என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "onion price"
- கடந்த 4 நாட்களுக்கு முன்பு ரூ.50 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த சின்ன வெங்காயம் தற்போது ரூ.35-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- சின்ன வெங்காயத்தின் விலை சரிவால் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த சின்ன வெங்காய விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கோவை:
தமிழகத்தில் திண்டுக்கல், திருப்பூர், பெரம்பலூர், திருச்சி, மதுரை மாவட்டங்களில் சின்ன வெங்காயம் அதிகளவில் பயிரிடப்படுகிறது.
கோவை மாவட்டத்தில் தொண்டாமுத்தூர் சுற்று வட்டார பகுதிகளில் சின்ன வெங்காயம் பயிரிடப்படுகிறது.
கோவையில் உள்ள காய்கறி மார்க்கெட்டுகளுக்கு உள்ளூர் வரத்துடன் மைசூர் உள்ளிட்ட கர்நாடக மாநில பகுதிகளில் இருந்தும் வரத்து இருக்கும். கோவைக்கு நாள் ஒன்றுக்கு சுமார் 400 டன்கள் பெரிய வெங்காயமும், சுமார் 100 டன்கள் சின்ன வெங்காயமும் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.
கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் தக்காளி விலை கடுமையாக உயர்ந்தபோது அதனுடன் சேர்ந்து சின்ன வெங்காயத்தின் விலையும் கடுமையாக உயர்ந்தது. ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.200 வரை விற்பனையானது. கடந்த டிசம்பர் முதல் வாரம் வரையிலும் கூட கிலோ ரூ.90 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்பட்ட சின்ன வெங்காயத்தின் விலையில் கடந்த சில நாட்களாக தொடர் சரிவு ஏற்பட்டுள்ளது.
கடந்த 4 நாட்களுக்கு முன்பு ரூ.50 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த சின்ன வெங்காயம் தற்போது ரூ.35-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தையில் சின்னவெங்காயத்தின் விலை ஒரு கிலோ குறைந்தபட்சம் ரூ.35-க்கும், அதிகபட்சம் ரூ.38-க்கும் விற்பனையானது. அதேபோல் சரிவை சந்தித்து வரும் பெரிய வெங்காயமும் குறைந்தபட்சம் ரூ.25-க்கும், அதிகபட்சம் ரூ.29-க்கும் விற்பனையானது.
கோவை தியாகி குமரன் மார்க்கெட்டில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.30 முதல் ரூ.40 வரை விற்பனையானது.
கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து வரத்து அதிகரித்து இருப்பதால் வெங்காயத்தின் விலையில் சரிவு ஏற்பட்டு வருவதாக மொத்த வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். சின்ன வெங்காயத்தின் விலை சரிவால் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த சின்ன வெங்காய விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து தமிழக விவசாயிகள் சங்க கோவை மாவட்ட தலைவர் சு.பழனிச்சாமி கூறியதாவது:-
சில மாதங்களுக்கு முன்பு சின்ன வெங்காயத்தின் விலை உச்சத்தில் இருந்ததால் பல விவசாயிகள் ஆர்வத்துடன் சின்ன வெங்காயம் பயிரிட்டனர். ஆனால் வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வந்திருக்கும் நிலையில் மாநிலத்தின் பல பகுதியில் இருந்தும், கர்நாடகத்தில் இருந்தும் சின்ன வெங்காயத்தின் வரத்து அதிகரித்துள்ளது.
இதனால் சின்ன வெங்காயம், பெரிய வெங்காயத்தின் விலை தொடர்ந்து சரிவடைந்து வருகிறது. உள்நாட்டில் விலை உயர்வை தடுக்க மத்திய அரசு மார்ச் 2024 வரை வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளது. இதன் காரணமாக உள்நாட்டில் காய்கறிகளின் விலை சரிவடைய தொடங்கி உள்ளது.
நீண்ட காலம் சேமித்து வைக்க முடியாத வேளாண் விளை பொருட்களை எந்த வழியிலாவது விற்பனை செய்ய வேண்டி உள்ளது. எனவே மத்திய அரசு வெங்காய ஏற்றுமதிக்கான தடையை விலக்கிக் கொண்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க முன் வரவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சில்லரை விற்பனையில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.90 வரை விற்பனை செய்யப்படுகிறது.
