search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விக்கிரமராஜா"

    • நேரடியாக டெல்லிக்குச் சென்று நிதியமைச்சரை பார்த்து கோரிக்கை மனு கொடுக்க இருக்கின்றோம்.
    • தக்காளியை அரசே நேரடியாக கொள்முதல் செய்து பாதுகாத்து தக்காளி தட்டுப்பாடு ஏற்படும் போது குறைந்த விலையில் விற்க வேண்டும்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை சத்திய மூர்த்தி நகரில் நடந்த தனியார் நிறுவன நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்ரமராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது;-

    வணிகர்களை அமலாக்கத்துறை சோதனை செய்ய வேண்டும் என்று கூறி வருகின்றனர். வருகிற பாராளுமன்ற கூட்டத் தொடரில் இதற்கான முடிவு எடுக்கக்கூடிய அறிகுறிகள் தென்படுகிறது.

    கொள்ளையடிப்பவர்கள் போன்றவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு தான் அதனை பயன்படுத்த வேண்டுமே தவிர வியாபாரிகள் மீது அந்த துறையை பயன்படுத்தினால் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆதரவாக அரசு செயல்படுவதாக ஒரு அச்சுறுத்தல் ஏற்பட்டுவிடும். ஆகவே தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரடியாக சந்தித்து எக்காரணத்தைக் கொண்டும் அமலாக்கத்துறை என்பது வணிகர்கள் மத்தியில் வந்து விடக்கூடாது என வலியுறுத்த இருக்கின்றோம்.

    இதற்காக நேரடியாக டெல்லிக்குச் சென்று நிதியமைச்சரை பார்த்து கோரிக்கை மனு கொடுக்க இருக்கின்றோம்.

    தக்காளி விலை உயர்வுக்கு வியாபாரிகள் தான் காரணம் என்று பொதுமக்கள் நினைக்கிறார்கள். ஆனால் தக்காளி விலை போகவில்லை என்றால் அதனை கீழே கொட்டுவது வாடிக்கையாக நடக்கிறது.

    ஆகவே நெல் கொள்முதல் செய்வதை போன்று தக்காளியை அரசே நேரடியாக கொள்முதல் செய்து பாதுகாத்து தக்காளி தட்டுப்பாடு ஏற்படும் போது குறைந்த விலையில் விற்க வேண்டும். தக்காளி பொடியாக மாற்றி அதனை கொடுத்தாலும் நாங்கள் விற்க தயார். நாங்கள் தேர்தலில் நிற்கமாட்டோம்.

    கார்ப்பரேட் நிறுவனங்கள் பல்லாயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு அளிப்பதாக கூறி விட்டு நுழைந்த பின்னர் யார் யாருக்கு வேலை கொடுக்கிறார்கள் என்பதை அரசு சோதிப்பது கிடையாது. தமிழ்நாட்டில் 5சதவீத வேலைவாய்ப்பை கூட அவர்கள் வழங்கவில்லை. ஆனால் தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது பொதுச்செயலாளர் கோவிந்தராஜுலு, அருண் சின்னப்பா, சாகுல் ஹமீது மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    • நாடு தழுவிய அளவில் டெல்லியில் அனைத்து மாநில நிர்வாகிகள் கூட்டம் இம்மாத இறுதியில் நடைபெறுகிறது.
    • முன்னதாக, பெருந்துறையில் வணிகர் சங்க பேரமைப்பின் கொடியை ஏற்றி வைத்த விக்கிரமராஜா சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    ஈரோடு:

    தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா பெருந்துறையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மத்திய அரசு, ஜி.எஸ்.டி. வரி விதிக்கும் போது வரி ஏய்ப்பு இருக்காது. கூடுதல் வரி வசூல் கிடைக்கும், வணிகர்கள் நலன் பாதுகாக்கப்படும் என்று அரசு சொன்னது. இதுவரை 12 முறை சட்டம் மாற்றப்பட்டது. அரசுத்துறை அதிகாரிகளுக்கே சட்டத்தின் முழுமையான நடைமுறைகள் தெரியவில்லை.

    சாமானிய வியாபாரிகளை வாட்டி வதைக்கும் வகையில் ஜி.எஸ்.டி. துறை அதிகாரிகள் கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறார்கள். தற்போது புதிதாக அமலாக்கத்துறை கையில் ஒப்படைக்கப்பட்டு அவர்கள் விசாரிப்பார்கள் என்று செய்திகள் வெளியிட்டு இருக்கிறார்கள்.

