என் மலர்
நீங்கள் தேடியது "மீனவர்கள் விரட்டியடிப்பு"
- மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து வவுனியா சிறையில் அடைத்தனர்.
- அபராதம் கட்ட தவறினால் ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
ராமேசுவரம்:
ராமேசுவரம் அருகே பாம்பன் தெற்குவாடி துறைமுகத்தில் இருந்து கடந்த 6-ந் தேதியன்று விசைப்படகு ஒன்றில் 14 மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்று இருந்தனர். இந்த மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து வவுனியா சிறையில் அடைத்தனர்.
இந்த 14 பேரும் நேற்று மன்னார் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது நீதிபதி, 14 மீனவர்களுக்கும் இலங்கை பணம் தலா ரூ.4½ லட்சம் (இந்திய மதிப்பு ரூ.1.30 லட்சம்) அபராதம் விதித்தும் அதை கட்ட தவறினால் ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்தும், பறிமுதல் செய்த விசைப்படகை இலங்கை அரசுடைமை ஆக்கியும் உத்தரவு பிறப்பித்தார். தொடர்ந்து 14 மீனவர்களும் மீண்டும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதுவரை இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களுக்கு இலங்கை பணம் தலா ரூ.2½ லட்சம் வீதம் அபராதம் விதிக்கப்பட்ட நிலையில் தற்போது கூடுதலாக இலங்கை பணம் ரூ.2 லட்சம் என ரூ.4½ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. இந்த நடவடிக்கை தமிழக மீனவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- ராமேசுவரம் பகுதியில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வரும் 5 ஆயிரம் மீனவர்கள் வேலை நிறுத்தத்தால் வருமானத்தை இழந்துள்ளனர்.
- மீன்பிடி சார்ந்த தொழிலில் ஈடுபடும் 15 ஆயிரம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ராமேசுவரம்:
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் மற்றும் பாம்பன் பகுதிகளில் வசிக்கும் மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். 820 விசைப்படகுகள் மூலம் மீனவர்கள் இந்த தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்க செல்லும்போது இலங்கை கடற்படை அத்துமீறி வந்ததாக கைது செய்து வருவது வாடிக்கையாக உள்ளது.
இந்த நிலையில் கடந்த 5-ந்தேதி 2 படகுகளில் ராமேசுவரத்தைச் சேர்ந்த 15 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் கச்சத்தீவு அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்து மன்னார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
மீனவர்கள் சென்ற விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்து வைத்துள்ளது.
ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு 6 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றபோது அவர்களையும் இலங்கை கடற்படை சிறைபிடித்துச் சென்றது. தொடர்ந்து ராமேசுவரம் மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்து வருவதால் அச்சத்துடன் மீன்பிடிக்கச் செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ள 29 விசைப்படகுகள் மீட்கப்படாமல் உள்ளது. இதனால் அந்த விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக ராமேசுவரம் மீனவர் சங்கத்தினர் நேற்று ஆலோசனை கூட்டம் நடத்தினர். அதில் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி இன்று (7-ந்தேதி) முதல் வேலை நிறுத்த போராட்டம் நடத்துவது என்றும், நாளை (8-ந் தேதி) தங்கச்சிமடத்தில் ஆர்ப்பாட்டம் செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.
அதன்படி இன்று ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரிய விசைப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை. சின்ன விசைப்படகுகள் மட்டும் அனுமதி பெற்று மீன்பிடிக்க சென்று வருகின்றன.
ராமேசுவரம் பகுதியில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வரும் 5 ஆயிரம் மீனவர்கள் இந்த வேலை நிறுத்தத்தால் வருமானத்தை இழந்துள்ளனர். மேலும் மீன்பிடி சார்ந்த தொழிலில் ஈடுபடும் 15 ஆயிரம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று வேலை நிறுத்தம் காரணமாக ரூ.6 கோடி வரை மீன் வர்த்தகம் பாதிக்கப்படும் என்று மீனவர்கள் தெரிவித்தனர்.
