என் மலர்
நீங்கள் தேடியது "Selvaperundagai"
- தலைவர் ராகுல்காந்தியை தேசத்துரோகி என்று குற்றம் சாட்டியதை வன்மையாக கண்டிக்கிறேன்.
- ராதகுல்காந்தியைப் பார்த்து பேசுவதற்கு பாஜகவினருக்கு எந்த தகுதியும் இல்லை.
எச்.ராஜாவை கண்டித்து நாளை தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த தமிழ்நாடு பாஜகவின் தற்காலிக பொறுப்பாளர் எச்.ராஜா, மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல்காந்தி அமெரிக்க சுற்றுப்பயணத்தில் நிகழ்த்திய சந்திப்பை குறிப்பிட்டு மிகமிக இழிவாக தரம் தாழ்ந்து பேசியதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்.
இந்த சந்திப்பு குறித்து பேசும்போது, தலைவர் ராகுல்காந்தியை தேசத்துரோகி என்று குற்றம் சாட்டியதை வன்மையாக கண்டிக்கிறேன்.
யாரை பார்த்து யார் தேசத்துரோகி என்று கூறுவது ? விடுதலைப் போராட்ட காலத்தில் 10 ஆண்டுகாலம் இருந்த பண்டித நேரு பாரம்பரியத்தில் வந்த தலைவர் ராகுல்காந்தியைப் பற்றி இழிப்பு பேசுவதற்கு எச்.ராஜாவுக்கு என்ன உரிமை இருக்கிறது ? விடுதலைப் போராட்டத்தில் கடுகளவு கூட பங்கேற்காமல் பிரிட்டிஷ்ல் ஆட்சியாளர்களுக்கு வெண்சாமரன் வீசி ஏஜெண்டுகளாக இருந்த ஆர்.எஸ்.எஸ். வழி வந்த பாஜகவினர், காங்கிரஸ் தலைவர்களைப் பற்றி பேசுவதற்கு எந்த தகுதியும், அருகதையும் இல்லை.
இந்திய ஒற்றுமைக்காகவும், ஏற்றுக் கொண்ட கொள்கைகளுக்காகவும் தமது இன்னுயிரை தியாகம் செய்த இந்தியா காந்தி, பார ரத்னா ராஜீவ் காந்தி ஆகியோரின் பாரம்பரியத்தில் வந்த தலைவர் ராதகுல்காந்தியைப் பார்த்து பேசுவதற்கு பாஜகவினருக்கு எந்த தகுதியும் இல்லை என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.
அமெரிக்க சுற்றுப்பயணத்தின்போது தேர்ந்தெடுக்கப்பட்ட முக்கிய பிரதிநிதிகளுடன் நடந்த சந்திப்பை எச்.ராஜா கொச்சைப்படுத்தி பேசுவதை எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
தமிழ்நாட்டுக்கும், தமிழக மக்களுக்கும் விரோதமாக கருத்துகளை கூறுவது வகுப்புவாத விஷமந்தனான கருத்துகளை பரப்புவது, மதநல்லிணக்கத்தை சீர்குலைப்பது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் தமிழினத் துரோகி எச்.ராஜாவின் பேச்சை கண்டித்து, அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் அந்தந்த மாவட்டத் தலைவர்கள் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தும்படி கேட்டுக்கெள்கிறேன்.
இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமும், ஒப்பற்ற தலைவருமான ராகுல்காந்தி அவர்களை எவரும் இழித்து பேசுவதை அனுமதிக்க முடியாது.
இத்தகைய அநாகரீகமான வகையில் பேசியுள்ள எச்.ராஜாவுக்கு எதிராக கடுமையான எதிர்ப்பை பதிவு செய்கிற வகையில், தமிழகம் முழுவதும் நாளை (17.092024) கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்த வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளின் சார்பாக நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் நான் பங்கேற்கிறேன் என்பதை தெரவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- மாவட்ட தலைவர்கள் ஆலோசனை கூட்டம் சத்தியமூர்த்தி பவனில் நடத்தப்பட்டது.
