என் மலர்
நீங்கள் தேடியது "ராகுல்காந்தி"
- மத்திய பிரதேச மாநிலத்தில் 88வது நாளாக பாதயாத்திரை நடைபெறுகிறது.
- மத்திய பிரதேசத்தில் மட்டும் 380 கிலோ மீட்டர் தூரம் பாதயாத்திரை நடைபெற்றுள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் 7ந் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை பாதயாத்திரை பயணம், கடந்த மாதம் 23ந் தேதி மகாராஷ்டிராவிலிருந்து மத்தியப் பிரதேசத்தின் புர்ஹான்பூர் மாவட்டத்திற்குள் நுழைந்தது. 88வது நாளாக இன்று காலை மத்திய பிரதேச மாநிலம் அகர் மால்வா மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது.
காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் நகுல் நாத், முன்னாள் மத்திய மந்திரி அருண் யாதவ், காங்கிரஸ் எம்.எல்.ஏ. பிரியவ்ரத் சிங் ஆகியோரும் இந்த அணிவகுப்பில் ராகுல் காந்தியுடன் நடந்து சென்றனர். மத்திய பிரதேச மாநிலத்தில் புர்ஹான்பூர், கந்த்வா, கர்கோன், இந்தூர் மற்றும் உஜ்ஜைனி மாவட்டங்களை கடந்து மொத்தம் 380 கிலோ மீட்டர் தூரம் பாத யாத்திரை நடைபெற்றுள்ளது. இந்த பாத யாத்திரையின்போது உஜ்ஜயினியில் உள்ள 12 ஜோதி லிங்கங்களில் ஒன்றான மகா காளேஸ்வரர் கோயிலுக்கு சென்ற ராகுல்காந்தி வழிபாடு நடத்தினார்.
இந்நிலையில் இன்று மாலை ராஜஸ்தான் மாநிலத்திற்குள் ராகுலின் யாத்திரை நுழைகிறது. அங்குள்ள சான்வ்லி கிராமத்தில் மத்தியப் பிரதேச காங்கிரஸ் உறுப்பினர்கள், ராஜஸ்தானை சேர்ந்த கட்சி உறுப்பினர்களிடம் தேசியக் கொடியை ஒப்படைக்கின்றனர். ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுவதால் ராகுலுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க அம்மாநில காங்கிரசார் திட்டமிட்டுள்ளனர்.
- சமூக ஊடகங்களில் மட்டுமே பாத யாத்திரைக்கு அமோக ஆதரவு கிடைத்து வருகிறது.
- அத்வானி யாத்திரை குறித்து தேசிய ஊடகங்கள் பெரிய அளவில் செய்திகள் வெளியிட்டன.
ஜாலாவர்:
கன்னியாகுமரியில் இருந்து கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி தொடங்கிய காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பாதயாத்திரை, மத்திய பிரதேச மாநிலத்தை கடந்து ராஜஸ்தான் மாநிலத்திற்குள் நுழைந்துள்ளது. இது குறித்து நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் கூறியுள்ளதாவது:

தேசிய செய்தி ஊடகங்களின் ஆசிரியர்கள் மற்றும் ஊடகங்களின் உரிமையாளர்கள் மீது அழுத்தம் கொடுக்கப் படுகிறது. இதனால் முக்கிய தேசிய ஊடகங்கள் பாத யாத்திரை குறித்த செய்திகளை புறக்கணித்து விட்டன. ஜனநாயகத்தின் நான்காவது தூணாக இருக்கும் ஊடகங்கள் கடமையை நிறைவேற்ற முழுமையாகத் தவறி விட்டன.
