என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "OPS"

    • முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவருக்கு மரியாதை செலுத்தினார்.
    • அப்போது பேசிய அவர், முத்துராமலிங்க தேவருக்கு அ.தி.மு.க. சார்பில்தான் வெள்ளிக்கவசம் வழங்கினேன் என்றார்.

    ராமநாதபுரம்:

    முத்துராமலிங்க தேவரின் 115-வது குருபூஜை மற்றும் ஜெயந்தி விழாவை முன்னிட்டு பசும்பொன் தேவர் நினைவிடத்தில் உள்ள தேவர் சிலைக்கு தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    இந்நிலையில், பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவருக்கு மரியாதை செலுத்திய பின் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    சமீபத்தில் தேவர் தங்ககசம் மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கிய தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது. அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் நான் தான். அதிமுக சார்பிலேயே வெள்ளிக்கவசத்தை வழங்கி உள்ளேன். வெள்ளிக்கவசம் 10.4 கிலோ எடை கொண்டது.

    ஒன்றரை கோடி தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று தான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன் என தெரிவித்தார்.

    • வாய்ப்பு கொடுக்கும் போது எல்லாம் அதிமுகவை அழிக்க நினைக்கிறார் ஓ.பி.எஸ்.
    • இன்னும் சில மாவட்டத்தில் வென்றிருந்தால் ஆளும் கட்சியாக அதிமுக இருந்திருக்கும்.

    சூளகிரி:

    அதிமுக 51ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, அக்கட்சியின் இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிமுக கொடியை ஏற்றி வைத்தார். அப்போது பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

    சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்த நான், கிளை செயலாளராக இருந்து தற்போது பொறுப்பிற்கு வந்து உள்ளேன். அதனால் ஒரு ஒரு பொறுப்பாளருக்கு என்ன கஷ்டம் என்பது எனக்கு நன்கு புரியும். 10 முறை அதிமுக சார்பில் தேர்தலில் போட்டியிட்டு உள்ளேன். சட்டமன்றத்தின் வெளியில் வந்து சட்டையை கிழித்து கொண்டு ஸ்டாலின் சாலையில் அமர்ந்தார். அவர் சட்டையை யாரும் தொடவில்லை. அதற்கு அவசியமும் இல்லை.

    அதிமுகவுக்கு எதிராக சட்டமன்றத்தில் வாக்களித்த ஓ.பி.எஸ்., எப்படி அதிமுகவுக்கு விசுவாசமாக இருக்க முடியும். இனி அதிமுகவில் ஓ.பி.எஸ்-ஐ இணைக்க 1% கூட வாய்ப்பு கிடையாது. வாய்ப்பு கொடுக்கும் போது எல்லாம் அதிமுகவை அழிக்க நினைக்கிறார் ஓ.பி.எஸ். அடுத்து வருகின்ற எந்த தேர்தலாக இருந்தாலும் அதிமுக தான் வெல்லும். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதியிலும் அதிமுக வெல்லும்.

    நாம் ஆட்சியில் இல்லாமல் இருக்கலாம். ஆனால் கிருஷ்ணகிரியில் பாதி சட்டமன்ற தொகுதிகளை வென்றுள்ளோம். ஒரு சில மாவட்டத்தில் வென்று இருந்தால் ஆளும் கட்சியாக அதிமுக இருந்து இருக்கும். சற்று உழைப்பு குறைவாக இருந்த காரணத்தால் இன்று ஸ்டாலின் முதல்வராகிவிட்டார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • பிரதமருக்கு வரவேற்பு மற்றும் வழி அனுப்பும் நிகழ்ச்சிகளில் ஆதரவாளர்களுடன் இருவரும் பங்கேற்பு.
    • நாளை உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆலோசனை.

