search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "police protection"

    • துரை தயாநிதி பிசியோதெரபி சிகிச்சை பெற்று வருகிறார்.
    • குற்றப்பிரிவு போலீசார் விசாரணை.

    வேலூர்:

    வேலூர் சி.எம்.சி. மருத்துவமனை ஏ-பிளாக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரியின் மகன் துரை தயாநிதி பிசியோதெரபி சிகிச்சை பெற்று வருகிறார்.

    அவருடன் அவரது தந்தை அழகிரி மற்றும் குடும்பத்தினர் உடன் இருந்து கவனித்து வருகின்றனர். அவர் சிகிச்சை பெற்றும் வரும் தளம் காவல் துறையினரின் முழு கட்டுப்பாட்டில் உள்ளது.

    இந்த நிலையில், சி.எம்.சி. மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு நேற்று 10-ந் தேதி வந்த ஒரு மின்னஞ்சலில் 'துரை தயாநிதிக்கு கொலை மிரட்டல் குறிப்பு இருந்துள்ளது.

    இதையடுத்து, மருத்துவமனை கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில், வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) கிரண் ஸ்ருதிக்கு மின்னஞ்சல் வழியாகவே புகார் அனுப்பி வைக்கப்பட்டது. மிரட்டல் விடுத்த நபர் தொடர்பாக சைபர் குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    அதேநேரம், துரை தயாநிதி சிகிச்சை பெற்று வரும் சி.எம்.சி. மருத்துவமனை ஏ-பிளாக்கிற்கு கூடுதலாக ஒரு சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் 3 போலீசார் சீருடை அணியாமல் பாதுகாப்பு பணியை மேற்கொண்டுள்ளனர்.

    இன்று காலை வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு மருத்துவமனை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். முழு நேரமும் கவனத்தோடு செயல்பட போலீசாருக்கு அறிவுறுத்தினார்.

    இதுதொடர்பாக காவல் துறை அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, அவர்கள் கூறியதாவது:-சி.எம்.சி. நிர்வாகம் அளித்த புகாரின்பேரில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.போ

    அந்த மிரட்டல் மின்னஞ்சலில் இருந்த விவரம் மருத்துவமனை நிர்வாகம் மற்றும் போலீஸ் சூப்பிரண்டுக்கு மட்டுமே தெரியும். எங்களுக்கு எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

    அதேநேரம், துரை தயாநிதி சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனை தளத்துக்கு 3 போலீசார் பாதுகாப்பு அளித்து வரும் நிலையில் அங்கு கூடுதலாக ஒரு சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் 4 பேர் அடங்கிய சீருடை அணியாத போலீசார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியை தீவிரமாக மேற்கொள்ள அறிவுரை வழங்கப்பட்டு அவர்கள் பணியில் நேற்று மாலையில் இருந்து ஈடுபட்டு வருகின்றனர். மிரட்டல் மின்னஞ்சல் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினர். 

    • நெல்லையில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் சாதிமறுப்பு திருமணம் நடைபெற்றது.
    • ஆத்திரமடைந்த பெண் வீட்டார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலத்தை சூறையாடினர்.

    கடந்த மாதம் பட்டியலினத்தை சேர்ந்த இளைஞருக்கும், மாற்று சாதியை சேர்ந்த பெண்ணுக்கும் நெல்லையில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது.

    சாதி மறுப்பு திருமணம் செய்து வைத்ததால் ஆத்திரமடைந்த பெண் வீட்டார் மார்க்சிஸ்ட் அலுவலத்தை சூறையாடிய சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் சாதி மறுப்பு திருமணம் செய்த பெண், தங்களுக்கு பாதுகாப்பு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

    இந்த மனு இன்று நீதிபதி ஜெயசந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கின் விசாரணையில் மனுதாரரின் முகவரிக்கு விசாரணைக்கு வருமாறு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அந்த முகவரியில் அவர்கள் இல்லாததால் சம்மன் அவர்களை சென்றடையவில்லை என்று காவல்துறை தரப்பில் விளக்கம் தரப்பட்டது.

