என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிஜிபி சைலேந்திரபாபு"

    • தேவர் குருபூஜை விழாவையொட்டி ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    • சென்னை காவல்துறை தலைமை அலுவலகத்தில் இருந்து நேரடியாக கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    கமுதி:

    பசும்பொனில் முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழா நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. நாளை (30-ந் தேதி) குரு பூஜையை முன்னிட்டு தேவர் நினைவிடத்தில் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர், பொதுமக்கள் அஞ்சலி செலுத்த உள்ளனர்.

    தலைவர்கள் வருகையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குருபூஜை விழாவிற்கு வாகனங்களில் வருவோர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.

    மாவட்டத்தில் முக்கிய சாலைகளில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் பசும்பொன்னில் செய்யப்பட்டு உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தேவர் குருபூஜை விழாவையொட்டி ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பசும்பொன் கிராமத்தில் டிரோன்கள் மூலம் நவீன தொழில்நுட்பத்தில் துல்லியமாக முகத்தை காட்டும் எச்.டி. கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படும்.

    சென்னை காவல்துறை தலைமை அலுவலகத்தில் இருந்து நேரடியாக கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தென் மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையில் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பொதுமக்கள் அமைதியாக வந்து செல்ல அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின்போது தென் மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் ராமநாதபுரம் டி.ஐ.ஜி. மயில்வாகனன், எஸ்.பி. தங்கத்துரை மற்றும் உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • பசும்பொன்னில் கடந்த 30-ந்தேதி தேவர் ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
    • பாதுகாப்பு பணியில் நாட்டிற்கே முன்னுதாரணமாக இருந்துள்ளதாக போலீசாருக்கு டி.ஜி.பி. சைலேந்திரபாபு பாராட்டு தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் கடந்த 30-ந்தேதி தேவர் ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. 10 ஆயிரம் போலீசார் அங்கு பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர்.

    சிறு மோதல் சம்பவம் கூட நடந்திராத வண்ணம் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டிருந்ததாகவும், இந்த சாதனையின் மூலம், தமிழக காவல்துறைக்கு பெருமை சேர்த்துள்ளீர்கள் என்றும், பாதுகாப்பு பணியில் நாட்டிற்கே முன்னுதாரணமாக இருந்துள்ளதாகவும், போலீசாருக்கு டி.ஜி.பி. சைலேந்திரபாபு பாராட்டு தெரிவித்துள்ளார்.

    அவர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை ஒன்றில் இந்த பாராட்டை தெரிவித்துள்ளார்.

    • ஒவ்வொரு ஆண்டும் காவல் துறை பாதுகாப்பு உபகரணங்கள் அனைத்தும் எப்படி உள்ளன என்பது பற்றி நுணக்கமாக ஆய்வு செய்து வருகிறோம்.
    • நவீன தரமான பாதுகாப்பு உபகரணங்கள்தான் நம்மிடம் உள்ளன. 2 மடங்கு அதிகமாக அளவுக்கு அதிகமானவே பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளன.

    சென்னை:

    சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள அரங்கத்தில் "சைபர் பாதுகாப்பு சிக்கல்கள் மற்றும் போக்குகள்" என்ற தலைப்பில் ஒருநாள் பயிலரங்கம் நடைபெற்றது. 

    இந்த நிகழ்ச்சியில் போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு பங்கேற்று சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:- 

    சைபர் கிரைம் மோசடிக்கு ஒரு எல்லை கிடையாது. எந்த மூலையில் இருந்தும் பணத்தை எடுத்து மோசடி செய்யலாம். எனவே, பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருப்பது முக்கியம். சைபர் கிரைம் மோசடியில், படித்தவர்கள் கூட கோடிக்கணக்கான பணத்தை இழந்துள்ளனர். எந்த ஒரு வங்கியும் ஓ.டி.பி. எண்ணை கேட்பது கிடையாது. எனவே ஓ.டி.பி. எண்ணை யாராவது கேட்டால் பகிரக்கூடாது இதன் மூலம் தான் குற்றங்கள் நிகழ்கிறது.