    தமிழகம் வந்த பிரதமர் மோடி திண்டுக்கல் மாவட்டம் காந்தி கிராமத்தில் உள்ள கிராமிய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். முன்னதாக மதுரை விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இதில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமது ஆதரவாளர்களுடன் கலந்து கொண்டார். அதேபோல் ஓ.பன்னீர் செல்வமும் தமது ஆதரவாளர்களுடன் பிரதமரை வரவேற்றார். அதிமுகவின் இரு தலைவர்களும் ஒன்றாகவே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    அதேபோல் பட்டமளிப்பு விழா நிறைவுக்கு பின்னர் மதுரை விமான நிலையத்தில் பிரதமர் மோடியை வழி அனுப்பி வைக்கும் நிகழ்ச்சியிலும் ஈபிஎஸ்- ஓபிஎஸ் இருவரும் அருகருகே நின்றபடி பங்கேற்றனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வளைதளங்களில் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

    பிரதமரை வழி அனுப்பும் நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, தா.மோ.அன்பரசன் ஆகியோர் பங்கேற்றனர். அவர்களுக்கு அடுத்தப்படியாக ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி, ராஜன் செல்லப்பா, நத்தம் விஸ்வநாதன், ஆர்.பி.உதயகுமார், மதுரை மேயர் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

    பிரதமர் மோடிக்கு, எடப்பாடி பழனிசாமி சிரித்தப்படி பூங்கொத்துக் கொடுத்து வழி அனுப்புவதும், அருகில் ஓ.பன்னீர் செல்வம் சிரித்தபடி இருப்பது போன்ற புகைப்படம் வெளியாகி உள்ளது. பிரதமருக்கான வரவேற்பு நிகழ்ச்சியை போலவே வழி அனுப்பும் நிகழ்ச்சியிலும் ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆதரவாளர்கள் பங்கேற்றனர். இந்நிலையில் இன்று இரவு சென்னை வரும் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை நாளை, ஒபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் சந்தித்து பேச உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    • மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேச ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பில் இருந்து நேரம் கேட்கப்பட்டது.
    • ஒன்றுபட்ட அதிமுக குறித்து ஓ.பி.எஸ் பேச உள்ளதாகவும் கூறுப்படுகின்றது.

    மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று சென்னையில் நடைபெறும் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவன விழாவில் கலந்து கொள்கிறார். இதற்காக நேற்று தனி விமானம் மூலம் சென்னை வந்தார். அங்கிருந்து காரில் கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் ஓய்வெடுப்பதற்காக தங்கினார்.

    திண்டுக்கல்லில் நேற்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துக் கொண்ட பிரதமர் மோடியை ஈபிஸ் மற்றும் ஓபிஎஸ் சந்தித்தனர்.

    தொடர்ந்து இன்று அமித்ஷாவையும் இருவரும் சந்தித்து பேச வாய்ப்புள்ளதாக ஏற்கனவே கூறப்பட்டது. இந்நிலையில், அமித்ஷாவை ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இன்று சந்திக்க இருப்பது உறுதியாகி உள்ளது.

    அதன்படி, இன்று காலை 11.05 மணிக்கு ராஜ்பவனில் இருந்து கார் மூலம் புறப்பட்டு வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கத்திற்கு 11.25 மணிக்கு வருகிறார். அங்கு காலை 11.30 மணி முதல் பிற்பகல் 12.50 வரை நடக்கும் இந்தியா சிமெண்ட்ஸ் 75-வது ஆண்டு விழா நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசுகிறார்.

    பின்னர் அங்கிருந்து பிற்பகல் 2.05 மணிக்கு அவர் புறப்பட்டு தியாகராயநகரில் உள்ள பா.ஜ.க. அலுவலகத்திற்கு 2.20 மணிக்கு வருகிறார். பிற்பகல் 3.25 மணிவரை அங்கிருந்து கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை மேற்கொள்கிறார்.

    இதனிடையே மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேச ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பில் இருந்து நேரம் கேட்கப்பட்டது. அதன்படி, இன்று பிற்பகல் ஓ.பன்னீர் செல்வம், மத்திய மந்திரி அமித்ஷாவை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், ஒன்றுபட்ட அதிமுக குறித்து ஓ.பி.எஸ் பேச உள்ளதாகவும் கூறுப்படுகின்றது.

    • எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ். சமாதானமாக போகவேண்டும் என பாஜக தலைமை விரும்புகிறது.
    • தனிப்பட்ட முறையில் ஓ.பி.எஸ்.- அமித் ஷா சந்திப்பு நிகழும் என்று எதிர்பார்த்த நிலையில் அது நடைபெறவில்லை.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியயோருக்கிடையே உள்ள மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்தை மீண்டும் கட்சியில் சேர்க்க வாய்ப்பே இல்லை என எடப்பாடி பழனிசாமி தரப்பு திட்டவட்டமாக கூறி வருகிறது. கட்சியின் நலன் கருதி இரு தலைவர்களும் சமாதானமாக போகவேண்டும் என பாஜக தலைமை விரும்புகிறது. எனவே, பிரதமர் மோடி அல்லது உள்துறை அமைச்சர் ஆகியோர் இந்த விஷயத்தில் தலையிட்டு பிரச்சனைக்கு தீர்வு காண முயற்சிக்கலாம் என்று பரவலாக பேசப்படுகிறது.

