என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வைகாசி திருவிழா"

    • வைகாசி விசாக திருவிழா 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    • இந்த திருவிழா ஜூன் 2-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா வருகிற 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த திருவிழா அடுத்த மாதம் 2-ந் தேதி வரை 10 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது.

    விழா நாட்களில் தினமும் அதிகாலை 5 மணி மற்றும் காலை 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பல்வேறு நிகழ்ச்சி நடக்கிறது. 9-ம் திருவிழாவான 1-ந் தேதி காலையில் தேரோட்டம் நடக்கிறது. அன்று காலை 8.30 மணிக்கு மேல் 9 மணிக்குள் தேரோட்ட நிகழ்ச்சி தொடங்குகிறது. 10-ம் திருவிழாவான 2-ந் தேதி காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் முக்கடல் சங்கமத்தில் பகவதி அம்மனுக்கு ஆராட்டு நிகழ்ச்சி நடைபெறும்.

    இந்த வைகாசி விசாக திருவிழாவுக்கான கால்நாட்டு நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. இதில் கோவில் மேல்சாந்திகள் பத்மநாபன், விட்டல், சீனிவாசன், நிதின் சங்கர், கண்ணன் மற்றும் கீழ் சாந்திகள் ராம் பிரகாஷ், ராமகிருஷ்ணன் ஆகியோர் கால்நாட்டு வைபவத்தை நடத்தினர்.

    இதேபோல் கன்னியாகுமரி கீழரத வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ள கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் தேரிலும், கன்னியம்பலம் மண்டபத்திலும் கால்நாட்டு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளர் ஆனந்த் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • ஜூன் 2-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.
    • 3-ந்தேதி பூக்குழி இறங்குதல் நடக்கிறது.

    சிவகங்கை அருகே நாட்டரசன்கோட்டையில் சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்திற்குட்பட்ட பிரசித்தி பெற்ற கண்ணுடைய நாயகி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி பெருந்திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்தாண்டிற்கான இந்த விழா வருகிற 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முன்னதாக 24-ந்தேதி மாலை அனுக்கை மற்றும் விக்னேஸ்வர பூஜை, சாஸ்து சாந்தியுடன் விழா தொடங்குகிறது. தொடர்ந்து மறுநாள் 25-ந்தேதி காலை 10 மணி முதல் 11.20 மணிக்குள் கொடியேற்றம் நிகழ்ச்சியும், மாலை 6.10 மணிக்கு காப்புக்கட்டுதல் நிகழ்ச்சி நடக்கிறது.

    இரவு வெள்ளி கேடகத்தில் அம்பாள் வீதி உலா நிகழ்ச்சி நடக்கிறது. விழாவையொட்டி தினந்தோறும் காலை 9 மணிக்கு வெள்ளி கேடகத்திலும், இரவு 7 மணிக்கு சிம்மம், காமதேனு, யானை, பூதம், வெள்ளி ரிஷபம், வெள்ளி குதிரை, அன்ன வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் அம்பாள் எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சி நடக்கிறது.

    வரும் 31-ந்தேதி காலை சயன அலங்காரத்தில் பல்லக்கில் எழுந்தருளும் நிகழ்ச்சியும், தங்க ரதத்தில் உள் பிரகாரத்தில் உலா வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது. தொடர்ந்து ஜூன் 1-ந்தேதி அம்பாளுக்கு காப்புக்கட்டுதல் நிகழ்ச்சியும், மறுநாள் காலையில் தேரில் எழுந்தருளல் நிகழ்ச்சியும், அதன் பின்னர் தேரோட்டம் நிகழ்ச்சியும் நடக்கிறது. 3-ந்தேதி பக்தர்கள் பால்குடம் எடுத்தல், பூக்குழி இறங்குதல் நிகழ்ச்சியும், 4-ந்தேதி உற்சவ சாந்தியும், மாலையில் வெள்ளி ஊஞ்சல் உற்சவமும் நடக்கிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தான பரம்பரை அறங்காவலர் ராணிமதுராந்தகி நாச்சியார் உத்தரவின் பேரில் தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் சரவணகணேசன், கவுரவ கண்காணிப்பாளர் மெ.ராம.முருகப்பன் ஆகியோர் செய்து வருகின்றனர்.

