search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கே.எஸ்.அழகிரி"

    • கே.எஸ்.அழகிரியின் புதல்வன் திருமண வரவேற்பு.
    • மணமக்களை வாழ்த்திய விஜய்வசந்த்.

    தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரியின் புதல்வன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. அதில் கன்னியாகுமரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

    • தி.மு.க.-காங்கிரஸ் வலிமையான அணியாக இருக்கிறது
    • சபை அறிந்து, காலம் அறிந்து கருத்துக்களை பேச வேண்டும்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் காங்கிரஸ், கூட்டணி காரணமாக மக்கள் பிரச்சனைக்காக குரல் கொடுப்பதில்லை. தேர்தலுக்காக மட்டுமே கூட்டணி அமைக்கிறோம். மற்ற நேரங்களில் மக்கள் பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்தால் மட்டுமே கட்சி வளரும் என்று கார்த்தி ப. சிதம்பரம் எம்.பி. கூறினார். அவரது இந்த கருத்துக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் கட்சிக்குள் பலரும் கருத்துக்கள் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் தென் சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் காமராஜர பிறந்த நாளை யொட்டி காங்கிரஸ் மூத்த நிர்வாகிகளை கவுரவிப்பது மற்றும் மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தி.நகரில் நடந்தது.

    இந்த விழாவில் கலந்து கொண்ட முன்னாள் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி பேசும்போது சூசகமாக கார்த்தி ப.சிதம்பரம் பேச்சுக்கு பதில் அளித்து அவருக்கு அறிவுரை வழங்குவது போல் பேசினார். அவர் பேசியதாவது:-

    தமிழ்நாட்டில் காங்கிரஸ் காமராஜர் வழியில் செயல்பட்டு வருகிறது. நமக்கென்று சில சங்கடங்கள் இருந்தாலும் பணிகளில் சுணக்கம் காட்டுவது கிடையாது. 2026 சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை செய்து வருகிறோம்.

    இந்திய அளவில் வலிமையாக இருந்தது காங்கிரஸ். மாநில கட்சிகள் வளர்ந்த போது சில மாற்றங்கள் ஏற்பட்டது.

    2 எம்.பி.க்களை மட்டுமே வைத்திருந்த பா.ஜனதா ஏதோ ஒரு வகையில் பிரசாரத்தை வலிமையாக மேற்கொண்டு வலிமையாகி விட்டார்கள்.

    இப்போது ராகுலின் நடை பயணத்தால் வலிமை பெற்றுள்ளோம். எதை எதை எப்போது பேச வேண்டும் என்ற கணக்கு இருக்கிறது. அப்போதுதான் பேச வேண்டும். அந்த பேச்சுக்குதான் மரியாதை இருக்கும். சபை அறிந்து, காலம் அறிந்து, கட்சி தலைமையோடு கலந்து பேசி கருத்துக்களை பேச வேண்டும்.

    பல மாநிலங்களில் கூட்டணி அமைய பல சுற்று பேச்சுக்கள் நடந்தது. அப்படியும் சில மாநிலங்களில் சிக்கல் ஏற்பட்டது.

    ஆனால் தமிழ்நாட்டில் இரண்டே சுற்றுக்கள் பேசி வலிமையான தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைத்தார். நம்மை பொறுத்தவரை ஆர்.எஸ்.எஸ். வலிமையான எதிரி. பா.ஜனதாவையும், ஆர்.எஸ்.எஸ்சையும் மேலும் பலவீனமாக்க வேண்டும் என்பதுதான் நமது நோக்கமாக இருக்க வேண்டும்.

    பிறர் பார்த்து ஏளனம் செய்யும்படி எதையும் பேசக் கூடாது. அப்படியானால் தான் மக்கள் திரும்பி பார்ப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆளுநரை கண்டித்து காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடத்தப்போவதாக கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.
    • தமிழக ஆளுநராக பொறுப்பேற்றது முதல் தமிழ் மக்களின் பண்பாட்டை சிறுமைப்படுத்துகிற வகையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

