என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கியாஸ் சிலிண்டர்"

    • இல்லத்தரசிகள் மிகவும் சிறமப்படக்கூடிய நிலைமையிலும், தொடர்ந்து விலைவாசி உயர்வு என்பது அவர்களை விழி பிதுங்கச் செய்துள்ளது.
    • பெண்களுடைய கஷ்டத்தை உணர்ந்து, சிலிண்டர் எரிவாயு விலை உயர்வை உடனடியாக திரும்பப்பெற வேண்டும்.

    தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது. எரிவாயு சிலிண்டர் குறையும் என்று சொல்லிக்கொண்டு இருந்தாலும், விலை குறையவே இல்லை.

    சமையல் எரிவாயு சிலிண்டர் விலை அதிகரித்து கொண்டுதான் போகிறது. அதனால் இன்றைக்கு இல்லத்தரசிகள் மிகவும் சிறமப்படக்கூடிய நிலைமையிலும், தொடர்ந்து விலைவாசி உயர்வு என்பது அவர்களை விழி பிதுங்கச் செய்துள்ளது.

    எனவே மத்திய, மாநில அரசுகள் விலை உயர்வை பரிசீலனை செய்து பெண்களினுடைய கஷ்டத்தை உணர்ந்து, சிலிண்டர் எரிவாயு விலை உயர்வை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என தேமுதிக சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் குறிப்பிட்டுள்ளார்.

    • விஜய் படங்களின் டிக்கெட் விலை என்ன?. பாமர மக்களுக்காக நடிக்கிறேன், குறைந்த விலையிலோ, இலவசமாகவோ டிக்கெட் கொடுக்கிறேன் என இருக்க வேண்டியதுதானே?
    • விஜய்க்கு சினிமாவில் நடிக்கவும், வசனம் பேசவும், நடனமாடவும், ஏமாற்றவும்தான் தெரியும். அரசியலோ, பொருளாதாரமோ தெரியாது.

    மத்திய அரசு சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை 50 ரூபாய் உயர்த்தியது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

    தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜயும் கண்டனம் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் "ஒன்றிய பாஜக அரசு அறிவித்துள்ள சமையல் எரிவாயு (Gas Cylinder) விலை உயர்வு, சாமானிய மக்கள் மீதான நேரடித் தாக்குதலாகும். மக்களின் அன்றாட வாழ்வே போராட்டமாக இருக்கின்ற சூழலில், ஒன்றிய அரசின் இந்த விலையேற்றம், மக்களை மேலும் வாட்டி வதைப்பதாகவே அமைந்துள்ளது.

    ஒவ்வொரு முறையும் சமையல் எரிவாயு வாங்கும்போது, அதற்கான மானியத் தொகை வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்ற அறிவிப்பைக் காற்றில் பறக்கவிட்ட ஒன்றிய ஆட்சியாளர்கள், மக்களை எளிதில் ஏமாற்றிவிடலாம் என்ற நினைப்பில் உள்ளனர்.

    தற்போது அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்ந்து விட்ட நிலையில், மக்களுக்குப் பொருளாதாரச் சுமையை ஏற்றும் வகையில் சமையல் எரிவாயு விலையை ஒன்றிய அரசு அதிரடியாக உயர்த்தியிருப்பது ஏற்கத்தக்கது இல்லை.

    தேர்தல் நெருங்கும் நேரத்தில் சமையல் எரிவாயு விலையைக் குறைப்பதையும், தேர்தலுக்குப் பின்னர் விலையை ஏற்றுவதையும் வாடிக்கையாக வைத்துள்ள ஒன்றிய ஆட்சியாளர்களுக்கு மக்கள் பாடம் புகட்டக் காத்திருக்கிறார்கள்" எனக் கூறியிருந்தார்.

    இந்த நிலையில் அறிக்கை வெளியிட்டுள்ள விஜயை தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார். விஜய் தொடர்பாக தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:-

    விஜய் படங்களின் டிக்கெட் விலை என்ன?. பாமர மக்களுக்காக நடிக்கிறேன், குறைந்த விலையிலோ, இலவசமாகவோ டிக்கெட் கொடுக்கிறேன் என இருக்க வேண்டியதுதானே? யார் தடுத்தார்கள்? உங்களுக்கு லாபமென்றால் பேச மாட்டீர்களா? ஒன்றும் தெரியாமல் விஜய் போன்றோர் பேச வேண்டாம்.