    எனவே ஆசைவார்த்தை கூறுபவர்களின் உண்மைத்தன்மை அறிந்து நாம் விழிப்போடு இருக்க வேண்டும். தமிழகத்தில் சைபர் கிரைம் குற்றம் தொடர்பாக 46 காவல் நிலையம் உள்ளது. பொதுமக்கள் சைபர் கிரைம் குற்றம் தொடர்பாக இந்த காவல் நிலையங்களில் புகார் கொடுக்கலாம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் டி.ஜி.பி. சைலேந்திரபாபு அளித்த பேட்டி வருமாறு:- 

    சென்னை பல்கலைக்கழகத்தில் சைபர் பாதுகாப்பு குறித்து மாணவர்களுக்கு பயிலரங்கம் நடைபெற்றது. தமிழகத்தில் உள்ள எல்லா மக்களிடம் செல்போன் உள்ளது. இன்டர்நெட் இணைக்கப்பட்டுள்ளது.

    எனவே உலகத்தில் உள்ள எந்த நபரும் நம் வங்கியில் உள்ள பணத்தை திருடலாம். வெளிநாட்டில் போதைப்பொருள் ஏற்றுமதி செய்தது தொடர்பாக உங்களது வங்கிக்கு பணம் வந்துள்ளது என்றோ உங்களுடைய ஆதார் எண் கொடுங்கள் என்றோ உங்கள் வங்கியில் உள்ள பணத்தை மோசடி செய்யலாம்.

    தற்போது, மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் கார்டை இணைக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது. உங்களது மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் கார்டு இணைக்கப்படவில்லை. எனவே உங்களது மின்சாரம் துண்டிக்கப்படும் என்று கூறி நாங்கள் அனுப்புகிற லிங்கில் பத்து ரூபாய் செலுத்துங்கள். உங்களது மின் கட்டணம் துண்டிக்கப்படாது என்று கூறுவார்கள். மின் இணைப்பை மீண்டும் பெற நாம் அவர்கள் கொடுத்த லிங்கிற்கு பத்து ரூபாய் அனுப்பினால் நமது வங்கியில் உள்ள மொத்த பணத்தையும் அவர்கள் எடுத்து விடுவார்கள்.

    அதுபோல் உயர் கலெக்டர், டி.ஜி.பி. பேசுவதாக கூறி மோசடி நடைபெறுகிறது. நம்மை ஏமாற்றுபவர்கள் வெளிநாட்டில் இருக்கலாம். சைபர் குற்றங்களில் ஏமாற்றப்பட்டால் 1930 என்ற எண்ணிற்கு புகார் கொடுக்கலாம்.

    பிரதமர் வருகையின்போது பாதுகாப்பில் குளறுபடி நடந்ததாக எந்தவிதமான தகவலும் இல்லை. நல்ல முறையில் பாதுகாப்பு அளிக்கப்பட்டது.

    ஒவ்வொரு ஆண்டும் காவல் துறை பாதுகாப்பு உபகரணங்கள் அனைத்தும் எப்படி உள்ளன என்பது பற்றி நுணக்கமாக ஆய்வு செய்து வருகிறோம்.

    செயல்படாத உபகரணங்கள் இருந்தால் மாற்று உபகரணங்கள் வாங்கும் பழக்கம் 100 ஆண்டுகளுக்கும் மேலாகவே இருந்து வருகிறது. அதை தவறாமல் செய்து வருகிறோம். தமிழகத்தில்தான் அதிக எண்ணிக்கையிலான தரமான உபகரணங்கள் உள்ளன.

    தற்போது கூட நமது காவல்துறையைச் சேர்ந்த 2 குழுவினர் மோப்ப நாய்களுடன் அந்தமான் சென்றுள்ளனர். அங்கிருந்து விமானத்தில் திரும்ப உள்ளனர். இதே போன்று கேரளாவுக்கும் சென்றுள்ளனர்.

    இப்படி வெளி மாநிலங்களுக்கும் பாதுகாப்பு உபகரணங்களை நாம் வழங்கி வருகிறோம். எனவே அதில் எந்த குளறுபடிகளுமே இல்லை. பழையதை மாற்றி விட்டு புதியன வாங்குவது வழக்கமாக மேற்கொள்ளப்படுவது தான். நம்மிடம் இருப்பது பழைய டெக்னாலஜி எல்லாம் கிடையாது. வெளி மாநிலத்தவர்களும் பாதுகாப்பு உபகரணங்களை கேட்டு வாங்குகிறார்கள். பழைய டெக்னாலஜி என்றால் அவர்கள் வாங்க மாட்டார்கள்.

