search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கூடலூர்"

    • இரவு, பகல் என இரு வேளைகளிலும் கனமழை கொட்டி வருகிறது.
    • பந்தலூர் பகுதியே வெள்ளக்காடாக மாறியுள்ளது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த சில நாட்களாகவே தொடர்ச்சியாக இரவு, பகல் என இரு வேளைகளிலும் கனமழை கொட்டி வருகிறது.

    நேற்றும், பந்தலூர், நெலாக்கோட்டை, கொளப்பள்ளி, அய்யன்கொல்லி, பிதர்காடு, பாட்டவயல், நெலாக்கோட்டை, கரியசோலை, சேரம்பாடி, எருமாடு மற்றும் கூடலூர், தேவர்சோலை உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்தது.

    பந்தலூர் பஜாரில் சாலையிலும், கால்வாயிலும் வெள்ளம் ஆறுபோல் ஓடுகிறது. வருவாய் ஆய்வாளர் அலுவலகம் அருகே சாலையில் உள்ள குழிகளில் வெள்ளம் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதியே தண்ணீர் நிரம்பி குளம் போல காட்சியளித்து கொண்டிருக்கிறது.

    மழை வெள்ளம் செல்வதற்கு வழி இல்லாததால், பந்தலூர் பஜார், கோழிக்கோடு-கூடலூர் செல்லும் சாலை, தாலுகாஅலுவலகம் செல்லும் சாலை, கூவமூலா செல்லும் சாலைகளிலும் வெள்ளம் தேங்கி நிற்கிறது.

    அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் தேங்கி நிற்பதால் பந்தலூர் பகுதியே வெள்ளக்காடாக மாறியுள்ளது.

    தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையால் பொன்னானி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் கரையோரம் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதில் 6 வீடுகள் சேதம் அடைந்தன. அங்கிருந்தவர்கள் மீட்கப்பட்டு, அரசு உண்டு உறைவிடப்பள்ளியில் தங்க வைக்கபட்டுள்ளனர்.

    இதேபோல் அம்பலமூலா சுற்று வட்டார பகுதிகளில் உள்ள வட்டகொல்லி, மணல்வயல் ஆதிவாசிகாலனியில் 4 குடும்பங்களை சேர்ந்த 17 பேர் அம்பலமூலா அரசு தொடக்கபள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளது.

    நெலாக்கோட்டை அருகே கூவச்சோலையில் பெய்த மழைக்கு அந்த பகுதியில் உள்ள 4 வீடுகள் இடிந்து விழுந்தன. அங்கிருந்த 10 குடும்பங்களை சேர்ந்த 31 பேர் நெலாக்கோட்டை அரசு நடுநிலைப்பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர்.

    சேரம்பாடி அரசு தேயிலை தோட்டம் ரேஞ்ச் எண் 1, 2 பகுதிகளில் தொழிலாளர்களின் குடியிருப்புகளுக்கு பின்புறம் மண்சரிவு ஏற்பட்டதுடன் வீடுகளுக்குள் வெள்ளமும் புகுந்தது. இதனால் தொழிலாளர்கள் கடும் அவதியடைந்தனர். வீடுகளுக்குள் புகுந்த தண்ணீரை வெளியேற்றும் நடவடிக்கையில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    கூடலூர் சுற்றுவட்டார பகுதிகளிலும் கனமழை நீடித்தது. இருவயல், குற்றிமுச்சு, கம்மாத்தி, புத்தூர் வயல் பகுதிகளில் விளைநிலங்கள் மற்றும் வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்து நிற்கிறது.

    இருவயல், புத்தூர் வயல் பகுதிகளில் 14 குடும்பத்தை சேர்ந்த 49 பேர் மீட்கப்பட்டு தொரப்பள்ளி அரசு பள்ளியில் உள்ள முகாமில் தங்க வைக்கப்பட்டனர்.

