என் மலர்
நீங்கள் தேடியது "rama navami"
- இன்று விசேஷ லட்சார்ச்சனையும், பூர்வாங்க பூஜைகளும் தொடங்குகிறது.
- மாலை 4.30 மணிக்கு சீதாராம திருக்கல்யாணம் வைபவம் நடக்கிறது.
சென்னை:
திண்டிவனம்- புதுச்சேரி சாலையில் மத்திய திருப்பதி என்று அழைக்கப்படும் பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவிலில் ராமநவமி விழா நேற்று தொடங்கி, வருகிற 6-ந்தேதி சீதாராம திருக்கல்யாண வைபவத்துடன் விழா நிறைவடைகிறது.
விழா நாட்களில் யாகசாலையில் விசேஷ ஹோமங்கள் மற்றும் ஏழு கால சிறப்பு பூஜைகள் நடக்கிறது. கோவிலில் உள்ள ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி சன்னதியில் இன்று (வியாழக்கிழமை) காலை விசேஷ லட்சார்ச்சனையும், பூர்வாங்க பூஜைகளும் தொடங்குகிறது.
அக்னிமதனம் என்று அழைக்கப்படும் அக்னியை உருவாக்கி உரிய பூஜைகளுக்குப் பின் யாகம் வளர்க்கப்படுகிறது.
தொடர்ந்து, ராமநவமியையொட்டி 6-ந்தேதி காலை 8.45 மணிக்கு சீதா சமேத ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி மற்றும் 36 அடி விஸ்வரூப ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேய சாமிக்கு 2 ஆயிரம் லிட்டர் பால், பன்னீர், சந்தனம் போன்ற திரவியங்களால் அன விசேஷ திருமஞ்சனம் நடக்கிறது.
7-ம் கால பூஜைகளுக்கு பிறகு திருமஞ்சனமும், புஷ்பங்களால் அபிஷேகமும் நடக்கிறது. காலை 9 மணிக்கு சிறப்பு நாதஸ்வரம் மற்றும் கவிஞர் சுப்பு ஆறுமுகத்தின் மகள் பாரதி திருமகன் குழுவினரின் வில்லிசை ராமாயண நிகழ்ச்சி நடக்கிறது. மாலை 4.30 மணிக்கு சீதாராம திருக்கல்யாணம் வைபவம் நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை கோவில் தலைவர் மற்றும் நிர்வாக அறங்காவலர் எம்.கோதண்டராமன், கூடுதல் தலைவர் ஆர்.யுவராஜன், செயலாளர்கள் எஸ்.நரசிம்மன் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.
- கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்று, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
- மங்கல வாத்தியங்கள் முழங்க கருட பகவான் உருவம் வரையப்பட்ட கொடி ஏற்றப்பட்டது.
சுவாமிமலை:
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற ராமசாமி கோவில் அமைந்துள்ளது. 'தென்னக அயோத்தி' என அழைக்கப்படும் இக்கோவிலில் ஆண்டுதோறும் ராமநசமி திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, இந்த ஆண்டுக்கான ராமநவமி விழா இன்று (சனிக்கிழமை) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக சிறப்பு அலங்காரத்தில் சீதா, ராமர், லெட்சுமணன், ஆஞ்சநேய சுவாமிகள் கொடிமரம் முன்பு எழுந்தருளினர்.
தொடர்ந்து, கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்று, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர், மங்கல வாத்தியங்கள் முழங்க கருட பகவான் உருவம் வரையப்பட்ட கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து, சுவாமிகளுக்கும், கொடிமரத்திற்கும் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழா நாட்களில் தினமும் சிறப்பு அலங்காரத்தில் உற்சவ மூர்த்திகள் இந்திர விமானம், சூரியபிரபை, சேஷம், கருடர், அனுமன், யானை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா காட்சிகள் நடைபெறுகிறது.
முக்கிய நிகழ்வான 4-ம் நாளன்று இரவு ஓலை சப்பரத்தில் கருட சேவையும், 7-ம் நாளன்று இரவு கோரதம் புறப்பாடும், அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை தேரோட்டமும், இரவு கோவில் வளகத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
முடிவில் 7-ந்தேதி சப்தாவர்ணமும், 8-ந்தேதி விடையாற்றி விழாவும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
- இரவு ராம நவமி ஆஸ்தானம் கடைபிடிக்கப்படும்.
- நாளை ஸ்ரீராமர் பட்டாபிஷேக ஆஸ்தானம் நடக்கிறது.