வரலாறு அவர்களை மன்னிக்காது. நாடு முழுவதிலும் சமூக ஊடகங்களில் யாத்திரைக்கு அமோக ஆதரவு கிடைத்து வருகிறது. லட்சக்கணக்கான மக்கள் பாத யாத்திரையில் இணைகிறார்கள். ஆனால் தேசிய ஊடகங்கள் அதற்கு ஆதரவளிக்கவில்லை. சமூக நோக்கத்திற்கும. அவர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. 1
1990-ல் பாஜக மூத்த தலைவர் லால் கிருஷ்ண அத்வானி யாத்திரை சென்ற போது ஊடகங்கள் அதை பெரிய அளவில் செய்தியாக்கவில்லையா? நடந்ததைச் சொல்வது ஊடகங்களின் கடமை. ராகுல் காந்தி நேர்மறை சிந்தனையுடன் பயணம் செய்கிறார், இது நேர்மறை யாத்திரை, வன்முறை இல்லை, வெறுப்பு இல்லை. இந்த யாத்திரையை எடுத்து கூறி நீங்கள் உங்கள் கடமையைச் செய்யவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- விமானியும், ராகுல் காந்தியும் இணைந்து ஹெலிகாப்டரின் தொழில்நுட்பங்கள் குறித்து மாணவிகளுக்கு விளக்கம் கொடுத்தனர்.
- எங்களின் நீண்ட நாள் கனவு நிறைவேறி உள்ளது என மாணவிகள் கூறினர்.
புதுடெல்லி:
மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைனியில் ராகுல் காந்தி கடந்த நவ.29-ம் தேதி ஒற்றுமை நடைபயணம் மேற்கொண்டார். அப்போது 11-ம் வகுப்பு மாணவிகள் ஷீத்தல், லகானியா, 10-ம் வகுப்பு மாணவி கிரிஜா ஆகியோர் அவரை சந்தித்தனர். மாணவிகளின் கல்வி, எதிர்கால லட்சியம் குறித்து ராகுல்காந்தி கேட்டறிந்தார். அப்போது 3 மாணவிகளும் ஹெலிகாப்டரில் பறக்க ஆசையாக இருப்பதாக ராகுல் காந்தியிடன் வெள்ளந்திதனமாக கூறினர். மாணவிகளின் விருப்பத்தை நிறைவேற்றுவதாக அவர் வாக்குறுதி அளித்தார்.
கடந்த 8-ம் தேதி ராஜஸ்தானின் கோடா பகுதியில் ராகுல்காந்தி நடைபயணத்தை தொடர்ந்தார். அப்போது ராஜஸ்தானின் பண்டி பகுதியில் இருந்து சவாய் மாதோபூருக்கு ராகுல் காந்தி ஹெலிகாப்டரில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த ஹெலிகாப்டர் பயணத்தின்போது மத்திய பிரதேசம் உஜ்ஜைனியை சேர்ந்த ஷீத்தல், லகானியா, கிரிஜா ஆகிய 3 மாணவிகளையும் ராகுல்காந்தி தன்னுடன் அழைத்துச்சென்றார்.
விமானியும், ராகுல் காந்தியும் இணைந்து ஹெலிகாப்டரின் தொழில்நுட்பங்கள் குறித்து மாணவிகளுக்கு விளக்கம் கொடுத்தனர். 3 மாணவிகளும் ராகுல்காந்தியுடன் இணைந்து ஹெலிகாப்டரில் பயணம் செய்தனர். சுமார் 20 நிமிட பயணத்துக்குப் பிறகு மாணவிகள் விடைபெற்றனர்.
இதுகுறித்து மாணவிகள் கூறுகையில், முதல்முறையாக ஹெலிகாப்டரில் சென்றது மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. அதுவும் ராகுல் காந்தியுடன் பயணம் செய்ததை நாங்கள் கவுரவமாக கருதுகிறோம். எங்களின் நீண்ட நாள் கனவு நிறைவேறி உள்ளது. குடும்பம், சமுதாயத்தை பார்க்காமல் எங்களுக்கு எது விருப்பமோ அந்த துறையை தேர்வு செய்து படிக்க ராகுல் காந்தி அறிவுறுத்தினார் என்று தெரிவித்தனர்.
- ராகுல்காந்தியின் பாத யாத்திரை வெள்ளிக்கிழமை 100 வது நாளை நிறைவு செய்கிறது.
- இது அரசியல் யாத்திரை அல்ல, மக்களை ஒன்றிணைக்கும் பிரச்சாரம்.