    இதனையடுத்து, திருமணம் செய்து கொண்ட இருவரும் நாளை மறுநாள் காலை 10 மணிக்கு வடபழனி காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்றும் தாங்கள் வசிக்கும் இடம் குறித்த விவரங்களையும், மிரட்டல் விடுக்கும் நபர்களின் விவரங்களையும் காவல் நிலையத்தில் வழங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

    தம்பதிகளுக்கு தேவைப்படும் பட்சத்தில் இருவருக்கும் உரிய பாதுகாப்பு வழங்க காவல்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை முடித்துவைத்தார்

    • வழக்கு கர்நாடகாவுக்கு மாற்றப்பட்டதால், பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் அங்குள்ள கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
    • இதையடுத்து நாளை கோர்ட்டு பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    பெங்களூரு:

    மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தாக கடந்த 1996-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    அப்போது அவரது வீட்டில் இருந்து 11,344 புடவைகள், 750 காலணிகள், 91 கை கடிகாரம், 28 கிலோ மதிப்பிலான 468 வகையான தங்கம், வைர நகைகள் மற்றும் 700 கிலோ வெள்ளிப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    இந்த வழக்கு கர்நாடக வுக்கு மாற்றப்பட்டதால், பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் அங்குள்ள கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே சொத்து குவிப்பு வழக்கில் மறைந்த முன்னாள் தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு பெங்களூரு சிறப்பு கோர்ட்டு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது. இந்த தீர்ப்பு வருவதற்கு முன்பே ஜெயலலிதா மரணம் அடைந்துவிட்டதால், அவரது பெயர் தீர்ப்பில் இருந்து கைவிடப்பட்டது. சசிகலா உள்பட மற்ற 3 பேரும் சிறை தண்டனையை அனுபவித்தனர்.

    இந்த சொத்துகுவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடி அபராதமும் விதிப்பட்டது. இதையடுத்து அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட நகைகளை ஏலம் மூலம் விற்று அபராத தொகையை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து ஜெயலலிதாவிடம் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை தமிழக அரசிடம் ஒப்படைக்கும்படி பெங்களூரு சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு கடந்த மாதம் உத்தரவிட்டது. இந்த பொருட்களை நாளை, நாளை மறுநாள் (7-ந் தேதி)தமிழக அரசிடம் கர்நாடக அரசு ஒப்படைக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

    அதன்படி நாளை (புதன்கிழமை) ஜெயலலிதாவின் பொருட்களை தமிழக அரசிடம் கர்நாடக அரசு ஒப்படைக்க உள்ளது. இதற்காக மாநில அரசு தன்வசம் உள்ள பொருட்களை ஒப்படைப்பதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளது. இந்த பொருட்களை பெற்றுக்கொள்ள தமிழக, உள்துறை அதிகாரிகள் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை உயர் அதிகாரிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு பெங்களூரு செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பின்னர் நகைகள் மற்றும் உடமைகள் சரிபார்க்கப்பட்டு தமிழக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும். 6 பெரிய டிரங்கு பெட்டிகளில் அந்த பொருட்கள் கண்டெய்னர் லாரியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்னைக்கு கொண்டு வரப்படுகிறது. மேலும் இவை அனைத்தையும் பதிவு செய்ய வீடியோகிராபரும் அழைத்துச் செல்லப்படுகிறார்.

    இதையடுத்து நாளை கோர்ட்டு பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    • முக்கிய வீதிகளில் போலீசார் மோட்டார் சைக்கிள், வாகனங்களில் சென்று ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • தொடர்ந்து மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கோவை:

    கோவை சிங்காநல்லூரை சேர்ந்தவர் சுப்பிரமணியம்(வயது45). இவர் இந்து மக்கள் கட்சி (தமிழகம்) தேர்தல் பிரிவு செயலாளராக உள்ளார்.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு இவரது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதனை எடுத்து இவர் பேசினார். அப்போது எதிர்முனையில் இந்தியில் பேசிய மர்மநபர், தான் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவன்.

    நான் மும்பையில் வெடிகுண்டு வைத்து உள்ளதாகவும், அது விரைவில் வெடிக்கும் எனவும் கூறியதாக கூறப்படுகிறது. அந்த நபர் இந்தியில் பேசியது, சுப்பிரமணியத்துக்கு புரியவில்லை.

    இதையடுத்து அவர் தனது அருகே இருந்த நண்பரான செந்தில்குமாரிடம் கொடுத்தார். அவர், ஆங்கிலத்தில் பேசினார். அப்போது எதிர்முனையில் பேசிய நபரும் ஆங்கிலத்தில் மும்பையில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும் விரைவில் வெடிக்கும் என கூறி விட்டு இணைப்பை துண்டித்தார்.

    இதனால் அதிர்ச்சியான இவர்கள் கோவை மாநகர போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக கோவை போலீசார் மும்பை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    மேலும் சுப்பிரமணியம், செந்தில்குமார் ஆகியோரை கோவை சிறப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார் அழைத்து விசாரித்தனர். இவர்களிடம் மும்பை போலீசாரும் விசாரித்தனர்.

