என் மலர்
நீங்கள் தேடியது "ஆம்னி பஸ்"
- கோயம்பேடு, போரூர் சுங்கச்சாவடி பகுதிகளில் சிறப்பு ஆம்னி பஸ்களில் சோதனை செய்யப்பட்டது.
- 49 ஆம்னி பஸ்களுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டு ரூ.92,500 அபராதமாக வசூலிக்கப்பட்டது.
சென்னை:
சென்னை வடக்கு சரக இணை போக்குவரத்து ஆணையர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை போக்குவரத்து ஆணையர் உத்தரவின்படி கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறை தினங்களை ஒட்டி ஆம்னி பஸ்களில் வழக்கத்துக்கு மாறான அதிக கட்டணம் வசூலிக்கும் புகார் குறித்து கண்காணிக்க சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு வருகிற 2.1.2023 வரை சென்னை வடக்கு சரக பகுதியில் சோதனை நடத்தப்படுகிறது.
இதன்படி கோயம்பேடு, போரூர் சுங்கச்சாவடி பகுதிகளில் சிறப்பு ஆம்னி பஸ்களில் சோதனை செய்யப்பட்டது. இதில் வழக்கத்திற்கு மாறாக அதிக கட்டணம் வசூலிக்கும் புகார் மற்றும் வரி செலுத்தப்படாமல் இயக்கப்படும் பிற மாநில ஆம்னி பஸ்கள் குறித்து சோதனை நடத்தப்பட்டது.
இதில் 49 ஆம்னி பஸ்களுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டு ரூ.92,500 அபராதமாக வசூலிக்கப்பட்டது. மேலும் வழக்கத்துக்கு மாறான அதிக கட்டணம் வசூலித்ததாக புகார் பெறப்பட்ட ஆம்னி பேருந்துகளில் இருந்து 9 பயணிகளுக்கு ரூ.9,200 அதிக கட்டணம் திருப்பி அளிக்கப்பட்டது.
இதுபோன்ற வரி செலுத்தப்படாமல் அதிக கட்டணம் வசூலிப்பது மற்றும் போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்கள் மீது மோட்டார் வாகனச் சட்டம் மற்றும் விதிகளின்படி தொடர்ந்து கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- ஒரு சில தனியார் பஸ் ஆபரேட்டர்கள், நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக கட்டணம் வசூலிக்கிறார்கள்.
- நெல்லை, தூத்துக்குடியில் இருந்து ரூ.2900 கட்டணம் நிர்ணயிக்கப்பட்ட நிலையில் ரூ.3500, ரூ.4000 வரை இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னை:
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையை கொண்டாட வெளியூர் சென்றவர்கள் 1-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மீண்டும் சென்னை திரும்புகிறார்கள்.
தற்போது பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு இருப்பதால் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் இருந்து சொந்த ஊர்களுக்கு சுமார் 5 லட்சம் பேர் பஸ்களில் பயணம் செய்துள்ளனர்.
கடந்த வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் அரசு பஸ்களில் மட்டும் 4 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். இது தவிர சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், ரெயில் நிலையங்களில் பல்லாயிரக் கணக்கானவர்கள் பயணம் செய்தனர். மேலும் ஆம்னி பஸ்களிலும் கடைசி நேரத்தில் அதிக கட்டணம் செலுத்தி பலர் பயணம் செய்தனர்.
இந்த நிலையில் பண்டிகை விடுமுறை முடிந்து ஜனவரி 2-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படுகின்றன. அதனால் 1-ந் தேதி புத்தாண்டு முடித்து விட்டு பலர் சொந்த ஊர்களில் இருந்து சென்னைக்கு திரும்புகிறார்கள்.
அனைத்து ரெயில்களிலும், எல்லா வகுப்பு பெட்டிகளும் நிரம்பிவிட்ட நிலையில் சிறப்பு ரெயில்களிலும் இடமில்லை. அதனால் மக்கள் கூடுதல் பஸ் சேவைக்காக காத்து உள்ளனர். அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 30, 31-ந் தேதிகளில் சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மதுரை, நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து சென்னைக்கு கூடுதலாக பஸ்கள் விடஏற்பாடு செய்யப்படுகிறது.
மேலும் ஆம்னி பஸ்களில் அந்த தேதியில் பயணம் செய்ய இடங்கள் நிரம்பி வருகின்றன. ஒரு சில தனியார் பஸ் ஆபரேட்டர்கள், நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக கட்டணம் வசூலிக்கிறார்கள்.
குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி, மதுரை மற்றும் கோவை, திருப்பூர் நகரங் களில் இருந்து சென்னைக்கு சங்கம் நிர்ணயித்த கட்ட ணத்தை விட அதிகமாக கட்டணம் நிர்ணயித்து உள்ளனர்.
மதுரை, கோவையில் இருந்து ஏ.சி. படுக்கை கட்டணம் ரூ.2581 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் ரூ.3500 வரை வசூலிக்கிறார்கள். நெல்லை, தூத்துக்குடியில் இருந்து ரூ.2900 கட்டணம் நிர்ணயிக்கப்பட்ட நிலையில் ரூ.3500, ரூ.4000 வரை இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆம்னி பஸ்களுக்கு கட்டணம் அரசு நிர்ணயிக்க முடியாத நிலையில் அவர்களே நிர்ணயித்து இயக்குகிறார்கள். ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் கட்டணம் நிர்ணயம் செய்து அறிவிக்கப்பட்ட நிலையில் அதைவிட கூடுதலாக கட்டணம் வசூலிப்பது முறையற்ற செயல். தேவையை அறிந்து அதற்கேற்ப பல மடங்கு கட்டணம் உயர்த்துவதை அரசு தடுக்க வேண்டும்.
இதே போல பெங்களூருக்கு ரூ.2000, கொச்சினுக்கு ரூ. 2700 கட்டணம் நிர்ணயிக்கப்பட்ட நிலையில் அதை விட கூடுதலாக வசூலிப்பதாக பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
பண்டிகை மற்றும் விசேஷ காலங்களில் கூடுதலாக கட்டணம் வசூலிப்பதை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாக பயணிகள் சங்கம் சார்பில் தெரிவிக்கின்றனர்.
- சென்னையில் இருந்து மதுரை செல்வதற்கு ரூ.2,500 கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது.
- கோவைக்கு ரூ.2,800, நெல்லைக்கு ரூ.3,300, பெங்களூருக்கு ரூ.2000, கொச்சினுக்கு ரூ.2,700 என கட்டணம் முடிவு செய்து இணைய தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை:
சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பஸ்களில் பண்டிகை காலங்களில் அதிக கட்டணம் வசூலிப்பது வாடிக்கையாகவே இருந்து வருகிறது.
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கடந்த 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் கூடுதல் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. புத்தாண்டையொட்டி தென்மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பஸ்களிலும் அதிக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
புத்தாண்டையொட்டி நாளை சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் பஸ்களில் 2 ஆயிரத்துக்கு மேல் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து மதுரை செல்வதற்கு ரூ.2,500 கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. கோவைக்கு ரூ.2,800, நெல்லைக்கு ரூ.3,300, பெங்களூருக்கு ரூ.2000, கொச்சினுக்கு ரூ.2,700 என கட்டணம் முடிவு செய்து இணைய தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.
இதேபோன்று பொங்கல் பண்டிகையையொட்டியும் கூடுதல் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையையொட்டி வருகிற 13, 14-ந் தேதிகளில் சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் கட்டண விவரம் வருமாறு:-
சென்னையில் இருந்து மதுரைக்கு ரூ.2,200, கோவை ரூ.2,500, நெல்லை ரூ.3000, பெங்களூர் ரூ.2,300, கேரள மாநிலம் கொச்சினுக்கு ரூ.2,500-ல் இருந்து ரூ.3 ஆயிரமாக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆம்னி பஸ்களில் இதுபோன்ற கட்டண உயர்வால் பொங்கலை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ள நடுத்தர மக்கள் திண்டாட்டத்துக்குள்ளாகி இருக்கிறார்கள். கட்டண உயர்வால் மிரண்டு போயுள்ள அவர்கள் சொந்த ஊருக்கு செல்லலாமா? சென்னையிலேயே பொங்கல் கொண்டாடலாமா? என்கிற சிந்தனையில் ஆழ்ந்துள்ளனர்.
ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆனால் அதைப்பற்றி எல்லாம் கண்டு கொள்ளாமல் ஆம்னி பஸ்களில் பலமடங்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
- பஸ் ஐதராபாத் அடுத்த குக்கட் பள்ளி, ஜே, என்.டி.யூ மெட்ரோ ரெயில் நிலையம் அருகே வந்தபோது என்ஜினில் இருந்து திடீரென புகை வந்தது.
