என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசு ஆஸ்பத்திரி"

    • ஹரி மற்றும் அங்கு நின்றிருந்த பொது மக்கள் மருந்தாளுனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
    • மாதேசை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து சென்று மருத்துவ பரிசோதனை செய்தனர்.

    சேலம்:

    சேலம் குகை பகுதியை சேர்ந்தவர் ஹரி, இவர் தனது உறவினருக்கு மாத்திரை வாங்க சேலம் சூப்பர் ஸ்பெஷாலிட்டி கட்டிடத்தில் உள்ள மருந்தகத்திற்கு நேற்று மாலை வந்தார்.

    தொடர்ந்து டாக்டர் எழுதி கொடுத்த மாத்திரை சீட்டை அங்கு பணியில் இருந்த மருந்தாளுனர் மாதேஸ் என்பவரிடம் கொடுத்தார். அப்போது ஹரி கொடுத்த மருந்து சீட்டை மருந்தாளுனர் கீழே போட்டு விட்டு வேறொரு நோயாளிக்கான மருந்து சீட்டை பார்த்து மாத்திரை கொடுத்தார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த ஹரி மற்றும் அங்கு நின்றிருந்த பொது மக்கள் மருந்தாளுனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. அப்போது ஹரி மருந்தாளுனர் குடிபோதையில் இருப்பதாகவும், மாத்திரையை மாற்றி கொடுத்தது குறித்தும் கேட்ட போது பதில் சொல்லாமல் இருந்ததாகவும், அலட்சியமாக செயல்பட்ட மருந்தாளுனர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறிய படி கூச்சலிட்டார்.

    தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த அரசு ஆஸ்பத்திரி போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினர். தொடர்ந்து மருந்தாளுனர் மாதேசை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து சென்று மருத்துவ பரிசோதனை செய்தனர்.

    இது குறித்து மருத்துவமனை டீன் கூறுகையில், மருந்தாளுனர் குடிபோதையில் இருந்தாரா? என்பது குறித்து டாக்டர்கள் மற்றும் போலீசார் சோதனை மேற்கொண்டதில் அவர் குடிபோதையில் இல்லை என்பது தெரிய வந்துள்ளது. மேலும் அவருக்கு உடலில் ஏதாவது பிரச்சினை இருக்கும் என்று கருதுவதால் இன்று அவருக்கு டாக்டர்கள் குழுவினர் முழு உடல் பரிசோதனை செய்கிறார்கள். அதன் அடிப்படையில் இது தொடர்பாக மருத்துவ குழு மூலம் விரிவான விசாரணை நடத்தி அதன் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நோயாளிகள் சிலர் வரிசையில் நிற்க முடியாமலும், ஒருவரோடு ஒருவர் உரசி நிற்பதால் நோய் தொற்று ஏற்படும் சூழல் ஏற்பட்டு வருகிறது.
    • டோக்கன் முறை பொதுமக்கள் மற்றும் நோயாளிகளிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

    கம்பம்:

    தேனி மாவட்டம் கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சை, பொது மருத்துவம், தீக்காயம், சித்த மருத்துவம், குழந்தைகள் நல பிரிவு, கண் சிகிச்சை பிரிவு, கர்ப்பிணி பெண்களுக்கான சிகிச்சை உள்பட 35க்கும் மேற்பட்ட மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

    இதனால் கம்பம், காமயகவுண்டன்பட்டி, சுருளிப்பட்டி, குள்ளப்பகவுண்டன்பட்டி, புதுப்பட்டி, கூடலூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்தவர்களும், கேரளா மாநிலத்தில் உள்ள நெடுங்கண்டம், கட்டப்பனை, வண்டன்மேடு, குமுளி, கம்பம் மெட்டு உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் தினந்தோறும் சுமார் 1200க்கும் மேற்பட்டோர் வெளிநோயாளிகளாக வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