    தொடர்ந்து, அவர்களுக்கு வந்த செல்போன் எண்ணை வாங்கி ஆய்வு செய்தனர். அப்போது, அந்த மர்மநபர் இன்டர்நெட்டில் இருந்து பேசியது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அந்த ஐ.டி. யாருடையது. எங்கிருந்து அழைத்தார். அவர் கூறியது உண்மைதானா? என்பது தொடர்பாகவும் விசாரித்து வருகிறார்கள்.

    இன்னும் சில தினங்களில் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் மற்றும் கோவை கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோவில் கும்பிஷேகம் நடைபெற உள்ளது. இதனையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன.

    இந்த சமயத்தில் மும்பையில் வெடிகுண்டு வைத்திருப்பதாக இந்து மக்கள் கட்சியை சேர்ந்த பிரமுகருக்கு மர்ம நபர் ஒருவர் மிரட்டல் விடுத்தது கோவையில பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதையடுத்து கோவை மாவட்டம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    மக்கள் அதிகமாக கூடும் இடங்களான பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள், மார்க்கெட், சந்தை பகுதி, கடைவீதிகளில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    முக்கிய வீதிகளில் போலீசார் மோட்டார் சைக்கிள், வாகனங்களில் சென்று ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சந்தேகத்திற்கிடமாக யாராவது சுற்றி திரிந்தால் அவர்களை பிடித்து விசாரித்தும் வருகின்றனர்.

    பஸ் நிலையங்களுக்கு வரும் பயணிகளின் உடமைகள் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. பஸ் நிலையங்களிலும் யாராவது சந்தேகத்திற்கி டமாக சுற்றி திரிகின்றனரா? என்பதையும் போலீசார் கண்காணிக்கின்றனர். பஸ்களில் ஏறியும் சோதனை மேற்கொள்கின்றனர்.

    இதுதவிர வெடிகுண்டு நிபுணர்கள் 4 குழுக்களாக பிரிக்கப்பட்டு 24 மணி நேரமும் கோவை மாவட்டம் முழுவதும் முக்கிய இடங்களில் மெட்டல் டிடெக்கர், மோப்பநாய் உதவியுடன் சோதனை மேற்கொள்கின்றனர்.

    கோவில்கள், பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்களிலும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கோவை சந்திப்பு ரெயில் நிலையத்திலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    ரெயில்வே போலீசார் மற்றும் பாதுகாப்புபடை போலீசார் இணைந்து ரெயில் நிலையத்தில் உள்ள பிளாட்பாரங்கள் மற்றும் தண்டவாளங்களிலும் சோதனை மேற்கொண்டனர்.

    ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிகளும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். அவர்களது உடமைகளும் சோதனை செய்யப்படுகிறது. சோதனைக்கு பின்னரே பயணிகள் உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

    கடைவீதிகளில் போலீசார் சாதாரண உடை அணிந்தும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கோவை விமான நிலையத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    அங்கு வரும் பயணிகளும் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்க ப்பட்டு வருகிறார்கள். இதுதவிர மாவட்ட எல்லைகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, அந்த வழியாக வரும் வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.

    வாகனங்களில் வருபவர்களிடம் உரிய ஆவணம் உள்ளதா? என்பதையும் ஆய்வு செய்து விசாரித்த பின்னர் கோவைக்குள் அனுமதித்து வருகின்றனர். தொடர்ந்து மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் நீராடுகிறார்கள்.
    • கடற்கரையை ஒட்டி கடல் நடுவே உள்ள ஆபத்தான பாறைகளுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் திற்பரப்பு அருவி, மாத்தூர் தொட்டில் பாலம், பத்ம நாபபுரம் அரண்மனை, வட்டக்கோட்டை, சங்கு துறை-சொத்தவிளை, கணபதிபுரம் உள்ளிட்ட கடற்கரைகள் என ஏராளமான சுற்றுலா தலங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு ஆண்டு முழுவதும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

    விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை, காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணி மண்டபம், முக்கடல் சங்கமிக்கும் சங்கிலித்துறை கடற்கரை என பல இடங்கள் இருக்கும் கன்னியாகுமரி சர்வதேச சுற்றுலா தலமாக திகழ்கிறது. இங்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி, பல மாநிலங்களை சேர்ந்த வர்கள், வெளிநாட்டினர் சுற்றுலாவாக வருகிறார்கள்.

    சூரிய உதயம், அஸ்தமனம் இரண்டையுமே கன்னியாகுமரியில் பார்க்கலாம். குமரி மாவட்டத்துக்கு சுற்றுலா வருபவர்கள் சூரிய உதயம் மற்றும் அஸ்தமனத்தை பார்க்க தவறுவதில்லை. அவர்கள் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் நீராடுகிறார்கள்.

