என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "PR Pandian"
- காலநிலை மாற்றத்தால் பெரும் அழிவை சந்திப்பது விவசாயமாகும்.
- காப்பீட்டு நிறுவனங்கள் வணிக நோக்கோடு செயல்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
மன்னார்குடி:
தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி. ஆர். பாண்டியன் இன்று மன்னார்குடியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
இந்தியாவில் காலநிலை மாற்றத்தால் பெரும் அழிவை சந்திப்பது விவசாயமாகும். இந்தியாவிலேயே தமிழ்நாடு மாநிலம் மட்டுமே தென்மேற்கு மற்றும் வடகிழக்கு இருபருவ மழைகள் பருவம் மாறி பெய்வதால் விவசாயம் பேரழிவை சந்திக்கிறது.
எனவே பேரிடர் பாதிப்பில் இருந்து விவசாயிகளை பாதுகாக்கும் நோக்கோடும், மத்திய அரசு உற்பத்தியிலும் இழப்பிலும் பங்கேற்கும் அடிப்படைக் கொள்கையோடு சட்டம் நிறைவேற்றப்பட்டது.
கடந்த 2018 -ம் ஆண்டு முதல் மேம்படுத்தப்பட்ட பிரதமர் காப்பீடு திட்டம் என்கிற பெயரில் கொண்டு வரப்பட்ட சீர்திருத்தங்களின் அடிப்படையில் 20 தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்டு வணிக நோக்கோடு செயல்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஆனால் தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் வணிக நோக்கோடு மத்திய மாநில அரசுகளின் பிரிமிய தொகை பங்கிட்டுக் கொள்ளும் நிலை உள்ளது.
இதிலிருந்து பாதுகாப்பதற்கு மத்திய அரசு விரைந்து வழிகாட்டு முறைகளில் மாற்றம் கொண்டு வந்து பேரிடரால் பாதிக்கப்படும் விவசாயிகள் நலனை முன்னிறுத்தி காப்பீட்டு திட்டம் செயல்படுத்துவதை உறுதிப்படுத்திட வலியுறுத்தி மத்திய அரசின் காப்பீட்டு நிறுவன தலைவர் ரித்திஷ் சவுகானுக்கு கடிதம் எழுதி உள்ளேன்.
தமிழ்நாட்டில் காவிரி டெல்டா விவசாயிகளுக்கு 2023-24 ஆம் ஆண்டிற்கான உண்மைக்கு புறம்பான வகையில் காப்பீடு இழப்பீடு நிர்ணயம் செய்துள்ள மத்திய அரசின் அரசாணையை ரத்து செய்திட வேண்டும்.
மாவட்ட கலெக்டர் தலைமையிலான பேரிடர் மேலாண்மை குழு மூலம் மழை அளவை கணக்கில் கொண்டும், மேட்டூர் அணையின் நீர்ப்பாசன அளவை கவனத்தில் கொண்டும் இழப்பை மறு ஆய்வு செய்து உண்மையான மகசூல் இழப்பிற்கு ஏற்ப இழப்பீட்டுத் தொகையை நிர்ணயம் செய்து புதிய அரசாணை வெளியிட வேண்டும்.
காவிரி டெல்டாவில் மேட்டூர் அணை வறண்டதால் 2023 ஆகஸ்ட் 7-ந் தேதியே அணை மூடப்பட்டதாலும், வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட குறைவாகப் பெய்ததால் சம்பா சாகுபடி முற்றிலும் அழிந்த நிலையில் காப்பீட்டிற்கான இழப்பீட்டை நிபந்தனையின்றி 100 சதவீதமும் உடன் வழங்கிட வேண்டும்.
அறுவடை ஆய்வு அறிக்கையின் அடிப்படையில் ஆண்டுதோறும் மகசூல் இழப்பிற்கு ஏற்ப காப்பீட்டுக்கான இழப்பீடு வழங்கும் வகையில் மாற்றம் கொண்டு வர வேண்டும். அதற்கு முந்தைய மூன்று ஆண்டுகளுக்கான தற்போதைய உத்தேச மகசூல் அளவை கணக்கில் கொள்வதை கைவிட வேண்டும்.
தேசிய வேளாண் காப்பீட்டு நிறுவனத்தின் மூலம் மட்டுமே காப்பீடு செய்வதை கட்டாயமாக்கிட வேண்டும். தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் அனுமதிப்பதை கொள்கை ரீதியாக கைவிட முன்வர வேண்டும்.
