search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "powerloom"

    • நியாயமான முறையில் தரமான சேலை நெய்யும் பல லட்சம் விசைத்தறி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.
    • ஆன்லைன் மூலம் நடக்கும் விற்பனைகளுக்கு வரைமுறை ஏற்படுத்திடவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சேலம் மாவட்டம், இடங்கண சாலை, தாரமங்கலம், மகுடஞ்சாவடி, நகரம். ஒன்றியம் சுற்றுவட்டார பகுதிகளில் விசைத்தறி தொழிலாளர்கள் பல லட்சம் பேர் வேலை செய்து வாழ்ந்து வருகின்றனர். தரமற்ற சூரத் சேலைகள் விற்பனையினாலும், வெளி மாநிலங்களில் இருந்து கள்ளச் சந்தை மூலம் சேலைகள் விற்பனைக்கு வந்ததாலும், எந்த ஒழுங்குமுறையும் இல்லாமல் ஆன்லைனில் சேலை விற்பனை செய்வதாலும், நியாயமான முறையில் தரமான சேலை நெய்யும் பல லட்சம் விசைத்தறி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. தமிழக அரசு இதனை கவனத்தில் கொண்டு தரமற்ற சூரத் சேலைகள் விற்பனையாவதை தடுத்து, கள்ள சந்தைகள் மூலம் விற்பனை செய்வதை தடுத்திடவும், ஆன்லைன் மூலம் நடக்கும் விற்பனைகளுக்கு வரைமுறை ஏற்படுத்திடவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் இப்பகுதியில் சேலை நெசவு விசைத்தறி தொழிலாளர்களுக்கு விரைவாக சங்கம் அமைத்துக் கொடுத்து. சங்கங்கள் மூலம் சேலைகள் விற்பனை செய்ய ஏற்பாடு செய்து, தரமான சேலைகளை வாங்குவதற்கு பொது மக்களிடையே விழிப்புணர்வு செய்து, லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட விசைத்தறி தொழிலாளர்களுக்கு தே.மு.தி.க.வின் சார்பாக ஆதரவு குரல் என்றைக்கும் இருக்கும். அவர்கள் வாழ்வாதாரம் பாதிக்காத வண்ணம் உடனடியாக அரசு கவனம் செலுத்தி அவர்களுடைய உழைப்பில் உருவாகும் அந்த சேலை, வேட்டி போன்ற துணிகளுக்கு உரிய விலை கிடைக்க தமிழக அரசு துணை நிற்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • வழக்கமான சேலைகள் போல் இல்லாமல் பல்வேறு வடிவங்கள் சேலையில் இடம் பெறுவதால் தனிச்சிறப்பு பெற்று விளங்குகிறது.
    • கைத்தறி நெசவாளர்களை காக்க வேண்டும் என்ற நோக்கில் 11 ஜவுளி ரகங்களை கைத்தறி மூலம் மட்டுமே நெய்ய வேண்டும் என்று கைத்தறி ரக ஒதுக்கீட்டுச் சட்டம் வரையறுத்துள்ளது.

    உடுமலை:

    தமிழகத்தின் பாரம்பரியமான தொழில்களில், கைத்தறியால் நெய்யப்படும் நெகமம் கைத்தறி சேலையும் ஒன்று. புவிசார் குறியீடு பெற்று, தனித் தன்மையுடனும், தரத்தின் மூலமும் உலகப் புகழ் பெற்று விளங்குகிறது கைத்தறி சேலை. அதேசமயம், கைத்தறிக்கென ஒதுக்கப்பட்ட ரகமான பேட்டு பார்டருடன் கூடிய சேலையை, முறைகேடாக விசைத்தறியால் உற்பத்தி செய்து விற்பனை செய்வதால் தனித் தன்மையை இழந்து நிற்கிறது கைத்தறி சேலைகள்.

    நெகமம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர், பரம்பரை பரம்பரையாக கைத்தறி நெசவு மூலம் கைத்தறி சேலை உற்பத்தி செய்து வருகின்றனர். வழக்கமான சேலைகள் போல் இல்லாமல் பல்வேறு வடிவங்கள் சேலையில் இடம் பெறுவதால் தனிச்சிறப்பு பெற்று விளங்குகிறது.

