என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்திய கம்யூனிஸ்ட் கட்சி"

    • ஆளுநரை கண்டித்து டிசம்பர் 29-ந்தேதி ஆளுநர் மாளிகைக்கு முன்பாக முற்றுகைப் போராட்டம் நடைபெறும்.
    • நாளை விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி நடத்தப்பட உள்ளது.

    திருச்சி:

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் இரா.முத்தரசன் திருச்சி மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக ஒன்றிய அரசு செயல்பட்டு வருகிறது. நாட்டில் உள்ள சுதந்திரமான அமைப்புகள் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. அந்த அமைப்புகள் ஒன்றிய அரசின் உத்தரவுகளுக்காக காத்திருக்கின்றன.

    அரசியல் சட்டத்தை ஒன்றிய அரசு சீர்குலைத்து வருகிறது என்பதை நிரூபிக்கும் விதமாக தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் நடந்துள்ளது. இந்த அவசர நியமனம் குறித்து உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

    இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. இந்த நாட்டை சனாதனம் ஒற்றுமைப்படுத்தியது என ஆளுநர் பேசிவருகிறார். உண்மையில் சனாதனம் மக்களை பிளவுபடுத்தியது. ஆளுநர் ரவி தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு ஆர்.எஸ்.எஸ்.சில் இணைந்து அவர் செயல்படட்டும். ஆளுநரை பதவி நீக்கம் செய்ய வேண்டும். அவரை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும்.

    ஆளுநரை கண்டித்து டிசம்பர் 29-ந்தேதி ஆளுநர் மாளிகைக்கு முன்பாக முற்றுகைப் போராட்டம் நடைபெறும். நாளை (26-ந்தேதி) விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி நடத்தப்பட உள்ளது.

    மின்வாரிய கணக்கெடுப்பு அட்டையுடன், ஆதார் எண்ணை இணைப்பதற்கு காலக்கெடு வழங்க வேண்டும். அதுவரை மின் கட்டணம் வசூலிக்க மாட்டோம், மின் இணைப்பை துண்டிப்போம் என்ற முடிவை மின்வாரியம் கைவிட வேண்டும். தி.மு.க. தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதிகள் சிலவற்றை நிறைவேற்றியுள்ளது.

    தமிழ்நாட்டில் காவல் துறையால் தேடப்படும் நபர்கள் பா.ஜ.க.வில் அடைக்கலம் பெற்றுள்ளனர். அங்கு அவர்கள் பொறுப்புகளிலும் இருக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழக கவர்னர் ஆர்.என். ரவி கவர்னர் மாளிகையில் தேநீர் விருந்து அளிப்பது வழக்கம்.
    • கவர்னர் செயல்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கட்சிகள் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    நாடு முழுவதும் குடியரசு தின விழா வருகிற 26-ந் தேதி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

    குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழக கவர்னர் ஆர்.என். ரவி கவர்னர் மாளிகையில் தேநீர் விருந்து அளிப்பது வழக்கம். இந்த தேநீர் விருந்தில் கலந்துகொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், அரசு உயரதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும்.

    இந்நிலையில் குடியரசு தினத்தன்று கவர்னர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் தெரிவித்துள்ளன.

    கவர்னர் ஆர்.என்.ரவி செயல்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கட்சிகள் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், கவர்னரின் நடவடிக்கைகளை புறக்கணிக்கிறோம். தமிழ்நாட்டின் கலாச்சாரம், பண்பாடு, கலை, இலக்கியங்களுக்கு எதிராக கவர்னர் பேசுகிறார். வரலாற்றை சிதைக்கும் வகையில் கவர்னர் பேசி வருகிறார் என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ. செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

    ஆர்.எஸ்.எஸ். தொண்டனை போல் செயல்படுகிறார் கவர்னர் என்று மார்க்சிஸ்ட் கம்யூ. மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

    • காங்கிரஸ் கட்சியுடனான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது.
    • கடந்த 2019 பாராளுமன்ற தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திருப்பூர், நாகப்பட்டினம் என 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. முதலில் இந்த கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியுடனான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி நாளை தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவுடன் பேச உள்ளது.

    இந்நிலையில், தி.மு.க.- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இடையே வருகிற 3-ந்தேதி தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சுப்பராயன் எம்.பி., முன்னாள் எம்.எல்.ஏ பழனிசாமி, மாநில துணை செயலாளர் மு.வீரபாண்டியன் ஆகியோர் பேச்சுவார்த்தையில் பங்கேற்கின்றனர்.