    நேற்று தமிழகம் வந்த பிரதமர் மோடியை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவரும் சந்தித்தனர். அப்போது அரசியல் குறித்து எதுவும் பேசப்படவில்லை.

    இந்நிலையில், தனியார் நிகழ்ச்சிக்காக இன்று சென்னை வந்த உள்துறை அமைச்சர் அமித் ஷாவை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்தார். தனிப்பட்ட முறையில் சந்திப்பு நிகழும் என்று எதிர்பார்த்த நிலையில், அது நடைபெறவில்லை. நிகழ்ச்சியில் மரியாதை நிமித்தமாக வெறுமனே இருவரும் கைகுலுக்கி மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டனர். அதிமுக குறித்து எதுவும் பேசவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.

    ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்தபின்னர் அமித் ஷா, பாஜக அலுவலகத்திற்கு புறப்பட்டுச் சென்றார். பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரை சந்தித்தது சந்தித்தது மகிழ்ச்சிகரமாகவும், திருப்திகரமாகவும் இருந்ததாக ஓ.பன்னீர்செல்வம் கூறி உள்ளார்.

    • ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து ஆதர வாளர்களை சந்தித்து வருகிறார்.
    • அ.தி.மு.க. செயலாளர் காமராஜ் 7 முறை நகர செயலாளராக பதவி வகித்துள்ளார்.

    தாராபுரம் :

    அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் என 2 அணியாக பிரிந்து செயல்பட்டு வருகின்றனர். மேலும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ள ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து ஆதர வாளர்களை சந்தித்து வருகிறார். ஒன்றுபட்ட அ.தி.மு.க. என்ற கோஷத்தை முன்வைத்து தனது அணி சார்பில் மாவட்டங்களுக்கு நிர்வாகிகளை நியமித்து வருகிறார்.

    ஓ.பி.எஸ். அணிக்கு தாவல் :- இந்தநிலையில் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகர அ.தி.மு.க. செயலாளர் காமராஜ் தனது ஆதரவாளர்கள் 200 பேருடன் ஓ.பன்னீர்செல்வம் அணியில் இணைய உள்ளார். தாராபுரம் கிளை செயலாளர்கள், அவை தலைவர், நகர பொறுப்பாளர்கள் என நிர்வாகிகள் , தொண்டர்கள் 200 பேருடன் இன்று காலை ஓ.பன்னீர்செல்வத்தை சந்திக்க தேனிக்கு புறப்பட்டு சென்றார். தாராபுரம் நகர அ.தி.மு.க. செயலாளர் காமராஜ் 7 முறை நகர செயலாளராக பதவி வகித்துள்ளார். தற்போது தாராபுரம் தொடக்க வேளாண்மை உற்பத்தியாளர்கள் சங்க தலைவராகவும் உள்ளார்.அவர் தனது ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு தாவியுள்ளது எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திருப்பூர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் சி.மகேந்திரன் எம்.எல்.ஏ.வுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக காமராஜ், ஓ.பி.எஸ். அணியில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.

    முன்னாள் நகர்மன்ற தலைவர் :- இதனிடையே தாராபுரம் நகர்மன்ற முன்னாள் துணை தலைவரும் அ.தி.மு.க. தொகுதி செயலாளராகவும் இருந்த கோவிந்தராஜ் , அ.தி.மு.க.வில் ஏற்பட்ட மோதலையடுத்து தி.மு.க.வில் இணைந்தார். தற்போது அவர் தி.மு.க.வில் இருந்து விலகி ஓ.பன்னீர்செல்வம் அணியில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    • ஈபிஎஸ், ஓபிஎஸ்-சை டெல்லி இணைத்து வைத்தது தவறான முடிவு.
    • தவறை உணர்ந்து என்னை பார்க்க வந்த ஓபிஎஸ்-சை நட்பு ரீதியாக சந்தித்தேன்.

    பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சதி செய்வதாக அமமுக. பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றச்சாட்டி உள்ளார். தந்தி டிவிக்கு அவர் அளித்துள்ள சிறப்பு பேட்டியில் கூறியுள்ளதாவது:

    நான்கரை ஆண்டுகள் அதிமுக ஆட்சியில் இருந்தபோது உதவிகரமாக இருந்த கட்சியை,(பாஜகவை) இன்றைக்கு, உதாசீனபடுத்தி வருகிறார்கள். பாராளுமன்ற தேர்தலில் அவர்கள்(பாஜக) ஜெயிச்சா என்ன, தோற்றால் என்ன, இன்னும் சொல்லப் போனால் பாஜக தமிழ்நாட்டில் ஒரு சீட் கூட வரவிடாமல் செய்வதற்கான வேலைகளில் இறங்க சதி செய்கிறார்கள்.

    2017 ஆண்டு என்னை பன்னீர் செல்வம் சந்தித்த போது, முதலமைச்சராக ஆதரவு அளித்தேன். ஏனென்றால் அவர்( எடப்பாடி பழனிசாமி) தப்பான பாதையில் போகிறார் என்று தெரிவித்தேன். பன்னீர் செல்வம் கோபத்தில் எனக்கு எதிராக தவறான முடிவை எடுத்தார். தவறை உணர்ந்து என்னை பார்க்க வந்தார்.

    பழைய நட்பு ரீதியாக அவரை சந்தித்தேன். பன்னீர்செல்வத்துடன், எடப்பாடி பழனிசாமியை டெல்லி இணைத்து வைத்தது தவறான முடிவு. எங்களை தவறானவர்கள் என்று நினைத்து செய்தார்களா அல்லது எடப்பாடி பழனிசாமியை நல்லவர் என்று நினைத்து செய்தார்களா என்பது எனக்கு தெரியாது. இவ்வாறு அவர் கூறினார்.

    • தேவகோட்டையில் எடப்பாடி அணியைச் சேர்ந்தவர்கள் 500-க்கும் மேற்பட்டோர் ஓ.பி.எஸ். அணியில் இணைந்தனர்.
    • சிவகங்கை மாவட்ட செயலாளர் ஆவின் சேர்மன் அசோகன் தலைமையில் அவரது ஆதரவாளர்கள் இணையும் நிகழ்ச்சி நடந்தது.

    தேவகோட்டை

    அ.தி.மு.க. ஒருங்கி ணைப்பாளர், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையை ஏற்று சிவகங்கை மாவட்ட செயலாளர் ஆவின் சேர்மன் அசோகன் தலைமையில் அவரது ஆதரவாளர்கள் இணையும் நிகழ்ச்சி நடந்தது.சாக்கோட்டை கிழக்கு ஒன்றியக் செயலாளர் பாண்டி, மற்றும் சாக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் சரவணன், காரைக்குடி பெருநகர செயலாளர் பாலா, தேவகோட்டை நகர செயலாளர் ரவிக்குமார், காரைக்குடி தொகுதி செயலாளர் பழனி, கன்னங்குடி தெற்கு ஒன்றிய செயலாளர் பாண்டி, தேவகோட்டை வடக்கு ஒன்றிய செயலாளர் வினோத், தெற்கு ஒன்றிய செயலாளர் பாவாசி கருப்பையா, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கணேஷ் பாபு, முன்னிலை வகித்தனர்.

    எடப்பாடி பழனிசாமி அணியில் இருந்து விலகி சாக்கோட்டை ஒன்றியத்தை சேர்ந்த ஒன்றிய துணைச் செயலாளர் ஊரவயல் முத்து மாணிக்கம், அரியக்குடி கிளைச் செயலாளர் ஆறுமுகம், கலாவதி வார்டு கவுன்சிலர் சேகர், எம்.ஜி.ஆர். மன்றம் ராகப்பன், எம்.ஜி.சின்னக்கருப்பன், முத்தரையர் சங்கத் தலைவர் கணேசன், ஒன்றிய பாசறை செயலாளர் ராமராஜன் கண்மாய்க்குடியிருப்பு சுப்பிரமணியன், மா சின்னத்தம்பி, மகளிர் அணியினர் உட்பட 500 நபர்கள் இணைந்தனர்.

    • செங்கலை தூக்கி காட்டிய உதயநிதி, எய்ம்ஸ் மருத்துவமனையை கொண்டு வருவாரா?
    • உதயநிதி அமைச்சர் பதவி பெற போகிறார், இதனால் மக்களுக்கு என்ன பயன் கிடைக்கும்?.