- பயணிகள் அனைவரும் உயிர் பயத்தில் பஸ்சில் இருந்து அலறி அடித்துக் கொண்டு கீழே இறங்கினர்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து திருப்பதிக்கு இன்று அதிகாலை தனியார் ஆம்னி பஸ் ஒன்று புறப்பட்டு வந்து கொண்டு இருந்தது.
20-க்கும் மேற்பட்ட பயணிகள் பஸ்சில் இருந்தனர். பஸ் ஐதராபாத் அடுத்த குக்கட் பள்ளி, ஜே, என்.டி.யூ மெட்ரோ ரெயில் நிலையம் அருகே வந்தபோது என்ஜினில் இருந்து திடீரென புகை வந்தது.
இதனை கண்ட பஸ் டிரைவர் சாலையோரம் பஸ்சை நிறுத்திவிட்டு பயணிகள் அனைவரையும் கீழே இறங்கும்படி தெரிவித்தார்.
இதையடுத்து பயணிகள் அனைவரும் உயிர் பயத்தில் பஸ்சில் இருந்து அலறி அடித்துக் கொண்டு கீழே இறங்கினர். அதற்குள் பஸ் முழுவதும் தீ மளமளவென பரவ தொடங்கியது.
இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதற்குள் பஸ் முழுவதும் எரிந்து தீக்கிரையானது.
இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பஸ் தீ பிடித்து எரிவதற்கு முன்பாகவே டிரைவர் பயணிகளுக்கு தகவல் தெரிவித்து இறக்கிவிடப்பட்டதால் அதிர்ஷ்டவசமாக 20 பயணிகள் உயிர் தப்பினர். அதிகாலை நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- ஆம்னி பஸ் நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூரு உள்ளிட்ட தொலைதூர பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
- வடசேரி எம்எஸ் ரோடு பகுதியை பார்வையிட்ட போது ஒரு வங்கி முன்பு கழிவுநீர் ஓடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கிநின்றது
நாகர்கோவில் :
நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையம், வடசேரி பஸ் நிலையம், ஆம்னி பஸ் நிலையத்தை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஆம்னி பஸ் நிலையத்தில் ரூ.2 கோடி செலவில் பணிகள் நடைபெறுகிறது. ஆம்னி பஸ் நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூரு உள்ளிட்ட தொலைதூர பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
ஆம்னி பஸ்நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் தொடங்கவுள்ள நிலையில் ஆம்னிபஸ்களை எங்கிருந்து இயக்குவது என்பது குறித்து மேயர் மகேஷ் இன்று வடசேரி பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கனகமூலம் சந்தையில் நுண்ணுரம் தயாரிக்கும் இடத்தில் காலியிடம் இருப்பது தெரியவந்தது.
இந்த இடத்தில் இருந்து ஆம்னிபஸ்களை இயக்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆம்னி பஸ்கள் கனகமூலம் சந்தையில் இருந்து இயக்கப்படுவதால், அந்த பகுதியை சுத்தப்படுத்த அதிகாரிகளுக்கு மேயர் மகேஷ் உத்தரவிட்டார். மேலும் கனகமூலம் சந்தை யில் செயல்படும் நுண்ணுரம் தயாரிக்கும் இடத்தை மேயர் மகேஷ் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
மேலும் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் கையுறை அணிந்து வேலை செய்யுமாறு அறிவுறுத்தினார். வடசேரி எம்எஸ் ரோடு பகுதியை பார்வையிட்ட போது ஒரு வங்கி முன்பு கழிவுநீர் ஓடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கிநின்றது. இதனை பார்த்த மேயர், அதிகாரிகளிடம் கழிவுநீர் ஓடை அடைப்பை சரிசெய்து கழிவுநீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து கழிவுநீர் ஓடை உடனடியாக சரி செய்யப்பட்டது. ஆய்வின் போது சுகாதாரஆய்வாளர் ராஜேஷ் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
- போலீஸ் கமிஷனர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
- ஆயிரக்கணக்கான பயணிகள் ஒரே நேரத்தில் திரண்டனர்.
கோவை
கோவை மாவட்டத்தில் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த பலர் பணிபுரிந்து வருகின்றனர். பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த கல்லூரி மாணவ- மாணவிகளும் கோவையில் தங்கி படித்து வருகின்றனர்.
பொங்கல் பண்டிகை முன்னிட்டு தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை விடப்பட்டு உள்ளதால் பலர் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டனர். பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
இதேபோல ரெயில் நிர்வாகம சிறப்பு ரெயில்களையும் அறிவித்து இயக்கியது.
