என் மலர்
நீங்கள் தேடியது "Prabhakaran"
- தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல்நலக்கோளாறால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வரும் நிலையில் அவரது மனைவி பிரேமலதாவே கட்சியை தொடர்ந்து வழி நடத்தி வருகிறார்.
- விஜயகாந்தின் மகனான விஜய பிரபாகரன் எந்த பொறுப்பும் இல்லாமல் கட்சியில் பணியாற்றி வருகிறார்.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் இப்போதே ஆயத்தமாகி வருகின்றன.
அந்த வகையில் தே.மு.தி.க.வும் பாராளுமன்ற தேர்தலை மனதில் வைத்து தீவிரமாக செயல்பட்டு வருகிறது. கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து கடைசி நேரத்தில் வெளியேறிய தே.மு.தி.க. தினகரனின் அ.ம.மு.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு தோல்வியை தழுவியது.
தேர்தல் களத்தில் தொடர்ந்து தோல்வியையே சந்தித்து வரும் தே.மு.தி.க. பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதற்கேற்ப முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு தே.மு.தி.க. தள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆலோசனை நடத்த தே.மு.தி.க. பொதுக்குழு, செயற்குழு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இந்த கூட்டத்துக்கான தேதி பொங்கலுக்கு பிறகு அறிவிக்கப்பட உள்ளது. இந்த மாத இறுதியில் அல்லது பிப்ரவரி மாத தொடக்கத்தில் தே.மு.தி.க. செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான தேதியை தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் அடுத்த வாரம் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதை தொடர்ந்து இந்த கூட்டத்துக்கான ஏற்பாடுகளை தே.மு.தி.க. மாநில நிர்வாகிகள் இப்போதே மேற்கொண்டு வருகிறார்கள்.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல்நலக்கோளாறால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வரும் நிலையில் அவரது மனைவி பிரேமலதாவே கட்சியை தொடர்ந்து வழி நடத்தி வருகிறார். தற்போது பொருளாளராக பதவி வகித்து வரும் பிரேமலதாவுக்கு கட்சியில் முக்கிய பொறுப்பை வழங்க வேண்டும் என்று நிர்வாகிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். இதையொட்டி தே.மு.தி.க.வில் செயல் தலைவர் பதவி என்கிற புதிய பதவி உருவாக்கப்பட்டு அதில் பிரேமலதா நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விஜயகாந்தின் மகனான விஜய பிரபாகரன் எந்த பொறுப்பும் இல்லாமல் கட்சியில் பணியாற்றி வருகிறார். அவரை இளைய கேப்டன் என கட்சியினர் அழைத்து வருகிறார்கள். தே.மு.தி.க.வில் இளைஞர் அணியில் விஜயபிரபாகரனுக்கு முக்கிய பதவியை வழங்குவது பற்றியும் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது.
அதே நேரத்தில் பாராளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது தொடர்பாகவும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து ஏற்கனவே வெளியேறிவிட்ட தே.மு.தி.க. பாராளுமன்ற தேர்தலில் எந்த மாதிரியான முடிவை எடுக்கப்போகிறது என்பதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
அந்த கட்சி தி.மு.க. கூட்டணியில் சேர்ந்து பாராளுமன்ற தேர்தலை சந்திக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
- எந்த சூழ்நிலையிலும் நாட்டை விட்டு போகமாட்டேன் என்று வீரமாக சண்டை புரிந்தவர் எங்கள் அண்ணன்.
- 15 ஆண்டுகள் ஒரு இடத்தில் பதுங்கி பேசாமல் இருப்பார் என் அண்ணா என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
ஈரோடு:
விடுதலை புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக நெடுமாறன் கூறிய தகவல் பற்றி சீமான் கூறியதாவது:
என்னிடம் பதில் இல்லை, சில கேள்விகள் தான் இருக்கிறது. என் தம்பி பாலசந்திரனை பலி கொடுத்துவிட்டு என் அண்ணன் பத்திரமாக தப்பி சென்றிருப்பார் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? எந்த சூழ்நிலையிலும் இந்த நாட்டை விட்டு போக மாட்டேன் என்று வீரமாக சண்டை புரிந்தவர் எங்கள் அண்ணன். தன் உயிரை மட்டும் தற்காத்துக் கொண்டு தப்பி செல்லும் கோழை என்று நினைக்கிறீர்களா? போர் புரிந்து ஒரு பெரிய பேரழிவை சந்தித்துள்ளோம் 15 ஆண்டுகள் பத்திரமாக ஒரு இடத்தில் பதுங்கி பேசாமல் இருப்பார் என் அண்ணா என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
சொல்லிவிட்டு வருபவர் அல்ல எங்கள் அண்ணன் வந்துவிட்டு தான் சொல்லுவார். அதுதான் அவரின் பழக்கம். தேவையில்லாமல் குழம்ப வேண்டாம். அவர்கள் கூறியது போல் ஒரு நாள் மக்கள் முன் தோன்றுவார் என்று கூறியதுபோல் தோன்றும்போது தோன்றட்டும். ஐயா பெரியாரிடம் கடவுள் இல்லை இல்லை என்று சொல்லி கொண்டிருக்கிறீர்களே திடீர் என்று கடவுள் நேரில் வந்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்பவருக்கு அவர் அன்றுமுதல் கடவுள் இருக்கிறார் என்று சொல்லுவோம் என்றார்.
அதுபோல் ஐயா நெடுமாறன் கூறியவாறு எங்கள் அண்ணன் நேரில் வந்துவிட்டால், இதை பற்றி வந்தவுடன் பேசுவோம். இவ்வாறு அவர் கூறினார்.
- தவறான தகவல்களை வெளியிடுகின்றார்கள்.
- எங்களுக்கு எந்தவித எச்சரிக்கை உணர்வையும் ஏற்படுத்தவில்லை.
விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் நலமுடன் இருப்பதாக பழ நெடுமாறன் கூறிய தகவலை இலங்கை ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் மறுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இறுதிக்கட்ட போரில் கொல்லப்பட்டுவிட்டதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது. 2009ஆம் ஆண்டு நடந்த இறுதிக்கட்ட போரில் பிரபாகரன் கொல்லப்பட்டார். டி.என்.ஏ ஆதாரங்களையும் நாங்கள் எடுத்துள்ளோம். 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் தேதி இறுதிக்கட்ட போரில் அவர் கொல்லப்பட்டார். தவறான தகவல்களை அவர்கள் வெளியிடுகின்றார்கள். இது எங்களுக்கு எந்தவித எச்சரிக்கை உணர்வையும் ஏற்படுத்தவில்லை. ஏனெனில் எங்களுக்கு அவர் கொல்லப்பட்டுவிட்டார் என்பது தெளிவாகத் தெரியும், அதில் சந்தேகமே இல்லை என்று தெரிவித்தார்.
- விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் 2009-ம் ஆண்டு நடந்த இறுதிக்கட்ட போரில் கொல்லப்பட்டுவிட்டார்.
- பிரபாகரன் மரபணு பரிசோதனை ஆதாரங்களை நாங்கள் வைத்துள்ளோம்.
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக பழ.நெடுமாறன் தெரிவித்தார்.
இந்நிலையில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் விவகாரம் தொடர்பாக இலங்கையை நோக்கி, குறிப்பாக அந்த நாட்டு ராணுவத்திடம் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து இந்த தகவலை இலங்கை ராணுவம் மறுத்து உள்ளது. இது தொடர்பாக இலங்கை ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் நளின் ஹேரத் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு தெரிவித்ததாவது:-
விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் 2009-ம் ஆண்டு நடந்த இறுதிக்கட்ட போரில் கொல்லப்பட்டுவிட்டார். அதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன.
அவரது மரபணு பரிசோதனை ஆதாரங்களையும் நாங்கள் வைத்துள்ளோம். 2009-ம் ஆண்டு மே மாதம் அவர் கொல்லப்பட்டதற்கான அனைத்து ஆதாரங்களும் எங்களிடம் உள்ளன.
எனவே அவர் உயிருடன் இருப்பதாக கூறப்படும் தகவல்கள் அனைத்தும் தவறானவை.
இந்த தகவல் எங்களுக்கு எந்தவித எச்சரிக்கை உணர்வையும் ஏற்படுத்தவில்லை. ஏனெனில் அவர் கொல்லப்பட்டுவிட்டார் என்பது எங்களுக்கு தெளிவாக தெரியும். அதில் சந்தேகமே இல்லை.
இவ்வாறு ராணுவ செய்தி தொடர்பாளர் ரவி ஹேரத் கூறினார்.
- பிரபாகரன் குறித்து வெளியிட்ட தகவல் தொடர்பாக நெடுமாறன் மற்றும் அவரது ஆதரவாளர்களிடம் விசாரணை நடத்தவும் உளவுப் பிரிவினர் முடிவு செய்துள்ளனர்.
- நெடுமாறன் மற்றும் அவரது தொடர்புடையவர்களின் நடமாட்டம் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
சென்னை:
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உயிருடன் உள்ளார் என்று பழ.நெடுமாறன் நேற்று தெரிவித்தார். அவரது இந்த கருத்துக்கு இலங்கை ராணுவம் உடனடியாக மறுப்பு தெரிவித்தது.
இது ஒருபுறம் இருக்க, நெடுமாறனின் இந்த கருத்தை முழுமையாக புறந்தள்ளிவிட முடியாது என்பதால், பிரபாகரன் பற்றிய தகவல்களை மீண்டும் திரட்ட மத்திய உளவு பிரிவினர் உத்தரவிட்டுள்ளனர்.
பிரபாகரன் தொடர்பான தகவல்களை தமிழக கியூ பிரிவு போலீசாரும் திரட்டத் தொடங்கியுள்ளனர். தமிழக காவல்துறையின் உளவுப் பிரிவு கூடுதல் டி.ஜி.பி. டேவிட்சன் தேவாசீர்வாதம். அப்பிரிவு ஐ.ஜி.செந்தில்வேலன், கியூ பிரிவு எஸ்.பி.கண்ணம்மாள் தலைமையிலான போலீசார் மீண்டும் விசாரணையில் இறங்கியுள்ளனர். பிரபாகரன் மரணமடைந்ததாக ஏற்கனவே திரட்டப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் மீண்டும் கையிலெடுக்கப்பட்டு புலனாய்வு நடத்தப்பட்டு வருகிறது.
பிரபாகரன் குறித்து வெளியிட்ட தகவல் தொடர்பாக நெடுமாறன் மற்றும் அவரது ஆதரவாளர்களிடம் விசாரணை நடத்தவும் உளவுப் பிரிவினர் முடிவு செய்துள்ளனர். நெடுமாறன் மற்றும் அவரது தொடர்புடையவர்களின் நடமாட்டம் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
- விடுதலைப்புலிகள் யாரும் தங்கள் சீருடையில் பெயரை குறிப்பிட்டிருக்க மாட்டார்கள். அந்த பழக்கம் அவர்களிடம் இல்லை.
- இலங்கை ராணுவம் காட்டிய பிரபாகரன் உடலில் இருந்த சீருடையில் அவரது பெயர் இருந்தது.
சென்னை:
தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர் திருச்சி வேலுச்சாமி யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
நந்தி கடலில் மரணம் அடைந்து இரவு முழுவதும் சடலமாக பிரபாகரன் மிதந்ததாக இலங்கை அரசு கூறுகிறது. அப்படி மிதந்திருந்தால் அந்த சடலத்தின் கண்கள் மீன்களால் சிதைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அந்த சடலத்தின் கண்கள் திறந்த நிலையில் தெளிவாக இருந்தன. இது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
விடுதலைப்புலிகள் யாரும் தங்கள் சீருடையில் பெயரை குறிப்பிட்டிருக்க மாட்டார்கள். அந்த பழக்கம் அவர்களிடம் இல்லை. ஆனால் இலங்கை ராணுவம் காட்டிய பிரபாகரன் உடலில் இருந்த சீருடையில் அவரது பெயர் இருந்தது. அதனால் அது பிரபாகரனே இல்லை. அந்த ஏற்பாட்டை செய்தவர்கள் ஏதோ நோக்கத்துக்காக செய்துள்ளனர்.