    ஆஸ்பத்திரிக்கு வரும் வெளி நோயாளிகளுக்கு கணினி வழியாக பதிவு சீட்டு வழங்கப்படுகின்றன. இந்த சீட்டை பெற்றுச் செல்லும் நோயாளிகள் டாக்டரிடம் பரிசோதனை மேற்கொள்வதற்காக வரிசையில் நின்று சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்நிலையில் நோயாளிகள் சிலர் வரிசையில் நிற்க முடியாமலும், ஒருவரோடு ஒருவர் உரசி நிற்பதால் நோய் தொற்று ஏற்படும் சூழல் ஏற்பட்டு வருகிறது. தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால் பெரும்பாலோனோர் முக கவசமும் அணிவதில்லை. இதனால் ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் கூட்டமாக டாக்டர் அறைக்குள் வரும் சூழல் ஏற்பட்டது.

    இதனை தடுக்கும் பொருட்டு டோக்கன் முறை செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இதன் மூலம் நோயாளிகள் வரிசையில் நிற்க வேண்டிய அவசியம் இல்லை. டாக்டர் டோக்கன் எண் கூறும்போது அந்த நோயாளி மட்டும் டாக்டரிடம் சென்று பரிசோதனை மேற்கொள்ளும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த டோக்கன் முறை பொதுமக்கள் மற்றும் நோயாளிகளிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

    • அமைச்சர் எ.வ.வேலு பேட்டி அளித்தார்.
    • அரசு திட்டங்கள் நிறைவேற்ற நிலம் கையகப்படுத்தி தான் ஆக வேண்டும்.

    கோவை,

    கோவையில் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ஆகியோர் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கட்டப்பட்டு வரும் பன்னடக்கு கட்டிடத்தை ஆய்வு செய்தனர்.

    பின்னர் அமைச்சர் எ.வ.வேலு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஜெய்க்கா நிதியுதவியுடன் தரைத்தளத்தில் சேர்ந்து 6 தளங்களை கட்டுகின்ற புதிய கட்டிடப் பணி நடைபெற்று வருகிறது. குறிப்பிட்ட காலத்தில் கட்டி முடிக்க வேண்டும் என்று திட்டமிட்டு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

    2023-ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் பணிகள் நிறைவடைந்து விடும். கட்டுமான பணிகள் முடிந்து அடுத்த கட்ட பூச்சு வேலைகள் நடைபெற்று வருகிறது. முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் கரங்களால் இந்த கட்டிடம் திறக்கப்படும். தீக்காயத்திற்கு என்று தனி பகுதி கட்டப்படுகிறது. 8 ஆபரேஷன் தியேட்டர்கள் மற்றும் 2 சிறு ஆபரேஷன் தியேட்டர்கள் கட்டப்படுகிறது.அதேபோல மழைக்காலங்களில் மழை நீர் தேங்காமல் இருக்க தார் சாலைகள் அமைக்கப்படும்.

    அரசின் சார்பாக வளர்ச்சியை நோக்கி புதிதாக சாலைகளை அமைப்பதாக இருந்தாலும் சரி, சாலைகளை விரிவுபடுத்துவதாக இருந்தாலும் சரி நிலம் கையகப்படுத்துவது அத்தியாவசியம்.

    நிலம் கையகப்படுத்துவது சாலை அமைப்பது என்றால் யாருக்காக, நகரப் பகுதியில் நெரிசலை குறைக்க புறவழிச்சாலை அமைக்கிறோம். அரசு திட்டங்கள் நிறைவேற்ற நிலம் கையகப்படுத்தி தான் ஆக வேண்டும்.

    அதேபோல அரசு திட்டங்களை நிறைவேற்ற விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை செய்து திட்டத்தை அமைப்பதற்கான நடவடிக்கை தான் நடைபெறும்.

    அன்னூரில் விவசாயிகள் தொழில் பூங்கா அமைப்பதற்கு எதிரான போராட்டம் குறித்த கேள்விக்கு துறையின் அமைச்சர் தங்கம் தென்னரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். இவர் அவர் கூறினார்.

    பின்னர் வாலாங்குளம் புறவழிச்சாலையில் மரம் நட்டு வைத்து , உக்கடம்- ஆத்துப்பாலம் மேம்பாலப்பணிகளை பார்வையிட்டனர். தொடர்ந்து வடகோவை -மருதமலை சாலையை ஆய்வு செய்தனர்.