- காங்கிரசாரை மதிப்பது கூட இல்லை என்று அதிருப்தி.
சென்னை:
தமிழ்நாட்டில் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணியில் இருந்தாலும் மேல் மட்டத்தில் தலைவர்களிடையே ஒருங்கிணைப்பு இருந்தாலும் கீழ் மட்டத்தில் அந்த அளவு ஒருங்கிணைப்பு இல்லை என்பது தேர்தல் கால கட்டங்களில் வெளிப்படும்.
அந்த வகையில் இப்போது அடுத்து வரப்போகும் உள்ளாட்சி தேர்தல் மற்றும் கட்சியின் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக விவாதிப்பதற்காக தமிழக காங்கிரஸ் செயற்குழு மற்றும் மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் ஆலோசனை கூட்டம் சத்தியமூர்த்தி பவனில் நடத்தப்பட்டது.
காலையில் செயற்குழு கூட்டம் நடந்து முடிந்தது. மாலையில் மாவட்ட தலைவர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தலைமை தாங்கினார்.
காங்கிரஸ் நிலை மற்றும் மக்கள் மனநிலை பற்றி பேசும்படி மாவட்ட தலைவர்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது.
அப்போது பல மாவட்ட தலைவர்கள் தங்கள் பகுதியில் தி.மு.க.- காங்கிரஸ் இடையே உறவு சரியில்லை. காங்கிரசாரை மதிப்பது கூட இல்லை என்று அதிருப்தி தெரிவித்தார்கள்.
கட்சி கீழ் மட்டத்தில் இருந்து வளர உள்ளாட்சி பிரதிநிதிகள் அவசியம். உள்ளாட்சி தேர்தலில் கூடுதலான இடங்களை தலைவர்கள் கேட்டுப் பெற வேண்டும். இல்லாவிட்டால் தகுதி, செல்வாக்குக்கு ஏற்ப போட்டியிட அனுமதிக்க வேண்டும் என்றார்கள்.
நெல்லை மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் பேசும் போது கடந்த பாராளுமன்ற தேர்தலில் ஏற்கனவே காங்கிரஸ் 4½ லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற திருச்சி தொகுதியை விட்டுக்கொடுத்தது தவறு. இதனால் தி.மு.க.வுக்கு அனுசரணையாக போவது போல் கட்சியினர் பேசுகிறார்கள்.
இதே போல் தி.மு.க.வுக்கு அதிக செல்வாக்கு இருக்கும் தொகுதியை நமக்கு விட்டு தருவார்களா?
ராகுல் நெல்லைக்கு பிரசாரத்துக்கு வந்தபோது மேடையில் காமராஜர் படம், காங்கிரஸ் கொடி கூட இடம் பெறாத நிலை இருந்தது. காங்கிரஸ்காரர்களை மேடை பக்கம் கூட அனுமதிக்கவில்லை.
அதன்பிறகு மாநில தலைவரின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு கொடிகள் கட்டப்பட்டன.
கடந்த தேர்தலில் தி.மு.க. வென்றது வெறும் 2 சதவீத வாக்கு வித்தியாசத்தில்தான். அதற்கு காரணம் ராகுலின் நடைபயணத்தால் உருவான எழுச்சிதான் என்றார்.
சில மாவட்ட தலைவர்கள் தங்கள் மாவட்டங்களில் திமு.க.வினரின் அனுமதி இல்லாமல் எந்த வேலையும் செய்ய முடிவதில்லை. காங்கிரசார் முன்னெடுக்கும் பணிகளுக்கும் முட்டுக் கட்டை போடுகிறார்கள். இதே நிலை தொடர்ந்தால் காங்கிரஸ் எப்படி வளரும் என்று ஆவேசமாக பேசினார்கள்.
கவுரவ பதவிகளை கூட காங்கிரசுக்கு தர மறுக்கிறார்கள். சம்பாதிப்பதற்கு பதவி கேட்கவில்லை. எங்கள் பகுதியில் நீண்ட காலம் கட்சியில் இருக்கிறோம். கோவில்களில் நியமிக்கப்படும் கவுரவ பதவியான அறங்காவலர்கள் பதவியை கூட வழங்குவதில்லை என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்கள்.