    கடந்த 2019 பாராளுமன்ற தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திருப்பூர், நாகப்பட்டினம் என 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.

    • அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை 4 மணிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
    • 2 மக்களவை தொகுதி, ஒரு ராஜ்யசபா சீட் கேட்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கி நடைபெற்று வருகிறது. தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை 4 மணிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

    இந்நிலையில், மக்களவை தேர்தலையொட்டி தி.மு.க. கூட்டணியில் கூடுதல் தொகுதி கேட்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    4 விருப்பத் தொகுதிகளை குறிப்பிட்டு 2 மக்களவை தொகுதி, ஒரு ராஜ்யசபா சீட் கேட்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இதனிடையே, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒரு மக்களவை தொகுதி மற்றும் ஒரு மாநிலங்களவை தொகுதி ஒதுக்க தி.மு.க. திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • இரண்டு மக்களவை மற்றும் ஒரு மாநிலங்களவை தொகுதியை கேட்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திட்டம்.
    • 4 விருப்ப தொகுதிகள் பட்டியலை திமுகவிடம் இந்திய கம்யூனிட் கட்சி வழங்கியது.

    சென்னையில் திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில், பாராளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக உடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முதற்கட்ட பேச்சுவார்த்தையை நடத்தியது.

    இதில், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில் அமைச்சர் கே.என்.நேரு, ஆ.ராசா உள்ளிட்டோர் அடங்கிய குழுவுடன் இந்திய கம்யூனிட்ஸ்ட் கட்சி பேச்சுவார்த்தை நடத்தியது.

    இந்த கூட்டத்தில், 4 விருப்ப தொகுதிகள் பட்டியலை திமுகவிடம் இந்திய கம்யூனிட் கட்சி வழங்கியது. இதில், இரண்டு மக்களவை மற்றும் ஒரு மாநிலங்களவை தொகுதியை கேட்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திட்டமிட்டுள்ளது.

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திருப்பூர், நாகை ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

    கடந்த முறையை விட கூடுதலாக தொகுதிகளைக் கேட்டுள்ளோம் என்று தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு இந்திய கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் குழு பேட்டியளித்தது.

    • கேரளாவை பொறுத்தவரை, இடதுசாரி ஜனநாயக முன்னணி மற்றும் காங்கிரஸ் கூட்டணிக்கு இடையே தான் போட்டி.
    • மூத்த தலைவர்களில் ஒருவரான பன்னியன் ரவீந்திரன் திருவனந்தபுரம் தொகுதியிலும், முன்னாள் மந்திரி சுனில் குமார் திருச்சூரிலும், சி.ஏ.அருண்குமார் மாவேலிக்கரையிலும் போட்டியிடுகின்றனர்.

    திருவனந்தபுரம்:

    மக்களவை தேர்தல் வருகிற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படும் சூழலில், அனைத்து பிரதான கட்சிகளும், தங்களது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை தொடங்கிவிட்டன.

    கேரள மாநிலத்தில் மொத்தம் 20 மக்களவை தொகுதிகள் உள்ளன. அவற்றில் வயநாடு, திருவனந்தபுரம் உள்ளிட்ட 15 தொகுதிகள் தற்போது காங்கிரஸ் கட்சியின் வசம் உள்ளன. அந்த தொகுதிகளை மீண்டும் கைப்பற்றிவிட வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸ் கட்சி களமிறங்க உள்ளது.

    அதேபோல் மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் இடம்பெற்றுள்ள இடதுசாரி ஜனநாயக முன்னணியும், தனது கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அந்த கூட்டணியில் எந்தெந்த கட்சிக்கு எத்தனை இடங்கள் என்பது இறுதி செய்யப்பட்டுவிட்டதாக தெரிகிறது.

    இந்நிலையில் தனது கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரத்தை இந்திய கம்யூனிஸ்டு கட்சி நேற்று வெளியிட்டது. அதன்படி ராகுல்காந்தி எம்.பி.யாக உள்ள வயநாடு தொகுதியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் ஆனி ராஜா போட்டி யிடுகிறார்.