    இந்த ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் சமீரன், மாநகராட்சி மேயர் கல்பனா, மாநகர் மாவட்ட தி.மு.க. செயலாளர் கார்த்திக், முன்னாள் எம்.பி. நாகராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.  

    • ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு அறுவை சிகிச்சைகளும் மேற் கொள்ளப்பட்டுள்ளன.
    • மாதத்திற்கு 644 பிரசவங்கள் நடைபெற்றுள்ளன.

    கோவை,

    தமிழகத்தில் அரசு ஆஸ்பத்திரிகளின் செயல்பாடுகள் குறித்து தமிழ்நாடு சுகாதார சீா்திருத்த திட்டம் மற்றும் தேசிய சுகாதார இயக்கம் சாா்பில், 6 மாதங்களுக்கு ஒருமுறை ஆய்வு செய்து தரவரிசைப் படுத்தப்படுகிறது.

    அதன்படி, தமிழகத்தில் கடந்த 6 மாதங்களில் (ஏப்ரல் முதல் செப்டம்பா்) சிறப்பாக செயல்பட்ட ஆஸ்பத்திரிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், கோவை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரி 3-ம் இடம் பிடித்துள்ளது.

    சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரி முதலிடத்தையும், சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரி இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளன.

    இந்த ஆய்வில், புறநோயாளிகள், உள்நோயாளிகள் எண்ணிக்கை, எம்.ஆா்.ஐ., இருதய பிரிவு, அறுவை சிகிச்சைகள், மகப்பேறு சிகிச்சை, பாம்பு கடிக்கு அளிக்கப்படும் சிகிச்சை, விபத்து சிகிச்சை, நோயாளிகள் கவனிப்பு, டாக்டர்கள் - நோயாளிகளின் எண்ணிக்கை, நிா்வாக செயல்பாடுகள் உள்ளிட்ட 39 விதமான செயல்பாடுகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன.

    இது குறித்து அரசு ஆஸ்பத்திரி டீன் நிா்மலா கூறியதாவது:-

    கோவை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பா் வரையான மாதங்களில் தினசரி சராசரியாக 3,204 போ் புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சைப் பெற்றுள்ளனா். தவிர, உள்நோயாளிகள் பிரிவில் 1,353 போ் சிகிச்சைப் பெறுகின்றனா். 238 டாக்டர்கள் உள்ளனா்.

    மேலும், 936 சிக்கலான அறுவை சிகிச்சைகள், 1,175 மகப்பேறு சிகிச்சைகளும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு அறுவை சிகிச்சைகளும் மேற் கொள்ளப்பட்டுள்ளன.

    கடந்த 6 மாதங்களில் சராசரியாக மாதத்திற்கு 644 பிரசவங்கள் நடைபெற்றுள்ளன. அரசு ஆஸ்பத்திரியில் தாய் - சேய் உயிரிழப்பு வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

    • கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் திடீரென மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்குள் சென்றார்.
    • நோயாளி ஒருவருக்கு அளித்த சிகிச்சை குறித்த விபரங்களையும் ஆய்வு செய்தார்.

    மேட்டுப்பாளையம்

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திற்கு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் திடீரென மேட்டுப்பாளையம் அரசு மருத்துவ மனைக்குள் சென்றார்.

    அங்கு இரவு பணியில் மருத்துவர்கள் உள்ளனரா? அங்குள்ள நோயாளிகளுக்கு சிகிச்சைகள் முறையாக வழங்கப்படுகிறதா? என அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.

    பொதுப்பிரிவு, பேறுகால பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு என மருத்துவமனையில் உள்ள பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு நோயாளிகளை சந்தித்து உரிய முறையில் சிகிச்சை கிடைக்கிறதா? மருத்துவர்கள் எப்படி கவனித்து கொள்கின்றனர் என நோயாளிகளிடம் கேட்டறிந்தார்.