    ஆங்கிலேயர்களிடம் இருந்து நாடு சுதந்திரம் பெறுவதற்கு காந்தியின் போராட்டம் பலன் அளிக்கவில்லை என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியது, சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், ஆளுநரை கண்டித்து காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடத்தப்போவதாக அக்கட்சியின் மாநில தலைவர் கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.. இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    "இந்திய விடுதலை போராட்டத்துக்காக சத்தியம், அகிம்சை ஆகிய கொள்கைகளின் அடிப்படையில் ஒத்துழையாமை இயக்கம், சட்ட மறுப்பு இயக்கம் ஆகியவற்றின் மூலம் பல்வேறு போராட்டங்களை நடத்தி, இந்திய விடுதலையைப் பெற்றுத் தருவதற்கு தமது வாழ்நாளையே அர்ப்பணித்தவர் தேசப்பிதா மகாத்மா காந்தியடிகள்.பல்வேறு மதம், மொழி, சாதி, இன வேறுபாடுகளைக் கடந்து அனைத்து இந்தியர்களையும் ஒன்று திரட்டி, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து பல்வேறு போராட்டங்களை நடத்தி இந்திய தேசிய காங்கிரசை வழிநடத்தியவர் மகாத்மா காந்தி. அவரது விடுதலைப் போராட்ட பங்களிப்பை கொச்சைப்படுத்துகிற வகையில், அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கருத்து கூறியிருப்பதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்.

    தமிழக ஆளுநராக பொறுப்பேற்றது முதற்கொண்டு, தமிழக நலன்களுக்கு விரோதமாகவும், தமிழ் மக்களின் பண்பாட்டை சிறுமைப்படுத்துகிற வகையிலும் அவர் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். இந்தியாவுக்கு விடுதலையை பெற்றுத் தந்தது நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தான் என்றும், மகாத்மா காந்தி அல்ல என்றும் கூறியிருப்பது அனைவரையும் கொதிப்படைய வைத்திருக்கிறது. இந்திய விடுதலைப் போராட்டத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பங்கை பெருமையாக பேசுவதற்கு பதிலாக அவரை மகாத்மா காந்தியோடு ஒப்பிட்டு பேசுவது வரலாற்றுத் திரிபுவாதமாகும்.

    இந்திய விடுதலைப் போராட்டத்தில் மகாத்மா காந்தியின் பங்களிப்பை அங்கீகரித்து அவரது வாழ்த்துகளை பெற்றவர் சுபாஷ் சந்திரபோஸ். விடுதலைப் போராட்டத்தில் அகிம்சை முறையை கையாண்டவர் மகாத்மா காந்தி. அதற்கு மாறாக, ஆயுதம் ஏந்திய போராட்டம் நடத்தியவர் சுபாஷ் சந்திரபோஸ். இவர்களது பங்களிப்பை அனைத்து இந்தியர்களும் மனமுவந்து ஏற்றுக் கொண்டு போற்றி பாராட்டி வருகிறார்கள்.

    இவ்விருவரிடையே பேதம் கற்பிக்கிற வகையில் கருத்துகளை ஆர்.என். ரவி கூறியிருப்பது வரலாற்றை சரியாக அறிந்தும் அதை திரித்து பேசுவது மலிவான அரசியலாகும். இதை அவர் அரசியல் உள்நோக்கத்தோடு செய்து வருகிறார்.மகாத்மா காந்தியை படுகொலை செய்த நாதுராம் கோட்சேவை தியாகி என்று போற்றுகிற பாரம்பரியத்தில் வந்த ஆர்.என். ரவி போன்றவர்கள் இத்தகைய கருத்துகள் கூறுவதை எவரும் அனுமதிக்க முடியாது.

    ஆட்டை கடித்து, மாட்டை கடித்து கடைசியாக உலகம் போற்றி மகிழும் மகாத்மாவின் பெருமைகளை சிறுமைப்படுத்த முயலும் ஆளுநர் ஆர்.என். ரவியை கண்டித்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் வருகிற ஜன. 27 சனிக்கிழமை காலை 11 மணியளவில் சென்னை சைதாப்பேட்டை சின்னமலை ராஜிவ்காந்தி சிலையிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு, ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் எனது தலைமையில் நடைபெறும். இதில், சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் முன்னிலை வகிப்பார்கள். அதேபோல, தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளும் தங்களது மாவட்டத்துக்குட்பட்ட ஏதாவது ஒரிடத்தில் தமிழக ஆளுநரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்த வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

    இந்தியாவின் அடையாளமாக உலக நாடுகள் மத்தியில் போற்றத்தக்க வகையில் அனைத்து மக்களாலும் நேசிக்கப்படுபவர் தேசப்பிதா மகாத்மா காந்தி. அவரை கொச்சைப்படுத்துவது 140 கோடி இந்தியர்களையும் அவமானப்படுத்துவதாகும். அதை அனுமதிக்க முடியாத வகையில், ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம் தமிழகம் முழுவதும் வெற்றிகரமாக நடைபெற மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் தீவிர முனைப்புடன் சிறப்பான ஏற்பாடுகளை செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.

