என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "O Panneerselvam"

    • குண்டர்களை அழைத்துச் சென்று தலைமை அலுவலகத்தை சேதப்படுத்தியவர்களை கட்சியில் இணைப்பது சாத்தியமற்றது.
    • காவல்துறை ஏவல்துறையாக மாறி விட்டது.

    தூத்துக்குடி விமான நிலையத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * ஓ.பன்னீர்செல்வம் இணைப்புக்கு சாத்தியமில்லை. அ.தி.மு.க.வில் இருப்பதற்கே ஓ.பி.எஸ்.க்கு தகுதியில்லை.

    * அ.தி.மு.க.வில் இணைப்பதற்கு ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோருக்கு தகுதியில்லை.

    * குண்டர்களை அழைத்துச் சென்று தலைமை அலுவலகத்தை சேதப்படுத்தியவர்களை கட்சியில் இணைப்பது சாத்தியமற்றது.

    * கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் தற்போது இணைப்பட்டு வருகிறார்கள். ஆனால் ஓ.பி.எஸ்.க்கு தகுதியில்லை. பிரிந்தது பிரிந்தது தான்.

    * தேர்தல் நெருங்கும்போது கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை தொடங்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அ.தி.மு.க.வை மிகப் பெரிய பேரியியக்கமாக உருவாக்குவதற்கு உழைத்தவர்.
    • ஜெயலலிதாவுக்காக மிகுந்த நம்பிக்கையோடு பணியாற்றியவர்.

    நெல்லை:

    அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கருப்பசாமி பாண்டியன் உடல்நலக்குறைவால் நேற்று அதிகாலை உயிரிழந்தார். இந்தநிலையில் பாளையங்கோட்டையை அடுத்துள்ள திருத்து கிராமத்தில் அவரது உடல் அடக்கம் இன்று நடை பெறுகிறது.

    இதனையொட்டி அவரது இல்லத்திற்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் இன்று காலை நேரில் அஞ்சலி செலுத்தினர்.

    பின்னர் ஓ.பன்னீர் செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அ.தி.மு.க. தொடங்கிய காலத்தில் இருந்தே எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்காக மிகுந்த நம்பிக்கையோடு பணியாற்றியவர் கருப்பசாமி பாண்டியன். இந்த பகுதி மட்டுமின்றி தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று அ.தி.மு.க.வை மிகப் பெரிய பேரியியக்கமாக உருவாக்குவதற்கு இதய பூர்வமாக உழைத்தவர். அவருடைய மறைவு தென் மாவட்ட மக்களுக்கு மிகப்பெரிய இழப்பாகும்.

    எந்த சூழலிலும் உதவி என்று யார் தன்னை நாடி வந்தாலும் உதவியவர். அனைத்து தரப்பினருக்காகவும் உழைத்தவர். பொதுச்சேவையை நிறைவாக செய்தவர். அவருடைய குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

    1982-ல் பெரியகுளம் மக்களவை தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றபோது அவர் பணியாற்றிய விதம் எங்களுக்கெல்லாம் முன் மாதிரியாக அமைந்தது. அவருடைய ஆன்மா இறைவன் திருவடியில் அமைதியில் திளைக்கட்டும்.

    பிரிந்து கிடக்கும் சக்திகள் அனைத்தையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்று நினைத்தவர் கருப்பசாமி பாண்டியன். அ.தி.மு.க. தொண்டர்களின் எண்ணமும் அதுதான். அதற்கு எம்.ஜி.ஆர். ஜெயலலிதா ஆன்மாவால் வழி பிறக்கட்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • எப்போதுமே உண்மையாக இருந்தால் நிச்சயம் இறையருள் கிடைக்கும்.
    • தமிழகத்தில் ஜல்லிக்கட்டு பிரச்சனை யாராலும் தீர்க்க முடியாத பிரச்சனையாக இருந்தது.