    விஜய்க்கு சினிமாவில் நடிக்கவும், வசனம் பேசவும், நடனமாடவும், ஏமாற்றவும்தான் தெரியும். அரசியலோ, பொருளாதாரமோ தெரியாது.

    பண மதிப்பிழப்பு (Demonetization) மூலம் கருப்பு பணத்தை பிரதமர் ஒழித்தாரே, அப்படி திரைத்துறையில் பிளாக் (Black) டிக்கெட் ஒழிக்கப்பட்டதா? அதை கட்டுப்படுத்தினீர்களா நீங்கள்? சினிாமாவில் Black-ல் டிக்கெட் விற்றீர்கள். சினிமா டிக்கெட் விலையை உயர்த்தினீர்கள். உள்ளே பாப்கார்கனை கூட உயர்த்திதான் விற்றீர்கள்.

    இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

    • 7-வது முறையாக வணிகத்திற்கான கியாஸ் சிலிண்டர்கள் விலை குறைக்கப்பட்டுள்ளது.
    • வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை.

    சென்னை :

    அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மற்றும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையின் ஏற்ற இறக்கம் ஆகியவற்றின் அடிப்படையில், பெட்ரோலிய பொருட்களின் விலைகளை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் கூட்டமைப்பு மாற்றியமைத்து வருகிறது. அதனடிப்படையில், சமையல் கியாஸ் சிலிண்டர் விலை மாதம் ஒருமுறை அல்லது மாதம் இருமுறையும் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது.

    தொடர்ந்து சமையல் கியாஸ் விலை உயர்ந்து வருவதால் வணிகர்களும், வீட்டு உபயோக சிலிண்டர் உயர்த்தும் போது இல்லத்தரசிகளும், சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை கட்டுக்குள் வைத்து கொள்ள வேண்டும் என்று தொடர்ந்து அரசுக்கும் எண்ணெய் நிறுவனங்களுக்கும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இதேபோல தான் பெட்ரோல் மற்றும் டீசலுக்கான விலையும் தினமும் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நவம்பர் மாதத்துக்கான சமையல் கியாஸ் சிலிண்டர்கள் விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பினர் நேற்று அறிவித்தனர்.

    அதன்படி வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர் கட்டணத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஆனால், வணிக பயன்பாட்டிற்கான சமையல் கியாஸ் சிலிண்டர் கட்டணம் ரூ.116.50 குறைக்கப்பட்டு உள்ளது என்று விலை நிலவரத்தை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன.

    19 கிலோ எடை கொண்ட வணிகத்திற்கான கியாஸ் சிலிண்டர் ஒன்றின் விலை கடந்த மாதம் ரூ.2009.50-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது 116.50 ரூபாய் குறைக்கப்பட்டு ரூ.1,893-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மே மாதத்துக்கு பிறகு தொடர்ந்து 7-வது முறையாக தற்போது வணிகத்திற்கான கியாஸ் சிலிண்டர்கள் விலை குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இதேபோல் வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் சமையல் கியாஸ் சிலிண்டர் விலையானது தொடர்ந்து 4 மாதமாக எந்த விதமாற்றமும் செய்யப்படாமல் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 14.2 கிலோ எடையுள்ள வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர் ரூ.1,068.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    ரஷியா-உக்ரைன் போர் ஆரம்பித்ததில் இருந்து கச்சா எண்ணெய் விலைகள் அதிகரித்தது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர் ஆகியவற்றின் விலை கடுமையாக உயர்ந்தது. ஆனால் தற்போது கச்சா எண்ணெய் விலை குறைய தொடங்கியிருக்கிறது. இதனாலேயே தற்போது பெட்ரோல், டீசல் விலையில் பெரிய மாற்றமின்றி தொடருகிறது என்று எண்ணெய் நிறுவன கூட்டமைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • பழைய பாளையம் பகவதியம்மன் கோவில் பின்புறம் வசித்து வருபவர் ஆதிமூர்த்தி (வயது65). இவர் அப்பகுதியில் அங்காளம்மன் கோவில் பூசாரியாக உள்ளார்.
    • சிலிண்டரின் கேஸ் டியூப் வழியாக கேஸ் கசிந்து சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது.