    திருப்பரங்குன்றம்:

    தி.மு.க. அரசை கண்டித்து மதுரையை அடுத்த திருப்பரங்குன்றத்தில் அதிமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. கூறியுள்ளதாவது:- தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னர் பால் விலை, மின்சார கட்டணம் 53 சதவீதமும், வீட்டு வரி 100 சதவீதம் ஏற்றி விட்டார்கள்.

    இந்த நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் மகன் உதயநிதிக்கு, அமைச்சர் பதவி கொடுக்கிறார்கள். மேலும் அவர் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் பதவி பெற போகிறார். இதனால் மக்களுக்கு என்ன பயன் கிடைக்கும்?. மழை வெள்ளத்தால் மக்கள் பாதிப்பு அடைந்திருக்கும் போது முதலமைச்சர் மகனுக்கு மகுடம் சூட்ட அவசரம் ஏன்?.

    செங்கலை தூக்கி காட்டிய உதயநிதி, எய்ம்ஸ் மருத்துவமனையை கொண்டு வருவாரா, ஜெயலலிதா கொண்டு வந்த மினி கிளினிக்கை கொண்டு வருவாரா, பெண்களுக்கான மிக்சி, கிரைண்டர் கொடுக்கப் போகிறாரா?.  பா.ஜ.க.வுடன் தொடர்பில் இருக்கும் ஓ.பன்னீர் செல்வம், மணிப்பூர், சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் ஆளுநர் பதவியை வாங்கிக் கொண்டு போய் விட்டால் அண்ணா தி.மு.க.வுக்கு தொல்லை நீங்கும். வருகிற பாராளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும். இவ்வாறு அவர் பேசினார். 

    • சென்னை வேப்பேரியில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.
    • பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் கூட்டம் நடைபெறும் என தகவல்.

    அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் அதிமுக பொருளாளர் என்ற பெயரில் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில், சென்னை வேப்பேரி, ரிதர்ட்டன் சாலையில் அமைந்துள்ள ஒய்.எம்.சி.ஏ திருமண மண்டபத்தில் வரும் 21-ம் தேதி (புதன்கிழமை) காலை 10.00 மணியளவில் நடைபெறவுள்ளது. அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    • பாராளுமன்றத் தேர்தல் பணிகள், கட்சியின் கட்டமைப்பு தொடர்பாக விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    • ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நாளை மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது

    சென்னை:

    அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 27ம் தேதி நடைபெறும் என கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இக்கூட்டத்தில் பங்கேற்கும்படி அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், செய்தி தொடர்பாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. இந்த கூட்டத்தில் பாராளுமன்றத் தேர்தல் பணிகள், கட்சியின் கட்டமைப்பு மற்றும் பொதுக்குழு தொடர்பான உச்ச நீதிமன்ற வழக்கை எதிர்கொள்வது தொடர்பாக விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நாளை மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.

    ஓ.பன்னீர்செல்வம் தனக்கு ஆதரவான நிர்வாகிகளை அனைத்து மாவட்டங்களுக்கும் நியமனம் செய்தார். அனைத்து சார்பு அணிகளுக்கும், புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். தலைமை கழக நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டனர். நியமனம் முடிவடைந்த நிலையில் நாளை நடைபெறும் கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளார்.

    • பண்ருட்டி ராமச்சந்திரன் இல்லத்தில் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினார்.
    • இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மூத்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    சென்னை:

    சென்னை வேப்பேரி ஒய்.எம்.சி.ஏ திருமண மண்டபத்தில் இன்று காலை 10 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் 88 மாவட்ட செயலாளர்கள், 100 தலைமை நிர்வாகிகள் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர். புதிய நிர்வாகிகள் அறிமுகம் மற்றும் முக்கிய தீர்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட உள்ளது.

    புதிய மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமை கழக நிர்வாகிகள் கூட்டத்தை ஓ.பன்னீர்செல்வம் கூட்ட உள்ளார். இந்தக் கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளார்.

    இந்நிலையில், சென்னை அசோக்நகரில் உள்ள பண்ருட்டி ராமச்சந்திரன் இல்லத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அவசர ஆலோசனை நேற்று இரவு நடைபெற்றது.

    மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற உள்ள நிலையில், நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானம் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    ×