    நவீன தரமான பாதுகாப்பு உபகரணங்கள்தான் நம்மிடம் உள்ளன. 2 மடங்கு அதிகமாக அளவுக்கு அதிகமானவே பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளன. அதில் எதை பயன்படுத்த வேண்டும், எதனை களைய வேண்டும் என்கிற விதி உள்ளது. அதைத்தான் பயன்படுத்தி வருகிறோம்.

    பிரதமர் பாதுகாப்பு தொடர்பாக எஸ்.பி.ஜி.யிடமிருந்து எந்த தகவலும் இதுவரை வரவில்லை.

    என்.ஐ.ஏ.விடம் ஏற்கனவே 15 வழக்குகள் உள்ளன. அது தொடர்பான உதவிகள், தகவல்கள் பரிமாற்றங்களை மேற்கொள்ளவே என்.ஐ.ஏ. ஆலோசனை நடத்தப்பட்டது. அவர்கள் தரப்பிலும், நமது காவல்துறை தரப்பிலும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

    நமது ஊரில் உள்ள அப்பாவி இளைஞர்களின் செல்போனை பயன்படுத்தியும் வெளிநாட்டினர் சைபர் குற்றங்களில் ஈடுபடுவார்கள். எனவே இளைஞர்கள் உஷாராக இருக்க வேண்டும்.

    வட மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு வந்து வேலை செய்யும்போது அதிக குற்றச்செயலில் ஈடுபடுபவர்கள் தொடர்பான கேள்விக்கு வட மாநிலத்தவர் சராசரியான குற்றச்செயலில் ஈடுபடுகிறார்கள். அவர்கள் மீது புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

    • கார்த்திகை தீபத் திருவிழா பாதுகாப்பு ஏற்பாடு பணிகள் குறித்து டி.ஜி.பி. சைலேந்திரபாபு ஆய்வு செய்தார்.
    • அதிகாலையில் உடற்பயிற்சி மேற்கொள்வதற்காக டி.ஜி.பி. சைலேந்திரபாபு கிரிவலப்பாதையில் ஓடினார்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழா பாதுகாப்பு ஏற்பாடு பணிகள் குறித்து நேற்று 2-வது நாளாக டி.ஜி.பி. சைலேந்திரபாபு ஆய்வு செய்தார்.

    முன்னதாக அதிகாலையில் உடற்பயிற்சி மேற்கொள்வதற்காக அவர் கிரிவலப்பாதையில் ஓடினார். சாதாரணமாக பக்தர்கள் நடந்து சென்றால் கிரிவலப்பாதையை சுற்றிமுடிக்க குறைந்தது 3 மணிநேரம் ஆகும். ஆனால் 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையை டி.ஜி.பி. சைலேந்திரபாபு ஒரு மணி நேரம் 52 நிமிடத்தில் ஓடி முடித்து உள்ளார்.

    இந்த தகவலை அவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். மேலும் அதில் காவல்துறையில் இன்னும் வேகமாக ஓடுபவர்கள் உள்ளனர் என்றும் பதிவிட்டு இருந்தார்.

    • டி.ஜி.பி.சைலேந்திரபாபு நாளை மறுநாள் 10-ந் தேதி (சனிக்கிழமை) கோவைக்கு வருகிறார்.
    • கோவைக்கு வரும் அவர், கார் குண்டு வெடிப்புக்கு பிறகு கோவையில் தற்போது உள்ள நிலைமை குறித்து ஆலோசனை மேற்கொள்கிறார்.

    கோவை:

    கோவையில் கடந்த அக்டோபர் 23-ந்தேதி கார் குண்டு வெடிப்பு நடந்தது.

    இந்த சம்பவம் குறித்து அறிந்ததும் தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபு உடனடியாக கோவைக்கு விரைந்து வந்தார். சம்பவம் நடந்த இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த அவர், இதில் தொடர்புடையவர்களை விரைந்து பிடிக்குமாறும், விசாரணையை தீவிரப்படுத்தவும் உத்தரவிட்டார்.

    அதனை தொடர்ந்து போலீசார் துரித விசாரணை நடத்தி, இந்த வழக்கில் தொடர்புடையதாக 6 பேரை கைது செய்தனர். மேலும் வெடி மருந்துகள் உள்பட பல்வேறு பொருட்களையும் கைப்பற்றினர்.

    மேலும் அசம்பவாவிதங்களை தவிர்க்கும் விதமாக போலீசார் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து போலீசாருக்கு அறிவுரைகளையும் டி.ஜிபி. வழங்கினார்.