வெளியூர்களுக்கு செல்ல வேண்டியவர்கள் நேற்று மாலை பஸ் நிலையங்களிலும், ரெயில் நிலையங்களிலும் திரண்டதால் பெரும் நெரிசல் ஏற்பட்டது. கோவை சிங்கா நல்லூர் பஸ் நிலையத்தில் இருந்து மதுரை, தேனி போன்ற தென் மாவட்டங்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டன. இங்கு தான் நேற்று ஆயிரக்கணக்கான பயணிகள் ஒரே நேரத்தில் திரண்டனர். கூட்டம் கட்டுக்கடங்காமல் பஸ் நிலையமே திணறியது.
இதேபோல சூலூர் பஸ் நிலையத்தில் இருந்து கரூர், திருச்சி மார்க்கமாக இயக்கப்பட்ட பஸ்கள் புறப்பட்டுச் சென்றன. காந்திபுரம் பஸ் நிலையத்தில் இருந்து மதுரை, சேலம், நெல்லை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டன. அங்கும் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. ஒவ்வொரு பஸ்கள் வந்தபோதும் பயணிகள் முண்டியடித்து ஏறினர்.
இதுபற்றி கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
வெளியூர் செல்லும் பயணிகள் நெரிசலில் சிக்காமல் செல்ல மாவட்ட நிர்வாகத்தினருடன் இணைந்து 300 போக்குவரத்து போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
மேலும் வழிப்பறி திருடர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. வெளியூர் செல்பவர்களின் வீடுகளில் கொள்ளை சம்பவங்களை தடுக்கும் விதமாக போலீசார் ரோந்து பணி செலல உள்ளனர். பொங்கல் பண்டிகைக்கு வெளியூர் செல்லும் மக்களிடம் ஆம்னி பஸ்கள் கட்டணம் அதிகமாக வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும். பயணிகள் புகார் தரும் பட்சத்தில் நடவடிக்கை நிச்சயம் எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
- வியாபாரிகள் பாதிக்காத வகையில் பஸ் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- நாகர்கோவில் நகர பகுதியில் தினமும் 110 டன் குப்பைகள் பெறப்பட்டு வருகிறது
நாகர்கோவில் :
நாகர்கோவில் மாநகராட்சி கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் மகேஷ் தலைமையில் இன்று நடந்தது. ஆணையாளர் ஆனந்தமோகன், துணை மேயர் மேரிபிரின்சிலதா, மண்டல தலைவர்கள் முத்துராமன், செல்வகுமார், அகஸ்டினா கோகிலவாணி, ஜவகர், கவுன்சிலர்கள் மீனாதேவ், அக் ஷயா கண்ணன், அய்யப்பன், உதயகுமார், ரமேஷ், அனிலா சுகுமாரன், வளர்மதி, டி.ஆர்.செல்வம், நவீன்குமார், கலா ராணி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் கவுன்சிலர்கள் கூறியதாவது:-
வடசேரி பகுதியில் புதிய பஸ் நிலையம் அமைக்கப்படுவதால் தற்பொழுது உள்ள வடசேரி சந்தையில் உள்ள வியாபாரிகள் பாதிக்கப்படுவார்கள். வியாபாரிகள் பாதிக்காத வகையில் பஸ் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நாகர்கோவில் மாநகர பகுதியில் உள்ள குப்பைகள் வலம்புரிவிளை குப்பை கிடங்கில் இருந்து துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு வருகிறது. குப்பை கிடங்கை உடனடியாக மாற்ற வேண்டும். நாகர்கோவில் மாநகராட்சியில் உள்ள 4 மண்டல அலுவலகங்களை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 51-வது வார்டுக்குட் பட்ட புல்லுவிளை, மேலகாட்டு விளை பகுதியில் தண்ணீர் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அந்த பகுதியில் ஆழ்குழாய் கிணறுகள் மூலமாக தண்ணீர் சப்ளை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநகராட்சியில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் வரி போடுவது பெயர் மாற்றுவது தொடர்பாக பொதுமக்கள், கவுன்சிலர்கள் மனு அளித்தால் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப் படுவதில்லை. புரோக்கர்கள் மூலமாக வந்தால் உடனடியாக பெயர் மாற்றங்கள் வரி போடுவது போன்ற பணிகள் நடக்கின்றன. இதை உடனடியாக சரி செய்ய வேண்டும். 