கூட்டணி மேல் மட்டத்தில் திருப்தியாக இருந்தாலும் கீழ் மட்டத்தில் திருப்தியாக இல்லை என்பதை தங்கள் பேச்சில் வெளிப்படுத்தினார்கள்.
மாவட்ட தலைவர்களின் பேச்சுக்களை மாநில தலைவர்களும், மேலிட பொறுப்பாளர்களும் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தார்கள். கீழ் மட்டத்தில் தொடரும் அதிருப்தியை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள்.
பின்னர் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை பேசும் போது, "உங்கள் பிரச்சினை களை நான் அறிவேன். இந்த மாதிரி பிரச்சினைகளுக்கு கட்சி தலைமை காரணம் அல்ல. மாவட்ட அளவில் செய்யும் தவறுகள்தான்.
எனது தொகுதியான ஸ்ரீ பெரும்புதூரில் கூட உள் ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்கள் தோற்கடிக் கப்பட்ட சம்பவம் நடந்தது.
இந்த மாதிரி நடக்கும் பிரச்சினைகள் பற்றி முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கவனத்துக்கு எடுத்து செல்லப்பட்டு நல்ல சூழ்நிலை ஏற்படுத்தப்படும் என்றார்.
மாவட்ட அளவில் பேசும் போது, தி.மு.க. மாவட்ட செயலாளர்களுடன் பேரம் பேசி சீட் வாங்க முடிவதில்லை. குறிப்பிட்ட சதவீதத்தை பெற்றுத் தர வேண்டும் என்று பலரும் வலியுறுத்தினார்கள்.
- மக்கள் நீதி மைய கட்சித் தலைவராக கமல்ஹாசன் மீண்டும் தேர்வு.
- செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி.
சென்னை:
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-
மக்கள் நீதி மைய பொதுக்குழு கூட்டத்தில் கட்சித் தலைவராக கமல்ஹாசன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டிருப்பதை அறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

தேசிய பாரம்பரிய பின்னணியில் வந்த அவர் மதச்சார்பற்ற கொள்கைகளுக்கு ஆதரவாகவும், வகுப்புவாத சக்திகளுக்கு எதிராகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வருவதை அனைவரும் அறிவார்கள்.
பொதுக்குழு கூட்டத்தில் ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு எதிராகவும், ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு ஆதரவாகவும், தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதல்களை கண்டிக்கிற வகையிலும் தீர்மானங்கள் நிறைவேற்றியிருப்பதை வரவேற்கிறேன்.
கமல்ஹாசனின் அரசியல் பயணம் வெற்றி பெற தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- வெயிலின் தாக்கத்தால் தான் உயிரிழந்து இருக்கிறார்கள்.
- 5 பேர் மரணத்தை காங்கிரஸ் அரசியலாக்க நினைக்கவில்லை.
சென்னை:
சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நிருபர்களிடம் கூறியதாவது:-
விமானப் படையினர் சாகச நிகழ்ச்சியில் 5 பேர் மரணமடைந்து இருக்கிறார்கள். இனிவரும் காலங்களில் பொது நிகழ்ச்சிகளில் மரணம் நிகழாமல் தமிழக அரசு பார்த்துக் கொள்ள வேண்டும். இது தமிழக அரசுக்கு படிப்பினை.
கடந்த காலங்களில் மாலை நேரத்தில் தான் விமான கண்காட்சி நடந்தது. ஆனால் நேற்று உச்சி வெயிலில் விமான சாகசம் நடந்தது ஏன் என்பது தான் எங்களுடைய கேள்வி?
தமிழக அரசு ஒய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து நியாயமான முறையில் விசாரிக்க வேண்டும்.
வெயில் தாக்கம் எவ்வளவு இருக்கும் என்பதை முன்கூட்டியே அறிய முடியும். அப்படி இருக்கையில், வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கக் கூடிய உச்சி வெயிலில் எதற்காக சாகசம் நடந்தது என்று விமானப் படை தெளிவுபடுத்த வேண்டும்.