    அந்த நிலை கட்டாயம் ஏற்பட கூடாது. அந்த நிலையை அரசு கொண்டு வந்தால் அதை எதிர்த்து வணிகர் சங்க பேரமைப்பு போராட்டத்தை முன்னெடுக்கும்.

    போராடுவதை தவிர வேறு வழியே இல்லை. நாடு தழுவிய அளவில் டெல்லியில் அனைத்து மாநில நிர்வாகிகள் கூட்டம் இம்மாத இறுதியில் நடைபெறுகிறது. இது போன்று அமலாக்கத்துறையை, வணிகர் மத்தியில் நுழைய விட்டால் ஜி.எஸ்.டி. சோதனை என்ற அடிப்படையில் முழு அதிகாரத்தை பயன்படுத்தி சாமானிய வணிகர்கள், வணிகத்தை விட்டு வெளியேறக்கூடிய சூழ்நிலை ஏற்படும், அச்சத்துடன் பணியாற்ற வேண்டிய சூழல் ஏற்படும்.

    மத்திய, மாநில அரசுகள் அமலாக்கத்துறையை ஜி.எஸ்.டி. விசாரணைக்கு அனுமதிக்க கூடாது. அதனை மீறி அனுமதித்தால் வணிகர்கள் போராட்டத்தில் ஈடுபடுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக, பெருந்துறையில் வணிகர் சங்க பேரமைப்பின் கொடியை ஏற்றி வைத்த விக்கிரமராஜா சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    • சுயநலமின்றி உழைத்துக்கொண்டிருக்கின்ற வணிக வர்க்கத்தின் மீது உள்நோக்கோடு திணிக்கப்படுகின்ற இந்த அமலாக்கத்துறைச் சட்டம் உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
    • தலைநகர் டெல்லியில் உரிய ஆலோசனைக்குபின் போராட்டத்தை முன்னெடுத்து, களம் அமைத்திட தயாராக இருக்கின்றது.

    சென்னை:

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மத்திய அரசு திடீரென வணிகர்கள் மீது ஜி.எஸ்.டி வரிச்சட்ட நடைமுறையின் கீழ், அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்க ஒப்புதல் அளிக்கும் தீர்மானம் கொண்டுவரப்படுவதாக செய்திகள் மற்றும் ஊடகங்கள் வாயிலாக தெரியவருகின்றது.

    கள்ளக்கடத்தல்காரர்கள், கள்ளப் பணப்பரிமாற்றம் செய்பவர்கள், வருமான வரி இழப்பு ஏற்படுத்துபவர்கள் போன்ற நிதிநிலை மோசடிகளில் ஈடுபடக்கூடிய சட்டத்திற்கு புறம்பானவர்கள் மீது அமல்படுத்தப்படக்கூடிய அமலாக்கத்துறை சட்டநடவடிக்கை என்பது, சட்டத்திற்கு கட்டுப்பட்டு விதிகளுக்கு உட்பட்டு, பதிவு செய்துகொண்டு உரிய உரிமங்கள் பெற்று, அரசு அனுமதியோடு, நேர்மையான வணிகத்தை மேற்கொண்டு, தனது வாழ்வாதா ரத்தையும், தன்னை நம்பியிருக்கின்ற பணியாளர்களின் வாழ்வாதாரத்தையும், வேலை வாய்ப்புகான அடித்தளங்களையும் அமைத்துத் கொடுத்து அரசுக்கும், வருவாய் ஈட்டி, சுயநலமின்றி உழைத்துக்கொண்டிருக்கின்ற வணிக வர்க்கத்தின் மீது உள்நோக்கோடு திணிக்கப்படுகின்ற இந்த அமலாக்கத்துறைச் சட்டம் உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக தமிழகம் மட்டுமல்லாது தேசிய அளவில், அகில இந்திய வணிக சம்மேளனத்தின் பங்கேற்புடன் தலைநகர் டெல்லியில் உரிய ஆலோசனைக்குபின் போராட்டத்தை முன்னெடுத்து, களம் அமைத்திட தயாராக இருக்கின்றது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • சிறு வணிகர்களின் பாதிப்பு குறித்து செய்தியாளர்கள் விக்கிரமராஜாவிடம் கேள்வி எழுப்பினர்.
    • வணிகர்களின் தற்கொலை, மனித உரிமை மீறல்கள் பாதிப்புகள் இனி எங்கும் நடக்காமல் கணிகாணிப்பதாக கூறினார்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் அடுத்த தேவநேரி ஐடியல் பீச் ரிசார்ட்டில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில செயற்குழு கூட்டம் பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா தலைமையில் நடைபெற்றது. மாநில செயலாளர் கோவிந்தராஜுலு, பொருளாளர் சதக்கத்துல்லா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