6 மாதங்களுக்கு முன்பு பெயர் மாற்றத்திற்கு கொடுத்த மனுக்கள் கூட நிலுவையில் உள்ளது. செட்டிகுளம் பகுதியில் உடனடி யாக ரவுண்டானா அமைக்க வேண்டும். தெருவிளக்குகளுக்கு பல்புகள் தட்டுப்பாடு உள்ளது. அதை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். நாகர்கோவில் ஒழுகினசேரி ஆராட்டு ரோடு சிவன் கோவில் முன்புள்ள பழைய ஆற்றில் இருந்து நாகராஜா கோவில் அழகம்மன்கோவில் உட்பட முக்கியமான கோவில்களுக்கு புனித நீர் எடுத்துச் செல்லப்படுவது வழக்கம். தற்பொழுது இரட்டை ெரயில் பாதை பணிகள் நடைபெற்று வருவதால் அந்த புனித நீரை எடுத்து செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதற்கு மாற்று வசதி செய்து தர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு கவுன்சிலர்கள் தெரிவித்தனர். இதற்கு மேயர் மகேஷ் பதிலளித்து கூறியதாவது:-
வடசேரியில் நவீன பஸ் நிலையம் அமைக்க அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. வியாபா ரிகள், பொதுமக்கள் பாதிக்காத வகையில் நடவடிக்கை மேற் கொள்ளப்படும். அந்தப்பகுதியில் சாலைகள் விரிவாக்கம் செய் யப்படும். வடசேரி சந்தையை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். ஆம்னி பஸ் நிலையத்தில் இருந்து வடசேரி பஸ் நிலையத்திற்கு தொங்கு பாலம் அமைப்பது தொடர்பாக ஆலோசித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஏற்கனவே வடசேரி பஸ்நிலையம் ரூ.4 கோடி செலவில் சீரமைக்கப்பட்டு வருகிறது. நாகர்கோவில் நகர பகுதியில் தினமும் 110 டன் குப்பைகள் பெறப்பட்டு வருகிறது. நாகர்கோவில் மாநக ராட்சியில் 4 மண்டல அலுவ லகங்கள் அமைப்பதற்கு இடங்கள் தேர்வு செய் யப்பட்டுள்ளது. தற்பொழுது மண்டலத்தின் மையப் பகுதியில் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மையப்பகுதியில் மண்டலங்கள் அமைக்கப்பட வேண்டும் என்றால் அதற்கான இடம் ஒதுக்கீடு செய்து கட்டிடங்கள் அமைப்பதற்கு நிதி பெறப்பட்ட பிறகே மண்டல அலுவலகங்கள் திறக்க முடியும். மண்டலங்கள் தற்பொழுது திறக்கப்பட்ட பிறகு வரும் காலங் களில் மண்டலத்தின் மையப்பகுதி யில் புதிய கட்டிடங்கள் அமைத்து மண்டல அலுவலகங்கள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். நாகர்கோவில் நகர பகுதியில் தண்ணீர் பிரச்சினை சமாளிப்பதற்கு பெருஞ்சாணி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இயற்கை நமக்கு கை கொடுக்கும் வகையில் மழையும் பெய்து வருகிறது. தண்ணீர் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காணப்படும். வரி போடுவது, பெயர் மாற்றம் தொடர்பாக அளிக்கும் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கையை எடுக்க ஆணையாளர் நடவடிக்கை மேற்கொள்வார். செட்டிகுளம் பகுதியில் ரவுண்டான அமைப் பது தொடர்பாக ஏற்கனவே 2 முறை நேரில் சென்று பார்வை யிட்டு ஆய்வு செய்துள்ளோம். நெடுஞ்சா லைத்துறை அதிகாரி யிடம் இது தொடர்பாக பேசப்பட்டுள்ளது. ரவுண்டானா விரைவில் அமைக்கப்படும். அந்த பகுதியில் ரவுண்டானா அமைக்கப் படும்போது செட்டிகுளத்தில் இருந்து சவேரியார் கோவில் செல்லும் சாலை இருவழி பாதையாக மாற்றப்படும். தெருவிளக்குகளை பராமரிக்க ரூ.16 கோடியில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு இருந்த நிலையில் மேலும் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒழுகினசேரி பழைய ஆற்றின் அருகே உள்ள சிவன் கோவில் முன்பு இருந்து புனித நீர் எடுத்துச் செல்வதற்கு மாற்று வசதி செய்ய ஏற்பாடு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சென்னையில் இருந்து நெல்லை செல்வதற்காக ரூ.3,500 கட்டணம் வசூலிக்கப்பட்டது.