15 லட்சம் பேரும் ஒரே இடத்தில் கூடிய இடத்திலோ அல்லது செல்லும்போதும் மரணம் அடையவில்லை. வெயிலின் தாக்கத்தால் தான் உயிரிழந்து இருக்கிறார்கள். இனிவரும் காலங்களில் ஒருமுறைக்கு, பல முறை யோசித்து தமிழக அரசு செயல்பட வேண்டும்.
5 பேர் மரணத்தை காங்கிரஸ் அரசியலாக்க நினைக்கவில்லை. பாதுகாப்பு வசதி சரியாக செய்து இருக்கிறார்கள் என்று தமிழக அரசு சொல்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- எல்.ஐ.சி. இணையதள முகப்பில் இந்தி மொழி திணிக்கப் பட்டிருப்பதை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.
- பிரதமர் மோடி இவ்விஷயத்தில் உடனடியாக தலையிட வேண்டும்.
எல்.ஐ.சி. இணையதளத்தின் முகப்பு பக்கம் முழுவதும் இந்தி மொழியில் மாறியதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால், வலைதளத்தின் மொழியை தேர்வு செய்வதில் சிரமம் ஏற்பட்டது. பலர் வலைதள மொழியை ஆங்கிலத்திற்கு மாற்ற முடியாததால் அவதியுற்றனர்.
பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி.-யின் அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தில் ஆங்கிலம் மொழியை தேர்வு செய்ய முடியாமல் அவதிக்குள்ளாவதால் உடனடியாக சீர் செய்ய வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
எல்.ஐ.சி. வலைதளத்தின் முகப்பு பக்கம் இந்தி மொழியில் காட்சியளித்ததற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஒன்றிய பா.ஜ.க. அரசு அமைந்தது முதற்கொண்டு இந்தி, சமஸ்கிருத திணிப்பு என்பது தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த முயற்சிகளுக்கு இந்தி பேசாத மாநிலங்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், ஆயுள் காப்பீட்டுக் கழக இணைய தள முகப்பை இந்தி மயமாக்கியிருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிற செயலாகும். ஏற்கனவே, ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையம், அஞ்சல்துறை, தகவல் தொடர்புத்துறை, ரயில்வே துறை என அனைத்து துறைகளிலும் இந்தி திணிப்பு நடைபெற்று வருவதை கடுமையாக எதிர்த்து வருகிறோம்.
இந்தி பேசாத மக்களுக்கு, இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித நேரு அவர்கள் கொடுத்த உறுதிமொழிக்கும், அதனைத் தொடர்ந்து பிறகு பிரதமராக வந்த லால்பகதூர் சாஸ்திரி, அன்னை இந்திரா காந்தி ஆகியோர் ஆட்சிமொழிச் சட்டத்தில் கொண்டு வந்த திருத்தத்தின் மூலமாகவும் இந்தி பேசாத மக்களுக்கு சட்டப் பாதுகாப்பு வழங்கப்பட்டது. அதையெல்லாம் மீறுகிற வகையில் ஒன்றிய பா.ஜ.க. அரசு ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் இணையதள முகப்பில் இந்தி மொழி திணிக்கப்பட்டிருப்பதை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இதுபோன்ற முயற்சிகளை தமிழகம் உள்ளிட்ட இந்தி பேசாத மாநிலங்கள் எந்த நிலையிலும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இத்தகைய இந்தி திணிப்பு முயற்சிகளை கடுமையாக கண்டிக்கிறேன்.
எனவே, பிரதமர் மோடி இவ்விஷயத்தில் உடனடியாக தலையிட்டு இந்தி திணிப்பை தடுக்கின்ற வகையில் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
- இந்த சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கின்றேன்.
- குற்றவாளிக்கு சட்டத்தின்படி கடுமையான தண்டனை வழங்கவேண்டும்.
தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியை ரமணி அவர்கள் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ள செய்தியறிந்து மிகுந்த வேதனையும், அதிர்ச்சியும் அடைந்தேன் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில், "இந்த சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கின்றேன். குற்றச்செயலில் ஈடுபட்ட குற்றவாளியை உடனடியாக கைது செய்திருப்பது மனதிற்கு ஆறுதல் அளிக்கின்றது. குற்றவாளிக்கு சட்டத்தின்படி கடுமையான தண்டனை வழங்கவேண்டும்.
இதுபோன்ற சம்பவங்கள் வருங்காலத்தில் நடைபெறாமல் தடுப்பதற்கு தமிழ்நாடு அரசு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவேண்டும்.
மகளை இழந்து வாடும் பெற்றோருக்கும், உறவினர்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவில், சட்டம் ஒழுங்கு குறித்து அச்சம் எழ வாய்ப்பாக அமைந்து விடும் என்று முதலில் பதிவிடப்பட்டிருந்தது. பின்னர் அந்த வரிகள் பதிவில் இருந்து நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- தமிழ்நாட்டில் முடியாட்சி நடக்கவில்லை குடியாட்சிதான் நடக்கிறது.
- 1971 ஆம் ஆண்டே இந்தியாவில் மன்னராட்சி முடிவுக்கு வந்துவிட்டது.
சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் "எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்" நூல் வெளியீட்டு விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா கலந்து கொண்டார்.
அந்நிகழ்வில் பேசிய அவர், "மன்னர் பரம்பரை போன்ற ஆதிக்கத்திற்கு தமிழகத்தில் இனி இடமில்லை. 2026ம் ஆண்டு தேர்தலில் மன்னராட்சி ஒழிக்கப்பட வேண்டும். பிறப்பால் ஒரு முதலமைச்சர் தமிழகத்தில் உருவாக்கப்பட கூடாது. கருத்தியல் உள்ளவர் தான் தமிழகத்தில் முதல்வராக வேண்டும். தமிழகத்தில் மதம், ஜாதியை போல ஊழல் எதிர்ப்பை ஏன் யாரும் முன்னெடுக்கவில்லை" தெரிவித்தார்.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை குறிப்பிட்டு தான் ஆதவ் அர்ஜுனா இவ்வாறு பேசியுள்ளார் அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
இந்நிலையில் ஆதவ் அர்ஜுனாவின் இக்கருத்துக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த அவர், "தமிழ்நாட்டில் முடியாட்சி நடக்கவில்லை குடியாட்சிதான் நடக்கிறது. 1971 ஆம் ஆண்டே இந்தியாவில் மன்னராட்சி முடிவுக்கு வந்துவிட்டது. யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும். மேடையில் பேசி முடிவு எடுக்கும் விஷயம் இது அல்ல" என்று தெரிவித்தார்.
- தேசிய சராசரியை விட தமிழ்நாட்டில் தனிநபர் வருமானம் அதிகரித்துள்ளது.
- எதிர் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் வரலாறு காணாத வெற்றியை இந்தியா கூட்டணி தமிழகத்தில் பெறும், வரலாறு படைக்கும்.
மாநில உள்நாட்டு உற்பத்தி உயர்வுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பாராட்டினார்.
அப்போது அவர், "அசாத்திய சாதனையை நிகழ்த்தி வீறு நடைபோடும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டுகள்" என்றார்.
இதுகுறித்து செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு நம் மாநிலத்தின் ஜிடிபி 2022-23ம் ஆண்டில் 7.1%ஆக அதாவது 23,64,514 கோடியாக அதிகரித்துள்ளது என சி.ஏ.ஜி. தெரிவித்துள்ளது.
இவை, தேசிய சராசரியை விட தமிழ்நாட்டில் தனிநபர் வருமானம் அதிகரித்துள்ளது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது.
ஏழை, எளிய மக்களின் முன்னேற்றத்திற்காகவும் அவர்களின் உரிமைக்காகவும் இந்திய கூட்டணி என்றும் பாடுபடும், இந்த அசாத்தியமான சாதனையை நிகழ்த்தி வீறுநடைபோடும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் மனதார வாழ்த்துகிறேன், பாராட்டுகிறேன்.