    இவர் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜாவின் மனைவி ஆவார். அவர் மட்டுமின்றி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான பன்னியன் ரவீந்திரன் திருவனந்தபுரம் தொகுதியிலும், முன்னாள் மந்திரி சுனில் குமார் திருச்சூரிலும், சி.ஏ.அருண்குமார் மாவேலிக்கரையிலும் போட்டியிடுகின்றனர்.

    வயநாடு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பது பற்றி டி.ராஜாவின் மனைவி ஆனி ராஜா கூறியிருப்பதாவது:-

    வயநாடு தொகுதியில் போட்டியிட கொடுத்திருப்பது ஒரு பெரிய வாய்ப்பு. அந்த வாய்ப்பை கட்சி என்னிடம் ஒப்படைத்துள்ளது. இந்த முறை மக்கள் ஆதரவை நாங்கள் வெல்வோம் என்று நாங்கள் நம்புகிறோம். நான் எப்போதும் ஆதரவுடன் இருப்பேன். நான் அரசியல் வாழ்வில் குழந்தை படிகளை கற்றுக்கொண்ட இடம் வயநாடு.

    எங்களது கட்சி இவ்வளவு காலமாக இடதுசாரி ஜனநாயக முன்னணி கூட்டணியின் கீழ் கேரளாவில் 4 தொகுதியில் போட்டியிட்டது. இந்த முறையும் 4 தொகுதிகளில் போட்டியிடுகிறது. கேரளாவை பொறுத்தவரை, இடதுசாரி ஜனநாயக முன்னணி மற்றும் காங்கிரஸ் கூட்டணிக்கு இடையே தான் போட்டி. அதில் புதிதாக எதுவும் இல்லை. அந்த நிலைமை அப்படியே உள்ளது. எதுவும் மாறவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திமுக கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    • திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    திமுக கூட்டணியில் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுடன் நாடாளுமன்ற தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், திமுக கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன், "இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. போட்டியிடும் தொகுதிகள் குறித்து அடுத்தகட்ட பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

    அதே நேரத்தில், திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், "மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. போட்டியிடும் தொகுதிகள் குறித்து பின்னர் முடிவு செய்யப்படும் என தெரிவித்தார்.

    அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

    ஏற்கனவே திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியும், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கையை டி.ராஜா இன்று வெளியிட்டார்.
    • 100 நாள் வேலைத்திட்டம் 200 நாட்கள் ஆகவும், சம்பளம் ரூ.700 ஆகவும் உயர்த்தப்படும்

    பாராளுமன்ற தேர்தலுக்கான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா இன்று டெல்லியில் வெளியிட்டார்.

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகள் விவரம் வருமாறு:-

    * புதுச்சேரி, டில்லிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும்

    * புதிய கல்விக் கொள்கை ரத்து செய்யப்படும்

    * சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்

    * 100 நாள் வேலைத்திட்டம் 200 நாட்கள் ஆகவும், சம்பளம் ரூ.700 ஆகவும் உயர்த்தப்படும்

    * கவர்னர் பதவி நீக்கப்படும்

    * சிஏஏ சட்டம் ரத்து

    * மகளிர் இட ஒதுக்கீடு உடனடியாக அமல்படுத்தப்படும்

    * பிஎம் கேர்ஸ் நிதி விவரங்கள் வெளியிடப்படும்.

    * சமூக நல மற்றும் அரசின் நலத்திட்டங்களைப் பெற ஆதார் கட்டாயம் என்ற முறை நீக்கப்படும்

    * நிதி ஆயோக் குழு கலைத்துவிட்டு திட்டக்குழு மீண்டும் கொண்டு வரப்படும்.

    *நுழைவுத்தேர்வுகள் உள்ளிட்டவற்றில் மாநில அரசுகளே முடிவெடுக்கும் வகையில் மாநில பட்டியலுக்கு மாற்றப்படும்.

    * சுகாதாரம் மற்றும் கல்விக்கான நிதியை அதிகரிக்க நடவடிக்கை

    * நகர்ப்புற வேலைவாய்ப்பு உறுதி சட்டம் இயற்றப்படும்.

