என் மலர்
நீங்கள் தேடியது "Online fraud gang"
- டவர் அமைக்க ரூ.50 முதல் ரூ.80 லட்சம் வரை அட்வான்ஸ் தொகை கொடுப்பதாகவும், மாதம் ரூ. 40 ஆயிரம் முதல் ரூ.80 ஆயிரம் வரை வாடகை செலுத்துவதாகவும் கூறி கும்பல்கள் மோசடி செய்து வருகின்றன.
- தமிழகத்தில் செல்போன் டவர் அமைப்பதாக மோசடி செய்யும் கும்பல், வடமாநிலங்களில் இருந்து கைவரிசை காட்டி வருகிறது.
குள்ளனம்பட்டி:
இன்றைய காலக்கட்டத்தில் செல்போன் பயன்பாடு அவசியமாகிவிட்டது. ஸ்மார்ட் போன்கள் மூலம் உலகமே கையடக்கத்தில் வந்துவிடுகின்றன.இந்நிலையில் அதிகப்படியானோர் ஆன்லைன் வகுப்புகளுக்கு இண்டர்நெட் பயன்படுத்துவதால், அலைக்கற்றை வேகம் குறைய வாய்ப்புள்ளது.
இதனால் அதிகப்படியான செல்போன் டவர்கள் அமைப்பது அவசியம்.இதை சாதகமாக பயன்படுத்தி மோசடி கும்பல் லட்சக்கணக்கில் பணத்தை சுருட்டி கைவரிசை காட்டி வருகிறது. இதுகுறித்து புகார் தெரிவித்தாலும் குற்றவாளிகளை எளிதில் பிடிக்க முடிவதில்லை.எனவே மோசடி கும்பல்கள் உங்களை தொடர்பு கொண்டால் ஏமாற வேண்டாம்.
அதேபோல் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என திண்டுக்கல் சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.
இதுகுறித்து சைபர் கிரைம் போலீஸ் ஏ.டி.எஸ்.பி சந்திரன் கூறியதாவது: செல்போன் டவர் அமைக்க காலி இடம் அல்லது மொட்டை மாடி இருந்தால் ரூ.50 முதல் ரூ.80 லட்சம் வரை அட்வான்ஸ் தொகை கொடுப்பதாகவும், மாதம் ரூ. 40 ஆயிரம் முதல் ரூ.80 ஆயிரம் வரை வாடகை செலுத்துவதாகவும் கூறி கும்பல்கள் மோசடி செய்து வருகின்றன. இதற்காக உரிய அனுமதி பெற்றதாக போலி கடிதத்தையும் வைத்திருக்கின்றனர்.
இதை நம்பும் பலர் டவர் அமைக்க இடம் கொடுப்பதாக ஒப்புக்கொள்கின்றனர்.அவ்வாறு ஏமாறும் நபரிடம் 'உங்களது வங்கி கணக்கில் ரூ.80 லட்சம் செலுத்துவதற்கு, முன்பணம் ரூ.1.5 லட்சம் வரை கொடுக்க வேண்டும். இந்த தொகை ரூ.80 லட்சத்துடன் சேர்ந்து வந்துவிடும்' என்றும் கூறுகின்றனர்.
இதுபோன்ற மோசடி வலையில் விழுபவர்கள் ரூ.1.5 லட்சம் கொடுத்து ஏமாந்து போகின்றனர்.உண்மையில் செல்போன் டவர் அமைக்க மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி அமைப்புகளில் அனுமதி பெற வேண்டியது அவசியம். இதுபோன்ற தகவல்களை தெரிந்து கொள்ளாமல் ரூ.20 லட்சம் கூட போகாத இடத்துக்கு ரூ.80 லட்சம் அட்வான்ஸ் கிடைக்கிறதே என்று நம்பி சிலர் பணத்தை இழந்துவிடுகின்றனர்.
தமிழகத்தில் செல்போன் டவர் அமைப்பதாக மோசடி செய்யும் கும்பல், வடமாநிலங்களில் இருந்து கைவரிசை காட்டி வருகிறது. இதனால் புகார் தெரிவித்தாலும் அவர்களை பிடிக்க முடிவதில்லை. எனவே பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம்.இவ்வாறு தெரிவித்தார்.
- யார் போன் செய்து வங்கி கணக்குகள் பற்றிய விவரங்களை கொடுக்க வேண்டாம்.