- வெங்காய விலையை கட்டுக்குள் வைத்திருக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை ரூ.75 என்ற உச்சத்தை அடைந்திருக்கிறது. சில்லரை விற்பனையில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.90 வரை விற்பனை செய்யப்படுகிறது.
வெங்காயம் அதிகம் விளையும் மாநிலங்களில் இருந்து கூட்டுறவுத்துறை நிறுவனங்கள் மூலமாக வெங்காயத்தை மொத்த விலையில் கொள்முதல் செய்து பண்ணைப் பசுமைக் கடைகள், நியாய விலைக் கடைகள் மூலம் மலிவு விலையில் விற்பனை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தேசிய அளவில் வெங்காயத்திற்கான குறைந்தபட்ச கொள்முதல் விலையை நிர்ணயம் செய்து, விலையை கட்டுக்குள் வைத்திருக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- மகாராஷ்டிரா மாநிலத்தில் உற்பத்தி செய்யப்பட்டுள்ள வெங்காயத்தின் அறுவடை தொடர்ந்து தாமதமாகி உள்ளது.
- முதல் ரக நாசிக் வெங்காயம் மொத்த விற்பனையில் ஒரு கிலோ ரூ.64-க்கு விற்கப்படுகிறது.
போரூர்:
சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டுக்கு ஆந்திரா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து வெங்காயம் விற்பனைக்கு வருகிறது.
கடந்த மாதம் வரை வெங்காயம் ஒரு கிலோ ரூ.20-க்கு மட்டுமே விற்கப்பட்டது.
இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உற்பத்தி செய்யப்பட்டுள்ள வெங்காயத்தின் அறுவடை தொடர்ந்து தாமதமாகி உள்ளது. மேலும் விவசாயிகளிடம் மிகவும் குறைந்த அளவிலான வெங்காயம் மட்டுமே கையிருப்பில் உள்ளது.
இதனால் அங்கிருந்து வரும் வெங்காயத்தின் வரத்து திடீரென பாதியாக குறைந்துவிட்டது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாகவே வெங்காயம் விலை படிப்படியாக அதிகரித்து வருகிறது. 2 நாட்களுக்கு முன்பு மொத்த விற்பனை கடைகளில் வெங்காயம் ஒரு கிலோ ரூ.50-க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று அதன் விலை மேலும் அதிகரித்து உள்ளது.
முதல் ரக நாசிக் வெங்காயம் மொத்த விற்பனையில் ஒரு கிலோ ரூ.64-க்கு விற்கப்படுகிறது. அதேபோல் வெளி மார்க்கெட்டுக்கு உள்ள காய்கறி மற்றும் மளிகை கடைகளில் சில்லரை விற்பனையில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.80 வரை விற்கப்படுகிறது. இதே நிலை நீடித்தால் ஓரிரு நாட்களில் வெங்காயத்தின் விலை சதம் அடிக்கும் என்று வெங்காயம் மொத்த வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
- விவசாயிகள் உற்பத்தி செய்யும் வெங்காயத்திற்கு போதுமான விலையை வழங்குவது அரசின் பொறுப்பு
- விவசாயிகளின் செலவைக் கருத்தில் கொண்டு கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும்
விலையை கட்டுப்படுத்துவதற்காக வெங்காயம் மீதான ஏற்றுமதி வரியை 40 சதவீதமாக உயர்த்திய மத்திய அரசு, இந்த வரிவிதிப்பு டிசம்பர் 31-ந்தேதி வரை அமலில் இருக்கும் எனத் தெரிவித்துள்ளது.
இதற்கு மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவிப்பதுடன், போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், வெங்காயம் மீதான ஏற்றுமதி வரியை திரும்பப் பெற வேண்டும் என சரத் பவார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
கடந்த நில தினங்களாக நாசிக் பகுதியில் உள்ள விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களுடைய உற்பத்தி வெங்காயத்திற்கு நியாயமான விலை கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்கள். இந்தியாவில் இருந்து வெங்காயம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆனால், அரசு அதன்மீது 40 சதவீதம் வரி விதித்துள்ளது.
விவசாயிகள் உற்பத்தி செய்யும் வெங்காயத்திற்கு போதுமான விலையை வழங்குவது அரசின் பொறுப்பு. ஆனால், இதுகுறித்த உறுதியான முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை.