    மேலும் கடலுக்கு நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம் மற்றும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை படகில் சென்று பார்த்து மகிழ்வார்கள். அது மட்டுமல்லாமல் சிறந்த ஆன்மீக தலமாகவும் கன்னியாகுமரி திகழ்கிறது. இங்குள்ள பகவதி அம்மன் கோவில், திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலுக்கும் சுற்றுலா பயணி கள் செல்கின்றனர். கன்னியாகுமரியில் நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்கள் சீசன் காலமாக கருதப்படுகிறது. இதற்கு காரணம் இந்த மாதங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் மிக அதிக அளவில் இருக்கும். அதோடு சபரிமலை அய்யப்ப பக்தர்கள் வருகையும் இந்த மாதங்களில் அதிகமாக இருக்கும்.

    இந்த ஆண்டும் சீசன் காலமான தற்போது கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாகவே உள்ளது. அதுவும் சபரிமலைக்கு செல்லக்கூடிய அய்யப்ப பக்தர்கள் கன்னியாகுமரியில் குவிந்த வண்ணம் உள்ளனர். இதனால் கன்னியாகுமரியில் திரும்பிய இடமெல்லாம் சுற்றுலா பயணிகள் கூட்டமாகவே காணப்படுகிறது.

    அவர்கள் விவேகானந்தர் மண்டபத்தை காண படகு போக்குவரத்து தொடங்கு வதற்கு முன்பே படகு குழாம் முன்பு நீண்ட வரிசையில் காத்து நிற்கின்றனர். பராமரிப்பு மற்றும் பாலம் பணிகள் காரணமாக திருவள்ளுவர் சிலையை பார்க்க சுற்றுலா பயணிகள் தற்போது அனுமதிக்கப்படுவதில்லை.

    சுற்றுலாவை ஆனந்தமாக கொண்டாடும் நோக்கத்தில் கன்னியாகுமரிக்கு வருபவர்களில் சிலர் ஆபத்தை உணராமல் செயல்படுவது தான் அதிர்ச்சிகரமான விஷயமாக உள்ளது. கன்னியாகுமரி கடலில் அவ்வப்போது ராட்சத அலைகள் எழும். காற்றின் வேகமும் அதிகமாகும்.

    இதனால் கடற்கரையை ஒட்டி கடல் நடுவே உள்ள ஆபத்தான பாறைகளுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த பாறைகளுக்கு யாரும் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதனை மீறி சிலர் அங்கு சென்று விடுகிறார்கள்.

    அவ்வாறு தடையை மீறி செல்பவர்கள் பாறைகளில் அமர்ந்தும், நின்று கொண்டும் செல்போனில் செல்பி எடுக்கின்றனர். மேலும் சிலர் குரூப்பாக நின்று போட்டோ எடுக்கிறார்கள். அவர்கள் பாறைகளுக்கு செல்லும் வழியும், பாறைகள் மீது நிற்பதும் ஆபத்தானது என போலீசார் எச்சரித்துள்ள போதிலும் பலர் கண்டு கொள்வதில்லை.

    தற்போது கன்னியாகுமரி கடல் பகுதியில் காற்று அதிகமாக அடித்து வரும் நிலையிலும் இளங்கன்று பயமறியாது என்பதற்கேற்ப, இளைஞர்கள் பலரும் ஆபத்தான பகுதிகளுக்கு சர்வசாதாரணமாக சென்று வருகின்றனர். அதனை தடுக்க அந்த பகுதிகளில் கூடுதல் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டு கண்காணிப்பை தீவிரப் படுத்த வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

    இந்த விஷயத்தில் போலீசார் தனிக்கவனம் செலுத்த வேண்டும் என்பது ஒரு புறம் இருந்தாலும், ஆபத்து என தெரிந்தும் அந்த பகுதிகளுக்கு செல்வோர் தங்களின் எதிர்காலம், குடும்பம் ஆகியவற்றை கவனத்தில் கொண்டு கவனமாக செயல்படவேண்டும் என்பது பொதுவான கருத்தாக இருக்கிறது.

    திருநள்ளாறில் நடைபெறும் சனி பெயர்ச்சி விழா குறித்து, புதுச்சேரி முதல்-அமைச்சர் புதுச்சேரியில் காரைக்கால் மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறார்.