    இங்கு தயாரிக்கப்படும் சேலைகள் தமிழகம் மட்டுமின்றி, வெளி மாநிலங்கள்,வெளிநாடுகள் வரை அனுப்பி வைக்கப்பட்டன. கொரோனா ஊரடங்கு, நூல்விலை ஏற்றம், விற்பனை சரிவு என அடுத்தடுத்த நெருக்கடிகளால் தற்போது கைத்தறி சேலை உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கைத்தறி நெசவாளர்களை காக்க வேண்டும் என்ற நோக்கில் 11 ஜவுளி ரகங்களை கைத்தறி மூலம் மட்டுமே நெய்ய வேண்டும் என்று கைத்தறி ரக ஒதுக்கீட்டுச் சட்டம் வரையறுத்துள்ளது.

    தமிழ்நாடு கைத்தறி ஆணையர் மூலம் அத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி பேட்டு பார்டருடன் கூடிய சேலை, பேட்டு பார்டருடன் கூடிய வேட்டி,துண்டு மற்றும் அங்கவஸ்திரம், லுங்கி,போர்வை, படுக்கை விரிப்பு, அலங்கார துணி, ஜமக்காளம், கம்பளி, சால்வை, உல்லன் ட்வீட், சத்தார்க் உள்ளிட்ட 11 ரகங்களை கைத்தறியில் மட்டுமே தயாரிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஆனால் பேட்டு பார்டருடன் கூடிய சேலை கைத்தறிக்கென ஒதுக்கப்பட்டுள்ளதால் இவற்றை விசைத்தறி மூலம் விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாகும். விதிமுறை மீறி இந்த ரகங்களை உற்பத்தி செய்தாலோ, கடைகளில் விற்பனை செய்தாலோ 6 மாதம் வரை சிறைத்தண்டனை விதிக்கவும் சட்டம் வகை செய்துள்ளது.

    எனினும் நடைமுறையில் இந்த சட்டம் முழுமையாக அமல்படுத்தப் படுவதில்லை என்பதால் விசைத்தறியில் பேட்டு பார்டருடன் கூடிய சேலை உற்பத்தி செய்யப்பட்டு கைத்தறி சேலை என்ற பெயரில் விற்பனை செய்யப்படுவதாக குற்றம் சுமத்துகின்றனர் கைத்தறி நெசவாளர்கள்.

    இது குறித்து கைத்தறி நெசவாளர்கள் கூறும்போது, கைத்தறியில் நெசவு செய்ய வேண்டிய பேட்டு பார்டருடன் கூடிய சேலையை விசைத்தறியில் உற்பத்தி செய்வது என்பது தமிழகத்தில் பல இடங்களில் நடைபெறுகிறது. பல இடங்களில் விசைத்தறி மூலம் சேலை உற்பத்தி நடக்கிறது. அதிகாரிகளுக்கு தெரியாமல் இது நடைபெற வாய்ப்பில்லை.

    பெயரளவுக்கு ஆய்வு நடத்தி, ஆண்டுக்கு ஒரு சிலர் மீது மட்டும் வழக்குப் பதிவு, குறைந்த அபராதம் மட்டுமே விதிக்கப்படுவதால் விசைத்தறியில் கைத்தறி ரகங்களை உற்பத்தி செய்வதை நிரந்தரமாக தடுக்க முடியாத நிலை தொடர்கிறது. பாரம்பரியம் மிக்க கைத்தறி ரகங்களை பாதுகாக்க வேண்டுமானால் விசைத்தறி சேலை உற்பத்தியைத் தடுக்க அதிகாரிகள், தீவிரமாக செயல்பட வேண்டும். அபராதத்துடன் நிறுத்திக் கொள்ளாமல், விசைத்தறி மூலம் உற்பத்தி செய்யப்படும் கைத்தறி சேலைகளை பறிமுதல் செய்ய வேண்டும் என்றனர்.

    கைத்தறி நெசவாளி நந்தகுமார் கூறும்போது,மூலப்பொருட்கள் விலையேற்றம், கைத்தறி சேலைகள் தேக்கம் ஆகியவற்றால் கைத்தறி நெசவுத்தொழில் தற்போது கடுமையாக நலிவடைந்துள்ளது. இந்நிலையில், விசைத்தறியாளர்கள் கைத்தறி ரகங்களை உற்பத்தி செய்வதால் கைத்தறித்தொழில் முற்றிலும் அழியும் நிலைக்கு செல்கிறது.