    பந்தலூரில் உள்ள அத்திமாநகர், தொண்டியாளம் பகுதிகளில் சாலையில் மண்சரிவு ஏற்பட்டு, போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நெடுஞ்சாலைத்துறை யினர் உடனடியாக அகற்றி போக்கு வரத்தை சீர் செய்தனர்.

    தொடர் மழையால் முதுமலை பகுதியில் உள்ள ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அங்குள்ள ஆற்றுப்பாலத்திற்கு மேல் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது. இதனால் சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. வனத்துறையினர், வருவாய்த்துறையினர் விரைந்து வந்து ஜே.சி.பி எந்திரம் மூலம் பாலத்திற்கு அடியில் தேங்கிய மரக்கட்டைகளை அகற்றினர். அதன்பின்னர் வாகனங்கள் அந்த வழியாக இயக்கப்பட்டன.

    கூடலூர் பகுதியில் பெய்து வரும் மழைக்கு பாடந்தொரையில் உள்ள பால் சொசைட்டியை சுற்றி மழைவெள்ளம் சூழ்ந்தது. அங்கு வந்தவர்கள் முழங்கால் அளவு தண்ணீரில் நடந்து சென்று பால் கேனை வைத்து சென்றனர்.

    கூடலூர், பந்தலூர் பகுதியில் பெய்து வரும் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

    • நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூர் மற்றும் கூடலூர் தாலுக்கா பகுதிகளில் சில நாட்களாகவே கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.
    • பொன்னானி நதியில் ஏற்பட்ட வெள்ள பெருக்கினால் பல வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது.

    நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூர் மற்றும் கூடலூர் தாலுக்கா பகுதிகளில் சில நாட்களாகவே கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் வெள்ளக் காடாக மாறிய கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் உள்ள மக்களை தற்காலிக முகாமில் அரசு தங்க வைத்துள்ளது.

    பொன்னானி நதியில் ஏற்பட்ட வெள்ள பெருக்கினால் பல வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் மக்களின் அன்றாட பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் நில சரிவும் ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக மழை படிப்படியாக குறைந்து வருகிறது. ஆனாலும் பல இடங்களில் நீர் தேக்கம் அப்படியே இருப்பதனால். நீலகிரி மாவட்ட கலெக்டர் கூடலூர் மற்றும் பந்தலூரில் கடந்த 4 நாட்களாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து இருந்த நிலையில் இன்றும் பள்ளிகளுக்கு மட்டும்  விடுமுறை அறிவித்துள்ளார்.

    • சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

    கூடலூர்:

    தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள தேனி மாவட்டத்தில் கடந்த ஒருவாரமாக விட்டுவிட்டு மழை பெய்துவருகிறது.

    இதேபோல் கேரளாவின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக முல்லை பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியான இடுக்கி மாவட்டத்திற்கு ரெட்அலார்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இதனால் அங்கு கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் கடந்த 4 நாட்களில் 4 அடி உயர்ந்துள்ளது. குறிப்பாக இன்று ஒரேநாளில் 2 அடி உயர்ந்துள்ளது. நேற்று காலை 119.90 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 121.80 அடியாக உயர்ந்துள்ளது.

    நேற்று 3579 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 5389 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு 1133 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 2984 மி.கனஅடியாக உள்ளது.

    கூடுதல் தண்ணீர் திறப்பால் லோயர்கேம்ப் மின்உற்பத்தி நிலையத்தில் 3 ஜெனரேட்டர்கள் இயக்கப்பட்டு 102 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்படுகிறது.

    வைகை அணையின் நீர்மட்டம் 48.29 அடியாக உள்ளது. வரத்து 695 கனஅடி, திறப்பு 69 கனஅடி, இருப்பு 1778 மி.கனஅடி.