திருமலையில் ஆண்டு தோறும் ஸ்ரீராம நவமியை முன்னிட்டு 2 நாட்களுக்கு திருவிழா நடை பெறுவது வழக்கம். அந்த வகையில் இன்று ஸ்ரீராம நவமி கொண்டாடப்பட்டது.
இதை யொட்டி இன்று காலை 9 மணி முதல் 11 மணி வரை திருமலையில் உள்ள ரங்கநாயக மண்டபத்தில் உற்சவர்களான சீதாதேவி, ஸ்ரீராமர், லட்சுமணர் மற்றும் அனுமனுக்கு சிறப்பு திருமஞ்சன நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதனைத் தொடர்ந்து மாலை 6.30 மணி முதல் 8.30 மணி வரை திருமலையில் அனுமன் வாகனத்தில், ஸ்ரீராமர் அலங்காரத்தில் ஏழுமலையான் 4 மாட வீதிகளில் உலாவந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
இதனைத் தொடர்ந்து இரவு ராம நவமி ஆஸ்தானம் கடைபிடிக்கப்படும். நாளை இரவு 8 மணி முதல் 9 மணி வரை ஸ்ரீராமர் பட்டாபிஷேக ஆஸ்தானம் கோவில் தங்க வாசல் அருகே நடைபெற உள்ளது.
- மதுரை ராம நவமியையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
- இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மதுரை
ராமபிரான் அவதரித்த தாக நாளாக கருதப்படும் ராமநவமி தினம் இன்று கொண்டாடப்படுகிறது. பஞ்சாங்க குறிப்புகளின் படி நவமி திதி என்பது நேற்று 29-ந் தேதி இரவு 11.49 மணிக்கு தொடங்கி நாளை (31-ந் தேதி) அதி காலை 1.40 மணி வரை ஆகும்.
நாடு முழுவதும் ராமநவமி வழிபாடு இன்று நடந்தது. ஜோதிட சாஸ்திரப்படி ராமர் பிறப்பதற்கு முன்பு உள்ள 9 நாட்கள் ஒரு விரத முறையாகவும், அதன் பிறகு வரும் 9 நாட்கள் ஒரு விரத முறையாகவும் அனுசரிக்கப் பட்டு வருகிறது. அதாவது சித்திரை மாதம் சுக்லபட்ச பிரதமை திதியில் இருந்து நவமி திதி வரை உள்ள 9 நாள் 'கர்ப்போஸ்தவம்' விரத காலமாகும். அடுத்த படியாக சித்திரை மாத சுக்லபட்ச நவமி திதி யில் இருந்து அடுத்து வரும் 9 நாட்கள் 'ஜன்மோதீஸவம்' விரத காலமாகும்.
ராமநவமியின்போது காலை முதல் உணவு அருந்தாமல் விரதம் இருந்து ராமபிரானை வணங்கி வழிபடுபவர்களுக்கு ஆஞ்ச நேயரின் அருள் கிடைக்கும். குடும்பத்தை விட்டுப் பிரிந்த வர்கள் ஒன்று சேருவர். குடும்ப நலம் பெருகி, வறுமை, பிணி அகலும் என்பது நம்பிக்கை.
இன்று ராமநவமியை யொட்டி மதுரை கூடலழகர் பெருமாள் கோவில் தென்மாட வீதி கமல ஜெயவீர ஆஞ்சநேயர் கோவில், மதனகோபால சுவாமி கோவில், மணி நகரம் இஸ்கான் கோவில் கூடலழகர் பெருமாள் கோவில், திருமோகூர் காளமேகப்பெருமாள் கோவில், ஒத்தக்கடை யோக நரசிம்மர் கோவில், தெற்கு கிருஷ்ணன் கோவில், தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவில், மதுரை மேலமடை தாசில்தார் நகர் சவுபாக்கியா கோவில், சோழவந்தான் சந்தானகிருஷ்ணன் கோபால்சாமி கோவில், திருப்பரங்குன்றம் வீர ஆஞ்சநேயர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் ராமநவமி விழா கடந்த 10 நாட்களாக நடந்து வருகிறது.
இதில் முக்கிய நிகழ்ச்சியான ராமநவமி விழா இன்று கொண்டா டப்படுகிறது. இன்று கோவில் கொடிமரத்தின் முன்பு ராமர், சீதை, லட்சுமணன், அனுமனுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். திருமஞ்சனம் நடந்தது. லட்சுமி நாராயணர், சஞ்சீவி ஆஞ்ச நேயர், யோக நரசிம்மருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- சோழவந்தானில் ராமநவமி திருக்கல்யாணம் நடந்தது.