    மேலும் நோயாளி ஒருவருக்கு அளித்த சிகிச்சை குறித்த விபரங்களையும் ஆய்வு அறிக்கைகளை ஒப்பிட்டு சரிபார்த்த நிலையில் மருத்துவமனையில் தேவையான மருந்துகள் இருப்பு உள்ளதா? எனவும் ஆட்சியர் சமீரன் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்

    சீனாவில் இருந்து மலேசியா வழியாக கோவைக்கு வந்த நபர் ஒருவருக்கு கொரானோ கன்டறியப்பட்ட நிலையில் தற்போது மாவட்ட நிர்வாகம், மருத்துவத்துறை உஷார் படுத்தப்பட்டு விழிப்புணர்வுடன் இருக்க இந்த ஆய்வு நடந்ததாக கூறப்படுகிறது.

    • புத்தாண்டு அன்று பிறக்கும் குழந்தைகள் பற்றிய விவரங்களை யுனிசெப் வெளியிடும்.
    • தனியார் ஆஸ்பத்திரிகளில் பிறந்த குழந்தைகளின் விவரம் வெளியிடப்படவில்லை.

    சென்னை :

    ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு அன்று உலகம் முழுவதிலும் பிறக்கும் குழந்தைகள் பற்றிய விவரங்களை யுனிசெப் வெளியிடும். அந்த வகையில் ஆங்கில புத்தாண்டு தினமான நேற்று முன்தினம் சென்னையில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் மொத்தம் 90 குழந்தைகள் பிறந்துள்ளன.

    அதன்படி, சென்னை எழும்பூர் குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் 25 குழந்தைகளும், திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் அரசு ஆஸ்பத்திரியில் 19 குழந்தைகளும் பிறந்துள்ளன.

    இதேபோல் ராயபுரம் அரசு ஆர்.எஸ்.ஆர்.எம். ஆஸ்பத்திரியில் 28 குழந்தைகளும், கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் 18 குழந்தைகளும் பிறந்துள்ளன. இதுதவிர தனியார் ஆஸ்பத்திரிகளிலும் குழந்தைகள் பிறந்துள்ளன. அதன் விவரம் வெளியிடப்படவில்லை.

    குழந்தைகளை பெற்றெடுத்த பெண்கள், புத்தாண்டு பரிசாக தங்களுக்கு குழந்தைகள் பிறந்துள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்தனர். நண்பர்கள், உறவினர்களுக்கு இனிப்பு வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    • சத்யாவிற்கு சத்து ஊசியும், வலது கையில் நரம்பு ஊசியும் செலுத்தப்பட்டது.
    • தவறான சிகிச்சை அளித்த டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் நங்கவள்ளி ஒன்றியம் சின்னனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மனைவி சத்யா (வயது 29). பட்டதாரியான இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தபோது கடந்த அக்டோபர் மாதம் 31-ந் தேதி, சேலம் அரசு மருத்துவமனையில் பிரசவ வார்டில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

    கடந்த நவம்பர் மாதம் 4-ந் தேதி அறுவை சிகிச்சை மூலம் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் சத்யாவிற்கு சத்து ஊசியும், வலது கையில் நரம்பு ஊசியும் செலுத்தப்பட்டது. அதன் பிறகு சத்யாவின் வலது கண்ணில் வீக்கம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் 12-ந் தேதி சத்யாவின் தந்தை உள்பட சிலர், அரசு மருத்துவமனை டாக்டரை சந்தித்து, முறையாக சிகிச்சை அளிக்கவில்லை எனவும், அதனால் கண்ணில் வீக்கம் ஏற்பட்டுள்ளது என்றும் புகார் கூறினார். மேலும் டிஸ்சார்ஜ் செய்யுங்கள், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொள்கிறோம் என்றும் கூறியுள்ளனர்.

    ஆனால் அவர்களை டாக்டர்கள் டிஸ்சார்ஜ் செய்யாமல் அங்கேயே வைத்து சிகிச்சை அளித்துள்ளனர். மேலும் 12-ந் தேதி சத்யா கண் பார்வை இழந்து விட்டதாக டாக்டர்களே உறவினர்களிடம் கூறியுள்ளனர். தொடர்ந்து 22-ந் தேதி தனியார் மருத்துவமனையில் சத்யா சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்து சத்யாவின் கண்ணை அகற்றியும் விட்டனர்.