    கோயம்புத்தூரில் திறக்கப்பட்ட "லூலூ மால்" ஹைப்பர் மார்க்கெட், அடுத்தடுத்து தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் திறக்கும் நிலையில், சிறு வணிகர்களின் பாதிப்பு குறித்து செய்தியாளர்கள் விக்கிரமராஜாவிடம் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், அடுத்து சென்னையில் திறக்க இருப்பதாக கூறப்படுகிறது, ஆனால் இங்கு திறக்க அனுமதிக்க மாட்டோம் என்றார்.

    மேலும், வணிகர்களின் தற்கொலை, மனித உரிமை மீறல்கள் பாதிப்புகள் இனி எங்கும் நடக்காது, அதற்கான குழு அமைத்து தீவிரமாக கண்காணிப்போம் என்றும் அவர் தெரிவித்தார்.

    • தமிழ்நாட்டில் 500 மதுக்கடைகளை மூடியதற்கு முதலமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
    • தமிழகம் முழுவதும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் உள்ள மதுக்கடைகளை படிப்படியாக மூடுவதற்கு தமிழக அரசு முன்வர வேண்டும்.

    சென்னை:

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் 500 மதுக்கடைகளை மூடியதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம், அதே நேரத்தில் தமிழகம் முழுவதும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகள், மார்க்கெட், பஜார், பள்ளிக்கூடங்கள் நிறைந்த பகுதிகளில் உள்ள மதுக்கடைகளையும் படிப்படியாக மூடுவதற்கு தமிழக அரசு முன்வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • சாமானிய மக்களை மட்டுமன்றி சிறு, குறு, நடுத்தரவர்க்க வணிகர்களை பெருமளவு பாதிப்புக்கு உள்ளாக்கும் என்பதை மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
    • சில்லரை வணிகர்களே 20,000 ரூபாய்க்கு மேல், வங்கிக்கு செலுத்த செல்லுகின்றபோது அதனை வங்கிகள் ஏற்குமா? என்ற கேள்விக்குறியும் எழுப்பப்படுகிறது.

    சென்னை:

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கடந்த 2016-ம் ஆண்டு பழைய 1000, 500 ரூபாய் நோட்டுகளுக்கு பண மதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டவுடன், புதிய 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டது.

    அந்த சமயத்தில் பொது மக்களுக்கும், வணிகர்களுக்கும் மிகப்பெரும் இடையூறுகளையும், துயரங்களையும், இழப்புகளையும் ஏற்படுத்தியது என்பது அனைவரும் அனுபவபூர்வமாக உணர்ந்திருக்கிறார்கள்.

    7 ஆண்டுகளுக்கு முன் புழக்கத்தில் விடப்பட்ட இந்த 2000 ரூபாய் நோட்டுகள், புழக்கத்தில் இருந்து நீக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி நேற்றைய தினம் திடீரென அறிவித்திருக்கின்றது.

    இது சாமானிய மக்களை மட்டுமன்றி சிறு, குறு, நடுத்தரவர்க்க வணிகர்களை பெருமளவு பாதிப்புக்கு உள்ளாக்கும் என்பதை மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து நீக்கப்படுவதாக அறிவித்த உடனேயே, சேமிப்பாக வைத்திருக்கக்கூடிய எளிமையான மக்களிடம் இருந்து, வணிகர்களிடமே அன்றாட தேவைக்காக புழக்கத்திற்கு கொண்டு வரப்படும்.

    இந்நிலையில் வணிகர்கள் அந்த நோட்டுக்களை வாங்க மறுக்கும் நிலை ஏற்படும். அதுபோன்ற நிலை ஏற்படும்போது பொது மக்களுக்கும்-வணிகர்களுக்கும் சர்ச்சைகள் ஏற்படும் நிலை உருவாகும். மேலும், சில்லரை வணிகர்களே 20,000 ரூபாய்க்கு மேல், வங்கிக்கு செலுத்த செல்லுகின்றபோது அதனை வங்கிகள் ஏற்குமா? என்ற கேள்விக்குறியும் எழுப்பப்படுகிறது.

