என் மலர்
நீங்கள் தேடியது "shooting"
- கேளிக்கை நிகழ்ச்சியின்போது ஒரு சிறுவன் துப்பாக்கிச்சூடு நடத்தினான்.
- இந்தத் துப்பாக்கிச் சூடு சம்ப்வத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
வாஷிங்டன்:
அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் மாகாணத்தில் அமைந்துள்ள சியாட்டில் நகரின் டகோமா பகுதியில் உள்ள வீட்டில் இரவுநேர கேளிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள், இளம்பெண்கள் பங்கேற்றனர்.
இந்நிலையில், இரவு 12 மணியளவில் (உள்நாட்டு நேரப்படி) கேளிக்கை நிகழ்ச்சி நடந்தபோது திடீரென அங்கிருந்தவர்கள் மீது ஒரு சிறுவன் துப்பாக்கிச்சூடு நடத்தினான்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
துப்பாக்கிச்சூடு நடத்திய சிறுவனை கைதுசெய்த போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
- பல நூற்றாண்டுகளாக செயல்முறையில் உள்ள இது ஒரு வங்கிக்கு இணையான அமைப்பாகும்.
- ஹோரி கேட் பகுதியில் உள்ள மார்கெட்டில் முகமூடி அணிந்த நபர் நுழைந்தார்.
"அங்காடியா" என்பது, வணிகர்கள் தங்கள் பணத்தை ஒரு இடத்திலிருந்து மற்றோரு இடத்திற்கு கொண்டு செல்ல பயன்படுத்தும் ஒரு பாரம்பரிய முறையாகும். பல நூற்றாண்டுகளாக செயல்முறையில் உள்ள இது ஒரு வங்கிக்கு இணையான அமைப்பாகும். பணம் மற்றும் மதிப்புமிக்க பொருட்களை பாதுகாப்பாக எடுத்துச் செல்லும் நபர்கள் அங்காடியாக்கள் ஆவர்.
இவ்வாறான ஒரு அங்காடியாவை டெல்லியில் முகமூடி அணிந்த நபர் துப்பாக்கிமுனையில் கொள்ளையடித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
டெல்லியின் லஹோரி கேட் பகுதியில் உள்ள மார்கெட்டில் முகமூடி அணிந்த ஒருவர் அங்காடியா வர்த்தகரிடம் துப்பாக்கி முனையில் 80 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்தார்.
அந்த நபர் வர்த்தகரை பின்தொடர்ந்து துப்பாக்கியை காட்டி மிரட்டி அவரது பையை எடுத்துக்கொண்டு ஓடுவது சிசிடிவியில் பதிவாகியுள்ளது. மேலும் அங்கிருந்து செல்வதன்முன் பல முறை தனது துப்பாக்கியால் அந்த நபர் சுட்டார்.
இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றாலும் எல்லோரும் அதிர்ச்சியில் உறைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சாஹூர் (ரம்ஜான் நோன்புக்கு முன் முஸ்லிம்கள் சாப்பிடும் அதிகாலை உணவு) சாப்பிட காத்துக்கொண்டு நின்றார்.
- கட்டாவுடன் இருந்த மற்றொரு நபர் ஓடிவிட்டார்.
உத்தரப் பிரதேசத்தில் இஸ்லாமியர் ஒருவர் அதிகாலையில் வீட்டு வசாலில் வைத்து மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
அலிகரின் ரோராவரில் உள்ள தெலிபாடாவில் வசிப்பவர் ஹரிஸ் என்ற கட்டா (25 வயது). வெள்ளிக்கிழமை இரவு நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிவிட்டு தனது வீட்டுக்கு வந்த கட்டா அதிகாலை 3.15 மணியளவில் தனது வீட்டின் அருகே சேஹ்ரி (சஹுர்) (ரம்ஜான் நோன்புக்கு முன் முஸ்லிம்கள் சாப்பிடும் அதிகாலை உணவு) சாப்பிட காத்துகொண்டு நின்றார். மற்றொரு நபர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்த கட்டாவை நோக்கி இரண்டு பைக்குகளில் வந்த நால்வர் வந்தனர்.