    தேனி மாவட்டம் கடமலை-மயிலை ஒன்றியம் வெள்ளிமலை வனப்பகுதியில் மூல வைகை ஆறு உற்பத்தியாகிறது. போதிய அளவு மழை இல்லாத காரணத்தால் கடந்த சில நாட்களாக ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து குறைந்து வந்தது.

    கடந்த வாரம் ஆறு நீரின்றி முழுமையாக வறண்டு போனது. இந்த நிலையில் கடந்த 4 நாட்களாக கடமலை-மயிலை ஒன்றிய கிராமங்களில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது.

    குறிப்பாக வெள்ளிமலை வனப்பகுதியில் தொடர்ந்து சாரல் மழை பெய்ததன் காரணமாக கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆற்றில் லேசான நீர்வரத்து ஏற்பட்டது. இந்த நீர்வரத்து வருசநாடு கிராமத்துடன் நின்று போனது.

    இந்நிலையில் வெள்ளிமலை வனப்பகுதியில் கனமழை பெய்ததால் வைகை ஆற்றில் மீண்டும் நீர்வரத்து ஏற்பட்டது. இந்த தண்ணீர் அய்யனார்புரம் கிராமத்தை கடந்து சென்றது. தொடர்ந்து வெள்ளிமலை வனப்பகுதியில் மழை பெய்து வருவதால் ஆற்றில் நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

    கனமழை காரணமாக சின்னசுருளி அருவியின் நீர்பிடிப்பு பகுதியான மேகமலை வனப்பகுதியில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

    இதன்காரணமாக சின்னசுருளி அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்பிடிப்பு பகுதியில் மழை தொடர்ந்து பெய்வதால் சின்னசுருளி அருவியில் எந்த நேரத்திலும் வெள்ளம் ஏற்படலாம் என்ற நிலை உள்ளதால் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக அருவிக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மழை குறைந்து அருவியில் சீரான நிலை ஏற்படும் வரையில் இந்த தடை உத்தரவு தொடரும் என்று மேகமலை வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். சின்னசுருளி அருவியில் வரும் நீர்வரத்தை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    இதேபோல் கம்பம் அருகில் உள்ள சுருளி அருவியிலும் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.

    • சூறாவளி காற்றுடன் பலத்த மழை கொட்டியது.
    • மின் கம்பிகளின் மீது விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

    ஊட்டி:

    தென்மேற்கு பருவமழை காரணமாக கடந்த சில தினங்களாக நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர், நடுவட்டம், தேவர்சோலை, நாடுகாணி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

    கூடலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு சூறாவளி காற்றுடன் பலத்த மழை கொட்டியது. சிறிது நேரத்திற்கு பிறகு மழை நின்றது.

    தொடர்ந்து நேற்று அதிகாலை மீண்டும் கனமழை பெய்தது. இந்த மழையால், தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட குற்றிமுச்சு வழியாக ஓடும் மாயாற்றின் கிளை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அந்த வழியாக செல்லும் சாலையில் உள்ள பாலத்தின் மேல் பகுதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    மழை பெய்து கொண்டே இருந்ததால் அடிக்கடி மின்தடையும் ஏற்பட்டது. அப்பகுதிகள் இருளில் மூழ்கின. இதனால் பொது மக்களும் சிரமத்திற்குள்ளாகினர்.

    கூடலூரில் இருந்து ஓவேலி பேரூராட்சி பகுதியில் ஆருற்றுப்பாறை மற்றும் மரப்பாலம் பகுதிகளுக்கு செல்லும் சாலையில் சுண்ணாம்பு பாலம் பகுதியில் சாலையின் குறுக்கே மரம் விழுந்தது. அப்பகுதியில் போக்கு வரத்தும் பாதிக்கப்பட்டது.

    மின் கம்பிகளின் மீது விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. ஓவேலி பேரூராட்சி பகுதிகளில் 2 நாட்களாக மின்சாரம் இல்லாததால் அப்பகுதியே இருளில் மூழ்கி மக்கள் கடும் அவதியடைந்தனர்.