அரசு நிரந்தர வேளாண் பணியாளர்களை நியமனம் செய்து வெளிப்படை தன்மையுடன் அறுவடை ஆய்வு அறிக்கை செய்திட வேண்டும்.
அவ்வாறு மேற்கொள்ளும் ஆய்வு அறிக்கையின் இறுதி பட்டியலை மாவட்ட ஆட்சியர் தலைமையிலான பேரிடர் மேலாண்மை குழுவிற்கு அனுப்பி வைத்து ஒப்புதல் பெற்று இறுதி படுத்திடும் வகையில் மாற்றம் கொண்டு வர வேண்டும்என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளேன்.
இந்நிலையில் பிரதமரை நாளை (வெள்ளிக்கிழமை) முதல்-அமைச்சர் சந்திக்க உள்ள நிலையில் காப்பீட்டுக்கான இழப்பீடு முழுமையாக வழங்குவதற்கும், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இழப்பீடு குறித்தான அரசாணையை ரத்து செய்திடவும் வலியுறுத்த வேண்டும்.
மேலும் காவிரியின் குறுக்கே தமிழ்நாடு ராசிமணலில் அணை கட்டி கடலில் உபரிநீர் தடுப்பதை தடுத்து நிறுத்துவதற்கு பிரதமரிடம் அனுமதி பெற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- தென்னை விவசாயம் மிகப்பெரிய பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது.
- கர்நாடகத்திடமிருந்து காவிரி மேலாண்மை ஆணையம் தண்ணீர் பெற்றுத்தர வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்:
தஞ்சையில் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.ஆர். பாண்டியன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தமிழகத்துக்கு காவிரி நீர் தர மறுக்கும் கர்நாடக அரசுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுக்கப்படும் என சென்னையில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் தமிழக அரசு எடுத்துள்ள முடிவு வரவேற்கத்தக்கது. மேலும், கர்நாடகத்திடமிருந்து காவிரி மேலாண்மை ஆணையம் தண்ணீர் பெற்றுத்தர வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
எனவே, தமிழக அரசின் நடவடிக்கையை ஏற்று டெல்டா மாவட்டங்களில் வருகிற 26-ந்தேதி நடத்தப்பட இருந்த முழு அடைப்பு, ரெயில் மறியல் போராட்டத்தை ஒத்தி வைப்பது என முடிவு செய்துள்ளோம்.
டெல்டா மாவட்டங்கள் மட்டுமல்லாமல் கோவை மாவட்டத்திலும் தேங்காய் விலை ரூ.4-க்கு சரிந்து விட்டதால், தென்னை விவசாயம் மிகப்பெரிய பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது. தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய், நல்ல எண்ணெய்யை பொது வினியோக திட்டத்தில் விற்க அனுமதித்தால் விவசாயிகள் லாபம் பெற முடியும்.
கேரளம், கர்நாடகம், ஆந்திர மாநிலங்களை போன்று தமிழகத்திலும் கள் இறக்க அனுமதிக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி அடுத்த மாதம் (ஆகஸ்டு) 6-ந்தேதி சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மத்திய அரசு விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கும் மின்சாரத்தை ரத்து செய்து விட்டனர்.
- டெல்லிக்குள் நுழைந்து விவசாயிகள் போராட்டத்தை முன்னெடுக்க உள்ளனர்.
திருவோணம்:
தஞ்சாவூர் அருகே திருவோணத்தில், காவிரி விவசாய சங்க தலைவர் பி.ஆர். பாண்டியன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
டெல்லியில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக வருகிற 10-ம் தேதி தமிழ்நாடு காவிரி விவசாய சங்கம் சார்பாக, தமிழ்நாடு முழுவதும் மத்திய அரசை கண்டித்து 150க்கும் மேற்பட்ட இடங்களில் ரெயில் மறியல் போராட்டம் நடைபெற உள்ளது.
தொடர்ந்து அமைதியான முறையில் நடைபெற்று வரும் போராட்டத்திற்கு மத்திய அரசு துணை ராணுவத்தை கொண்டு போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதை வன்மையாக கண்டிக்கிறோம். தொடர்ந்து போராடிவரும் விவசாயிகளை மத்திய அரசு அழைத்து சுமூகமாக பேசி தீர்ப்போம் என்று கூறிவிட்டு இதுவரை முறையாக பேச்சுவார்த்தை நடத்தவில்லை.