    இதற்கிடையே இந்த வழக்கு என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்பட்டது. என்.ஐ.ஏ. அதிகாரிகளும் இந்த வழக்கு சம்பந்தமாக டி.ஜி.பி. சைலேந்திரபாபுவை நேரில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர்.

    இந்த நிலையில் டி.ஜி.பி.சைலேந்திரபாபு நாளை மறுநாள் 10-ந் தேதி (சனிக்கிழமை) கோவைக்கு வருகிறார். கோவைக்கு வரும் அவர், கார் குண்டு வெடிப்புக்கு பிறகு கோவையில் தற்போது உள்ள நிலைமை குறித்து ஆலோசனை மேற்கொள்கிறார்.

    மேலும் இதுபோன்ற சம்பவங்களை தடுப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் புதிதாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைள் குறித்தும் ஆலோசிக்க உள்ளதாகவும் தெரிகிறது.

    மேலும் கோவையில் சில இளைஞர்கள் தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பதை கண்டுபிடித்த போலீசார் அவர்களை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். தற்போது அவர்களை நல்வழிப்படுத்துவதற்கான நடவடிக்கைளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொள்வார் என போலீசார் தெரிவித்தனர்.

    • போலீஸ் நிலையத்தில் பராமரிக்கப்படும் ஆவணங்களையும் டி.ஜி.பி. சைலேந்திரபாபு ஆய்வு செய்தார்.
    • போலீஸ் நிலையத்தில் பதிவேடுகளை முறையாக பராமரித்த எழுத்தர் தமிழ்ச்செல்வியை டி.ஜி.பி. சைலேந்திரபாபு பாராட்டி வெகுமதி அளித்தார்.

    வண்டலூர்:

    வண்டலூர் அருகே உள்ள ஓட்டேரி போலீஸ் நிலையத்துக்கு நேற்று இரவு 8 மணியளவில் டி.ஜி.பி. சைலேந்திரபாபு திடீரென வந்தார். அவர் அங்கு பணியில் இருந்த போலீசாரிடம் வழக்குகள் மற்றும் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் போலீஸ் நிலையத்தில் பராமரிக்கப்படும் ஆவணங்களையும் டி.ஜி.பி. சைலேந்திரபாபு ஆய்வு செய்தார்.

    அப்போது இன்ஸ்பெக்டர் வெங்கடாசலத்திடம் இப்பகுதியில் நடைபெறும் குற்றங்கள் குறித்தும் அதன் பின்னணி நபர்கள் மீது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் குற்றங்களை தடுப்பதற்கு என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பது குறித்தும் கேட்டறிந்தார்.

    இந்த ஆய்வின்போது போலீஸ் நிலையத்தில் பதிவேடுகளை முறையாக பராமரித்த எழுத்தர் தமிழ்ச்செல்வியை டி.ஜி.பி. சைலேந்திரபாபு பாராட்டி வெகுமதி அளித்தார். டி.ஜி.பி. சைலேந்திரபாபுவின் இந்த இரவு நேர அதிரடி ஆய்வால் ஓட்டேரி போலீஸ் நிலையம் பரபரப்பாக காணப்பட்டது.

    • குட்கா கடத்தலில் ஈடுபடுத்தப்பட்ட 769 மோட்டார்சைக்கிள்களும், 679 கார் உள்ளிட்ட 4 சக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
    • கஞ்சா வேட்டை 3.0 என்ற பெயரில் மாநிலம் முழுவதும் கஞ்சா வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் குட்கா, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை தடுக்க டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவின் பேரில் அனைத்து மாவட்ட போலீசாரும் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதன்படி கடந்த 1 ஆண்டில் ரூ.71 கோடியே 58 லட்சத்து 97 ஆயிரத்து 800 மதிப்பிலான குட்கா போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு மே 1-ந்தேதி முதல் கடந்த 9-ந்தேதி வரையில் 17 மாதங்களில் போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில் 53,235 குட்கா வியாபாரிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்களிடமிருந்து 7 லட்சத்து 95 ஆயிரத்து 442 கிலோ மதிப்பிலான குட்கா கைப்பற்றப்பட்டுள்ளது.

    குட்கா கடத்தலில் ஈடுபடுத்தப்பட்ட 769 மோட்டார்சைக்கிள்களும், 679 கார் உள்ளிட்ட 4 சக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 52 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. குட்கா விற்பனை தொடர்பாக 13,534 வழக்குகள் போடப்பட்டுள்ளன.