    இவற்றிற்கெல்லாம் விடைகாணும் விதமாக, பொதுமக்களின் அன்றாட புழக்கத்திற்கும், வணிகர்களின் வங்கி பயன்பாட்டிற்கும், 2000 ரூபாய் நோட்டுக்களின் நிலையை மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் தெளிவுபடுத்திட வேண்டும்.

    ஏழை, எளிய, நடுத்தர மக்கள் தங்களிடம் வைத்துள்ள 2000 ரூபாய் நோட்டுக்களை வணிக புழக்கத்திற்கு கொண்டு வந்து, அதனை மாற்றிக் கொள்வதற்கான எளிய நடைமுறைகளை, உரிய கால அவகாசத்துடன் தற்போது அறிவித்துள்ள 2023 செப்டம்பர் 30 என்பதை-டிசம்பர் 31 வரை கால நீட்டிப்பு அளித்தும், வணிகர்களும்-பொதுமக்களும் வங்கிகளில் 60,000 ரூபாய் வரை மாற்றிக்கொள்ள அனுமதி அளித்து பொதுமக்களும் வணிகர்களும் பதற்றமின்றி 2000 ரூபாய் நோட்டுக்களை மாற்றிக்கொள்ளும் நிலையை உருவாக்கி மத்திய அரசுக்கு எந்தவித அவப் பெயரும் ஏற்படாதவண்ணம் விதிகளை உடனடியாக அறிவித்திடுமாறு, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு பொதுமக்கள், உற்பத்தியாளர்கள், விநியோகஸ்தர்கள், வணிகர்கள் நலன் கருதி வேண்டுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வரையில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என்கிற அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட வேண்டும்.
    • பொதுமக்கள் வங்கியில் சென்று தங்களிடம் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளுமாறு கூறி வருகிறோம்.

    செல்லாது என்று அறிவிக்கப்பட்ட 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வரையில் அவகாசம் அளிக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதுதொடர்பாக தமிழ் நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா கூறியதாவது:-

    2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை செப்டம்பர் மாதம் 30-ந்தேதி வரை வங்கிகளில் மாற்றிக்கொள்ளலாம் என்கிற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த மாதத்தில் 8 நாட்களும், அடுத்து வரும் 4 மாதங்களிலும் மட்டுமே கால அவகாசம் என்பது கண்டிப்பாக போதுமானதாக இருக்காது.

    பொதுமக்களிடம் இருந்து வியாபாரிகள் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வாங்க மறுத்து வந்தாலும் வணிக ரீதியாக 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வியாபாரிகளிடம் அதிக அளவில் சேருவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளன.

    எனவே செப்டம்பர் 30-ந்தேதி வரை மட்டுமே வழங்கப்பட்டுள்ள கால அவகாசத்தை நீட்டித்து வழங்க வேண்டும். அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வரையில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என்கிற அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட வேண்டும்.

    500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட நேரத்தில் பொதுமக்களிடம் இருந்து வாங்கிய பணத்துக்கு வருமான வரித்துறையினரிடம் விளக்கம் அளிக்க வேண்டிய நிலையும் வியாபாரிகள் பலருக்கு ஏற்பட்டது. இதனால் கடுமையான பாதிப்புகளையும் வியாபாரிகள் சந்திக்க நேரிட்டது.

    இதன்காரணமாகவே பொதுமக்கள் வங்கியில் சென்று தங்களிடம் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளுமாறு கூறி வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஜி.எஸ்.டி. கவுன்சிலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வலியுறுத்தி உள்ளார்.
    • வணிகர் நல வாரியத்தின் உறுப்பினர்கள் சோ்க்கை கடந்த 2 ஆண்டுகளில் 2 மடங்கு உயர்ந்து உள்ளது.

    ஈரோடு:

    வணிகர் தினமான நேற்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 40-வது மாநாடு 'வணிகர் உரிமை முழக்க மாநாடு' என்ற பெயரில் ஈரோடு டெக்ஸ்வேலி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. மாநாட்டுக்கு பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமை தாங்கினார்.