    • வைகாசி விசாக வசந்த திருவிழா 24-ந்தேதி தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது.
    • 1-ந்தேதி, 3-ந்தேதி கோவில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறுகிறது.

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் இணை ஆணையர் கார்த்திக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    முருகப்பெருமானின் ஜென்ம நட்சத்திர திருவிழாவான வைகாசி விசாகத் திருவிழா வருகிற 2-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.

    முன்னதாக வைகாசி விசாக வசந்த திருவிழா வருகிற 24-ந்தேதி தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது. திருவிழா நாட்களில் நாள்தோறும் பகலில் சுவாமி ஜெயந்தி நாதர் தங்கச்சப்பரத்தில் கோவில் வசந்த மண்டபத்தில் எழுந்தருள்கிறார். அங்கு வைத்து மாலையில் சுவாமி ஜெயந்திநாதருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனையாகி, கிரிவீதிவலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து கோவில் சேர்கிறார்.

    10-ம் நாளான வருகிற 2-ந்தேதி வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு கோவில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 3 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 10.30 மணிக்கு உச்சிகால அபிஷேகம் மற்றும் தீபாராதனைக்குப்பின் சுவாமி ஜெயந்திநாதர் கோவிலில் இருந்து தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி வசந்த மண்டபம் சேர்கிறார்.

    அங்கு மாலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடைபெறுகிறது. அதனைத்தொடர்ந்து வசந்த மண்டபத்தை சுவாமி 11 முறை வலம் வரும் வைபவமும், விழாவின் முக்கிய நிகழ்வான முனிக்குமாரர்களுக்கு சாப விமோசனம் அளிக்கும் வைபவமும் நடை பெறுகிறது.

    பின்னர் மகா தீபாராதனைக்குப் பின் தங்கச்சப்பரத்தில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி கிரிவீதி வலம் வந்து கோவில் சேர்கிறார்.

    இதேபோல வைகாசி விசாகத்திருவிழாவிற்கு முதல் நாளான வருகிற 1-ந்தேதி மற்றும் 3-ந்தேதி பக்தர்கள் வசதிக்காக கோவில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு தொடர்ந்து பூஜைகள் நடைபெறுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • இந்த மாதத்தில் புண்ணிய நதிகளில் நீராடினால் ஏழேழு ஜென்மங்களிலும் செய்த பாவங்கள் கூட நீங்கும்
    • இந்த மாதத்தில் வரும் முக்கிய விரத நாட்களை இங்கே தெரிந்து கொள்ளலாம்.

    தமிழ் மாதங்களில் இரண்டாவது மாதமான வைகாசி மாதம் வைகாசம் மாதம் என்றும், மாதவ மாதம் என்றும் போற்றப்படுகிறது. இந்த மாதத்தில் சூரிய பகவான், மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசியில் தனது பயணத்தை துவங்குவார்.

    இந்த மாதத்தில் கங்கை போன்ற புண்ணிய நதிகளில் நீராடினால் ஏழேழு ஜென்மங்களிலும் செய்த பாவங்கள் கூட நீங்கும் என சாஸ்திரங்கள் சொல்கின்றன. 2023 ம் ஆண்டில் வைகாசி மாதமானது மே 15 ம் தேதி துவங்கி, ஜூன் 15 ம் தேதி வரை நீடிக்கிறது.

    இந்த மாதத்தில் வரும் முக்கிய விரத நாட்களை இங்கே தெரிந்து கொள்ளலாம்.

    வைகாசி மாத விசேஷ, விரத நாட்கள் :