- 1930 என்ற எண்ணில் தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம்.
சென்னை:
ஆன்லைன் மூலமாக பொதுமக்களின் வங்கிக் கணக்கில் இருந்து மோசடியாக பணத்தை பறிக்கும் கும்பல் நாளுக்கு நாள் அதிகமாகவே தங்களது கைவரிசையை காட்டு கொண்டிருக்கிறது.
மும்பை போலீஸ் அதிகாரி பேசுவதாக கூறி ஏமாற்றி உங்களது பெயரில் போதைப் பொருள் பார்சல் வந்துள்ளது, உங்கள் வங்கி கணக்கில் இருந்து சட்ட விரோதமாக பண பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று ஏமாற்றி வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை பறிப்பது தொடர்கிறது.

நாங்கள் சொல்கிறபடி ஆர்.பி ஐ. வங்கிக் கணக்குக்கு உடனடியாக பணத்தை அனுப்புங்கள். நாங்கள் உங்களைப் பற்றி விசாரணை நடத்தி விட்டு அந்த பணத்தை திருப்பி அனுப்பி விடுகிறோம் என்று கூறி ஏமாற்றுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இது ஒரு புறம் இருக்க வங்கி அதிகாரி போல பேசியும் மோசடி கும்பல் ஆன்லைன் மூலமாக பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வருகிறது. ஒரு சிலர் இது போன்ற மோசடி கும்பல்களை அடையாளம் கண்டு சிலர் உடனடியாக போனை துண்டித்து விடுகிறார்கள்.
இன்னும் சிலரோ மோசடி கும்பலை சேர்ந்தவர்களிடம் போனில் வாக்குவாதம் செய்து யாரை ஏமாற்ற பார்க்கிறாய்? என்று திட்டிவிட்டும் போனை துண்டிக்கிறார்கள்.
இப்படி தமிழகம் உள்பட நாடு முழுவதுமே மோசடி கும்பல் தொடர்ச்சியாக ஆன்லைன் மோசடியில் ஈடுபட்டு வருகிறது. தமிழகத்தில் சென்னை உள்பட பல்வேறு முக்கிய நகரங்களில் இருப்பவர்களிடமும் இது போன்று பணம் பறிக்கப்பட்டு வருகிறது.
கடந்த ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் வரையில் நாடு முழுவதும் ரூ. 1750 கோடிபணத்தை மோசடி பேர்வழிகள் சுருட்டி இருக்கிறார்கள்.
இந்த மோசடியை தடுப்பதற்காக மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்த போதிலும் அதனை கட்டுப்படுத்துவது என்பது பெரிய சவாலாகவே மாறிப் போயிருக்கிறது.
வயதானவர்கள் மற்றும் ஐ.டி.நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் ஆகியோர்களை குறி வைத்தே மோசடி நபர்கள் பேசுகிறார்கள். அப்போது அவர்களை மூளைச் சலவை செய்து மிரட்டி தாங்கள் சொல்கிறபடி கேட்க வைத்து விடுகிறார்கள்.
இதன் மூலமே லட்சக்கணக்கான பணத்தை பறிகொடுக்கும் நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டு விடுகிறார்கள்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இந்த மோசடி அதிகமாக நடைபெற்று வரும் நிலையில் வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்களும் ஏமாற்றப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் ஊட்டியை சேர்ந்த முதியவர் ஒருவர் 12 லட்சம் பணத்தை தற்போது பறிகொடுத்துள்ளார்.
இது தொடர்பாகவங்கி அதிகாரி ஒருவர் கூறும் போது, `வங்கியில் இருந்து போன் செய்து யாரும் வங்கி கணக்குகள் தொடர்பான தகவல்களை கேட்பதில்லை. அதே நேரத்தில் வங்கி தொடர்பான தொலைபேசி அழைப்புகள் வந்தால் 1860 என்று தொடங்கும்.
அதேபோன்று அப்படியே யாரும் பேசினாலும் வங்கிக் கணக்கு தொடர்பான விவரங்களை அவர்கள் கேட்க மாட்டார்கள்.
எனவே யார் போன் செய்து வங்கி கணக்குகள் பற்றிய விவரங்களை கேட்டாலும் அவர்களிடம் பொதுமக்கள் தகவல்களை தெரிவிக்க வேண்டியதில்லை என்று தெரிவித்தார்.