எதிர் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் வரலாறு காணாத வெற்றியை இந்தியா கூட்டணி தமிழகத்தில் பெறும், வரலாறு படைக்கும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- பல்கலைக்கழகங்களில் துணைவேந்தரை இந்த திருத்தத்தின் மூலம் ஆளுநரே நியமிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
- மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளின் கல்வி உரிமையை பறிக்கும் வகையில் இந்த திருத்தம் உள்ளது.
யுஜிசி விதிகளை திருத்தியது மாநில கல்விக் கொள்கையின் மீது தொடுக்கப்பட்டிருக்கும் தாக்குதல் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வன்மையான கண்டனங்களை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ளாத மாநிலங்களில் யுஜிசி விதிகளை திருத்துவதன் மூலம் பல்கலைக்கழக மானிய குழு அங்கீகாரம் ரத்து செய்யப்படும். இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் வழங்கப்படும் பட்டங்கள் என்பது செல்லாததாகிவிடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பல்கலைகழகங்கள், கல்லூரிகள் ஆன்லைன் மூலம் வழங்கும் திட்டங்களுக்கும் தடை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பல்கலைக்கழகங்களில் துணைவேந்தரை இந்த திருத்தத்தின் மூலம் ஆளுநரே நியமிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளின் கல்வி உரிமையை பறிக்கும் வகையில் இந்த திருத்தம் உள்ளது. மேலும், கல்வி சாராத நபர்கள் துணைவேந்தர்களாக நியமிக்கப்படும் அபாயம் இந்த திருத்தத்தில் உள்ளது.
யுஜிசி திருத்தத்தை ஒன்றிய அரசு கைவிட வேண்டும். மேலும், கல்வியை மாநில பட்டியலுக்கு உடனடியாக மாற்ற வேண்டுமென ஒன்றிய அரசை வலியுறுத்திகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
- இன்று உலகப்புகழ் பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடங்கி நடைபெற்று முடிந்தது.
- ஜல்லிக்கட்டில் மாடு முட்டி நவீன் குமார் என்ற மாடுபிடி வீரர் உயிரிழந்தார்.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் மதுரை விளாங்குடி பகுதியை சேர்ந்த நவீன் குமார் என்ற இளைஞரின் மார்பில் மாடு குத்தியது. இதனையடுத்து படுகாயமடைந்த அவர் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நவீன்குமார் உயிரிழந்தார்.
இந்நிலையில், மாடுபிடி வீரர் நவீன்குமார் உயிரிழந்ததற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான அவரது எக்ஸ் பதிவில், "அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் காளை மார்பில் குத்தி, சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மாடு பிடி வீரர் நவீன் அவர்கள் உயிரிழந்த செய்தி அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். உயிரிழந்த நவீன் குடும்பத்தினர்களுக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆழந்த அனுதாபத்தையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்த வீரர்கள் விரைவில் நலம் பெற விழைகிறேன்.
மாவட்ட நிர்வாகம் சார்பில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்த போதிலும், எதிர்பாராத நிலையில் இந்த உயிரிழப்பு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நம் மண்ணின் கலாச்சாரத்துடன் இணைந்த விளையாட்டாக இருந்தாலும் கூட, உயிரை விட விலை மதிக்கமுடியாதது வேறெதுமில்லை. எனவே, காளை தழுவும் வீரர்கள் மிகுந்த கவனத்துடன் விளையாட வேண்டும்.
