என் மலர்
நீங்கள் தேடியது "O Panneerselvam"
- அ.தி.மு.க. தலைமை யார் என்பது தொடர்பாக பல்வேறு கோர்ட்டுகளில் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
- அ.தி.மு.க.வுக்கு நான்தான் ஒருங்கிணைப்பாளராக இருந்து வழி நடத்திக் கொண்டிருக்கிறேன் என்பதை உறுதிபட தெரிவித்துக்கொள்கிறேன்.
சென்னை:
வளர்ந்த நாடுகளுக்கும், வளர்ந்து கொண்டிருக்கும் நாடுகளுக்கும் இடையே பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக ஜி20 என்ற அமைப்பு உள்ளது. இந்தியா, அமெரிக்கா, சீனா உள்பட 19 நாடுகளும், ஐரோப்பிய யூனியனும் இந்த அமைப்பில் அங்கம் வகிக்கின்றன.
உலகின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தில் 85 சதவீத பங்களிப்பை இந்த நாடுகள்தான் வழங்குகின்றன. இதனால் ஜி20 அமைப்பு சர்வதேச அளவில் அதிக சக்தி வாய்ந்த அமைப்பாக கருதப்படுகிறது.
ஜி20 என்ற அமைப்பின் அடுத்த சர்வதேச மாநாட்டை டெல்லியில் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் 9, 19-ந் தேதிகளில் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஜி20 மாநாட்டுக்கு இந்தியா தலைமை ஏற்று இருப்பதால் அதை வெற்றிகரமாக நடத்த மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.
இந்த மாநாட்டுக்கு தயாராகும் வகையில் நாடு முழுவதும் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் கூட்டங்கள் நடத்தப்பட உள்ளது. அதற்கு முன்னதாக மாநாட்டு யுக்திகளை வரையறுப்பதற்காக 40 கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி நேற்று டெல்லியில் ஆலோசனை நடத்தினார்.
தமிழகத்தில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க. சார்பில் எடப்பாடி பழனிசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திருமாவளவன், தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் ஜி.கே.வாசன் ஆகியோர் கலந்து கொண்டனர். அ.தி.மு.க.வுக்கு தலைமை யார்? என்ற சர்ச்சை எடப்பாடி பழனிசாமிக்கும் ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையே நீடித்து வரும் நிலையில் ஜி20 மாநாடு ஆலோசனை கூட்டத்துக்கு எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்ட தால் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
மத்திய அரசு எடப்பாடி பழனிசாமிக்குத்தான் முதல் முன்னுரிமை கொடுத்து கடிதம் அனுப்பியது. அந்த கடிதத்தை பெற்றுக்கொண்ட எடப்பாடி பழனிசாமி அனைத்துக்கட்சி ஆலோசனை கூட்டத்துக்கு அ.தி.மு.க. சார்பில் தம்பிதுரையை அனுப்பி வைக்கவே முதலில் திட்டமிட்டு இருந்தார். ஆனால் மத்திய அரசு தரப்பில் இருந்து எடப்பாடி பழனிசாமி பங்கேற்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. சார்பில் நேற்று நடந்த அனைத்துக்கட்சி ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டார். இதன் மூலம் எடப்பாடி பழனிசாமியை பா.ஜனதா மேலிடம் அங்கீகரித்து இருப்பதாக கருதப்படுகிறது.
இது எடப்பாடி பழனிசாமி தரப்பினருக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் கொடுத்து உள்ளது. அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வரும் நிலையில் மத்திய அரசும், பா.ஜனதா மேலிடமும் அங்கீகரித்து இருப்பதால் எடப்பாடி பழனிசாமியும் உற்சாகம் அடைந்து உள்ளார்.
மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு ஓ.பன்னீர்செல்வம் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். அ.தி.மு.க. முன்னாள் ஒருங்கிணைப்பாளரான அவர் இது தொடர்பாக பாராளுமன்ற விவகார அமைச்சர் பிரலகாத் ஜோஷிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார். அதில் ஓ.பன்னீர்செல்வம் கூறி இருப்பதாவது:-
அ.தி.மு.க. தலைமைக்கு சட்ட ரீதியாக நான்தான் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறேன். அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளராக இன்னமும் நான்தான் நீடிக்கிறேன். கடந்த டிசம்பர் மாதம் நடந்த கட்சி கூட்டத்தில் நான் போட்டியின்றி ஏக மனதாக அந்த பதவிக்கு தேர்வானேன்.
இதுபற்றி தேர்தல் ஆணையத்துக்கு மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1950-ன்படி தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனவே அ.தி.மு.க. தலைமை பொறுப்பில் எடப்பாடி பழனிசாமி இல்லை என்பதை தங்களது மேலான கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன். அ.தி.மு.க.வுக்கு நான்தான் ஒருங்கிணைப்பாளராக இருந்து வழி நடத்திக் கொண்டிருக்கிறேன் என்பதை உறுதிபட தெரிவித்துக்கொள்கிறேன்.
அ.தி.மு.க.வில் உள்ள சிலரது நடவடிக்கைகளால் கட்சி தலைமை தொடர்பாக சர்ச்சை உருவாகி உள்ளது. சிலர் ஒன்று சேர்ந்து எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளர் (தற்காலிக) பதவிக்கு தேர்வு செய்து இருப்பதாக சொல்கிறார்கள். அ.தி.மு.க.வின் சட்ட விதிகளுக்கு இது முழுக்க முழுக்க விரோதமானதாகும்.
எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்திருப்பதை தலைமை தேர்தல் ஆணையம் இதுவரை அங்கீகரிக்கவில்லை என்பதையும் தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். எனவே எதிர்காலத்தில் இத்தகைய தவறு நடக்காமல் மத்திய அரசு நடந்து கொள்ளும் என்று மனப்பூர்வமாக நான் நம்புகிறேன்.
மத்திய அரசு சார்பில் அனுப்பப்பட்ட கடிதத்தில் இடைக்கால பொதுச்செயலாளர் என்று குறிப்பிட்டு எடப்பாடி பழனிசாமியை இனியும் மத்திய அரசு அழைக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.
அ.தி.மு.க. தலைமை யார் என்பது தொடர்பாக பல்வேறு கோர்ட்டுகளில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளர் என்று அறிவித்திருப்பது துரதிருஷ்டமாகும்.
எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு சிறிய அணிதான் இருக்கிறது. எனவே அவர்களை கருத்தில் கொள்ள வேண்டாம் என்று மீண்டும் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அந்த கடிதத்தில் ஓ.பன்னீர்செல்வம் கூறி உள்ளார்.
ஆனால் ஓ.பன்னீர்செல்வம் கடிதத்தை மத்திய அரசு கண்டு கொண்டதாக தெரியவில்லை. இது தொடர்பாக இதுவரை ஓ.பன்னீர்செல்வத்துக்கு மத்திய அரசு தரப்பில் இருந்து எந்த பதில் கடிதமும் அனுப்பி வைக்கப்படவில்லை.
இதனால் ஓ.பன்னீர் செல்வமும், அவரது ஆதரவாளர்களும் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
- 2022-ம் ஆண்டு பொங்கல் தொகுப்புத் திட்டத்தில் மக்கள் எந்த பலனையும் அடையவில்லை.
- அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொருட்களுக்கு பதிலாக ரொக்கமாக 3,000 ரூபாய் வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தமிழக மக்களிடையே நிலவுகிறது.
சென்னை:
தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
2021ஆம் ஆண்டு மே மாதம் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற தி.மு.க., கடந்த 2022-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையினை முன்னிட்டு, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் சுமார் 1,200 கோடி ரூபாய் மதிப்பில் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என்று ஆணையிட்டது. ஆனால், இந்தப் பொருட்கள் தரமற்றவை என்றும், 21 பொருட்கள் என்பதற்கு பதிலாக 15 பொருட்கள் மட்டுமே அளிக்கப்பட்டதாகவும், பெரும்பாலான பொருட்கள் பிற மாநிலங்களிலிருந்து கொள்முதல் செய்யப்பட்டது என்றும் பொதுமக்களிடமிருந்து புகார்கள் வந்தன.
மொத்தத்தில், 2022-ம் ஆண்டு பொங்கல் தொகுப்புத் திட்டத்தில் மக்கள் எந்த பலனையும் அடையவில்லை என்றும், பயனடைந்தவை தனியார் நிறுவனங்கள்தான் என்றும், 1,200 கோடி ரூபாய் அரசாங்கப் பணம் விரயமாக்கப்பட்டதுதான் மிச்சம் என்றும் தமிழ்நாட்டு மக்கள் தெரிவிக்கின்றனர்.
அரசு பணம் விரயமாவதைத் தடுக்கும் வகையிலும், முழுமையான பலன் மக்களை சென்றடைவதை உறுதி செய்யும் வகையிலும், இந்த ஆண்டு பொங்கல் திருவிழாவை அனைவரும் சிறப்பாகக் கொண்டாடும் வண்ணமும், அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொருட்களுக்குப் பதிலாக ரொக்கமாக 3,000 ரூபாய் வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தமிழக மக்களிடையே நிலவுகிறது. இதன்மூலம் முறைகேடுகளுக்கு முழுமையாக முற்றுப்புள்ளி வைக்கும் நிலை உருவாகும்.
தமிழக மக்களின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யும் வகையில், 2023-ம் ஆண்டு பொங்கல் திருநாளினை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 3,000 ரூபாய் ரொக்கம் வழங்க வேண்டுமென்று அ.தி.மு.க. சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- ஆரஞ்ச் பால் பாக்கெட்டின் விலையை லிட்டருக்கு 12 ரூபாய் உயர்த்தி ஏழை எளிய மக்களை ஆற்றொணாத் துயரத்தில் ஆழ்த்தியது தி.மு.க. அரசு.
- தி.மு.க. அரசு மக்களை வஞ்சிக்கும் அரசு, மக்கள் விரோத அரசு, ஏழைகளுக்கு எதிரான அரசு என்பதை கடந்த ஒன்றரை ஆண்டு கால அனுபவத்தில் மக்கள் நன்கு புரிந்து கொண்டுவிட்டார்கள்.
சென்னை:
முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுகிறோம் என்று சொல்லி ஆவின் பால் விலையை லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைத்துவிட்டு, ஒன்றரை ஆண்டுகளில் பால் பொருட்களின் விலை அனைத்தையும் பன்மடங்கு உயர்த்தியதோடு மட்டுமல்லாமல், ஆரஞ்ச் பால் பாக்கெட்டின் விலையை லிட்டருக்கு 12 ரூபாய் உயர்த்தி ஏழை எளிய மக்களை ஆற்றொணாத் துயரத்தில் ஆழ்த்தியது தி.மு.க. அரசு. இவையெல்லாம் போதாதென்று, தற்போது ஆவின் நெய் மற்றும் வெண்ணெய் விலையை மீண்டும் உயர்த்தியுள்ளது.