    மாநாட்டில் வணிகர்களுக்கான 'வி.வி.டி.', 'மைசாட்டோ' ஆகிய செயலிகள் மற்றும் பேரமைப்பு வலைதளம் தொடங்கி வைக்கப்பட்டன. இந்த மாநாட்டில் அமைச்சர்கள் சு.முத்துசாமி, மா.சுப்பிரமணியன், வி.செந்தில்பாலாஜி, பி.மூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள்.

    அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசும்போது கூறியதாவது:-

    ஜி.எஸ்.டி. விதிக்கப்படுவதில் பல்வேறு மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று வணிகர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இதுதொடர்பாக ஜி.எஸ்.டி. கவுன்சிலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வலியுறுத்தி உள்ளார். வணிகர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்று கேட்டுக்கொண்டதன் பெயரில் காவல் உதவி செயலி கொண்டு வரப்பட்டது. எனவே வணிகர்களுக்கு உறுதுணையாக இந்த அரசு செயல்பட்டு வருகிறது.

    இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

    அமைச்சர் சு.முத்துசாமி பேசும்போது, வணிகர்கள் விடுக்கும் கோரிக்கைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக நிறைவேற்றி வருகிறார். 2007-ம் ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு வரைமுறை செய்வதற்கு மனுக்கள் பெறப்பட்டது. ஆனால் கட்டிடம் வரைமுறை தொடர்பாக முடிவு எடுக்கக்கூடாது என்று கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. மனுக்களை பெறுவதற்கான அவகாசம் முடிவடைந்து விட்டது. வேண்டுமென்றால் மனுக்களை பெறுவதற்கான அவகாசத்தை நீட்டிப்பு செய்யலாம். முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று காலஅவகாசத்தை நீட்டிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    அமைச்சர் செந்தில்பாலாஜி பேசும்போது கூறியதாவது:-

    வணிகர் நல வாரியத்தின் உறுப்பினர்கள் சோ்க்கை கடந்த 2 ஆண்டுகளில் 2 மடங்கு உயர்ந்து உள்ளது. அதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சியே காரணம்.

    இந்த மாநாட்டில் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா பேசும்போது, மின் கட்டணம் உயர்வு தொடா்பாக போராட்டம் நடத்தப்படுமா? என்று உறுப்பினர்கள் கேள்வி கேட்டதாக தெரிவித்தார். அந்த கேள்வி கேட்டவர்களை பார்த்து கேட்கிறேன், பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கும், சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.410-ல் இருந்து ரூ.1,200 உயர்த்தப்பட்டதற்கும் ஏன் போராட்டம் நடத்தவில்லை. பேரமைப்பு தலைவரை தூண்டிவிடும் வகையில் செயல்படுகின்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை விக்கிரமராஜா நேரில் சந்தித்து கோரிக்கையை தெரிவிக்கும்போது, அதை அவர் உடனடியாக நிறைவேற்றி கொடுத்து வருகிறார்.

    இவ்வாறு அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்.

    அமைச்சர் பி.மூா்த்தி பேசியதாவது:-

    திராவிட மாடல் ஆட்சி வணிகர்களுக்கு முழுஆதரவு அளித்து வருகிறது. நேர்மையாக தொழில் நடத்தி வரும் உங்களை போன்ற வணிகர்களுக்கு எப்போதும் தி.மு.க. அரசு உறுதுணையாக இருக்கும். கடந்த 2 ஆண்டுகளில் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளது.

    வணிகர் நல வாரியத்தின் நிர்வாகிகளை விரைவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிக்க உள்ளார்.

    இவ்வாறு அமைச்சர் பி.மூர்த்தி பேசினார்.

    • மாநாட்டு திடலில் 20 ஏக்கர் பரப்பளவில் பந்தல் அமைக்கப்பட்டுள்ளதுடன் பஸ், கார், வேன், இரு சக்கர வாகனங்கள் நிறுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
    • காலை சிற்றுண்டி, மதிய உணவு, மாலை சிற்றுண்டி என 3 லட்சம் பேருக்கு மாநாட்டில் உணவு வழங்கப்படுகிறது.

    சென்னை:

    மே 5 வணிகர் தினத்தையொட்டி வணிகர் சங்கங்கள் நாளை மாநாடுகள் நடத்துகின்றன. இதில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் ஈரோட்டில் மாநாடு நடைபெறுகிறது. பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா நடத்தும் இந்த மாநாட்டில் அமைச்சர்கள் முத்துசாமி, செந்தில் பாலாஜி, வெள்ளக் கோவில் சாமிநாதன், பி.மூர்த்தி, மா.சுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றி விருதுகள் வழங்குகிறார்கள்.