    இதனால் ஆவேசமடைந்த சத்யாவின் உறவினர்கள், தவறான சிகிச்சை செய்த டாக்டரை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும், அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரி முதல்வர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் குற்றம்சாட்டினர்.

    இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாக இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாட்டாண்மை கட்டிடம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. தொடர்ந்து மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்குள் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் அந்த பெண்ணின் உறவினர்கள் என 50க்கும் மேற்பட்டோர் நுழைய முயன்றனர். அப்போது, அவர்களை போலீசார் அனுமதிக்காததால் நுழைவு வாயில் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது, தவறான சிகிச்சை அளித்த டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கண்டன கோஷங்கள் எழுப்பினர். இதனால் அரசு மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

    • மருத்துவமனையில் 166 மருத்துவா்களும், 225 செவிலியா்களும் பணியில் உள்ளனா்.
    • கொரோனா தொற்று பரிசோதனை ஆய்வகம் உள்பட மொத்தம் 6 ஆய்வகங்களும் உள்ளன.

    திருப்பூர் :

    திருப்பூா் தாராபுரம் சாலையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பல்வேறு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த மருத்துவமனையில் 166 மருத்துவா்களும், 225 செவிலியா்களும் பணியில் உள்ளனா்.

    இந்த மருத்துவமனையில் மொத்தம் 1,170 படுக்கைகளும், வெளி மற்றும் உள்நோயாளிகள் பரிசோதனைக்கூடம், தொற்றுநோய் கண்டறியும் ஆய்வகம், கொரோனா தொற்று பரிசோதனை ஆய்வகம் உள்பட மொத்தம் 6 ஆய்வகங்களும் உள்ளன. இங்கு நாள் ஒன்றுக்கு 700 முதல் 750 உள்நோயாளிகளுக்கும், 2,000 முதல் 2,500 வெளிநோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இந்த நிலையில் திருப்பூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்ற மாவட்ட கலெக்டர் வினீத் நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். அப்போது சிகிச்சையில் இருக்கும் நபா்களின் உடல் நலம் விசாரித்ததுடன், சிகிச்சை அளிக்கும் முறை குறித்த விவரங்களையும் மருத்துவா்களிடம் கேட்டறிந்தாா்.

    இந்த ஆய்வின்போது அரசு மருத்துவக்கல்லூரி முதல்வா் முருகேசன், கண்காணிப்பாளா் ஜெயசங்கரநாராயணன், மருத்துவா்கள் சஞ்சய், தீபக் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

    • புதிய அரசு பதவியேற்ற உடன் அரசு டாக்டர்களுக்கு சம்பள உயர்விற்கான அரசாணையை வெளியிட்டது.
    • பிரசவத்தின் போது தாய்-சேய் உயிரிழப்பு ஏற்பட்டால் மாவட்ட கலெக்டர்கள் டாக்டர்களிடம் சென்று குற்றவாளி போல் கருதி செயல்படுகிறார்கள்.

    சென்னை:

    தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் சார்பில் எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. மாநில தலைவர் டாக்டர் செந்தில் தலைமையில் நடந்த போராட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் டாக்டர் ரவிசங்கர், செயலாளர்கள் டாக்டர் சீனிவாசன், ஜெஸ்வின், ஸ்ரீதர், பொருளாளர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அரசு டாக்டர்களுக்கு சம்பள உயர்வு வழங்குவதற்காக அறிவித்த 293 அரசாணையை 21 மாதமாக அரசு நிறுத்தி வைத்துள்ளது. அதனை உடனே நிறைவேற்ற வேண்டும். முதலமைச்சர் விரிவான காப்பீட்டு திட்டத்தில் அறுவை சிகிச்சைக்கு இலக்கு வைத்திருப்பதை கண்டித்தும் இப்போராட்டம் நடந்தது. தமிழகம் முழுவதும் இருந்து மாநில, மாவட்ட நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர். போராட்டம் குறித்து அரசு டாக்டர்கள் சங்க மாநில தலைவர் டாக்டர் செந்தில் கூறியதாவது:-