    நெசவாளர்கள் பலர் தறி நெய்வதை விட்டுவிட்டு கட்டிட வேலைக்கு செல்கின்றனர். பெண்கள் காய்கறி விற்பனை செய்கின்றனர். இதேநிலை நீடித்தால் கைத்தறி தொழில் அழிந்து விடும். சுமார் 100 ஆண்டுகளுக்கு மேலான பாரம்பரியத்தை கொண்டது நெகமம் சேலைகள். 'வெள்ளாவியில் வைத்தாலும் வெளுக்காத சேலை நெகமம் சேலை' என்ற சொலவடையே இந்த சேலையின் தரத்தை காட்டுகிறது. கைத்தறி நெசவு என்பது பாரம்பரியமான தொழில். இது அழிந்தால், மீண்டும் கொண்டுவர முடியாது.

    கைத்தறியின் அழகு தனித்துவமானது. அதுவே நமது அடையாளம். கைத்தறி அழிந்தால் நமது சொந்த பாரம்பரியத்துடன் உள்ள தொடர்புகளை இழக்க நேரிடும். பாரம்பரிய கைவினை கலைஞர்களின்திறன்கள் வரும் தலைமுறைகளுக்கு கடத்தப்பட வேண்டும். கைத்தறித் தொழில் அழிந்தால் நாம் மிகவும் மதிப்புமிக்க ஒன்றை இழப்போம். எனவே தயவு செய்து கைத்தறித்தொழிலை காப்பாற்றுங்கள் என்றார்.

    • கோவை, திருப்பூர் மாவட்டங்களில் விசைத்தறிகள் மூலம் தினசரி ஒரு கோடி மீட்டர் காடா துணிகள் உற்பத்தி ஆகின்றன.
    • மத்திய, மாநில அரசுகளின் மானியம் 14 கோடி என 21 கோடி ரூபாய் மதிப்பீடு செய்யப்பட்டது.

    திருப்பூர் :

    கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 2 லட்சத்து க்கும் அதிகமான விசைத்தறிகள் மூலம் தினசரி ஒரு கோடி மீட்டர் காடா துணிகள் உற்பத்தி ஆகின்றன. இவை வட மாநிலங்களில் மதிப்பு கூட்டு பொருளாக மாற்றப்பட்டு விற்பனைக்கு செல்கின்றன.

    துணிகளை மதிப்பு கூட்டுவதற்கு தேவையான கட்டமைப்பு வசதிகள் இங்கு இல்லாததால் வடமாநில ங்களை நம்பியே விசைத்தறி யாளர்கள் உள்ளனர். இது குறித்து திருப்பூர் மற்றும் கோவை மாவட்ட விசைத்தறி சங்க செயலாளர் பாலசுப்ர மணியம் கூறியதாவது:-

    விசைத்தறி தொழிலை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல கடந்த 2016ல் பொது பயன்பாட்டு மையம் அமைக்க திட்ட அறிக்கை தயாரிக்கப்ப ட்டது.விசைத்தறியாளர் சார்பில் 2 கோடி ரூபாய், வங்கி சார்பில் 3.5 கோடி, எந்திரங்களுக்கான மானியம் 1.5 கோடி மற்றும் மத்திய, மாநில அரசுகளின் மானியம் 14 கோடி என 21 கோடி ரூபாய் மதிப்பீடு செய்ய ப்பட்டது.

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கேத்தனூரில் அமைய உள்ள பொது பயன்பாட்டு மையத்தில் நவீன சைசிங் மில், துணிகள் பிளீச்சிங் செய்யும் எந்திர ங்கள், பிரின்டிங் யூனிட் அமையும் என்பதால் துணிகளை மதிப்பு கூட்டு பொருளாக்கி விற்பனைக்கு கொண்டு செல்ல முடியும். இதில் 60க்கும் மேற்பட்ட விசைத்தறியாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். வருகிற 2024ல் மையத்தை முழுமையான செயல்பா ட்டுக்கு கொண்டுவர திட்டமிட்டு ள்ளோம். இதனால் விசைத்தறி மற்றும் இது சார்ந்த தொழில்கள் முன்னேற்ற மடையும். இவ்வாறு அவர் கூறினார்.

    • தறி ஒன்றுக்கு 1.35 லட்சம் ரூபாய் வரை செலவாகும்.
    • தறி ஒன்றுக்கு 50 சதவீதம் என 67,500 ரூபாய் மானியம் வழங்க உத்தேசித்துள்ளது.