- கவுன்சிலர்கள் வள்ளிமயில், மருதுபாண்டியன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சோழவந்தான்
சோழவந்தான் ராம பக்த சபாவின் சார்பில் ராம நவமிவிழா 4 நாட்கள் நடந்தது. ராம நாம பாராயணத்துடன் விழா தொடங்கியது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிகழ்ச்சி நடந்தது. இன்று காலை உஞ்சவிருத்தி நடைபெற்று ஒற்றை அக்ரகாரத்தில் இருந்து பெண்கள் வானவேடிக்கை, மேளதாளத்துடன் சீர்வரிசை எடுத்து இரட்டை அக்ரஹாரம் கிருஷ்ணன் கோவில் முன்பு அமைந்திருக்கும் திருமண வைபவம் நடக்கும் மேடையில் வந்து சேர்ந்தனர். அங்கு சீதா கல்யாணம் மற்றும் ஆஞ்சநேயர் விழா நடந்தது. இன்று இரவு சுவாமி புறப்பாடு வீதி உலா நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை ராம பக்த சபா நிர்வாகிகள் காசி விசுவநாதன், தலைவர் வரதராஜப் பண்டிட், செயலாளர் வெங்கட்ராமன், பொருளாளர் மகாதேவன், உதவி தலைவர் ரமணி, இணைச்செயலாளர் விசுவநாதன் ஆகியோர் செய்துள்ளனர். விழாவில் மலையாளம் கிருஷ்ண அய்யர் சாரிட்டிஸ் வேத பாடசாலை, சீர்திருத்தினம் அய்யர் ரூரல் டெக்னாலஜி பவுண்டேசன் சார்பில் அன்னதானம் நடந்தது.
எம்.வி.எம். குழுமத் தலைவரும், பா.ஜ.க. மாநில விவசாய அணி செயலாளருமான மணிமுத்தையா, கவுன்சிலர்கள் வள்ளிமயில், மருதுபாண்டியன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
- ராமபிரான் அவதரித்த தினம் ராம நவமியாகும்.
- இந்நாட்களில் விரதம் இருந்து ராமாயணம் படிப்பதும், சொற்பொழிவுகள் செய்வதும் உண்டு.
ராமபிரான் அவதரித்த தினம் ராம நவமியாகும்.
இது ஆண்டுதோறும் சித்திரை மாதம் நவமியும் புனர்வசு நட்சத்திரமும் சேர்ந்திருக்கும் நாளில் வரும்.
ஸ்ரீராமன் பிறந்த தினத்தோடு முடியும். பத்து நாட்கள், முன் பத்து எனப் பெறும்.
பிறந்த தினத்திலிருந்து கொண்டாடப்பெறும் பின் பத்து நாட்கள், பின் பத்து எனப்பெறும்.
சில வைணவத் தலங்களில் இத்தினங்களை முன்பத்து, பின்பத்து என்று மிகவும் சிறப்பான திருவிழாவாகக் கொண்டாடுவார்கள்.
இந்நாட்களில் விரதம் இருந்து ராமாயணம் படிப்பதும், சொற்பொழிவுகள் செய்வதும் உண்டு.
பூஜைகளும் நிகழும்.
ராமாயணம் படித்துப் பட்டாபிஷேகம் செய்து ஆஞ்சநேயர் உற்சவமும் செய்து பூர்த்தி செய்வார்கள்.
பானகம், நீர்மோர், சந்தனம், சுண்டல், சர்க்கரைப் பொங்கல் ஆகியவை வினியோகங்களாக அமையும்.
விளக்கு ஏற்றும்பொழுது நாராயணனுக்கு உரிய நல்லெண்ணை ஊற்றி ஏற்றுவது சிறப்பாகும்.
ராம நவமி விரதத்தை தவறாமல் கடைப் பிடிப்பவர்களுக்கு பிள்ளைப் பாக்கியம் கிடைக்கும்.
இது தவிர புரட்டாசி மாதத்திலும் ராமாயணம் முழுவதையும் ஒரு மாத காலத்திற்குப் படித்துப் பொருள் சொல்வதுண்டு.
- சிவபெருமான் சூரியன், சந்திரன் இருவருக்கும் தனி காலக்கணக்கை உருவாக்கினார்.
- சந்திரனின் பணிக்காலத்தில் சில மாற்றங்களைச் செய்தார் சிவபெருமான்.
சிவபெருமான் பூலோகத்தில் இருக்கும் அனைத்து உயிரினங்களுக்கும் தேவையான அடிப்படை சக்திகளை, பாகுபாடு இல்லாமல் வழங்க சூரியன், சந்திரன் இருவருக்கும் தனி காலக்கணக்கை உருவாக்கினார். அதன்படி சூரியனும், சந்திரனும் தங்கள் பணியை செய்து வந்தனர். சிறிது காலத்திற்குப் பின்பு சந்திரன் தனது பணியை சரியாகச் செய்யாமல் அவ்வப்போது ஏமாற்றத் தொடங்கினார். இதனால் பூலோகத்தில் இருக்கும் உயிரினங்கள், சந்திரனிடமிருந்து தங்களுக்குத் தேவையான சக்தி கிடைக்காமல் துன்பமடைந்தன.