அவர்களில் ஒருவன் கட்டா மீது துப்பாக்கிசூடு நடத்தினான். இதில் கட்டா சரிந்து கீழே விழுந்தார். கட்டாவுடன் இருந்த மற்றொரு நபர் ஓடிவிட்டார். தொடர்ந்து, பைக்கில் இருந்து இறங்கிய மற்றொருவன் கட்டா இறந்துவிட்டதை உறுதி செய்ய மேலும் பல முறை அவரை நோக்கி சுட்டான். பின் நால்வரும் பைக்கில் ஏறி தப்பினர். அவர்களை மற்றொரு நபர் துரத்திக்கொண்டு ஓடினார்.
இந்த சம்பவம் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். முன் விரோதம் காரணமாக இந்த கொலை நடந்துள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
- மெக்சிகோவில் உள்ள மதுபான விடுதியில் துப்பாக்கிச் சூடு நடந்தது.
- இந்த துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
மெக்சிகோ சிட்டி:
மெக்சிகோவின் தொழில்துறை மையமான குவானாஜுவாடோ பகுதியில், சமீபத்திய ஆண்டுகளில் கும்பல் வன்முறை அதிகரித்துள்ளது.
மத்திய மெக்சிகோவில் குவானாஜுவாடோ மாகாணத்தில் அபாசியோ எல் ஆல்டோ நகரில் மதுபான விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், அந்த மதுபான விடுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 2 பேர் காயமடைந்தனர்.
இந்நிலையில், கடந்த புதன்கிழமை இரவு 9 மணியளவில் ஆயுதம் ஏந்திய கும்பல் ஒன்று திடீரென புகுந்து, உள்ளே இருந்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது.
இதில் மதுபான விடுதியில் 4 பெண்கள் உள்பட 9 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 2 பெண்கள் காயமடைந்தனர். காயமடைந்த பெண்களின் உடல் நிலை தற்போது சீராக உள்ளது.
கடந்த மாதம் இரபுவாடோ நகரில் உள்ள மதுபான விடுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- அமெரிக்காவின் விர்ஜீனியா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர்.
- அனைத்து வகுப்புகளும் தற்போதைக்கு நிறுத்தப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
விர்ஜீனியா:
அமெரிக்காவின் விர்ஜீனியா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 2 பேர் காயமடைந்தனர் என விர்ஜீனியா பல்கலைக்கழக காவல்துறை தெரிவித்துள்ளது.
நேற்றிரவு நடந்த இந்தத் தாக்குதலை நடத்தியவர் பல்கலைக்கழக மாணவர் கிறிஸ்டோபர் டார்னெல் ஜோன்ஸ் என பல்கலைக்கழக நிர்வாக தலைவர் ஜிம் ரியான் தெரிவித்தார்.
சந்தேகிக்கப்படும் குற்றவாளியான அவரது புகைப்படத்தை போலீசார் வெளியிட்டு, தேடி வருகின்றனர். அனைத்து வகுப்புகளும் தற்போதைக்கு நிறுத்தப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- அமெரிக்காவின் நைட் கிளப்பில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் கொல்லப்பட்டனர்.
- துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை போலீசார் பிடித்து விசாரித்து வருவதாக சொல்லப்படுகிறது.
வாஷிங்டன்:
டிரான்ஸ்போபியா என்று சொல்லப்படும் பாலியல் அடையாளம் காரணமாக கொல்லப்படுபவர்களை நினைவு கூரும் வகையில் ஆண்டுதோறும் நவம்பர் 20-ம் தேதி மூன்றாம் பாலினத்தவர்களின் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.
இந்நிலையில், அமெரிக்காவின் கொலோரடா மாகாணத்தில் உள்ள கொலோராடா ஸ்பிரிங்ஸ் நகரத்தில் கே நைட் கிளப் ஒன்று செயல்பட்டு வருகிறது.
இந்த நைட் கிளப்பிற்குள் நேற்று நுழைந்த மர்ம நபர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார். இந்த துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பலியானதாகவும் 18 பேர் காயம் அடைந்ததாகவும் முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை போலீசார் பிடித்து விசாரித்து வருவதாக சொல்லப்படுகிறது. துப்பாக்கிச்சூட்டிற்கான நோக்கம் குறித்து இன்னும் கண்டறியப்படவில்லை.