    இதே போன்று 1½ ஆண்டில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 18,569 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து ரூ.40 கோடியே 47 லட்சத்து 18 ஆயிரத்து 253 மதிப்பிலான 35 ஆயிரத்து 496 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கஞ்சா வியாபாரிகளின் 4023 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

    1648 இரு சக்கர வாகனங்களும், 239 நான்கு சக்கர வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. 564 கஞ்சா வியாபாரிகள் மீது குண்டர் சட்டமும் பாய்ந்து உள்ளது.

    இதற்கிடையே கஞ்சா வேட்டை 3.0 என்ற பெயரில் மாநிலம் முழுவதும் கஞ்சா வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 12-ந்தேதி தொடங்கிய இந்த வேட்டையில் 403 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இப்படி போலீஸ் நடவடிக்கை தீவிரமாக இருந்த போதிலும் கஞ்சா, குட்கா கடத்தல் ஆசாமிகள், கடல் வழியாகவும், பஸ், ரெயில் வழியாகவும் கடத்தல் சம்பவத்தை தொடர்ந்து அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

    • போதை பொருட்களை ஒழிக்க தமிழக காவல் துறை சார்பில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
    • கஞ்சா வேட்டை 3 பகுதிகளாக இதுவரை நடத்தப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படை வளாகத்தில் காவலர்களுக்கான பல்பொருள் அங்காடியில் 'லிப்ட்' மற்றும் தொடுதிரை வசதி செய்யப்பட்டுள்ளது.

    இதனை டி.ஜி.பி. சைலேந்திரபாபு, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    பின்னர் சைலேந்திரபாபு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    போதை பொருட்களை ஒழிக்க தமிழக காவல் துறை சார்பில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    கஞ்சா வேட்டை 3 பகுதிகளாக இதுவரை நடத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக குற்றவாளிகள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். வெளிநாட்டினரும் கைதாகி உள்ளனர். மீண்டும் ஒரு சிலர் வந்திருக்கலாம் என்கிற செய்தி வந்துள்ளது. அது தொடர்பாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது.

    அதுபோன்று வெளிநாட்டில் இருந்து போதை பொருள் கடத்தல் குற்றவாளிகள் தமிழகத்துக்கு வந்திருப்பது தெரியவந்தால் அவர்களை உடனடியாக கைது செய்வோம். சந்தேக நபர்கள் அனைவரையும் கண்காணித்து வருகிறோம்.

    இது தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு பிரிவினர் போதை பொருள் கடத்தல் குற்றவாளிகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். தீவிரவாத தடுப்பு பிரிவு தமிழகத்தில் அமைப்பது தொடர்பா காலப் போக்கில் உரிய தகவல் தெரிவிக்கப்படும்.

    பெண் காவலர் விவகாரத்தில் சம்பவம் நடந்த உடனேயே உரிய விசாரணை நடத்தி உறுதி செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சம்பவம் நடந்த மறுநிமிடமே வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    சம்பவம் நடந்த அன்றே வழக்கு போடப்பட்டுள்ளது. விசாரணை அடிப்படையில் அதன்பின்னர் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இது போன்ற சம்பவங்களில் சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. பெண் காவலர்கள் மீது தாக்குதல் என்றால் சட்டத்தில் சொல்லப்பட்டுள்ள அடிப்படையில் யாராக இருந்தாலும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    காவலர்கள் சில நேரங்களில் கடுமையான பணிகளை மேற்கொள்ளும் போது, ஆயுதம் ஏந்திய குற்றவாளிகளை பிடிக்க முற்படும்போதும் சில நேரங்களில் காவலர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் கூட பூமிநாதன் என்கிற காவலர் படுகொலை செய்யப்பட்டார். காவல் துறை பணி ரிஸ்க் ஆனதுதான்.

    இதுபோன்ற வழக்குகளில் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வாங்கி கொடுப்பதுதான் தடுப்பு நடவடிக்கையாக இருக்க முடியும். அதையும் செய்து வருகிறோம்.

    கஞ்சா 4.0 வேட்டை குறித்து விரைவில் தெரிவிக்கப்படும்.

    பணி காலத்தில் உயிரிழந்த காவலர்கள் குடும்பத்தினருக்கு பணி வழங்கப்படாமல் இருந்து வந்த நிலையில் இந்த ஆண்டு 1,600 பேருக்கு பணி வழங்கப்பட உள்ளது.