    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த திருநள்ளாரில் உள்ள உலக புகழ் மிக்க சனீஸ்வர பகவான் கோவிலில், வருகிற டிசம்பர் 20ந் தேதி 3 ஆண்டுகளுக்குப் பிறகு சனி பெயர்ச்சி விழா நடைபெற உள்ளது.சனீஸ்வர பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடம் பெயர்கிறார். இந்த சனி பெயர்ச்சி விழா அன்று லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால், போலீசார் தரப்பில் பாதுகாப்பு ஏற்பாடுகளை எவ்வாறு செய்து வருகிறார்கள். எவ்வாறு செய்ய வேண்டும் என்பது குறித்த ஆலோசனை கூட்டம் காரை க்கால் மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில், நேற்று இரவு புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில் புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பேசியதாவது:-

    திருநள்ளாறில் நடைபெறும் சனி பெயர்ச்சி விழா குறித்து, புதுச்சேரி முதல்-அமைச்சர் புதுச்சேரியில் காரைக்கால் மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறார். அதன் ஒரு பகுதியாக காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் சனி பெயர்ச்சி அன்று லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள் என்பதால், போலீஸ் தரப்பில் செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.விழாவில் பக்தர்கள் எந்தவித சிரமமும் இன்றி சாமி தரிசனம் செய்வதற்கு, சுமார் 1400-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். 150-க்கும் மேற்பட்டசி.சி.டி.வி. கேமராக்கள் மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. வரும் பக்தர்களுக்கு மாவட்டம் முழுவதும் இலவச பஸ் வசதி செய்து தர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட 7 மண்டலங்களாக பிரித்து போக்குவரத்தை ஒழுங்கு செய்ய ஏற்பாடு செய்திருக்கிறோம். வரும் பக்தர்கள் பாதுகாப்பாக, நெரிசலின்றி சுவாமி தரிசனம் செய்ய பாதுகாப்பு, கண்காணிப்பு, வழிகாட்டுதல் ஏற்பாடுகளையும் செய்திருக்கிறோம். வரும் டிசம்பர் 17-ம் தேதியிலிருந்து 23-ம் தேதிவரை கிட்டத்தட்ட 7 நாட்களுக்கு காவல்துறை பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்படும்.

    புதுச்சேரியிலிருந்து காரைக்காலுக்கு போலீசார் கூடுதலாக வரவழைக்கப்பட இருக்கின்றனர். மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் ஒருங்கிணைந்து இந்த விரிவான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக பல்வேறு பகுதியிலிருந்து இலவச பஸ்களை அரசு இயக்க உள்ளது. மேலும் எந்த வருடமும் இல்லாத வகையில் ட்ரோன் காமிராக்கள் பாதுகாப்பு, கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட இருக்கின்றன. காவல்துறை மூலம் "மே ஐ ஹெல்ப் யூ" பூத்கள் பல இடங்களில் நிறுவப்படும். இதில் பல மொழிகள் தெரிந்த போலீசார் பணியமர்த்தப்படுவார்கள்.சனிப்பெயர்ச்சியை முன் ஏற்பாடுகள் தவிர, சட்டம் ஒழுங்கு நடவடிக்கை, சைபர் குற்றங்களுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளும், போதைப்பொருள் ஒழிப்பிலும் காவல்துறை தீவிரம் காட்டி வருகிறது. இதுவரை கிட்டத்தட்ட 5 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டு பல்வேறு வழக்கு நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருக்கிறது. போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய கூடுதல் காலி உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் பணியிடங்களை நிரப்ப இருக்கிறோம். மேலும், கல்வித்துறையில் தற்போது ஓய்வு பெற்ற ஆசிரியர்களை நியமனம் செய்வது தற்காலிக நடவடிக்கைதான். புதிதாக ஆசிரியர்களை நியமனம் செய்து, அரசாணை வெளிவந்து தேர்வு செய்யப்பட்டவர்கள் பணியில் இணைய கிட்டத்தட்ட 3 மாதங்கள் ஆகும். இந்த 3 மாதங்களில் மாணவர்களின் கல்வி பாதிக்காமல், வலுப்பெறுவதற்கு மட்டுமே ஒப்பந்த அடிப்படையில் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுகிறது. மிக விரைவில் கல்வித்துறையில் அத்தனை காலியிடங்களை நிறைவாக பூர்த்தி செய்ய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. எதிர்க்கட்சிகள் இதனை புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.கூட்டத்தில் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நிதின் கவுஹால் ரமேஷ், போலீஸ் சூப்பிரண்டு சுப்பிரமணியன்(தெற்கு) மற்றும் அனைத்து போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

    • சுமார் 100 மீட்டர் உயரத்திற்கு தீ பிழம்பு எழுந்ததால் காலாப்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
    • ஆத்திரமடைந்த பொதுமக்கள் தொழிற்சாலையின் வரவேற்பு அறை கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர்.

    சேதராப்பட்டு:

    புதுவை காலாப்பட்டு பகுதி சிறைச்சாலை செல்லும் சாலையில் தனியார் மருந்து கம்பெனி உள்ளது.

    இங்கு மருந்து மாத்திரைகள் தயாரிக்கும் மூலப்பொருள் பவுடராக தயாரிக்கப்படுகிறது.