    பேரமைப்பு மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜூலு வரவேற்புரை நிகழ்த்த மாநில பொருளாளர் ஹாஜி ஏ.எம்.சதக்கத் துல்லா மாநாட்டு தீர்மானங்களை பிரகடனபடுத்தி முன் மொழிந்து பேசுகிறார். வணிகர் உரிமை முழக்க மாநாடாக நடத்தப்படும் இந்த மாநாட்டில் வணிகர்களின் உரிமையை வென்றெடுக்க பேரமைப்பின் கள நிகழ்வினை முன்னிறுத்தும் மாநாடாக இது நடத்தப்படுகிறது. இதில் வெளிநாடு தொழில் முனைவோர்களும் பங்கேற்க உள்ளனர். அகில இந்திய வணிகர் சம்மேளன தேசிய தலைவர் பார்டியா, தேசிய பொதுச் செயலாளர் பிரவீன் கண்டேல்வால் பாராட்டுரை வழங்குகிறார்கள்.

    மாநாட்டு திடலில் 20 ஏக்கர் பரப்பளவில் பந்தல் அமைக்கப்பட்டுள்ளதுடன் பஸ், கார், வேன், இரு சக்கர வாகனங்கள் நிறுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. காலை சிற்றுண்டி, மதிய உணவு, மாலை சிற்றுண்டி என 3 லட்சம் பேருக்கு மாநாட்டில் உணவு வழங்கப்படுகிறது.

    மாநாட்டையொட்டி நாளை (5-ந்தேதி) தமிழகத்தில் கடைகள், வணிக வளாகங்கள், மொத்த சில்லரை வணிக நிறுவனங்கள், மார்க்கெட்டுகள், உணவகங்கள், மால்கள் ஆகியவற்றுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவித்து உள்ளனர். இதையொட்டி இன்று (4-ந்தேதி) மாநாட்டு திடலில் சிறு-குறு நிறுவனங்கள் தங்களது நிறுவன பொருட்களை காட்சிப்படுத்தும் வகையில் 200-க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் (கண் காட்சி) அமைத்துள்ளன. இதை இன்று மாலை 4 மணிக்கு அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திறந்து வைக்கிறார்.

    ஈரோடு மாவட்டத் தலைவர் சண்முகவேல் தலைமையில் கோவை மண்டலத் தலைவர் சூலூர் சந்திரசேகரன் வணிக கொடியை ஏற்றி வைக்கிறார். சங்க தலைமை செயலாளர் பேராசிரியர் ராஜ்குமார், கே.ஜோதிலிங்கம், ஆம்பூர் கிருஷ்ணன் அமல்ராஜ் உள்ளிட்ட மண்டல தலைவர்கள், வி.பி.மணி, செய்தி தொடர்பாளர் பி.பாண்டியராஜன் உள்பட பலர் மாநாட்டு பணிகளை செய்து வருகின்றனர்.

    • தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் மே 5-ந்தேதி ஈரோட்டில் 40-வது வணிகர் தினம் வணிகர் உரிமை முழக்க மாநாடாக நடத்தப்படுகிறது.
    • தமிழ்நாடு முழுவதும் இருந்து 3 லட்சம் வணிகர்கள் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

    சென்னை:

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் மே 5-ந்தேதி ஈரோட்டில் 40-வது வணிகர் தினம் வணிகர் உரிமை முழக்க மாநாடாக நடத்தப்படுகிறது.

    மாநாட்டுக்கு பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமை தாங்குகிறார். பொதுச் செயலாளர் வி.கோவிந்த ராஜுலு வரவேற்புரை நிகழ்த்த மாநில பொருளாளர் ஹாஜி ஏ.எம்.சதக்கத் துல்லா மாநாடு தீர்மானங்களை பிரகடனப்படுத்துகிறார்.

    இந்த மாநாட்டில் தமிழ்நாடு முழுவதும் இருந்து 3 லட்சம் வணிகர்கள் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதில் தமிழக அமைச்சர்கள் சு.முத்துசாமி, வெள்ளக்கோவில் சாமிநாதன், செந்தில்பாலாஜி, பி.மூர்த்தி, மா.சுப்பிரமணியன் ஆகிய 5 அமைச்சர்கள் பங்கேற்று பேசுகிறார்கள்.