பிரபாகரன் உயிருடன் தான் இருக்கிறார். அவர் உயிரோடு ஆஸ்திரேலியாவில் தான் இருக்கிறார்.
இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார்.
- பிரபாகரன் மரணம் தொடர்பாக சில கேள்விகள் தொடர்ந்து நிலவுகிறது.
- பழ.நெடுமாறன் அறிவிப்பின் பின்னணியில் உள்ள அரசியலை கண்டு பிடிக்கும் முயற்சிகளில் உளவுத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை:
விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்று உலக தமிழர் பேரவை தலைவர் பழ.நெடுமாறன் இதற்கு முன்பு பல தடவை சொல்லி இருக்கிறார். ஆனால் அப்போதெல்லாம் அதை யாரும் கண்டு கொண்டதில்லை.
நேற்று அவர் தஞ்சையில் பிரபாகரன் பற்றிய உண்மைகள் என்ற தலைப்பில் வெளியிட்ட அறிக்கையும், அவரது பேட்டியும் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்று பழ. நெடுமாறன் அறிவித்த போதிலும் அதற்கான எந்த ஆதாரத்தையும் வெளியிடவில்லை.
இதன் காரணமாக உலக தமிழர்கள் மத்தியில் பிரபாகரன் மரணம் பற்றிய சந்தேகங்கள் தொடர்ந்து நீடித்தபடியே உள்ளது. பழ.நெடுமாறன் அறிவிப்புக்கு கருத்து தெரிவித்த தமிழக அரசியல் தலைவர்கள், 'பிரபாகரன் உயிரோடு இருந்தால் மகிழ்ச்சி' என்று மட்டுமே பதில் அளித்து இருக்கிறார்கள். அவர்களது இந்த பதில் மூலம் 99 சதவீத தமிழக அரசியல்வாதிகள் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்பதை நம்பவில்லை என்று தெரிய வந்துள்ளது.
பழ.நெடுமாறன் அளவுக்கு இல்லாவிட்டாலும் விடுதலை புலிகள் அமைப்பின் மூத்த தலைவர்கள் இடையே வைகோவுக்கும் நல்ல தொடர்பு உண்டு. ஆனால் அவர் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்பதை இதுவரை ஏற்கவில்லை.
பிரபாகரனுக்கு நிழலாக இருந்தவர்கள் மூலம் தனக்கு கிடைத்த தகவல்களின்படி பிரபாகரன் உயிருடன் இல்லை என்றே வைகோ பல தடவை உணர்த்தி உள்ளார். நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானும் இதே நிலைப்பாட்டில்தான் காணப்படுகிறார்.
இந்த நிலையில் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்று பழ.நெடுமாறன் மீண்டும் சொல்லி இருப்பதற்கு வேறு ஏதேனும் பின்னணி காரணம் இருக்கும் என்று உளவு அமைப்புகள் கருதுகின்றன. இலங்கையில் தமிழர்களுக்கு சம உரிமையை பெற்று கொடுக்கும் முயற்சிகளில் இந்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
இதற்காக இலங்கை பாராளுமன்றத்தில் 13-வது சட்ட திருத்தத்தை நடைமுறைக்கு கொண்டுவர இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். சிங்களத் தலைவர்களும் 13-வது சட்டத் திருத்தத்துக்கு ஆதரவாக மாறிக் கொண்டிருக்கிறார்கள்.
இலங்கையில் சீனா பல்வேறு வகைகளிலும் காலடி எடுத்து வைத்துள்ள நிலையில் அங்கு ஈழத் தமிழர்களுக்கு அதிக அதிகாரம் வழங்கினால்தான் இந்தியாவுக்கு பாதுகாப்பாக இருக்கும் என்று மத்திய அரசு கருதுகின்றது. இதன் காரணமாக பிரதமர் மோடி எடுத்துள்ள நடவடிக்கைகள் பலன் அளிக்க தொடங்கியுள்ளன.
குறிப்பாக ஈழத் தமிழர்கள் கடந்த சில மாதங்களாக இந்தியாவின் பலனை பெற தொடங்கி இருக்கிறார்கள். இது உலக தமிழர்கள் மத்தியில் பிரதமர் மோடிக்கு நல்ல பெயரை ஏற்படுத்தி உள்ளது. இது பிடிக்காமல் தான் பழ.நெடுமாறன் திடீரென இந்த விவகாரத்தை கையில் எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளாகவே பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்பதை பரபரப்பாக மாற்ற விடுதலை புலிகள் அமைப்பின் மூத்த தலைவர்கள் பலர் தொடர்ந்து முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். வெளி நாடுகளில் வாழும் அவர்கள் இதற்காக நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானை அணுகியது உண்டு.
ஆனால் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்பதை உறுதிபடுத்தினால் மட்டுமே தன்னால் பொது வெளியில் அப்படி அறிவிக்க முடியும் என்று சீமான் ஒவ்வொரு முறையும் மறுத்துவிட்டார். இதையடுத்து பழ.நெடுமாறன் மூலம் இந்த அறிவிப்பை விடுதலை புலிகளின் மூத்த தலைவர்கள் அறிவிக்க வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதற்கிடையே பிரபாகரன் மரணம் தொடர்பாக சில கேள்விகள் தொடர்ந்து நிலவுகிறது. 2009-ம் ஆண்டு மே மாதம் அவர் 18-ந் தேதி கொல்லப்பட்டாரா? அல்லது 19-ந் தேதி கொல்லப்பட்டாரா? என்பதில் சர்ச்சை நீடிக்கிறது. அதுபோல அவரது உடல் நந்திக்கடல் பகுதியில் இருந்து மீட்கப்பட்டதா? அல்லது நீர் நிலையில் இருந்து மீட்கப்பட்டதா? என்பதிலும் உரிய பதில் இல்லை.