    சென்னை:

    தமிழக பா.ஜ.க. கட்சி சார்பில் சென்னையில் நேற்று மாலை இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாநில தலைவர் அண்ணாமலை, தமிழிசை சவுந்தரராஜன், டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம் உள்பட கூட்டணி கட்சி தலைவர்கள் அதில் பங்கேற்றனர்.

    இந்த கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

    எப்போதுமே உண்மையாக இருந்தால் நிச்சயம் இறையருள் கிடைக்கும். அதற்கு பல உதாரணங்களை கூறலாம். நபிகள் நாயகத்தின் வாழ்க்கை பல விஷயங்களை நமக்கு கற்றுக் கொடுத்துள்ளது.

    இந்தியாவில் இனி எத்தனை தேர்தல்கள் வந்தாலும் மத்தியில் பா.ஜ.க. கட்சிதான் ஆட்சியில் அமரும்.

    தமிழகத்தில் ஜல்லிக்கட்டு பிரச்சனை யாராலும் தீர்க்க முடியாத பிரச்சனையாக இருந்தது. அதனை ஒரே நாளில் தீர்த்து வைத்தவர் பிரதமர் மோடி. அதனால் தான் இன்று ஜல்லிக்கட்டு காளைகள் துள்ளி குதித்து ஓடுகின்றன. அதற்கு காரணமான பிரதமர் மோடி ஜல்லிக்கட்டு நாயகராக திகழ்ந்து கொண்டிருக்கிறார்.

    இவ்வாறு ஓ.பி.எஸ். பேசினார்.

    • எடப்பாடி பழனிசாமி நேற்று டெல்லி சென்றிருந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம் 3 முக்கிய கோவில்களில் வழிபாடு செய்து உள்ளார்.
    • ஓ.பன்னீர்செல்வம் திருவேற்காடு கருமாரியம்மன் கோவில், பாடி சிவன் கோவில், திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில்களில் சாமி தரிசனம் செய்துள்ளார்.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் நேற்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை அவரது வீட்டில் சந்தித்து பேசினார். சந்திப்பின்போது, பாராளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு, மும்மொழி கொள்கை விவகாரம் குறித்தும் இரு தலைவர்களும் பேசியதாக தெரிகிறது.

    இந்நிலையில் அ.தி.மு.க.வில் அணிகள் இணைப்பிற்காக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று 3 முக்கிய கோவில்களில் வழிபாடு செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று டெல்லி சென்றிருந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம் 3 முக்கிய கோவில்களில் வழிபாடு செய்து உள்ளார்.

    மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, எடப்பாடி பழனிசாமி சந்திப்பு குறித்து ஓ.பன்னீர்செல்வத்துக்கு முன்னரே தெரியும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

    ஓ.பன்னீர்செல்வம் திருவேற்காடு கருமாரியம்மன் கோவில், பாடி சிவன் கோவில், திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில்களில் சாமி தரிசனம் செய்துள்ளார்.

    இன்று காலை செய்தியாளர்களின் கேள்விக்கு எல்லாம் நன்மைக்கே என ஓ.பன்னீர்செல்வம் பதில் அளித்தது குறிப்பிடத்தக்கது.

    • தி.மு.க. அரசின் நிர்வாகத் திறமையின்மைக்கு இது மற்றுமோர் எடுத்துக்காட்டு.
    • நெல் மூட்டைகள் மழையில் நனையாமல் இருக்க கூடுதலாகக் கிடங்குகள் கட்ட தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன்.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்கள் வாயிலாக நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படும் போது, எதிர்பாராத விதமாக ஆங்காங்கே ஏற்படும் மழை காரணமாக நெல் மூட்டைகள் சேதமடைவது என்பது வாடிக்கையாக நடந்து கொண்டே இருக்கின்றது.