- அரசு மற்றும் தனியார் பள்ளியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
- துப்பாக்கியால் சுட்டவரை அடையாளம் காண்பது கடினமாக இருந்ததாக தகவல்
எஸ்பிரிடோ சாண்டோ
பிரேசில் நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள எஸ்பிரிடோ சாண்டோ மாகாணத்தில் பள்ளிகளுக்குள் அடுத்தடுத்து புகுந்து மர்மநபர் ஒருவர், தானியங்கி துப்பாக்கி மூலம் அங்கிருந்தவர்களை நோக்கி சுட்டார். ஒரு அரசுப் பள்ளி மற்றும் ஒரு தனியார் பள்ளியில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
குண்டு துளைக்காத சட்டை அணிந்து முகத்தை மூடியவாறு அந்த நபர் துப்பாக்கிச் சூடு நடத்துவது கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி உள்ளது. இந்த கொடூர தாக்குதலில் 2 ஆசிரியர்கள், ஒரு மாணவர் உள்பட மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 11 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூடு நடத்தியவரை போலீசார் கைது செய்தார்கள் என்பது குறித்த தகவல் உடனடியாகத் வெளியாகவில்லை. அந்த நபரை அடையாளம் காண்பது கடினமாக இருந்ததாக கூறப்படுகிறது. பிரேசில் சமூக ஊடகங்களில் சூப்பாக்கிச் சூடு குறித்த வீடியோ வெளியான நிலையில், நிலைமையை கண்காணித்து வருவதாகவும், குற்றவாளியை கண்டறிய அதிகாரிகளை அனுப்பி உள்ளதாகவும் எஸ்பிரிட்டோ சாண்டோ மாகாண ஆளுநர் ரெனாடோ தெரிவித்துள்ளார்
- கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் சீக்கிய இளம்பெண் ஒருவர் சுட்டு கொல்லப்பட்டு உள்ளார்.
- தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் போலீசார், இது திட்டமிட்ட படுகொலை என சந்தேகிக்கின்றனர்.
ஒன்டாரியோ:
கனடாவில் ஒன்டாரியோ மாகாணத்தில் மிஸ்சிசாவ்கா நகரில் பவன்பிரீத் கவுர் (21) என்ற சீக்கிய இளம்பெண் மீது மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தினார். இந்த சம்பவத்தில் கவுர் படுகாயம் அடைந்துள்ளார்.
தகவலறிந்து சம்பவ பகுதிக்கு போலீசார் சென்றனர். பிராம்ப்டன் பகுதியைச் சேர்ந்த அவரை படுகாயங்களுடன் கண்ட போலீசார், உயிர் காக்கும் சிகிச்சைகளை அளித்துள்ளனர். எனினும், அதில் பலனின்றி அவர் உயிரிழந்தார்.
தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் போலீசார், இது திட்டமிட்ட படுகொலை என சந்தேகிக்கின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன் இந்திய வம்சாவளியான 18 வயது கொண்ட மேஹக்பிரீத் சேத்தி என்பவரை உயர்நிலை பள்ளி ஒன்றில் வாகன நிறுத்துமிடத்தில் வைத்து கத்தியால் குத்தி படுகொலை செய்தது நினைவிருக்கலாம்.
- கனடாவின் ஆல்பர்டா மாகாணத்தில் சீக்கிய இளைஞர் சுட்டு கொல்லப்பட்டுள்ளார்.
- விசாரணை நடத்திய போலீசார் இது படுகொலை என சந்தேகிக்கின்றனர்.
ஒன்டாரியோ:
கனடாவின் ஆல்பர்டா மாகாணத்தில் சன்ராஜ் சிங் (24) என்ற சீக்கிய இளைஞர் ஒருவர் துப்பாக்கிச் சூடு காயங்களால் இறந்து கிடந்தார். தகவலறிந்து அங்கு சென்ற போலீசார் அவரது உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவரது மரணத்திற்கு கொலையே காரணம் என போலீசார் சந்தேகிக்கின்றனர், கனடாவில் இந்த மாதத்தில் இது போன்ற இரண்டாவது சம்பவம் இதுவாகும்.
டிசம்பர் 3-ம் தேதி நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு பதிலளித்த எட்மண்டன் நகர் காவல் துறையினரால் சன்ராஜ் சிங் கண்டுபிடிக்கப்பட்டார் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
கடந்த வாரம் இந்திய வம்சாவளியான 21 வயது கொண்ட பவன்பிரீத் கவுர் என்ற சீக்கிய இளம்பெண் சுட்டுக் கொல்லப்பட்டது நினைவிருக்கலாம்.