தொடர்ந்து மத்திய அரசு விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கும் மின்சாரத்தை ரத்து செய்து விட்டனர். 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மீண்டும் டெல்லிக்குள் நுழைந்து விவசாயிகள் போராட்டத்தை முன்னெடுக்க உள்ளனர். இந்தப் போராட்டத்திற்கு தமிழ்நாடு காவிரி விவசாய சங்கத்திலிருந்து 20-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- லாபகரமான குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் சட்டம் உடனடியாக அமல்படுத்தப்படும் என எதிர்பார்த்தோம்.
- தமிழகத்தில் இருந்தும் டெல்லியை நோக்கி விவசாயிகள் சென்ற வண்ணம் உள்ளனர்.
தஞ்சாவூா்:
தஞ்சை ரெயில் நிலையத்தில் இன்று தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :-
வேளாண் விரோத சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் பிரதமர் அளித்த உறுதி அடிப்படையில் போராட்டம் கைவிடப்பட்டது. வேளாண் விரோத சட்டம் திரும்ப பெறப்பட்டது.
இதே போல் லாபகரமான குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் சட்டம் உடனடியாக அமல்படுத்தப்படும் என எதிர்பார்த்தோம். அதற்கான குழுக்களும் அமைக்கப்பட்டது. ஆனால் இது தொடர்பாக இதுவரை எந்த நடவடிக்கையும் மத்திய அரசு மேற்கொள்ளவில்லை.
இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய இடைக்கால பட்ஜெட்டில் பிரதமர் ஏற்கனவே கொடுத்த வாக்குறுதிகள் இடம் பெறும். குறிப்பாக லாபகரமான குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்க சட்டம் இயற்றப்படும் என எதிர்பார்த்தோம். ஆனால் அப்படி ஒரு எந்த அறிவிப்பும் வெளியிடப்படாதது ஏமாற்றத்தை அளித்தது.
இந்த நிலையில் கட்சி சார்பற்ற ஐக்கிய விவசாயிகள் சங்கம் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பஞ்சாபில் இருந்து கடந்த 10 நாட்களாக லட்சக்கணக்கான விவசாயிகள் 13-ந் தேதி டெல்லிக்குள் நுழைந்து போராட்டம் நடத்துவதற்காக சென்று கொண்டுள்ளனர். நேற்று விவசாயிகளின் போராட்ட குழு ஹரியானா மாநில எல்லையை அடைந்தது.
இந்த சூழ்நிலையில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் பஞ்சாபில் விவசாய அமைப்பை சேர்ந்த நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது 8 நாட்கள் அவகாசம் வேண்டும் என்று மத்திய அமைச்சர் கேட்டார். ஆனால் விவசாயிகள் அதற்கு மறுப்பு தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து நாளை ( திங்கள் கிழமை ) மாலை 3 மணிக்கு பஞ்சாப் தலைநகர் சண்டிகரில் 5-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் குழு விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அதனை ஏற்றுக் தமிழ்நாடு விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் நான் பங்கேற்கிறேன். இதற்காக நான் தஞ்சையில் இருந்து சென்னைக்கு ரெயிலில் சென்று அங்கிருந்து சண்டிகருக்கு செல்கிறேன். அங்கு மத்திய அமைச்சர்கள் குழு நடத்தும் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்கிறேன்.
இதில் லாபகரமான குறைந்தபட்ச ஆதார விலை, டெல்லி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறுதல், விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகள் இருக்கும் என நம்புகிறேன். இது ஒரு புறம் இருக்க போராட்டம் மறுபுறம் நடந்து வருகிறது. தமிழகத்தில் இருந்தும் டெல்லியை நோக்கி விவசாயிகள் சென்ற வண்ணம் உள்ளனர்.
இருந்தாலும் நாளை நடக்கும் பேச்சுவார்த்தையில் நல்ல முடிவு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பயிர்கள் கருகுவதை காப்பாற்ற முயற்சிக்காமல் தண்ணீரை திறக்க மறுப்பது ஏற்கத்தக்கது அல்ல.
- கருகி வரும் நெற்பயிர்களை காப்பாற்ற உடனடியாக மேட்டூர் அணையை திறக்க நீர்ப்பாசன துறை முன்வர வேண்டும்.