    அந்த வகையில், தற்போது கடலூர் மாவட்டம், புவனகிரியில் அண்மையில் பெய்த மழையால் ஆதிவராகநத்தம் பகுதியில் கட்டப்பட்ட நெல் கொள்முதல் நிலையத்தில் மழைநீர் தேங்கியதால் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் சேதமடைந்துள்ளன.

    இதேபோன்று, நாகப்பட்டினம் மாவட்டம், வாழ்குடி, பில்லாளி, மேல பூதனூர், திருமருகல் போன்ற நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் திறந்தவெளியில் வைக்கப்பட்டிருந்த 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து நாசமாகியுள்ளது.

    இதே நிலைமை தான் டெல்டா மாவட்டங்கள் முழுவதும் நிலவுகிறது. தி.மு.க. அரசின் நிர்வாகத் திறமையின்மைக்கு இது மற்றுமோர் எடுத்துக்காட்டு. தி.மு.க. அரசின் அலட்சியப் போக்கிற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இனி வருங்காலங்களில் நெல் மூட்டைகள் மழையில் நனையாமல் இருக்க கூடுதலாகக் கிடங்குகள் கட்ட தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • அ.தி.மு.க. தலைமையில் தான் பிரச்சனை என்கிற மாயத்தோற்றம் உருவாகி உள்ளது.
    • அ.தி.மு.க உடன் கூட்டணி வைக்க தயார் என்கிற டி.டி.வி தினகரனின் கருத்து நல்ல கருத்து இதை வரவேற்கிறோம்.

    திருச்சி:

    அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் அரசு கொறடா துரை.கோவிந்தராஜன் தஞ்சையில் காலமானார். அவர் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக ஓ.பன்னீர்செல்வம் சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார்.

    விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அ.தி.மு.க.வை பொறுத்தவரை எம்.ஜி.ஆர். தொண்டர்களுகாக இந்த இயக்கத்தை ஆரம்பித்தார். இதை நான் ஏற்கனவே பலமுறை சொல்லி இருக்கிறேன். தொண்டர்களின் நலனுக்கான இந்த இயக்கத்தின் 50 ஆண்டு பரிணாம வளர்ச்சிதான் இப்போது இருக்கிறது.

    தொண்டர்களை எந்த நேரத்திலும் பிளவுப்படுத்தி பார்க்க முடியாத வகையில் தான் நிலைத்து நிற்கிறது. அ.தி.மு.க.வில் எந்தவித சிறுசேதமும் இல்லை, சிறு சிறு பிரச்சினைகள் இடையில் வரும் அது சரியாக போய்விடும். அனைத்து தொண்டர்களும் ஒற்றுமையாக இருக்கிறார்கள்.

    அ.தி.மு.க. தலைமையில் தான் பிரச்சனை என்கிற மாயத்தோற்றம் உருவாகி உள்ளது. அது போக போக சரியாகி விடும். தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியை வாய்ப்பு கிடைத்தால் சந்திப்போம்.

    அ.தி.மு.க. உடன் கூட்டணி வைக்க தயார் என்கிற டி.டி.வி.தினகரனின் கருத்து நல்ல கருத்து இதை வரவேற்கிறோம். வாய்ப்பு ஏற்பட்டால் அவரை சந்திப்பேன். தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் அண்ணன் தம்பி இயக்கம் தான் ஆனால் மாறுபட்ட பாதையில் பயணித்து கொண்டு இருக்கிறோம். எங்கள் பாதை எம்.ஜி.ஆர். காட்டி தந்த பாதை அதில் பயணிக்கிறோம்.

    அ.தி.மு.க. இடத்தை பா.ஜ.க. பிடிக்க பார்க்கிறது என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. அ.தி.மு.க.வின் ஒற்றுமையை பா.ஜ.க. குலைக்கவில்லை. அ.தி.மு.க.வை யாராலும் மிரட்ட முடியாது.

    அ.தி.மு.க. தொண்டர்களை யாராலும் பிளவுபடுத்தி பார்க்க முடியாது, அது நடக்காது. பாராளுமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றியை பெறுவோம்.