- குடும்பத்துடன் சொந்த ஊருக்கு செல்ல வந்தவர்கள் ஆம்னி பஸ்களில் கட்டண உயர்வை பார்த்து செய்வதறியாது திகைத்தனர்.
சென்னை:
தமிழகத்தில் தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளது. இதனால் சென்னையில் வசிக்கும் பெரும்பாலானோர் குடும்பத்துடன் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்லத் தொடங்கி உள்ளனர்.
அவர்கள் கோடை விடுமுறையை சொந்த ஊரில் கழித்து விட்டு பள்ளிகள் ஆரம்பிக்கும் போது சென்னைக்கு வருவது வழக்கம். இதனால் மதுரை, நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்கள் ஏற்கனவே நிரம்பிவிட்டன. மே மாதம் முழுவதுமே ரெயில்கள் நிரம்பிவிட்டதால் சொந்த ஊர்களுக்கு செல்பவர்கள் அரசு பஸ்கள் மற்றும் ஆம்னி பஸ்களையே நம்பி உள்ளனர்.
இன்று மே தின விடுமுறை என்பதால் அலுவலகங்களுக்கு தொடர்ச்சியாக 3 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் கடந்த வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் சொந்த ஊருக்கு செல்ல கோயம்பேடு பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. பயணிகளின் வசதிக்கேற்ப கூடுதலாக அரசு பஸ்கள் இயக்கப்பட்டன.
முன்பதிவு செய்த பயணிகள் திருச்சி, மதுரை, கோவை, தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட ஊர்களுக்கு சிரமம் இன்றி பயணம் செய்தனர்.
ஆனால் கூட்டம் நிரம்பி வழிந்த நிலையில் முன்பதிவு செய்யாமல் வந்த பயணிகள் பஸ்களில் இருக்கை கிடைக்காமல் அவதிப்பட்டனர். இதனால் அரசு பஸ்களில் டிக்கெட் கிடைக்காதவர்கள் ஆம்னி பஸ் நிலையங்களுக்கு படையெடுத்தனர்.
இதன் காரணமாக ஆம்னி பஸ் நிலையங்களில் பயணிகளின் வருகை திடீரென்று உயர்ந்தது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஆம்னி பஸ்களில் கட்டணம் 2 மடங்கு அதிகரிக்கப்பட்டது.
குறிப்பாக சென்னையில் இருந்து நெல்லை செல்வதற்காக ரூ.3,500 கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதனால் பயணிகள் கடும் அதிர்ச்சிக்குள்ளானார்கள். குடும்பத்துடன் சொந்த ஊருக்கு செல்ல வந்தவர்கள் ஆம்னி பஸ்களில் கட்டண உயர்வை பார்த்து செய்வதறியாது திகைத்தனர்.
இந்த திடீர் கட்டண உயர்வு தொடர்பாக பயணிகள் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். இது தொடர்பாக போக்குவரத்து அதிகாரிகள் கூறியதாவது:-
மே மாதம் பள்ளி விடுமுறையில் பெரும்பாலானோர் சொந்த ஊருக்கு செல்வார்கள் என்பதால் பயணிகளின் வசதிக்காக கூடுதலாக அரசு விரைவு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அரசு விரைவு பஸ்களுடன், பிற போக்குவரத்து கழக பஸ்களையும் சேர்த்து போதுமான அளவில் பஸ்கள் இயக்கப்படுகின்றன.
பயணிகளின் வருகைக்கு ஏற்ப கூடுதல் பஸ்களை வரவழைத்து அவர்களை அதில் ஏற்றி உடனுக்குடன் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கிறோம்.
ஆம்னி பஸ்களில் கட்டணம் அதிகரிக்கப்பட்டு உள்ளதாக புகர்கள் வருகிறது. ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா? என்பதை கண்டறிய தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அமைச்சர் தலைமையில், பஸ் உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம். அதன் மூலம் ஆம்னி பஸ்களில் கட்டண உயர்வு தடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
- ஆம்னி பஸ் மோதி வியாபாரி பலியானார்.
- நிலைதடுமாறி கீழே விழுந்த ராஜாங்கம் தலையில் பலத்த காயம் அடைந்தார்.
மேலூர்
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள குரண்டிபட்டியை சேர்ந்த வர் ராஜாங்கம் (வயது 65), கோழி வியாபாரம் செய்து வந்த இவர், இன்று அதிகாலை மேலூருக்கு தனது மொபட்டில் வந்து கொண்டி ருந்தார். அதே சாலையில் சென்னையில் இருந்து நெல்லை நோக்கி ஒரு ஆம்னி பஸ் சென்றது.
அந்த பஸ் எதிர்பாராத விதமாக ராஜாங்கத்தின் மொபட் மீது மோதியது. இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்த ராஜாங்கம் தலையில் பலத்த காயம் அடைந்தார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மேலூர் போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் ஆனந்தஜோதி, தனிபிரிவு ஏட்டு தினேஷ் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.அவர்கள் ராஜாங்கத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி னர். அவர்கள் விபத்துக்கு காரணமான ஆம்னி பஸ்சை ஓட்டி வந்த நெல்லை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த டிரைவர் சங்கரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சென்னையில் இருந்து தனியார் ஆம்னி பஸ் நேற்றிரவு சேலம் மாவட்டம் வாழப்பாடி வழியாக கோவைக்கு சென்றது. அந்த பஸ்சில் 27 பயணிகள் பயணம் செய்தனர்.
- எதிர்பாராத விதமாக முன்னால் சென்ற லாரியின் பின்பக்கத்தில் மோதியது.
வாழப்பாடி:
சென்னையில் இருந்து தனியார் ஆம்னி பஸ் நேற்றிரவு சேலம் மாவட்டம் வாழப்பாடி வழியாக கோவைக்கு சென்றது. அந்த பஸ்சில் 27 பயணிகள் பயணம் செய்தனர். ஆம்னி பஸ்சை கேரள மாநிலத்தைச் சேர்ந்த டிரைவர் நெப்போலியன் ரமேஷ் ஓட்டிச் சென்றார்.
லாரி மீது மோதல்
ஆம்னி பஸ் இன்று அதிகாலை, வாழப்பாடி புதுப்பட்டி மாரியம்மன் கோவில் மேம்பாலத்தில், சென்னை- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக முன்னால் சென்ற லாரியின் பின்பக்கத்தில் மோதியது.
இந்த விபத்தில் ஆம்னி பஸ்சின் இடது புறம் முழுவ துமாக சேதம் அடைந்தது. பஸ்சில் தூங்கியவாறு பயணம் செய்து கொண்டி ருந்த கோவையை சேர்ந்த பிரபு(38), ரித்திக், சிவகங்கை மாவட்டம் மாத்தூரை சேர்ந்த உதயா(19), கோவை ஆலடிப்பட்டியை சேர்ந்த ரவிச்சந்திரன், அவரது மனைவி பார்வதி(51) உள்பட 10-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த நெடுஞ்சாலைத் துறையினர் மற்றும் வாழப்பாடி போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயம் அடைந்த வர்களை மீட்டு வாழப்பாடி அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தில் காயம் அடைந்தவர்கள் விபரங்கள் குறித்து வாழப்பாடி போலீ சார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அரசு விடுமுறை வருவதால் பஸ், ரெயில்களில் வெளியூர் பயணம் மேற்கொள்ளும் வகையில் முன் பதிவு செய்யவும் ஆர்வமாக உள்ளனர்.
- பக்ரீத் விடுமுறை வருவதால் நாளைய பயணத்திற்கு அனைத்து ஆம்னி பஸ்களிலும் வழக்கத்தை விட கூடுதலாக கட்டணம் நிர்ணயித்துள்ளனர்.
சென்னை:
பக்ரீத் பண்டிகையையொட்டி நாளை மறுநாள் (வியாழக்கிழமை) அரசு விடுமுறையாகும். இதனால் வெளியூர் பயணம் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கருதி கூடுதல் பேருந்துகளை இயக்க அரசு போக்குவரத்து கழகங்கள் தயாராக உள்ளன.
பொதுவாக வார இறுதி நாளான வெள்ளிக்கிழமை வெளியூர் பயணம் அதிகரிக்கும். அந்த வகையில் தற்போது இஸ்லாமியர்களின் பக்ரீத் பண்டிகை வருவதால் வெள்ளிக்கிழமைக்கு பதிலாக நாளை (புதன்கிழமை) மாலையில் இருந்து மக்கள் கூட்டம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதனால் கூடுதலாக சிறப்பு பஸ்களை இயக்க போக்குவரத்து கழகம் தயாராக உள்ளது. அரசு விரைவு பஸ்கள் கூடுதலாக 100 இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதேபோல விழுப்புரம், மதுரை, சேலம், கோவை போக்குவரத்து கழகங்களில் இருந்தும் கூடுதலாக பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
அரசு விடுமுறை வருவதால் பஸ், ரெயில்களில் வெளியூர் பயணம் மேற்கொள்ளும் வகையில் முன் பதிவு செய்யவும் ஆர்வமாக உள்ளனர். அரசு பஸ்களில் வழக்கத்தைவிட நாளை (புதன்கிழமை) பயணம் செய்ய முன்பதிவு அதிகரித்து இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். வெள்ளிக்கிழமையை போல் முன்பதிவு கூடி உள்ளது.