சவாய் மாதோபூர்:
இந்திய ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் கடந்த செப்டம்பர் 7ந் தேதி கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீர் வரை காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி, பாதயாத்திரை நடத்தி வருகிறார். கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேச மாநிலங்களை தாண்டி இந்த யாத்திரை டிசம்பர் 4 ஆம் தேதி ராஜஸ்தானுக்குள் நுழைந்து நடைபெற்று வருகிறது. வரும் வெள்ளிக்கிழமை இந்த பாத யாத்திரை 100வது நாளை நிறைவு செய்கிறது. இதையொட்டி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ராஜஸ்தான் துணை முதல்வர் சச்சின் பைலட் கூறியுள்ளதாவது:
பாரத் ஜோடோ யாத்திரையை நடத்தி வரும் ராகுல் காந்தி, தினமும் 30 கிலோமீட்டர் நடந்து வருகிறார். மக்கள் அவரைப் பாராட்டுகிறார்கள், அவருடன் இணைந்து நடந்து வர முயற்சிக்கிறார்கள். அனைத்துப் பிரிவினரும் யாத்திரையில் பங்கேற்று வருகின்றனர். ராகுல் காந்தி தொடர்ந்து 100 நாட்களாக பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்பதன் மூலம் வரலாறு படைக்கப்பட்டுள்ளது,
இதனால் பாஜக மிகவும் வருத்தமடைந்துள்ளது. இவ்வளவு பேர் எப்படி யாத்திரையில் இணைக்கிறார்கள் என்பது அந்த கட்சிக்கு கவலை அளிக்கிறது. குழந்தைகள், முதியவர்கள், விவசாயிகள், முன்னாள் ராணுவத்தினர், இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்டோரை ராகுல் நேரில் சந்தித்து பேசுகிறார். அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் அவர் பணியாற்றி வருகிறார். இது அரசியல் யாத்திரை அல்ல, நாட்டை மற்றும் மக்களை ஒன்றிணைக்கும் பிரச்சாரம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- இந்தியாவின் மகாராஜாக்கள் என நான்கு அல்லது ஐந்து பேர் உள்ளனர்.
- அவர்களின் விருப்பப்படி பிரதமர், அதிகாரிகள் செயல்படுகிறார்கள்.
ஜெய்ப்பூர்:
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நடத்தி வரும் இந்திய ஒற்றுமை பாத யாத்திரை, ராஜஸ்தான் மாநிலம் பாத்ஷாபுராவை அடைந்தது .தௌசா மாவட்டத்தில் உள்ள பாக்டி கிராமத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி கூறியுள்ளதாவது:
நீங்கள் அவர்களின் அமைப்பில் (ஆர்.எஸ்.எஸ்.) ஒரு பெண்ணை கூட பார்க்க மாட்டீர்கள். ஆர்எஸ்எஸ் பெண்களை அடக்குகிறார்கள், இதனால் பெண்களை தங்கள் அமைப்பிற்குள் நுழைய அவர்கள் அனுமதிப்பதில்லை. ஸ்ரீராமர் மற்றும் சீதா தேவி இருவரையும் ஏற்றுக் கொள்ளும் ஜெய் சியாராம் என்று சொல்வதற்கு பதிலாக ஜெய் ஸ்ரீராம் என்று அவர்கள் அழைக்கிறார்கள்.
ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவினரை நான் கேட்க விரும்புகிறேன், நீங்கள் ஜெய் ஸ்ரீராம் என்று சொல்கிறீர்கள், ஆனால் ஏன் ஜெய் சியாராம் என்று சொல்லவில்லை? ஏன் சீதா அன்னையை நீக்கினீர்கள்? ஏன் அவமதிக்கிறீர்கள்? ஏன் இந்தியப் பெண்களை இழிவுபடுத்துகிறீர்கள்?.

மற்றவர்களின் பயத்தால் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் பயனடைகின்றன, ஏனென்றால் அவர்கள் இந்த பயத்தை வெறுப்பாக மாற்றுகிறார்கள். அவர்களின் ஒட்டுமொத்த அமைப்புகளும் அதே வேலையைச் செய்கின்றன. அவர்கள் நாட்டைப் பிரிக்கவும், வெறுப்பையும், பயத்தையும் பரப்பவும் வேலை செய்கிறார்கள். நாட்டில் பரப்பப்படும் பயம் மற்றும் வெறுப்பை எதிர்த்து நிற்பதுதான் பாரத் ஜோடோ யாத்ரா.