இதை அறிந்த சிவபெருமான், சந்திரனை அழைத்து பணியை ஒழுங்காகச் செய்யும்படி அறிவுறுத்தினார். சந்திரனோ, `இறைவா! என்னுடைய தொடர் பணிக்கு இடையில், அவ்வப்போது சிறிது ஓய்வு தேவைப்படுகிறது. ஓய்வு இருந்தால் மட்டுமே தனது பணியை சிறப்பாகச் செய்ய முடியும்' என்றார். இறைவனும் அதற்கு ஒப்புக்கொண்டார்.
அதன்பிறகு சந்திரனின் பணிக்காலத்தில் சில மாற்றங்களைச் செய்தார் சிவபெருமான். சந்திரன் பணியின் இடையில் சிறிது நேரம் ஓய்வெடுத்துக் கொள்ள அனுமதி வழங்கியதுடன், பணி நேரத்தில் ஏமாற்றாமல் இருக்க, சந்திரனின் பணியை பார்வையிடுவதற்காகவும் சிலரை நியமிக்கவும் முடிவு செய்தார். அதற்காக 16 பேரை தோற்றுவித்து, அவர்களுக்கான பணி நேரத்தைத் சமமாகப் பிரித்து புதிய காலக்கணக்கை உருவாக்கினார்.

அந்த கணக்கின்படி சந்திரனுக்கு ஒருநாள் முழுவதும் எந்தப் பணியும் இல்லாமல் முழு ஓய்வு கொடுக்கப்பட்டது. சந்திரனின் ஓய்வுக்கு யாரும் இடையூறு செய்யாமல் பார்த்துக் கொள்ள ஒருவரை நியமித்து அவருக்கு `மறைமதி' (அமாவாசை) என்று பெயரிட்டார்.
ஓய்வு நாளுக்குப் பின்னர் 14 நாட்கள், சந்திரனின் பணிகளை ஒவ்வொரு நாளும் சிறிது சிறிதாக அதிகரித்தார் ஈசன். அந்த 14 நாட்களும், சந்திரனின் பணி நேரத்தை கவனிக்கவும், அவரது ஓய்வு நேரத்தை இடையூறு செய்யாமல் பார்த்துக் கொள்ளவும் 14 பேர் நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கு பிரதமை, துதியை, திருதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, சப்தமி, அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி, சதுர்த்தசி என்று பெயரிட்டார் சிவபெருமான்.
கடைசியாக சந்திரனுக்கு ஒரு நாள் முழுவதும் முழுநேரப் பணி அளித்து, அன்றைய தினம் அவருடைய முழுநாள் பணியையும் பார்த்துக் கொள்வதற்குத் தான் தோற்றுவித்தவர்களில் மீதம் இருந்த ஒருவரை நியமித்து, அவருக்குப் பூரணை (பவுர்ணமி) என்று பெயரிட்டார்.
சந்திரனின் முழுநாள் பணிக்குப் பின்பு, ஒவ்வொரு நாளும் அவருக்குச் சிறிது சிறிதாகப் பணி நேரத்தைப் பதினான்கு நாட்களுக்குக் குறைத்துக் கொண்டே வந்தார் சிவபெருமான். இந்த நாட்களுக்கு, முன் பகுதியில் சந்திரன் பணிநேரத்தைப் பெற்ற பதினான்கு பேருக்கும், அதே வரிசையில் சந்திரனின் பணிநேரத்தையே கொடுத்து பணி நேரத்தை சமன் செய்தார்.

பவுர்ணமி, இறைவன் தனக்கு மட்டும் ஒரு நாள் முழுவதும் பணி நேரத்தைக் கொடுத்து விட்டதாக நினைத்து வருத்தப்பட்டது. அமாவாசை, தனக்குச் சந்திரனைப் பார்வையிடும் பணியைக் கொடுக்காமல், அவரின் ஓய்வுக்கு இடையூறு வராமல் பார்த்துக் கொள்ளும் பணியைக் கொடுத்ததை நினைத்து வருந்தியது. மற்றவர்கள், தங்களுக்குப் பணிநேரம் சமமாக இருந்தாலும், அமாவாசை, பவுர்ணமிக்கு மட்டும் ஒருநாள் முழுப்பணியாகவும், தங்களுக்குப் பகுதிப்பணிகளாக இரு நாட்கள் பணியும் கொடுத்து விட்டதை நினைத்துக் கவலை அடைந்தன.