    மங்கலம் :

    கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 2லட்சத்துக்கும் அதிகமான விசைத்தறிகள் உள்ளன. விசைத்தறிகள் பல ஆண்டுகளாக நவீனப்படுத்தப்படாமல் உள்ளன.

    இது குறித்து திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறி சங்க செயலாளர் பாலசுப்ரமணியம் கூறியதாவது:- பாரம்பரியமாக விசைத்தறி தொழிலில் ஈடுபட்டுள்ளோர், போதிய வருவாய் இன்றி தறிகளை நவீனப்படுத்த முடியாமல் உள்ளனர். சாதாரண விசைத்தறிகளை நவீனப்படுத்த தறி ஒன்றுக்கு 1.35 லட்சம் ரூபாய் வரை செலவாகும். இதன் மூலம் உற்பத்தி திறன் நான்கு மடங்கு அதிகரிக்கும். தமிழக அரசு சார்பில் விசைத்தறிகளை நவீனப்படுத்தும் திட்டத்துக்கு தறி ஒன்றுக்கு 50 சதவீதம் என 67,500 ரூபாய் மானியம் வழங்க உத்தேசித்துள்ளது.

    முதல் கட்டமாக இத்திட்டத்தின் கீழ் 10 ஆயிரம் விசைத்தறிகளுக்கு 67.5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்வதாக சட்டசபை மானிய கோரிக்கையின் போது தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில அரசு வழங்குவது போல் மத்திய அரசும் விசைத்தறிகளை நவீனப்படுத்த மானியம் வழங்கினால் உற்பத்தி அதிகரித்து விசைத்தறி தொழில் வளர்ச்சி பெறும். விசைத்தறியாளர் வாழ்வாதாரம் மேம்ப மத்திய அரசு தறிகளை நவீனப்படுத்த மானியம் வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    தினசரி ரூ.100 கோடி மதிப்புள்ள 2 கோடி மீட்டர் காடா துணி உற்பத்தி செய்யப் படுகிறது.

    பல்லடம்:

    திருப்பூர்,கோவை மாவட்டங்களில் 2 லட்சத்து 50 ஆயிரம் விசைத்தறிகள், 20 ஆயிரம் நாடா இல்லா விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இவற்றின் மூலம் தினசரி ரூ.100 கோடி மதிப்புள்ள 2 கோடி மீட்டர் காடா துணி உற்பத்தி செய்யப் படுகிறது. இந்த காடா துணி உற்பத்தி தொழில் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 5 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.

    இதற்கிடையே அரசு அறிவித்தபடி விசைத்தறிகள் கணக்கெடுப்பு பணியை துவக்க வேண்டும் என விசைத்தறியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறியாளர்கள் சங்க செயலாளர் பாலசுப்பிரமணியம் கூறியதாவது:-

    தமிழகத்தில் சுமார் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் உள்ளன. இருப்பினும் இது குறித்த முழுமையான விவரங்கள் இல்லை, விசைத்தறிகள் வளர்ச்சி அடைந்த காலம் முதல் இன்று வரை கணக்கெடுப்புகள் நடத்தப்படவில்லை. முறையாக கணக்கெடுப்பு நடத்துவதால் விசைத்தறிகள் குறித்த முழுமையான விவரங்கள் தெரியவரும். இந்தநிலையில், கடந்த 2022-ம் ஆண்டு சட்டமன்றத்தில் கைத்தறி மற்றும் துணி நூல் துறை சார்பில் மானிய கோரிக்கை நடைபெற்றது.

    அதில் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து கைத்தறி மற்றும் விசைத்தறிகள் ஜியொ டெக் என்னும் தொழில்நுட்பத்துடன் கணக்கெடுப்பு நடத்தப்படும். எலக்ட்ரானிக் பேனல் போர்டு இல்லாத 4 லட்சம் விசைத்தறிகளில் முதல் கட்டமாக 5 ஆயிரம் விசைத்தறிகளுக்கு 50 சதவீத மானியத்துடன் பேனல் போர்டு அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது .இந்த அறிவிப்பு வெளியாகி 11மாதங்களுக்கு மேலாகியுள்ளது. இந்த கணக்கெடுப்பு பணியை உடனே துவங்க வேண்டும் என்று விசைத்தறியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