நாட்டில் உள்ள 55 கோடி பேரின் சொத்துக்கு சமமாக இந்தியாவில் உள்ள 100 பணக்காரர்களிடம் சொத்து இருக்கிறது. இந்தியாவின் பாதி செல்வம் 100 பேரிடம் மட்டுமே உள்ளது, நாடு அவர்களுக்காக இயங்குகிறது.
இந்தியாவின் மகாராஜாக்கள் என்று நான்கு அல்லது ஐந்து பேர் உள்ளனர். முழு அரசாங்கமும், ஒட்டு மொத்த ஊடகங்களும் மற்றும் அனைத்து அதிகாரிகளும் அவர்களின் விருப்பப்படி செயல்படுகிறார்கள்.பிரதமர் மோடி ஜியும் அவர்களின் விருப்பப்படி செயல்படுகிறார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- சீன வீரர்களின் அத்துமீறலை முறியடித்த இந்திய ராணுவ வீரர்களின் வீரம் பாராட்டுக்குரியது.
- பிரதமர் மோடியின் தலைமையில் உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்துள்ளது.
தலைநகர் டெல்லியில் நடைபெற்ற இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு கூட்டத்தில் உரையாற்றிய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங், கால்வான் பள்ளத்தாக்குப் பகுதியாக இருந்தாலும் சரி, தவாங் பகுதியாக இருந்தாலும் சரி, சீன ராணுவத்திற்கு எதிராக நமது ராணுவ வீரர்கள் வெளிப்படுத்திய வீரத்தை எவ்வளவு பாராட்டினாலும் போதாது என்று தெரிவித்தார்.
சீனாவுடனான எல்லை விவகாரத்தில் மத்திய அரசு குறித்த ராகுல் காந்தியின் கருத்தை விமர்சித்த அவர், யாருடைய நோக்கத்தையும் எப்போதும் அவர் சந்தேகிப்பதன் காரணம் எனக்குப் புரியவில்லை என்று கூறினார். நாங்கள் எதிர்க்கட்சியாக இருக்கும் போது ஆளும் கட்சி தலைவரின் நோக்கத்தை கேள்வி கேட்டதில்லை என்றும், கொள்கையின் அடிப்படையில் மட்டுமே விவாதித்தோம் என்றும் அவர் விளக்கம் அளித்தார்.
உண்மையின் அடிப்படையில்தான் அரசியல் இருக்க வேண்டும், பொய்யின் அடிப்படையில் நீண்ட காலமாக அரசியல் செய்ய முடியாது, சமூகத்தை சரியான பாதையில் கொண்டு செல்லும் செயல்முறையே சரியான அரசியல் ஆகும் என்றும் ராகுல்காந்தியின் விமர்சனத்திற்கு அவர் பதில் அளித்தார்.
உலக நன்மை மற்றும் செழுமைக்காகவே இந்தியா வல்லரசாக மாற விரும்புகிறது, இதனால் உலக நாடுகள் மீது ஆதிக்கம் செலுத்த விரும்புகிறோம் என்று ஒருபோதும் யாரும் கருதக் கூடாது என்றும் மத்திய மந்திரி குறிப்பிட்டார். எந்த ஒரு நாட்டின் ஒரு அங்குல நிலத்தைக் கூட கைப்பற்றும் எண்ணம் இந்தியாவிற்கு கிடையாது, பிரதமர் மோடி தலைமையில் உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு தற்போது கணிசமாக உயர்ந்துள்ளது என்றும் மத்திய மந்திரி ராஜ்நாத் தெரிவித்தார்.
- 5 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல திட்டமிட்டு உள்ளனர்.
- நடைபயணத்தை நிறைவு செய்து விட்டு அனைவரும் சென்னை திரும்புகிறார்கள்.
புதுடெல்லி:
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பாத யாத்திரையில் பங்கேற்க வரும்படி ராகுல்காந்தி அழைப்பு விடுத்து இருந்தார்.
அவரது அழைப்பின் பேரில் பாத யாத்திரையில் டெல்லியில் கலந்து கொள்வதாக கமல் அறிவித்து இருந்தார். அதன்படி இன்று அதிகாலையில் சென்னையில் இருந்து விமானத்தில் புறப்பட்ட கமல்ஹாசன் காலை 10 மணியளவில் டெல்லி சென்றார்.