தி.மு.க. அரசு மக்களை வஞ்சிக்கும் அரசு, மக்கள் விரோத அரசு, ஏழைகளுக்கு எதிரான அரசு என்பதை கடந்த ஒன்றரை ஆண்டு கால அனுபவத்தில் மக்கள் நன்கு புரிந்து கொண்டுவிட்டார்கள். மக்களை அரவணைத்துப் பேணி காக்கும் அரசனை உலகம் வணங்கும் என்ற வள்ளுவரின் வாய்மொழிக்கிணங்க, உயர்த்தப்பட்ட ஆவின் பொருட்களின் விலையை உடனடியாக குறைக்க வேண்டுமென்று அ.தி.மு.க. சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சட்ட சிக்கலை ஏற்படுத்தும் வகையில் தனது ஆதரவாளர்களுடன் ஓ.பி.எஸ். தொடர்ந்து ஆலோசனை நடத்தியதுடன் தீவிரமாகவும் செயல்பட்டு வருகிறார்.
- சுப்ரீம் கோர்ட்டில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கு விசாரணை வருகிற 4-ந்தேதி நடைபெற இருக்கும் நிலையில் ஓ.பி.எஸ். கூட்டியுள்ள இந்த திடீர் கூட்டம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை:
அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையே ஏற்பட்ட அதிகார போட்டி காரணமாக கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது.
இரண்டு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் உச்சக்கட்டத்தை எட்டி இருந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.
ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க.வில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். இது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கிடையே ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகம் தொடர்பான வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவே தீர்ப்பு வந்தது.
இதுவும் ஓ.பி.எஸ். மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு பின்னடைவாகவே அமைந்திருந்தது. ஆனால் ஓ.பி.எஸ். தரப்பினரோ பொதுக்குழு கூட்டம் முறையாக நடத்தப்படவில்லை என்று குற்றம்சாட்டி அதற்கு எதிராக சட்ட போராட்டத்தையும் நடத்தி தனி அணியாகவே செயல்பட்டு வருகிறார்கள்.
எடப்பாடி பழனிசாமி தரப்பினருக்கு கடும் போட்டியை ஏற்படுத்தும் வகையில் மாவட்ட செயலாளர்கள், மாநில நிர்வாகிகள் ஆகியோரையும் ஓ.பி.எஸ். நியமித்துள்ளார்.
88 மாவட்ட செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்றே ஓ.பி.எஸ். தரப்பில் கோர்ட்டில் தொடர்ந்து தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் ஓ.பி.எஸ்.சுக்கு ஆதரவாக ஒரு தீர்ப்பும், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக இன்னொரு தீர்ப்பும் வெளியானது.
எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக வெளியான தீர்ப்புக்கு எதிராக ஓ.பி.எஸ். தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது. வருகிற 4-ந்தேதி விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சட்ட சிக்கலை ஏற்படுத்தும் வகையில் தனது ஆதரவாளர்களுடன் ஓ.பி.எஸ். தொடர்ந்து ஆலோசனை நடத்தியதுடன் தீவிரமாகவும் செயல்பட்டு வருகிறார்.
அந்த வகையில் வருகிற 21-ந்தேதி (புதன்கிழமை) மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை ஓ.பி.எஸ். கூட்டியுள்ளார். அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரான பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் வேப்பேரி ரித்தர்டன் சாலையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. திருமண மண்டபத்தில் இந்த கூட்டம் நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் ஓ.பி.எஸ். மற்றும் முன்னிலை நிர்வாகிகள் பங்கேற்கிறார்கள். சுப்ரீம் கோர்ட்டில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கு விசாரணை வருகிற 4-ந்தேதி நடைபெற இருக்கும் நிலையில் ஓ.பி.எஸ். கூட்டியுள்ள இந்த திடீர் கூட்டம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த கூட்டத்தில் அடுத்த கட்டமாக எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மேற்கொள்ள வேண்டிய சட்ட நடவடிக்கைகள் பற்றி விரிவாக ஆலோசனைகளை நடத்தி முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகிறது.
இதுதொடர்பாக ஓ.பி.எஸ். ஆதரவு மூத்த நிர்வாகி ஒருவர் கூறும்போது, 'நாங்கள் தான் உண்மையான அ.தி.மு.க. என்பதை நிரூபிக்கும் விதமாக இந்த கூட்டம் இருக்கும். அடுத்தகட்டமாக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட உள்ளன என்று தெரிவித்தார்.
அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது தொடர்பாகவும், புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளது தொடர்பாகவும் தேர்தல் ஆணையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதேபோன்று ஓ.பி.எஸ். தரப்பிலும் புதிய நிர்வாகிகள் நியமனம் தொடர்பாக தகவல்களை விரைவில் தேர்தல் ஆணையத்தில் தெரிவிக்க உள்ளனர். சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணையின்போதும் இந்த தகவல்களை ஓ.பி.எஸ். தரப்பினர் தெரிவிக்க உள்ளனர்.