    வைகாசி 01 (மே 15) திங்கட்கிழமை - ஏகாதசி

    வைகாசி 03 (மே 17) புதன்கிழமை - பிரதோஷம்

    வைகாசி 05 (மே 19) வெள்ளிக்கிழமை - அமாவாசை

    வைகாசி 09 (மே 23) செவ்வாய்கிழமை - சதுர்த்தி

    வைகாசி 11 (மே 25) வியாழக்கிழமை - வளர்பிறை சஷ்டி

    வைகாசி 17 (மே 31) புதன்கிழமை - ஏகாதசி

    வைகாசி 18 (ஜூன் 01) வியாழக்கிழமை - பிரதோஷம்

    வைகாசி 19 (ஜூன் 02) வெள்ளிக்கிழமை - வைகாசி விசாகம்

    வைகாசி 20 (ஜூன் 03) சனிக்கிழமை - பெளர்ணமி

    வைகாசி 24 (ஜூன் 07) புதன்கிழமை - சங்கடஹர சதுர்த்தி

    வைகாசி 25 (ஜூன் 08) வியாழக்கிழமை - திருவோணம்

    வைகாசி 26 (ஜூன் 09) வெள்ளிக்கிழமை - தேய்பிறை சஷ்டி

    வைகாசி 31 (ஜூன் 14) புதன்கிழமை - ஏகாதசி

    வைகாசி 32 (ஜூன் 15) வியாழக்கிழமை - கிருத்திகை, பிரதோஷம்.

    • ஜூன் 1-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.
    • ஜூன் 2-ந்தேதி தெப்பத்திருவிழா நடக்கிறது.

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாக பெருந்திருவிழா வருகிற 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி அடுத்த மாதம் (ஜூன்) 2-ந்தேதி வரை தொடர்ந்து 10 நாட்கள் நடக்கிறது. விழாவையொட்டி வருகிற 22-ந்தேதி மாலை 5 மணிக்கு கோட்டார் இளங்கடை பட்டாரியர் சமுதாய ருத்ரபதி விநாயகர் செவ்விட்ட சாஸ்தா டிரஸ்ட் சார்பில் கொடிப்பட்டம் மரபுபடி விவேகானந்தபுரம் சந்திப்பில் இருந்து மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்து கோவிலில் சமர்ப்பிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 7 மணிக்கு கன்னியாகுமரியைச் சேர்ந்த கிறிஸ்தவ மீனவர்கள் கொடிமர கயிற்றை மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்து கோவிலில் ஒப்படைக்கிறார்கள்.

    அதைத்தொடர்ந்து முதல் நாள் விழாவான 24-ந்தேதி காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் திருக்கொடியேற்றம் நடக்கிறது. இரவு 8 மணிக்கு பக்தி இன்னிசை கச்சேரியும், 9 மணிக்கு அம்மன் பூப்பந்தல் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    விழா நாட்களில் தினமும் காலை 7 மணிக்கு பல்லக்கில் அம்மன் வீதி உலா வருதல், இரவு 7 மணிக்கு இன்னிசை கச்சேரி, 9 மணிக்கு பல்வேறு வாகனத்தில் அம்மன் வீதி உலா வருதல் ஆகியவை நடக்கிறது.

    விழாவின் 9-ம் நாளான அடுத்த மாதம்(ஜூன்)1-ந்தேதி காலை 8.30 மணிக்கு மேல் 9 மணிக்குள் திருத்தேர் வடம் தொட்டு இழுக்கும் தேரோட்டம் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, பால் வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் ஆகியோர் தேர்வடம் தொட்டு இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைக்கிறார்கள்.

    இதில் குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், விஜய்வசந்த் எம்.பி., தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ., நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுக்கிறார்கள். தேர் நிலைக்கு நின்றதும் பகல் 12 மணிக்கு அன்னதானம், கஞ்சிதர்மம், மாலை 6.30 மணிக்கு மண்டகப்படி, இரவு 9 மணிக்கு வெள்ளி கலைமான் வாகனத்தில் அம்மன் வீதிஉலா வருதல் நடக்கிறது.

    10-ம் நாள் விழாவில் காலை 9.30 மணிக்கு அம்மனுக்கு முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு நிகழ்ச்சி, மாலை 5 மணிக்கு மண்டகப்படி, இரவு 9 மணிக்கு தெப்பத்திருவிழா, 11 மணிக்கு முக்கடல் சங்கமத்தில் அம்மனுக்கு ஆராட்டு நிகழ்ச்சி ஆகியவை நடக்கிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட கோவில்களின் இணைஆணையர் கவிதா பிரியதர்ஷினி, கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளர் ஆனந்த் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    • வைகாசி மாதமானது மே 15-ம் தேதி துவங்கி, ஜூன் 15-ம் தேதி வரை நீடிக்கிறது.
    • வைகாசி மாதத்தில் நல்ல காரியங்களை செய்ய உகந்த நாட்களை பார்க்கலாம்.