    ஆமைக்குளம் பகுதியில் வசிக்கும் விஜயகுமார் என்பவரின் கடையின் மீது மண்சரிந்து கடை முழுவது மாக சேதம் அடைந்தது. வழக்கமாக இரவில் விஜய குமாரின் தந்தை கடையில் தங்குவார். சம்பவத்தன்று அவர் வீட்டிற்கு சென்றதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

    கொட்டி தீர்த்த கன மழைக்கு தொரப்பள்ளியை அடுத்த எரிவயல் கிராம த்தில் தாழ்வான பகுதிகளில் இருந்த 5-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. சில வீடுகளுக்குள் தண்ணீரும் புகுந்தது. குடியி ருப்புகளை சூழ்ந்த வெள்ளத்தை மோட்டார் மூலம் வெளியேற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.

    பந்தலூரில் பெய்த மழைக்கு சேரங்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட சேரம்பாடி, பாலபாடி வளவில் கூலித்தொழிலாளி முனியப்பன் என்பவரது வீட்டின் அருகே மண்சரிவு ஏற்பட்டு வீட்டின் ஒரு பகுதி சேதம் அடைந்தது.

    கூடலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மழை யுடன் சூறவாளி காற்றும் வீசியது. இதனால் ஆங்கா ங்கே சில இடங்களில் சாலைகளில் மரங்கள் விழுந்தன. இதனை தீயணைப்பு துறையினர் அகற்றினர்.

    இதுகுறித்து கூடலூா் கோட்டாட்சியா் செந்தில்குமாா் கூறியதாவது:-

    கூடலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. நேற்று இரவு கொட்டி தீர்த்த மழைக்கு 16 இடங்களில் மரங்கள் சாய்ந்துள்ளன. 56 இடங்களில் மின் கம்பிகள் அறுந்து விழுந்துள்ளன. அவை அனைத்தும் உடனுக்குடன் சரி செய்யப்பட்டுள்ளது. மேலும், அனைத்துத்துறை அலுவலா்களும் தொடா்ந்து கண்காணிப்புப் பணியில் இருக்குமாறு அறிவுறுத்தப்ப ட்டுள்ளது.

    கூடலூா் வருவாய் கோட்டத்தில் பருவமழையை எதிா்கொள்ளும் வகையில் வருவாய்த்துறை பணியாளா்கள் அனைத்து பகுதியிலும் களத்தில் உள்ளனா். பாதிப்புகள் ஏற்பட்டதாக தகவல் கிடைத்தவுடன் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட 24 மணி நேரமும் தயாா் நிலையில் உள்ளனா்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • கூடலூர் பகுதியில் கடந்த 10 நாட்களாக மழை பெய்து வருகிறது.
    • சாலையில் விழுந்த மூங்கில் தூா்களை அகற்றினர்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் கடந்த 10 நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்றும் கனமழை கொட்டியது. இதில் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன.

    கூடலூரில் இருந்து கேரள மாநிலம் வயநாட்டுக்குச் செல்லும் மலைப் பாதையில் நெலாக்கோட்டை கூவச்சோலை பகுதியில் கனமழையால் சாலையின் குறுக்கே மூங்கில் தூா் பெயா்ந்து விழுந்தது. இதனால் அவ்வழியிலான போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது.

    தகவலறிந்த கூடலூா் தீயணைப்புத் துறையினா் மீட்பு உபகரணங்களுடன் விரைந்து சென்று நெடுஞ்சாலைத் துறையின் பொக்லைன் உதவியுடன் சாலையில் விழுந்துகிடந்த மூங்கில் தூா்களை அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனா்.