    • விருதுநகரில் நடைபெறும் காமராஜர் விழாவில் பங்கேற்பதற்காக கே.எஸ்.அழகிரி மதுரை வந்தார்.
    • மணிப்பூர் கலவரத்திற்கு மத்திய அரசே காரணம் என நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

    மதுரை

    விருதுநகரில் நடைபெறும் காமராஜர் விழாவில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்தார். விமான நிலையத்தில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

    மணிப்பூர் மாநிலத்தில் மொத்த மக்கள் தொகையே 35 லட்சம் தான். சிறிய அளவில் மக்கள் தொகை உள்ள ஒரு மாநிலத்தில் சட்ட ஒழுங்கை காப்பாற்ற முடியாமல் போனது மிக பெரிய தவறாகும். காங்கிரஸ் கட்சி சார்பில் அந்த மக்களுக்கு ஆறுதல் தெரிவித்திருக்கிறோம்.

    இந்த கலவரத்திற்கு காரணமே மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு தான். அங்கே இந்துக்கள், கிறிஸ்தவர்கள் என்று பிரித்து கலவரத்தை தூண்டும் வேலைகளை செய்கின்றனர். தென்காசியில் மறு வாக்கு எண்ணிக்கை செய்ததில் தவறில்லை. கர்நாடகா மேகதாது அணை பிரச்சனையில் தமிழகத்தின் உரிமை ஒருபோதும் விலை போகாது.

    தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் தமிழக அரசிற்கு ஆதரவாக உள்ளன. ஆனால் தமிழகத்தில் உள்ள பா.ஜ.க. மட்டும் கர்நாடகாவிற்கு ஆதரவாக இருக்கிறது.கர்நாடகா பா.ஜ.க. தலைவர் பொம்மை. கர்நாடகத்துக்கு ஆதரவாக இருக்கிறார். ஆனால் தமிழகத்தில் இருக்கும் பா.ஜ.க. தலைவர் தமிழக அரசுக்கு ஆதரவாக இல்லாமல் கர்நாடகாவுக்கு ஆதரவாக செயல்படுகிறார்.

    கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றிக்கு பின்பு இந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சி மாபெரும் வளர்ச்சி பெற்று வருகிறது.

    சோனியா காந்தி அழைப்புக்கு பின்பு காங்கிரஸ் கட்சியை ஏற்க மறுத்தவர்கள் கூட தற்போது ஆதரவு தெரி வித்து வரவேற்கிறார்கள். பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தி என்பதை பின்னர் முடிவு செய்வார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த பேட்டியின் போது மதுரை மாநகர் மாவட்ட தலைவர் கார்த்திகேயன் சையது பாபு, சிலுவை, கவுன்சிலர்கள் ஜெய்ஹிந்த்பு ரம் முருகன், ராஜ் பிரதாபன், தல்லாகுளம் முருகன், சுந்தரமகாலிங்கம், மலர் பாண்டியன், வாஞ்சிநாதன் உள்பட பலர் உடனிருந்தனர்.

    • தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்து வந்தவர் காமராஜ்.
    • காங்கிரஸ் கட்சியில் உட்கட்சித் தேர்தல் ஜனநாயக ரீதியாக நடைபெறவில்லை.

    கோவில்பட்டி:

    தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்து வந்தவர் காமராஜ். இவர் இன்று திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    காங்கிரஸ் உட்கட்சி தேர்தல் ஜனநாயக ரீதியாக நடைபெறவில்லை என்று கூறி மாநில தலைவர் கே.எஸ்.அழகிரியை கண் டித்து பதவி விலகியதாக அவர் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் இன்று கோவில்பட்டியில் உள்ள காந்தி மண்டபத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    காங்கிரஸ் கட்சியில் உட்கட்சித் தேர்தல் ஜனநாயக ரீதியாக நடைபெறவில்லை. பணம் வாங்கிக் கொண்டு பொறுப்புக்கள் போடப்பட்டுள்ளது. மாவட்ட தலைவர்களுக்கு தெரியாமல், கலந்து ஆலோசிக்கமால் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது.