அவர்களின் கவலையை அறிந்த சிவபெருமான், `சந்திரனைப் பார்வையிடும் பணியைப் பெற்ற நீங்கள் அனைவரும், பூலோகத்தில் `திதி' என்னும் பெயரில் அழைக்கப்படுவீர்கள்' என்றார்.
சிவபெருமான் இவ்வாறு பேசிக்கொண்டிருந்தபோது, அஷ்டமி, நவமி ஆகியோர் இறைவனின் பேச்சைகவனிக்காமல் பேசிக்கொண்டிருந்தனர். இதைக் கண்ட இறைவன், அவர்களிடம் தான் சொல்வதைக் கவனிக்கும்படி சொன்னார்.
பின்னர் தொடர்ந்து, `அமாவாசையைத் தொடர்ந்து வரும் பதினான்கு நாட்களும் உங்கள் வரிசைப் பெயரிலான திதியாகவும், அவை அனைத்தும் வளர்பிறைத் திதிகள் (சுக்லபட்சம்) என்றும் அழைக்கப்படும்.

இதுபோல் பவுர்ணமியைத் தொடர்ந்து வரும் பதினான்கு நாட்களும் உங்கள் பெயரில் தேய்பிறைத் திதிகள் (கிருஷ்ணபட்சம்) என்றும் அழைக்கப்படும். பூலோகத்தில் இந்த நாட்களில் செய்யப்படும் அனைத்து நற்செயல்களுக்கும் உங்கள் பெயர்களும் பயன்படுத்தப்படும். அதன் மூலம் தங்களுக்குப் பூலோகத்தில் மதிப்பு கிடைக்கும்' என்று சொல்லிக் கொண்டிருந்தார்.
அப்போதும் ஈசனின் பேச்சைக் கவனிக்காமல் அஷ்டமி, நவமி இருவரும் பேசிக்கொண்டிருந்தனர். இதைக் கண்டு கோபமடைந்த சிவபெருமான், அவர்களைப் பார்த்து, 'நான் உங்கள் பணியைப் பற்றியும், பூலோகத்தில் உங்களுக்குக் கிடைக்கவிருக்கும் சிறப்பைப் பற்றியும் சொல்லிக் கொண்டிருந்தேன். நீங்கள் அதைக் கவனிக்காமல் பேசிக் கொண்டிருந்தீர்கள். நான் உங்களை எச்சரித்தும், அதைகண்டு கொள்ளவில்லை. எனவே மக்கள் உங்கள் இருவரையும் விலக்கி வைப்பார்கள். அந்த நாட்களில் எந்த நல்ல காரியங்களையும் தொடங்கமாட்டார்கள்' என்று சாபமிட்டார். அஷ்டமியும், நவமியும் கவலை அடைந்து, ஈசனிடம் சாபத்தைத் வ்திரும்பப்பெற வேண்டினர். ஆனால் இறைவன் மறுத்து விட்டார்.

சாபவிமோசனம்
பூலோக மக்கள், அஷ்டமி, நவமி திதி நாட்களை எந்த நற்செயலுக்கும் பயன்படுத்தாமல் விலக்கியே வைத்தனர். பூலோகத்தில் தங்கள் இருவருக்கும் மதிப்பில்லாமல் போனதை நினைத்து இருவரும் கவலை அடைந்தனர்.
தங்களுக்கு ஏற்பட்ட சாபத்தில் இருந்து விடுபட எண்ணிய அவர்கள் இருவரும், தங்களது ஓய்வு நேரத்தில் சிவபெருமானை வழிபட்டு வந்தனர். அவர்களின் வழிபாட்டில் மகிழ்ந்த ஈசன், 'அஷ்டமி, நவமி திதிகளே...! நான் உங்களுக்கு கொடுத்த சாபத்தில் இருந்து விடுவிக்க முடியாது. நீங்கள் இருவரும் விஷ்ணுவை சந்தித்து உங்கள் குறைகளைக் கூறுங்கள், உங்களுக்கு வேறு ஒரு நல்ல பலன் கிடைக்கலாம்' என்று அருளினார்.
அதன்படி அஷ்டமி, நவமி திதிகள் விஷ்ணுவை வழிபட்டு வரத் தொடங்கினர். அவர்கள் முன்பாக தோன்றிய விஷ்ணு, `சிவபெருமான் கொடுத்த சாபத்தில் இருந்து உங்களை விடுவிக்க என்னாலும் முடியாது. அதே வேளையில் பூலோகத்தில் உங்களுக்கும் நல்ல மதிப்பு கிடைக்க என்னால் உதவ முடியும். அதற்கு தாங்கள் இருவரும் பல ஆயிரம் ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். உங்களால் முடியுமா?' என்றார்.