    இதனால், அந்த சாலையில் சுமாா் இரண்டரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்க ப்பட்டது. நீலகிரி மாவ ட்டத்தில் நேற்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக அவலாஞ்சியில் 144 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது. கூடலூர் - 76, சேரங்கோடு 63, நடுவட்டம் 60, பந்தலூர் 59, ஓவேலி 48, செருமுள்ளி 48, அப்பர் பவானி 48, பாடந்தொரை 42, தேவாலா 42, கிளன்மார்கன் 31, ஊட்டி - 8.4, பாலகொலா 6, கோடநாடு 4, மசினகுடி 4, கேத்தி 4, கல்லட்டி 2.4, குன்னூர் 2 மில்லி மீட்டர் மழை பதிவானது.

    • கோவிலில் ஆண்டுதோறும் காமன் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது
    • கொட்டும் பனியை பொருட்படுத்தாது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே பாண்டியாறு ஆமைக்குளத்தில் ரதி-மன்மதன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் காமன் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த மாதம் 23-ந் தேதி தொடங்கியது. இதையொட்டி அப்பகுதி மக்கள் விரதம் இருந்து சிறப்பு பூஜைகள் செய்து வந்தனர்.

    நேற்று முன்தினம் நள்ளிரவில் காமன் பண்டிகையையொட்டி ரதி - மன்மதன் திருமணம் நடைபெற்றது. பல்வேறு வேடங்கள் அணிந்த பக்தர்கள் தொடர்ந்து தேர் ஊர்வலம், மொய் விருந்து உபச்சாரம், மன்மதனுக்கு குறி சொல்லுதல் நிகழ்ச்சி, சிவபெருமான் தியானத்தில் அமர்தல், தட்சன் யாகம், முனீஸ்வரர். அகோர வீர புத்திரன் வருகை, மன்மதன், தட்சனை எரித்தல் உள்பட பல்வேறு வரலாற்று நிகழ்வுகள் நடைபெற்றது. இதை உணர்த்தும் வகையில் பக்தர்கள் ரதி - மன்மதன் மற்றும் சிவபெருமான் உள்பட பல்வேறு வேடங்களில் விடிய விடிய நடித்து காண்பித்தனர். தொடர்ந்து பல்வேறு விசேஷ பூஜைகள் நடைபெற்றது. இதில் கொட்டும் பனியை பொருட்படுத்தாது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • கைப்ைபயை போலீசார் மீட்டு பெண்ணிடம் ஒப்படைத்தனர்.
    • சிறிது தூரம் சென்ற பிறகே பையை தவறவிட்டது அவருக்கு தெரியவந்தது

    ஊட்டி

    கூடலூா் வட்டம் நியூ ஹோப் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் ஆட்டோவில் பயணித்துள்ளார்.அப்போது எதிர்பாராத விதமாக ஆட்டோவை விட்டு இறங்கும் போது தனது கைப்பையை ஆட்டோவிலேயே விட்டு சென்றதாக தெரிகிறது. சிறிது தூரம் சென்ற பிறகே பையை தவறவிட்டது அவருக்கு தெரியவந்தது.உடனடியாக அவர் சம்பவம் குறித்து கூடலூா் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் கூடலூா் டி.எஸ்.பி.மகேஷ்குமாா் தலைமையில் சாா்பு ஆய்வாளா் இப்ராஹிம், முத்து முருகன், அசோக் குமாா் அடங்கிய தனிப்படையினர் அந்த பகுதிக்கு சென்று கண்காணிப்பு காமிராக்களை ஆய்வு செய்து தடயத்தை சேகரித்தனா். தொடா்ந்து பெரிய சூண்டி பகுதியில் சம்மந்தப்பட்ட ஆட்டோவை செல்வதை அறிந்ததும், அங்கு சென்று ஆட்டோவை நிறுத்தி டிரைவரிடம் விசாரனை நடத்தி பெண் தவறவிட்ட 3 சவரன் தங்க சங்கிலியை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனா்.