    எங்களை பொறுத்தவரை ஜனநாயக ரீதியில் இயக்கம் செயல்பட வேண்டும், வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும். அதைதான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். எந்த நோக்கத்திற்காக அ.தி.மு.க. சட்ட விதியை எம்.ஜி.ஆர் உருவாக்கினாரோ அதில் சின்ன மாசோ, பங்கமோ ஏற்படக்கூடாது என்பதற்காகத்தான் இந்த தர்ம யுத்தத்தை நடத்திக்கொண்டு இருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அ.தி.மு.க. நிர்வாக வசதியை முன்னிட்டு, திருப்பத்தூர் மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு இன்று முதல் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
    • கோ. சுரேஷ்பாபு-திருப்பத்தூர் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் (ஆம்பூர், வாணியம்பாடி சட்டமன்றத் தொகுதிகள்).

    சென்னை:

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    அ.தி.மு.க. நிர்வாக வசதியை முன்னிட்டு, திருப்பத்தூர் மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு இன்று முதல் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

    இதன் அடிப்படையில், அ.தி.மு.க. திருப்பத்தூர் வடக்கு மற்றும் திருப்பத்தூர் தெற்கு மாவட்டக் கழக செயலாளர்களாக கீழ்க்கண்டவர்கள் கீழ்க்காணும் பொறுப்புகளுக்கு இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள்.

    கோ. சுரேஷ்பாபு-திருப்பத்தூர் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் (ஆம்பூர், வாணியம்பாடி சட்டமன்றத் தொகுதிகள்). டைகர் என்.எஸ்.கே. இளங்கோவன்-திருப்பத்தூர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் (திருப்பத்தூர், ஜோலார்பேட்டை சட்டமன்றத் தொகுதிகள்). கழக உடன்பிறப்புகள் அனைவரும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்டக் கழகச் செயலாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் தங்களுடைய வேலைவாய்ப்பும், இருப்பிடமும் பறிபோவதை ஒருநாளும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
    • தி.மு.க. அரசின் தோட்டத் தொழிலாளர் விரோதக் கொள்கைக்கு அ.தி.மு.க.வின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    சென்னை:

    ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    ஆயிரக்கணக்கான தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரமாக விளங்கிக் கொண்டிருக்கும் டான்டீ நிறுவனத்தின் நிலத்தை பறித்து, அந்தப் பகுதி இயற்கை வனமாக மாற்றப்படும் என்று அமைச்சர் கூறுவது தொழிலாளர்களின் வயிற்றில் அடிப்பதற்குச் சமம். ஒரு வேளை அந்தப் பகுதி இயற்கை வனமாக மாற்றப்பட வேண்டுமென்றால், அங்குள்ள தொழிலாளர்களை வைத்தே அதை இயற்கை வனமாக மாற்றுவதும், அவர்களை அங்கேயே தங்க வைக்க வழிவகை செய்வதும் தான் பொருத்தமாக இருக்கும். இதைவிட்டு விட்டு தொழிலாளர்களை வீட்டுக்கு அனுப்புவது என்பது இயற்கை நியதிக்கு மாறானது. அவர்களுடைய வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும்.

    தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் தங்களுடைய வேலைவாய்ப்பும், இருப்பிடமும் பறிபோவதை ஒருநாளும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அவர்களை வேலையை விட்டு அனுப்புவது என்பதும், இருப்பிடங்களை காலி செய்யச் சொல்லி கட்டாயப்படுத்துவதும் அவர்களை நாடு கடத்துவதற்கு சமம். இதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. தி.மு.க. அரசின் தோட்டத் தொழிலாளர் விரோதக் கொள்கைக்கு அ.தி.மு.க.வின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    முதல்-அமைச்சர் இதில் உடனடியாக தலையிட்டு, டான்டீ நிறுவனத்தின் 2,152 ஹெக்டேர் நிலத்தை வனத்துறைக்கு ஒப்படைக்கும்படி பிறப்பித்த ஆணையை உடனடியாக ரத்து செய்து, தேயிலைத்தோட்டக் கழகத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பிரியா என்ற மாணவி இறந்தது அனைவருக்கும் தெரியும்.
    • அரசு ஆஸ்பத்திரிகளில் கவனக்குறைவான சிகிச்சையால் உயிரிழப்பு சம்பவங்கள் நடக்கிறது.