குறிப்பாக தென்மாவட்ட பஸ்களுக்கு செல்லக்கூடிய எல்லா ரெயில்களும் நிரம்பிவிட்டன. காத்திருப்போர் பட்டியல் 300-ஐ தாண்டியுள்ளது. தக்கல் முன்பதிவு காத்திருப்பு எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
இதற்கிடையில் விடுமுறை தினத்தை பயன்படுத்தி ஆம்னி பஸ்களில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. வார நாட்களில் பொதுவாக குறைந்த அளவில் தான் கட்டணம் வசூலிக்கப்படும். ஆனால் பக்ரீத் விடுமுறை வருவதால் நாளைய பயணத்திற்கு அனைத்து ஆம்னி பஸ்களிலும் வழக்கத்தை விட கூடுதலாக கட்டணம் நிர்ணயித்துள்ளனர்.
மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில் தென்காசி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்படும் ஆம்னி பஸ்களில் கட்டணம் அதிகரித்துள்ளது.
கூட்ட நெரிசலை குறைக்க கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து நாளை சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு நள்ளிரவு வரை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
- கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் இருந்து 25 பேர் ஆம்னி பஸ்சில் சுற்றுலா சென்று விட்டு நள்ளிரவில் ஊருக்கு திரும்பினர். இந்த ஆம்னி பஸ்சை சூளகிரிைய சேர்ந்த டிரைவர் மோகன் என்பவர் ஓட்டி வந்தார்.
- சுற்றுலாவுக்கு சென்று விட்டு திரும்பிய ஆம்னி பஸ் அதிகாலை 4 மணி அளவில் லாரியின் பின்பக்கத்தில் பயங்கரமாக மோதியது. இதனால் ஆம்னி பஸ் முன்பகுதி அப்பளம் போல் நொருங்கியது.
சேலம்:
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் இருந்து 25 பேர் ஆம்னி பஸ்சில் சுற்றுலா சென்று விட்டு நள்ளிரவில் ஊருக்கு திரும்பினர். இந்த ஆம்னி பஸ்சை சூளகிரிைய சேர்ந்த டிரைவர் மோகன் என்பவர் ஓட்டி வந்தார்.
இந்த நிலையில், கோவையில் இருந்து இரும்பு கம்பி லோடு ஏற்றிக்கொண்டு சேலம் மாவட்டம் வழியாக வந்து கொண்டிருந்த லாரி திடீெரன பழுதானது. இதனால் லாரியை ஓடி வந்த தூத்துக்குடியை சேர்ந்த டிரைவர் ரமேஷ்குமார் என்பவர் லாரியை உத்தம சோழபுரம் கரபுரநாதர் கோவில் அருகே சாலையோரம் நிறுத்திவிட்டு பழுதை சரி செய்து கொண்டிருந்தார்.
ஆம்னி பஸ் மோதியது
அப்போது சுற்றுலாவுக்கு சென்று விட்டு திரும்பிய ஆம்னி பஸ் அதிகாலை 4 மணி அளவில் லாரியின் பின்பக்கத்தில் பயங்கரமாக மோதியது. இதனால் ஆம்னி பஸ் முன்பகுதி அப்பளம் போல் நொருங்கியது. அப்போது அதிகாலை என்பதால் பஸ்சில் இருந்த சுற்றுலா பயணிகள் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தனர். விபத்து நிகழ்ந்ததும், அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதில் டிரைவர் உள்பட 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு கை, கால், முகம் உள்ளிட்ட இடங்களில் அடிபட்டு இருந்தது. வலி தாங்க முடியாமல் அவர்கள் அலறி துடித்தனர்.
ஆஸ்பத்திரியில் அனுமதி
சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். மேலும் கொண்ட லாம்பட்டி போலீசாருக்கு இது பற்றி தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அங்கு விரைந்து வந்து, காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தினால் பயணிகள் பதட்டத்துடன் காணப்பட்டனர். காயம் அடைந்த பயணிகளை தவிர மற்றவர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.