'இறைவா...!, பூலோகத்தில் எங்களுக்கு இருக்கும் அவப்பெயர் நீங்கி, நல்ல மதிப்பு கிடைத்தால் போதும். அதற்காக எத்தனை ஆயிரம் ஆண்டுகள் வேண்டுமானாலும் நாங்கள் காத்திருக்கத் தயார்' என்றனர்.
அதைக்கேட்ட விஷ்ணு, 'வரும் காலத்தில் பூலோகத்தில் நிகழவிருக்கும் என்னுடைய இரு அவதாரங்களுக்குப் பின்பு, உங்கள் இருவருக்கும் ஆண்டுக்கொருமுறை நல்ல மதிப்பு கிடைக்கும். அதுவரை பொறுமையுடன் காத்திருங்கள்' என்று சொல்லி மறைந்தார்.
சில ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு விஷ்ணு, சித்திரை மாதம், வளர்பிறை நவமி திதியில் ராமனாக அவதாரம் செய்தார். அந்த நவமியில் பிறந்ததால் அவர் பல துன்பங்களை அடைய நேர்ந்தது. என்றாலும் ராமன் பிறந்த திதி என்பதால் பின்னாளில் `ராம நவமி' என்ற பெயரில் நவமி திதிக்கு ஒரு மதிப்பு ஏற்பட்டது.
ராம அவதாரத்திற்கு பிறகு பல ஆயிரம் ஆண்டுகள் கழித்து, ஆவணி மாதம், தேய்பிறையில் அஷ்டமி திதியில் விஷ்ணு கண்ணனாக அவதாரம் எடுத்தார். பிறந்த உடனேயே பெற்றோரைப் பிரிய நேர்ந்தாலும், அவர் மனித வாழ்க்கைக்கான அறிவுரைகளை வழங்கி கண்ணன் உயர்ந்து நின்றார். கண்ணனின் பிறப்பால் அஷ்டமி திதியும் நன்மதிப்பைப் பெற்றது.
சிவபெருமானால் கொடுக்கப்பட்ட சாபத்தில் இருந்து முழுமையாக விடுபட முடியாவிட்டாலும், விஷ்ணுவின் அவதாரங்களால் தங்களுக்குக் கிடைத்த தனிச்சிறப்பை நினைத்து அஷ்டமி, நவமி திதிகள் மகிழ்ச்சி அடைந்தன.
தங்களை விட மேலான நிலையில் இருப்பவர்கள் அறிவுரை வழங்கும்போது, அதனை காதுகொடுத்து கேட்க வேண்டும். அந்த அறிவுரைகளை அலட்சியம் செய்யக்கூடாது. அவ்வாறு செய்தால் பெரும் துன்பமும், அவமதிப்பும் வந்து சேரும் என்பதையே அஷ்டமி, நவமி திதிகளின் சாப- விமோசனக் கதை நமக்கு எடுத்துரைக்கிறது.
- ராமாயணத்தை `சரணாகதி தத்துவம்’ என வைணவங்கள் கூறுகின்றன.
- கல்யாண வைபோகமாகவும் இதனை கொண்டாடுகிறார்கள்.
ராமபிரான் அவதரித்த நாளே ராம நவமியாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. நிலையான வெற்றியும், நீடித்த செல்வமும் நிலைக்க வேண்டும் என்பதே இவ்விழாவின் முக்கிய வேண்டுதலாக அமைந்துள்ளது.
ராவண யுத்தம் புராண காலத்தில் நடந்த ஒன்று என ஒதுக்கிவிட முடியாது. இது தேவ சக்திகளுக்கும், அசுர சக்திகளுக்கும் இடையே நடக்கும் யுத்தத்தைக் குறிக்கின்றது. முடிவில் தேவ சக்தியே வெல்லும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
ராமாயணத்தை `சரணாகதி தத்துவம்' என வைணவங்கள் கூறுகின்றன. துளசி ராமாயணம் காந்தியடிகளின் மனங்கவர்ந்த நூலாக அமைந்திருந்தது. சகோதர தர்ம சாஸ்திரமாகவும், பேரிதிகாசமாகவும் கம்பராமாயணம் உள்ளது.