    புதிய அரசு பதவியேற்ற உடன் அரசு டாக்டர்களுக்கு சம்பள உயர்விற்கான அரசாணையை வெளியிட்டது. அதனை உடனே அமல்படுத்த வேண்டும். பிரசவத்தின் போது தாய்-சேய் உயிரிழப்பு ஏற்பட்டால் மாவட்ட கலெக்டர்கள் டாக்டர்களிடம் சென்று குற்றவாளி போல் கருதி செயல்படுகிறார்கள். அதனை கண்டிக்கிறோம்.

    முக்கியமான இந்த 3 கோரிக்கைகளை அரசு உடனே நிறைவேற்ற வேண்டும். இலையென்றால் வருகிற 29-ந்தேதி புறநோயாளிகள் புறக்கணிக்கும் போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளோம்.

    அரசு ஆஸ்பத்திரிகளில் புறநோயாளிகள் பிரிவை புறக்கணித்து வேலை நிறுத்தம் செய்வோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சதீஷ்குமார் தூக்குமாட்டி தற்கொலை செய்து தொங்கி கொண்டு இருந்தார்.
    • சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    சத்தியமங்கலம்:

    திருப்பூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 32). இவருடைய மனைவி சந்தியா (29). இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் இவர்களுக்கு குழந்தை இல்லை.

    சதீஷ்குமார் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த ராஜன் நகர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டராக பணியாற்றி வந்தார். மேலும் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையிலும் பணியாற்றி வந்தார்.

    இதையடுத்து கணவன்- மனைவியும் சத்தியமங்கலம் கோம்பு பள்ளத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.

    திருமணம் முடிந்து 3 ஆண்டுகள் ஆகியும் தங்களுக்கு குழந்தை இல்லையே என சதீஷ்குமார் மன வேதனை அடைந்து வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து தனது உறவினர்களிடம் கூறி வந்ததாகவும் தெரிகிறது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருடைய மனைவி வெளியூர் சென்று விட்டார். இதனால் சதீஷ்குமார் மட்டும் சத்தியமங்கலத்தில் உள்ள வீட்டில் தனியாக இருந்து வந்தார்.

    இதையடுத்து நேற்று முன் தினம் சந்தியா சதீஷ்குமாருக்கு போன் செய்து பேசினார். இதையடுத்து நேற்று மீண்டும் சந்தியா, சதீஷ்குமாருக்கு போன் செய்தார்.

    ஆனால் போன் அணைத்து வைக்கப்பட்டு இருந்தது. இதை தொடர்ந்து சந்தியா அருகில் உள்ள வீட்டில் உள்ளவர்களிடம் கூறி சதீஷ்குமாரை போய் பார்த்து வரும் படி கூறினார்.

    இதை தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் சதீஷ்குமார் வீட்டுக்கு சென்று கதவை திறந்து பார்த்தனர். அப்போது வீட்டின் படுக்கை அறையில் உள்ள பேனில் கயிற்றால் தூக்கு மாட்டி தற்கெலை செய்து தொங்கி கொண்டு இருந்தார்.

    மேலும் தனது கையில் ஊசியில் குத்தியப்படியும், இதனால் ரத்தம் கீழே கொட்டிய நிலையிலும் இருந்தது.

    இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் இது குறித்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

    இதையடுத்து சத்தியமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவரது உடலை மீட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் சதீஷ்குமார் குழந்தை இல்லாத ஏக்கத்தில் தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம்.

    ஆனாலும் அவர் குழந்தை இல்லாத ஏக்கத்தில் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு காரணமா என்பது குறித்து தீவிரமாக விசாரித்து வருவதாக போலீசார் கூறினர்.