வெங்காயத்தை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,410-க்கு கொள்முதல் செய்வதாகவும், 2 லட்சம் டன் ஏற்றுமதிக்கு அனுமதிப்பதாகவும் அரசு அறிவித்தது. விவசாயிகளின் செலவைக் கருத்தில் கொண்டு கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும்.
எப்படி இருந்தாலும் 40 சதவீத ஏற்றுமதி வரி திரும்பப்பெறுதல் வேண்டும். சர்க்கரை உற்பத்தியில் மகாராஷ்டிரா 2-வது மிகப்பெரிய மாநிலமாக உள்ளது. உலகிலளவில் பிரேசில் முதல் இடத்தில் உள்ளது. கடந்த வருடம் பிரேசிலில் ஏற்பட்ட வறட்சியால் சர்க்கரை உற்பத்தி குறைந்துள்ளது.
இதனால் இந்தியாவில் உள்ள சர்க்கரை உற்பத்தியாளர்களுக்கு சாதகமாக சூழ்நிலை நிலவுகிறது. அவர்கள் சர்க்கரையை ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளனர். ஆனால், தற்போது சர்க்கரை ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு விதிக்க அரசு யோசனை செய்து வருகிறது. அப்படி நடந்தால், மாநில அரசு கரும்புக்கு நல்ல விலை கொடுக்க முடியாது.
இவ்வாறு சரத் பவார் தெரிவித்தார்.
- பண்டிகை காலம் நெருங்குவதால் வெங்காயம் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு
- டிசம்பர் 31-ந்தேதி வரை கட்டுப்பாடு நீடிக்கும் என்றதால், விவசாயிகள், வியாபாரிகள் எதிர்ப்பு
வெங்காயத்தின் விலையை கட்டுக்குள் வைக்கவும், உள்ளூர் மார்க்கெட்டில் சப்ளையை அதிகரிக்கவும் மத்திய அரசு, வெங்காயம் மீது 40 சதவீதம் ஏற்றுமதி வரி விதித்தது. மேலும், இந்த வரிவிதிப்பு டிசம்பர் 31-ந்தேதி வரை நீடிக்கும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது.
இதற்கு மகாராஷ்டிராவில், முக்கியமாக நாசிக் மாவட்டத்தில் எதிர்ப்பு கிளம்பியது. வியாபாரிகள் மற்றும் உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாசிக் மார்க்கெட் வியாபாரிகள், காலவரையின்றி போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். மத்திய அரசு இந்த உத்தரவை திரும்பப்பெறும் வரை, எந்தவொரு ஏலத்திலும் பங்கேற்கமாட்டோம் எனத் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், குவிண்டாலுக்கு 2410 ரூபாய் விதம், 2 லட்சம் மெட்ரிக் டன் வெங்காயத்தை மத்திய அரசு கொள்முதல் செய்யும் என மகாராஷ்டிரா மாநில துணை முதல்வர் பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.
தற்போது ஜப்பானில் இருக்கும் தேவேந்திர பட்னாவிஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் ''நான் மத்திய உள்துறை மந்திரி, மத்திய வணிக மந்திரி பியூஷ் கோயல் ஆகியோரிடம் வெங்காயம் தொடர்பான பிரச்சனை குறித்து பேசினேன். மத்திய அரசு இரண்டு லட்சம் மெட்ரிக் டன் வெங்காயத்தை குவிண்டாலுக்கு 2410 ரூபாய் அடிப்படையில் வாங்கிக் கொள்ளும்.
நாசிக் மற்றும் அகமதுநகர் மாவட்டங்களில் இதற்காக சிறப்பு கொள்முதல் மையம் அமைக்கப்படும். இது வெங்காயம் பயிரிட்டோருக்கு ஓரளவு நிவாரணம் அளிக்கும்'' என்றார்.
- கொடைக்கானலுக்கு வரும் காய்கறிகள் லாரிகள் வாடகை அதிகமாக உள்ளது. இதன் காரணமாக விலை மேலும் உயர்ந்து வருகிறது.
- தற்போது தக்காளி ரூ.150 வரை விற்பனையாவதை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கொடைக்கானல்:
தமிழகத்தில் கடந்த 3 வாரங்களாக காய்கறிகள், அத்தியாவசிய பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் ஓட்டல்கள் நடத்துபவர்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.