    கொல்லிமலை:

    நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அடுத்த பழைய பாளையம் பகவதியம்மன் கோவில் பின்புறம் வசித்து வருபவர் ஆதிமூர்த்தி (வயது65). இவர் அப்பகுதியில் அங்காளம்மன் கோவில் பூசாரியாக உள்ளார். இவரது மனைவி அமராவதி(40). இவர் நேற்று இரவு வீட்டில் சமையல் செய்து கொண்டிரு ந்தார்.

    அப்போது சிலிண்டரின் கேஸ் டியூப் வழியாக கேஸ் கசிந்து சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஆதிமூர்த்தி, அமராவதி, மகள் சுமதி(15), மகன் பிரவீன்குமார்(12)ஆகிய 4 பேரின் கை, கால்களில் காயம் ஏற்பட்டுள்ளது.

    நாமக்கல் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். பின் அக்கம் பக்கத்தினர் 4 பேரையும் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து சேந்தமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

    • கியாஸ் ஏஜென்சியில் வேலை செய்யும் ஊழியர் சிலிண்டரை நுகர்வோர் வீட்டிற்கு கொண்டு வந்தார்.
    • கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், அனந்தபுரத்தை சேர்ந்த நுகர்வோர் ஒருவர் கடந்த 2019-ம் ஆண்டு அக்டோபர் 7-ந் தேதி அங்குள்ள கியாஸ் ஏஜென்சியில் சிலிண்டர் பதிவு செய்து இருந்தார்.

    கியாஸ் ஏஜென்சியில் வேலை செய்யும் ஊழியர் சிலிண்டரை நுகர்வோர் வீட்டிற்கு கொண்டு வந்தார். அப்போது ஊழியர் கியாஸ் விலையை விட ரூ.30 கூடுதலாக கொடுக்க வேண்டும் என நுகர்வோரிடம் கேட்டார்.

    அதற்கு நுகர்வோர் ரூ.30 கூடுதலாக தர முடியாது என கூறியதால் ஊழியர் மீண்டும் கியாஸ் சிலிண்டரை ஏஜென்சிக்கு கொண்டு சென்றார்.

    இதனால் பாதிக்கப்பட்ட நுகர்வோர் இது குறித்து நுகர்வோர் குடிமை பொருள் வழங்கல் அலுவலரிடம் புகார் தெரிவித்தார். அங்கு இருந்த அதிகாரிகள் கூடுதல் கட்டணம் செலுத்தினால் மட்டுமே ஏஜென்சியிலிருந்து சிலிண்டர் வழங்கப்படும் என கூறி வேறு ஒரு ஏஜென்சிக்கு நுகர்வோர் பெயரை மாற்றினார்.

    இதனால் ஒரு வாரத்திற்கு மேல் கியாஸ் சிலிண்டர் இல்லாமல் சமையல் செய்ய முடியாமல் அவதி அடைந்த நுகர்வோர் இது குறித்து நுகர்வோர் ஆணையத்தில் புகார் செய்தார். நுகர்வோர் ஆணைய உறுப்பினர் ஸ்ரீ லதா விசாரணை நடத்திய போது, நுகர்வோரிடம் கூடுதல் பணம் கேட்ட ஊழியரை வேலையில் இருந்து நீக்கி விட்டதால் வழக்கை கைவிட வேண்டுமென தெரிவித்தனர்.

    கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பில் நுகர்வோரிடம் சிலிண்டர் விலை விட கூடுதலாக பணம் கேட்டது உங்கள் ஏஜென்சியை சேர்ந்த ஊழியர்.

    அதனால் அவர் செய்த குற்றத்திற்கு நீங்களே பொறுப்பு ஏற்றுக் கொள்ள வேண்டும். எனவே பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு இழப்பீட்டு தொகையாக ரூ.1 லட்சம் வழங்க நுகர்வோர் ஆணைய உறுப்பினர் ஸ்ரீ லதா உத்தரவு பிறப்பித்தார்.

    • சிலிண்டர் ஒன்றுக்கு ரூ. 100 மானியம் அளிப்போம் என்ற வாக்குறுதி நிறைவேற்றாமல் உள்ளது.
    • ஏழை, எளிய நடுத்தர மக்களின் பொருளாதார சுமை கூடும்.