    • கர்நாடகாவில் இருந்து கூடலூரை நோக்கி வந்த சுற்றுலா வேனை நிறுத்தி விசாரித்தனர்.
    • 199 பண்டல்களில் 2,985 தடை செய்யப்பட்ட குட்கா பாக்கெட்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    ஊட்டி

    தமிழக-கர்நாடக எல்லையான கக்கநல்லாவில் மசினகுடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிக்கந்தர் தலைமையிலான போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது கர்நாடகாவில் இருந்து கூடலூரை நோக்கி வந்த சுற்றுலா வேனை நிறுத்தி விசாரித்தனர்.

    அப்போது வேனில் இருந்தவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் வேனுக்குள் சோதனை நடத்திய போது, சில மூட்டைகள் இருந்தது. அதை திறந்து பார்த்தபோது 199 பண்டல்களில் 2,985 தடை செய்யப்பட்ட குட்கா பாக்கெட்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவற்றின் மதிப்பு ரூ.23,880 ஆகும். மேலும் கர்நாடகாவில் இருந்து கூடலூருக்கு கடத்த முயன்றது தெரிய வந்தது.

    இதைத்தொடர்ந்து குட்கா பாக்கெட்டுகளையும், கடத்தலுக்கு பயன்படுத்திய வேனையும் போலீசார் பறிமுதல் செய்தனர். 3 பேர் கைது பின்னர் மசினகுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமலை ராஜனிடம் ஒப்படைக்கப்பட்டது.

    இதைத் தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, குட்காவை கடத்த முயன்ற கர்நாடகா மாநிலம் மைசூருவை சேர்ந்த சாணபாட்ஷா (வயது 51), பஷுர் அகமது (40), குண்டல்பெட்டை சேர்ந்த கோவிந்தசாமி (42) ஆகிய 3 பேரை கைது செய்தனர். தொடர்ந்து குட்கா பாக்கெட்டுகள் கூடலூரில் யாருக்கு கொண்டு செல்லப்படுகிறது என விசாரணை நடைபெற்று வருகிறது.

    இது குறித்து போலீசார் கூறும்போது, சுற்றுலா பயணிகள் போர்வையில் கடத்தல் பேர்வழிகள் தடை செய்யப்பட்ட பொருட்களை கடத்தி வருவதை தடுக்க மாநில எல்லைகளில் கண்காணிப்பு தீவிரபடுத்தப்பட்டு உள்ளது. மேலும் கடத்தலில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

    • கிராம அஞ்சலகத்தை 2 நாட்களுக்கு முன்பு காட்டு யானைகள் சூறையாடின.
    • பள்ளியில் உள்ள சத்துணவு அறையை சேதப்படுத்தி, அங்கிருந்த அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை தின்றன.

    ஊட்டி,

    கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. பொதுமக்கள், தோட்ட தொழிலாளர்களை தாக்கி வருகிறது. தொடர்ந்து வீடுகளையும் சேதப்படுத்தி வந்தன.

    தற்போது பேரூராட்சி அலுவலகம் மற்றும் அதன் அருகே உள்ள அரசு தொடக்க பள்ளி, நூலகம், கிராம அஞ்சலகத்தை 2 நாட்களுக்கு முன்பு காட்டு யானைகள் சூறையாடின.

    இதில் பேரூராட்சி அலுவலக பொருட்கள், பள்ளி வகுப்பறைகள், நூலகத்தில் இருந்த கணினி மற்றும் தளவாடப் பொருட்கள், அஞ்சலகத்தில் இருந்த பதிவேடுகள் நாசமானது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு காட்டு யானைகள் கூட்டம் மீண்டும் பேரூராட்சி அலுவலகத்தை சூறையாடின.

    தொடர்ந்து பள்ளியில் உள்ள சத்துணவு அறையை சேதப்படுத்தின. பின்னர் அங்கிருந்த அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை தின்றன.

    மேலும் அங்குள்ள நூலகத்தை சேதப்படுத்தின. 3-வது முறை இதேபோல் அனைத்து கட்டிடங்களிலும் இருந்த கதவுகளை காட்டு யானைகள் வளைத்து பயன்படுத்த முடியாத வகையில் சேதப்படுத்தி உள்ளது.