இந்த போராட்டம் தொடர்பாக பெரிய விசைப்படகு மீனவர் சங்கத்தினர் கூறும்போது, இலங்கை கடற்படை ஏற்படுத்தும் தடை காரணமாக ஆண்டுக்கு 20 நாட்கள் முதல் 30 நாட்கள் வரையில் தான் மீன்பிடிக்க செல்கின்றோம். இதனால் எங்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக மாறியுள்ளது.
எனவே எங்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் வகையிலும், சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுவிக்கவும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை பெற்றுத்தரவும் மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
- கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர்களை இலங்கை கடற்படை வீரர்கள் சுற்றிவளைத்து தாக்கினர்.
- மீனவர்கள் வைத்திருந்த மீன்பிடி வலைகளை அறுத்து சேதப்படுத்தினர்.
ராமேஸ்வரம்:
இந்திய-இலங்கை கடல் எல்லையில் கச்சத்தீவு அருகே மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை கைது செய்வது, விரட்டியடிப்பது உள்ளிட்ட சம்பவங்களில் இலங்கை கடற்படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இலங்கை கடற்படையினரின் இந்த நடவடிக்கையை தடுத்து நிறுத்த மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது தமிழக மீனவர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது. இருந்தபோதிலும் தமிழக மீனவர்களுக்கு எதிரான இலங்கை கடற்படையினரின் நடவடிக்கை தொடர்ந்தபடியே இருக்கிறது.
இந்த நிலையில் நேற்றும் கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்துள்ளனர். அதுபற்றிய விவரம் வருமாறு:-
ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று மீன்வளத்துறை அலுவலகத்தில் அனுமதி பெற்று சுமார் 500 விசைப்படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் இந்திய-இலங்கை கடல் எல்லையில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது அந்த பகுதியில் இலங்கை கடற்படையினர் படகில் ரோந்து வந்துள்ளனர். 10 படகுகளில் வந்த அவர்கள் 20-க்கும் மேற்பட்ட ராமேசுவரம் மீனவர்களின் விசைப்படகுகளை சுற்றி வளைத்தனர். எல்லை தாண்டி வந்திருப்பதாக கூறி ராமேசுவரம் மீனவர்களை அவர்கள் சரமாரி தாக்கி உள்ளனர்.
மேலும் அவர்களது படகில் இருந்த மீன்பிடி வலைகளை வெட்டி சேதப்படுத்தி அங்கிருந்து விரட்டியடித்துள்ளனர். இதையடுத்து அந்த மீனவர்கள் அனைவரும் கடலில் மீன்பிடிக்க முடியாமல் கரைக்கு திரும்பினர்.
அவர்கள் இன்று அதிகாலை ராமேஸ்வரம் துறைமுகத்துக்கு வந்தனர். இலங்கை கடற்படையினர் தங்களை தாக்கி, வலைகளை சேதப்படுத்தி விரட்டியடித்தது குறித்து சக மீனவர்களிடம் கூறினர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட மீனவர்கள் கூறியதாவது:-
கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த எங்களை இலங்கை கடற்படை வீரர்கள் சுற்றிவளைத்து தாக்கினர். மேலும் நாங்கள் வைத்திருந்த மீன்பிடி வலைகளை அறுத்து சேதப்படுத்தினர். இதனால் எங்களுக்கு லட்சக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இலங்கை கடற்படையினரின் இந்த செயலால் நாங்கள் மீன்பிடிக்க வழியின்றி தவிக்கிறோம். எங்களது வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்திய-மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- இலங்கை கடற்படையினர் ஒரு விசைப்படகை சுற்றி வளைத்து படகையும், அதில் இருந்த 14 மீனவர்களையும் சிறைப்பிடித்துச் சென்றனர்.
- ராமேஸ்வரம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஒட்டுமொத்த தமிழக மீனவக் குடும்பங்களும் கவலை அடைந்துள்ளனர்.
சென்னை:
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். அவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதிக்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை விரட்டி அடித்தபோது மீனவர்கள் பயந்த நிலையில் அங்கிருந்த தப்பித்தனர்.