திருத்துறைப்பூண்டி:
திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீயை, தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பி ஆர்.பாண்டியன் சந்தித்து டெல்டா மாவட்டங்களில் தண்ணீரின்றி கருகி வரும் சம்பா, தாளடி நெற்பயிர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினார்.
பின்னர் பி.ஆர்.பாண்டியன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :-
காவிரி டெல்டா மாவட்டங்களில் தண்ணீரின்றி சம்பா, தாளடி நெற்பயிர்கள் கருகி வருகின்றன. காவிரியில் தண்ணீர் திறப்பு குறித்து முடிவு எடுக்கிற அதிகாரம் ஒன்றுபட்ட தஞ்சை மாவட்ட கலெக்டருக்கு தான் வழங்கப்பட்டிருந்தது. இது ஆங்கிலேயர் காலத்தில் இருந்து பின்பற்றப்படும் நடவடிக்கையாகும். நான்கு மாவட்டங்களாக பிரிக்கப்பட்ட பிறகு 4 மாவட்ட கலெக்டரிகளின் பரிந்துரையை ஏற்று மேட்டூர் அணை திறப்பதையும், அடைப்பதையும் வாடிக்கையாக பின்பற்றப்படுகிறது.
தற்போதைய தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா, நீர் பாசன துறையின் நிர்வாக அதிகாரத்திற்குள் தலையிடுவதும், தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் வழங்க வேண்டும் என்கிற நோக்கில் பயிர்கள் கருகுவதை காப்பாற்ற முயற்சிக்காமல் தண்ணீரை திறக்க மறுப்பது ஏற்கத்தக்கது அல்ல.
எனவே கருகி வரும் நெற்பயிர்களை காப்பாற்ற உடனடியாக மேட்டூர் அணையை திறக்க நீர்ப்பாசன துறை முன்வர வேண்டும் என வலியுறுத்தி வருகிற 3-ந் தேதி (சனிக்கிழமை) காலை 9 மணியளவில் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களில் சாலை மறியல் போராட்டம் நடைபெறும். இதில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் செங்கல்பட்டில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டதில் பங்கேற்றார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
காட்டாங்கொளத்தூரில் வருகிற 3, 4, 5-ந் தேதிகளில் சென்னை அக்ரி எக்ஸ்போ-2022,மாநாடு, கருத்தரங்கம், எந்திர கண்காட்சி, பாரம்பரிய வேளாண் மற்றும் உணவு திருவிழா, பாரம்பரிய வைத்திய முறைகள், வீரக்கலைகள் குறித்தான பன்முகத்தன்மை கொண்ட வகையில் மாநாடு நடைபெற உள்ளது,
டெல்லியில் ஓராண்டு காலம் மத்திய அரசுக்கு எதிராக நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தை ஒருங்கிணைத்து நடத்திய முன்னணி தலைவர்களில் ஒருவரான ராகேஷ் திகாயத் மீது கர்நாடக மாநிலத்தில் கொலைவெறி தாக்குதல் நடத்தி கருப்பு மை வீசப்பட்ட சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
இதன் பின்புலம் குறித்து மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும். திட்டமிட்டு ராகேஷ் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிகிறது.கொலை வெறியுடன் தாக்குதல் நடத்தியவர்கள் பிடிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார் என்பது சந்தேகம் அளிக்கிறது.
மத்திய அரசின் விவசாய விரோத கொள்கைகளுக்கு எதிராக விவசாயிகள் ஒன்று படுவதை தடுக்கும் நோக்கத்தோடு, அச்சுறுத்தும் வகையிலும் இத்தாக்குதல் நடைபெற்றுள்ளது. இதனை வன்மையாக கண்டிப்பதோடு, விவசாயிகள் அமைப்புகளின் முன்னணி தலைவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவதை மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வேளாண் நிதிநிலை அறிக்கைகளை படித்து பல தரப்பட்ட விவசாயிகளும், அறிஞர்களும் பாராட்டி வருகின்றனர்.
- விவசாயிகளின் தேவை என்ன என்பதை அறிந்து முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று படிப்படியாக நிறைவேற்றப்படுகிறது.