ஒரே மாதத்தில் சீக்கியர்களை குறிவைத்து துப்பாக்கிச்சூடு நடந்துள்ள சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
- சம்பவ இடம் விரைந்து சென்ற போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
வாஷிங்டன்:
சீன நாட்காட்டியின்படி நேற்று முன்தினம் புத்தாண்டு கொண்டாடப்பட்டது. சீனா மட்டுமின்றி உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் வாழும் சீனர்கள் தங்கள் புத்தாண்டு பிறப்பை கொண்டாடினர்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மாண்டெரி பார்க் பகுதியில் உள்ள ஒரு கேளிக்கை விடுதியில் சீன புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர். அப்போது, புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மீது மர்ம நபர்கள் சிலர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
துப்பாக்கிச்சூடு குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஈடுபட்ட நபர் ஹூ கேன் திரான் (72) என்ற முதியவர் என தெரிய வந்தது. வேன் ஒன்றில் பதுங்கி இருந்த அவரை போலீசார் சுற்றி வளைத்ததும் திரான் துப்பாக்கியால் தன்னை சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில், படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த 4 பேரில் ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து துப்பாக்கிச் சூட்டில் பலியானோர் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.
- அமெரிக்க பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 மாணவர்கள் உயிரிழந்தனர்.
- இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் அயோவாவில் உள்ள டெஸ் மொயின்ஸ் பட்டயப் பள்ளியில் நேற்று பிற்பகலில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.
தகவலறிந்த போலீசார் உள்ளூர் நேரப்படி மதியம் 1 மணிக்கு ஸ்டார்ட்ஸ் ரைட் ஹியர் பள்ளிக்கு விரைந்தனர். அங்கு துப்பாக்கி சூட்டில் பலத்த காயமடைந்த 3 பேரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர்களில் 2 மாணவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மற்றொருவர் அந்த பள்ளியில் வேலை செய்யும் ஊழியராவார். அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக 3 சந்தேகத்துக்குரிய நபர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- அமெரிக்காவில் கடந்தாண்டு மட்டும் மொத்தம் 647 துப்பாக்கிச்சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
- 2022-ல் அமெரிக்காவில் 44 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் துப்பாக்கிச் சூட்டில் இறந்துள்ளனர்.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரருகே மாண்ட்ரே பார்க் நகரம் அமைந்துள்ளது. இதில், கார்வே அவென்யூ பகுதியில் செங் வான் சோய் என்ற சீன வம்சாவளி தொழிலதிபரின் ஓட்டல் ஒன்று உள்ளது. தெற்கு கலிபோர்னியாவில் ஆண்டுதோறும் 2 நாட்கள் சீனாவின் சந்திர புதுவருட திருவிழா கொண்டாடப்படுகிறது. இதில் லட்சக்கணக்கானோர் திரளாக கலந்து கொள்வது வழக்கம்.
இதேபோன்று நடந்த முதல் நாள் திருவிழாவின்போது, அந்த ஓட்டலில் சமீபத்தில் சீன புதுவருட தினம் கோலாகலமுடன் கொண்டாடப்பட்டு வந்தது. அதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றிருந்தனர். பலர் மேடையில் உற்சாக நடனம் ஆடிக் கொண்டிருந்தனர். அப்போது, திடீரென உள்ளே புகுந்த மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் அதிரடியாக பல ரவுண்டுகள் சுட்டு விட்டு தப்பியோடி விட்டார். இதில் 10 பேர் பலியானார்கள்.
தகவலறிந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஈடுபட்ட நபர் ஹூ கேன் திரான் (72), என்ற முதியவர் என தெரிய வந்தது. வேன் ஒன்றில் பதுங்கி இருந்த அவரை போலீசார் சுற்றி வளைத்ததும் திரான் துப்பாக்கியால் தன்னை சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில், அமெரிக்காவில் கடந்தாண்டு மட்டும் மொத்தம் 647 துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2022-ம் ஆண்டில் மட்டும் ஒட்டுமொத்த அமெரிக்காவிலும் 44 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தனர். இது அங்குள்ள தற்கொலை எண்ணிக்கையில் இரு மடங்கானது என்பது குறிப்பிடத்தக்கது.