித்திட்டம் தீட்டிய இடங்களுக்கு அவர்களை நேரில் அழைத்துச் சென்று விசாரிக்க என்.ஐ.ஏ. அதிகாரிகள் திட்டம் வகுத்துள்ளனர்.
- கூடுதல் போலீஸ் பாதுகாப்பு கேட்கவும் முடிவு செய்துள்ளனர்.
கோவை:
கோவையில் நடந்த கார் வெடிப்பு சம்பவத்தில் முபின் என்ற வாலிபர் பலியானார். முபினுடன் தொடர்புடைய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
தற்போது இந்த வழக்கை என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள். முதல்கட்டமாக அவர்கள் கார் வெடித்த கோட்டைமேடு ஈஸ்வரன் கோவிலுக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
தொடர்ந்து முபின் மற்றும் கைதானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் மற்றும் ஐ.எஸ். இயக்கத்தால் ஈர்க்கப்பட்டவர்களின் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினர். கோவையில் 33 இடங்கள் உள்பட தமிழகம் முழுவதும் 43 இடங்களில் இந்த சோதனை நடந்தது. இதில் சில முக்கிய ஆவணங்கள், செல்போன்களை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர்.
அடுத்தக்கட்டமாக கைதான 6 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏ. அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதன் ஒரு கட்டமாக 6 பேரையும் சென்னை அழைத்துச் சென்று பூந்தமல்லியில் உள்ள என்.ஐ.ஏ. சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் மீண்டும் அவர்களை கோவை மத்திய ஜெயிலில் அடைத்தனர்.
இதையடுத்து காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்றால் அதற்கு போதுமான காரணங்கள், ஆதாரங்களை என்.ஐ.ஏ. சிறப்பு கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும். அப்போது தான் காவல் அனுமதி கிடைக்கும். அதனால் அதற்கான ஏற்பாடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.
அனேகமாக அவர்கள் நாளை கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்ய அதிகம் வாய்ப்புள்ளது. அல்லது வியாழக்கிழமைக்குள் காவலில் எடுத்து விசாரித்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
6 பேரும் காவலில் எடுத்து விசாரிக்கப்படும் பட்சத்தில் அவர்களது வீடுகள் மற்றும் சதித்திட்டம் தீட்டிய இடங்களுக்கு அவர்களை நேரில் அழைத்துச் சென்று விசாரிக்க என்.ஐ.ஏ. அதிகாரிகள் திட்டம் வகுத்துள்ளனர். இதற்காக கூடுதல் போலீஸ் பாதுகாப்பு கேட்கவும் முடிவு செய்துள்ளனர்.
- 6 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்கும் போது, கார் வெடிப்பு வழக்கில் யாரெல்லாம் ஈடுபட்டார்கள் என்ற முழு தகவலும் தெரியவரும்.
- இன்னும் சிலர் சிக்குவதற்கான வாய்ப்புகளும் இருப்பதாக கூறப்படுகிறது.
கோவை:
கோவையில் கடந்த 23-ந்தேதி கார் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதில் முபின் என்ற வாலிபர் உயிரிழந்தார்.
காரில் சிலிண்டர், ஆணி உள்ளிட்ட பொருட்களை நிரப்பி தீபாவளியை முன்னிட்டு கோவையில் நாச வேலையை அரங்கேற்ற முபின் சதி திட்டம் தீட்டியது தெரியவந்தது.
தற்போது இந்த வழக்கினை என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். தொடர்ந்து சில தினங்களுக்கு முன்பு முபின் மற்றும் கைதானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், ஐ.எஸ். இயக்கத்தால் ஈர்க்கப்பட்டவர்களின் வீடுகள் என தமிழகம் முழுவதும் 43 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.
இந்த சோதனையின் போது பலரது வீடுகளில் இருந்து செல்போன், டிஜிட்டல் கருவிகள் மற்றும் பல்வேறு முக்கிய ஆவணங்களும் என்.ஐ.ஏ. அதிகாரிகளிடம் சிக்கியுள்ளது.
தற்போது கைப்பற்றிய ஆவணங்களில் உள்ள விவரங்களின் முழுமையான தகவல்களை சேகரிக்கும் பணியை என்.ஐ.ஏ. அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
முழுமையான தகவல்கள் கிடைத்த பின்னர் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் மேலும் சிலர் இந்த வழக்கில் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்காக இந்த வழக்கில் கைதாகி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முகமது அசாருதீன், முகமது தல்கா, அப்சர்கான், பெரோஸ் இஸ்மாயில், முகமது ரியாஸ், முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகிய 6 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.