இன்று மாலை ராகுல் காந்தியின் யாத்திரையில் கமல் கலந்து கொண்டார். பாத யாத்திரையில் கமலுடன் சுமார் 250 மக்கள் நீதி மய்யம் கட்சியினரும் பங்கேற்றுள்ளனர்.
மாநில நிர்வாகிகள் மவுரியா, தங்கவேல், முரளி அப்பாஸ், பொன்னுசாமி உள்பட மாநிலம் முழுவதிலும் இருந்து 20 பெண் நிர்வாகிகள் உள்ளிட்ட தொண்டர்கள் பங்கேற்றுள்ளனர். 5 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல திட்டமிட்டு உள்ளனர். நடைபயணத்தை நிறைவு செய்து விட்டு அனைவரும் சென்னை திரும்புகிறார்கள்.
- இந்தியா முழுமைக்குமான பிரதமராக இருந்தவர் நேரு.
- காந்தி, நேரு வாரிசுகளின் பேச்சுக்கள் கோட்சேவின் சந்ததியினருக்கு கசப்பாகத்தான் இருக்கும்.
முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு குறித்து தமிழக காங்கிரஸ் ஊடக பிரிவு தலைவர் கோபண்ணா எழுதிய மாமனிதர் நேரு புத்தக வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம்,
தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். இந்த புத்தகத்தை வெளியிட்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளதாவது:
நேரு உண்மையான ஜனநாயகவாதி, அதனால்தான் அனைத்து ஜனநாயக சக்திகளும் அவரைப் போற்றுகின்றன. நேரு காங்கிரஸின் குரலாக மட்டுமல்ல, இந்தியாவின் குரலை எதிரொலித்தார். இந்தியா முழுமைக்குமான பிரதமராக இருந்தவர் நேரு. ஒரே மொழி, ஒரே நம்பிக்கை, ஒரே மதம், ஒரே கலாச்சாரம், ஒரே சட்டத்திற்கு அவர் எதிரானவர்.

வகுப்புவாதமும், தேசியவாதமும் சேர்ந்திருக்க முடியாது என அவர் சொன்னவர். இந்தி பேசாத மக்கள் விரும்பாதவரை இந்தி திணிக்கப்படாது என்று அவர் வாக்குறுதி அளித்தார். தற்போது குறுக்கு வழிகளில் இந்தி நுழைகிறது
இன்றைய அரசியல் சூழ்நிலை நேருவின் உண்மையான மதிப்பை நமக்கு எடுத்துக் காட்டுகிறது. தமிழ்நாட்டிற்கு பெரியார், அண்ணா, கருணாநிதியை போன்று இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும், கூட்டாட்சி, சகோதரத்துவம், சமத்துவம், மதச்சார்பின்மை ஆகியவற்றை நிலைநாட்ட காந்தியும் நேருவும் தேவைப்படுகிறார்கள்.
ராகுலின் பேச்சு நாட்டில் தற்போது பூகம்பத்தை உருவாக்குகிறது. அவர் தேர்தல் அரசியலையோ, கட்சி அரசியலையோ பேசவில்லை, கொள்கை அரசியலைத்தான் பேசுகிறார்.
சில நேரம் அவர் நேருவை போன்று பேசுகிறார். அதனால்தான் சிலரால் அவர் கடுமையாக எதிர்க்கப்படுகிறார். மகாத்மா காந்தி மற்றும் நேருவின் வாரிசுகளின் பேச்சுக்கள் கோட்சேவின் சந்ததியினருக்கு கசப்பாகத்தான் இருக்கும். அதனால்தான் அதை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- எல்லையில் என்ன நடந்தது என்பதை நாட்டிற்கு மத்திய அரசு சொல்ல வேண்டும்.
- விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால், நாடு பாதிக்கப்படும்.
அருணாசல பிரதேச மாநிலம் தவாங் செக்டரில் அண்மையில் அத்துமீறலில் ஈடுபட்ட சீன வீரர்களை இந்திய ராணுவ வீரர்கள் விரட்டியடித்தனர். இந்த மோதல் காரணமாக இரு நாட்டு எல்லைப் பகுதியில் பதற்றமான நிலை காணப்படுகிறது.