    தமிழ்நாடு விசைத்தறி சங்கத்துடன் இணைந்து ஜவுளி துறை மூலம் மேற்கொள்ளப்படும் இந்தப்பணியானது, மின் இணைப்பு அடிப்படையில் விசைத்தறிகள் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • விசைத்தறி தொழிலாளர்கள் 9-வது நாளாக வேலை நிறுத்தம் செய்துள்ளனர்.
    • கஞ்சித்தொட்டி திறப்பு அறிவிப்பால் பரபரப்பு ஏற்பட்டது.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரம் பகுதி யில் 400-க்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு சேலை உற்பத்தி செய்யும் தொழிலில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 2018-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை ஒப்பந்தம் போடப்பட்டு அதன் அடிப்படையில் கூலி (சம்பளம்) வழங்கப்பட்டு வந்தது.

    இந்தநிலையில் 2021-23 ஆண்டுக்கு கூலி ஒப்பந்தம் செய்வதற்கு விசைத்தறி உரிமையாளர்கள் முன்வராத காரணத்தினால் விசைத்தறி தொழிலாளர்கள் தங்களுக்கு 75 சதவீதம் சம்பளத்தை உயர்த்தி தர வேண்டும். 20 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதனை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இது தொடர்பாக பல்வேறு கட்டங்களில் விசைத்தறி உரிமையாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தி யும் தோல்வியில் முடிந்து விட்டது. இதைத்தொடர்ந்து தற்போது போராட்டம் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. அவர்கள் இன்று 9-வது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    ஏ.ஜ.டி.யு.சி. வட்டார தலைவர்கள் அய்யனார், ராசு தலைமையில் செட்டி யார்பட்டி கிராமநிர்வாக அலுவலர் அலுவலகம் முன்பு இன்று கஞ்சி தொட்டி திறப்போம் என்று அறிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்த விவகாரம் தளவாய்புரம் விசைத்தறி தொழிலா ளர்கள் வாழ்வாதார பிரச்சினை என்பதால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனம் செலுத்தி கோரிக்கைகளை நிறை வேற்றி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று வேண்டு கோள் விடுத்துள்ளனர்.

    • சில நாட்களுக்கு முன் ஒரு கிலோ ரயான் நூல் ரூ.225-க்கு விற்ற நிலையில் தற்போது 175 ரூபாயாக குறைந்துள்ளது.
    • ஜவுளி உற்பத்தியாளர்களும், நூல் விலையில் உள்ள ஏற்ற, இறக்கத்தால் விலை நிர்ணயம் செய்து வியாபாரம் செய்ய முடியாமல் சிரமப்படுகின்றனர்.

    ஈரோடு:

    கொங்கு மண்டலத்தில் அதிக அளவில் ரயான் நூற்பாலைகள் இயங்கி வருகின்றன. இப்பகுதியில் ரயான் நூல் மூலம் இயக்கப்படும் விசைத்தறிகள் மிக அதிகம்.

    தற்போது அரசின் இலவச வேட்டி-சேலை பணிகள் விசைத்தறிகளில் நடப்பதால் ரயான் நூல் மூலமாக துணி உற்பத்தி சற்று குறைந்துள்ளது. இருப்பினும் ரயான் நூலை நம்பியே பெரும்பாலான விசைத்தறிகள் செயல்பட்டு வருகின்றன.

    இந்நிலையில் ரயான் நூல் விலை கடந்த சில மாதமாக நிலையில்லாமல் இருப்பதால் ஸ்பின்னிங் மில்கள் நஷ்டத்தை சந்திப்பதுடன் உற்பத்தியை குறைத்து வருகின்றன.

    சில நாட்களுக்கு முன் ஒரு கிலோ ரயான் நூல் ரூ.225-க்கு விற்ற நிலையில் தற்போது 175 ரூபாயாக குறைந்துள்ளது. இதனால் நூற்பாலைகளுக்கு கிலோவுக்கு 35 ரூபாய்க்கு மேல் நஷ்டம் ஏற்படுகிறது. ஓரிரு நாளுக்கு முன் விலை உயர்ந்து மீண்டும் குறைய தொடங்கியுள்ளது.