    தமிழ் மாதங்களில் இரண்டாவது மாதமான வைகாசி மாதம் வைகாசம் மாதம் என்றும், மாதவ மாதம் என்றும் போற்றப்படுகிறது. 2023 ம் ஆண்டில் வைகாசி மாதமானது மே 15-ம் தேதி துவங்கி, ஜூன் 15-ம் தேதி வரை நீடிக்கிறது.

    வைகாசி 08 (மே 22) - திங்கட்கிழமை (வளர்பிறை)

    வைகாசி 10 (மே 24) - புதன்கிழமை (வளர்பிறை)

    வைகாசி 11 (மே 25) - வியாழக்கிழமை (வளர்பிறை)

    வைகாசி 18 (ஜூன் 01) - வியாழக்கிழமை (வளர்பிறை)

    வைகாசி 22 (ஜூன் 05) - திங்கட்கிழமை

    வைகாசி 24 (ஜூன் 07) - புதன்கிழமை

    வைகாசி 25 (ஜூன் 08) - வியாழக்கிழமை

    வைகாசி 26 (ஜூன் 09) - வெள்ளிக்கிழமை

    வாஸ்து மற்றும் பூமி பூஜை நாள், நேரம் :

    வைகாசி 21 (ஜூன் 04) ஞாயிற்றுக்கிழமை - காலை 09.58 முதல் 10.34 வரை

    ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional

    • 6-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.
    • 7-ந் தேதி தீர்த்தவாரி திருவிழா நடைபெறும்.

    சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இங்கு ஒவ்வொரு வருடமும் வைகாசி மாதம் அமாவாசைக்கு பின்னர் வரும் திங்கட்கிழமை திருவிழா கொடியேற்றம் நடந்து 17 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இதை முன்னிட்டு தினசரி திருவிழா விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு வைகாசி திருவிழா வருகிற நாளை மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    இந்த திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு நாளும் வெவ்வேறு வாகனத்தில் அம்மன் புறப்பாடு நடைபெறும். தினசரி நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    முக்கிய திருவிழாவாக வருகிற 30-ந் தேதி காலை பால்குடம், மாலை அக்னிசட்டி, இரவு பூப்பல்லக்கு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    வருகிற 31-ந் தேதி மாலை 5 மணிக்கு பூக்குழி இறங்குதல், ஜூன் 6-ந் தேதி தேரோட்டம், 7-ந் தேதி இரவு வைகை ஆற்றில் விடிய விடிய தீர்த்தவாரி திருவிழா நடைபெறும். விழாவில் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல், தேனி உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து அம்மனை தரிசித்து செல்வார்கள்.

    விழா ஏற்பாடுகளை செயல்அலுவலர் இளமதி, கோவில் பணியாளர்கள், உபயதாரர்கள் செய்து வருகின்றனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை சோழவந்தான் போலீசார், தூய்மைப்பணி ஏற்பாடு மற்றும் குடிநீர் வசதி ஏற்பாடுகளை சோழவந்தான் பேரூராட்சி நிர்வாகம் செய்து வருகின்றன. திருவிழா காலங்களில் பக்தர்கள் வசதிக்காக வைகை ஆற்றுக்கு செல்வதற்கு ஒரு பாதையும், வைகை ஆற்றில் இருந்து வெளியே வருவதற்கு ஒரு பாதையும் ஏற்பாடு செய்து தர வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • விழா தொடர்ந்து 10 நாட்கள் நடக்கிறது.
    • 29-ந்தேதி தீர்த்தவாரி நடைபெறுகிறது.

    நெல்லை சந்திப்பு கைலாசபுரத்தில் உள்ள கைலாசநாதர் -சவுந்தரவல்லி அம்பாள் கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி மாதம் திருவிழா நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான வைகாசி திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    கொடியேற்றத்தை முன்னிட்டு நேற்று அதிகாலையில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து கோவில் முன்பு உள்ள கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது. அப்போது அங்கு கூடியிருந்த திரளான பக்தர்கள், பக்தி கோஷங்கள் எழுப்பி சுவாமியை வழிபட்டனர்.