சென்னை:
வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கடந்த 3 வருடங்களில் செயல்படுத்தப்படும் திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ளாமலும் அறிந்து கொள்ளாமலும் ரூ.300 கோடி மதிப்பீட்டில் வெறும் தென்னங்கன்று மட்டும் வழங்கியதாக கூறுவது திட்டத்தின் தனித்தன்மையை முழுமையாக புரிந்து கொள்ளாதவர்களின் பிதற்றலாகும்.
திண்டிவனம், தேனி, மணப்பாறையில் உணவு பூங்கா அமைப்பது என்பது இன்று விதைத்து நாளை முளைக்கும் செயல் அல்ல. இத்திட்டத்தை விரைவில் செயல்படுத்தும் வகையில் நிலம் கையகப்படுத்தப்பட்டு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு நபார்டு வங்கியின் ஒப்புதலும் பெறப்பட்டு விட்டது. இதுபோன்ற திட்டங்கள் செயல்வடிவம் பெற்று நடைமுறைக்கு வரும்போது தான் முழு பலனும் விவசாயிகளுக்கு சென்று சேரும்.
கடந்த வேளாண் பட்ஜெட்டில் வாசித்த பல திட்டங்கள் இந்த ஆண்டிலும் வார்த்தை மாறாமல் படித்ததாக கூறுவது நிதிநிலை அறிக்கையை முழுவதுமாக படிக்காமல் கருத்து கூறுவது முறையல்ல. மதிப்பு கூட்டல் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு இல்லை என்று கூறுவது உண்மைக்கு புறம்பானது.
வேளாண் நிதிநிலை அறிக்கைகளை படித்து பல தரப்பட்ட விவசாயிகளும், அறிஞர்களும் பாராட்டி வருகின்றனர். விவசாயிகளின் தேவை என்ன என்பதை அறிந்து முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று படிப்படியாக நிறைவேற்றப்படுகிறது. ஆக்கப்பூர்வமான கருத்துகள் ஏதும் இருந்தால் அதனை அரசுக்கு தெரியப்படுத்தினால் அதனை வரவேற்க இந்த அரசு எப்போதும் தயாராக உள்ளது. அதை விடுத்து 'வெறும் வாயில் வடை சுடும் பட்ஜெட்' என்று கூறுவது வேளாண்மையை பற்றி சற்றும் தெரியாமல் பட்ஜெட் முக்கியத்துவத்தை உணராமல் எதிர்க்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் பேசுபவர்களின் கருத்தாக இருக்கலாம்.
முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு தன்னை அழைக்கவில்லை என்ற ஆதங்கத்தில் இருப்பவர்கள் வெளியிட்ட கருத்தாகும்.
முதல் வேளாண் நிதிநிலை அறிக்கை தயார் செய்யும் முன்னர் விவசாயிகளிடம் கருத்து கேட்கப்பட்டது. அக்கூட்டத்திற்கு வருகை புரிந்த பி.ஆர்.பாண்டியன் எந்தவித ஆக்கப்பூர்வமான கருத்தினை தெரிவிக்காமல் இருந்துவிட்டு அல்லது எந்த கருத்தும் தெரிவிக்க முடியாத நிலையில், விவசாயமே பார்க்காத நபர் ஒருவர் தற்பொழுது விவசாயிகளுக்கு ஆதரவாக கருத்து கூறுவது ஏற்புடையது அல்ல.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- நிலக்கரி திட்டத்தை மத்திய அரசு தீவிரமாக செயல்படுத்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
- பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்பது தமிழ்நாட்டிற்கு தலைகுனிவை உருவாக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
மன்னார்குடி:
தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் மன்னார்குடியில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக விவசாயிகளும், பொதுமக்களும் தீவிரமாக போராடி பேரழிவிருந்து தூத்துக்குடி மாவட்டத்தை பாதுகாத்தனர். போராட்டத்தின் நியாயத்தை உணர்ந்து உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் நீதிமன்ற நடவடிக்கைகளை அவமதிக்கும் விதத்தில் தமிழக மக்களை கொச்சைப்படுத்தும் விதமாக கவர்னர் பேசியது வன்மையாக கண்டிக்கத்தக்கது. மேலும் காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ள போது, மாநில அரசின் கருத்தை கேட்காமலேயே ஒப்புதலை பெறாமலே கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக நிலக்கரி திட்டத்தை மத்திய அரசு தீவிரமாக செயல்படுத்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
அதற்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியதோடு, முதலமைச்சர் எழுத்துப் பூர்வமாக பிரதமருக்கும் கடிதம் எழுதி இரண்டு தினங்கள் கடந்துவிட்டது. இதுவரையிலும் பிரதமர் அலுவலகம் கடிதம் குறித்தும், தமிழக மக்களின் உணர்வுகளுக்கும் சட்டமன்ற தீர்மானத்திற்கும் மதிப்பளித்து தனது நிலையை தெளிவுபடுத்த முன்வரவில்லை.