    பல்லடம் :

    பல்லடத்தில் உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து நிருபர்களிடம் கூறியதாவது:- மத்திய அரசு தற்போது கியாஸ் சிலிண்டரின் விலையை உயர்த்தியிருப்பது ஏழை எளியவர்களை கடுமையாக பாதிக்கும். கியாஸ் சிலிண்டர் என்பது அனைத்து தரப்பு மக்களுக்கும் அத்தியாவசிய தேவையாக இருக்கிறது. கொரோனா காலத்திற்கு பின்னர் வேலைவாய்ப்புகள் குறைந்ததால் ஏழைகளின் குடும்ப சுமை அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் அத்தியாவசிய தேவைகளான சமையல் கியாஸ் விலை உயர்வு ஏழை, எளிய, மற்றும் நடுத்தர வர்க்கத்தினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

    ஏற்கனவே தமிழக அரசு தேர்தல் வாக்குறுதியாக கியாஸ் சிலிண்டரின் விலையை குறைக்கும் வகையில் சிலிண்டர் ஒன்றுக்கு ரூ. 100 மானியம் அளிப்போம் என்று கொடுத்த வாக்குறுதியை இதுவரை நிறைவேற்றாமல் உள்ளது. இந்த நிலையில் மத்திய அரசு வீட்டு உபயோகத்திற்கான கியாஸ சிலிண்டரின் விலையை உயர்த்தியதால் ஏழை, எளிய நடுத்தர மக்களின் பொருளாதார சுமை கூடும். எனவே மத்திய அரசு உயர்த்தப்பட்டு இருக்கும் கியாஸ் சிலிண்டரின் விலையை திரும்ப பெற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சென்னையில் சமையல் கியாஸ் முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ஓரிரு நாளில் கியாஸ் சிலிண்டர் வினியோகம் வழங்கப்பட்டு வந்தது.
    • புதிய சிலிண்டர்கள் கிடைத்த பிறகு சிலிண்டரை உடனுக்குடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

    சென்னை:

    சென்னையில் சமையல் கியாஸ் முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ஓரிரு நாளில் கியாஸ் சிலிண்டர் வினியோகம் வழங்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் சென்னையில் சில இடங்களில் சமையல் கியாஸ் சிலிண்டர் வினியோகம் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. புதிய சிலிண்டர்கள் உடனே வராததால் பொது மக்கள் தவிப்புக்குள்ளாகி உள்ளனர்.

    திருவான்மியூர் பகுதியில் வழக்கமாக முன்பதிவு செய்த 3 நாட்களுக்குள் சிலிண்டர் வினியோகம் செய்யப்பட்டு விடும். ஆனால் அங்கு முன்பதிவு செய்த 8 நாட்களுக்கு பிறகே சிலிண்டர் வினியோகம் செய்யப்படுகிறது. சில வாடிக்கையாளர்கள் கியாஸ் அலுவலகங்களுக்கே சென்று காலி சிலிண்டர்களை கொடுத்து புதிய சிலிண்டர் கேட்கிறார்கள்.

    பல வாடிக்கையாளர்கள் 2 சிலிண்டர் வைத்திருந்தாலும் கடைசி நேரத்திலேயே முன்பதிவு செய்து சிலிண்டர் கிடைக்காமல் திணறுகிறார்கள். கொரோனா தொற்று ஊரடங்கின்போது கூட சிலிண்டர் தாமதமின்றி கிடைத்தது. தற்போது சிலிண்டர் கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதாக பொது மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

    இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவன ஆலையில் ஒரு சிலிண்டரின் அடிப்பகுதி வெடித்ததால் விபத்து ஏற்பட்டது. எனவே பழைய மற்றும் துருப்பிடித்த சிலிண்டர்கள் அகற்ற நிறுவனம் முடிவு செய்தது. பழைய சிலிண்டர்களை அகற்றிய நிலையில் அதற்கு பதிலாக புதிய சிலிண்டர்கள் போதுமான அளவில் வரவில்லை. இதன் காரணமாகவே கியாஸ் சிலிண்டர் வினியோகத்தில் பின்னடைவு ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது.

    சென்னையில் தற்போது முன்பதிவு செய்து 5 நாட்களுக்கு பிறகும், மற்ற இடங்களில் 3 நாட்களுக்கு பிறகும் சிலிண்டர்கள் வினியோகம் செய்யப்படுகின்றன. புதிய சிலிண்டர்கள் கிடைத்த பிறகு சிலிண்டரை உடனுக்குடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

    • சென்னையில் உள்ள பல பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே சமையல் கியாஸ் சிலிண்டருக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.
    • புதிய சிலிண்டர்கள் வராததால் வினியோகம் செய்வதில் தாமதம் ஏற்பட்டது.