மாடுபிடி வீரர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள உரிய விதிகளை பின்பற்ற வேண்டும். இனி நடைபெறும் அலங்காநல்லூர் உள்ளிட்ட மாடுபிடி நிகழ்ச்சியில் உயிரிழப்பு ஏற்படாவண்ணம் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படவேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
- நாடாளுமன்றத்தில் அமித் ஷா, அம்பேத்கரை அவமதித்ததாக எழுந்த புகார் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
- அமித்ஷா, நாளை மாலை சென்னை வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டுக்கு நாளை வரும் மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த டிசம்பர் 17 அன்று இந்திய நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, சட்டமாமேதை டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்களை மிகமிக இழிவாகப் பேசியதோடு, காங்கிரஸ் கட்சியைப் பற்றி ஆதாரமற்ற அவதூறுகளை கூறியிருந்தார். டாக்டர் அம்பேத்கர் அவர்கள் அரசியல் நிர்ணயசபை உறுப்பினராக தேர்வு பெற்று, அரசமைப்புச் சட்ட வரைவுக் குழு தலைவராக பொறுப்பேற்று, 60 க்கும் மேற்பட்ட நாடுகளின் அரசியலமைப்புச் சட்டத்தை ஆராய்ந்து, இந்தியாவில் உள்ள சாதி, மத, வேறுபாடுகளை கடந்து, இன்றைக்கும் பட்டியலின, சிறுபான்மையின, பின்தங்கிய மக்கள் அனைவரையும் உள்ளடக்கிய, பாதுகாப்பு கவசமாக, இன்றும் உலகமே போற்றுகின்ற வகையில் அரசமைப்பு சட்டத்தை உருவாக்கினார்.
அம்பேத்கர் அவர்களுக்கு பெருமை சேர்ப்பது அவர் உருவாக்கிய அரசமைப்புச் சட்டம் தானே தவிர, அரசியல் ஆதாயத்தோடு பிரதமர் மோடி அமைக்கிற எந்த நினைவுச் சின்னங்களும் அல்ல.
டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்களை நாடாளுமன்றத்தில் பகிரங்கமாக அவமதித்து பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நாளை (31.01.2025) வெள்ளிக்கிழமை மாலை சென்னை வருகிறார். தமிழகத்தின் ஒட்டுமொத்த எதிர்ப்பையும், கண்டனத்தையும் வெளிப்படுத்துகிற வகையில் நாளை சென்னைக்கு வரும் அமித்ஷாவுக்கு கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த போராட்டத்தில் பெருந்திரளான காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்பதோடு, 'அமித்ஷாவே திரும்பிப் போ" என்கிற முழக்கம் தமிழகம் முழுவதும் எதிரொலிக்கிற வகையில் இந்த ஆர்ப்பாட்டம் அமைய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்" என்று அறிவித்துள்ளார்.
- வகுப்புவாத, பிரிவினைவாத சிருலைவு சக்திகளுக்கு பாடம் கற்பிக்கின்ற வகையில் இந்த வெற்றி அமைந்திருக்கிறது.
- தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சியினருக்கும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி பெற உள்ள வெற்றிக்கு அச்சாரம் இது என்று ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி குறித்து காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பாக போட்டியிட்ட, தி.மு. கழசு வேட்பாளர் திரு. வி.சி. சந்திரகுமார், தன்னை எதிர்த்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளரை விட தொன்னூறாயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றிருக்கிறார்.
இது தமிழகத்தில் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைபெறுகிற ஆட்சியின் சாதனைகளுக்கு கிடைத்த பரிசாகும். வகுப்புவாத, பிரிவினைவாத சிருலைவு சக்திகளுக்கு பாடம் கற்பிக்கின்ற வகையில் இந்த வெற்றி அமைந்திருக்கிறது.
தமிழகத்தில் சமீபகாலமாக மதநல்லிணக்கத்தையும், சமூகநீதியையும் சீர்குலைக்கின்ற முயற்சியில் ஈடுபட்டிருக்கிற பிற்போக்கு சக்திகளுக்கு ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத் தேர்தல் முடிவு உரிய பாடத்தை வழங்கியிருக்கிறது. வெற்றி பெற்றுள்ள தி.மு. கழக வேட்பாளர் வி.சி. சந்திரகுமார் அவர்களுக்கும், வெற்றிக்காக பாடுபட்ட தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சியினருக்கும் நனர்நியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் பெற்ற வெற்றி 2026 சட்டமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி பெறப் போகின்ற வெற்றிக்கு அச்சாரமாக அமைய இருக்கிறது. இத்தகைய வெற்றியை பெறுவதற்கு காரணமாக இருந்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு மனப்பூர்வமான வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.