இந்த நிலையில் சென்னையில் நாளை பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்பது தமிழ்நாட்டிற்கு தலைகுனிவை உருவாக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் கவர்னருக்கு கண்டனம் தெரிவித்தும், நிலக்கரி திட்டம் குறித்து பதில் அளிக்க மறுக்கும் பிரதமருக்கும் எதிர்ப்பு தெரிவிக்கிற வகையில் விழாவை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் புறக்கணிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஆலைக்கு எதிராக போராடக்கூடிய விவசாயிகளுக்கு எதிராக தமிழக அரசு வழக்கு தொடுக்கிறது.
- தமிழக காவல்துறையினர் ஆலைக்கு பாதுகாப்பு அளிக்கிறார்கள். இதுவும் தமிழக விவாசயிகளுக்கான துரோகமாகும்.
திருச்சி:
மத்திய அரசு நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய குழு அமைத்து தீர்வு காணப்படும் என்று அறிவித்தது. ஆனால் அது தொடர்பாக தற்போது வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் இதுவரை விலை நிர்ணயம் செய்வதற்கான எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடாமல் மத்திய அரசு ஏமாற்றி வருவதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். எனவே மத்திய அரசுக்கு எதிராக தீவிரமான போராட்டத்தை ஒருங்கிணைக்கும் வகையில், அடுத்த கட்ட போராட்டம் குறித்து முடிவு செய்ய திருச்சியில் இன்று தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் உயர்மட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
மாநில கவுரவ தலைவர் எம்.பி.ராமன் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் பாரூக், தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க மாநில தலைவர் பழனியப்பன், மாநில அமை்பபு செயலாளர் ஸ்ரீதர், நெல்லை மாவட்ட நிர்வாகி செல்லதுரை, மதுரை ஆதிமூலம் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
பின்னர் பி.ஆர்.பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது:-
மத்திய அரசு ஆட்சிப்பொறுப்பேற்ற போது, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு இரட்டிப்பு லாபம் தருவதாக கூறினார்கள். அதனை நிறைவேற்றவில்லை. அதைத்தொடர்ந்து டெல்லியில் விவசாயிகள் குறைந்தபட்ச ஆதார விலை கேட்டு ஓராண்டு காலம் போராட்டம் நடத்தினார்கள்.
அப்போது பிரதமர் நரேந்திர மோடி குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்க குழு அமைப்பதாக உறுதி அளித்தார். ஆனால் போராட்டம் திரும்பப்பெறப்பட்டு ஓராண்டு காலம் நிறைவு பெற்ற பின்னரும், ஆதார விலை கொடுப்பதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில் பிப்ரவரி மாதம் 1-ந்தேதி பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது.
இதில் விவசாயிகளின் விளை பொருட்களுக்கு இரட்டிப்பு விலை வழங்கவும், குறைந்தபட்ச ஆதார விலை வழங்கவும் நடவடிக்கை எடுக்க அறிவிப்பு வெளியிட வேண்டும். இல்லையெனில் வருகிற மார்ச் 1-ந்தேதி குமரி முதல் டெல்லி வரை மேற்கண்ட அமைப்பு சார்பில் நீதி கேட்டு வாகன பயணம் மேற்கொள்வோம். இந்த பயணத்தின்போது செல்லும் வழியில் 12 மாநில முதல்வர்களை சந்திக்க இருக்கிறோம்.
இந்த போராட்டத்திற்கு தமிழக முதல்-அமைச்சர் உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரவு அளிக்க வேண்டும். அதேபோன்று தமிழக முதல்-அமைச்சர் கடந்த 2021 தேர்தல் அறிக்கையின்போது, நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2500 வழங்குவதாக வாக்குறுதி அளித்தார். தற்போது 3-வது பருவ சம்பா கொள்முதல் தொடங்கி விட்டது.