    சென்னை:

    சென்னையில் உள்ள பல பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே சமையல் கியாஸ் சிலிண்டருக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.

    தற்போது பழைய சிலிண்டர்களையும், துருபிடித்த சிலிண்டர்களையும் மாற்றும் நடவடிக்கையில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் ஈடுபட்டது. அதற்கு பதிலாக புதிய சிலிண்டர்கள் வரவழைக்கப்பட்டன.

    ஆனால் போதுமான அளவுக்கு புதிய சிலிண்டர்கள் வராததால் வினியோகம் செய்வதில் தாமதம் ஏற்பட்டது. இதன் காரணமாக சென்னையில் சமையல் கியாஸ் சிலிண்டருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. சென்னையில் வழக்கமாக முன்பதிவு செய்த ஓரிரு நாளில் கியாஸ் சிலிண்டர் கிடைத்து விடும். ஆனால் தற்போது 8 நாட்கள் ஆகிறது. இதையடுத்து சென்னையில் சிலிண்டர் தட்டுப்பாட்டை போக்க பக்கத்து மாநிலங்களில் இருந்து வரவழைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி கர்நாடகா, கேரளா, தெலுங்கானா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் இருந்து சென்னைக்கு கியாஸ் சிலிண்டர் கொண்டு வரப்படுகிறது.

    தேவைக்கு ஏற்ப தினமும் 100 லாரிகளில் சிலிண்டர் சென்னைக்கு வருகிறது. ஒவ்வொரு லாரியிலும் 366 சிலிண்டர்கள் ஏற்றி கொண்டு வரப்படுகிறது. மேலும் செங்கல்பட்டு, சேலம், ஈரோடு, மயிலாடுதுறை, மன்னார்குடி ஆகிய இடங்களில் உள்ள ஆலைகளில் இருந்தும் தினமும் 124 லாரிகளில் சிலிண்டர்கள் வருகிறது. இதன் காரணமாக தற்போது சிலிண்டர் தட்டுப்பாடு குறைந்து வருகிறது. இப்போது சென்னையில் முன்பதிவு செய்த 5 நாட்களில் சிலிண்டர் வழங்கப்படுகிறது. சென்னை நகருக்கு தினமும் 45 ஆயிரம் சிலிண்டர்கள் தேவைப்படுகிறது.

    இதை சரி செய்ய 1.25 லட்சம் சிலிண்டர்கள் கொண்டு வரப்பட உள்ளன. எனவே அடுத்த சில நாட்களில் நிலைமை சீராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • அனைத்து எண்ணெய் நிறுவன எரிவாயு முகவர்கள், மாவட்ட எரி வாயு ஒருங்கிணைப்பாளர் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள்.
    • கூட்டத்தில் எரிவாயு நுகர்வோர்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவிக்கலாம்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிவாயு நுகர்வோர்களுக்கு கியாஸ் சிலிண்டர் பதிவு செய்வதில் ஏற்படும் குறைபாடுகள், தடங்கல்கள் மற்றும் கியாஸ் சிலிண்டர் வழங்குவதில் ஏற்படும் காலதாமதம் குறித்து நுகர்வோர்கள் தங்கள் குறைகளை பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதற்கு ஏதுவாக அனைத்து எண்ணெய் நிறுவன எரிவாயு முகவர்கள், மாவட்ட எரி வாயு ஒருங்கிணைப்பாளர் மற்றும் எரிவாயு நுகர்வோர் கலந்து கொள்ளும் எரிவாயு நுகர்வோர் குறைதீர்வு கூட்டம் வருகிற 26-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மாலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நெல்லை மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் எரிவாயு நுகர்வோர்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவிக்குமாறு மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில் குமார் தெரிவித்துள்ளார். 

    • சமைக்கும்போது என்ன சமைத்தாலும், அதனை மூடி வைத்து சமைக்க வேண்டும்.
    • சின்ன சின்ன விஷயங்களில் கவனம் செலுத்தினால் கேஸ் வீணாவதைத் தடுக்கலாம்.

    நாம் அன்றாடம் பயன்படுத்தும் கேஸ் சிலிண்டர் விலை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே வரும் நிலையில் இல்லத்தரசிகள் எப்படி சிக்கமான பயன்படுத்தலாம் என்பது குறித்து பார்ப்போம்.