குறிப்பாக சின்ன வெங்காயமும், தக்காளியும் போட்டி போட்டு விலையேற்றம் கண்டுள்ளது. ரூ.150 வரை விலை உயர்ந்த நிலையில் இன்று ரூ.120, ரூ.100, ரூ.80 என தரம் பிரித்து விற்கப்படுகிறது. இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், சின்ன வெங்காயம் ஏற்றுமதியை தற்காலிகமாக தடை செய்ய வேண்டும்.
பதுக்கல் காரர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மழை, வெயில் காலங்களில் கொடைக்கானலுக்கு வரும் காய்கறிகள் லாரிகள் வாடகை அதிகமாக உள்ளது. இதன் காரணமாக விலை மேலும் உயர்ந்து வருகிறது.
எனவே மத்திய, மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும். தற்போது தக்காளி ரூ.150 வரை விற்பனையாகிறது. இதனை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் சின்ன வெங்காயம் ரூ.150க்கும், தக்காளி ரூ.130க்கும் விற்கப்படுகிறது.
ஆனால் விவசாயிகளுக்கு பெரிய அளவில் லாபம் கிடைக்க வில்லை. இடைத்தரக ர்கள்தான் பயன் அடைகின்றனர். எனவே அரசு இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என விவசாயிகள் கூறினர்.
- ஒரு கிலோ வெங்காயம் வாங்கவேண்டுமானால் ஒரு நாள் ஊதியத்தை விட அதிகம் செலவாகிறது.
- பணவீக்கம் அதிகரித்து வருவதால், உலகளவில் உணவுப்பொருட்களின் விலைகள் அதிகரிக்கின்றன.
பிலிப்பைன்ஸ் நாட்டின் உணவுகளில் வெங்காயம் அத்தியாவசியமான இடத்தை பிடித்துள்ளது. பெரும்பாலான உணவுப் பொருட்களில் வெங்காயம், பூண்டு ஆகியவை பிரதானமாக சேர்க்கப்படுகிறது. பிலிப்பைன்ஸில் மட்டும் சராசரியாக மாதத்திற்கு சுமார் 17,000 மெட்ரிக் டன் காய்கறிகள் தேவைப்படுகிறது.
இந்த நிலையில்தான் மக்களின் முக்கிய காய்கறிகளில் ஒன்றான வெங்காயம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கிலோவுக்கு 600 பிசோஸ் (இந்திய மதிப்பு ரூ.887) என்ற விலையில் விற்கப்படுகிறது. இது கோழி இறைச்சியை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு விலை அதிகம் ஆகும். பன்றி இறைச்சி அல்லது மாட்டிறைச்சியை விட 25-50 சதவீதம் அதிகம்.
ஒரு கிலோ வெங்காயம் வாங்கவேண்டுமானால் ஒரு நாள் வேலைக்கான பிலிப்பைன்ஸின் குறைந்தபட்ச ஊதியத்தை விட அதிகம் செலவு செய்ய வேண்டி உள்ளது.
உள்நாட்டு உற்பத்தி, விநியோகம் குறைந்து வருவதாலும், அதிகரித்து வரும் செலவுகளைக் கட்டுப்படுத்தவும் மார்ச் மாதத்திற்குள் சுமார் 22,000 டன் வெங்காயத்தை இறக்குமதி செய்ய வேண்டும் என வேளாண் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
ரஷ்யா-உக்ரைன் போர், விநியோகச் சங்கிலியில் ஏற்பட்ட சிக்கல்கள் மற்றும் தீவிர காலநிலை மாற்றம் உள்ளிட்ட பல காரணங்களால் உலகளாவிய பணவீக்கம் அதிகரித்து, உலகளவில் உணவுப்பொருட்களின் விலைகள் அதிகரிக்கின்றன. இதன் தாக்கம் பிலிப்பைன்சிலும் எதிரொலித்துள்ளதாக கூறப்படுகிறது.
ஒட்டன்சத்திரம்:
ஒட்டன்சத்திரம் அருகே அம்பிளிக்கை, கள்ளிமந்தயம், இடையகோட்டை, மூலச் சத்திரம் கேதையெறும்பு, விருப்பாச்சி, சத்திரப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் சின்ன வெங்காயம் பயிரிட்டு வருகின்றனர். இந்த வெங்காயங்கள் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்பட்டு அதிக அளவு கேரள பகுதிக்கு அனுப்பப்படுகிறது.