இந்நிலையில் பீஜிங்கில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் பேசிய சீன வெளியுறவு மந்திரி வாங் யி, எல்லைப்பகுதிகளில் நிலைத்தன்மையை உறுதி செய்வதில் இரு தரப்பும் உறுதியுடன் உள்ளதாகவும், இரு தரப்பு உறவுகளின் வளர்ச்சிக்கு இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற நாங்கள் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
இந்நிலையில், யூ டியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, இந்தியாவுக்கு எதிராக சீனாவும் பாகிஸ்தானும் ஒன்றாக இருப்பதாக கூறியுள்ளார். போர் வெடித்தால் அவர்கள் இணைந்து இந்தியா மீது தாக்குதல் நடத்தக் கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எல்லையில் என்ன நடந்தது என்பதை நாட்டிற்கு மத்திய அரசு சொல்ல வேண்டும் என்று குறிப்பிட்ட ராகுல்காந்தி, நாம் என்ன நடவடிக்கை எடுத்தாலும், இப்போதே அதை தொடங்க வேண்டும், உண்மையில், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும், விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால், நாடு பாதிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
- ராகுல் காந்தியை அவரது இல்லத்தில் கமல்ஹாசன் சந்தித்தார்.
- பாத யாத்திரையில் பங்கேற்ற கமலுக்கு, ராகுல்காந்தி நன்றி தெரிவித்தார்.
அடுத்த ஆண்டு மக்களைத் தேர்தல் நடைபெறும் நிலையில், பாஜக எதிர்ப்பு அரசியலை கையில் எடுத்துள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் காங்கிரஸ் கட்சியுடன் நெருக்கம் காட்டி வருகிறார்.
கடந்த 24ந் தேதி டெல்லியில் நடைபெற்ற ராகுல் காந்தியின் பாத யாத்திரையில் தமது கட்சி நிர்வாகிகளுடன் அவர் கலந்து கொண்டார். செங்கோட்டையில் ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்த பிரமாண்ட கூட்டத்தில் அவர் பேசினார்.
இதனைத்தொடர்ந்து ராகுல் காந்தியை அவரது இல்லத்தில் கமல்ஹாசன் சந்தித்தார். இது குறித்து மக்கள் நீதி மய்யத்தின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பதிவில் வெளியிட்டுள்ள தகவலில், காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தியை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் கமல்ஹாசன் சந்தித்தார். மக்கள் நலனுக்காகவும், தேச ஒற்றுமைக்காகவும், சக இந்தியனாக பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்றமைக்காக கமல்ஹாசனுக்கு ராகுல்காந்தி அப்போது நன்றி தெரிவித்தார்.

பின்னர் இருவரும் ஒரு மணி நேரத்தித்திற்கும் மேல் ஆலோசனை நடத்தினார். இந்த உரையாடலின் போது, இந்திய அரசியல் சாசனத்துக்கு ஏற்பட்டுள்ள ஆபத்துகள், மக்களிடையே பிளவையும், வெறுப்பையும் பரப்பும் மதவாத அரசியலுக்கு மாற்றாக, ஒற்றுமை, அன்பை விதைக்கும் காந்திய அரசியலின் அவசியம் குறித்தான தங்களது கருத்துகளை இருவரும் பரிமாறிக் கொண்டனர்.
மேலும் விவசாயிகள், தொழிலாளர்கள் என அனைத்துத் தரப்பு மக்களின் நலனையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சி, இளைஞர்களின் நலனைப் பாதுகாத்தல், கிராம சுயாட்சி, மொழித் திணிப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் இருவரும் விவாதித்தனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- புகழ்பெற்ற பாடகர்கள், கலைஞர்கள், சமூக ஊடகங்களில் பிரபலமாக இருப்போரின் இன்னிசை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெற வேண்டும்.
- ஒவ்வொரு மாநிலத்திலும் உச்சகட்டமாக பிரியங்கா காந்தி தலைமையில் மாபெரும் மகளிர் பேரணி நடத்த வேண்டும்.
சென்னை:
ராகுல்காந்தி தற்போது கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை பாத யாத்திரையை நடத்தி வருகிறார். அவரது ஒற்றுமை யாத்திரை சமீபத்தில் டெல்லியில் நடைபெற்றது.
கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக தற்போது யாத்திரைக்கு விடுமுறைவிடப்பட்டுள்ளது. மீண்டும் வருகிற ஜனவரி 3-ந்தேதி தொடங்குகிறது. 150 நாட்கள் நடைபெறும் இந்த யாத்திரை காஷ்மீரில் முடிவடைகிறது.
இந்த நிலையில் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணத்தின் தொடர்ச்சியாக 'அரசியலமைப்பை பாதுகாப்போம்' மற்றும் 'கையோடு கை கோர்ப்போம்' ஆகிய மாபெரும் பிரசாரத்தை முன்னெடுப்பது தொடர்பான கலந்தாலோசனை கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று காலை நடைபெற்றது.
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நடந்த கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சிரிவெல்ல பிரசாத், விஜய்வசந்த் எம்.பி., செயல் தலைவர் விஷ்ணு பிரசாத், கோபண்ணா, பொதுச்செயலாளர் தளபதி பாஸ்கர், ரஞ்சன்குமார் மாநில நிர்வாகிகள் முருகானந்தம், பலராமன், சிரஞ்சீவி மற்றும் முன்னாள் மத்திய மந்திரிகள், முன்னாள் தலைவர்கள், அகில இந்திய செயலாளர்கள், செயல் தலைவர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பல்வேறு அணிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகளுக்கு அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சிரிவெல்ல பிரசாத் ஆலோசனை வழங்கினார்.
ராகுல்காந்தியின் பாத யாத்திரையின் நோக்கத்தை மக்களிடம் எப்படி கொண்டு சேர்க்க வேண்டும் என்று எடுத்துக் கூறினார்.
இதற்காக ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு வழிகாட்டுதல் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இந்த வழிகாட்டுதல் நோட்டீசுகளை அகில இந்திய காங்கிரஸ் கட்சி வழங்கி இருந்தது. அவை நிர்வாகிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டன. அந்த வழிகாட்டுதல் நோட்டீசில் பல்வேறு வழிகாட்டுதல்கள் இடம் பெற்றிருந்தன.
இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
இந்திய ஒற்றுமை பயணம் மேற்கொள்ளும் ராகுல்காந்திக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
வட்டார அளவில் காங்கிரஸ் நிர்வாகிகள் ஒன்று கூடி அதற்கென்று பொறுப்பாளர்களை நியமித்து ஒவ்வொரு கிராமத்துக்கும் நடைபயணமாக சென்று ராகுல்காந்தியின் ஒற்றுமை பாதயாத்திரையின் நோக்கங்கள் பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஒவ்வொரு வட்டாரத்திலும் 1 மாதம் இந்த நடைபயணங்கள் நடத்தப்பட வேண்டும். பொதுக்கூட்டங்களும் நடத்தப்பட வேண்டும்.
கட்சிக்கொடி ஏற்றி, ராகுல் காந்தி பாதயாத்திரை நினைவு கல்வெட்டுகளை ஒவ்வொரு கிராமத்திலும் அமைக்க வேண்டும். பாத யாத்திரை பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் கடிதத்தை வீடு, வீடாக வினியோகம் செய்ய வேண்டும்.
கிராமங்கள், வட்டாரங்கள், மாவட்டங்கள், நகரங்கள் மற்றும் மாநிலம் முழுவதும் தொண்டர்கள் மாநாடு நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் மூத்த தலைவர்கள், எம்.பி.க்கள், முன்னாள் எம்.பி.க்கள் இதற்கு பார்வையாளர்களாக செயல்பட வேண்டும்.
பா.ஜனதா கட்சியின் மக்கள் விரோத போக்கை மக்களிடையே எடுத்து சொல்ல வேண்டும். இது தொடர்பாக ராகுல்காந்தி ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தை பொது மக்களிடம் வினியோகிக்க வேண்டும்.
ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமைப் பயண காணொலி காட்சிகளை பிரம்மாண்ட எல்.இ.டி. திரைகளில் முக்கிய இடங்களில் திரையிட வேண்டும்.
புகழ்பெற்ற பாடகர்கள், கலைஞர்கள், சமூக ஊடகங்களில் பிரபலமாக இருப்போரின் இன்னிசை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெற வேண்டும். ஒவ்வொரு மாநிலத்திலும் உச்சகட்டமாக பிரியங்கா காந்தி தலைமையில் மாபெரும் மகளிர் பேரணி நடத்த வேண்டும். இந்த பேரணியில் மகளிர் கொள்கை விளக்க அறிக்கையை பிரியங்கா காந்தி வெளியிடுவார்.