    விழா தொடர்ந்து 10 நாட்கள் நடக்கிறது. விழா நாட்களில் தினமும் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் வீதி உலா நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    விழாவில் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 28-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. மறுநாள் தீர்த்தவாரியும் நடைபெறுகிறது.

    • மஞ்சள் பொடி உள்ளிட்டவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது.
    • கஞ்சி வார்த்தல், சக்தி கரகம் எடுத்தல், சாமி வீதி உலா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.

    திருவாரூர்:

    திருவாரூர் கூத்தாநல்லூர் அருகே உள்ள, மணக்கரையில் மகாசக்தி மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் வைகாசி திருவிழா நடந்தது.

    இதில், அம்மனுக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், பன்னீர், இளநீர், மஞ்சள் பொடி உள்ளிட்டவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    முன்னதாக, பக்தர்கள் பால்குடம் காவடிகள் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    தொடர்ந்து, கஞ்சி வார்த்தல், சக்தி கரகம் எடுத்தல், சாமி வீதி உலா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவையொட்டி மாரியம்மன் சந்தனக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • ஜூன் 5-ந்தேதி தேரோட்டம்
    • பகல் 12 மணிக்கு வடக்கு வாசலில் அன்னதர்மம் நடைபெறுகிறது

    கன்னியாகுமரி :

    சாமிதோப்பில் அய்யா வைகுண்டர் சுவாமி தலைமைப்பதி அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் தை, ஆவணி மற்றும் வைகாசி மாதங்களில் 11 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு வைகாசி திருவிழா வருகிற 26-ந்தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவானது தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறுகிறது.

    முதல் நாள் கொடியேற்ற நிகழ்ச்சியில் அதிகாலை 4 மணிக்கு முத்திரி பதமிடுதலும், 5 மணிக்கு சிறப்பு பணிவிடையும், 6 மணிக்கு திருக்கொடி ஏற்றும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. திருக்கொடியை குரு பாலஜனாதிபதி ஏற்றி வைக்கிறார். குருமார்கள் பால லோகாதிபதி, ராஜவேல், பையன் கிருஷ்ணராஜ், பால் பையன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

    பள்ளியறை பணிவிடை களை குருமார்கள் ஜனா.யுகேந்த், கிருஷ்ண நாமமணி ஆனந்த், ஜனா.வைகுந்த், நேம்ரிஷ் ஆகியோர் செய்கின்றனர். பகல் 12 மணிக்கு வடக்கு வாசலில் அன்னதர்மம் நடைபெறுகிறது. அன்று இரவு 7 மணிக்கு அய்யா தொட்டில் வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    2-ம் நாள் இரவு அய்யா வைகுண்டர் சுவாமி பரங்கி நாற்காலியில் வீதி வலம் வரும் நிகழ்ச்சியும், 3-ம் நாள் விழாவில் அய்யா அன்ன வாகனத்தில் வெள்ளை சாத்தி வீதி வலம் வரும் நிகழ்ச்சியும், 4-ம் நாள் பூஞ்சப்பர வாகனத்தில் அய்யா வலம் வரும் நிகழ்ச்சியும், 5-ம் நாள் பச்சை சாத்தி சப்பர வாகனத்தில் பவனியும், 6-ம் நாள் கற்பக வாகன பவனியும், 7-ம் நாள் சிவப்பு சாத்தி கருட வாகனத்தில் வாகன பவனியும் நடைபெறுகிறது.

    வருகிற ஜூன் மாதம் 2-ந்தேதி 8-ம் திருவிழா நடைபெறுகிறது. அன்று மாலை 5 மணிக்கு அய்யா வைகுண்டர் சுவாமி வெள்ளை குதிரை வாகனத்தில் எழுந்தருளி முத்திரி கிணற்றங்கரையில் கலி வேட்டையாடும் நிகழ்ச்சியும், தொடர்ந்து சுற்றியுள்ள பல கிராமங்களுக்கு குதிரை வாகனத்தில் சென்று மக்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    தொடர்ந்து இரவு 11 மணிக்கு வடக்கு வாசலில் அய்யாவின் தவக்கோல காட்சியும், தொடர்ந்து அன்ன தானமும் நடைபெறு கிறது. 9-ம் திருவிழாவில் அனுமன் வாகனத்திலும், 10-ம் நாள் இந்திர வாகனத்திலும் அய்யா பவனி வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    அடுத்த மாதம் 5-ந்தேதி 11-ம் திருவிழா நடைபெறுகிறது. அன்று நண்பகல் 12 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. இரவு ரிஷப வாகனத்தில் அய்யா வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. திருவிழா நாட்களில் தினமும் காலை, மாலை பணிவிடையும், மதியம் உச்சிப்படிப்பும், இரவு வாகன பவனியும், அன்னதானமும் கலை நிகழ்ச்சிகளும் நடை பெறுகிறது.

