search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜல்லிக்கட்டு"

    • மற்ற விளையாட்டுகளையும் விளையாடும் வகையில் மைதானம் உருவாகிறது.
    • ஜல்லிக்கட்டு மைதானத்தில் வாடிவாசலுக்கு எதிர்புறம் மக்கள் அனைவரும் உட்காரும் வகையில் கட்டப்பட இருக்கிறது.

    திருச்சி:

    திருச்சி சூரியூரில் ஆண்டு தோறும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம். திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் முதல் ஜல்லிக்கட்டு போட்டி என்பதால் இது மிகவும் புகழ்பெற்றதாகும்.

    திருச்சி மட்டுமல்லாது புதுக்கோட்டை, தஞ்சாவூர், அரியலூர், கரூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து மாடுகள் பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும். இத்தகைய பிரசித்திபெற்ற சூரியூரில் ரூ.3 கோடியில் பிரமாண்டமான ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நாளை(புதன்கிழமை) நடக்கிறது. விழாவில் துணை முதலமைச்சர் உதையந்தி ஸ்டாலின் கலந்து கொண்டு ஜல்லிக்கட்டு மைதானத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

    இந்த மைதானம் ஜல்லிக்கட்டுக்கு மட்டுமல்லாமல், பல்வேறு விளையாட்டுகள் விளையாடும் வகையில் ஒருங்கிணைந்த விளையாட்டு திடலாக அமைய உள்ளது. கால்பந்து, வாலிபால் உள்ளிட்ட மற்ற விளையாட்டுகளையும் விளையாடும் வகையில் மைதானம் உருவாகிறது.

    இந்த ஜல்லிக்கட்டு மைதானத்தில் வாடிவாசலுக்கு எதிர்புறம் மக்கள் அனைவரும் உட்காரும் வகையில் கட்டப்பட இருக்கிறது. மேலும் மக்கள் அனைவரும் பாதுகாப்பாக அமர்ந்து போட்டிகளை பார்க்கும் வகையில் அமைக்கப்பட இருக்கிறது. அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு மைதானத்திற்கு அடுத்தப்படியாக 2-வது ஜல்லிக்கட்டு மைதானமாக 3 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு வருகிறது.

    • பல்வேறு மாவட்டங்களில் இருந்து காளைகள் அழைத்து வரப்பட்டன.
    • காளைகளை பிடிக்க வந்த வீரர்களுக்கு காளைகள் போக்கு காட்டி அவர்களை முட்டித் தள்ளின.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே புனித அந்தோணியார் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு நடத்தப்படும்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெற்றது. இதையொட்டி திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், திருச்சி, சிவகங்கை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து காளைகள் அழைத்து வரப்பட்டன.

    கால்நடைகளை உதவி இயக்குனர் ராஜேஷ்குமார் தலைமையில் கால்நடை மருத்துவர் ஸ்ரீதேவி தலைமையிலான மருத்துவ குழுவினர் காளைகளை பரிசோதனை செய்து ஜல்லிக்கட்டில் 725 காளைகள் பங்கேற்க அனுமதி வழங்கினர்.

    இதேபோல் மாடுபிடி வீரர்களுக்கு டாக்டர்கள் அசோக்குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் மாடுபிடி வீரர்கள் 350 பேரை பரிசோதனை செய்து காளைகள் பிடிக்க அனுமதித்தனர். இதையடுத்து காலை 7.45 மணிக்கு ஜல்லிக்கட்டு தொடங்கியது. இதை கோட்டாட்சியர் சக்திவேல் தொடங்கி வைத்தார். இதில் கிழக்கு தாசில்தார் மீனாதேவி, மண்டல துணை வட்டாட்சியர் பிரேம், வருவாய் ஆய்வாளர் மணிகண்டன், வி.ஏ.ஓ. சுல்தான் பேகம் ஆகியோர் உடனிருந்தனர்.

    முதலில் கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. அதனை யாரும் பிடிக்கவில்லை. அதன்பின் உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டன.

    சில காளைகள் யாரிடமும் பிடிபடாமல் சீறிப்பாய்ந்து சென்று தனது உரிமையாளருக்கு பரிசுகளை பெற்றுக் கொடுத்தது. காளைகளை மாடுபிடி வீரர்கள் லாவகமாக பிடித்தனர். சில காளைகள் மைதானத்தில் நீண்ட நேரம் நின்று விளையாடின. இதனை பார்த்த பார்வையாளர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். கம்பீரமான காளைகளை பிடிக்க வந்த வீரர்களுக்கு காளைகள் போக்கு காட்டி அவர்களை முட்டித் தள்ளின.

    இந்த ஜல்லிக்கட்டில் பங்கேற்று பிடிபடாத மாடுகள் மற்றும் காளைகளை பிடித்த மாடுபிடி வீரர்களுக்கு சைக்கிள், அண்டா, பானை, குக்கர், ஆட்டுக்குட்டி, கட்டில், பீரோ உள்ளிட்ட பல பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.

    இந்த ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர் லிங்கவாடியைச் சேர்ந்த பொன்னன் (வயது 22), தவசி மேடையைச் சேர்ந்த பாதுகாப்பு குழு விக்டர் (28), மதுரையைச் சேர்ந்த மாட்டின் உரிமையாளர் ஆனந்த்(29), நொச்சி ஓடைபட்டியை சேர்ந்த பார்வையாளர் தனுஷ் ராஜா (22) ஆகிய 4 பேர் காயம் அடைந்தனர்.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரதீப் உத்தரவின் பேரில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் தெய்வம், மகேஷ், புறநகர் போலீஸ் டி.எஸ்.பி. சிபி சாய் சவுந்தர்யன், நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவராமகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் பொன் குணசேகர் உள்பட 320 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • பல்வேறு மாவட்டங்களில் இருந்து 800க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.
    • சில காளைகள் யாரிடமும் பிடிபடாமல் சீறிப்பாய்ந்து சென்றது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் அலகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் சங்கம் சார்பில் அலகுமலையில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் திண்டுக்கல், தேனி, திருச்சி, கோவை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 800க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. 600க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.