இதன்மூலம் எடப்பாடி பழனிசாமிக்கு கடும் சிக்கலை ஏற்படுத்த முடியும் என்பதே ஓ.பி.எஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களின் கணிப்பாக உள்ளது. இதற்காக அடுத்தடுத்து அதிரடி திட்டங்களை தீட்டி செயல்படவும் ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் முடிவு செய்து காய் நகர்த்தி வருகிறார்கள்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் நடைபெற்ற ஜி-20 மாநாட்டில் பங்கேற்க எடப்பாடி பழனிசாமிக்கு அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் என்று குறிப்பிட்டு அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. இதற்கு ஓ.பி.எஸ். எதிர்ப்பு தெரிவித்து பதில் கடிதம் அனுப்பி இருந்தார்.
இந்த நிலையில் குஜராத்தில் நடைபெற்ற பாரதிய ஜனதா முதல்-மந்திரி பதவியேற்பு விழாவில் ஓ.பி.எஸ். கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு திரும்பி இருக்கும் நிலையில் தான் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்துக்கு ஓ.பி.எஸ். ஏற்பாடு செய்துள்ளார்.
இதுவும் அரசியல் அரங்கில் பல்வேறு கேள்விகளை எழுப்பி இருக்கிறது. இதனால் 21-ந்தேதி ஓ.பி.எஸ். கூட்டியுள்ள நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
- கொங்கு மண்டலத்தில் இருந்து எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் பலர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
- ஒவ்வொரு மாவட்டத்திலும் நிர்வாகிகளை வளைக்கும் முயற்சியில் கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர்.
பெரியகுளம்:
அ.தி.மு.கவில் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி இடையே மோதல் ஏற்பட்டதால் கட்சியில் பிளவு ஏற்பட்டது. இதனைதொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கினார். அதனைதொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் தனக்கு ஆதரவான நிர்வாகிகளை அனைத்து மாவட்டங்களுக்கும் நியமனம் செய்தார்.
கட்சியில் 75 மாவட்டங்கள் இருந்தன. அதில் சில மாவட்டங்களை பிரித்து அமைப்பு ரீதியாக 88 மாவட்டங்களை உருவாக்கி அதற்கு மாவட்ட செயலாளர்களையும் நியமனம் செய்தார். மேலும் அனைத்து சார்புஅணிகளுக்கும், புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். இதுமட்டுமின்றி தலைமை கழக நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டனர். புதிய நிர்வாகிகள் நியமனம் முடிவடைந்தநிலையில் புதிய மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமை கழக நிர்வாகிகள் கூட்டத்தை சென்னையில் ஓ.பன்னீர்செல்வம் நாளை கூட்ட உள்ளார்.
கடந்த 2 நாட்களாக பெரியகுளம் பண்ணை வீட்டில் தனது ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தினார். ஒவ்வொரு மாவட்டத்திலும் தனக்கு ஆதரவான நிர்வாகிகளை வெளியிட உள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக உள்ளவர்களையும் வளைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
அதன்வரிசையில் கொங்கு மண்டலத்தில் இருந்து எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் பலர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். நேற்று போடி மீனாட்சிபுரத்தை சேர்ந்த எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் 50-க்கும் மேற்பட்டோர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து தங்கள் ஆதரவை தெரிவித்தனர். இதேபோல் ஒவ்வொரு மாவட்டத்திலும் நிர்வாகிகளை வளைக்கும் முயற்சியில் கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை வேப்பேரி ஒய்.எம்.சி.ஏ திருமண மண்டபதில் நாளை காலை 10 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் 88 மாவட்ட செயலாளர்கள், 100 தலைமை நிர்வாகிகள் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர். புதிய நிர்வாகிகள் அறிமுகம் மற்றும் முக்கிய தீர்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட உள்ளது. இதனைதொடர்ந்து இம்மாதத்தின் இறுதியில் பொதுக்குழுவை கூட்டவும் திட்டமிட்டுள்ளதாக ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.
- அ.தி.மு.க இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அனுப்பிய வரவு செலவு கணக்குகளை தேர்தல் ஆணையம் அங்கீகரித்து வெளியிட்டு உள்ளது.
- சசிகலாவுடன் இணைந்து செயல்படுவோம் என்று ஓ.பி.எஸ் சொல்வது முந்தைய நிலைக்கு எதிர்மாறாக உள்ளது.
சேலம்:
அ.தி.மு.க. ஓ.பன்னீர்செல்வம் அணி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது. கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக சாடி ஓ.பன்னீர்செல்வம் பேசினார். மேலும் தேர்தல் ஆணையமும், உச்சநீதிமன்றமும் சட்டப்படி வழங்கும் தீர்ப்பின்படி இரட்டை இலை சின்னம் எங்களுக்கு தான் கிடைக்கும்.
பொதுக்குழு நிச்சயமாக நடைபெறும். சசிகலா உட்பட கட்சிக்கு பாடுபட்டவர்களுடன், அ.தி.மு.க இயக்கத்தை காப்பாற்றிய யாராக இருந்தாலும் இணைந்து செயல்படுவோம் என்று கூறினார்.
இது தொடர்பாக அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான செம்மலை கூறியதாவது:-
அ.தி.மு.க. தற்போது இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடியார் தலைமையில் தான் செயல்பட்டு வருகிறது. தலைமை கழக அலுவலகம் எடப்பாடியார் வசம் உள்ளது. நீதிமன்றமே எடப்பாடியார் தரப்புக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கி உள்ளது. வங்கி கணக்கு இ.பி.எஸ் தரப்பு பொருளாளர் செயல்பட அனுமதி வழங்கி உள்ளது.