    திருவிழா நாட்களில் அய்யா வைகுண்டர் அறநெறி பரிபாலன அறக்கட்டளை சார்பில் தலைமைப்பதி வளாகத்தில் காலை, மதியம், இரவு 3 வேலைகளிலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

    • இன்று கொடிப்பட்டம் மரபுப்படி வாகனங்களில் ஊர்வலமாக எடுத்து வரப்படுகிறது.
    • 1-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாக பெருந்திருவிழா நாளை (புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணிக்கு நாகர்கோவில், கோட்டார் இளங்கடை பட்டாரியர் சமுதாய ருத்ரபதி விநாயகர் செவ்விட்ட சாஸ்தா டிரஸ்ட் சார்பில் கொடிப்பட்டம் மரபுப்படி வாகனங்களில் ஊர்வலமாக விவேகானந்தபுரத்துக்கு எடுத்து வரப்படுகிறது. பின்னர் விவேகானந்தபுரம் சந்திப்பில் இருந்து மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்து கோவிலில் சமர்ப்பிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

    அதைத்தொடர்ந்து இரவு 7 மணிக்கு மத ஒற்றுமைக்கு எடுத்துக் காட்டான நிகழ்ச்சியாக கன்னியாகுமரியை சேர்ந்த கிறிஸ்தவ மீனவர்கள் கொடிமர கயிறை மேள தாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்து கோவிலில் ஒப்படைக்கிறார்கள். நாளை கொடியேற்றத்துடன் தொடங்கும் விழா அடுத்த மாதம் (ஜூன்) 2-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. 9-ம் நாள் திருவிழாவான ஜூன் மாதம் 1-ந் தேதி காலையில் தேரோட்டம் நடக்கிறது. 2-ந் தேதி காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் அம்மனுக்கு முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    • பூக்குழி இறங்குதல் மற்றும் நேர்த்திக்கடன் செலுத்துபவர்கள் காப்பு கட்டினார்கள்.
    • விழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு ஒவ்வொரு வருடமும் வைகாசி மாதம் அமாவாசைக்கு பின்னர் வரும் திங்கட்கிழமை திருவிழா கொடியேற்றப்பட்டு 17 நாட்கள் நடைபெறும். இதையொட்டி தினசரி திருவிழா விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு நேற்று இரவு அர்ச்சகர் சண்முகவேல் திருவிழா கொடியேற்றம் பொருட்களுடன் மேளதாளத்துடன் நான்குரதவீதி வலம் வந்து கோவில் வளாகத்தில் உள்ள கொடிக்கம்பத்தில் கொடியேற்றும் விழா, சிறப்பு பூஜை நடைபெற்றது.

    திருவிழா கொடியேற்ற உபயதார் சிங்கம் என்ற மந்தையன் சேர்வை குடும்பத்தார் அனைவருக்கும் பிரசாதம் வழங்கினார்கள். விழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். கோவில் செயல்அலுவலர் இளமதி, தக்கார் சங்கரேஸ்வரி, கோவில் பணியாளர்கள் பூபதி, கவிதா, வசந்த், பெருமாள் ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    சோழவந்தான் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவபாலன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடு செய்திருந்தனர். சுகாதாரப்பணி, குடிநீர்வசதி, கூடுதல் தெருவிளக்கு ஏற்பாடுகள் சோழவந்தான் பேரூராட்சி செய்திருந்தனர். பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பால்குடம், அக்னிச்சட்டி, பூக்குழி இறங்குதல் மற்றும் நேர்த்திக்கடன் செலுத்துபவர்கள் காப்பு கட்டினார்கள்.

    ×