அப்போது இலங்கை கடற்படையினர் ஒரு விசைப்படகை சுற்றி வளைத்து படகையும், அதில் இருந்த 14 மீனவர்களையும் சிறைப்பிடித்துச் சென்றனர். இது ராமேஸ்வரம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஒட்டுமொத்த தமிழக மீனவக் குடும்பங்களும் கவலை அடைந்துள்ளனர்.
மத்திய அரசு உடனடியாக இலங்கை அரசுடன் தொடர்பு கொண்டு கைது செய்யப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த 14 மீனவர்களையும், விசைப்படகையும் மீட்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- மீனவர்கள் கைது விஷயத்தில் மத்திய அரசு இனியும் அமைதி காக்கக் கூடாது.
- இலங்கை அரசுடன் பேச்சு நடத்தி மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-
வங்கக்கடலில் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேரை அவர்களின் படகுடன் சிங்களப் படையினர் கைது செய்துள்ளனர். தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி விரட்டியடித்த சிங்களப் படையினரின் அத்துமீறல் கண்டிக்கத்தக்கது.
சிங்கள கடற்படையினரின் அத்துமீறலை பா.ம.க. தொடர்ந்து கண்டித்து வருகிறது. மத்திய அரசுக்கு முதல்-அமைச்சர் தொடர்ந்து கடிதம் எழுதி வருகிறார். ராமேஸ்வரம் மீனவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதன் பிறகும் தொடரும் சிங்களப் படையினரின் அத்துமீறலுக்கு முடிவே இல்லையா.
மீனவர்கள் கைது விஷயத்தில் மத்திய அரசு இனியும் அமைதி காக்கக் கூடாது. இலங்கை அரசுடன் பேச்சு நடத்தி மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். இப்போது கைது செய்யப்பட்டவர்களையும், ஏற்கனவே கைதானவர்களையும் விடுவிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- 3 ரோந்து படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர் ராமேசுவரம் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்ததாக கூறப்படுகிறது.
- சில படகுகளில் மீனவர்கள் மீன்களுக்காக கடலில் விரித்திருந்த வலைகளையும் வெட்டி சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
ராமேசுவரம்:
ராமேசுவரத்திலிருந்து நேற்று 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். அவர்கள் நேற்று இரவு நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு 3 ரோந்து படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர் ராமேசுவரம் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்ததாக கூறப்படுகிறது. மேலும் ஒரு சில படகுகளில் மீனவர்கள் மீன்களுக்காக கடலில் விரித்திருந்த வலைகளையும் வெட்டி சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
இதன் காரணமாக அங்கிருந்து அவசர அவசரமாக புறப்பட்ட மீனவர்கள் தனுஷ்கோடி பகுதியை நோக்கி வந்து மீன் பிடித்தனர். இலங்கை கடற்படை விரட்டியடித்த இந்த சம்பவம் குறித்து இன்று காலை மீனவர்கள் கரை திரும்பிய பின்னரே முழுமையாக தெரியவரும். மேலும் இது தொடர்பாக கியூபிரிவு மற்றும் கடலோர போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடந்த சில நாட்களாக புயல் எச்சரிக்கை காரணமாக 5 நாட்கள் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.
- வழக்கம்போல் கச்சத்தீவு கடல் பகுதியில் ராமேசுவரம் மீனவர்கள் மீன்பிடிக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
ராமேசுவரம்:
ராமேசுவரம் பகுதியில் 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடி தொழிலை செய்து வருகின்றனர். 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடித்தொழில் சார்ந்த பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்கள் வாரத்தில் 3 நாட்கள் சுழற்சி முறையில் ராமேசுவரம் துறைமுக பகுதியில் இருந்து மீன்வளத்துறை அதிகாரிகளிடம் மீன்பிடி அனுமதி சீட்டு பெற்றுக்கொண்டு பாக்ஜலசந்தி கடலோரப் பகுதியில் மீன்பிடித்து வருவார்கள்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக புயல் எச்சரிக்கை காரணமாக 5 நாட்கள் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. நேற்று காலையில் மீனவர்கள் மீன்பிடிப்பதற்கான உபகரணங்களை சேகரித்துக் கொண்டு ராமேசுவரம் துறைமுக பகுதியில் இருந்து மீன்வளத்துறை அதிகாரியிடம் மீன்பிடி அனுமதி சீட்டு பெற்றுக்கொண்டு 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர்.