சமீபத்தில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அனுப்பிய வரவு செலவு கணக்குகளை தேர்தல் ஆணையம் அங்கீகரித்து வெளியிட்டு உள்ளது. அப்படிப்பட்ட நிலைமையில், கட்சி எடப்பாடியார் தலைமையில் இல்லை, எங்களுக்கு தான் சொந்தம் என்று ஓ.பி.எஸ் தரப்பு கொண்டாடுவது எதன் அடிப்படையில் என்று தெரியவில்லை.
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகள் இருக்கும்போதே கழக அமைப்பு தேர்தல் முறையாக நடத்தப்பட்டு இருவரின் ஒப்புதலோடு நியமிக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள், தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் யார் பக்கம் இருக்கிறார்கள் என்பது இ.பி.எஸ் தலைமையில் நடத்தப்பட்ட பொதுக்குழுவிலேயே நிரூபிக்கப்பட்டு விட்டது.
அப்படி இருக்க, ஓ.பி.எஸ் தனிப்பட்ட முறையில் நிர்வாகிகளை நியமிப்பது மட்டும் கட்சி விதிகளுக்கு உட்பட்டதா? எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட சட்ட விதிகளை மீறுவது நியாயமா? என்று ஓ.பி.எஸ் கேள்வி கேட்கிறார். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என பதவி மாற்றியது சரியா? அப்போது மாற்றம் செய்யவில்லையா? பொதுவாக சட்ட விதிகள் மாறுதலுக்கு உட்பட்டதுதான்.
பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட தகுதி நியமிப்பது சரியா? என ஓ.பி.எஸ் கேள்வி கேட்கிறார். ஜனாதிபதி தேர்தல் உட்பட பல தேர்தல்களுக்கு தகுதி நியமிக்கும்போது பொதுச்செயலாளர் என்ற உயர் பதவிக்கு தகுதி நியமிப்பதில் என்ன தவறு உள்ளது. எடப்பாடியார் தலைமை பண்பை நிரூபிக்க தனி கட்சி தொடங்க வேண்டிய அவசியம் இல்லை.
பொதுக்குழு உறுப்பினர்கள் அவரை தேர்வு செய்துள்ளனர். கட்சி, ஆட்சி சிறப்பாக வழி நடத்தி தலைமை பண்பை எடப்பாடியார் ஏற்கனவே நிரூபித்துவிட்டார். புதிதாக நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. புதிய கட்சியும் அவர் தொடங்க வேண்டிய அவசியம் இல்லை.
எடப்பாடியாரை வீதிக்கு வர சொல்வது சரியானது அல்ல. பொதுக்குழு தொடர்பாக 2 நீதிபதிகள் அடங்கிய உயர்நீதிமன்ற தீர்ப்பு எடப்பாடியார் தலைமைக்கு சாதமாக உள்ளது. மேல்முறையீட்டு வழக்கும் உச்ச நீதிமன்றத்தில் உள்ளது. அந்த நிலையில் கட்சிக்கு சொந்தம் கொண்டாடுபவர்கள் பொதுக்குழு கூட்டுவதாக சொல்வது அர்த்தமில்லை.
சசிகலாவுடன் இணைந்து செயல்படுவோம் என்று ஓ.பி.எஸ் சொல்வது முந்தைய நிலைக்கு எதிர்மாறாக உள்ளது. 1½ கோடி தொண்டர்கள் தங்கள் பக்கம் உள்ளதாக கூறுவதும், இல்லாத ஒன்றை கற்பனையாக சொல்வதாக உள்ளது. எடப்பாடியார் பக்கம் தொண்டர்கள் அனைவரும் உள்ளனர். கட்சியும் அவரது முழு கட்டுப்பாடடில் உள்ளது. இனிவரும் நாட்களிலும், வரும் தேர்தல்களிலும் முழு வெற்றியை கட்சிக்கு தருவார். அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி இருந்து வருகிறார்.
- அ.தி.மு.க. அலுவலகம், கட்சி முத்திரை உள்ளிட்டவற்றின் சட்டப்பூர்வ உரிமை இடைக்கால பொதுச் செயலாளரிடமே உள்ளது.
சென்னை:
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் நிர்வாகிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. கட்சி பெயர் மற்றும் கொடியை அவரது ஆதரவாளர்கள் பயன்படுத்தினர்.
இதனை தொடர்ந்து அ.தி.மு.க. சார்பில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது முகவரி மற்றும் பெரிய குளத்தில் அவரது நிரந்தர முகவரி ஆகியவற்றுக்கு அனுப்பப் பட்டுள்ள வக்கீல் நோட்டீஸ் குறிப்பிட்டிருப்பதாவது:-
அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி இருந்து வருகிறார். ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் அ.தி.மு.க. அலுவலகம் இயங்கி வருகிறது.
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டுள்ள நீங்கள் (ஓ.பன்னீர்செல்வம்) ஒருங்கிணைப்பாளர், பொருளாளர் என்று குறிப்பிட்டு கட்சியின் 'லெட்டர்பேட்'டை மோசடியாக பயன்படுத்தி உள்ளீர்கள்.
அ.தி.மு.க. தலைமையகத்தின் முத்திரையையும் போலியாக உருவாக்கி பயன்படுத்தி உள்ளீர்கள். இப்படி செயல்பட்டுள்ளது முழுக்க முழுக்க குற்றச் செயலாகும். தண்டனைக்குரியதுமாகும். அதே நேரத்தில் பொதுமக்களையும் தவறாக வழி நடத்தியுள்ளீர்கள்.