    * பழைய பென்சன் திட்டம் மீண்டும் அமல்

    • சென்னை மயிலாப்பூர் தெற்கு மாட வீதியில் கடந்த 1872ம் ஆண்டு ‘தி மயிலாப்பூர் இந்து சாசுவத நிதி லிட்’ என்ற பெயரில் நிதி நிறுவனம் தொடங்கப்பட்டது
    • இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களின் ரூ.525 கோடியை திரும்ப கொடுக்க மறுப்பதாக பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்

    சென்னை மயிலாப்பூர் தெற்கு மாட வீதியில் கடந்த 1872ம் ஆண்டு 'தி மயிலாப்பூர் இந்து சாசுவத நிதி லிட்' என்ற பெயரில் நிதி நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்த நிதி நிறுவனத்தில் தற்போது 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நிரந்தர வைப்பு தொகை உறுப்பினர்களாக உள்ளனர். இதில் பெரும்பாலும் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் மற்றும் முதியவர்கள் தங்களது ஓய்வூதிய பணத்தை அதிகளவில் முதலீடு செய்துள்ளனர். இந்த நிதி நிறுவனம் முதலீடு செய்யும் பணத்திற்கு 10 முதல் 11 சதவீதம் வரை வட்டி அளிப்பதாக அறிவிக்கப்பட்டது.

    இதனிடையே இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களின் ரூ.525 கோடியை திரும்ப கொடுக்க மறுப்பதாக பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் 150க்கும் மேற்பட்டோருக்கு வழங்கிய காசோலை பணம் இல்லாமல் திரும்பியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தினமும் பாதிக்கப்பட்டவர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

    இந்நிலையில், முதலீட்டாளர்களின் ₹525 கோடி மோசடி செய்துள்ளதாக எழுந்துள்ள புகாரால், அந்த நிதி நிறுவனத்தின் தலைவராக உள்ள சிவகங்கை பாஜக கூட்டணி வேட்பாளர் தேவநாதன் யாதவ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி புகார் அளித்துள்ளது.

    அந்த புகாரில், "சென்னை, மயிலாப்பூர் இந்து சாசுவத நிதி லிமிடெட் நிதி நிறுவனத்தின் வைப்புத்தொகையின் மீது திரட்டப்பட்ட வட்டியை முதலீட்டாளர்களுக்கு செலுத்த மறுப்பதாக கூறப்படுகிறது. அந்த நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் பணம் இல்லாததால் நிறுவனம் வழங்கிய கிட்டத்தட்ட 150 காசோலைகள் திரும்ப வந்துள்ளது.

    அந்த நிதி நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர், டி.தேவநாதன் சிவகங்கை தொகுதியின் பாஜக வேட்பாளர் ஆவார். பிரதமர் அவருக்காக பிரச்சாரம் செய்கிறார்.

    ஆகவே அவர் தனது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி குற்றச் சாட்டுக்களில் இருந்து தப்பித்து விடுவாரோ என்ற அச்சம் முதலீட்டர்களுக்கு எழுந்துள்ளது.

    இத்தகைய சூழ்நிலையில் பாஜக வேட்பாளர் தேவநாதன் மீது தேர்தல் ஆணையம் தகுந்த விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநில கவுன்சில் வலியுறுத்தியுள்ளது.

    • தமிழகத்தில் நீட் தேர்வை நிரந்தரமாக தடை விதிக்க வேண்டும்.
    • வனத்துறையில் பணியாற்றும் வேட்டை தடுப்பு காவலர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    குவைத்தில் நடந்த தீ விபத்தில் இறந்தவர்களுக்கு தமிழக அரசு ரூ.5 லட்சம் வழங்கிய நிலையில், மத்திய அரசு ரூ.2 லட்சம் மட்டுமே வழங்கியுள்ளது. அதனை ரூ.25 லட்சமாக உயர்த்தி கொடுக்க வேண்டும்.

    நீட் தேர்வில் நடைபெற்ற ஏராளமான குளறுபடிகளை சரி செய்ய வேண்டும். தமிழகத்தில் நீட் தேர்வை நிரந்தரமாக தடை விதிக்க வேண்டும். விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க. வேட்பாளரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முழுமையாக ஆதரிக்கும். தி.மு.க. வெற்றிக்காக பாடுபடுவோம்.