    சமையலைத் தொடங்குவதற்கு முன்பே வெட்டப்பட்ட காய்கள் மற்றும் தேவையான பாத்திரங்களைத் தயாராக வைத்துக் கொள்ளவும். அடுப்பில் பாத்திரத்தை வைத்துவிட்டு ஒவ்வொரு பொருட்களாக தேடித் தேடி எடுத்துப் போடுவதன் மூலம் கேஸ் அதிகம் செலவாகும்.

    ஃப்ரிட்ஜில் வைத்த உணவு மற்றும் குழம்பு பாத்திரத்தைச் சூடுபடுத்தும் முன், அதை வெப்பநிலையில் சிறிதுநேரம் வைக்கவும். ஃபிரிட்ஜில் இருந்து நேரடியாக அடுப்பில் வைத்து சூடுபடுத்தினால் கேஸ் செலவு அதிகரிக்கும்.

    சமைக்கும்போது என்ன சமைத்தாலும், அதனை மூடி வைத்து சமைக்க வேண்டும். காய்கறிகள் சமைப்பதாக இருந்தாலும் சரி, அரிசியாக இருந்தாலும் மூடி வைத்து சமைத்தால் சீக்கிரமாகவே வெந்துவிடும்.

    பிரஷர் குக்கர் மூலம் சமைப்பது நல்லது. அகலமான பாத்திரத்தில் சமைப்பது எரிபொருளைச் சேமிக்க உதவும்.

    வெந்நீர் வைக்க கேஸ் ஸ்டவ்வுக்குப் பதிலாக rod water heater பயன்படுத்தலாம்

    இண்டக்ஷன் ஸ்டவ்வில் செய்ய முடிகிற சமையலை அதிலேயே செய்யலாம். கேஸ் ரெகுலேட்டர், ட்யூப், பானர் ஆகியவற்றில் கசிவு இருக்கிறதா என்பதை அடிக்கடிப் பார்த்துக் கொள்ளவும்.

    சமையல் முடிந்தவுடன் ரெகுலேட்டர் சுவிட்சை அணைக்க மறக்க வேண்டாம். வீட்டில் அனைவரும் ஒரே நேரத்தில் சாப்பிடுவது சிறந்தது. இது உணவினைச் சூடு செய்வதை தவிர்க்கும்.

    சமைப்பதற்கு முன்னதாக அரிசி, பருப்பு, பயறு வகைகளை ஊற வைக்க வேண்டும். அப்படி ஊற வைத்து சமைத்தால் வெகு சீக்கிரமாகவே எல்லாமே வெந்துவிடும். இதன் மூலமாக சிலிண்டர் மிச்சமாகும்.

    கேஸ் அடுப்பில் உள்ள பர்னர் எப்போதும் அழுக்குகள் படியாமல் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். எண்ணெய் பிசு பிசுப்பு மற்றும் அழுக்குகள் இருந்தால் அடைப்பு ஏற்பட்டு பிரச்னை ஏற்படும். இதனால் கேஸ் லீக் ஆகும் வாய்ப்பு கூட உண்டாகும். இதனால், சிலிண்டர் சீக்கிரமாக கூட தீர்ந்துவிடும். அதனால், பர்னர் எப்போதும் சுத்தமாக இருக்கிறதா என்று பார்த்துக் கொள்ளுங்கள். அடிக்கடி தனியாக எடுத்து சுத்தம் செய்து வைப்பது நல்லது.

    காலையில் சமையலை முடிக்க வேண்டிய அவசரத்தில் ஈரமான பாத்திரங்களைக் கொண்டு சமையல் செய்வார்கள். முதல் நாள் இரவு கழுவாமல் பேட்ட பாத்திரத்தை மறுநாள் காலையில் அவசர அவசரமாக கழுவி, அதனை அப்படியே சமையலுக்கு பயன்படுத்த கூடாது. அந்த ஈரமான பாத்திரம் காய்வதற்கு 2 முதல் 4 நிமிடங்கள் வரை ஆகலாம். ஒரு நாள் இரண்டு நாள் என்றால் பரவாயில்லை. ஒவ்வொரு நாளும் இது போன்று இருந்தால் சிலிண்டர் சீக்கிரமே காலியாகிவிடும்.

    இப்படி சின்ன சின்ன விஷயங்களில் கவனம் செலுத்தி கேஸ் வீணாவதைத் தடுத்து, மிச்சப்படுத்துவதன் மூலம் மேலும் நான்கு நாட்கள் அல்லது ஒரு வாரம் சிலிண்டரைப் பயன்படுத்தலாம்.