தமிழகத்தில் நடைபெறவுள்ள இம்மாபெரும் பிரசார இயக்கம் மாநில அளவில் 2023 ஜனவரி 15-ந்தேதிக்குள் நடத்தி முடிக்கப்பட வேண்டும். மாவட்ட அளவிலான பார்வையாளர்கள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியால் அனுப்பப்படுவார்கள்.
அதேபோல், மாவட்ட அளவில் ஜனவரி 15-ந் தேதியிலிருந்து 30-ந் தேதிக்குள் நிகழ்ச்சிகளை நடத்தி முடிக்க வேண்டும். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் அனைத்து நிலைகளிலும் மேற்கொள்ள வேண்டும்.
ராகுல்காந்தி தம்மை கடுமையாக வருத்திக் கொண்டு இந்திய ஒற்றுமைப் பயணத்தை மேற்கொண்டிருப்பதால் மக்களிடையே ஏற்பட்டுள்ள எழுச்சியை முழுமையாக பயன்படுத்துகிற வகையில் மேற்கண்ட செயல் திட்டங்களை காங்கிரஸ் கட்சியினர் சிறப்பாக நிறைவேற்ற வேண்டும்.
இத்தகைய செயல் திட்டங்களின் மூலமே மத்தியில் நடைபெற்று வரும் மக்கள் விரோத பா.ஜ.க. ஆட்சி அகற்றப்படுவதற்கான ஆதரவை மக்களிடையே திரட்ட முடியும்.
மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சிரி வெல்ல பிரசாத் ஆகியோர் பேசும்போது, "ராகுல்காந்தியின் ஒற்றுமை பாத யாத்திரையின் முக்கியத்துவத்தை நல்ல முறையில் பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும். அதன் மூலம் ராகுல்காந்தி பிரதமராகும் பணிகளை முன்னெடுக்க வேண்டும்," என்றனர்.
- ராகுல்காந்தியின் நோக்கம் நாட்டு மக்களின் நலன் தான் என்று மாணிக்கம் தாகூர் எம்.பி. கூறினார்.
- சிவஞானபுரம் பஞ்சாயத்து தலைவர் கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர்
விருதுநகரில் மாணிக்கம் தாகூர் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற நாடாளுமன்ற குழு பரிந்துரை குறித்து அனைத்து கட்சிகளும் கலந்து பேசி முடிவு எடுக்க வேண்டிய ஒன்று. ராகுல் காந்தி நடைப்பயணத்தை கொச்சைப்படுத்தும் வகையில் பா.ஜ.க.தலைவர் அண்ணாமலை பேசி உள்ளார்.
108 நாட்கள் 2,800 கிலோ மீட்டர் நடைபயணத்தை மேற்கொண்டுள்ள ராகுல்காந்தியின் நோக்கம் நாட்டு மக்களின் நலன் தான். ஆனால் இதுபற்றி அண்ணாமலை பேசியுள்ளது வேதனை அளிக்கும் வகையில் உள்ளது. ராகுல்காந்தியுடன் கமல்ஹாசனும் சித்தாந்த அடிப்படையில் ஒரே பார்வை கொண்டவர்கள்.
இதனால் தேர்தல் கூட்டணி ஏற்படுமா? என்று இப்போது சொல்ல முடியாது. ராகுல் காந்திக்கு நாட்டு மக்களின் நலன் தான் முக்கியம். மற்ற தலைவர்களின் பலத்தையும், பலவீனத்தையும் பற்றி கவலை இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக சின்னமூப்பன் பட்டி கிராமத்தில் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட பஸ் நிறுத்தத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து வடமலைக்குறிச்சியில் காங்கிரஸ் கொடியை ஏற்றி வைத்தார்.
இந்நிகழ்ச்சிகளில் ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் எம்.எல்.ஏ., யூனியன் தலைவர் சுமதிராஜசேகர், மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் ஸ்ரீராஜா சொக்கர், ரங்கசாமி, முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் மீனாட்சி சுந்தரம், சிவஞானபுரம் பஞ்சாயத்து தலைவர் கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.