    சென்னை :

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு ஒன்றை கொடுத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு நாள் டிசம்பர் 5-ந் தேதி வருகிறது. அன்றைய தினம் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதில் ஏராளமான நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    அதன் பின்னர் உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சியும் நடக்க உள்ளது. இதற்கு உரிய அனுமதியும், போலீஸ் பாதுகாப்பும் வழங்கும்படி மனு கொடுத்துள்ளோம். உரிய பாதுகாப்பும், அனுமதியும் வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    அண்மை காலமாக அரசு ஆஸ்பத்திரிகளில் கவனக்குறைவான சிகிச்சையால் உயிரிழப்பு சம்பவங்கள் நடக்கிறது. எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அதிக மயக்க மருந்து கொடுத்ததன் காரணமாக குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. இதுபோல குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியிலும் குழந்தை ஒன்று இறந்துள்ளது. பிரியா என்ற மாணவி இறந்தது அனைவருக்கும் தெரியும்.

    ஆட்சியாளர்கள் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எதிர்க்கட்சி என்ற முறையில் இதை எடுத்து சொல்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் போன்றோர் மீண்டும் அ.தி.மு.க.வில் சேரப்போவதாக, பேச்சு அடிபடுகிறதே, என்ற நிருபர்களின் கேள்விக்கு, 'இதற்கு பதில் அளித்து, அளித்து புளித்து போய் விட்டது. அது முடிந்து போன கதை. அது தொடரும் கதை அல்ல. அதற்கு வாய்ப்பே இல்லை என்று எடப்பாடி பழனிசாமியே, கூறி விட்டார்' என்று ஜெயக்குமார் உறுதியாக பதில் அளித்தார்.

    • கட்சியின் ஒற்றுமைதான் முக்கியம் என்ற பொது நோக்கோடு செயல்பட்டவர் ஜானகி அம்மையார்.
    • எம்.ஜி.ஆரின் நினைவு இல்லத்தில், உரிய அனுமதி பெற்று, எம்.ஜி.ஆர். மற்றும் அவரது மனைவி வி.என்.ஜானகி அம்மையார் ஆகியோருக்கு முழுஉருவ வெண்கலச் சிலைகள் அமைக்கப்படும்.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    அ.தி.மு.க. நிறுவனரும், மூன்று முறை தொடர்ந்து தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தவரும், தமிழக மக்களின் உள்ளங்களில் இன்றளவும் குடி கொண்டிருப்பவருமான 'பாரத ரத்னா' எம்.ஜி.ஆரின் மனைவியும், முன்னாள் முதலமைச்சருமான மறைந்த வி.என்.ஜானகி அம்மையாரின் 100-வது பிறந்தநாள் விழா தொடக்கத்தினையொட்டி அவருக்கு என் வணக்கத்தினையும், மரியாதையையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    தமிழக மக்களின் நலன்களுக்காக அ.தி.மு.க. என்னும் மாபெரும் மக்கள் இயக்கத்தை எம்.ஜி.ஆர். ஆரம்பித்தபோது, சென்னை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தனக்கு சொந்தமான இடத்தை கட்சிக்காக கொடுத்த வள்ளல் ஜானகி அம்மையார். இந்த இடத்தில்தான் தலைமைக்கழகம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகை என்ற பெயரில் இன்றளவிலும் செயல்பட்டு வருகிறது.