என்றாலும் சர்வதேச அளவில் ராணுவ நிபுணர்கள் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்பதை ஏற்க மறுக்கிறார்கள். டி.என்.ஏ. பரிசோதனை உள்பட பல்வேறு தகவல்களை அவர்கள் இதற்கு ஆதாரமாக சொல்கிறார்கள். இலங்கை ராணுவம் திட்டவட்டமாக அறிவித்துள்ள நிலையில், இந்திய உளவு அமைப்புகளும் பிரபாகரன் உயிரோடு இல்லை என்றே சொல்லி வருகின்றன.
பழ.நெடுமாறன் அறிவிப்பின் பின்னணியில் உள்ள அரசியலை கண்டு பிடிக்கும் முயற்சிகளில் உளவுத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். மற்றொரு பக்கத்தில் பழ.நெடுமாறன் அறிவிப்பு காரணமாக இலங்கையில் உள்ள ஈழத்தமிழர்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
இலங்கையின் வடகிழக்கு பகுதிகளில் கடந்த சில மாதங்களாக ராணுவ நடவடிக்கைகளை இலங்கை அதிபர் ரனில் விக்கிரம சிங்கே குறைத்துள்ளார். இந்த நிலையில் பழ.நெடுமாறன் அறிவிப்பு காரணமாக ஈழத்தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் மீண்டும் கெடுபிடி ஏற்படலாம் என்ற தவிப்பு உலக தமிழ் மக்கள் மத்தியில் உருவாகி இருக்கிறது.
சர்ச்சைக்கு மத்தியில் ஈழத்தமிழர்கள் சங்கடங்களை அனுபவிக்க இந்த அறிவிப்பு காரணமாகி விடலாம் என்று அரசியல் நிபுணர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
- விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன், முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர், நான் என மூவரும் ஒரே இடத்தில் உணவு உண்ணும் அளவிற்கு எங்களிடம் நெருக்கம் இருந்தது.
- எதிர்க்கட்சியோ, ஆளும் கட்சியோ நாகரிகமாக பேச கற்றுக்கொள்ள வேண்டும்.
ஈரோடு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து பிரச்சாரம் செய்ய வந்த திருநாவுக்கரசர் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன், முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர், நான் என மூவரும் ஒரே இடத்தில் உணவு உண்ணும் அளவிற்கு எங்களிடம் நெருக்கம் இருந்தது. அதனால் எனக்கு கிடைத்த தகவலின்படி பிரபாகரன் உயிருடன் இல்லை. அரசியலில் நாகரிகமான விமர்சனம் செய்ய வேண்டும்.
எதிர்க்கட்சியோ, ஆளும் கட்சியோ நாகரிகமாக பேச கற்றுக்கொள்ள வேண்டும். எந்த ஆளும் கட்சியாக இருந்தாலும், ஒரு சில குறைபாடு இருக்கத்தான் செய்யும். குறைபாடுகளே இல்லாத ஆளுங்கட்சி என்று எதையும் கூற முடியாது. தமிழகத்தில், திமுக ஆட்சி மிகச் சிறப்பாக உள்ளது பல்வேறு நலத்திட்டங்கள், வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஈரோடு கிழக்கு தொகுதியில் மிகச் சிறப்பாக பணிபுரிந்து வந்த திருமகன் ஈ.வெ.ரா மறைவு அவரது குடும்பத்திற்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த தொகுதி மக்களுக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருமகன் விட்டுச் சென்ற பணிகளை இளங்கோவன் தொடர்வார். அவரது வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
- மரபணு சோதனை செய்ய வேண்டும் என்றால் பிரபாகரனின் ரத்தத்துடன், அவருடைய அப்பா, அம்மா அல்லது குழந்தைகள், உடன் பிறந்தவர்களின் ரத்தத்தையும் ஒப்பிட்டு சோதனை செய்ய வேண்டும்.
- பிரபாகரனின் பெற்றோர்களிடம் சோதனை செய்ததாக தெரியவில்லை.
உலக தமிழர் பேரியக்க தலைவர் பழநெடுமாறன் தனியார் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-
பிரபாகரன் இறந்துவிட்டதாக கூறுவது இது முதல் தடவை அல்ல. ஏராளமான தடவை சிங்கள அரசும், சிங்கள ராணுவமும் அறிவித்திருக்கிறது. 1984, 1989, 2004, 2007-ம் ஆண்டுகளிலும் இவ்வாறு அறிவித்தது.
உலகம் பூராவும் வாழும் தமிழர்களின் நம்பிக்கையை குலைக்க வேண்டும். அவர்கள் மத்தியில் அவநம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இப்படி திட்டமிட்டு பொய் பிரசாரம் செய்கிறார்கள்.
2009-ல் முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற இறுதிக்கட்ட போராட்டத்தில் பிரபாகரன் இறந்துவிட்டார் என்ற செய்தியை அறிவித்ததில் முன்னுக்குப்பின் முரணாக இருப்பதால் குழப்பம் உள்ளது. 2009-மே மாதம் 17-ந்தேதி அன்று முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற இறுதிக்கட்ட போராட்டத்தில் பிரபாகரனும், முக்கிய தலைவர்களும் இறந்துவிட்டதாக சிங்கள ராணுவம் அறிவித்தது.
அவருடைய உடல் போன்று ஒரு உடல் கிடைத்திருக்கிறது. அந்த உடலை நாங்கள் பரிசோதனைக்கு அனுப்பி இருக்கிறோம். பரிசோதனை முடிவில் முடிவு அறிவிக்கப்படும் என்று ராணுவ அதிகாரி ஒருவர் ராய்ட்டர் செய்தி நிறுவனத்துக்கு பேட்டி கொடுத்தார். ஆனால் உடனடியாக இலங்கை அரசின் பாதுகாப்பு துறையின் செய்தித்தொடர்பாளர் அதை மறுத்துவிட்டார். முதல் நாளில் மறுத்த அவரே மறுநாள் இறந்துவிட்டதாக அறிவித்தார்.