அ.தி.மு.க. அலுவலகம், கட்சி முத்திரை உள்ளிட்டவற்றின் சட்டப்பூர்வ உரிமை இடைக்கால பொதுச் செயலாளரிடமே உள்ளது. கடந்த ஜூலை மாதம் 20-ந் தேதி ஐகோர்ட்டு உத்தரவு இதனை உறுதிப்படுத்துகிறது. எனவே அ.தி.மு.க. பெயரை பயன்படுத்த உங்களுக்கு உரிமை இல்லை. எனவே கட்சி பெயரை பயன்படுத்து வதை நிறுத்திக் கொள்ளுங்கள்.
நீதிமன்ற உத்தரவை மீறி செயல்பட்டுள்ள உங்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு ஓ.பன்னீர்செல்வத்துக்கு அனுப்பப்பட்டுள்ள நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- கட்சி மற்றும் சின்னம் எடப்பாடி பழனிசாமியிடம் தான் உள்ளது.
- ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு விட்டார்.
தூத்துக்குடி :
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. கோவில்பட்டியில் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஓ.பன்னீர்செல்வம் நடத்திய கூட்டத்தில் ஏமாற்றத்தின் வெளிப்பாடாகவே அவர் பேசியுள்ளார். அவர் இருக்கும் போதுதான் உள்கட்சி அமைப்பு தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை கொண்டு தான் பொதுக்குழு கூட்டம் நடந்தது. பொதுக்குழுவில் வைக்கப்பட்ட வரவு-செலவு கணக்குகளை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டுள்ளது. கட்சி மற்றும் சின்னம் ஆகியவை எடப்பாடி பழனிசாமியிடம் தான் உள்ளது. ஆகவே தனிக்கட்சி ஆரம்பிக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. ஓ.பன்னீர்செல்வம்தான் தனிக்கட்சி தொடங்க வேண்டும்.
அ.தி.மு.க.வுடன் தான் பா.ஜ.க. கூட்டணியில் உள்ளது. நானும் ரவுடி தான் என்று வடிவேலு சொன்ன மாதிரி பா.ஜ.க. தனக்கு மரியாதை தருகிறது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறி வருகிறார். அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு விட்டார்.
டி.டி.வி. தினகரன், சசிகலா என யாருடன் வேண்டுமானாலும் ஓ.பன்னீர்செல்வம் கூட்டணி வைத்துக் கொள்ளலாம். அது அவரது விருப்பம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஓ.பன்னீர்செல்வத்துக்கு அனுப்பப்பட்ட வக்கீல் நோட்டீசே சட்டவிரோதமானது.
- கட்சியின் அலுவலகம் முகவரி முத்திரை ஆகியவற்றை ஒருங்கிணைப்பாளர் பயன்படுத்தக்கூடாது என்று தடை எதுவும் இல்லை.
புதுடெல்லி:
அ.தி.மு.க உட்கட்சி விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில், முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில், அவரது ஆதரவு மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கடந்த வாரம் சென்னை வேப்பேரியில் நடந்தது.
இதையடுத்து, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், இதுபோல கூட்டம் நடத்த அதிகாரம் இல்லை என்று கூறி அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி சார்பில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
அதில், ''கட்சியின் பெயரையும், முத்திரையையும் பயன்படுத்த எந்த உரிமையும் உங்களுக்கு கிடையாது. அதனால், சட்டவிரோத இந்த அறிவிப்பை உடனே திரும்ப பெறவில்லை என்றால், சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று கூறப்பட்டிருந்தது.
இந்த வக்கீல் நோட்டீசுக்கு ஓ.பன்னீர்செல்வம் பதில் அளித்து நோட்டீஸ் அனுப்பி உள்ளார். ஓ.பன்னீர்செல்வம் சார்பில் அவரது வக்கீல்கள் ராஜலட்சுமி, கவுதம் சிவசங்கர் எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பியுள்ள நோட்டீசில் கூறியிருப்பதாவது:-
ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வத்தை அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர்கள் தேர்ந்தெடுத்து உள்ளனர். அடிப்படை உறுப்பினரால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்தை ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து நீக்க பொதுக்குழுவுக்கு அதிகாரம் இல்லை.
கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கவும் தங்களுக்கு (எடப்பாடி பழனிசாமிக்கு) அதிகாரம் இல்லை.
எனவே, ஓ.பன்னீர்செல்வத்துக்கு அனுப்பப்பட்ட வக்கீல் நோட்டீசே சட்டவிரோதமானது. அ.தி.மு.க. அலுவலக சாவியை ஒப்படைப்பது தொடர்பாக, ஐகோர்ட்டு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்ட கருத்துகளை கீழ் கோர்ட்டு கருத்தில் கொள்ளக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது.
மேலும், கட்சி அலுவலகம் மீதான சட்டப்பூர்வமான உரிமைகளை இன்னும் கோர்ட்டு தீர்மானிக்காதபோது, முகவரியை பயன்படுத்தியது குறித்து தாங்கள் கூறும் குற்றச்சாட்டும் தவறானது.
கட்சியின் அலுவலகம் முகவரி முத்திரை ஆகியவற்றை ஒருங்கிணைப்பாளர் பயன்படுத்தக்கூடாது என்று தடை எதுவும் இல்லை.
தற்போது நீங்கள் (எடப்பாடி பழனிசாமி) இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக கூறுவது செல்லாது. அதற்கு எதிரான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் பரிசீலனையில் உள்ளது.