    கடந்த ஆண்டு காவலர்களுக்கு வாரத்திற்கு ஒருநாள் விடுமுறை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த ஆண்டு முதல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் சிறப்பு உதவியாளர்களுக்கு வாரத்திற்கு ஒருநாள் விடுமுறை வழங்கப்பட உள்ளது. குறைந்த பட்சம் 15 நாட்களுக்கு ஒரு முறையாவது அவர்கள் விடுமுறை எடுக்க அனுமதி வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    பெண் காவலர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை 'டுவிட்' போட்ட பிறகுதான் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறதே? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

    இதற்கு அவர் மறுப்பு தெரிவித்தார். புகார் தெரிவித்த உடனேயே வழக்கு போடப்பட்டுள்ளது எனவும் டி.ஜி.பி. சைலேந்திரபாபு தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • காவல் நிலைய பதிவேடுகளையும், குற்ற நிகழ்வுகள் குறித்தும் ஆய்வு செய்த சைலேந்திராபு வழக்குகளில் புலன் விசாரணை நிலையை பற்றி கேட்டறிந்தார்.
    • மனு கொடுக்க வரும் பொதுமக்களிடம் கனிவோடும், அன்போடும் நடந்துகொள்ள வேண்டும் என்று காவல் நிலைய அதிகாரிகளுக்கு டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டார்.

    சென்னை:

    தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு சென்னை காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட நொளம்பூர் போலீஸ் நிலையத்துக்கு இன்று காலை திடீரென சென்றார். பின்னர் போலீஸ் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். 

    காவல் நிலைய பதிவேடுகளையும், குற்ற நிகழ்வுகள் குறித்தும் ஆய்வு செய்த சைலேந்திராபு வழக்குகளில் புலன் விசாரணை நிலையை பற்றியும் கேட்டறிந்தார்.

    குற்றச் சம்பவங்கள், சாலை விபத்துக்கள் நடக்காமல் தடுக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தினார். 

    மனு கொடுக்க வரும் பொதுமக்களிடம் கனிவோடும், அன்போடும் நடந்துகொள்ள வேண்டும் என்றும், அவர்களின் குறைகளை உடனுக்குடன் களையவும் காவல் நிலைய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    காவல் நிலைய கோப்புகளை சிறப்பாக பராமரித்ததற்காக காவல் நிலைய துணை எழுத்தர் பெண் காவலர் லலிதாவிற்கு ரூ. 5 ஆயிரம் பண வெகுமதி வழங்கி பாராட்டினார்.

    காவலர்களுக்கு முறையாக வாராந்திர ஓய்வு வழங்கப்படுகிறதா? என்பதை கேட்டறிந்து காவலர்களுடன் குழு புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.

    • போலீஸ் நடவடிக்கை தீவிரமானதை தொடர்ந்து ரவுடிகள் பலர் வெளி மாநிலங்களுக்கு தப்பி ஓடி விட்டனர்.
    • வெளி மாநிலங்களில் பதுங்கி உள்ள ரவுடிகளை கண்டுபிடித்து கைது செய்ய டி.ஜி.பி. சைலேந்திரபாபு அறிவுறுத்தி உள்ளார்.

    சென்னை:

    தமிழகத்தில் ரவுடிகளை ஒழிக்க டி.ஜி.பி. சைலேந்திர பாபு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

    சட்டம்-ஒழுங்கை காக்க காவல்துறையினர் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தி இருப்பதை தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் ரவுடிகளுக்கு எதிரான போலீஸ் நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது. இதன்படி அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் மண்டல ஐ.ஜி.க்கள் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    போலீஸ் நடவடிக்கை தீவிரமானதை தொடர்ந்து ரவுடிகள் பலர் வெளி மாநிலங்களுக்கு தப்பி ஓடி விட்டனர்.

    இவர்களில் சிலர் அங்கிருந்தபடியே தனது கூட்டாளிகளுடன் போனில் தொடர்பு கொண்டு குற்றச் செயல்களுக்கு தூண்டுதலாக இருப்பதும் தெரிய வந்துள்ளது.