இதற்காக இன்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் சென்னை பூந்தமல்லியில் உள்ள என்.ஐ.ஏ. கோர்ட்டில் மனுதாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
காவலில் எடுத்து விசாரிக்கும் போது, அவர்களிடம் இந்த சம்பவத்தில் இவர்கள் மட்டும் தான் ஈடுபட்டார்களா ? வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா? என்பது குறித்தும் விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.
மேலும் அவர்களின் வீடுகளில் சோதனை நடத்துவதற்கும் அனுமதி கேட்க உள்ளனர்.
6 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்கும் போது, கார் வெடிப்பு வழக்கில் யாரெல்லாம் ஈடுபட்டார்கள் என்ற முழு தகவலும் தெரியவரும்.
அப்போது இந்த வழக்கில் இன்னும் சிலர் சிக்குவதற்கான வாய்ப்புகளும் இருப்பதாக கூறப்படுகிறது.
- சென்னையில் இன்று மீண்டும் 4 இடங்களில் போலீசார் சோதனை நடத்தினர்.
- வேப்பேரி ரித்தர்டன் சாலையில் புகாரி என்பவரின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது.
சென்னை:
கோவையில் கடந்த மாதம் 23-ந்தேதி கார் வெடித்து சிதறிய சம்பவத்தில் வாலிபர் முபின் உயிர் இழந்தார்.
காரில் சிலிண்டர்கள் மற்றும் வெடி பொருட்களை எடுத்துச் சென்று மிகப்பெரிய தற்கொலை படை தாக்குதலுக்கு முபின் திட்டமிட்டது என்.ஐ.ஏ. விசாரணையில் தெரியவந்தது.
கோவை கார் வெடிப்பு சம்பவம் குண்டு வெடிப்பு சம்பவம் என்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டனர்.
கார் வெடிப்பு சம்பவத்தின் முழு பின்னணி தொடர்பாக விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் தமிழகம் முழுவதும் தொடர் சோதனை நடத்தி வருகிறார்கள். அந்த வகையில் சென்னையிலும் மாநகர போலீசார் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.
கடந்த 15-ந்தேதி 5 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் வெளிநாட்டு பணம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கின. இதனை ஆய்வு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சென்னையில் இன்று மீண்டும் 4 இடங்களில் போலீசார் சோதனை நடத்தினர். வேப்பேரி ரித்தர்டன் சாலையில் புகாரி என்பவரின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. தலைமை செயலக காலனி போலீஸ் எல்லைக்குட்பட்ட ஓட்டேரி எஸ்.எஸ்.புரம் பி.பிளாக்கில் உள்ள சாகுல் அமீது வீடு, முத்தியால் பேட்டை பிடாரியார் கோவில் தெருவில் உள்ள உமர் பாரூக் வீடு மற்றும் ஏழு கிணறு போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஒரு இடம் ஆகியவற்றிலும் சோதனை நடத்தப்பட்டது.
ஓட்டேரியில் அயனாவரம் உதவி கமிஷனர் ஜவகர் தலைமையிலும், முத்தியால்பேட்டை பகுதியில் உதவி கமிஷனர் லட்சுமணன் தலைமையிலும், சோதனை நடத்தினர்.
கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் நடத்திய சோதனை, விசாரணை ஆகியவற்றில் கிடைத்த தகவலின் பேரிலேயே சென்னையில் தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையிலேயே கடந்த 15-ந் தேதி சோதனை நடத்தப்பட்டது. இதையடுத்து 4 நாட்களில் இன்று மீண்டும் சோதனை நடைபெற்று உள்ளது.
திருச்சி அருகே உள்ள இனாம்குளத்தூர் பகுதியை சேர்ந்தவர்கள் சாகுல் அமீது, சர்புதீன். இவர்கள் இருவருக்கும் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமான ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தேசிய பாதுகாப்பு முகமை அறிவுறுத்தலின் பேரில் இன்று அவர்களின் வீடுகளில் அதிரடியாக சோதனை நடத்தப்பட்டது.
துணை போலீஸ் சூப்பிரண்டு பாரதிதாசன் தலைமையில் ராம்ஜிநகர் போலீசார் 50 பேர் இன்று காலை அவர்களின் வீடுகளில் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தி வருகிறார்கள். இதில் சாகுல் அமீதுவை ஏற்கனவே கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு என்.ஐ.ஏ. அதிகாரிகள் சென்னை அழைத்து சென்று விசாரணை நடத்தியதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த சோதனையில் சம்பந்தப்பட்ட இருவரின் செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்து ஆய்வுக்கு உட்படுத்தி உள்ளனர். மேலும் அவர்களின் வீடுகளில் ஒருசில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு இருப்பதாகவும் முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.
கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ள நிலையில் அவர்களின் பின்னணி மற்றும் சர்வதேச தொடர்புகளை கண்டறிவதற்காகவே என்.ஐ.ஏ. அதிகாரிகள் அளிக்கும் தகவலின் பேரில் தொடர் சோதனை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
- பிரதமர் நரேந்திர மோடியைக் கொல்ல மாவோயிஸ்டுகளுடன் சேர்ந்து சதி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது
- பாஸ்டனை தளமாகக் கொண்ட தடயவியல் அமைப்பான அர்செனல் கன்சல்டிங் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
புதுடெல்லி:
பயங்கரவாத தொடர்பு குற்றச்சாட்டில் 2020ல் கைது செய்யப்பட்ட பாதிரியார் ஸ்டேன் சுவாமி (83), ஜாமீன் மனு விசாரணையில் இருக்கும்போதே 2021ம் ஆண்டு மரணம் அடைந்தார். ஸ்டேன் சுவாமி திருச்சியைப் பூர்வீகமாகக் கொண்டவர். இவர் பழங்குடியினரின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்துவந்தார். ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பழங்குடியினரின் உரிமைகளுக்காகப் போராடி வந்த நிலையில்தான் இவரை பீமா கோரேகான் வழக்கில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) கைது செய்து சிறையில் அடைத்தது.
பீமா கோரேகான் நினைவிடத்தில் வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. 15 பேருடன் சேர்ந்து அவர் சதியில் ஈடுபட்டதாக என்ஐஏ கூறியது. அவர்களின் கணினிகளில் இருந்து பெறப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், பிரதமர் நரேந்திர மோடியைக் கொல்ல மாவோயிஸ்டுகளுடன் சேர்ந்து சதி செய்ததாக சுவாமி மற்றும் மற்றவர்கள் குறிப்பாக இடதுசாரி ஆர்வலர்கள், கல்வியாளர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள மீது என்ஐஏ குற்றம் சாட்டியது.
இந்நிலையில் பாதிரியார் ஸ்டேன் சுவாமியின் கணினியில் பல குற்றவியல் ஆவணங்கள் திணிக்கப்பட்டிருப்பதாக அமெரிக்க தடயவியல் நிறுவனத்தின் புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டேன் சுவாமியின் வழக்கறிஞர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட, தடயவியல் அமைப்பான அர்செனல் கன்சல்டிங், இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
மாவோயிஸ்ட் கடிதங்கள் என அழைக்கப்படும் கடிதங்கள் உட்பட 44 ஆவணங்கள், 2014ஆம் ஆண்டு தொடங்கி 2019 ஆம் ஆண்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டவரை, 5 ஆண்டுகளாக ஸ்டேன் சுவாமியின் கணினியை அணுகிய ஹேக்கர்களால் திணிக்கப்பட்டதாக அந்த அறிக்கை கூறுகிறது. இது என்ஐஏவின் குற்றச்சாட்டில் கடும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
- மதுரையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை செய்தனர்.
- அப்போது வீட்டில் இருந்து வாள், வேல் கம்பு, சுருள் கத்தி, சைக்கிள் செயின், கேடயம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.
மதுரை
கர்நாடக மாநிலம் மங்களூரில் கடந்த மாதம் குக்கர் வெடிகுண்டு, கோவையில் காரில் சிலிண்டர் வெடித்தது தொடர்பாக மதுரையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இந்தநிலையில் இன்று காலை என்.ஐ.ஏ. இன்ஸ்பெக்டர் அருள் மகேஷ் தலைமையில் 3 அதிகாரிகள் கொண்ட குழுவினர் மதுரை நெல்பேட்டை பகுதியைச் சேர்ந்த உமர்ஷெரீப் (வயது 42) என்பவரது வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது வீட்டில் இருந்து வாள், வேல் கம்பு, சுருள் கத்தி, சைக்கிள் செயின், கேடயம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. சில மணி நேர சோதனையின் பின் உமர்ஷெரீப்பை ரகசியமான இடத்திற்கு அழைத்துச் சென்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக அவரது மனைவி மற்றும் குடும்பத்தினருடனும் விசாரணை நடத்தப்பட்டது.
என்.ஐ.ஏ. சோதனை யின்போது அந்தப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.