    இந்த நிறுவனத்தில் வட மாநில மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த சுமார் 250-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

    நேற்று இரவு சுமார் 9.30மணி அளவில் இரவு ஷிப்டுக்கு வேலைக்குச் சென்ற தொழிலாளர்கள் பதிவேட்டில் கையெழுத்து போட்டுக் கொண்டிருந்தனர். அதுபோல் ஏற்கனவே முதல் ஷிப்டில் வேலை பார்த்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் வெளியே வர தயாராகிக்கொண்டிருந்தனர்.

    அந்த நேரத்தில் திடீரென பாய்லர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனால் தொழிற்சாலையில் இருந்த ஊழியர்கள் சிதறி ஓடினர்.

    சுனாமி குடியிருப்பு மற்றும் அருகில் உள்ள தமிழகப் பகுதியான மாத்தூர், கொழுவாரி கிராமம் வரை லேசான நில அதிர்வு ஏற்பட்டது.

    சிறிது நேரத்தில் தொழிற்சாலையில் மற்றொரு பாய்லர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது.

    சுமார் 100 மீட்டர் உயரத்திற்கு தீ பிழம்பு எழுந்ததால் காலாப்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    பயங்கர விபத்து ஏற்பட்டு பலர் தொழிற்சாலைக்குள் சிக்கி தவிப்பதாக தகவல் வந்ததும் 5-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகள் 10-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்கள் தொழிற்சாலைக்குள் நுழைந்து மீட்பு பணியில் ஈடுபட்டது.

    அப்போது தொழிற்சாலையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டது. ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.

    பாய்லர் வெடித்ததில் 5 வட மாநில தொழிலாளர்கள் உட்பட 14 பேர் தீக்காயம் அடைந்தனர். அவர்களை ஆம்புலன்சில் மீட்டு காலாப்பட்டு பிம்ஸ் தனியார் மருத்துவமனை, லாஸ்பேட்டை ஈ.சி.ஆர். சாலையில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனை, ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    இந்த சம்பவத்தை அறிந்த காலாப்பட்டு பொதுமக்கள் அங்கு குவிந்து தொழிற் சாலைக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

    மேலும் ஆத்திரமடைந்த பொதுமக்கள் தொழிற்சாலையின் வரவேற்பு அறை கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். அங்கிருந்த பொருட்களையும் அடித்து உடைத்தனர். இந்த சம்பவத்தால் அங்கு மேலும் பரபரப்பு மற்றும் பதட்டம் ஏற்பட்டது.

    இதையடுத்து அங்கு காலாப்பட்டு மற்றும் புதுவையின் பல்வேறு பகுதியிலிருந்து 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். தொழிற்சாலையை சூறையாடிய பொதுமக்களை போலீசார் விரட்டினர்.

    இதற்கிடையே தீக்காயமடைந்து புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட தொழிலாளர்கள் அனைவரும் மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 4 பேர் கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.

    தொடர்ந்து அப்பகுதியில் பதட்டம் நிலவி வருவதால் அங்கு அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • டி.ஐ.ஜி பேட்டி
    • புதிய பஸ் நிலையத்தில் புறக்காவல் நிலையத்தை திறந்து வைத்தார்

    வேலூர்:

    வேலூர் புதிய பஸ் நிலையத்திற்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். சமூக விரோதிகள் பயணிகளிடம் செல்போன் பணம் பறிப்பு உள்ளிட்ட குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.

    இதனால் புதிய பஸ் நிலையத்தில் புறநகர் காவல் நிலையம் அமைக்க பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர்.

    பொது மக்களின் கோரிக்கையை ஏற்று புதிய பஸ் நிலையத்தில் பொதுமக்களின் அவசர உதவிகளுக்கும் உடைமைகள் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யவும் குற்றங்களை குறைக்கவும் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யவும் புறநகர் காவல் நிலையம் கட்டப்பட்டது.

    புறநகர் காவல் நிலையத்தை வேலூர் சரக டிஐஜி முத்துசாமி இன்று ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் பாஸ்கரன், கோடீஸ்வரன், இன்ஸ்பெக்டர்கள் சீனிவாசன், நாகராஜ், ரவி மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

    பின்னர் டி.ஐ.ஜி முத்துசாமி கூறியதாவது:-

    புதிய பஸ் நிலையத்திற்கு தினமும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர் மேலும் பயணிகளை வழியனுப்ப உறவினர்கள் வருகின்றனர்.

    பஸ் நிலையத்துக்கு வருபவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு புறநகர் போலீஸ் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களின் கோரிக்கை ஏற்று புறநகர் போலீஸ்களையும் திறக்கப்பட்டு உள்ளது. குற்ற சம்பவங்களை பாதுகாப்பு தடுக்கவும் ஏற்கனவே நடந்த குற்ற சம்பவங்களை கண்டுபிடிக்கவும் இது உதவும்.