தற்போதைய விலைவாசிக்கு ஏற்ப குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3 ஆயிரம் வழங்கவேண்டும். கலைஞர் ஆட்சியின் கொள்கைக்கு மாறாக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற மறுப்பது தமிழக அரசு விவசாயிகளுக்கு செய்யும் துரோகம்.
திருப்புவனம் ஆரூண் சர்க்கரை ஆலையில் 2015 முதல் 2018 வரை விவசாயிகளுக்கு கரும்பு நிலுவைத்தொகையினை வழங்கவில்லை. அதேபோல் 13 ஆயிரம் விவசாயிகளின் பேரில் அந்த சர்க்கரை ஆலை நிர்வாகம் ரூ.300 கோடி வங்கிகளில் கடன் பெற்று, அதனால் விவசாயிகள் வங்கிகளின் நடவடிக்கைகளுக்கு ஆளாகி இருக்கிறார்கள். இதனை கண்டித்து நாங்கள் போராட்டம் நடத்தியபோது, அன்றைய எதிர்க்கட்சி தலைவரும், தற்போதைய முதல்வருமான மு.க.ஸ்டாலின் ஆதரவளித்தார்.
மேலும் அந்த ஆலை அரசுடமையாக்கப்படும் என்றும் வாக்குறுதி அளித்தார். ஆனால் இன்று மற்றொரு நபருக்கு அந்த ஆலை கைமாறியிருப்பதாக சொல்கிறார்கள். ஆலைக்கு எதிராக போராடக்கூடிய விவசாயிகளுக்கு எதிராக தமிழக அரசு வழக்கு தொடுக்கிறது.
தமிழக காவல் துறையினர் ஆலைக்கு பாதுகாப்பு அளிக்கிறார்கள். இதுவும் தமிழக விவாசயிகளுக்கான துரோகமாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உடனடியாக பொங்கல் தொகுப்பில் கரும்பு இடம்பெற செய்ய வேண்டும்.
- திருமண்டக்குடி சர்க்கரை ஆலையை வாங்கிய நிர்வாகம் விவசாயிகளை மிரட்டி வருகிறது.
தஞ்சாவூர்:
தஞ்சையில் இன்று தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் அன்றாடம் ஒரு சட்டம், புதிய கொள்கை வகுக்கப்பட்டு வருகிறது. அவைகள் விவசாயிகள், ஏழை எளிய மக்களுக்கு எதிரானதாகவே உள்ளது. தற்போது புதிய அறிவிப்பாக பொது விநியோகத் திட்டத்தில் அங்காடி மூலம் செறிவூட்டப்பட்ட அரிசி விற்பனை செய்யப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார். இதனை வன்மையாக கண்டிக்கிறேன்.
பாரம்பரிய அரிசியின் பெருமைகள் குறித்து பிரதமர் மோடி, இங்கிலாந்து பிரதமர் உள்ளிட்ட பலர் கூறியுள்ள நிலையில் தற்போது தமிழகத்தில் செறிவூட்டப்பட்ட அரிசி விற்பனை செய்யப்படும் என்ற அறிவிப்பால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். கார்ப்பரேட்டுக்கு ஆதரவாக தி.மு.க அரசு செயல்படுகிறதோ என அச்சம் எழுகிறது. உடனடியாக இந்த அறிவிப்பை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும். இதனை வலியுறுத்தி மூத்த வேளாண் விஞ்ஞானிகள், விவசாயிகளுடன் இணைந்து போராட்டம் நடத்துவோம்.
பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு இடம் பெறாதது வேதனை அளிக்கிறது. இதனால் கரும்பு விவசாயிகள் பரிதவிப்பில் உள்ளனர். ஓராண்டுக்கு முன்பே அரசை நம்பி கடன் வாங்கி கரும்பு பயிரிட்ட விவசாயிகள் அதனை என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கின்றனர். உடனடியாக பொங்கல் தொகுப்பில் கரும்பு இடம்பெற செய்ய வேண்டும். இதனை வலியுறுத்தி ஒத்த கருத்துள்ள விவசாயிகளை அழைத்து போராட்டம் நடத்த தயங்கமாட்டோம்.