    போட்டியை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மேயர் தினேஷ்குமார், கலெக்டா் கிறிஸ்துராஜ், வருவாய் அதிகாரி கார்த்திகேயன், 4 -வது மண்டல தலைவர் இல.பத்மநாபன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். முதல் காளையாக அலகுமலை கோவில் காளை களம் இறங்கியது. இவற்றை மாடுபிடி வீரர்கள் பிடிக்க முடியவில்லை.

    தொடர்ந்து வாடிவாசலில் இருந்து ஒவ்வொரு காளையாக அவிழ்க்கப்பட்டன. இதில் சில காளைகளை மாடுபிடி வீரர்கள் லாவகமாக பிடித்தனர். சில காளைகள் யாரிடமும் பிடிபடாமல் சீறிப்பாய்ந்து சென்றது.


    போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் அண்டா, வெள்ளிக்காசு, குடம், ஹாட்பாக்ஸ், சைக்கிள் உள்பட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டது. இருபுறத்திலும் அமைக்கப்பட்டிருந்த கேலரிகளில் ஏராளமான பார்வையாளர்கள் அமர்ந்து ஜல்லிக்கட்டை கண்டுகளித்தனர்.

    வாடிவாசலில் இருந்து வெளியேறும் காளைகள் ஓடு தளத்தை சுற்றிய போதெல்லாம், பார்வையாளர்கள் கரவொலி எழுப்பி வீரர்களுக்கு உற்சாகம் அளித்தனர்.

    காயமடைந்தவர்களுக்கு அங்கு அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு யாதவ் கிரீஷ் அசோக் உத்தரவின்பேரில் பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் மேற்பார்வையில் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பொதுமக்களுக்கான குடிநீர் வசதி, உணவு உள்பட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு இருந்தது.

    ஆலங்குடி அருகே பாப்பான் விடுதியில் நடந்த ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 14 பேர் காயமடைந்தனர்.
    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே பாப்பான்விடுதியில் பிரசித்தி பெற்ற முத்து முனீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் தேர்த் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி கோவில் அருகே வாடிவாசல் அமைக்கப்பட்டு அதற்கான முன்னேற்பாடு பணிகள் நடந்தது. பின்னர் மாவட்ட நிர்வாகிகள் வாடிவாசலை பார்வையிட்டு ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கினர். அதனை தொடர்ந்து நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. முன்னதாக அங்கு கொண்டு வரப்பட்ட காளைகளை கால்நடை மருத்துவக்குழுவினர் பரிசோதனை செய்தனர். பின்னர் மாடுபிடி வீரர்களை மருத்துவக்குழுவினர் பரிசோதனை செய்து களத்தில் செல்ல அனுமதித்தனர். இதைத்தொடர்ந்து மாடுபிடி வீரர்கள், காளைகளின் உரிமையாளர்கள் ஜல்லிக்கட்டு உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

    தொடர்ந்து ஜல்லிக்கட்டை மாவட்ட உதவி கலெக்டர் கே.எம்.சரயு, மாவட்ட வருவாய் அதிகாரி ராமசாமி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இதில் புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி, கரூர், தேனி, மதுரை, தஞ்சாவூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து அழைத்து வரப்பட்ட 1018 காளைகளும், வாடிவாசலில் இருந்து ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டது. சீறிப்பாய்ந்து வந்த காளைகளை 241 மாடுபிடி வீரர்களும் அடக்க போட்டி, போட்டனர். இதில் சில காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்கினர். சில காளைகள் மாடுபிடி வீரர்களை தூக்கி வீசி பந்தாடின. மேலும் சில காளைகளுடன் மாடுபிடி வீரர்கள் மல்லுக் கட்டினர். அதனை பார்த்த பொதுமக்கள், இளைஞர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

    ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 9 மாடுபிடி வீரர்கள், ஜல்லிக்கட்டை காண வந்த பார்வையாளர்கள் 4 பேர் மற்றும் ஜல்லிக்கட்டு காளையின் உரிமையாளர் ஒருவர் என 14 பேர் காயமடைந்தனர். இதையடுத்து காயமடைந்தவர்களுக்கு அங்கிருந்த மருத்துவக்குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர். இதில் 5 பேர் மட்டும் மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    தொடர்ந்து ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் மோட்டார் சைக்கிள், தங்கம், வெள்ளி நாணயங்கள், மின்விசிறி, சில்வர் பாத்திரங்கள், கட்டில், சைக்கிள், மிக்சி, குக்கர் உள்பட பல்வேறு பரிசு வழங்கப்பட்டது.

    ஜல்லிக்கட்டை ஆலங்குடி தொகுதி எம்.எல்.ஏ. மெய்யநாதன், தாசில்தார் ரெத்தினாவதி, வருவாய் ஆய்வாளர் ஆரோக்கியசேவியர், அரசு அதிகாரிகள் மற்றும் ஆலங்குடி, பாப்பான்விடுதி சுற்றுவட்டார கிராமபொதுமக்கள், இளைஞர்கள் கண்டுகளித்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் உத்தரவின்பேரில் ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அப்துல் முத்தலிபு தலைமையில், போலீஸ் இன்ஸ்பெக்டர் வைத்தியநாதன் உள்பட ஏராளமான போலீசார் செய்திருந்தனர். 
    ×