    கடந்த 15-ந் தேதி சத்தியமூர்த்தி பவனில் நடந்த பிரச்சினை தொடர்பாக மாவட்ட தலைவர்களிடம் எந்தவித ஆலோசனையும் நடத்தாமல், கட்சியின் பொருளாளர் ரூபி மனோகரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தன்னிச்சையாக முடிவு எடுத்துள்ளனர்.

    ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டதை கண்டித்து ஒரு அறிக்கை கூட மாநில தலைவர் வெளியிடவில்லை. மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தன்னுடைய கோரிக்கை மட்டும் பெரிது என்று நினைக்கிறார்.

    கட்சி வளர்ச்சி தொடர்பாக கேட்க வரும் கட்சி தொண்டர்களை அடிக்கும் நிலை காங்கிரஸ் கட்சியில் உள்ளது.

    எனவே காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் பதவியில் நான் தொடர விரும்பவில்லை. எனது ராஜினாமா தொடர்பாக மாநிலத் தலைவருக்கு கடிதம் அனுப்பி உள்ளேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    காமராஜ் ராஜினாமா செய்தது காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • இந்து மதத்தை குறை கூறுவது, நேருவின் பழக்கம் என்று சமீபகாலமாக ஒரு கருத்து வளர்ந்து வருகிறது.
    • நான் ஒரு இந்து, ராமனை வழிபடுகிறேன் என்று காந்தி சொன்னார்.

    தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரியின் 71-வது பிறந்த நாள் விழாவையொட்டி, சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று காங்கிரசும் மதசார்பின்மையும் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.இதில் கே.எஸ்.அழகிரி பேசியதாவது:- காங்கிரஸ் கட்சி இந்து மதத்துக்கு எதிரானது அல்ல. இந்து மதத்தை குறை கூறுவதும், சிறுமைப்படுத்துவதும் நேருவின் பழக்கம் என்றும் வடமாநிலங்களில் சமீபகாலமாக ஒரு கருத்து வளர்ந்து வருகிறது. ஆனால் அது உண்மையல்ல.

    காங்கிரஸ் இந்து மதத்தின் மீது நம்பிக்கை உடைய ஒரு அரசியல் கட்சி. நேருவுக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. அவர் ஒரு சீர்திருத்தவாதி. ஆனால் இந்து மதத்துக்கு எதிராக அவர் செயல்பட்டது இல்லை. நான் ஒரு இந்து, ராமனை வழிபடுகிறேன் என்று மகாத்மா காந்தி சொன்னார். ஆனால், அதை அடுத்தவரிடம் திணிக்க மாட்டேன் என்று கூறினார். இதுதான் காங்கிரசின் தத்துவம். இதுதான் மதச்சார்பின்மை.

    பிரிவினைவாதம் பேசுபவர்கள், மதத்துக்கு எதிராக பேசுபவர்கள்,  இன உணர்வுகளை கிளப்புபவர்கள் காலப் போக்கில் தோல்வியடைவார்கள். இந்திய அரசியல் சாசனத்தையே மாற்ற வேண்டும் என்பதுதான் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நோக்கம்.

    அரசியல் சாசனத்தை காப்பாற்றவும், மதசார்பின்மையை காக்கவும் காங்கிரஸ் தொண்டர்கள் போராட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். விழாவில் முன்னாள் தலைவர்கள் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கே.வி.தங்கபாலு, எம்.பி.க்கள் விஜய் வசந்த், விஷ்ணுபிரசாத், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • கே.எஸ்.அழகிரி இன்று பார்வையிட்டார்
    • ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 3500 கிலோ மீட்டர் தூரம் பாதயாத்திரை மேற்கொள்கிறார்.

    கன்னியாகுமரி:

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 3500 கிலோ மீட்டர் தூரம் பாதயாத்திரை மேற்கொள்கிறார்.பாதயாத்திரை தொடக்க விழா வருகிற 7- தேதி கன்னியாகுமரியில் நடக்கிறது.

    இதையடுத்து அதற்கான முன்னேற்பாடு பணிகளை தமிழக காங்கிரசார் மேற்கொண்டு வருகிறார்கள்.தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி குமரி மாவட்டத்தில் முகாமிட்டு அதற்கான பணிகளை மேற்கொண்டு உள்ளார்.

    ராகுல் காந்தியை வரவேற்பது தொடர்பாக காங்கிரஸ் நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டார். மேலும் ராகுல் காந்தியை வரவேற்கும் வகையில் 18 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுக்களில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் இடம் பெற்றுள்ளனர். இந்த குழுக்களுடன் கே.எஸ் அழகிரி நாகர் கோவிலில் ஆலோசனை நடத்தினார்.