இவர்கள் வழக்கம்போல் கச்சத்தீவு கடல் பகுதியில் மீன்பிடிக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் ராமேசுவரம் மீனவர்களை பார்த்ததும், ''இங்கு மீன்பிடிக்க வரக்கூடாது'' மீறி வந்து மீன்பிடித்தால் உங்களை கைது செய்வோம் என்று எச்சரித்து மீன்பிடி உபகரணங்களை சேதப்படுத்தி விரட்டி விட்டனர்.
இதனால் உயிருக்கு பயந்தாக மீனவர்கள் நேற்று நள்ளிரவே ராமேசுவரம் பகுதிக்கு படகை எடுத்துக் கொண்டு வந்து விட்டனர். இதனால் தலா ஒரு படகுக்கு ரூ.50 ஆயிரம் முதல் நஷ்டம் ஏற்பட்டதாக மீனவர்கள் தெரிவித்தனர்.
மேலும் இலங்கை கடற்படையினர் தொடர்ந்து ராமேசுவரம் மீனவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வருவதால் இந்த பிரச்சினைக்கு மத்திய, மாநில அரசுகள் நிரந்தர தீர்வு கிடைக்க செய்ய வேண்டும் என்று கூறினர்.
- மீனவர்கள் இலங்கை கடற்படையினர் தங்களை கைது செய்து விடுவார்கள் என்ற அச்சத்தில் 4 மீனவர்களும் நடுக்கடலில் குதித்து தப்பி உள்ளனர்.
- இந்திய கடல் பகுதியில் இந்திய கடலோர காவல் படையினர் போதிய பாதுகாப்பு அளிக்கவில்லை என்றும் குற்றம்சாட்டினர்.
ராமேசுவரம்:
ராமேசுவரத்தை அடுத்துள்ள தங்கச்சிமடம் மாந்தோப்பு பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் அந்தோணி அடிமை என்பவருக்கு சொந்தமான நாட்டுப்படகில் மண்டபம் கடலோர பகுதியில் இருந்து நேற்று காலை மீன்பிடிக்க சென்றனர்.
அந்த படகில் ஒரே குடும்பத்தை சேர்ந்த அந்தோணி அடிமை, லிவிங்ஸ்டன், திருமன், சபரி உள்ளிட்ட 4 மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். அவர்கள் நள்ளிரவு 12 மணி அளவில் தனுஷ்கோடிக்கும் கச்சத்தீவுக்கும் இடையே இந்திய கடல் பகுதியில் நாட்டுப்படகில் மீன் பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக ரோந்து படகில் வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்கள் எல்லைதாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை ரோந்து படகு மூலம் நாட்டுப்படகு மீது மோதி உள்ளனர். இதில் நாட்டுபடகின் முன்பகுதி இரண்டாகப் பிளந்தது.
இதனையடுத்து மீனவர்கள் இலங்கை கடற்படையினர் தங்களை கைது செய்து விடுவார்கள் என்ற அச்சத்தில் 4 மீனவர்களும் நடுக்கடலில் குதித்து தப்பி உள்ளனர்.
மேலும் இலங்கை கடற்படையினர் இனி இந்த பகுதியில் மீன் பிடிக்க வரக்கூடாது என தெரிவித்து சென்றதாக பாதிக்கப்பட்ட மீனவர்கள் கூறினர்.