    இந்த நிலையில் தற்கொலை செய்து கொண்ட டாக்டர் சதீஷ்குமாரின் உடல் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்தியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    • இந்தியாவில் இருந்து ஆண்டு 1,75,025 பேருக்கு ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
    • மருத்துவ பரிசோதனை செய்து எந்த ஒரு அரசு டாக்டரிடமும் உடல் தகுதி சான்றிதழை பெறலாம்.

    சென்னை:

    இந்தியாவில் இருந்து ஆண்டு 1,75,025 பேருக்கு ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஹஜ் பயணம் மேற்கொள்வோருக்கு விரிவான சுகாதார மற்றும் மருத்துவ ஏற்பாடுகளை மத்திய சுகாதார அமைச்சகத்துடன் இணைந்து சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது.

    இந்த நிலையில் ஹஜ் விண்ணப்பதாரர்கள் அரசு ஆஸ்பத்திரிகளில் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    மருத்துவ பரிசோதனை செய்து எந்த ஒரு அரசு டாக்டரிடமும் உடல் தகுதி சான்றிதழை பெறலாம். இது நாடு முழுவதும் பரிசோதனை சான்றிதழ்களை பெறும் செயல் முறையை எளிதாக்கும் என்று அந்த அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    • வேம்பு என்ற பெண்ணுக்கு கடந்த 7 ஆண்டுகளாக இடது மூட்டு பகுதியில் வலி இருந்து வந்துள்ளது.
    • கணேஷ்குமார் வாலிபருக்கும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

    தென்காசி:

    சிவகிரியை சேர்ந்தவர் வேம்பு(வயது 45). இந்த பெண்ணுக்கு கடந்த 7 ஆண்டுகளாக இடது மூட்டு பகுதியில் வலி இருந்து வந்துள்ளது. அவரை புளியங்குடி அரசு மருத்துவமனை டாக்டர்கள் தென்காசி அரசு மருத்துவமனை எலும்பு முறிவு பிரிவிற்கு பரிந்துரை செய்திருந்தனர்.

    அறுவை சிகிச்சை

    தென்காசி மருத்துவமனை யில் எலும்பு முறிவு டாக்டர் மது, முத்துராமன், மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெஸ்லின் ஆலோசனையின்படி அனைத்து பரிசோதனைகளும் செய்து, அவருக்கு இடது கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது.

    இதேபோல் கணேஷ்குமார் (33) என்ற வாலிபருக்கும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனை மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெஸ்லின், டாக்டர்கள் மது, முத்துராமன், திருமலைகுமார், இம்ரான், மயக்க டாக்டர்கள் சுரேஷ் மில்லர், ராஜேஸ்வரி, நீத்து, பிரியதர்ஷினி மற்றும் செவிலியர்கள் மேற்கொண்டனர்.

    ரூ.3 லட்சம் செலவு

    இதுகுறித்து இணை இயக்குனர் (நலப்பணிகள்) பிரேமலதா கூறும்போது, தொடர்ந்து தென்காசி மருத்துவமனை டாக்டர்கள் சாதனை படைத்து வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது. தென்காசி மருத்துவமனை மகப்பேறு, அறுவை சிகிச்சை, குழந்தைகள் நலம், அவசர சிகிச்சை பிரிவு, முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டம், கண் புறை அறுவை சிகிச்சை, பொது அறுவை சிகிச்சை, மருந்தகம், ஆய்வகம், நுண் கதிர் பிரிவு, குடும்ப நலம் என அனைத்து பிரிவு குறியீடுகளிலும் முன்னேற்றத்துடன் செயல்படுகிறது என வாழ்த்தினார்.

    மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் கூறுகையில், தென்காசி மாவட்ட தலைமை மருத்துவமனையில் செயல்பாடுகள் சிறப்பாக இருக்கிறது. மருத்துவர்கள் திறம்பட மிகப்பெரிய அறுவை சிகிச்சைகள் மற்றும் சிகிச்சைகளை வழங்குகிறார்கள். சுமார் ரூ.3 லட்சத்திற்கு மேல் செலவாகக் கூடிய இந்த மூட்டு மாற்று அறுவை சிகிச்சைகளை, முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ், தென்காசி மருத்துவமனையில் செய்திருக்கின்றனர்.

    ×