ராமநவமி பழங்காலந்தொட்டு கொண்டாடப்பட்டு வருவதை திருவரங்கம், ஓரகடம் உள்ளிட்ட சில வைணவ திருக்கோவில் கல்வெட்டுகள் உறுதிபடுத்துகின்றன. அயோத்தி உள்ளிட்ட நாடெங்கிலும் உள்ள பல்வேறு வைணவ திருக்கோவில்களில் ராமநவமி வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. தென் இந்தியாவில் கல்யாண வைபோகமாகவும் இதனை கொண்டாடுகிறார்கள். இந்நாளில் ரத உற்சவமும் நடைபெறும்.
- ரங்கநாயக மண்டபத்தில் சீதா, லட்சுமணர், அனுமன் சமேத ஸ்ரீ ராமருக்கு சிறப்பு திருமஞ்சன நிகழ்ச்சி நடக்கிறது.
- நாளை மாலை சகஸ்ர தீப அலங்கார சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஸ்ரீராம நவமியை முன்னிட்டு நாளை சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன. காலையில் ரங்கநாயக மண்டபத்தில் சீதா, லட்சுமணர், அனுமன் சமேத ஸ்ரீ ராமருக்கு சிறப்பு திருமஞ்சன நிகழ்ச்சி நடக்கிறது.
மாலை 6.30 மணிக்கு அனுமன் வாகனத்தில் கோதண்ட ராமர் மாடவீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இரவு, கோவில் வளாகத்தில் ஜீயர்கள் முன்னிலையில் ஸ்ரீ ராம நவமி ஆஸ்தானம் நடைபெறுகிறது.
இதையொட்டி நாளை மாலை சகஸ்ர தீப அலங்கார சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
புதன்கிழமை (18-ம் தேதி) இரவு 8 மணி முதல் 9 மணி வரை ஸ்ரீ ராமர் பட்டாபிஷேக நிகழ்ச்சி நடக்கிறது.
கடந்த நிதி ஆண்டில் 1,031 கிலோ தங்கத்தை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். இவற்றை தேவஸ்தான அதிகாரிகள் வங்கியில் டெபாசிட் செய்தனர். இதுவரையில் மொத்தம் 11 ஆயிரத்து 329 கிலோ தங்கம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 4 ஆயிரம் கிலோ தங்கத்தை பக்தர்கள் காணிக்கையாக அளித்துள்ளனர். தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில் பக்தர்கள் அளிக்கும் தங்க காணிக்கையும் உயர்ந்து வருகிறது.
திருப்பதியில் நேற்று ஒரே நாளில் 77 ஆயிரத்து 511 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 26 ஆயிரத்து 553 பேர் முடி காணிக்கை செலுத்தினர். உண்டியல் காணிக்கையாக ரூ.4.28 கோடி வசூல் ஆனது.பக்தர்கள் சுமார் 10 மணி நேரம் வரை காத்திருந்து தரிசனம் செய்தனர்.
- பால ராமரின் நெற்றியில் 75 மில்லி மீட்டர் அளவுக்கு திலகம் போல இந்த சூரிய கதிர்கள் தென்படும்.
- சிலையில் சூரிய ஒளி நேரடியாக விழும் வகையில் கண்ணாடிகள், லென்சுகள் கொண்ட வடிவமைப்பு கோவில் கட்டிடம் அறிவியல் மற்றும் விஞ்ஞான உருவாக்கப்பட்டுள்ளது.
அயோத்தி:
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கடந்த ஜனவரி மாதம் 22-ந்தேதி பாலராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். ராமர் கோவிலில் தற்போது ராமநவமி விழா நடந்து வருகிறது. விழாவின் 9- வது நாளான நாளை (17-ந்தேதி) ராம் லல்லாவின் சூரிய அபிஷேக மகோத்சவம் கோலாகலமாக நடக்கிறது.
இந்த விழாவின் சிகர நிகழ்ச்சியாக நாளை (புதன்கிழமை) பகல் 12.16 மணிக்கு கோவில் கருவறையில் கம்பீரமாக வீற்றிருக்கும் 51 இஞ்ச் உயரம் கொண்ட பால ராமர் சிலையின் நெற்றியில் சூரிய ஒளிக்கதிர் விழும் அபூர்வ நிகழ்வு நடைபெற உள்ளது என கோவில் கட்டுமான குழு தலைவரும், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியுமான நிருபேந்திர மிஸ்ரா தெரிவித்துள்ளார். சிலையில் சூரிய ஒளி நேரடியாக விழும் வகையில் கண்ணாடிகள், லென்சுகள் கொண்ட வடிவமைப்பு கோவில் கட்டிடம் அறிவியல் மற்றும் விஞ்ஞான உருவாக்கப்பட்டுள்ளது.
பால ராமரின் நெற்றியில் 75 மில்லி மீட்டர் அளவுக்கு திலகம் போல இந்த சூரிய கதிர்கள் தென்படும்.