    • இந்தியன் ஆயில் நிறுவனம் புதிதாக எடை குறைந்த அழகிய வடிவிலான புதிய 'காம் போசிட்' சிலிண்டரை அறிமுகம் செய்துள்ளது.
    • சிலிண்டர், வாயு கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டாலும் வெடிக்காத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    நாட்டின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனமான இந்தியன் ஆயில் நிறுவனம், வீடுகள், ஓட்டல்கள், வர்த்தக நிறுவனங்களுக்கு இன்டேன் என்ற பெயரில் சிலிண்டர்களை வினியோகம் செய்து வருகிறது. வீடுகளுக்கு 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டர்களும், வர்த்தக பயன்பாட்டுக்கு 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர்களும் விநியோகம் செய்யப்படுகிறது.

    இந்தநிலையில், இந்தியன் ஆயில் நிறுவனம் புதிதாக எடை குறைந்த அழகிய வடிவிலான புதிய 'காம்போசிட்' சிலிண்டரை அறிமுகம் செய்துள்ளது.

    இந்த சிலிண்டர் பாலிமர் பைபர் கிளாஸ், அதிக அடர்த்தி வாய்ந்த பாலி எத்திலின் தெர்மோ பிளாஸ்டிக்காலான வெளிப்புற ஜாக்கெட் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மிகவும் உறுதித்தன்மை கொண்ட இந்த சிலிண்டர், வாயு கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டாலும் வெடிக்காத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    அத்துடன், தற்போது பயன்பாட்டில் உள்ள இரும்பிலான உருளையை ஒப்பிடுகையில் இந்த சிலிண்டர் 50 சதவீதம் எடை குறைவானது. எனவே, பெண்களே இந்த சிலிண்டரை எளிதாக கையாள முடியும். அத்துடன், இந்த சிலிண்டர் துருப்பிடிக்காது. இப்புதிய சிலிண்டரை பெற விரும்பும் புதிய வாடிக்கையாளர்கள் ரூ.3,500 பாதுகாப்பு வைப்புத்தொகையாக (செக்யூரிட்டி டெபாசிட்) செலுத்த வேண்டும்.

    பழைய வாடிக்கையாளர்கள் ஏற்கெனவே செலுத்திய காப்புத்தொகையுடன், புதிய பாதுகாப்பு வைப்புத் தொகையுடன் எவ்வளவு வித்தியாசம் உள்ளதோ அத்தொகையை செலுத்தினால் போது மானது.

    மேலும், புதிய சிலிண்டர்களை பெற முன்பதிவு செய்ய 8655677255 என்ற எண்ணுக்கு மிஸ்டுகால் கொடுக்கலாம் என இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    • வீட்டில் இருந்த கியாஸ் சிலிண்டர் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்தது.
    • தீயணைப்பு நிலையத்திற்கு அக்கம் பக்கத்தினர் தகவல் தெரிவித்தனர்.

    திசையன்விளை:

    நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள சுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் நந்தகோபால். இவரது மனைவி மகாராணி(வயது 65). முன்னாள் கவுன்சிலரான இவர் தனியாக ஒரு வீட்டில் வசித்து வந்தார்.

    இந்தநிலையில் நேற்று நள்ளிரவில் வீட்டில் மகாராணி தூங்கி கொண்டிருந்தார். அப்போது வீட்டில் இருந்த கியாஸ் சிலிண்டர் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. தூங்கி கொண்டிருந்த மகாராணி இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தார். மேலும் இந்த சிலிண்டர் வெடிப்பால் வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்து சாம்பலாயின.

    இதுதொடர்பாக திசையன்விளை தீயணைப்பு நிலையத்திற்கு அக்கம் பக்கத்தினர் தகவல் தெரிவித்தனர். உடனடியாக நிலைய அலுவலர் ராஜா தலைமையில் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். தகவல் அறிந்து வந்த திசையன்விளை போலீசார், மகாராணி உடலை மீட்டு நெல்லை அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    உயிரிழந்த மகாராணிக்கு கணவர், 4 மகன்கள், 2 மகள்களும் உள்ளனர். இதில் நந்தகோபாலுடன் ஒரு மகன் மற்றும் மகள் சுப்பிரமணியபுரத்தில் வேறு ஒரு வீட்டில் வசித்து வருகின்றனர்.

    ×