    மாநாட்டில் சிறந்த சாதனையாளர்களுக்கு விருதுகளும் வழங்கப்படுகிறது. வ.உ.சி. விருதை அமைச்சர் முத்துசாமி வழங்குகிறார். வணிக செம்மல் விருதினை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி வழங்குகிறார். கல்வி ஊக்கத் தொகையை அமைச்சர் பி.மூர்த்தியும், நலிந்த வணிகர்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் நலத் திட்ட உதவிகளையும் வழங்கி சிறப்புரையாற்றுகின்றனர்.

    வணிகர் சங்க பேரமைப்பு மாநாட்டில் முதன் முறையாக இப்போது குறு-சிறு உற்பத்தியாளர்கள் விளைவிக்கும் பொருட்களை சந்தைப்படுத்தும் விதமாக மாநாட்டு பந்தல் வளாகத்தில் 'எக்ஸ்போ' கண்காட்சி நடத்தப்படுகிறது. இதை 4-ந்தேதி அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் திறந்து வைக்கிறார்.

    மாநாட்டை அகில இந்திய வணிகர்கள் சம்மேளன தேசிய தலைவர் பி.சி.பார்டியா, தேசிய பொதுச் செயலாளர் பிரவீண் கண்டேல்வால் தொடங்கி வைக்கிறார்கள்.

    இதில் ஓட்டல்கள், சங்க தலைவர் வெங்கடசுப்பு, மருந்து வணிகர் சங்க பொருளாளர் செல்வம், பாண்டிச்சேரி வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவவர் சிவசங்கர், ஜெயந்திலால் ஜெலானி உள்பட பல்வேறு அமைப்பு சார்பில் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று பேசுகின்றனர்.

    மாநாட்டில் கூடுதல் செயலாளர் வி.பி.மணி, சங்கத்தின் தலைமை செயலாளர் பேராசிரியர் ராஜ்குமார், செய்தி தொடர்பாளர் பி.பாண்டியராஜன், மண்டல தலைவவர் கே.ஜோதிலிங்கம் உள்ளிட்ட அனைத்து மண்டல, மாவட்டத் தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.

    மாநாட்டையொட்டி ஈரோட்டில் மிகப் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. 3 லட்சம் பேர் மாநாட்டுக்கு வருவதால் அவர்கள் அனைவருக்கும் உணவு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

    • தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 12 மணிநேர வேலை மசோதாவால் தமிழகத்தில் தொழில்துறை வளர்ச்சி அடையும்.
    • எதிர்கட்சிகள் கண்மூடித்தனமாக எதிர்க்க கூடாது. தோழமை கட்சிகளும் சாதக, பாதகங்களை உணர்ந்து அரசுக்கு எடுத்துக்கூறி இந்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும்.

    திண்டுக்கல்:

    தமிழ்நாடு தொழில் வர்த்தகர் சங்கத்தின் மாநில தலைவர் விக்கிரமராஜா இன்று திண்டுக்கல்லில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 12 மணிநேர வேலை மசோதாவால் தமிழகத்தில் தொழில்துறை வளர்ச்சி அடையும். தமிழகம் ஏற்கனவே அதிகளவு தொழில் முதலீடுகளை ஈர்த்து வருகிறது. இந்த சூழ்நிலையில் தொழிலாளர்கள் கூடுதல் நேரம் பணி செய்தால் அவர்களுக்கான ஊதியமும் அதிகரிக்கும். வேலை வாய்ப்பும் பெருகும். கொரோனா கால கட்டத்தில் வடமாநில தொழிலாளர்கள் இல்லாத சூழ்நிலையில் தமிழகத்தின் நிலையை எண்ணிப்பார்க்க வேண்டும்.

    இதனை எதிர்கட்சிகள் கண்மூடித்தனமாக எதிர்க்க கூடாது. தோழமை கட்சிகளும் சாதக, பாதகங்களை உணர்ந்து அரசுக்கு எடுத்துக்கூறி இந்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும். எந்த நிறுவனமும் தொழிலாளிகள் இல்லாமல் முதலாளிகள் இல்லை. அதேபோல முதலாளிகள் இல்லாமல் தொழிலாளிகளும் இல்லை.