    இதுகுறித்து இந்தியன் மேன்மேடு நூல் உற்பத்தியாளர் சங்க தலைவர் ரமேஷ் கூறியதாவது:-

    ரயான் நூல் உற்பத்திக்கான ஸ்பின்னிங் மில்களில் மின்கட்டணம் வங்கி கடனுக்கான வட்டி, உதிரி பாகங்கள், விலை உயர்வு, தொழிலாளர் சம்பளம், வாகன வாடகை உள்பட பலவும் உயர்ந்து தயாரிப்பு செலவு அதிகரித்துள்ளது. லாபம் கிடைக்கவில்லை என்பதை விட உற்பத்தி செலவுக்கு கூட கட்டுப்படியாகவில்லை. பல ஆலைகள் நஷ்டத்தை சந்தித்துள்ளன.

    மேலும் பல ஆலைகள் 50 சதவீத உற்பத்தியை குறைத்து உள்ளன. கிலோவுக்கு ரூ.50-க்கு மேல் ரயான் நூல்களை குறைந்து, கடந்த சில நாட்களாக சில ரூபாய் உயர்ந்தது. அதை உயர்வு என எடுத்து கொள்ள இயலாது. அதற்குள் மீண்டும் சரிய தொடங்கியுள்ளது. இதேநிலை நீடித்தால் நூல் உற்பத்தியை நிறுத்துவதை தவிர வேறு வழி இல்லை.

    இதேப்போல் ஜவுளி உற்பத்தியாளர்களும், நூல் விலையில் உள்ள ஏற்ற, இறக்கத்தால் விலை நிர்ணயம் செய்து வியாபாரம் செய்ய முடியாமல் சிரமப்படுகின்றனர்.

    பருத்தி, பருத்தி நூல், ரயான் நூல் துணிகளின் விலை ஏற்ற, இறக்கம் இல்லாத நிலையை ஏற்படுத்த அரசிடம் அனைவரும் இணைந்து முறையிட வேண்டும் . அரசால் மட்டுமே இவ்விலையேற்ற இறக்கத்தை கட்டுப்படுத்த முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
    • விசைத்தறியாளர்கள் ,சங்க உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மங்கலம் :

    திருப்பூர் மாவட்டம்,மங்கலத்தை அடுத்த சுல்தான்பேட்டை பகுதியில் உள்ள அம்மன் கலையரங்கத்தில் மங்கலம் பகுதி கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.இந்த பொதுக்குழு கூட்டத்திற்கு மங்கலம் சங்க தலைவர் ஏ.பி.வேலுச்சாமி தலைமை தாங்கினார்.துணைத்தலைவர் சுல்தான்பேட்டை ஆர்.கோபால் ,மங்கலம் சங்க செயலாளர் பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில் விசைத்தறியாளர்கள் ,சங்க உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி யை இன்னும் இரண்டு தினங்களில் நேரில் சந்தித்து சாதா விசைத்தறிக்கு உயர்த்திய மின் கட்டணத்தை குறைக்க முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச்செல்லக்கோரியும், உடனடியாக மின்கட்டண உயர்வை குறைக்க வலியுறுத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது . மின் கட்டணம் செலுத்தாத விசைத்தறி கூடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டால் விசைத்தறி கூட்டுக்கமிட்டி எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    • விசைத்தறிகளுக்கு மின்னணு பலகை பொருத்த அரசு மானியம் பெற விண்ணப்பிக்கலாம்.
    • இந்த தகவலை மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டிலுள்ள சாதாரண விசைத்தறிகளில் உற்பத்தி செய்யும் போது நூலிழைகள் அறுந்து உற்பத்தி நேரம் குறைவதால் தொழிலாளர்களின் உற்பத்தி திறன் குறைகிறது.

    இதனை சீரமைத்து உற்பத்தி திறனை அதிகரிக்க விசைத்தறிகளுக்கு மின்னணு பலகை பொ ருத்தப்படும். முதற்கட்டமாக 5 ஆயிரம் விசைத்தறிகளில் மின்னணு பலகை பொருத்த 50 சதவீதம் மானியமாக ரூ. 6 கோடி வழங்கப்படும் என அமைச்சரால் சட்ட ப்பேரவையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    இந்த திட்டத்தின் கீழ், மதுரை மற்றும் தேனி மாவட்டத்தில் 250 விசைத்தறிகளில் அரசின் 50 சதவீத மானிய உதவியில் மின்னணு பலகை பொருத்திட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கூட்டுறவு மற்றும் தனியார் விசைத்தறியாளர்கள் மூலம் விண்ணப்பம் செய்ய தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த திட்டத்தின் கீழ் அதிகபட்சம் 5 விசைத்தறிகள் வரை மானியம் பெற முடியும். தமிழக அரசின் இலவச மின்சாரம் மூலம் பயன்பெற்றவர்கள் மற்றும் விசைத்தறிகள் நவீனப்படுத்தும் திட்டத்தின் கீழ் இதற்கு முன் மானியம் பெறாதவர்கள் இந்த திட்டத்திற்கு தகுதி உடையவர்கள் ஆவார்கள்.