இதனை தொடர்ந்து உயிருக்கு போராடிய மீனவர்கள் தாங்கள் அணிந்திருந்த கைலிகள், சட்டை, பனியன் உள்ளிட்ட வகைகளை வைத்து படகின் உடைந்த பகுதியை அடைத்து தண்ணீரை வெளியேற்ற முயற்சித்து உயிருக்கு போராடி வந்த நிலையில், இதுபற்றி அறிந்த சக மீனவர்கள் ஒரு விசைப்படகில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆபத்தான நிலையில் இருந்த 4 மீனவர்களை மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர்.
இலங்கை கடற்படை மோதியதால் ரூ.2 லட்சம் மதிப்பிலான நாட்டு படகு மற்றும் மீன் பிடி சாதனங்கள் சேதமடைந்து இழப்பு ஏற்பட்டதாகவும், இந்திய கடல் பகுதியில் இந்திய கடலோர காவல் படையினர் போதிய பாதுகாப்பு அளிக்கவில்லை என்றும் குற்றம்சாட்டினர்.
- கடந்த 45 ஆண்டுகளாக, 800க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கொல்லப்பட்டுள்ளனர்.
- தொடர்ந்து தமிழக மீனவர்களை கொடூரமாக தாக்கி, அவர்களின் படகுகளை சேதப்படுத்தப்படுத்துகின்றனர்.
சென்னை:
இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து நேற்று பாராளுமன்ற மேல் சபையில் நேரமில்லா நேரத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ எம்.பி. பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
கடந்த 45 ஆண்டுகளாக, 800க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து தமிழக மீனவர்களை கொடூரமாக தாக்கி, அவர்களின் படகுகளை சேதப்படுத்தப்படுத்துகின்றனர். மீன்பிடி வலைகளையும் சேதப்படுத்துகிறார்கள். அண்மைக்காலமாக படகுகளை கைப்பற்றி, ஏலத்தில் விட்டுவிடுகின்றனர். இதனால் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்புக்கு உள்ளாகிறது.
இலங்கைக் கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட மீனவர்களின் குடும்பத்திற்கு இலங்கை அரசாங்கத்திடமிருந்து உரிய இழப்பீட்டுத் தொகையை இந்திய அரசு பெற்றுத் தர வேண்டும். இலங்கை கடற்படையினரின் இந்த இடைவிடாத துன்புறுத்தலுக்கு நிரந்தர தீர்வு காண இலங்கை அரசுடன் இந்தியா உயர்மட்ட பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினர் நடத்தும் தாக்குதல் மற்றும் கைது நடவடிக்கை தொடர்ந்தபடியே உள்ளது.
- இலங்கை கடற்படையினர் மீனவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களை கடலுக்குள் கொட்டியுள்ளனர்.
ராமேசுவரம்:
இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே உள்ள கடல் பரப்பில் கச்சத்தீவு அருகே மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களுக்கு எதிரான நடவடிக்கையில் இலங்கை கடற்படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
அதாவது தமிழக மீனவர்களை கைது செய்வது, அவர்களது படகுகளை பறிமுதல் செய்வது, படகுகள் மற்றும் மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்தி விரட்டி அடிப்பது உள்ளிட்ட செயல்களில் இலங்கை கடற்படை தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் தமிழக மீனவர்கள் மீன்பிடித்தொழிலை மேற்கொள்ள முடியாமல் போவது மட்டுமின்றி, லட்சக்கணக்கில் நஷ்டத்தையும் சந்திக்க நேரிடுகிறது. தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் மற்றும் கைது நடவடிக்கையை தடுக்கும் வகையில் கச்சத்தீவை மீட்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தமிழக மீனவர்களின் வெகுநாள் கோரிக்கையாக இருந்து வருகிறது.
இருந்தபோதிலும் தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினர் நடத்தும் தாக்குதல் மற்றும் கைது நடவடிக்கை தொடர்ந்தபடியே உள்ளது. இந்த நிலையில் நேற்று எல்லைதாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி ராமேசுவரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் அடித்து விரட்டிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
அதுபற்றிய விவரம் வருமாறு:-
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று காலை 524 விசைப்படகுகளில் 2,500க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். அவர்கள் வழக்கம்போல் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அந்த பகுதியில் ரோந்து சுற்றி வந்த இலங்கை கடற்படையினர், ராமேசுவரம் மீனவர்களின் 8 விசைப்படகுகளை சுற்றி வளைத்தனர். பின்பு அந்த படங்களில் ஏறிய இலங்கை கடற்படையினர், மீனவர்களின் படகுகளில் இருந்த மீன்பிடி வலைகளை அறுத்து சேதப்படுத்தி உள்ளனர்.