    வனத்துறையில் பணியாற்றும் வேட்டை தடுப்பு காவலர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். வனத்தில் 40 ஆண்டுகளுக்கு மேலாக வளர்ந்து, தற்பொழுது பட்டுப்போன மூங்கில் மரங்களை வனப்பகுதியில் வாழும் பழங்குடியினரே அதனை எடுத்துச்செல்ல வனத்துறை அனுமதிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழகம் முழுவதும் சட்டநகல் எரிப்பு போராட்டம் நடைபெறும்.
    • குற்றவியல் சட்டம் குறித்து தீவிர போராட்டம் நடைபெற்று வருகிறது.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் அக்கட்சியின் அலுவலகத்தில் நடை பெற்றது. கூட்டத்தில் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா, மாநில செயலாளர் முத்தரசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பின்னர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் 40 நாடாளுமன்ற தொகுதியிலும், விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலிலும் தி.மு.க வெற்றி பெற்று இருக்கிறது. இதற்கு தமிழக மக்களுக்கு பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்து கொள்கிறோம்.

    மாஞ்சோலை தேயிலை தோட்டம், மின்கட்டண உயர்வு, வேலை உறுதித்திட்டம், மத்திய அரசின் குற்றவியல் சட்டம் குறித்து 4 நாள் கூட்டத்தில் தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளது. மின்கட்டண உயர்வு என்பது மத்திய அரசின் நிர்பந்தத்தினால் தமிழக அரசு உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

    ஆனால் மக்கள் பாதிக்கப்படுவதால், கட்டண உயர்வை திரும்பபெற வலியுறுத்தி வரும் ஜூலை 29-ந் தேதி அனைத்து மாவட்ட தலை நகரங்களிலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

    குற்றவியல் சட்டம் குறித்து தீவிர போராட்டம் நடைபெற்று வருகிறது. நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடைபெற்று வருவதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். உயர்நீதிமன்றம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. ஆகஸ்ட் 9-ந் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் சட்டநகல் எரிப்பு போராட்டம் நடைபெறும்.

    வேலை உறுதி திட்டத்தில் 4 மாத காலமாக வேலையும், ஊதியுமும் வழங்கவில்லை. ஒரு வாரத்திற்கு முன்பு ஊராட்சி மன்ற தலைவர் களிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டு உள்ளது. வேலை வழங்கப்பட வில்லை என்றால் வேலை உறுதி அளிப்பு சட்டப்படி பாதி ஊதியம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை மனு அளிக்கப்பட்டு உள்ளது.

    மத்திய அரசு இதற்கு ஒதுக்கப்படும் நிதியை குறைக்காமல், வேலை நாட்களையும், ஊதியத்தையும் அதிகரிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    மாஞ்சோலை தேயிலை தோட்டம் தனியார் வசம் தான் உள்ளது. 2028-ம் ஆண்டு வரை தனியார் வசம் தான் இருக்கும். ஆனால் அதற்குள் தொழிலா ளர்களை வெளியேற்றும் சம்பவம் நடைபெற்று வருகிறது.

    உயர் நீதிமன்றம் மாற்று ஏற்பாடுகளை செய்யாமல் வெளியேற்ற கூடாது என்று கூறி உள்ளது. தமிழக அரசு தலையிட்டு நல்ல முடிவு எடுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • சீதாராம் யெச்சூரிக்கு செயற்கை சுவாசத்தின் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
    • சீதாராம் யெச்சூரி மறைவுக்கு ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி (72) சுவாச பிரச்சனை காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    அவரது உடல்நிலை மோசமானதால், செயற்கை சுவாசத்தின் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சீதாராம் யெச்சூரி உயிரிழந்தார்.

    இந்நிலையில், சீதாராம் யெச்சூரி மறைவுக்கு ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    அதன்படி, காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில், " சீதாராம் யெச்சூரி எனது நண்பர். நம் நாட்டின் மீது தெளிவான புரிதல் கொண்டவர், அதன் கொள்கையை காப்பாற்ற நினைப்பவர். நமது நீண்ட உரையாடல்களை மிஸ் செய்வேன்.

    இந்த துயரமான நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

    தொடர்ந்து, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறுகையில்," சீதாராம் யெச்சூரி காலமானார் என்பதை அறிந்து வருந்துகிறேன். மூத்த நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த அவரை நான் அறிவேன். அவருடைய மறைவு தேசிய அரசியலுக்கு இழப்பாகும்.

    அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

    "திமுக தலைவர்கள் மீது அதிக பாசம் கொண்டவர் சீதாராம் யெச்சூரி. தமிழ் சிறப்பாக பேச கூடியவர் சீதாராம் யெச்சூரி. என்று ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

    "சீதாராம் யெச்சூரி மறைவு வருத்தம் அளிக்கிறது" என்றார்.

    ×