    தறிகள் இயங்கும் இடம் வாடகை கட்டிடமாக இருந்தால் வாடகை ஒப்பந்த பத்திரம் பெறப்படும். விண்ணப்பங்களை தமிழ்நாடு அரசுக்கு அனுப்பி, தகுதி உள்ளோர் பட்டியல் வெளியிடப்படும். தகுதி உள்ளவர்கள் தங்களது பங்குத் தொகையாக தறி ஒன்றுக்கு சுமார் ரூ.12 ஆயிரம் வரை கைத்தறித்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் செலுத்த வேண்டும்.

    கூடுதல் விபரங்களுக்கு மதுரை சரக கைத்தறித்துறை உதவி இயக்குநர் வெங்கடேசலு, மதுரை உதவி அமலாக்க அலுவலர் ரவிக்குமார் ஆகியோரை 99940 20969, 98943 18116 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மின்சார துறை ஒழுங்குமுறை ஆணைய தலைவர் அவர்களை சந்தித்து கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.
    • விசைத்தறிக்கான மின்சார கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்.

    பல்லடம் :

    விசைத்தறிக்கான மின் கட்டண உயர்வை ரத்து செய்ய கோரி தமிழக முதல்வரை சந்திக்க தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பின் நிர்வாகிகள் முடிவு செய்து இருப்பதாக திருப்பூர்,கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளர் சங்க தலைவர் வேலுசாமி,செயலாளர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் கூறினர்.

    இது குறித்து அவர்கள் மேலும் கூறுகையில், தமிழ்நாடு மின்சாரத்துறை மற்றும் ஒழுங்குமுறை ஆணையம் மூலம் விசைத்தறிக்கான மின்சார கட்டணத்தை உயர்த்துவது என்றும் மேலும் நிலை கட்டணத்தை உயர்த்துவது என்றும் முடிவு செய்த போது தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் முதற்கட்டமாக சென்னையில் தமிழ்நாடு மின்சார துறை ஒழுங்குமுறை ஆணைய தலைவர் அவர்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. அதன் பின்னர் மின்துறை அமைச்சரை நேரில் சந்தித்து விசைத்தறிக்கான மின் கட்டணத்தை ரத்து செய்யக்கோரி கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.

    தமிழ்நாடு மின்சாரத்துறை ஒழுங்குமுறை ஆணையம் மூலம் சென்னை, கோவை மற்றும் மதுரை கருத்து கேட்பு கூட்டத்தில் கூட்டமைப்பின் சார்பில் நிர்வாகிகள் கலந்து கொண்டு விசைத்தறிக்கான மின்சார கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்று குறிப்பாக கோவையில் ஆயிரக்கணக்கான விசைத்தறி உரிமையாளர்கள் எடுத்துரைத்தார்கள்.பின்னர் திருப்பூர் வருகை தந்த முதலமைச்சரை சந்தித்து விசைத்தறிக்கான மின் கட்டண உயர்வை ரத்து செய்ய கோரி எடுத்துரைக்கப்பட்டது.ஆனால் தற்போது நிலை கட்டணம் மட்டும் குறைக்கப்பட்டு மின்சார கட்டணம் ஒரு ரூபாய் 47 பைசா உயர்ந்துள்ள காரணத்தால் விசைத்தறி தொழிலை நடத்த முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டு உள்ளோம். மேலும் இதனை சார்ந்த ஜவுளி தொழில்கள் அனைத்தும் வேறு மாநிலங்களுக்கு செல்லக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது.ஏற்கனவே நூல் விலை ஏற்ற மற்றும் இறக்கம் காரணமாக ஜவுளி தொழில் அதனை சார்ந்த உள்ள விசைத்தறி தொழில் மிகவும் பாதிப்படைந்து அழியும் தருவாயில் உள்ளது. ஆகவே தமிழக முதல்வரை நேரில் சந்தித்து விசைத்தறிக்கான மின் கட்டணத்தை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் சார்பில் எடுத்துரைக்கப்படும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • தமிழக அரசின் பள்ளி சீருடைகள் மற்றும் வேட்டி சேலை உற்பத்தி செய்யப்படுகிறது.
    • தமிழக அரசின் வேட்டி சேலை உற்பத்தி தொடங்கப்பட்டு வேலைவாய்ப்பு கொடுக்கப்பட்டு வந்தது.