    தொழில்துறை வளர்ச்சியை கருத்தில் கொண்டும், இளைஞர்களின் வேலை வாய்ப்பை கருத்தில் கொண்டும் 12 மணிநேர வேலை மசோதவை தொழிற்சங்கங்களும், தோழமை கட்சிகளும் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்றார். மேலும் மே 5-ந்தேதி ஈரோட்டில் வணிகர் உரிமை முழக்க மாநாடு, வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் 40-வது மாநில மாநாடு நடைபெற உள்ளது.

    இந்த மாநாட்டில் திண்டுக்கல் மண்டலம் சார்ந்த திண்டுக்கல், பழனி, தேனி, கரூர் ஆகிய 4 மாவட்டங்களில் இருந்து 15 ஆயிரம் வணிகர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளில் பணிநிறைவு சான்றிதழ்கள் பெற்றால்தான் வணிக கட்டிடங்களுக்கு புதிய மின்இணைப்பு வழங்கப்படும் என்ற மின்சார வாரியத்தின் கொள்கை முடிவை மாற்றி அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் மண்டல தலைவர் கிருபாகரன், மாவட்ட செயல்தலைவர் நடராஜன், மாவட்ட செயலாளர் மங்களம் அழகு, பொருளாளர் நசீர்சேட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வணிகர்களின் வாழ்வில் ஒரு மாற்று சக்தியை உருவாக்கும் மாநாடாக இம்மாநாடு அமைய உள்ளது.
    • மாநில நிர்வாகிகள், மண்டல நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் என ஏராளமானோர் திரளாக கலந்து கொள்கின்றனர்.

    சென்னை:

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா, மாநில பொதுச்செயலாளர் கோவிந்தராஜூலு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் மே 5-ந்தேதி, 40வது வணிகர் தினம் வணிகர் உரிமை முழக்க மாநாடாக ஈரோடு, டெக்ஸ்வேலி மைதானத்தில் நடைபெற உள்ளது.

    இதற்காக லட்சக்கணக்கான வணிகர்கள் அமரும் வகையில் மாநாட்டு பந்தல் பிரம்மாண்டமாக அமைக்கப்பட உள்ளது.

    மாநாட்டு கால்கோள் விழா என்பது மகிழ்ச்சிக்குரியது. அதுவும் 40-வது வணிகர் தின வணிகர் உரிமை முழக்க மாநாடு என்பது அதன் பின்னனியில் மறைந்துள்ள 40 ஆண்டுகால பேரமைப்பின் வரலாற்றை வெளிக்கொண்டுவரும் வியத்தகு மாநாடு ஆகும்.

    40 ஆண்டுகால வேதனையை துடைத்தெறிந்து வணிகர்களின் உரிமைக்காக குரல் எழுப்பி முழக்கமிடும் மாநாடாக ஈரோடு மாநாடு நடைபெற இருப்பதால் மிகப்பெரும் எதிர்பார்ப்புகளுடன் தமிழகத்தின் அனைத்து வணிகர்களும் எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள் எனும் பேருண்மையை எடுத்துக்காட்டும் மாநாடாக வணிகர் உரிமை முழக்க மாநாடு நடக்கும்.

    வணிகர்களின் வாழ்வில் ஒரு மாற்று சக்தியை உருவாக்கும் மாநாடாக இம்மாநாடு அமைய உள்ளது.

    மாநாட்டு பந்தல் கால்கோள்விழா நாளை (புதன்கிழமை) காலை 9.30 மணியளவில் மாநாட்டுத்திடலில் நடைபெற உள்ளது. விழாவிற்கு பேரமைப்பின் மாநிலத்தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமை தாங்குகிறார். மாநிலப் பொதுச்செயலாளர் வெ.கோவிந்தராஜுலு வரவேற்று பேச மாநிலப் பொருளாளர் ஹாஜி ஏ.எம்.சதக்கத் துல்லா நன்றி கூறுகிறார்.

    மாநில நிர்வாகிகள், மண்டல நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் என ஏராளமானோர் திரளாக கலந்து கொள்கின்றனர்.

    கால்கோள் விழாவைத் தொடர்ந்து, மாநில மாவட்ட நிர்வாகிகள், ஒருங்கி ணைப்புக்குழு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டமும் மாநாட்டில் நிறைவேற்றப்பட வேண்டிய முக்கிய தீர்மானங்கள் குறித்த ஆலோசனையும் நடைபெறுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×