    இதையடுத்து வெளி மாநிலங்களில் பதுங்கி உள்ள ரவுடிகளை கண்டுபிடித்து கைது செய்ய டி.ஜி.பி. சைலேந்திரபாபு அறிவுறுத்தி உள்ளார். இது தொடர்பாக மாவட்ட சூப்பிரண்டுகளுக்கு உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

    வெளி மாநில ரவுடிகளின் போன் அழைப்புகளை வைத்து அவர்களை பிடித்து சிறையில் தள்ள உத்தரவிடப்பட்டு உள்ளது. இதை தொடர்ந்து ரவுடிகள் வேட்டையில் போலீஸ் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

    • நாற்று நடுதல், அறுவடை போன்ற முக்கிய விவசாயப் பணிகளை உரிய நேரத்தில் கவனிக்க இயலாமல் போவதோடு, தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • விவசாயப் பணிகளுக்கு இடையூறு ஏற்படா வண்ணம் மோட்டார் வாகனச் சட்டத்தை அமல்படுத்த அறிவுறுத்தப்படுகிறது.

    சென்னை:

    விவசாய டிராக்டர்களை பறிமுதல் செய்யும் விவகாரத்தில் போலீசார் வேளாண் பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ளக்கூடாது என்று டி.ஜி.பி. சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அவர் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் குறிப்பாக கிராமப் புறங்களில் விவசாயப் பணிகளுக்காக வேலை ஆட்களை ஏற்றிச் செல்லும் டிராக்டர்களை வாகன தணிக்கையின் போது போலீசார் பறிமுதல் செய்து மோட்டார் வாகன ஆய்வாளரிடம் ஒப்படைத்து விடுவதாகவும் அதனால் விவசாய பணிகள் பாதிக்கப்படுவதாகவும் பல்வேறு விவசாய அமைப்புகளால் புகார்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

    வாகன தணிக்கையின் போது டிராக்டர்களில் விவசாய பணிகளுக்காக செல்லும் விவசாய தொழிலாளர்களை காத்திருக்க வைக்கப்படுவதாகவும், இதனால் நாற்று நடுதல், அறுவடை போன்ற முக்கிய விவசாயப் பணிகளை உரிய நேரத்தில் கவனிக்க இயலாமல் போவதோடு, தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    எனவே மாநகர போலீஸ் ஆணையாளர்கள் மற்றும் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர்கள், வாகன தணிக்கையில் ஈடுபடும் காவல் அலுவலர்களுக்கு இது தொடர்பாக தேவையான அறிவுரைகளை வழங்கி, விவசாயப் பணிகளுக்கு இடையூறு ஏற்படா வண்ணம் மோட்டார் வாகனச் சட்டத்தை அமல்படுத்த அறிவுறுத்தப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஓய்வு பெற்ற காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் பதிவேடு ஒன்று பராமரிக்க அறிவுறுத்த வேண்டும்.
    • பதிவேடு நிலைய எல்லையில் வாழும் ஓய்வு பெற்ற காவலர்கள் பதிவேடு என்று பெயரிடப்பட வேண்டும்.

    சென்னை:

    போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அனைத்து மாநகர, மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் ஓய்வு பெற்ற காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் எவரேனும் இறக்க நேரிட்டால் காவல்துறைக்கு அவர் ஆற்றிய சேவையை அங்கீகரிக்கும் வண்ணம், அன்னாரது இறுதி சடங்குகளில் சம்பந்தப்பட்ட காவல் நிலைய பொறுப்பு அதிகாரி சீருடையுடன் கலந்து கொண்டு காவல்துறை தலைமை இயக்குனர், காவல் படைத்தலைவர் சார்பாக மலர் வளையம் வைத்து இறுதி மரியாதைகளை செய்ய வேண்டும்.

    மேலும் இந்நிகழ்வை தவறாது கடைபிடிக்க ஏதுவாக அனைத்து காவல் நிலையங்களிலும், அக்காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் ஓய்வு பெற்ற காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் பதிவேடு ஒன்று பராமரிக்க அறிவுறுத்த வேண்டும். இந்த பதிவேடு நிலைய எல்லையில் வாழும் ஓய்வு பெற்ற காவலர்கள் பதிவேடு என்று பெயரிடப்பட வேண்டும்.

    இந்த பதிவேடு பராமரிக்கப்படுவதையும், காலம் சென்ற முன்னாள் காவலர்களுக்கு துறை மரியாதை செய்யும் நிகழ்வுகளையும் உயர் காவல் அதிகாரிகள் ஆய்வின்போது சரிபார்த்து உறுதிப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×