தஞ்சை மாவட்டம் திருமண்டக்குடி சர்க்கரை ஆலைக்கு எதிராக விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். உடனடியாக விவசாயிகள் கோரிக்கைகளை நிறைவேற்றி அந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும். தற்போது திருமண்டக்குடி சர்க்கரை ஆலையை வாங்கிய நிர்வாகம் விவசாயிகளை மிரட்டி வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
கல்லணை கட்டுமானத்துக்காக சிறந்த விருது வழங்கப்பட்டுள்ளதை பாராட்டுகிறோம். அதே வேளையில் கல்லணைக்கு யுனெஸ்கோ விருது வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- தமிழக அரசு மத்திய அரசிடம் தெரிவித்து மயிலாடுதுறை மாவட்டத்தை பேரிடர் பாதிப்பு மாவட்டமாக அறிவிக்க வேண்டும்.
- பயிர் காப்பீட்டு திட்டத்தில் இழப்பீடு 100 சதவீதம் கிடைப்பதற்கு ஆவன செய்ய வேண்டும்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை அருகே தரங்கம்பாடி தாலுக்கா கீழையூர் கிராமத்தில் அய்யாவையனாற்றில் தண்ணீர் வடியாமல் பாதிக்கப்பட்ட சம்பா பயிர்களை தழிழ்நாடு விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்து விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் 6 மணி நேரத்தில் 44 சென்டிமீட்டர் மழை கொட்டி தீர்த்துள்ளது.
இதனால் மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டிருந்த சம்பா பயிர்கள் அழுகி துர்நாற்றம் வீச தொடங்கி உள்ளது.
அதனால் தமிழக அரசு மத்திய அரசிடம் தெரிவித்து மயிலாடுதுறை மாவட்டத்தை பேரிடர் பாதிப்பு மாவட்டமாக அறிவிக்க வேண்டும். அத்துடன் பயிர் காப்பீட்டு திட்டத்தில் இழப்பீடு 100 சதவீதம் கிடைப்பதற்கு ஆவன செய்ய வேண்டும். காப்பீடு திட்டத்தில் விவசாயிகள் பயன்பெறும் நிலையில்லாமல் காப்பீட்டு நிறுவனங்கள் பலன் தரும் வகையில் சட்ட திட்டங்கள் இருப்பதை மாற்றி அமைக்க வேண்டும்.
2020-21 ம் ஆண்டில் பயிர் காப்பீடு திட்டத்தில் ஹெக்டருக்கு ரூ.20,000 நிவாரணம் வழங்கப்பட்டது. ஆனால் தற்போது அது ரூ.13,000 ஆக குறைக்கப்பட்டுள்ளது. தற்போது மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஹெக்டருக்கு ரூ.30,000 மானியம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன், மன்னார்குடியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மேகதாதுவில் கர்நாடக அரசு அணைக்கட்ட தாக்கல் செய்துள்ள வரைவு திட்ட அறிக்கைக்கு உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளதை வரவேற்கிறோம். அதேநேரம் பிரதமர் மோடியை மதுரையில் சந்திக்க உள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தமிழகம் சார்பில் கண்டனத்தை நேரிலும், கடிதம் மூலமும் தெரிவிக்க வேண்டும்.
கோதாவரி-காவிரி இணைப்பு என்று கூறி, காவிரி பாசனத்தை அழிக்க மத்திய மந்திரி நிதின்கட்கரி சதி செயலில் ஈடுபடுகிறார். இதனை வன்மையாக கண்டிக்கிறோம். 2017-18-ம் ஆண்டு பயிர்க்காப்பீடு செய்த விவசாயிகளுக்கு உடனே இழப்பீடு தொகை வழங்க வேண்டும்.
நாகை மாவட்டத்தில் போலீசார் அனுமதித்த இடங்களில் தான் அவர்களின் முழு பாதுகாப்போடு போக்குவரத்து பாதிப்பின்றி ஹைட்ரோ கார்பன் எரிவாயு எதிர்ப்பு பிரசாரம் செய்தோம். இந்த நிலையில் வேதாரண்யம் பகுதிகளில் 4 போலீஸ் நிலையங்களில் என் மீது வழக்கு தொடர்ந்திருப்பது கேலிக்கூத்தானது. மத்திய அரசின் நெருக்கடியால் வழக்கு போடப்பட்டதா? அல்லது தமிழக அரசே ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ஆதரிக்கிறதா? என்பதை முதல்-அமைச்சர் தெளிவுப்படுத்த வேண்டும்.
நாளை குடியரசு தினத்தன்று திருவாரூர் மாவட்டம் திருக்காரவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்க உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார். #PRPandian #TNGovt
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்