மேலும் மீனவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களை கடலுக்குள் கொட்டியுள்ளனர். இதையடுத்து அந்த மீனவர்கள் அனைவரையும் எல்லைதாண்டி மீன்பிடிப்பதாக கூறி கம்பு மற்றும் கற்களால் தாக்கி விரட்டியடித்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளான 50-க்கும் மேற்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் தொடர்ந்து மீன் பிடிக்காமல் கரைக்கு திரும்பினர். அவர்கள் நேற்று இரவு ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்துக்கு வந்து சேர்ந்தனர். அவர்கள் தங்களை இலங்கை கடற்படையினர் அடித்து விரட்டியது குறித்து சக மீனவர்களிடம் தெரிவித்தனர்.
அதனைக்கேட்டு மற்ற மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இலங்கை கடற்படையினரின் தாக்குதலால் தங்களுக்கு லட்சக்கணக்கில் இழப்பு ஏற்பட்டு இருப்பதாகவும், தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் ராமேசுவரம் மீனவர்கள் தெரிவித்தனர்.
தமிழக மீனவர்களுக்கு எதிரான இலங்கை கடற்படையினரின் நடவடிக்கையை தடுத்து நிறுத்த மத்திய-மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தங்களுக்கு ஏற்பட்ட இழப்புக்கு நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்தனர்.
ராமேசுவரம் மீனவர்கள் தாக்கப்பட்டது குறித்து மத்திய மற்றும் மாநில உளவு பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- எல்லைதாண்டி இலங்கை கடல் பகுதிக்குள் நுழைந்ததாக கூறி நாகை மீனவர்கள் 11 பேர் சிறைபிடிப்பு.
- பருத்தித்துறை துறைமுகத்திற்கு நாகை மீனவர்கள் 11 பேரையும் இலங்கை கடற்படை அழைத்து சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாகை:
நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 11 மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர்.
அப்போது அந்த வழியாக ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், எல்லைதாண்டி இலங்கை கடல் பகுதிக்குள் நுழைந்ததாக கூறி நாகை மீனவர்கள் 11 பேரை சிறைபிடித்தனர்.
பின்னர் பருத்தித்துறை துறைமுகத்திற்கு நாகை மீனவர்கள் 11 பேரையும் இலங்கை கடற்படை அழைத்து சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- எல்லை தாண்டி மீன் பிடித்தாக கூறி 4 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
- கைதான 4 பேரும் இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். மீனவர்களின் படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் 60-க்கும் மேற்பட்டோர் சுமார் 15-க்கும் மேற்பட்ட படகுகளில் 7நாட்களுக்கு பிறகு கடந்த 27-ந்தேதி மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர்.
இதில் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த பாண்டியன், சக்திவேல், திருச்செல்வன் மற்றும் சக்திவேல் ஆகிய 4 பேரும் ஒரு படகில் மீன் பிடிக்க சென்று இருந்தனர்.
இந்நிலையில் அவர்கள் மீன் பிடிக்க கடலில் வலை வீசி காத்திருந்தனர். அப்போது திடீரென வலைகள் அறுந்து சென்று உள்ளது. இதைத்தொடர்ந்து மீனவர்கள் வலையை எடுக்கும் முயற்சியில் கடலில் எல்லை தாண்டி சென்று உள்ளனர்.
இதைத் தொடர்ந்து அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் அவர்கள் 4 பேரையும் கடல் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி கைது செய்தனர். பின்னர் அவர்கள் 4 பேரும் இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். மீனவர்களின் படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது மீனவர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.