    புதிய பஸ் நிலையத்தில் 24 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் குற்ற சம்பவங்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வேலூர் மாவட்டம் முழுவதும் மார்க்கெட், பஸ் நிலையம் ெரயில் நிலையம் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும்.

    இவ்வாறு அவர்கூறினார்.

    முன்னதாக பாலாற்றங்கரையோரம் உள்ள டோபிக்கானா பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த 10 கண்காணிப்பு கேமராக்களை டிஐஜி முத்துசாமி தொடங்கி வைத்தார்.

    • பெண்கள் உள்பட சுமார் 200-க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டு பள்ளம் தோண்டும் பணியை தடுத்து நிறுத்தினர்.
    • கிராமமக்கள் சிலர் பணி நடைபெறும் பம்ப்செட் நோக்கி திரண்டு சென்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றும் முடியவில்லை.

    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டை அருகே உள்ளது பெரம்பூர் கிராமம். இங்கு சுமார் 600-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.

    இந்நிலையில் அருகே உள்ள லட்சிவாக்கம் கிராமத்தை சேர்ந்தவர்கள் தங்களுக்கு இலவச வீட்டு நிலப்பட்டா வழங்க கோரி பல ஆண்டுகளாக தொடர்ந்து பல்வேறு போராட்டம் நடத்தி வந்தனர். இதனைத் தொடர்ந்து கடந்த 6 மாதத்துக்கு முன்பு பெரம்பூர் பகுதியில் உள்ள புறம்போக்கு நிலத்தில் லட்சிவாக்கம் கிராமத்தை சேர்ந்த 46 பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது.

    இதற்கு பெரம்பூர் கிராமமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த இடத்தை தங்களது கிராமத்திற்கு வேறு திட்டத்திற்கு பயன்படுத்த திட்டமிட்டு இருந்ததாக கூறி அவர்களும் போராட்டங்கள் நடத்தி வந்தனர். இதுதொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வந்ததாக தெரிகிறது.

    இதற்கிடையே நேற்று இரவு 7 மணியளவில் பெரம்பூர் கிராமத்தில் பட்டா வழங்கப்பட்ட இடத்திற்கு குடிநீர் வழங்க அங்குள்ள பம்ப் செட் பகுதியில் பள்ளம் தோண்டப்பட்டது. இதற்கு பெரம்பூர் கிராமமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    பெண்கள் உள்பட சுமார் 200-க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டு பள்ளம் தோண்டும் பணியை தடுத்து நிறுத்தினர். மேலும் அங்கிருந்த ஊழியர்களிடமும் கடும் வாக்குவாதம் செய்தனர். தகவல் அறிந்ததும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மீனாட்சி, ஊத்துக்கோட்டை இன்ஸ்பெக்டர் சத்தியபாமா மற்றும் போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெரம்பூர் கிராம மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    ஆனால் அவர்கள் லட்சிவாக்கம் கிராமத்தினருக்கு பட்டா வழங்கப்பட்டதற்கும், குடிநீர் இணைப்பு வழங்க பள்ளம் தோண்டப்படுவதற்கும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து கலைந்து செல்ல மறுத்தனர். மேலும் அவர்கள் பெரம்பூர்-பாட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

    இதேபோல் கிராமமக்கள் சிலர் பணி நடைபெறும் பம்ப்செட் நோக்கி திரண்டு சென்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றும் முடியவில்லை.

    இதைத்தொடர்ந்து போலீசார் லேசான தடியடி நடத்தி கிராமமக்களை கலைத்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த கிராமமக்கள் போலீசார் மீது கல்வீசி தாக்கினர். இதில் இன்ஸ்பெக்டர் சத்தியபாமா உட்பட 3 போலீசார் காயமடைந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    கிராமமக்களின் போராட்டம் நள்ளிரவு ஒரு மணி வரை நீடித்ததால் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. இதையடுத்து பாதுகாப்புக்கா கூடுதல் போலீசார் அங்கு வரவைழக்கப்பட்டனர். பின்னர் கிராமமக்களை அங்கிருந்து கலைந்து போகச்செய்தனர்.

    பெரம்பூர் கிராம பகுதியில் இன்று காலையும் பரபரப்பான சூழ்நிலை நிலவிவருகிறது. 200-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

    பட்டா வழங்கப்பட்ட இடம் தொடர்பாக பெரம்பூர் கிராமமக்களிடம் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்த முடிவு செய்து உள்ளனர்.