    திருப்பூர் :

    தமிழக அரசின் வேட்டி, சேலை உற்பத்தி செய்திட விசைத்தறிகளுக்கு ஆா்டா் வழங்கிட வேண்டும் என விசைத்தறியாளா்கள் சங்க கூட்டமைப்பு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

    இது குறித்து தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பின் மாநிலத் தலைவா் ஈரோடு சுரேஷ், செயலாளா் பல்லடம் வேலுசாமி, பொருளாளா் சித்தோடு பாலசுப்பிரமணயம் ஆகியோா் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அரசு முதன்மை செயலருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-தமிழகத்தில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை சாா்பில் 223 விசைத்தறி தொடக்க கூட்டுறவு நெசவாளா் சங்கங்கள் மூலம் 67ஆயிரத்துக்கு மேற்பட்ட விசைத்தறிகள் மூலம் தமிழக அரசின் பள்ளி சீருடைகள் மற்றும் வேட்டி சேலை உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் மூலம் பல நெசவாளா்கள் பயன் பெற்று வருகிறாா்கள். கடந்த ஒரு மாதமாக ஜவுளித் துறையில் நூல் விலை ஏற்றம் மற்றும் இறக்கம் காரணமாக பல்லாயிரம் விசைத்தறிகள் வேலை இல்லாமல் அதனை சாா்ந்த நெசவாளா்களும் அவா்கள் குடும்பத்தாரும் பாதிக்கப்பட்டு பொருளாதார நெருக்கடியில் உள்ளனா்.கடந்த 10 ஆண்டுகளாக 2021ம் ஆண்டு வரை ஜூன் மாதத்தில் தமிழக அரசின் வேட்டி சேலை உற்பத்தி தொடங்கப்பட்டு தமிழக அரசின் சாா்பில் வேலைவாய்ப்பு கொடுக்கப்பட்டு வந்தது. அதேபோல இந்த ஆண்டும் ஜூலை மாதத்தில் வேட்டி, சேலை வடிவத்தில் எவ்வித மாறுதல் இல்லாமல் ஏற்கெனவே நடைமுறையில் உள்ள அதே ரகமும் தரமும் மாற்றப்படாமல் உற்பத்தி செய்ய உத்தரவிட்டால் பல லட்சம் நெசவாளா் குடும்பங்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற வழிவகை செய்ய ஏதுவாக இருக்கும்.

    கடந்த வருடம் வேட்டி தயாரிப்பு ஆகஸ்ட் மாதத்திலும், சேலை தயாரிப்பு நவம்பா் மாதத்திலும் தொடங்கப்பட்ட காரணத்தால் உற்பத்தி செய்வதில் பெரும் தொய்வு ஏற்பட்டது. ஆதலால் இந்த வருடம் வேட்டி, சேலை உற்பத்தியை விரைவில் தொடங்கி விசைத்தறியாளா்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டுகிறோம் என தெரிவித்துள்ளனா்.

    • திருமணத்திற்கு பெண் அமையாததால் மன வருத்தம் அடைந்து இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
    • வெள்ளகோவில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் அருகே உள்ள சிவநாதபுரம், அமராவதி நகர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 35) . விசைத்தறி தொழிலாளி .இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

    பல இடங்களில் பெண்பார்த்தும் அமையாததால் மன வருத்தம் அடைந்து இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன் தினம் 3ந்தேதி ஞாயிற்றுக்கிழமை தாயார் லட்சுமி (வயது68) வேலைக்கு சென்று விட்டார். பிறகு இரவு வீட்டிற்கு வந்து பார்க்கும்போது வீட்டின் விட்டத்தில் கயிறு போட்டு மகன் மணிகண்டன் தூக்கில் தொங்கியவாறு இருந்துள்ளார். இதைப்பார்த்த தாயார் அருகில் இருந்தவர்கள் உதவியுடன் மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பார்த்த போது பரிசோதித்த டாக்டர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெ.ரமாதேவி, சப் இன்ஸ்பெக்டர் கே.ராஜு ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×