மே 18 முள்ளிவாய்க்காலுக்கு சென்றபோது ஒரு ஆம்புலன்ஸ் விரைந்து சென்றது. அதை நாங்கள் சூழ்ந்துகொண்டு சுட்டோம். அவர்களும் பதிலுக்கு சுட்டார்கள். சிறிது நேரத்தில் ஆம்புலன்சில் இருந்து குண்டுகள் பாயவில்லை அமைதியாயிற்று அதற்கு பிறகு சோதனை போட்டபோது அதில் பிரபாகரனின் உடலும், பொட்டு அம்மனின் உடலும் கிடைத்தது என்று அறிவித்தார்கள்.
அந்த 2 உடலும் மரபணு சோதனைக்காக அனுப்பி இருக்கிறோம் என்று சொன்னார்கள். இப்படி காலை 11 மணிக்கு அறிவித்தார்கள். 12.15 மணிக்கு அது பிரபாகரனின் உடல் தான் என்பது மரபணு சோதனையில் நிரூபிக்கப்பட்டுள்ளது என்று சிங்கள ராணுவத்தின் தளபதியான பொன்சேகா அறிவித்தார். பிரபாகரனின் உடல் போன்ற ஒரு உடலின் படத்தையும், உடனே பத்திரிகை துறைகளுக்கும், தொலைக்காட்சிக்கும் வழங்கினார்கள்.
அப்போது சென்னையில் அரசாங்கத்தின் தடயவியல் துறையில் இருந்த டாக்டர் சந்திரசேகரன் என்பவர் பத்திரிகைகளுக்கு ஒரு தகவலை தெரிவித்தார். அவர் தான் ராஜீவ் குண்டு வெடிப்பில் இறந்தபோது சோதனை செய்து அறிவித்தவர். அவர் கூறும்போது, 'பிரபாகரனின் மரபணு மாதிரிகள் ஏற்கனவே சிங்கள ராணுவத்திடம் இருந்தாலும் உடனடியாக ஒரு மணி நேரத்தில் சோதனை செய்து அறிக்கை கொடுக்க முடியாது.
மரபணு சோதனை செய்ய வேண்டும் என்றால் குறைந்தது 4 நாட்கள் தேவைப்படும். ஒரு மணிநேரத்தில் அறிவித்தது சந்தேகத்தை அளிக்கிறது. மரபணு சோதனை செய்ய வேண்டும் என்றால் பிரபாகரனின் ரத்தத்துடன், அவருடைய அப்பா, அம்மா அல்லது குழந்தைகள், உடன் பிறந்தவர்களின் ரத்தத்தையும் ஒப்பிட்டு சோதனை செய்ய வேண்டும். ஆனால் பிரபாகரனின் பெற்றோர்களிடம் சோதனை செய்ததாக தெரியவில்லை.
பிரபாகரனுக்கு அப்போது 54 வயது. அவரது முகத்தில் சுருக்கங்கள் உண்டு. ஆனால் அவர்கள் காட்டிய முகத்தில் சுருக்கங்கள் இல்லை. இதுவே சந்தேகத்தை ஏற்படுத்தியது. உடல் கிடைத்தால் 1¼ மணிநேரத்தில் மரபணு சோதனை செய்ததாக சொல்வது அறிவியலை கொச்சைப்படுத்துவது என்றும் கூறினார்.
விடுதலை புலிகள் மரபுப்படி அவர்கள் சுற்றிவளைக்கப்பட்டால் உடனடியாக சயனைடு குப்பியை கடித்துவிடுவார்கள். கழுத்தில் சயனைடு குப்பி எப்போதும் இருக்கும். பிரபாகரன் சயனைடு குப்பியை கடித்தாரா என்பதற்கான குடல் சோதனை எதுவுமே நடத்தப்படவில்லை. அவர் கழுத்திலும் சயனைடு குப்பி எதுவும் இல்லை.
பிரபாகரனின் உடல் தான் என்று அவர்களுக்கு தெரிய வந்தவுடன் அவர்கள் என்ன செய்திருக்க வேண்டும், அந்த உடலை உடனடியாக கொழும்புவுக்கு கொண்டுபோய் சிங்கள மக்கள் பார்வைக்கு மட்டுமல்ல அங்குள்ள வெளிநாட்டு தூதர்கள் எல்லோரையும் அழைத்து, சர்வதேச பத்திரிகையாளர்களை அழைத்து அவர்கள் காட்டி இருக்க வேண்டும்.
ஏனென்றால் சிங்கள ராணுவத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி அது. சிங்கள மக்களுக்கு வெற்றிக்களிப்பையும், உற்சாகத்தையும் அளிக்கக்கூடிய வெற்றி. ஆனால் அவர்கள் என்ன செய்தார்கள்? பிரபாகரனின் உடல் கிடைத்தது. நாங்கள் உடனடியாக கடலில் வீசிவிட்டோம் என்று கூறினார்கள்.
வெற்றிபெற்றால் அவருடைய உடலை கொண்டு வந்து காண்பித்து மக்கள் நம்பும் படியாக அந்த செய்தி இருந்திருக்க வேண்டும். இப்போது அவர் உயிரோடு இருப்பதற்கு ஆதாரம் என்ன என்கிறார்கள்.
நான் அவர் இருக்கிறார் என்பதை மட்டும் தான் உறுதிப்படுத்தி இருக்கிறேன். அவர் எப்போது வருவார்? எப்போது அவர் தன்னுடையை மக்களுக்கு ஏதாவது அறிவிப்பார்.