அதேநேரத்தில் ஆன்லைன் மோசடி தொடர்பாக 1930 என்ற கட்டுப்பாட்டு அறைஎண்ணில் எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என்றும் போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இதுபோன்ற விழிப்புணர்வு பிரச்சாரங்கள் தொடர்ந்து மேற்கொண்டு வந்த போதிலும் ஒரு புறம் மக்கள் ஏமாந்து கொண்டுதான் இருக்கிறார்கள். மோசடி பேர்வழிகள் அந்த அளவுக்கு அதிகாரிகள் போல ஆங்கிலத்தில் பேசி துணிகர மோசடியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
- சஞ்சீவி பெருமாள் (வயது 68). ஓய்வு பெற்ற அரசு ஆஸ்பத்திரி டாக்டரான இவர் சமீபத்தில் நாப்தால் என்ற நிறுவனத்தில் ஆன்லைன் மூலம் புக்கிங் செய்து ஒரு பொருளை வாங்கினார்.
- எதிர் முனையில் பேசிய நபர் காரை எடுத்துச் செல்ல வேண்டும் என்றால் ஜி.எஸ்.டி. வரி, ரிசர்வ் வங்கியின் அனுமதி பெற வேண்டும். அதற்கு தாங்கள் பணம் செலுத்த வேண்டும் எனக் கூறியுள்ளார்.
திருச்சி,
திருச்சியை அடுத்த திருவெறும்பூர் டி.நகர் முதல் தெரு பகுதியைச் சேர்ந்தவர் சஞ்சீவி பெருமாள் (வயது 68). ஓய்வு பெற்ற அரசு ஆஸ்பத்திரி டாக்டரான இவர் சமீபத்தில் நாப்தால் என்ற நிறுவனத்தில் ஆன்லைன் மூலம் புக்கிங் செய்து ஒரு பொருளை வாங்கினார்.
இந்த நிலையில் அடுத்த ஒருசில தினங்களில் அந்த நிறுவனத்தில் இருந்து சஞ்சீவி பெருமாள் பெயருக்கு ஒரு கூரியர் தபால் வந்தது. அதனைப் பிரித்துப் பார்த்தபோது உங்களுக்கு மகேந்திரா கார் பம்பர் பரிசு விழுந்துள்ளது. அதனைப் பெற்றுச் செல்வதற்கு கீழ்க்கண்ட மொபைல் நம்பரை தொடர்பு கொள்ளுமாறு ஒரு செல்போன் எண் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதையடுத்து சஞ்சீவி பெருமாள் உற்சாகம் அடைந்தார். இதனை உண்மை என நம்பிய சஞ்சீவி உடனடியாக அந்த மொபைல் நம்பருக்கு தொடர்பு கொண்டு பேசினார். எதிர் முனையில் பேசிய நபர் காரை எடுத்துச் செல்ல வேண்டும் என்றால் ஜி.எஸ்.டி. வரி, ரிசர்வ் வங்கியின் அனுமதி பெற வேண்டும். அதற்கு தாங்கள் பணம் செலுத்த வேண்டும் எனக் கூறியுள்ளார்.
அவர்கள் கூறிய அறிவுரைகளின்படி பல்வேறு தவணைகளாக ரூ.8 லட்சத்து 34 ஆயிரத்து 621 பணத்தை அந்த நபர் கூறிய வங்கி கணக்குக்கு அனுப்பினார். பின்னர் அடுத்த நாள் அந்த மொபைல் எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டது. பலமுறை முயற்சித்தும் தொடர்பு கொள்ள இயலவில்லை. அதன் பின்னரே தான் ஏமாற்றப்பட்டதை சஞ்சீவிபெருமாள் உணர்ந்தார்.
அதைத்தொடர்ந்து அவர் திருச்சி புறநகர் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் அன்புச்செழியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் வட மாநில ஆன்லைன் மோசடி கும்பலிடம் டாக்டர் சிக்கி பணத்தை இழந்து இருப்பது தெரிய வந்தது. அவர்களை பிடிக்க நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. நாள்தோறும் பல்வேறு ஆன்லைன் மோசடிகள் குறித்த தகவல்கள் வந்துகொண்டிருந்த போதும் ஏமாறுபவர்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. போதிய விழிப்புணர்வு தேவை என்று சைபர் கிரைம் போலீசார் தெரிவித்தனர்.