    தகவல் அறிந்த ஓவேலி பேரூராட்சி மற்றும் வருவாய், வனத்துறையினர் நேரில் வந்து பார்வையிட்டனர். அரிசி, பருப்பு உள்ளிட்ட தானியங்களை தின்று பழகி விட்டதால் காட்டு யானைகள் தொடர்ந்து அப்பகுதிக்கு வந்து 3-வது முறையாக அட்டகாசத்தில் ஈடுபட்டதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

    எனவே, பேரூராட்சி அலுவலக பகுதியில் இரவு, பகலாக வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும். தொடர்ந்து காட்டு யானைகள் ஊருக்குள் வராமல் தடுப்பதற்காக அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என வனத்துறையினரிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இனிவரும் நாட்களில் தொடர் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படும் என வனத்துறையினர் உறுதியளித்தனர்.

    • கூடலூா் தொகுதியில் கடந்த ஒருவார காலமாக தொடா் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
    • பேரணி பழைய பஸ் நிலையம் வழியாக சுங்கம் ரவுண்டானா சென்று காந்தித் திடலில் நிறைவடைந்தது.

    ஊட்டி 

    நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பக வெளிமண்ட பகுதியை விரிவாக்கும் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி கூடலூா் தொகுதியில் கடந்த ஒருவார காலமாக தொடா் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

    இதே கோரிக்கையை வலியுறுத்தி அ.தி.மு.க சாா்பில் அமைப்புச் செயலாளா் ஏ.கே. செல்வராஜ் எம்.எல்.ஏ. அ.தி.மு.க நீலகிரி மாவட்ட செயலாளர் கப்பச்சிவினோத் தலைமையில் பேரணி நடைபெற்றது. ராஜகோபாலபுரத்தில் இருந்து துவங்கிய பேரணியானது பழைய பஸ் நிலையம் வழியாக சுங்கம் ரவுண்டானா சென்று காந்தித் திடலில் நிறைவடைந்தது.

    இதைத் தொடா்ந்து நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் ஏ.கே.செல்வராஜ் பேசுகையில், அ.தி.மு.க ஆட்சியில்தான் ஊட்டியில் அரசு மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.

    இப்பகுதியில் நிலவும் பிரச்னைகள் குறித்து இத்தொகுதி மக்களவை உறுப்பினா் எம்.பி.ஆ.ராசா நாடாளுமன்றத்தில் பேசுவதே இல்லை. ஆனால், கூடலூா் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் ஜெயசீலன், தொகுதியின் நலனுக்காக பல பிரச்னைகள் சட்டப் பேரவையில் பேசியுள்ளாா் என்றாா்.

    ஆா்ப்பாட்டத்தில் எம்.எல்.ஏ. பொன்.ஜெயசீலன், முன்னாள் அமைச்சா் மில்லா், முன்னாள் எம்.பி. அா்ஜுணன், பேரவை மாவட்ட செயலாளர் சாந்திராமு, வர்தக அணி மாவட்ட செயலாளர் குருமூர்த்தி, பாசறை மாவட்ட செயலாளர் அக்கீமபாபு, குனானூர் ஒன்றிய செயலாளர் பேரட்டிராஜி உள்ளிட்ட நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

    • கேரளா, கர்நாடகா மாநிலங்களிலும் மழையின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது.
    • மசினகுடிக்கு செல்லும் சாலையில் மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் தரைப்பாலம் மூழ்கியது.

    கூடலூர்:

    நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு வரை தொடர் கனமழை பெய்தது. இதேபோல் கேரளா, கர்நாடகா மாநிலங்களிலும் மழையின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. தொடர் மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    மேலும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதித்தது. அண்டை மாநிலங்கள் உட்பட பல இடங்களில் மழை அதிகமாக பெய்ததால் நீலகிரிக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது. குறிப்பாக கூடலூரில் இருந்து மசினகுடிக்கு செல்லும் சாலையில் மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் தரைப்பாலம் மூழ்கியது. இதனால் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் இன்றி முதுமலை வெறிச்சோடியது.