அவருடைய முக்கிய தளபதிகள் பேசியதை வைத்து தான் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக நான் கூறினேன். இப்போது அவருடைய குடும்பத்தினரிடம் இருந்து எனக்கு கிடைத்த தகவல்களை வைத்து அதை உறுதி செய்திருக்கிறேன். என்னுடன் அவர் தொடர்பில் இல்லை. அவரது குடும்பத்தினர் தொடர்பில் இருக்கிறார்கள். இந்த உண்மையை கண்டறிவதற்காகத்தான் சிங்கள அரசும், இந்திய அரசின் உளவுத்துறையும் படாதபாடு படுகிறது.
அவர் நிச்சயம் வருவார். ஈழத்தமிழர்களுக்கு புதிய நம்பிக்கையை தருவார். அப்போது பல்வேறு குழுக்களாக இருப்பவர்கள் ஒன்றுபடுவார்கள். அவர்களுக்கு ஆதரவாக உலகம் முழுவதும் இருக்கக்கூடிய தமிழர்கள் ஒற்றுமை உணர்வோடு அணி திரள்வார்கள்.
விடுதலைப்புலிகள் வலிமையாக இருந்தவரை எந்த நாடும் இலங்கையில் கால்பதிக்க முடியவில்லை. இந்தியாவுக்கு எதிரான நாடுகளிடம் இருந்து பிரபாகரனும் எந்த உதவியையும் பெறுவதை தவிர்த்துவிட்டார். அவர்கள் இந்தியாவை நட்பு நாடாகத்தான் கருதினார்கள்.
ஈழத்தமிழர் பிரச்சினையும் இந்தியாவுக்கு சீனாவால் வரும் அபாயமும் ஒன்றோடு ஒன்று பின்னி பிணைந்தது. ஒன்றை தவிர்த்து இன்னொன்றை தீர்த்துவிட முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
- நான் எல்லோருக்கும் சொல்லும் கசப்பான உண்மை என்னவெனில் அண்ணன் உயிருடன் இல்லை என்பது தான்.
- அண்ணன் என்றால் யார் என்பது எல்லோருக்கும் தெரியும்.
சென்னை:
விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாகவும் அவர் உரிய நேரத்தில் வெளிப்படுவார் என்றும் உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் சமீபத்தில் அறிவித்தார். இது உலகம் முழுவதும் தமிழர்கள் மத்தியில் பேசு பொருளாக மாறி உள்ளது.
பிரபாகரன் உயிருடன் இருப்பதாக கூறப்பட்ட தகவலை இலங்கை ராணுவம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இறுதிக்கட்ட போரை நடத்திய இலங்கை ராணுவத்தின் முன்னாள் தளபதி சரத்பொன் சேகாவும் இதை மறுத்துள்ளார்.
தமிழக அரசியல் தலைவர்கள் இலங்கை தமிழர்களை வைத்து அரசியல் நடத்துவதாகவும் அவர் விமர்சித்தார்.
இந்நிலையில் 2009 மே 17 வரை இறுதிக்கட்ட போரில் பங்கேற்று சண்டையிட்ட வவுனியாவை சேர்ந்த போராளி அரவிந்தன் என்பவர் பி.பி.சி.க்கு அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது:-
உண்மை அறிவிப்பு என்ற பெயரில் பழ.நெடுமாறன் அவர்கள் கையெழுத்திட்டு ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது பற்றிய எனது கருத்தை பகிர்ந்து கொள்கிறேன்.
அண்ணன் அவர்கள் (பிரபாகரன்) இருக்கிறாரா? இல்லையா? என்று தொடர்ந்து பேசி 14-வது ஆண்டுக்கு வந்திருக்கிறோம். இந்த நேரத்தில் நான் எல்லோருக்கும் சொல்லும் கசப்பான உண்மை என்னவெனில் அண்ணன் உயிருடன் இல்லை என்பது தான். மேலதிகமான சில விசயங்களை எங்களால் பேச முடியாது.
இது பற்றி பேசக்கூடியவர்கள் இறுதிக்கட்ட போர் களத்தில் நின்றவர்களாகவோ அல்லது அண்ணனின் பாதுகாப்பு அணியில் இருந்தவர்களாகவோ இருந்து பதிலளிப்பதுதான் நன்றாக இருக்கும் என்பது எனது கருத்து.
போராளிகள் நாங்கள் இதை ஒரு சந்தேக கண்ணோட்டத்துடன் தான் பார்க்கிறோம். ஏனெனில் தற்போது இலங்கையில், போலீசுக்கு தனி அதிகாரம், 13-வது சட்ட திருத்தம் என்று தீர்வு திட்டத்தை தரப்போகும் நிலையில் அதை குழப்பி விடுவதற்கான ஒரு சிலரின் செயலாகத்தான் இதை பார்க்கிறோம்.
அதே நேரம் புலம்பெயர் தமிழர்களிடம் அண்ணன் விரைவில் வரப்போகிறார் என்று சொல்லி நிதி சேகரித்து வருவதாகவும் அறிகிறோம்.
இது தமிழர்களுக்கு மீண்டும் ஒரு தலைவர் வரக் கூடாது என்பதற்காக திட்ட மிடப்பட்ட இந்தியாவின் 'ரா'வின் (உளவு அமைப்பு) நிகழ்ச்சி திட்டமாகத்தான் பார்க்கிறோம். காரணம் அண்ணன் என்றால் யார் என்பது எல்லோருக்கும் தெரியும்.
நான் சண்டை களத்தில் அண்ணன் அருகில் இல்லை. ஆனால் மிக நெருங்கிய அளவில் நின்றே போரிட்டோம். எங்களோடு 800 போராளிகள் இருந்தார்கள்.
சண்டை களத்தில் இருந்து வீடு திரும்பியவர்களையும் அழைத்துதான் நாங்கள் சண்டையிட நேர்ந்தது. இதில் இருந்து எத்தனை பேர் தப்பினார்கள். இறந்து போனவர்களில் எத்தனை பேரின் வெற்றுடல்களை ராணுவத்தினர் எங்களிடம் அடையாளம் காட்டினார்கள்? எத்தனை உடல்களை எங்களிடம் காட்டி அடையாளம் காட்டும்படி கூறினார்கள் என்பதெல்லாம் எங்களுக்கு தெரியும்.