இந்த அபூர்வ நிகழ்வு சுமார் 5 நிமிடம் நீடிக்கும். இதனை காண ஏராளமான பக்தர்கள் திரளுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அயோத்தி ராமர் கோவில் திறக்கப்பட்ட பிறகு நடைபெறும் முதல் நிகழ்வு இது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்ச்சியை பக்தர்கள் காணும் வகையில் 100-க்கும் மேற்பட்ட எல்.இ.டி. திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. ராம நவமி விழாவையொட்டி கோவில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன.
- 'தென்னக அயோத்தி' என்று அழைக்கப்படும் இக்கோவிலில் ஆண்டுதோறும் ராமநவமி பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
- ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ராம் ராம்.. சீதா ராம்... என பக்தி கோஷம் விண்ணதிர தேரை வடம் பிடித்தனர்.
சுவாமிமலை:
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ராமசுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ராமபிரான் பட்டாபிஷேக கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
இங்கு ராமபிரான் சீதாதேவியுடன் அமர்ந்திருக்க, சத்ருக்கனன் சாமரம் வீச, லட்சுமணன் தன்னுடைய, அண்ணன் ராமனுடைய வில்லினையும் ஏந்தியிருக்க, பரதன் குடை சமர்ப்பிக்க வேறு எங்கும் காண முடியாத வகையில் அனுமன் ஒரு கையில் வீணையும், மறுகையில் ராமாயண சுவடியும் ஏந்தியபடி காட்சி அளிக்கிறார். 'தென்னக அயோத்தி' என்று அழைக்கப்படும் இக்கோவிலில் ஆண்டுதோறும் ராமநவமி பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, இந்த ஆண்டுக்கான ராமநவமி பெருவிழா கடந்த (9-ந்தேதி) கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழா நாட்களில் தினமும் காலை மங்கல இன்னிசையுடன் பல்லக்கிலும், மாலை வண்ண மின் விளக்குகள் ஒளிர இந்திர விமானம், சூரியபிரபை, சேஷம், கருடர், அனுமன், யானை உள்ளிட்ட பல்வேறு வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளி வீதியுலா நடைபெற்று வந்தது.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. முன்னதாக ராமபிரான், சீதாதேவி, லட்சுமணர், அனுமன் ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினர். தொடர்ந்து, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு தேரோட்டம் தொடங்கியது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ராம் ராம்.. சீதா ராம்... என பக்தி கோஷம் விண்ணதிர தேரை வடம் பிடித்தனர். தேரானது 4 ரத வீதிகளிலும் அசைந்தாடியபடி வலம் வந்து நிலையை வந்தடைந்தது.
அதனைத் தொடர்ந்து, நாளை (வியாழக்கிழமை) திருமஞ்சனமும், புஷ்பயாகமும், மறுநாள் 21-ந்தேதி ராஜ உபசார திருமஞ்சனமும் நடைபெற உள்ளது.
- ஏழுமலையான் கோவிலில் ராம நவமி விழா இன்று நடந்தது.
- ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ராம நவமி விழா இன்று நடந்தது. கோவிலில் உள்ள ரங்கநாயகர் மண்டபத்தில் காலை 9 மணியில் இருந்து காலை 11 மணி வரை சீதா, ராமர், லட்சுமணர், ஆஞ்சேநயருக்கு மஞ்சள், சந்தனம், குங்குமம், பால், தயிர், தேன், இளநீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது.
இதையொட்டி ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இன்று இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணி வரை அனுமந்த வாகன சேவை நடக்கிறது. இரவு 10 மணியில் இருந்து இரவு 11 மணி வரை கோவிலில் உள்ள தங்க வாசல் அருகில் ராம நவமி ஆஸ்தானம் நடைபெறுகிறது.
திருப்பதி கோவிலில் நேற்று 67 ஆயிரத்து 294 பேர் சாமி தரிசனம் செய்தனர். 22,765 பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்தினர். ரூ.2.94 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. 6 மணி நேரத்திற்கு மேல் பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
திருப்பதி கோவில் ஆர்ஜித சேவைகளுக்கான டிக்கெட் வருகிற 22-ந்தேதியும் ஸ்ரீவாணி அறக்கட்டளை டிக்கெட்டுகள் 23-ந்தேதியும் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.
மூத்த குடிமகன்கள், மாற்றுத்திறனாளி பக்தர்கள் 23-ந்தேதி மதியம் 3 மணிக்கு அதற்கான டிக்கெட் முன்பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம்.
ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் வருகிற 24-ந் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது. இதில் பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.