    இதை தொடர்ந்து இன்று காலை கன்னியாகுமரிக்கு சென்ற கே.எஸ்.அழகிரி அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை பார்வையிட்டார். ராகுல் காந்தி பங்கேற்கும் பொதுக்கூட்ட மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணி நடப்பதை அழகிரி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அவருடன் மேலிட பார்வையாளர் தினேஷ் குண்டுராவ், அகில இந்திய செயலாளர் ஸ்ரீவல்லபிரசாத், எம்.பி.க்கள் விஜய் வசந்த், திருநாவுக்கரசு, ஜோதிமணி, கார்த்தி சிதம்பரம், செல்லகுமார், ஜெயக்குமார், விஷ்ணு பிரசாத், எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ்குமார், பிரின்ஸ் மற்றும் நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

    • எம்.பி., எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை
    • பிரம்மாண்டமான பந்தல்கள் அமைக்கப்பட்டு வருகிறது.

    நாகர்கோவில்:

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 3750 கிலோ மீட்டர் தூரம் பாதயாத்திரை மேற்கொள்கிறார்.

    12 மாநிலங்கள் வழியாக 150 நாள் பயணமாக இந்த பாதயாத்திரையை அவர் மேற்கொள்கிறார். இதன் தொடக்க விழா நிகழ்ச்சி வருகிற 7-ந் தேதி மாலை 3மணிக்கு கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பு நடக்கிறது .

    இந்த நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு ராகுல் காந்தியிடம் தேசிய கொடியை வழங்கி பாத யாத்திரையை தொடங்கி வைக்கிறார்.

    இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் பிரம்மாண்டமான பொதுக்கூட்டம் நடத்த வும் ஏற்பாடு செய்யப்பட்டு ள்ளது.

    பின்னர் ராகுல் காந்தி அன்று கன்னியாகுமரியில் இருந்து பாதயாத்திரை தொடங்குகிறார்.குமரி மாவட்டத்தில் 7,8,9,10-ந் தேதிகளில் அவர் பாதயா த்திரை மேற்கொள்கிறார்.

    11-ந் தேதி காலை திருவனந்தபுரம் வழியாக கேரளா செல்கிறார். குமரி மாவட்டத்தில் ராகுல் காந்தி 4 நாட்கள் பாதயாத்திரை மேற்கொள்வதையடுத்து அதற்கான முன்னேற்பாடு பணிகளை தமிழக காங்கிரசார் மேற்கொண்டு வருகிறார்கள்.

    ஏற்கனவே தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குமரி மாவட்டத்தில் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டு இருந்தார்.

    இதைத்தொடர்ந்து எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் பலரும் இங்கே முகாமிட்டு அதற்கான முன்னேற்பாடு பணிகளை பார்வையிட்டு வந்தனர்.

    இந்த நிலையில் இன்று மீண்டும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே. எஸ்.அழகிரி குமரி மாவட்டம் வந்தார்.நாகர்கோவிலுக்கு வந்த அவர் நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் நடைபெற்று வரும் பணி களை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அங்கு 2-வது நாள் சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு ராகுல் காந்தி அந்த மைதானத்தில் கேரவன் வேனில் தங்கு கிறார்.

    ராகுல் காந்தியுடன் பாதயாத்திரை வரும் நிர்வாகிகள் தங்குவதற்கும் அங்கு பிரம்மாண்டமான பந்தல்கள் அமைக்கப்பட்டு வருகிறது.அந்த பணிகளை கே.எஸ்.அழகிரி இன்று காலை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.மேலும் ராகுல் காந்தி பாதயாத்திரை மேற்கொள்ள உள்ள இடங்க ளை பார்வையிட்ட அவர் இதுவரை செய்யப்பட்டுள்ள பணிகள் விவரங்களையும் கேட்டறிந்தார்.