    யெகோவின் சாட்சிகள் தவறான தகவல்களை கற்றுத்தந்து, தேச விரோத செயல்களில் ஈடுபட தூண்டுகின்றனர். இதனால் அந்த மாநாட்டு அரங்கிற்கு வெடிகுண்டு வைத்ததாகவும் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

    விழுப்புரம்:

    கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் களமச்சேரி பகுதியில் ஜம்ரா சர்வதேச மாநாட்டு மையத்தில் நேற்று காலை யெகோவாவின் சாட்சிகள் என்ற கிறிஸ்தவ சபையினரின் ஜெபக் கூட்டம் நடைபெற்றது. இதில் 2500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.ஜெபக் கூட்டம் நடைபெற்ற போது காலை 9.45 மணிக்கு அரங்கின் மையப்பகுதியில் பயங்கர சத்தத்துடன் வெடி குண்டு வெடித்தது. அடுத்த சில நிமிடங்களில் அரங்கின் பக்கவாட்டில் அடுத்தடுத்து 2 குண்டுகள் வெடித்தன.இந்த குண்டு வெடிப்பில் 2 பேர் பலியானர். 51-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த பயங்கர சம்பவம் தொடர்பா கொச்சியை சேர்ந்த டொமினிக் மார்ட்டின் என்பவர் திருச்சூர் மாவட்டம் கொடகரா போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார்.அவர், யெகோவின் சாட்சிகள் தவறான தகவல்களை கற்றுத்தந்து, தேச விரோத செயல்களில் ஈடுபட தூண்டுகின்றனர். இதனால் அந்த மாநாட்டு அரங்கிற்கு வெடிகுண்டு வைத்ததாகவும் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

    இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் யெகோவின் சாட்சிகள் குழுவினருக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சர்வதேச நகரமான ஆரோவில்லில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.குறிப்பாக ஆரோவில் நுழைவு வாயில், மாத்ரி மந்திர், இஸ்ரேலை சேர்ந்த யெகோவின் சாட்சிகள் குழுவினர் 30 பேர் வசிக்கும் பகுதி ஆகிய இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் சர்வதேச நகரமான ஆரோவில்லில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • டி.ஜி.பி உத்தரவின்பேரில் கண்காணிப்பு, பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
    • அனைத்து தேவாலயங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    புதுச்சேரி:

    கேரள மாநிலம் கொச்சியில் கிறிஸ்தவ ஜெபக்கூட்டத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 3 பேர் பலியாகினர்.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து நாடு முழுவதும் தேவாலயங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    புதுவையில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் டி.ஜி.பி உத்தரவின்பேரில் கண்காணிப்பு, பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    மிஷன்வீதி ஜென்ம ராக்கினி, தூய இருதய ஆண்டவர் ஆலயம், வில்லியனூர் லூர்தன்னை, நெல்லித்தோப்பு விண்ணேற்பு அன்னை தேவாலயம் உட்பட அனைத்து தேவாலயங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மாநில எல்லைகளிலும் சோதனை நடத்தப்படுகிறது.

    • மக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
    • அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க 100-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டு உள்ளனர்.

    ஆலந்தூர்:

    சென்னை, ஆதம்பாக்கம், ஜீவன் நகர், 2-வது தெருவில் இருந்து மேடவாக்கம் மெயின் ரோட்டை இணைக்கும் வகையில் சாலை அமைக்கப்பட உள்ளது. இதில் அங்குள்ள கால்வாய் மீது சிறிய பாலமும் கட்டப்பட இருக்கிறது.

    இந்த நிலையில் சாலை அமையும் பகுதியில் உள்ள சில வீடுகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருப்பதாக கூறி அதனை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்தனர். வீடுகளை காலி செய்யவும் உத்தரவு பிறப்பித்து இருந்தனர். ஆனால் இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதற்கிடையே இன்று காலை தாசில்தார்கள் ராதிகா, காளிதாஸ் தலைமையில் வருவாய் துறை அதிகாரிகள் ஜே.சி.பி. எந்திரம் மூலம் வீடுகளை இடிக்கும் பணியை தொடங்கினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் அ.தி.மு.க.கிழக்கு பகுதி செயலாளர் பரணி பிரசாத், முன்னாள் கவுன்சிலர்கள் கோபாலகிருஷ்ணன், நரேஷ் குமார், லோகேஷ் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து மேடவாக்கம் சாலையில் திடீர் மறியிலில் ஈடுபட்டனர். இதேபோல் பா.ஜ.க.வை சேர்ந்த வினோத், இன்பா தலைமையிலும் ஏராளமானோர் பொதுமக்களுக்கு ஆதரவாக மாநகராட்சி அதிகாரிகளுடன் வாக்கு வாதம் செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.

    மேலும் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க 100-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டு உள்ளனர்.

    ×