நீங்கள் (எடப்பாடி பழனிசாமி) தான் கட்சியின் விதிகளுக்கு முற்றிலும் முரணாகவும், கட்சி நிறுவனர் எண்ணங்களுக்கு எதிராகவும் செயல்படுகிறீர்கள். எனவே, கட்சி பொறுப்பு குறித்து ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக இனிமேலும் இதுபோல தேவையற்ற கருத்துகளை தெரிவித்தால் தங்கள் மீதும் கிரிமினல் அவதூறு வழக்கு தொடரப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- அ.தி.மு.க.வில் இருந்து போனவர்கள் போனவர்களாகவே இருக்கட்டும். பழையன கழிந்தால் தான் புதியவர்களுக்கு வாய்ப்பு அளிக்க முடியும்.
- ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு போனவர்களை மீண்டும் அ.தி.மு.க.வில் இணைக்கக்கூடாது.
சென்னை:
அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் இன்று நடந்தது.
இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் மூத்த நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்கள் என 120 பேர் கலந்து கொண்டனர். கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும், பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராவது, பூத் கமிட்டி அமைப்பது, முகவர்களை தேர்வு செய்வது போன்றவை குறித்து இதில் விவாதித்து முடிவு எடுக்க திட்டமிடப்பட்டு இருந்தது.
ஆனால் கடந்த வாரம் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பு மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டதால், இந்த கூட்டத்தில் பேசிய நிர்வாகிகள் பதிலுக்கு ஓ.பன்னீர்செல்வத்தை விமர்சித்து பேசினார்கள்.
கூட்டத்தில் துணை பொதுச் செயலாளர் நத்தம் விசுவநாதன் பேசும்போது, "அரசியலில் போலி என்றால் அது ஓ.பன்னீர் செல்வம்தான். வழக்கமாக நாம் பொருட்களில் தான் போலியை பார்த்திருப்போம். ஆனால் ஓ.பன்னீர்செல்வம் போலி அரசியல்வாதி" என்று கூறினார்.
கூட்டத்தில் கட்சியின் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது:-
அ.தி.மு.க.வில் இருந்து போனவர்கள் போனவர்களாகவே இருக்கட்டும். பழையன கழிந்தால் தான் புதியவர்களுக்கு வாய்ப்பு அளிக்க முடியும்.
ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு போனவர்களை மீண்டும் அ.தி.மு.க.வில் இணைக்கக்கூடாது. ஓ.பன்னீர் செல்வம் தன்னை தென் மண்டல தலைவராக முன்னிலைப்படுத்தி வந்தார்.
கடந்த சட்டமன்ற தேர்தலின்போது திண்டுக்கல் மாவட்டத்தில் அவரை பிரசாரம் செய்ய வருமாறு அழைத்தோம்.
ஆனால் அவர் போடி தொகுதியிலேயே வெற்றி பெறுவது போராட்டமாக இருக்கிறது. நான் எப்படி அங்கே பிரசாரத்துக்கு வர முடியும் என்றார். அவரை தென்மண்டல தலைவராக எப்படி எடுத்துக் கொள்ள முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மேலும் கூட்டத்தில் பேசிய பலரும் ஓ.பன்னீர் செல்வத்தை கடுமையாக விமர்சித்தனர். கூட்டத்தில் மூத்த நிர்வாகிகள் எஸ்.பி.வேலுமணி, கே.பி.முனுசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- தமிழக சட்டசபை கூட்டம் இன்று காலை ஆளுநர் உரையுடன் தொடங்கியது.
- ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முழக்கங்கள் எழுப்பினர்.
சென்னை:
தமிழக சட்டசபை கூட்டம் இன்று காலை ஆளுநர் உரையுடன் தொடங்கியது. காலை 10 மணியளவில் ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையை தொடங்கினார்.
ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முழக்கங்கள எழுப்பினர். பின்னர் அவர்கள் வெளிநடப்பு செய்தனர்.
இந்த நிலையில் தமிழக சட்டசபையில் இன்று இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். இருவருக்கும் அருகருகே இடம் ஒதுக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து அவர்கள் இருவரும் அருகருகே அமர்ந்திருந்தனர்.
அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது.
- பொங்கல் பண்டிகைக்கு பிறகு அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு வெளியாக உள்ளது.
- யாருக்கு இறுதி வெற்றி கிடைக்கப்போகிறது? என்பது அ.தி.மு.க. வட்டாரத்திலும் தமிழக அரசியல் களத்திலும் எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.
சென்னை:
அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தொடர்ந்த வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை 11-ந்தேதி நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழுவில் தான் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டிருந்தார். அன்று காலையில் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் ராயப்பேட்டை தலைமை கழகத்துக்கு ஓ.பி.எஸ். சென்றபோது அங்கு அசம்பாவித சம்பவங்களும் அரங்கேறின.
இதையடுத்து ஓ.பன்னீர் செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதை எதிர்த்து ஓ.பி.எஸ். தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் தான் முதலில் வழக்கு தொடரப்பட்டது.
இதில் தனி நீதிபதி அளித்த தீர்ப்பு ஓ.பி.எஸ்.சுக்கு சாதமாகவும் 2 நீதிபதிகள் அடங்கிய அமர்வு அளித்த தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாகவும் அமைந்திருந்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து ஓ.பி.எஸ். சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கு விசாரணையே தற்போது இறுதிக் கட்டத்தை எட்டி இருக்கிறது.