    எம்.ஜி.ஆரின் மறைவிற்கு முன்பே, 29-07-1987 அன்று அந்தக் கட்டிடத்தை எம்.ஜி.ஆரின் பெயரில் பத்திரப்பதிவு செய்த பெருமைக்குரியவர் ஜானகி அம்மையார் தமிழ்நாட்டின் முதல் பெண் முதலமைச்சர் என்ற பெருமையும் அவரையே சாரும்.

    கட்சியின் ஒற்றுமைதான் முக்கியம் என்ற பொது நோக்கோடு செயல்பட்ட ஜானகி அம்மையாரின் புகழ், அவர் செய்த தியாகம் என்றென்றும் அனைவர் உள்ளங்களிலும், குறிப்பாக அ.தி.மு.க. தொண்டர்களின் உள்ளங்களில் நிலைத்து நிற்கும்.

    புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில் தரை தளத்தில் உள்ள முக்கியப் பிரமுகர் அறைக்கு வி.என்.ஜானகி அம்மையார் பெயர் சூட்டப்பட வேண்டுமென்றும், முதல் தளத்தில் உள்ள கூட்ட அறைக்கு புரட்சித்தலைவி அம்மா பெயர் சூட்டப்பட வேண்டுமென்றும் கோரிக்கைகள் கழகத் தொண்டர்களால் என்னிடம் வைக்கப்பட்டுள்ளன. இந்தக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் நாள் வெகுதூரத்தில் இல்லை.

    மேலும், சென்னை, தியாகராய நகரில் எம்.ஜி.ஆரின் நினைவு இல்லத்தில், உரிய அனுமதி பெற்று, எம்.ஜி.ஆர். மற்றும் அவரது மனைவி வி.என்.ஜானகி அம்மையார் ஆகியோருக்கு முழுஉருவ வெண்கலச் சிலைகள் அமைக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • ஓ.பன்னீர்செல்வம் தமிழகம் முழுவதும் தனக்கு ஆதரவான நிலையில் உள்ளவர்களை நிர்வாகிகளாக நியமித்து வருகிறார்.
    • எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வை அழிக்க துடித்து வருகிறார். அவர் அ.தி.மு.க.வை ஒரு சமுதாய கட்சியாக மாற்ற நினைக்கிறார்.

    பெரியகுளம்:

    அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர்.

    ஓ.பி.எஸ்.சின் ஆதரவாளர்களை எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து நீக்கி வருகிறார். இதனைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் தமிழகம் முழுவதும் தனக்கு ஆதரவான நிலையில் உள்ளவர்களை நிர்வாகிகளாக நியமித்து வருகிறார்.

    அவர்களுடன் பெரியகுளத்தில் உள்ள பண்ணை வீட்டில் தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டு அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து கருத்து கேட்டு வருகிறார். மேலும் தனக்கு ஆதரவான நிர்வாகிகளை கொண்டு பொதுக்குழு கூட்டம் நடத்தப்போவதாகவும் அறிவிப்பை வெளியிட்டார்.

    இந்நிலையில் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலம் எடப்பாடி தொகுதி, சங்ககிரி தொகுதியில் புதிதாக நியமனம் செய்யப்பட்ட சேலம் மேற்கு புறநகர் மாவட்ட செயலாளர் எடப்பாடி ராஜேந்திரன் தலைமையில் 150க்கும் மேற்பட்ட எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் பெரியகுளம் பண்ணை வீட்டில் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.