    இதைத்தொடர்ந்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை கூட்டம் நாகர்கோவிலில் நடந்தது. கூட்டத்தில் காங்கிரஸ் மேலிட பார்வை யாளர் குண்டு ராவ், எம்.பி.க்கள் விஜய் வசந்த், ஜோதிமணி, செல்லக்குமார், ஜெயக்குமார், எம்.எல். ஏ.க்கள் ராஜேஷ் குமார், பிரின்ஸ், மாவட்டத் தலை வர்கள் நவீன் குமார், கே.டி. உதயம், பினுலால்சிங் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் ராகுல் காந்தி பாதயாத்திரையின் போது செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    கன்னியாகுமரி முதல் களியக்காவிளை வரை அவர் மேற்கொள்ள உள்ள பாதயாத்திரை நிகழ்ச்சி களில் சாலையின் இருபுற மும் கட்சியினர் திரண்டு நின்று உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும் இதற்காக நிர்வாகிகள் அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்று அழகிரி கேட்டுக்கொண்டார்.

    ராகுல் காந்தி வரவேற்பு ஏற்பாடுகளை கண்காணிக்க 18 எம்.பி. எம்.எல். ஏ.க்கள் தலைமையில் பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப் பட்டுள்ளனர்.

    • செங்கோட்டையில் யார் தேசியக் கொடி ஏற்றினாலும் தேசியவாதிகளுக்கு மகிழ்ச்சி தான்.
    • காங்கிரஸ் கட்சியை வளர்த்தெடுப்பதற்கான திட்டத்தில் தவறு செய்துவிட்டோம்.

    சென்னையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலமான சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பேசியதாவது:

    டெல்லி செங்கோட்டையில் யார் தேசியக் கொடி ஏற்றினாலும் தேசியவாதிகளுக்கு மகிழ்ச்சி தான். ஏனென்றால் தேசியக் கொடியேற்றும் உரிமையை நாம் தான் பெற்றுக் கொடுத்துள்ளோம்.

    சுதந்திரத்திற்கு சம்பந்தம் இல்லாதவர்கள் தேசியக் கொடியை ஏற்றுகிறார்கள் என்று புலம்பக் கூடாது. ஏனென்றால், நம்மிடம் தான் மக்கள் சுதந்திரத்தை தந்தார்கள். இன்று அவர்கள்தேசியக் கொடியை ஏற்றுகிறார்கள் என்றால் நாம் தான் அவர்களிடம் கொடுத்து விட்டோம்.

    இந்த அதிகாரம் ஏன் கைமாறியது என்று நடுநிலையாக நாம் யோசிக்க வேண்டும். நமது செயல்பாட்டில் தவறில்லை. ஆனால், நமது காங்கிரஸ் கட்சியை வளர்த்தெடுப்பதற்கான திட்டத்தில் தான் நாம் தவறு செய்துவிட்டோம். அந்த தவறை ராகுல் காந்தி சரி செய்து வருகிறார்.

    இந்தியாவில் 50 ஆண்டுகளுக்கு மேலாக காங்கிரஸ் ஆட்சியில் இல்லாத நமது மாநிலத்தின் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரையிலான பாதயாத்திரையை வருகிற செப்டம்பர் 7-ந் தேதி ராகுல் காந்தி தொடங்குகிறார். 3 நாட்கள் தமிழகத்தில் இருக்கிறார்.

    பாதயாத்திரைக்கான ஏற்பாடுகளை மற்ற மாநிலங்களை விட நாம் சிறப்பாக செய்ய வேண்டும். இந்தியாவின் பன்முக தன்மையை காங்கிரஸ் ஏற்றுக்கொள்கிறது. ஆனால் ஆர்.எஸ்.எஸ். அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. காங்கிரஸ் அனைத்து நிறத்தையும் உள்ளே அழைக்கிறது. ஆர்.எஸ்.எஸ். ஒரே நிறம் தான் வேண்டும் என்று நினைக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

    • 75 கி.மீ., தூர பாத யாத்திரையை கே.எஸ்.அழகிரி தொடங்கி வைத்தார்.
    • குற்றாலத்தில் தொடங்கிய பாத யாத்திரை மேலகரம், தென்காசி வழியாக கடையநல்லூர் சென்றடைந்தது.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட காங்கிரஸ் சார்பில் நாட்டின் 75-வது சுதந்திர தின பவள விழாவை முன்னிட்டு குற்றாலத்தில் 75 கி.மீ., தூர பாத யாத்திரையை காங்கிரஸ் கமிட்டி மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி தொடங்கி வைத்தார்.

    தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவர் பழனிநாடார் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். மாநில காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் இதயத்துல்லா, மாவட்ட பொருளாளர் முரளிராஜா, முன்னாள் எம்.பி., ராமசுப்பு, மாநில பொதுச் செயலாளர் ஆஸ்கர் பிரடி, காமராஜ், முன்னாள் மாவட்டத் தலைவர் கொடிக்குறிச்சி முத்தையா, மாநில செயலாளர் ஆலங்குளம் செல்வராஜ், சுரண்டை நகராட்சித் தலைவர் வள்ளி முருகன், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் ஆயிரப்பேரி உதயகிருஷ்ணன், செங்கோட்டை முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர் சீவநல்லூர் சட்டநாதன், மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் சங்கரகுமார், மாநில பேச்சாளர்கள் பால்துரை, ஆலடி சங்கரையா, ஆய்க்குடி பெரியசாமி, மாவட்ட பொதுச் செயலாளர் செங்கோட்டை முத்துசாமி, மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் சுரேஷ் இளவரசன், மாவட்ட துணைத் தலைவர்கள் திருஞானம், சிவராமகிருஷ்ணன், வட்டார காங்கிரஸ் தலைவர்கள் குற்றாலம் பெருமாள், செங்கோட்டை மூக்கையா, கீழப்பாவூர் தங்கரத்தினம், வாசுதேவநல்லூர் மகேந்திரா, நகர காங்கிரஸ் தலைவர்கள் தென்காசி ஆனந்த பவன் காதர் மைதீன், செங்கோட்டை ராமர், சரண்டை ஜெயபால், புளியங்குடி பால்ராஜ், குற்றாலம் பேரூராட்சி காங்கிரஸ் தலைவர் துரை, செங்கோட்டை நகராட்சி கவுன்சிலர் முருகையா, வர்த்தக அணி மாவட்ட பொதுச் செயலாளர் தாயார் தோப்பு ராமர், கணக்கப்பிள்ளைவலசை ரமேஷ், பெரிய பிள்ளைவலசை சாய்பு தென்காசி கணேசன், மத்தளம்பாறை ஜேம்ஸ், செங்கோட்டை ராஜீவ் காந்தி, இளைஞர் காங்கிரஸ் சந்தோஷ் ஜார்ஜ், சிவாஜி கணேசன் சமூக நலப் பேரவை மாவட்ட தலைவர் கணேசன், மற்றும் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    குற்றாலத்தில் தொடங்கிய பாத யாத்திரை மேலகரம், தென்காசி வழியாக கடையநல்லூர் சென்றடைந்தது. இன்று கடையநல்லூர், புளியங்குடி வழியாக வாசுதேவநல்லூர் சென்றடைகிறது.

    நாளை (11-ந் தேதி) வாசுதேவநல்லூர், தலை வன்கோட்டை வழியாக சங்கரன்கோவில் சென்றடைகிறது.

    12-ந் தேதி சங்கரன்கோவில் முதல் ஆலங்குளம் வரையிலும் 13-ந் தேதி ஆலங்குளம் முதல் கடையம் வரையும், 14-ந் தேதி கடையம் முதல் சுரண்டை வரையிலும் இந்தப் பாதயாத்திரை நடைபெற உள்ளது.

    • தமிழக ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்து கூட்டத்தில் தீர்மானம்.
    • ஆகஸ்ட் 9 முதல் 14 வரை 75 கி.மீ. தூர பாத யாத்திரையை மேற்கொள்ள முடிவு.

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

    இது தொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

    வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை நினைவுகூறுகிற வகையில் ஆகஸ்ட் 9 முதல் 14 ஆம் தேதி வரை 75 கி.மீ. தூர பாத யாத்திரையை மேற்கொள்ளவது என இந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

    அத்தியாவசியப் பொருள் விலை உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் எடுத்து கூறுவதற்காக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகளின் முயற்சிகளுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவதை கண்டித்து, ஆகஸ்ட் 5 ஆம் தேதி வெள்ளிக்கிழமை நாடு முழுவதும் மாபெரும் மறியல் போராட்டத்தை நடத்த அகில இந்திய காங்கிரஸ் அறிவுறுத்தியுள்ளது.

    அதன் அடிப்படையில், சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவன் முற்றுகை போராட்டத்தை தமிழக காங்கிரஸ் சார்பில் நடத்த இந்த கூட்டத்தில் திட்டமிடப்பட்டுள்ளது.

    தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அதிகாரங்களை மீறுகின்ற வகையிலும், தமிழக அரசின் கொள்கைகளுக்கு விரோதமாக கருத்துகளை கூறி, பா.ஜ.க.வின் ஊதுகுழலாக அவர் செயல்பட்டு வருகிறார் என்றும் இந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

    அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக செயல்படுகிற தமிழக ஆளுநரின் இத்தகைய போக்கை இந்த கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ.க. மகளிரணி சார்பில் செல்பி வித் அண்ணா போட்டி நடத்தப்படுகிறது.
    • வெற்றி பெறும் மாணவர்கள் அண்ணாமலையுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம்.

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

    தமிழகத்தில் பா.ஜ.க.வை காலூன்ற வைப்பதற்கு பல்வேறு அதிரடி முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு அனைத்தும் தோல்வியிலேயே முடிந்து வருகின்றன.எட்டு ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடி வருகிற நிலையிலும், பொருளாதார பேரழிவை சந்தித்துக் கொண்டிருக்கிற சூழலிலும் பா.ஜ.க. மீது மக்கள் கடும் சினத்துடன் உள்ளனர்.இதனால், தமிழக மக்களிடம் பா.ஜ.க. செல்கிற போது பல்வேறு பிரச்சினைகள் எழுந்து சட்டம் ஒழுங்கு சீர்குலைவுக்கு வித்திடுகின்றன.

    திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ.க. மகளிரணி சார்பில் செல்பி வித் அண்ணா என்று போட்டி நடத்தப் படுவதாகவும், அதில் பங்கு பெற்று வெற்றி பெறும் மாணவர்கள் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம் என அழைக்கும் உறுப்பினர் சேர்க்கை முகாம் அந்தப் பகுதியிலுள்ள அரசு கல்லூரிகளில் நடத்தப்படும் என்று விளம்பரம் செய்யப்பட்டிருந்தது.

    இதனடிப்படையில் பா.ஜ.க.வினர் கல்லூரி வளாகத்தில் துண்டு பிரசுரங்களை விநியோகித்த போது, கல்லூரிப் பேராசிரியர்களும், மாணவிகளும் இங்கே பரிட்சை நடந்து கொண்டிருக்கும் போது இத்தகைய முயற்சிகளில் ஏன் ஈடுபடுகிறீர்கள் என்று வாக்குவாதம் செய்தனர்.

    பா.ஜ.க.வினரோடு கடுமையான மோதல் உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டது. இதுகுறித்து கல்லூரி முதல்வர், மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் காவல்துறையினருக்கு புகார் அளித்துள்ளார். பா.ஜ.க.வினரின் இத்தகைய மலிவான முயற்சிகளுக்கு கடும் எதிர்ப்பு தோன்றிய பிறகு, கல்லூரி வளாகத்திலிருந்து அவர்கள் வெளியேறியுள்ளனர்.

    கல்வி பயில வேண்டிய கல்லூரியில் பா.ஜ.க.வினர் அற்பத்தனமான முயற்சிகளில் ஈடுபடுவதை வன்மையாகக் கண்டிக்கிறேன். இத்தகைய முயற்சிகளை கல்லூரி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து தடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

    சமீபத்தில், மதுரை காமராஜர் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில், ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் மத்திய பா.ஜ.க. அமைச்சர் எல். முருகனை அழைத்தது பல்வேறு சர்ச்சைகளை எழுப்பியது. இதனால், தமிழக உயர்கல்வித்துறை அமைச்சராகவும், பல்கலைக் கழக இணை வேந்தராகவும் உள்ள க. பொன்முடி பட்டமளிப்பு விழாவையே புறக்கணித்தது அனைவரும் அறிந்த ஒன்றாகும்.

    தமிழக ஆளுநர் பல்கலைக்கழக வேந்தர் பொறுப்பை வைத்துக் கொண்டு, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று சர்ச்சைக்குரிய கருத்துகளைக் கூறி, ஒரு நாலாந்தர அரசியல்வாதி போல் நடந்து கொள்வதை யாரும் ஏற்றுக் கொள்ள முடியாது. ஏற்கனவே, புதிய கல்விக் கொள்கை என்ற போர்வையில் பா.ஜ.க. எடுத்த முயற்சிகளுக்கு, தமிழக மக்களின் ஒட்டு மொத்த எதிர்ப்பையும் வெளிப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

    பா.ஜ.க. எடுக்கும் அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்த நிலையில் கல்லூரி மாணவிகளிடம் செல்பி வித் அண்ணா என்று பரப்புரை மேற்கொள்வது மிகுந்த வெட்கக் கேடானது. கடும் கண்டனத்திற்குரியது.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    ×