இந்த வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் கடந்த 4-ந்தேதி முதல் தீவிரப்படுத்தப்பட்டது. இரு தரப்பை சேர்ந்த வக்கீல்களும் தங்கள் தரப்பில் இருந்து பரபரப்பான வாதங்களை எடுத்து வைத்தனர். தொடர்ந்து 3 நாட்கள் நடந்த விசாரணைக்கு பின்னர் வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.
கடந்த 2 நாட்களாக நடைபெற்ற வாதங்கள் மற்றும் விசாரணை முடிந்து தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ்ராய் ஆகியோர் இரண்டு தரப்பை சேர்ந்தவர்களும் தங்கள் தரப்பு வாதங்களை வருகிற 16-ந்தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறி தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பை சேர்ந்த வக்கீல்கள் இதுவரை கோர்ட்டில் எடுத்து வைத்த வாதங்களை எழுத்து வடிவில் தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
எடப்பாடி பழனிசாமி தரப்பில் அ.தி.மு.க. தலைமை கழகம் சார்பில் மூத்த வக்கீல் சி.எஸ்.வைத்தியநாதன் ஆஜராகி வாதாடினார். பொதுக்குழு மற்றும் அவைத்தலைவர் தமிழ்மகன்உசேன் தரப்பில் மூத்த வக்கீல் முகுத் ரோகத்கியும், செயற்குழு தரப்பில் மூத்த வக்கீல் அதுல்சித்லே மற்றும் வக்கீல்கள் பாலாஜி, சீனிவாசன், கவுதம்குமார் ஆகியோரும் ஆஜராகி இருந்தனர். இவர்கள் தரப்பில் சுமார் 15 பக்கங்களை கொண்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது. இந்த அறிக்கையை வருகிற 16-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்ய உள்ளனர்.
மூத்த வக்கீல் வைத்தியநாதன் வாதிடும்போது, கட்சி விதிகளுக்கு உட்பட்டே ஜூலை 11-ந்தேதி பொதுக் குழு கூட்டம் நடத்தப்பட்டது. 15 நாட்களுக்கு முன்பே நோட்டீஸ் அளிக்க வேண்டும் என்கிற மனுதாரரின் வாதம் ஏற்புடையதல்ல என தெரிவித்தார்.
இந்த கூட்டம் நடத்தப்படுவதை அவர்கள் (ஓ.பி.எஸ். தரப்பினர்) அறிந்திருந்தனர். இதனை ஜூலை 4-ந்தேதி தாக்கல் செய்த சிவில் வழக்கிலும் தெரிவித்துள்ளனர். பொதுக்குழு கூட்டத்துக்கு 15 நாட்களுக்கு முன்பே நோட்டீஸ் அளிக்க வேண்டும் என்று கட்சி விதிகளில் கூறப்படவில்லை என்றும் அவர் விளக்கம் அளித்திருந்தார்.
மூத்த வக்கீல் முகுல் ரோகத்கி வாதிடும்போது, பதவியில் இருந்து நீக்கி விட்டால் எடப்பாடி பழனிசாமி தன்னிச்சையாக பொதுச்செயலாளர் ஆகி விடலாம் என்று நினைத்ததாக வாதிடுவது சரியல்ல. அ.தி.மு.க. அலுவலகத்தை சேதப்படுத்தி ஆவணங்களை எடுத்துச் சென்றபிறகே ஓ.பி.எஸ்.சை நீக்கும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதுபோன்ற முக்கிய தகவல்கள் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்யப்பட உள்ள அறிக்கையில் இடம்பெற உள்ளது.
ஓ.பி.எஸ். தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் கிருஷ்ணகுமார், வைரமுத்து சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் ரஞ்சித்குமார் ஆகியோர் வாதிடும்போது எந்தவித அடிப்படை காரணமும் இல்லாமல் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் நீக்கப்பட்டு உள்ளன என்று வாதிட்டார்.
2021-ம் ஆண்டு டிசம்பர் 1-ந்தேதி மேற்கொள்ளப்பட்ட கட்சி விதிகள் திருத்தம் அ.தி.மு.க.வினரால் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் அதற்கு முரண்பாடான வகையில் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் செயல்பட்டிருப்பதாகவும் இரண்டு நீதிபதிகள் அமர்வு இந்த விஷயங்களை எல்லாம் கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை என்றும் வாதிட்டனர்.
இதற்கு முன்னரும், சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு வாதங்களை ஓ.பி.எஸ். தரப்பு வக்கீல்கள் எடுத்து வைத்துள்ளனர். அவை அனைத்தையும் சேர்த்து ஓ.பி.எஸ். தரப்பிலும் எழுத்துப்பூர்வ அறிக்கை 16-ந்தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது.
அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கில் வாதங்கள் மற்றும் விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டதை யடுத்து இந்த வழக்கின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக வழங்கப்பட்ட ஐகோர்ட்டு இரண்டு நீதிபதிகள் அளித்த தீர்ப்பு செல்லுமா? செல்லாதா? என்பதை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் தெரிவிக்க உள்ளனர்.
பொங்கல் பண்டிகைக்கு பிறகு அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு வெளியாக உள்ளது. இதில் யாருக்கு இறுதி வெற்றி கிடைக்கப்போகிறது? என்பது அ.தி.மு.க. வட்டாரத்திலும் தமிழக அரசியல் களத்திலும் எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.