    அதன்பின் எடப்பாடி ராஜேந்திரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வை அழிக்க துடித்து வருகிறார். அவர் அ.தி.மு.க.வை ஒரு சமுதாய கட்சியாக மாற்ற நினைக்கிறார். எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா எந்த நோக்கத்திற்காக இந்த கட்சியை உருவாக்கினார்களோ அதற்காக தொண்டர்கள் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒன்று சேர தயாராகி வருகின்றனர். எடப்பாடி பழனிசாமியின் தவறான அணுகுமுறையால் தி.மு.க. அரசின் தவறுகளை கூட சுட்டிக்காட்ட முடியாத நிலை உள்ளது. ஓ.பன்னீர்செல்வத்துக்கு மக்கள் மத்தியிலும், தொண்டர்கள் மத்தியிலும் ஆதரவு அதிகரித்துக்கொண்டே வருகிறது. விரைவில் அவர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு முதல் பொதுக்கூட்டத்தை எடப்பாடி தொகுதியில் நடத்த வேண்டும். அப்போதுதான் தமிழகம் முழுவதும் மாபெரும் எழுச்சி ஏற்படும். வருகிற பாராளுமன்ற தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அ.தி.மு.க. தொண்டர்கள் தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அ.தி.மு.க. தலைமை யார் என்பது தொடர்பாக பல்வேறு கோர்ட்டுகளில் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
    • அ.தி.மு.க.வுக்கு நான்தான் ஒருங்கிணைப்பாளராக இருந்து வழி நடத்திக் கொண்டிருக்கிறேன் என்பதை உறுதிபட தெரிவித்துக்கொள்கிறேன்.

    சென்னை:

    வளர்ந்த நாடுகளுக்கும், வளர்ந்து கொண்டிருக்கும் நாடுகளுக்கும் இடையே பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக ஜி20 என்ற அமைப்பு உள்ளது. இந்தியா, அமெரிக்கா, சீனா உள்பட 19 நாடுகளும், ஐரோப்பிய யூனியனும் இந்த அமைப்பில் அங்கம் வகிக்கின்றன.

    உலகின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தில் 85 சதவீத பங்களிப்பை இந்த நாடுகள்தான் வழங்குகின்றன. இதனால் ஜி20 அமைப்பு சர்வதேச அளவில் அதிக சக்தி வாய்ந்த அமைப்பாக கருதப்படுகிறது.

    ஜி20 என்ற அமைப்பின் அடுத்த சர்வதேச மாநாட்டை டெல்லியில் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் 9, 19-ந் தேதிகளில் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஜி20 மாநாட்டுக்கு இந்தியா தலைமை ஏற்று இருப்பதால் அதை வெற்றிகரமாக நடத்த மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.

    இந்த மாநாட்டுக்கு தயாராகும் வகையில் நாடு முழுவதும் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் கூட்டங்கள் நடத்தப்பட உள்ளது. அதற்கு முன்னதாக மாநாட்டு யுக்திகளை வரையறுப்பதற்காக 40 கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி நேற்று டெல்லியில் ஆலோசனை நடத்தினார்.

    தமிழகத்தில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க. சார்பில் எடப்பாடி பழனிசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திருமாவளவன், தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் ஜி.கே.வாசன் ஆகியோர் கலந்து கொண்டனர். அ.தி.மு.க.வுக்கு தலைமை யார்? என்ற சர்ச்சை எடப்பாடி பழனிசாமிக்கும் ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையே நீடித்து வரும் நிலையில் ஜி20 மாநாடு ஆலோசனை கூட்டத்துக்கு எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்ட தால் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

    மத்திய அரசு எடப்பாடி பழனிசாமிக்குத்தான் முதல் முன்னுரிமை கொடுத்து கடிதம் அனுப்பியது. அந்த கடிதத்தை பெற்றுக்கொண்ட எடப்பாடி பழனிசாமி அனைத்துக்கட்சி ஆலோசனை கூட்டத்துக்கு அ.தி.மு.க. சார்பில் தம்பிதுரையை அனுப்பி வைக்கவே முதலில் திட்டமிட்டு இருந்தார். ஆனால் மத்திய அரசு தரப்பில் இருந்து எடப்பாடி பழனிசாமி பங்கேற்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. சார்பில் நேற்று நடந்த அனைத்துக்கட்சி ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டார். இதன் மூலம் எடப்பாடி பழனிசாமியை பா.ஜனதா மேலிடம் அங்கீகரித்து இருப்பதாக கருதப்படுகிறது.