    இந்த நிலையில் மழை குறைந்து பரவலாக வெயில் காணப்படுகிறது. மேலும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் திரும்பி உள்ளது. தொடர்ந்து மாயாற்றில் வெள்ளம் குறைந்து விட்டது. இதைத்தொடர்ந்து போக்குவரத்து வழக்கம் போல் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக முதுமலைக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது. தொடர்ந்து தெப்பக்காடு முகாமில் வளர்ப்பு யானைகளுக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சியை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர்.

    மேலும் யானைகளுக்கு வன ஊழியர்கள் உணவு தயார் செய்வதை பார்வையிட்டனர். இதனால் வளர்ப்பு யானைகள் முகாம் களை கட்டி உள்ளது. தொடர்ந்து தனியார் வாகன சவாரி மற்றும் சுற்றுலா சார்ந்த தொழில்களும் நடைபெற்று வருகிறது.

    இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, கடந்த சில வாரங்களாக தொடர் கனமழை உள்ளிட்ட காரணங்களால் சுற்றுலா பயணிகள் வருகை மிகவும் குறைவாக இருந்தது. தற்போது இயல்பு நிலை திரும்பி உள்ளதால் வாகன சவாரி, வளர்ப்பு யானை முகாமுக்கு சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் வருகின்றனர் என்றனர்.

    • ஏராளமான குழந்தைகள் கிருஷ்ணர், ராதை வேடமிட்டு ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.
    • கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி மகாவிஷ்ணு, பெருமாள் உள்ளிட்ட கோவில்களில் நேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    கூடலூர்

     கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி மகாவிஷ்ணு, பெருமாள் உள்ளிட்ட கோவில்களில் நேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    கூடலூர் புத்தூர்வயல், பொன்னானி மகா விஷ்ணு கோவில்களில் காலை முதல் அபிஷேக அலங்கார சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கிருஷ்ண ஜெயந்தியையொட்டி பல இடங்களில் சிறுவர் சிறுமிகள் கிருஷ்ணர், ராதை வேடமிட்டு ஊர்வலமாக சென்றனர்.

    கூடலூர் எம்.ஜி.ஆர். நகரில் விஷ்வ இந்து பரிஷத் சார்பில் ஏராளமான சிறுவர்கள் கிருஷ்ணர், ராதை வேடமணிந்து ஊர்வலமாக சென்றனர். ராதை வேடம் ஊர்வலம் நர்த்தகி பகுதியில் இருந்து தொடங்கி முக்கிய சாலை வழியாக சக்தி முனிஸ்வரர் கோவிலை வந்தடைந்தது. அப்போது பக்தி கோஷமிட்டவாறு ஏராளமான பக்தர்களும் சென்றனர்.


    தொடர்ந்து நம்பாலகோட்டை கிரிவலம் குழு தலைவர் நடராஜ், பிரம்ம குமாரிகள் இயக்க நிர்வாகி ரேணுகா உள்பட பலர் பேசினர். விழாவில் விஷ்வ இந்து பரிஷத் நிர்வாகிகள் ஆனந்தன், குமார், கிருஷ்ணதாஸ் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். இதேபோல் கூடலூர் தொரப்பள்ளி ராமர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    தொடர்ந்து குனில் பாலத்தில் இருந்து ஏராளமான குழந்தைகள் கிருஷ்ணர், ராதை வேடமிட்டு ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர். கூடலூர் அருகே பாடந்தொரையிலும் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி ஊர்வலம் நடைபெற்றது. இதேபோல் ஊட்டி, பந்தலூர், குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. மேலும் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தன.

    ×