ஆகவே இதில் இருந்து தப்பி வெளிநாடு சென்றவர்களின் கருத்துக்கள்தான் முக்கியத்துவம் பெற வேண்டும். ஆனால் வெளிநாட்டு ராணுவமோ, அல்லது இந்தியாவில் இருந்து போலியாக வைக்கப்பட்டுள்ள இந்த மாதிரி கருத்துக்களோ தமிழ் மக்களுக்கு எந்த விதத்திலும் ஒரு தீர்வையோ தரப் போவது இல்லை.
இது தமிழ் மக்களுக்கு செய்யும் துரோகமாகவே பார்க்கிறோம். அண்ணனுடைய பாதுகாப்பில் நின்றவர்கள் எல்லோரும் வெடித்து சிதறி இறந்து போனார்கள். அவர்களது உடல் பாகங்களையும், அங்கங்களையும் கொண்டு வந்து அடையாளம் காட்டியிருந்தார்கள்.
அந்த சந்தர்ப்பத்தில் அண்ணன் அவர்கள் அவரது முடிவை அவரே தேடிக் கொண்டார் என்பதே என் கருத்து.
நான் நேரடியாக பார்க்காத சந்தர்ப்பத்தில் அதுபற்றி கருத்து கூற முடியாத நிலை உள்ளது. ஆனால் அங்கு என்ன நடந்தது என்பது எங்களுக்கு தெரியும். அதுபற்றிய கருத்து சொல்லக் கூடியவர்களாக போராளிகள் நாங்கள் இருக்கிறோம்.
காலத்துக்கு காலம் அண்ணன் வருவார் என்று சொல்வதும், அதை தொடர்ந்து நடைபெறும் விஷயங்களையும் பார்க்கும் போது தொட்டிலையும் ஆட்டிவிட்டு பிள்ளையையும் கிள்ளிவிடும் செயலாகத்தான் பார்க்கிறோம்.
அதே நேரம் தமிழினத்துக்கு மீண்டும் ஒரு தலைவர் வரக்கூடாது என்பதற்கான நிகழ்ச்சி திட்டமாக யாருக்கும் அது தேவையோ! அதற்காக இவர்கள் வேலை செய்கிறார்களோ என்று தான் இதை பார்க்கிறோம்.
அதே நேரம் ஈழ கனவுகளுக்காக போராடியவர்கள்-அவர்களுக்கு துணை நின்றவர்கள் தான் இந்தியாவில் இருந்து பேசினார்களா என்ற சந்தேகத்தை இன்று ஏற்படுத்தி இருக்கிறது. அவர்களது கடந்த கால நடவடிக்கைகள் அண்ணன் இல்லை என்பதை மட்டும் உறுதியாக கூறிக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- விஜயகாந்த் ஆரோக்கியமாக இருந்த வரை கட்சியும் ஆரோக்கியத்துடன் காணப்பட்டது.
- நடந்து முடிந்த ஈரோடு இடைத்தேர்தலில் தனித்து போட்டியிட்டு மிக மோசமான தோல்வியை தழுவியது.
சென்னை:
தமிழக அரசியல் களத்தில் விஜயகாந்தின் வருகையும் தொடர்ந்து ஏற்பட்ட எழுச்சியும் அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால் நடந்தது நேர்மாறாக அமைந்துவிட்டது.
திரை உலகில் தனக்கென தனி இடத்தை தக்க வைத்த விஜயகாந்த் அரசியலிலும் கருப்பு எம்.ஜி.ஆர். என்ற அறிமுகத்தோடு வந்தார்.
2005-ம் ஆண்டு தே.மு.தி.க.வை அவர் தொடங்கியதும் அவர் அறிவித்த திட்டங்கள் மக்கள் மத்தியில் பேசப்பட்டது. மாற்று அரசியலுக்கான துவக்கமாகவே மக்கள் எதிர்பார்த்தார்கள்.
2006-ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டார்கள். விருதாச்சலம் தொகுதியில் விஜயகாந்த் மட்டும் வெற்றி பெற்றார்.
அதேநேரம் குறிப்பிடத்தக்க வாக்கு வங்கி உருவானது. 2009 பாராளுமன்ற தேர்தலிலும் அனைத்து தொகுதியிலும் தே.மு.தி.க. தனித்து போட்டியிட்டது. ஆனால் எந்த தொகுதியிலும் வெற்றி பெறவில்லை.
அரசியல் களத்தை உணர்ந்த விஜயகாந்த் 2011 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்தார். அந்த தேர்தலில் 29 தொகுதிகளில் வெற்றி பெற்று விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவர் ஆனார். ஆனால் அ.தி.மு.க.வுடன் அமைக்கப்பட்ட கூட்டணி நீடிக்கவில்லை.
அடுத்து வந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து 14 தொகுதிகளில் போட்டியிட்டார். ஆனால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. அ.தி.மு.க. அனைத்து தொகுதிகளிலும் வென்றது.
அடுத்து வந்த சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க. தலைமையில் மக்கள் நல கூட்டணி உருவானது. விஜயகாந்த் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டார். ஆனாலும் அந்த கூட்டணி மக்கள் மத்தியில் எடுபடவில்லை.
கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.ம.மு.க.வுடன் கூட்டணி அமைத்தார்கள். அதுவும் கைகொடுக்கவில்லை.
இதற்கிடையில் விஜயகாந்தின் உடல்நிலையும் பாதிக்கப்பட்டது. சரியாக பேச முடியவில்லை. எழுந்து நிற்கவும் சிரமப்பட்டார். வெளிநாடுகளுக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தும் எதிர்பார்த்த பலன் இல்லாமல் போனது.