மேலும் கோவை, மதுரை, திருச்சி, பட்டுக்கோட்டை உள்ளிட்ட நகரங்களுக்கும் அனுப்பப்படுகிறது. கடந்த சில மாதங்களாகவே சின்ன வெங்காயம் விலை குறைந்தே காணப்பட்டது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர். பலர் வெங்காயங்களை விற்பனைக்கு கொண்டு வராமல் விரக்தி அடைந்தனர்.
தினசரி 4 ஆயிரம் 60 கிலோ பைகளில் வெங்காயம் வருவது வழக்கம். ஆனால் தற்போது மழையின்மையால் வெங்காய சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் தற்போது 2 ஆயிரம் 60 கிலோ பைகளே வருகிறது. இதனால் விலை ஓரளவு உயர்ந்துள்ளது. ஒரு கிலோ சின்னவெங்காயம் ரூ.25 வரை விற்பனை செய்யப்படுகிறது. கோடைகாலம் தொடங்குவதால் விலை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டத்தில்தான் வெங்காயம் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. நாட்டின் மொத்த வெங்காய தேவையில் 50 சதவீதம் நாசிக் மாவட்டத்தில் இருந்து மட்டுமே கிடைக்கிறது. இதற்கு அடுத்தபடியாக ஆந்திராவில் அதிகம் விளைகிறது.
நாசிக் மாவட்டத்தில் சந்திரகாந்த் பிகான் தேஷ்முக் என்பவர் தனது வயலில் அறுவடை செய்த வெங்காயத்தை வேளாண் விளைபொருள் சந்தை கமிட்டிக்கு கொண்டு சென்றார். அங்கு கடந்த 5-ந்தேதி ஏலம் விட்டதில் 1 கிலோ வெங்காயத்துக்கு வெறும் 51 பைசா மட்டுமே விலை நிர்ணயிக்கப்பட்டது. வேறு வழியின்றி தான் கொண்டு சென்ற வெங்காயத்தை விற்றார்.
மொத்தம் 545 கிலோ வெங்காயத்தை விற்றதில் வேளாண் சந்தை கமிட்டி கட்டணம் போக அவருக்கு வெறும் ரூ.216 மட்டுமே கிடைத்தது. இதனால் மிகவும் வேதனை அடைந்த தேஷ்முக் அந்த பணத்தை மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிற்கு அனுப்பி தனது எதிர்ப்பை தெரிவித்தார்.
என்னுடைய வெங்காயம் தரமானதாக இருந்தும் நல்ல விலை கிடைக்கவில்லை. அதனால் அந்த பணத்தை முதல்வருக்கு அனுப்பி விட்டேன். இனி என் குடும்பத்தை எப்படி காப்பாற்றுவேன், வாங்கிய கடனை எப்படி அடைப்பேன் என்று வேதனையில் கேள்வி கேட்கிறார் தேஷ்முக்.
இதே போல் 750 கிலோ வெங்காயத்தை ரூ.1064-க்கு விற்ற மற்றொரு விவசாயி சஞ்சய் சாத்தோ அந்த பணத்தை பிரதமர் மோடிக்கு மணியார்டரில் அனுப்பி உள்ளார்.
சென்னையில் கடந்த சில நாட்களாக வெங்காயம் விலை நாளுக்கு நாள் இறங்கி வருகிறது. கோயம்பேடு மார்க்கெட்டில் 1 கிலோ வெங்காயம் ரூ.12 முதல் ரூ.15 வரை விற்கப்படுகிறது.
ஆந்திராவில் இருந்து வரவழைக்கப்படும் நடுத்தர அளவு வெங்காயம் கிலோ ரூ.12-க்கும், நாசிக் வெங்காயம் கிலோ ரூ.15-க்கும் விற்கப்படுகிறது.
மளிகை கடைகள் மற்றும் தள்ளுவண்டி கடைகளில் கிலோ ரூ.20 வரை விற்கிறார்கள். சின்ன வெங்காயம் கிலோ ரூ.40-க்கு விற்கப்படுகிறது. #Onionprice
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்