    இது எடப்பாடி பழனிசாமி தரப்பினருக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் கொடுத்து உள்ளது. அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வரும் நிலையில் மத்திய அரசும், பா.ஜனதா மேலிடமும் அங்கீகரித்து இருப்பதால் எடப்பாடி பழனிசாமியும் உற்சாகம் அடைந்து உள்ளார்.

    மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு ஓ.பன்னீர்செல்வம் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். அ.தி.மு.க. முன்னாள் ஒருங்கிணைப்பாளரான அவர் இது தொடர்பாக பாராளுமன்ற விவகார அமைச்சர் பிரலகாத் ஜோஷிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார். அதில் ஓ.பன்னீர்செல்வம் கூறி இருப்பதாவது:-

    அ.தி.மு.க. தலைமைக்கு சட்ட ரீதியாக நான்தான் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறேன். அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளராக இன்னமும் நான்தான் நீடிக்கிறேன். கடந்த டிசம்பர் மாதம் நடந்த கட்சி கூட்டத்தில் நான் போட்டியின்றி ஏக மனதாக அந்த பதவிக்கு தேர்வானேன்.

    இதுபற்றி தேர்தல் ஆணையத்துக்கு மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1950-ன்படி தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனவே அ.தி.மு.க. தலைமை பொறுப்பில் எடப்பாடி பழனிசாமி இல்லை என்பதை தங்களது மேலான கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன். அ.தி.மு.க.வுக்கு நான்தான் ஒருங்கிணைப்பாளராக இருந்து வழி நடத்திக் கொண்டிருக்கிறேன் என்பதை உறுதிபட தெரிவித்துக்கொள்கிறேன்.

    அ.தி.மு.க.வில் உள்ள சிலரது நடவடிக்கைகளால் கட்சி தலைமை தொடர்பாக சர்ச்சை உருவாகி உள்ளது. சிலர் ஒன்று சேர்ந்து எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளர் (தற்காலிக) பதவிக்கு தேர்வு செய்து இருப்பதாக சொல்கிறார்கள். அ.தி.மு.க.வின் சட்ட விதிகளுக்கு இது முழுக்க முழுக்க விரோதமானதாகும்.

    எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்திருப்பதை தலைமை தேர்தல் ஆணையம் இதுவரை அங்கீகரிக்கவில்லை என்பதையும் தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். எனவே எதிர்காலத்தில் இத்தகைய தவறு நடக்காமல் மத்திய அரசு நடந்து கொள்ளும் என்று மனப்பூர்வமாக நான் நம்புகிறேன்.

    மத்திய அரசு சார்பில் அனுப்பப்பட்ட கடிதத்தில் இடைக்கால பொதுச்செயலாளர் என்று குறிப்பிட்டு எடப்பாடி பழனிசாமியை இனியும் மத்திய அரசு அழைக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

    அ.தி.மு.க. தலைமை யார் என்பது தொடர்பாக பல்வேறு கோர்ட்டுகளில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளர் என்று அறிவித்திருப்பது துரதிருஷ்டமாகும்.

    எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு சிறிய அணிதான் இருக்கிறது. எனவே அவர்களை கருத்தில் கொள்ள வேண்டாம் என்று மீண்டும் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அந்த கடிதத்தில் ஓ.பன்னீர்செல்வம் கூறி உள்ளார்.

    ஆனால் ஓ.பன்னீர்செல்வம் கடிதத்தை மத்திய அரசு கண்டு கொண்டதாக தெரியவில்லை. இது தொடர்பாக இதுவரை ஓ.பன்னீர்செல்வத்துக்கு மத்திய அரசு தரப்பில் இருந்து எந்த பதில் கடிதமும் அனுப்பி வைக்கப்படவில்லை.

    இதனால் ஓ.பன்னீர் செல்வமும், அவரது ஆதரவாளர்களும் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

    ×