அதைதொடர்ந்து கட்சியில் பொருளாளராக இருக்கும் அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் கட்சியை வழிநடத்தினார். அவரது மகன் விஜயபிரபாகரனும் கட்சி பணியில் இறங்கினார்.
நடந்து முடிந்த ஈரோடு இடைத்தேர்தலில் தனித்து போட்டியிட்டு மிக மோசமான தோல்வியை தழுவியது. சுமார் ஆயிரம் வாக்குகள் மட்டுமே பெற்றது. விஜயகாந்த் ஆரோக்கியமாக இருந்த வரை கட்சியும் ஆரோக்கியத்துடன் காணப்பட்டது.
மீண்டும் கட்சியை வலிமைப்படுத்தி பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான முயற்சிகளில் உடனடியாக ஈடுபட வேண்டும் என்று திட்டமிட்டுள்ளார்கள்.
பிரேமலதாவை கட்சியின் செயல் தலைவராகவும், விஜயபிரபாகரனுக்கு இளைஞர் அணியில் முக்கிய பொறுப்பு வழங்கியும் கட்சியை முன்னெடுக்க வேண்டும் என்று தொண்டர்கள் வலியுறுத்துகிறார்கள். விரைவில் கூட்டப்பட இருக்கும் பொதுக்குழுவில் இதற்கான முடிவுகள் மேற்கொள்ளப்படும்.
தே.மு.தி.க. பா.ஜனதா கூட்டணியில் இருந்து இதுவரை வெளியேறவில்லை. எனவே வருகிற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணியா? தி.மு.க. கூட்டணியா? என்று யோசித்து வருவதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
- ‘பிரபாகரனும் உயிருடன் இருக்கிறார்' என்று உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் தொடர்ந்து கூறி வருகிறார்.
- இலங்கையில் உள்நாட்டு போர் உச்சக்கட்டத்தில் இருந்த போது பலர் அகதிகளாக தமிழ்நாட்டில் தஞ்சம் அடைந்தனர்.
சென்னை:
தமிழீழம் கோரி இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போரில் விடுதலை புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் கடந்த 2009-ம் ஆண்டு அந்நாட்டு ராணுவத்தால் கொல்லப்பட்டார். இந்த போரில் பிரபாகரனின் மனைவி மதிவதனி, 2 மகன்கள், மகள் துவாரகா ஆகியோரும் உயிரிழந்து விட்டனர் என்று இலங்கை ராணுவம் அறிவித்தது.
ஆனால் டென்மார்க் நாட்டில் வசிக்கும் தாரகா ஹரித்தரன் என்ற பெண், தன்னை பிரபாகரனின் மனைவி மதிவதனியின் சகோதரி என்று கூறி 'வீடியோ' ஒன்றை வெளியிட்டார். அதில் மதிவதனியும், பிரபாகரனின் மகள் துவாரகாவும் இறக்கவில்லை. உயிரோடுதான் இருக்கிறார்கள் என்று பரபரப்பு தகவலை வெளியிட்டார்.
'பிரபாகரனும் உயிருடன் இருக்கிறார்' என்று உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் தொடர்ந்து கூறி வருகிறார். இந்த தகவலை இலங்கை நாட்டு ராணுவம் திட்டவட்டமாக மறுத்து உள்ளது.
இந்த நிலையில் இலங்கையில் உள்ள சமூக வலைத்தளங்களில் 'வீடியோ' காட்சி ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதில், அந்த நாட்டில் சர்வ மக்கள் கட்சியை நடத்தி வரும் உதயகலா என்ற பெண்தான் பிரபாகரனின் மகள் துவாரகா என்று வர்ணிக்கப்பட்டுள்ளது.
துவாரகா தனது பெயரை உதயகலா என்று மாற்றி தமிழ்நாட்டில் அடைக்கலம் புகுந்ததாகவும், தற்போது அவர் மீண்டும் இலங்கைக்கு திரும்பி மக்கள் சேவையில் ஈடுபட்டு வருவதாகவும் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. இது இலங்கை தமிழர்கள் மத்தியில் விவாத பொருளாகவும் இருக்கிறது.
இதன் பின்னணி வருமாறு:-
இலங்கையில் உள்நாட்டு போர் உச்சக்கட்டத்தில் இருந்த போது பலர் அகதிகளாக தமிழ்நாட்டில் தஞ்சம் அடைந்தனர். அவர்கள் சென்னை, திருச்சி, ராமேசுவரம் உள்ளிட்ட இடங்களில் உள்ள அகதிகள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.
கடந்த 2016-ம் ஆண்டு திருச்சி சிறப்பு முகாமில் தங்கி இருந்த தயாபாராஜ், அவரது மனைவி உதயகலா ஆகியோர் ராமேசுவரம் மண்டபம் சிறப்பு முகாமில் தங்களது உறவினர்கள் சித்ரவதைக்கு உள்ளாக்கப்படுகின்றனர் என்று கூறி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பாக சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளையிலும் வழக்கு தொடரப்பட்டது. இதைத்தொடர்ந்து 2 பேரும் மண்டபம் சிறப்பு முகாமுக்கு மாற்றப்பட்டனர். வருவாய்த்துறை அதிகாரிகள் கண்காணிப்பில் அவர்கள் இருந்து வந்தனர். இதில் தயாபாராஜ் சர்வதேச போலீசாரால் தேடப்பட்டவர் ஆவார்.
தற்போது வெளியாகி உள்ள உதயகலா 'வீடியோ' காட்சி மூலம்தான் அவர் மண்டபம் அகதிகள் முகாமில் இருந்து தப்பி சென்றிருக்கும் தகவல் தமிழக போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. உதயகலா, அவரது கணவர் மற்றும் 3 குழந்தைகள் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மண்டபம் அகதிகள் முகாமில் இருந்து தப்பி சட்டவிரோதமாக படகு மூலம் இலங்கை நாட்டுக்கு சென்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
போருக்கு பின்னர் இலங்கை நாட்டில் அமைதி திரும்பியதால் இவர்களை அந்நாடு ஏற்றுக் கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது.